வவுனியாவில் தொண்டர் சேவைகள் கலைக்கூடம் திறந்துவைப்பு!!(?)

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ‘தொண்டர் சேவைகள் கலைக்கூடம்’ திறப்பு விழா இன்று (27.06.2019) அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் ஜெ.கிருசாந் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் அதிகாரி வி.எ.சம்பத் கலந்துகொண்டு தொண்டர் சேவைகள் கலைக்கூடத்தை திறந்து வைத்தார்.

கிராமிய இளைஞர்களை மையப்படுத்தி பிரஜைகள் கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வவுனியா உட்பட ஆறு மாவட்டங்களில் தொண்டர் சேவைகள் கலைக்கூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு தேர்தல் தொடர்பான சட்டங்கள், தகவல் அறியும் சட்டம் பாவிக்கும் முறைமை, மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடங்கள் தொடர்பான பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதுடன் நவீன தொழில்நுட்பத்தினூடாக பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகள் தங்கள் கிராமங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தாமாகவே முன்னின்று தீர்வுகளை காண்பதற்கும், சமூகமட்ட பிரச்சனைகளை களைந்தெடுக்கவும் ஆற்றல் மிக்க ஒரு சமூதாயத்தை ‘தொண்டர் சேவைகள் கலைக்கூடம்’ ஊடாக உருவாக்குவதே நோக்கம் என அமைப்பின் இணைப்பாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட காணி இணக்க சபையின் தலைவர் இ.நவரட்ணம், வவுனியா பொலிஸ் உதவி ஆய்வாளர் பி.பி.குறுசிங்க, வவுனியா குற்றப்பிரிவு பொலிஸ் உதவி ஆய்வாளர் கலாவிமோதன், இணக்கசபை பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் கடும் வறட்சி : ஆச்சிபுரம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி!!

வவுனியாவில் கடும் வறட்சி

வவுனியா, ஆச்சிபுரம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓரு மீள்குடியேற்ற கிராமமாகும்.

இக் கிராமத்தில் 373 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பலரும் நாளாந்த கூலி வேலை மூலம் தமது சீவனோபாயத்தை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றனர்.

வவுனியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக குறித்த கிராம மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு குழாய்க் கிணறும் பழுதடைந்துள்ள நிலையில் பெரும் சிரமத்தின் மத்தியில் குடிநீரை பெற்று வருகின்றனர்.

மேலும் கிராமத்தில் ஒரு சில வீடுகளில் உள்ள கிணறுகளும் வற்றி வறண்டுவிட்டதனால் தண்ணீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாக அம்மக்கள் தெரிவித்தனர். இதனால் தமது அன்றாட தேவைகளுக்கு மட்டுமன்றி குடிநீரைக் கூட பெற முடியாத நிலையில் அம் மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

பெற்றோர் பேச்சை கேட்காமல் கடலில் இறங்கிய மாணவி சுறாக்களுக்கு இரையான சோகம்!!

கடலில் இறங்கிய மாணவி

கரீபியன் கடலில் குளித்துக்கொண்டிருந்த அமெரிக்க மாணவி சுறா தாக்குதலில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் லிண்ட்சே (21) என்கிற மாணவி, தன்னுடைய பெற்றோருடன் கரீபியன் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவிற்கு சென்றுள்ளார்.

அங்கு கடலில் குளிக்க செல்வதாக ஜோர்டான் கூறியுள்ளார். சுறாக்கள் அதிகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

அதனையும் மீறி கடலுக்குள் இறங்கிய ஜோர்டனை, உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் மூன்று சுறாக்கள் திடீரென தாக்க ஆரம்பித்துள்ளன. இதில் அவருடைய வலதுகை கிழிந்து தொங்கியுள்ளது. மேலும் அவரது இடது கை, கால்கள் மற்றும் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுயநினைவிழந்த ஜோர்டனை வேகமாக மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனை உறுதி செய்துள்ள பொலிஸார், ஜோர்டன் உடல் விரைவில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கி பற்றி எரிந்த பயணிகள் விமானம் : 2 பேர் பலி, பலர் படுகாயம்!!

பற்றி எரிந்த பயணிகள் விமானம்

ரஷ்யாவில் பயணிகளுடன் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டு விபத்தில் சிக்கியதால், இரண்டு பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Angara Airlines flight நிறுவனத்திற்கு சொந்தமான An-24 பயணிகள் விமானம் Ulan Ude-வுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானத்தில் ஒரு இன்ஜின் பழுதானதால், விமானம் அவசரசமாக தரையிறக்கப்பட்டது. அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து 100 மீற்றர் சறுக்கி, ஒரு கழிவுநீர் கட்டடத்தின் மீது பயங்கரமாக மோதியதால், திடீரென்று தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த விபத்தின் காரணமாக இரண்டு விமானிகள் மற்றும் 7 பயணிகள் காயமடைந்திருப்பதாகவும், 43 பயணிகள் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் விபத்தில் சிக்கிய விமானம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பயணிகளின் முழுவிபரம் விசாரணைக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காதலியின் அப்பா சொன்ன வார்த்தையால் இளைஞன் செய்த மோசமான செயல்!!

தமிழகத்தில் காதலித்த பெண்ணை மணப்பதற்காக மாமன் விதித்த நிபந்தனையால், இளைஞர் ஒருவர் திருடனாக மாறியதால் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செளந்திரபாண்டியன். இவர் தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை நீண்ட நேரம் போராடி உடைத்து, செல்லதுரையும், அவரது இரு கூட்டாளிகளும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

அங்கிருந்த பீரோவை திறக்க முயன்று . பல மணி நேரமாக முயற்சித்தும் பீரோவை திறக்க இயலாததால் வீட்டில் இருந்த சுவர் கடிகாரம் ஒன்றையும், சிறிய எல்.ஈ.டி. டிவியையும் திருடிக் கொண்டு தப்பி உள்ளனர்.

அதன் பின் வீட்டின் உரிமையாளர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்டு விசாரணையில், அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது காரில் வந்த 3 பேர் கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதில் உள்ள காரின் பதிவு எண்ணை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செல்லதுரை, மைக்கேல் அந்தோணி, விக்னேஷ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்ம், கொள்ளையர்களில் ஒருவனான செல்லதுரை ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவன் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்ததால் தனது பெண்ணை திருமணம் செய்து தர 10 லட்சம் ரூபாய் பணத்துடன் வரவேண்டும் என்று பெண்ணின் தந்தை நிபந்தனை விதித்ததால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துள்ளனர்.

அதன் பின் பெரிய பங்களா வீட்டில் திருடினால் உடனடியாக பணம் சம்பதிக்கலாம் என்று திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி சவுந்திர பாண்டியன் வீட்டின் பூடை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும். போதிய முன் அனுபவம் இல்லாததால் பீரோவை திறக்க இயலாமல் ஏமாற்றத்துடன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த 80 ரூபாய் கடிகாரத்தையும், சிறிய டிவியையும் தூக்கிச்சென்று 1000 ரூபாய்க்கு விற்று பொலிசில் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தனியாளாய் ஒரு ஏக்கரில் நாற்று நட்ட மாணவி : குவியும் பாராட்டுக்கள்!!

தனியாளாய் நாற்று நட்ட மாணவி

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனி ஆளாக நின்று, ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிரை நடவு செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்பையன்-காந்திமதி தம்பதி. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கு ராஜலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.

இவர் அரசு கலைக் கல்லூரியில் படித்தவாறே தனது தந்தையிடம் விவசாயப் பணிகளை கற்றுக் கொண்டுள்ளார். இதனால் படிக்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் விவசாயப் பணிகளைச் செய்வார். இந்நிலையில், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெற்பயிரை நடவு செய்யும் பணியை தொடங்கினார் கருப்பையன். அதற்காக விவசாயத் தொழிலாளர்களிடமும் கூறி வைத்திருந்தார். ஆனால், குறித்த நேரத்தில் எவரும் வரவில்லை.

கருப்பையன் எங்கு தேடியும் ஆட்கள் கிடைக்காததால் மிகுந்த விரக்தியடைந்தார். இதனை அறிந்த அவரது மகள் ராஜலட்சுமி, ‘இதுக்கு ஏன்பா கவலைப்படுறே, நான் நடவு நடுகிறேன்’ என்று கூறியுள்ளார். ஆனால், ஒரு ஏக்கர் வயலில் தனியாளாய் எப்படி நடவு செய்வாய் என கருப்பையன் கேட்டுள்ளார்.

எனினும், ராஜலட்சுமி விடாப்பிடியாக பெற்றோரை சம்மதிக்க வைத்தார். பின்னர் அப்பாவுக்கு உதவியாக இருந்து, 3 நாட்களில் தனியாளாய் ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தார். இந்த விடயம் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு தெரிய வந்து, ராஜலட்சுமியை அனைவரும் பாராட்டினர்.

இது குறித்து ராஜலட்சுமி கூறுகையில், நடவு செய்ய நாற்று எல்லாம் தயாராக இருந்த நிலையில், நடவுக்கு ஆட்கள் வரவில்லை. ஆள்பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுகிறது. நாற்று விடுவது தொடங்கி, நடவு நட்டு அதை வளர்த்து அறுவடை செய்வதற்குள் விவசாயிகள் படும் கஷ்டத்துக்கு அளவே இல்லை. இந்த வேலை தெரிந்ததால் அந்த கஷ்டத்தை நான் நன்கு உணர்வேன்.

பயிர் தயாராக இருந்தும் நட முடியவில்லை என அப்பா கவலைப்பட்டதைப் பார்த்த பிறகு, ஏன் நாமே நடவு நட்டால் என்னவென்று தோன்றியது, அதை அப்பாவிடம் கூறினேன். வேண்டாம்மா இது ஒரு ஆள் செய்கிற வேலை கிடையாது என்றவரை, சம்மதிக்க வைத்து பணியில் இறங்கினேன்.

23ஆம் திகதி காலை தொடங்கிய வேலையை மாலை வரை செய்தேன். ஆனால் ஒரு பகுதி மட்டுமே செய்ய முடிந்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்கள் காலை கல்லூரிக்குச் சென்றுவிட்டு மதியம் வந்த பிறகு நடவு பணியைத் தொடங்குவேன். மூன்று நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்தையும் நட்டு முடித்தேன். அப்பா உடன் இருந்து மற்ற வேலைகளை செய்ததோடு, உற்சாகமூட்டினார். இதே மாதிரி தன்னம்பிக்கையோடு இரு என அம்மாவும் அருகில் இருந்தவர்களும் பாராட்டி வாழ்த்தினர்’ என தெரிவித்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது : காரணம் இதுதான்

மூன்று இளைஞர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வருகை தந்த வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமான முறையில் வருகைதந்துள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் (27.06.2019) கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்ப்பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் வருகை தந்த காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த 24, 27, 34 வயதுடைய இளைஞர்கள் மூவரே மீன்பிடி படகு ஒன்றின் மூலம் இவ்வாறு வருகை தந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஒமந்தையில் விபத்து ஒருவர் படுகாயம்!!

ஒமந்தையில் விபத்து

வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் ஓருவர் படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

ஓமந்தையில் இருந்து பன்றிகெய்தகுளம் நோக்கி சென்ற கப் ரக வாகனத்தை வவுனியாவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து முந்திச்சென்ற போது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது கப் ரக வாகன சாரதி விதுசன் (வயது 22) படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனையினை ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருமணமான அன்றே தாலியை கழற்றி வீசிய இளம் பெண் : அதன் பின் நடந்த சம்பவம்!!

தாலியை கழற்றி வீசிய இளம் பெண்

தமிழகத்தில் கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு இளம் பெண் ஒருவர் காதலனுடன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்-பூங்காவனம். இவர்களது மகன் குமார் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் ஈஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், கடந்த 6-ஆம் திகதி அவசர அவசரமாக வேறு ஒருவருடன் ஈஸ்வரிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர் . கட்டாய திருமணத்தை எதிர்த்து அன்றே வீட்டிலிருந்து வெளியேறிய ஈஸ்வரி, கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு காதலன் குமாரை ஆரணியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடியேறினார்.

இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தகவல் அறிந்த, பெண் வீட்டார் மற்றும் கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மணமகனின் குடும்பத்தாரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் கிராமத்தினர் மீது குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு கொடையம்பாக்கம் கிராமத்தினரே காரணம் என குமாரின் தாய் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊருக்குள் செல்ல கிராமத்தினர் விதித்துள்ள தடையை நீக்கக்கோரியும், மணமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மணமக்கள் புகார் அளித்துள்ளனர்.

பூட்டிய வீட்டில் மனைவி மற்றும் தாயுடன் சடலமாக கிடந்த செய்தியாளர்!!

செய்தியாளர் பிரசன்னா

சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்து வரும் செய்தியாளர் ஒருவர், பூட்டிய வீட்டினுள் மனைவி மற்றும் தாயுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த பிரசன்னா தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பிரசன்னா தன்னுடைய மனைவி அர்ச்சனா மற்றும் தாய் ரேவதியுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல மூன்று பேரும் உறங்க சென்றுள்ளனர்.

இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவருடைய வீடு திறக்கப்படவில்லை. அப்பகுதி வழியாக சென்ற சிலர் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது ஒரே புகைமூட்டமாக இருந்துள்ளது.

வீட்டிற்குள் பிரசன்னா, அர்ச்சனா, ரேவதி ஆகியோர் இறந்து கிடந்தனர். வீட்டில் ஃப்ரிட்ஜ் மற்றும் வயர்கள் எரிந்த நிலையில் கிடந்ததால், மின்கசிவு ஏற்பட்டு ஃப்ரிட்ஜ் வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயிக்கப்பட்ட திருமணம் : வருங்கால மனைவியின் செயலால் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!!

விபரீத முடிவு

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன்னை சிறையில் தள்ளியதால் அவமானத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துள்ளார். திருவாரூர் மாவட்டம் துண்டகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இவர் ஹேமாஸ்ரீ (25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதன்பின்னர் இருவருக்கும் இடையே திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதனால் சதீஷ்குமார் தன்னை ஏமாற்றி விட்டு திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார் என்று ஹேமா பொலிசில் புகார் செய்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 28-ம் திகதி சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார் ஜாமீனில் வெளியில் வந்தார். காதலியால் சிறை சென்றதால் அவர் மிகவும் வேதனையுடன் காணப்பட்ட நிலையில் நேற்று அவமானத்தால் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வராமல் இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டுக்கள்!!

நெகிழ்ச்சி செயல்

தந்தையின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டிற்காக விளையாடிவிட்டு வீடு திரும்பிய அவர் தாயை கட்டிப் பிடித்து கதறி அழுத வீடியோக் காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மிசோரம் மாநிலத்தில் இருந்து இந்திய மகளிர் அணிக்காக லால்ரெம் ஸியாமி என்ற 19 வயது இளம் பெண் விளையாடி வருகிறார். இவர் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான ஹாக்கி தொடரில், விளையாடி வந்தார்.

இந்நிலையில் அவரது தந்தை கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதை அறிந்தும், அணியின் ஒலிம்பிக் கனவை மனதில் வைத்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதில்லை என்று அவர் முடிவு எடுத்தார்.

இறுதியில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி வாகை சூடி, இந்திய மகளிர் ஹாக்கி அணி நாடு திரும்பியது. மிசோரமில் உள்ள வீட்டிற்குச் சென்ற லால்ரெம் ஸியாமியை அவரது தாயாரை கட்டிப் பிடித்து அழுதுள்ளார். தந்தையை இறந்தது தெரிந்தும் நாட்டிற்காக விளையாடிய லால்ரெம் ஸியாமிவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அவுஸ்திரேலியாலில் இருந்து நாடு திரும்பிய கணவன், மனைவி கட்டுநாயக்கவில் கைது!!

கணவன், மனைவி கட்டுநாயக்கவில் கைது

கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய கணவன், மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த தம்பதியை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

46 தோட்டாக்களை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா நீதவான் நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான பிடியாணை பிறப்பித்திருந்தது.

அத்துடன் கைது செய்யப்பட்ட நபர், கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நெதகம – கொட்டுகொட பிரதேசத்தில் பஸ் சமி என்ற பாலசூரிய லேக்கம்லாகே பிரசாத் நிரோஷன் பாலசூரிய என்ற நபரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் மனைவி : கணவர் தலைமறைவு!!

கணவர் தலைமறைவு

யாழ்.குருநகர் சென்ரோஸ் வாசிகசாலைக்கு அருகாமையில் உள்ள வீதியில் இன்று நண்பகல் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலின்போது மனைவி கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளதுடன், தற்போது அவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் 45 வயதுடையவர் எனவும், மனைவி 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கணவர் தலை மறைவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா பாலமோட்டையில் சனசமுக நிலையம் திறப்பு!!

வவுனியா பாலமோட்டையில் புதிய சனசமுக நிலையம் நேற்று  26.06.2019 திறக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் அமைப்பட்ட சன சமூக நிலையத் திறப்பு விழாவில், பாலமோட்டை கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கு.குருபரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்ம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் து.நடராஜசிங்கம், உறுப்பினர்களான கார்த்தி, அஞ்சலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மீண்டும் தொடரும் புகையிரத ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!!

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். கடந்த வாரம் முன்னெடுத்திருந்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட உள்ள இப்போராட்டம் இன்று நள்ளிரவு முதல் அடுத்த 24 மணிநேரம் வரை தொடர்ந்தும் இடம்பெறும் என தெரியவந்துள்ளது.

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் நோக்குடன் ஓய்வு பெற்ற புகையிரத சேவை ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்திருப்பதற்கு புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.