வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினரின் சோதனைச்சாவடி அகற்றம்!!

சோதனைச்சாவடி அகற்றம்

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தானை வீதியில் இராணுவத்தினர் இச் சோதனைச்சாவடியை அமைத்து சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கடும் சோதனைக்குட்படுத்தி வந்தனர்.

நாட்டில் தற்போது நிலவும் சீரான நிலமையினையடுத்து இன்று (27.06.2019) காலை இச் சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியாவிலுள்ள பெரும்பாலான சமய வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பேரூந்து நிலையம், வங்கிகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து வன்னிப் பிராந்திய இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் வவுனியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் சீரான நிலை காணப்படுவதினால் சோதனைச்சாவடிகளை அகற்றுமாறு எமக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் இவற்றினை அகற்றுவதாக சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா இறம்பைவெட்டி குளத்தில் நீர் வற்றியதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம்!!

தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

வவுனியா இறம்பைவெட்டி குளத்தின் நீர் வற்றி குளத்தில் உள்ள மீன்கள் இறந்து, புழுப்பிடித்துள்ளமையால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக குளத்து நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் மாகாறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள இறம்பைவெட்டி குளத்தின் நீரும் வற்றிய நிலையில் அக்குளத்தை நம்பிவாழும் இருபது மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மீன்கள் இறந்து புழுப் பிடித்து காணப்படுவதுடன், இளையான்களும் மொய்ப்பதனால் துர்நாற்றம் வீசுகின்றது. இவ்வாறான சூழ்நிலையிலும் குளத்தில் எஞ்சி இருக்கும் மீன்களை பிடித்து வியாபாரநடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. வீசும் அதிக காற்றினால் துர்நாற்றம் காவிச் செல்லப்படுவதனால் சுவாச நோய்கள் ஏற்படும் அபாயநிலையும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவ்வழியினூடாக செல்லும்பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் எனப்பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறம்பைவெட்டி குளத்தின் கீழ் விதைக்கப்பட்டுள்ள சிறுபோக விவசாய நிலங்களுக்கு அதிகளவிலான நீரை பயன்படுத்தியமையாலும் வறட்சியினாலும் குறித்த குளத்தது நீர் வற்றியுள்ளது. இதனால் குளத்தின் கீழான சிறுபோக நெற் செய்கையும் பாதிப்படைத்துள்ளது.

குறித்த குளத்தின் நீர்மட்டத்தை கவனத்தில் கொள்ளாது சிறுபோக நெற்செய்கைக்கு நீர் இறைக்கப்பட்டமையும், சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பற்ற செயற்பாடும் இத்தகைய பாதிப்பிற்கு முக்கிய காரணம் எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உரிய அதிகாரிகள் இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இறந்த மீன்களை அகற்றி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அக்கிராம மக்கள் கோரியுள்ளனர்.

இன்றைய ராசிபலன் : 27.06.2019!!

இன்றைய ராசிபலன்

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம் : இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக் கூடும்.

ரிஷபம் : வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம் : அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்க நினைக்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம் : தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்று வீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்மம் : மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக் கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் காலையில் பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி : உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தடைப்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

துலாம் : மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிகம் : எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு : உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

மகரம் : தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பம் : உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர் செல்லவேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனம் : எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஓரினச்சேர்க்கை பெண் என தெரியாமல் அவரை மணந்த நபர் : திருமணமான சில நாட்களில் நடந்த சம்பவம்!!

திருமணமான சில நாட்களில் நடந்த சம்பவம்

இந்தியாவில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் மாயமான நிலையில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் இறுதியில் திருமணம் நடந்தது.

பெண்ணின் கணவர் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் 23 நாட்கள் கழித்து பொலிசார் அவரை ஹரியானாவில் உள்ள ஒரு வீட்டில் கண்டுப்பிடித்தனர்.

இந்நிலையில் ஜூன் 1ஆம் திகதி முதல் புதுப்பெண் திடீரென மாயமானார். இது குறித்து பெண்ணின் கணவர் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் 23 நாட்கள் கழித்து பொலிசார் அவரை ஹரியானாவில் உள்ள ஒரு வீட்டில் கண்டுப்பிடித்தனர்.

அப்போது வேறு பெண்ணுடன் அவர் வாழ்ந்து வந்ததும், இருவரும் ஓரினசேர்க்கையாளர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தன்னுடைய தோழியை 4 ஆண்டுகளாக தான் காதலித்து வருவதாகவும், தனது விருப்பத்துக்கு மாறாக தனக்கு திருமணம் நடந்ததாகவும் புதுப்பெண் கூறினார். பின்னர் இருவரும் தங்களின் விருப்பமான முடிவை எடுக்கலாம் என கூறி இரண்டு பெண்களும் விடுவிக்கப்பட்டனர்.

பேருந்தில் மோதுண்ட மோட்டார் சைக்கிள் : சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!!

விபத்து

ஏறாவூர் – சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்தில் உந்துருளி மோதி இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும் போது உந்துருளியில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய இளைஞர், மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ள ஏறாவூர் காவல்துறை, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பெண் : பின்னர் நடந்த சோகம்!!

நடந்த சோகம்

அமெரிக்காவில் சகோதரியை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூஜெர்சியை சேர்ந்த அமண்டா ரமீர்ஸ் (27) மற்றும் அன்னா ரமீர்ஸ் (27) ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள்.

இந்நிலையில் சகோதரிகள் தங்களது உறவினர்கள் இருவருடன் இரு தினங்களுக்கு முன்னர் விருந்துக்கு சென்றனர். விருந்தில் எடுத்து புகைப்படத்தை அன்னா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார், அதில் உனக்கு எனது உணர்வு தெரியும் என எழுதியிருந்தார்.

இதன் பின்னர் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் அன்னாவை அவர் சகோதரி அமண்டா கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அன்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து அமண்டாவை பொலிசார் கைது செய்துள்ளனர், இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சிறுவயதில் இருந்து உயிருக்கு உயிரான சகோதரிகளாக இருவரும் இருந்த நிலையில் அமண்டாவின் இச்செயல் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அன்னாவின் இறுதிச்சடங்குக்காக குடும்பத்தார் இணையதளம் மூலம் நிதி வசூல் செய்து வருகிறார்கள்.

குழந்தையுடன் ஆற்றில் மூழ்கி இறந்த தந்தை : அகதிகளின் வலியை சொல்ல இந்த ஒரு படம் போதும்!!

அகதிகளின் வலி

காண்போர் நெஞ்சை பதற வைக்கும் வண்ணம், இரண்டு வயது குழந்தையுடன் அதன் தந்தை இறந்து கிடைக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அகதிகளின் வலியை உலகுக்கு உரக்கச் சொல்லுகிறது. இறந்து கிடைக்கும் அந்த நபரின் பெயர் Óscar Alberto Martínez Ramírez (25).

ஏப்ரல் மாதம், தங்கள் சொந்த நாடான எல் சால்வடாரை விட்டு மெக்சிகோவிலுள்ள ஒரு அகதிகள் முகாமுக்கு வந்த Martínezஇன் குடும்பம், இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பதற்காக காத்திருந்திருக்கிறது.

ஆனால் தூதரகத்தில் சென்று விண்ணப்பம் பெறுவதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கூட கிடைக்காத நிலையில்,காத்திருந்து ஏமாந்து பின்னர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய திட்டமிட்ட Martínez, Rio Grande ஆற்றை நீந்திக் கடக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

முதல் கட்டமாக தனது மகளை ஆற்றின் மறுபக்கம் கொண்டு சேர்த்த Martínez, பின்னர் வந்து மனைவி Tania Vanessa Ávalos (21)ஐ அழைத்து செல்லலாம் என எண்ணி ஆற்றில் இறங்கிய நேரத்தில், குழந்தை பயந்து தண்ணீரில் குதித்திருக்கிறாள்.

பதறிப்போன Martínez அவளைக் காப்பாற்ற மீண்டும் நீந்திச் செல்ல, ஆற்று வெள்ளம் வேகமாக அவர்களை இழுத்து சென்றிருக்கிறது. கண் முன்னே கணவனும் மகளும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு கதறி அழுதும் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, தேடுதல் பணி துவங்கியிருக்கிறது.

ஞாயிறு துவங்கி திங்கள் வரை தேடிய நிலையில், ஆற்றின் மறுபுறம் Martínez மற்றும் அவரது மகள் வலேரியா ஆகியோரின் சடலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. அமெரிக்க தூதரகத்தில் Martínez குடும்பத்திற்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. ஆனால் முகாம் இயக்குநர் ஒருவர் கூறும்போது நாளொன்றிற்கு 40 முதல் 45 புலம்பெயர்தல் நேர்காணல்கள்தான் நடக்கும் என்றும், 800 முதல் 1,700பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எப்படியும் அமெரிக்கா சென்று புது வாழ்வை துவங்கலாம் என்ற கனவுடன் சொந்த நாட்டை விட்டு வந்த ஒரு தந்தையும் மகளும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இத்தனை உயிர் பலிகள் கொடுக்கப்பட்டும், அகதிகளின் இந்த வலியும் வேதனையும் புரிய வேண்டியவர்களுக்கு எப்போது புரியுமோ தெரியவில்லை.

காதலன் இழப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட காதலி!!

காதலன் இழப்பை தாங்க முடியாமல்..

ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து இறந்ததால், அவர்களுடைய இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த கார்லி மெக்கல்லம் (18) என்கிற இளம்பெண் கடந்த ஒரு வருடமாக ரிச்சி கிங் (21) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

ஏப்ரல் 10ம் திகதியன்று ரிச்சி தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதற்கு சில நாட்களுக்கு முன் மார்ச் 17ம் திகதியன்று, கார்லியின் நடன பயிற்சியாளர் கோடி பிரவுன் தற்கொலை செய்துகொண்டார். இவர்களை தொடர்ந்து கார்லியின் நெருங்கிய நண்பரான ஜார்ஜ் டைக்ஸ், மே 20ம் திகதியன்று தற்கொலை செய்துகொண்டார்.

அடுத்தடுத்து நண்பர்கள் இறந்ததால் கார்லி பெரும் சோகத்தில் இருந்து வந்துள்ளார். அவர்களுடைய இழப்பு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இவை எல்லாம் எதற்கு நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதாவது ஒரு காரணத்திற்காக தான் நடந்திருக்க வேண்டும். நான் என் காதலனை அதிகம் மிஸ் பண்ணுகிறேன் என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கார்லியும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். அடுத்தடுத்து நான்கு நண்பர்களும் எந்தவித காரணமும் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் விதவையான இளம் பெண் : புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை!!

புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், அன்றே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி தர்சினி பிரியா, கனகன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் செய்த அன்றே புதுமண தம்பதியர் அரிவாளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இதில் மணமகன் கனகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை மணந்து கொண்ட தர்சினி பிரியாவும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மணமகனின் சகோதரரே இந்த சாதி ஆணவக் கொலையில் ஈடுபட்டது பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள இந்த சாதி ஆணவப்படுகொலை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது எனவும், முன்பே கனகனும் – தர்சினி பிரியாவும் திருமணம் செய்துகொண்டால் வெட்டி ஆற்றில் வீசுவோம் என கனகனின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக தர்சினி பிரியாவின் பெற்றோரும் அவரது உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்மாமன் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் இரண்டரை வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக குழந்தையின் தாய் மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை விளாங்குறிச்சியில் ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் கனகராஜ் (38). இவர் மனைவி காஞ்சனா (21) தனது இரண்டரை வயது மகள் அரும்பதாவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியிலுள்ள உள்ள தனது தாய் பேச்சியம்மாள் வீட்டுக்கு சென்றார்.

அந்த வீட்டில் தந்தை குப்புசாமி, தங்கை மகன் பூபதி (26), குப்புசாமியின் முதல் மனைவியின் மகள் கற்பக விஷ்ணு (28), மகன் ரகுநாதன் (26) ஆகியோர் இருந்தனர். அன்று இரவு காஞ்சனா அருகில் படுத்திருந்த அரும்பதா திங்கட்கிழமை அதிகாலை பார்த்தபோது மாயமாகி இருந்தாள்.

பொலிசாரின் தேடுதலில் வீட்டின் எதிரே கருவேலங்காட்டில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அரும்பதாவின் சடலம் மீட்கப்பட்டது. பொலிசாரின் தீவிர விசாரணையில் குழந்தையைக் கொன்றது மாமன் ரகுநாதன் என்பது தெரியவந்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு போதையில் இருந்த ரகுநாதன், குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அப்போது குழந்தை வீறிட்டு அழவே, எதிரேயுள்ள கருவேலங்காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்றுள்ளான்.

கருவேலங்காட்டில் வைத்து மீண்டும் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, குழந்தை அழுகையை நிறுத்தாமல் போகவே வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இரக்கமே இல்லாமல் கிணற்றுக்குள் வீசியுள்ளான் ரகுநாதன்.

பொலிசாரின் விசாரணையில் இந்த உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து ரகுநாதன் கைது செய்யப்பட்டான். இதனிடையில் சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் பத்திரிகையாளர்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று பேட்டி எடுத்தனர்.

அப்போது ரகுநாதன் சோகத்துடன், எனது தங்கைக்கும், மச்சானுக்கும் எந்த விரோதிகளும் இல்லை. குழந்தையை யார் கொலை செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது என பேட்டி அளித்தார். ஆனால் பின்னர் பொலிசார் விசாரணையில் அவர் தான் குற்றவாளி என தெரியவந்துள்ளது.

வவுனியாவில் காணாமல் போன இரு சகோதரர்கள் கண்டுபிடிப்பு!!

சகோதரர்கள் கண்டுபிடிப்பு

நெடுங்கேணி நையினாமடு பகுதியிலிருந்து கடந்த வியாழக்கிழமை நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு வவுனியா சென்ற இரு சகோதரர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது தந்தையார் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணியளவில் முல்லைத்தீவு, முள்ளியவளைப்பகுதியில் பூசகர் ஒருவர் சட்டத்தரணியினூடாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு சகோதரர்கள் நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பேருந்தில் நெடுங்கேணியிலிருந்து வவுனியா வந்தபோது காணாமல் போயுள்ளதாக தந்தையினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை 22ஆம் திகதி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விரு சகோதரர்களும் கடந்த 7 நாட்களாக முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியிலுள்ள பூசகர் ஒருவருடன் வசித்து வந்துள்ளதாகவும் இன்றைய தினம் சட்டத்தரணியூடாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தமது வழக்கு விசாரணைகளுக்கு பயந்தே இவ்வாறு ஒழிந்து கொண்டுள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகவும் தந்தையான விஜயசுந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன் : வீட்டில் அவர் கண்ட காட்சி!!

திருமணமான இளம் பெண்

கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை சேர்ந்த நபருக்கும், இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் மனைவிக்கு அருண்குமார் என்பவருடன் பேஸ்புக் மூலம் ஆறு மாதங்களுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டது. இது காதலாக மாறியது, இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருவதாக மனைவியிடம் கூறினார்.

இதையடுத்து அப்பெண் வீட்டில் இருந்த அதிகளவிலான நகைகள் மற்றும் லட்சக்கணக்கான பணத்துடன் அருண்குமாருடன் ஓட்டம் பிடித்தார். அவர் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டாம் நாள் ஊருக்கு வந்த கணவர், மனைவி நகை, பணத்துடன் வேறு நபருடன் ஓட்டம் பிடித்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பொலிசில் அவர் புகார் கொடுத்தார், இந்த சூழலில் அருண்குமார் தன்னுடன் வந்த பெண்ணை பல இடங்களுக்கு அழைத்து சென்று பல்வேறு விடுதிகளில் தங்கியுள்ளார். அந்த பெண் கொண்டு வந்த பணம் மொத்தமும் தீர்ந்த பின்னர் அவரை அறையில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்த துவங்கினார் அருண்குமார்.

இந்நிலையில் ஏற்கனவே திருமணமான அருண்குமாரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர். அவருடன் இருந்த பெண்ணும் மீட்கப்பட்டு அவர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அருண்குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வங்கி வேலையை விட்டு சுயதொழில் செய்து சாதித்த இலங்கை பெண்ணின் வெற்றிக் கதை!!

பெண்ணின் வெற்றிக் கதை

இலங்கை வட மாகணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உள்நாட்டு போரில் இருந்து மீண்டு சுயதொழில் செய்து சாதித்துள்ளார்.

இலங்கை வட மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்ராலினி. இவரது குடும்பம் முன்னதாக இலங்கை உள்நாட்டு போரில் சிக்கி தப்பி பிழைத்துள்ளது. ஸ்ராலினி வியாபார முகாமைத்துவம் படித்துள்ளார். இவருக்கு வங்கிகளிலும், படிப்பு சார்ந்த பல வேலைகளும் கிடைத்துள்ளது.

ஆனால் அதை தவிர்த்து தான் சுய தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று தன் நிலைபாட்டில் சரியாக இருந்துள்ளார். அவரின் பெற்றோர் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் ஆதரவு வழங்கி உள்ளனர். இலங்கையில் பெரும்பாலனோர் கோழி ஆடு, மாடு போன்றவை வளர்க்கும் சூழலில், இவர் வாத்து வளர்க்க வேண்டும் என்று தன் நிலையை முன்னெடுத்துள்ளார்.

தனினொரு பெண்ணாக வாத்து வளர்க்கும் ஸ்ராலினி இயற்கை விவசாயமும் செய்கிறார். இது குறித்து பேசிய ஸ்ராலின் ”வடமாகணத்தில் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

படித்தவர்களும் பலர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அவர்கள் அனைவரும் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இன்று வாத்து பண்ணை அமைத்து பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஸ்ராலினி.

இலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி : இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்!!

இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்

தொடர் தோல்விகளுக்கு முகங்கொடுத்து வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் திடீர் வெற்றியால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணியின் வெற்றியினால் ஏற்பட்ட மகிழ்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அம்பாறை, தமன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 26 வயதான ரத்நாயக்க முதியன்செலாகே கயான் மதுஷங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்து – இலங்கை அணிக்கான போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய இளைஞன் 5 பந்துகளில் 5 , 6 ஓட்டங்களை பெற்ற மகிழ்ச்சியுடன் வீடு சென்றுள்ளார். வீடு சென்றவர் தொலைகாட்சியில் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளார்.

போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றவுடன், குறித்த இளைஞன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

கிரிக்கெட்டை உயிர் போன்று நேசித்த இளைஞக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியின் வெற்றியால் ஏற்பட்ட அதீத சந்தோசமாக உயிரிழப்புக்கு காரணம் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் போதைக்கு எதிராக வீதியில் திரண்ட மாணவர்கள்!!

வீதியில் திரண்ட மாணவர்கள்

போதைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.

இன்று (26.06.2019) காலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு முன்பாக வீதியோராத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் அதற்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பட்டானிச்சூர் சந்திவரை ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீண்டும் பாடசாலையை வந்தடைந்தனர்.

இந் நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், இஸ்லாமிய மதகுரு, பொலிஸ் உத்தியோகத்தர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம் : பரிதவிக்கும் மக்கள்!!

யானைகள் அட்டகாசம்

வவுனியா புதியவேலன்சின்னக்குளம் ஆனந்தகுமாரசுவாமி வித்தியாலய வளாகத்துக்குள் காட்டுயானைகளின் அட்டகாசம் காரணமா க பயன்தரும் மரங்கள் பல சேதமடைந்துள்ளது.

வவுனியா விளக்குவைத்தகுளம் கிராமவேவகர் பிரிவுக்குற்பட்ட புதியவேலன் சின்னக்குளம் கிராமம் காட்டுப்பகுதியை அண்டிய கிராமமாகும். இக் கிராமத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் மக்கள் குடிமனைப் பகுதிகளுக்குள் புகுந்து விவசாயிகளின் பயிர்களையும் பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்திவருகின்றன.

அந்தவகையின் நேற்று இரவு குடிமனைபகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் புதியவேலன்சின்னக்குளம் ஆனந்தகுமாரசுவாமி வித்தியாலய வேலியை அறுத்துக்கொண்டு புகுந்து வாழை, மா, பலா, உற்பட பல பயன்தரும் மரங்களைப் புடுங்கி சேதமேற்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளைக்கிணற்றில் மாணவர்கள் கைப்பம்பியால் நீரெடுத்து மிக கஸ்டப்பட்டு பராமரித்து வந்த பயன்தரும் மரங்கள்களை தொடர்ந்தும் யானைகள் சேதப்படுத்தி வருவதால் பாடசாலை சமூகம் விரக்கி நிலையில் இருப்பதாக பாடசாலை ஆசிரியரெருவர் தெரிவித்தார்.

இதேவேளை குடிமனைப்பகுதிகளிளும் விவசாயிகளின் பயிர்களையும் அடிக்கடி காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவருகின்றது இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். எனவே குறித்த கிராமத்தை சுற்றி யானைவேலி அமைத்தத் தரும்படி புதியவேலன் சின்னக்குளம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.