ஐம்பது ரூபாய் விவகாரம் : அமைச்சரவையில் இன்று நடந்த மோதல்!!

தோட்ட தொழிலாளர்களுக்கு ஐம்பது ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமை குறித்து அமைச்சர் மனோ கணேசன் இன்று அமைச்சரவையில் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அமைச்சர் மனோ கணேசன் பேசுகையில்,

“நிதியமைச்சரும், பெருந்தோட்ட அமைச்சரும் ஐம்பது ரூபா தொடர்பில் பந்து விளையாடுகிறார்கள். தோட்ட தொழிலாளருக்கு விசேட கொடுப்பனவு ஒருநாளைக்கு ஐம்பது ரூபா தருவதாக ஏப்ரல் மாதம் பிரதமர் ஒப்புக்கொண்டார்.

பின் அவர் அதை பெருந்தோட்ட அமைச்சரிடம் ஒப்படைத்தார். பின்னர் பெருந்தோட்ட அமைச்சர், அதை நிதியமைச்சரிடம் ஒப்படைத்தார். மூன்று மாதம் ஆகி விட்டது.

சம்பளத்துக்கு மேலதிகமாக ஒருநாளைக்கு கொடுப்பனவு ஐம்பது ரூபா என்றால், 30 நாளுக்கு 1,500 ரூபா கிடைக்கும். ஆனால், 30 நாள் வேலை கிடையாது. 20 நாள் வேலை என்றால் 1,000 ரூபா மேலதிக கொடுப்பனவு கிடைக்கும்.

இது அரசாங்கம் சார்பாக பிரதமர் தந்த வாக்குறுதி. இதை தர முடியாது என்றால், சொல்லி விடுங்கள். நாம் தோட்ட தொழிலாளர்களிடம் கூறி விடுகிறோம்.

இந்த தொகையை எப்படி தருவது என்ற பிரச்சினை இருப்பதாக பெருந்தோட்ட அமைச்சர் நவீன் கூறினார். இதை நாம் வீடு வீடாக சென்று ஒவ்வொரு தொழிலாளியிடமும் கொடுக்க முடியாது.

தோட்ட நிறுவனங்களின் சம்பளத்துடன் அவர்கள்தான் இதையும் சேர்த்து கொடுக்க வேண்டும். அதற்குரிய தொகையை அரசு நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும். இதை செய்ய தோட்ட நிறுவனங்கள் மறுப்பதாக நவீன் சொல்கிறார்.

மறுத்தால், அவர்களை போக சொல்லுங்கள். பெருந்தோட்ட அமைச்சர் நவீன் எப்போதும் தொழிலாளர்களை விட தோட்ட நிறுவனங்களின் நலனை தான் முக்கியமாக கருதுகிறார். இதை அவர் நிறுத்த வேண்டும்.” என கூறினார். தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் கருத்து வெளியிடுகையில்.

“ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் தோட்ட தொழிலாளர் வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். அவற்றை வாங்கி நல்லாட்சியின் ஜனாதிபதியும், பிரதமரும் உருவானார்கள். இதற்கு பின் ஓட்டு கேட்டுக்கொண்டு தோட்டங்களுக்கு வராதீர்கள்.” என கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுகையில், “உண்மை. தாமதம் ஆகி விட்டது. பெருந்தோட்ட அமைச்சர் நவீன் நாடு திரும்பிய உடன் ஒரு வாரத்தில் இதை ஏற்பாடு செய்கிறேன்.”
எனினும், குறுக்கிட்டு பேசிய அமைச்சர் மனோ கணேசன்

“இப்படியேதான் ஒவ்வொரு முறையும் சொல்கிறீர்கள். ஆனால், தொடர்ந்து நிதியமைச்சரும், பெருந்தோட்ட அமைச்சரும் ஐம்பது ரூபா தொடர்பில் பந்து விளையாடுகிறார்கள்.” என கூறினார்.
தொடர்ந்தும் பேசிய பிரதமர், “இல்லை. இந்த முறை அமைச்சர் வந்ததும் நடவடிக்கை எடுக்கிறேன்.” என உறுதியளித்துள்ளார்.

குடும்பத் தகராறினால் வீட்டுக்கு தீ வைத்த கணவன்!!

வீட்டுக்கு தீ வைத்த கணவன்

மட்டக்களப்பு – வெல்லாவெளி, மண்டூர் பாலமுனை பகுதியில் தனது வீட்டிற்கு நபர் ஒருவர் தீவைத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மனைவி அவரின் உறவினர் வீட்டுக்கு சென்ற பிறகு கணவன் தனது வீட்டுக்கு நேற்று மாலை தீயிட்டு எரித்துள்ளார். கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறினால் கணவன் ஆத்திரமடைந்ததையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து அயலவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய குறித்தநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடிவருவதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கையில் மர்மநபர்கள் அட்டகாசம் : துறைமுகத்துக்குள் நடந்த கொடுமை!!

மர்மநபர்கள் அட்டகாசம்

தென்னிலங்கையிலுள்ள துறைமுகம் ஒன்றில் மர்மநபர்களால் வைக்கப்பட்ட தீயினால் பெருமளவு படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன. ஹுங்கம – குருபொத்துன துறைமுகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டதால், 20 இற்கும் அதிகமான படகுகள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.மர்ம குழுவொன்று இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

வங்கிக் கட்டடத்திற்கு அருகில் வெடி குண்டு : தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்!!

வெடி குண்டு

குருணாகலில் சமூர்த்தி வங்கிக் கட்டடத்தில் வெடி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுபந்தாவ பிரதேச செயலக காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூர்த்தி வங்கி கட்டடத்திலேயே வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியளவில் பிரதேச செயலக அலுவலகத்தில் சேவை செய்யும் ஊழியர்கள் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்ட போது இந்த வெடி குண்டை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவ்விடத்திற்கு வந்த அதிரடி படையினர் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

பின்னர் இராணுவத்தினர் மற்றும் வெடிகுண்டு கண்கானிப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு வந்து பாதுகாப்பாக வெடி குண்டை அகற்றியுள்ளனர். இந்த வெடி குண்டு இராணுவத்திற்கு சொந்தமானதல்ல எனவும், SHG82 ரகத்தை சேர்ந்ததெனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த வெடி குண்டை உடுபந்தாவ மைதானத்தில் பாதுகாப்பாக வெடிக்க வைத்ததாக வெடி குண்டு கண்கானிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவை போதையற்ற தேசமாக மாற்ற பறக்கவிடப்பட்ட பலூன்கள்!!

பறக்கவிடப்பட்ட பலூன்கள்

போதையற்ற தேசமாக நம்நாட்டினை ஆக்கவேண்டுமென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு தினத்தின் முன்றாவது நாளாகிய இன்று போதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் (26.06) காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீப இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இப் போதைப்பொருள் ஒழிப்பிற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

தாயை பேருந்தில் அழைத்து வந்து வீதியில் கைவிட்டு சென்ற மகன்..!!

68 வயதான தாயை மகனொருவர் வீதியில் விட்டு சென்ற சம்பவம் ஒன்று காலி – ரத்கம, ரிலம்ப பிரதேசத்தில் அண்மையில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தாய் கூறுகையில்,

எனக்கு மகனும், மகளும் இருக்கின்றனர். இதுவரை நான் மகனுடன் வசித்து வந்தேன். மகன் என்னை பேருந்தில் அழைத்து வந்து வீதியில் கைவிட்டு சென்றார். பண்டாரகமையில் உள்ள மகனின் வீட்டிலேயே நான் வசித்து வந்தேன் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை தாயின் கை மற்றும் கால் பகுதிகளில் சூட்டுக்காயங்கள் இருப்பதாக ரத்கம பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்மணியின் மகன் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருவதுடன் மகள் திருமணமாகி வேறு ஒரு பிரதேசத்தில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்கம பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இந்த பெண்மணிக்கு உணவு மற்றும் குடிநீரை வழங்கியுள்ளனர்.

பெண்மணி சுகவீனமாக இருப்பதால், இளைஞர்கள் அவரை ரத்கம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் பெண்மணியை வைத்தியசாலை சேர்க்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நோயாளியை வைத்தியசாலையில் சேர்க்க அவருக்கு பாதுகாவலர் இல்லை என்பதால், பெண்மணியை வைத்தியசாலையில் சேர்க்கவில்லை என ரத்கம வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் நடந்த அதிசயம் : கண்களை திறந்து மூடி கண்ணீர்விட்ட மாதா?

தேவாலயத்தில் நடந்த அதிசயம்

320 ஆண்டுகள் பழமையான திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் மாதா சிலையின் கண்கள் திறந்து மூடியுள்ளதாகவும், சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் இறந்த தமது மகன் இயேசுவை தாய் மாதா தூக்கி கொண்டிருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது மாதா சிலையின் கண்கள் திறந்து மூடுவதையும், சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடுவதையும் அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளதுடன், திண்டுக்கல் – மேட்டுப்பட்டி பகுதி மக்கள் தேவாலயத்தில் குவிய ஆரம்பித்துள்ளனர். இந்த அதிசய சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த நபரொருவர் கூறுகையில், மாதா சிலையின் கண்கள் திறந்து மூடுவதாக பெண்ணொருவர் தெரிவித்தார். இருப்பினும் எங்களுக்கு தெரியவேயில்லை. கடைசியாக நன்கு அவதானித்த போது நான் மட்டுமல்ல என்னுடன் இருந்த பலர் அதனை பார்த்தனர்.

எல்லாரும் கூறினார்கள் கண் திறந்து மூடுவதாக. உண்மையிலேயே கண் திறந்து மூடியது என கூறினார். எனினும் இன்னுமொரு தரப்பினர் இது புரளியெனவும், கட்டுக்கதை எனவும் தங்கள் கருத்தை முன்வைக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி அதாவது உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முதல் நாள் மாலை இலங்கையில் களுத்துறை, கட்டுகுருந்த பகுதியிலுள்ள தூய பிலிப் மேரி தேவாலயத்திலுள்ள மாதா சிலையில் இருந்து கண்ணீர் வடிந்திருந்தது.

முதல் நாள் பெரியவெள்ளி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாள் இவ்வாறு இரத்த கண்ணீர் சிந்தும் அதிசயம் பதிவாகிய சந்தர்ப்பத்தில் இதனை காண பெருந்தொகை பக்கதர்கள் மாதா தேவாலயத்திற்கு படையெடுத்திருந்தனர். எனினும் இந்த அதிசய சம்பவம் இடம்பெற்ற அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் எட்டு இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டன.

இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்ட நிலையில் உயிர்த்த ஞாயிறு கொடூரத்தின் முன்னெச்சரிக்கையாகவே தூய பிலிப் மேரி தேவாலயத்திலுள்ள மாதா சிலையில் இருந்து இரத்த கண்ணீர் வடிந்திருந்ததாக பலர் கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தமை நினைவுப்படுத்ததக்கது.

வவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி நிறுவனங்கள்!!

நிதி நிறுவனங்கள்

வவுனியாவில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனங்கள் வறுமையின் காரணமாக கடன்களை மீள்செலுத்த முடியாமல் தவிக்கும் குடும்பப் பெண்களின் நிலுவைத் தொகைக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு கடன் சுமையை அதிகரித்து மிரட்டி கையொப்பம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப வறுமை காரணமாக பணம் செலுத்த முடியாத பெண்களை நிதி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அழைத்து நிலுவை கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கடன் செலுத்தாத காலப்பகுதிக்கு அதிகரித்த வட்டியோடு எழுதப்பட்ட புது ஒப்பந்தத்தில் கையொப்பமிடுமாறு மிரட்டி கையொப்பம் பெறப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் விவசாயத்தை மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கும் குடும்பங்கள் மற்றும் கூலித் தொழில் செய்துவரும் குடும்பங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியிருக்கும் இத்தருணத்தில் நுண்நிதி நிறுவனங்களின் இவ்வாறான நடவடிக்கை குடும்பப் பெண்களையும அதன்மூலம் சிறுவர்களையும் பெரும் பாதிப்பிற்குள் தள்ளியுள்ளது.

வடக்கில் நுண்நிதி நிறுவனங்கள் ‘வட்டிக்காகங்களாக’ செயற்பட்டதன் கொடுமை காரணமாக 60 மேற்பட்ட குடும்ப பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் குடும்பப் பெண்களின் தற்கொலைகளை தடுக்கும் நோக்கத்துடனும், குடும்ப சீரழிவுகளை குறைக்கும் எண்ணத்துடன் அமைச்சரவையின் ஒப்புதலுடன் நிதி அமைச்சு 37 நுண்நிதி நிறுவனங்களை இனங் கண்டு 1414 மில்லியன் ரூபாவினை தள்ளுபடி செய்துள்ளது.

அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபாவிற்கு குறைவாக நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், யாழ் மாவட்டத்தில் 1096 பெண்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1580 பெண்களும், மன்னார் மாவட்டத்தில் 670 பெண்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 458 பெண்களும் இச்சலுகை மூலம் நன்மை அடைந்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கூடும் நுண்நிதி நிறுவனங்கள் கொடுக்கும் அறிக்கையை பெறும் வவுனியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் நுண்நிதி நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப பெண்களுக்கு எந்த விதமான நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்றும்,

அரசாங்கம் வழங்கிய ஒரு இலட்சம் ரூபா நிதிச் சலுகையை கூட பெற்றுக்கொடுக்க மாவட்ட செயலகம் முன்வரவில்லை என்பதுடன் நுண்நிதி நிறுவனங்களுக்கு சார்பாக வவுனியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் நிர்மாணிக்கப்ட்ட பாடசாலை கட்டிடத்தில் ஊழல் மோசடி : தரமற்ற சீமெந்து பாவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!!

பாடசாலை கட்டிடத்தில் ஊழல்

வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டிடத்தில் ஊழல் மோசடி இடபெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட தரணிக்குளம் கிராமத்தில் ஸ்ரீ பாலவிநாயகர் அறநெறி பாடசாலை கட்டிடம் தரமற்ற விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்டிடத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தரணிக்குளம் கிரம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எஸ்.ராகுலன் தெரிவித்தார்.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்ட ‘சிசு தகம் செவன’ நிகழ்சி திட்டத்தின் கீழ் 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர்களுக்கான அறநெறி பாடசாலை கட்டிடமானது தரமற்றதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட தரணிக்குளம் ஸ்ரீ பாலவிநாயகர் அறநெறி பாடசாலை கட்டிடமானது 2019 ஆம் ஆண்டு மாசி மாதம் 3 ஆம் திகதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணிக்கப்ட்டிருந்தது.

அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனத்தால் ஒப்பந்தம் பெறப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டிடமானது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட முன்பதாகவே கட்டிடம், தரை மற்றும் சுவர்களில் வெடிப்புக்கள் விழுந்து உடைய ஆரம்பித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக எதிர்ப்பு வெளியிட்ட கிராம மக்கள், தரமற்ற இக்கட்டிடத்தில் அறநெறி பாடசாலை இயங்கினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அறநெறிக் கல்விக்கு அனுப்ப மறுத்துள்ளதாக ஸ்ரீ பால விநாயகர் ஆலயத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக வெடிப்புக்கள் ஏற்பட்ட கட்டிடத்தின் தளம் உடைக்கப்பட்டு மீண்டும் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பிரதேச வாசிகள் இக்கட்டிடம் தரமற்ற சீமெந்து பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தரமான முறையில் கட்டிடத்தை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய ராசிபலன் : 26.06.2019 : 12 ராசிகளுக்கும் தனித்தனியான பலன்கள்!!

இன்றைய ராசிபலன்

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம் : மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.

ரிஷபம் : உற்சாகமான நாளாக அமையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நன்றாக ஒத்துழைப்பார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம் : இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால், உற்சாகமாக இருப்பீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும்.

கடகம் : இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தேடிய பொருள் கிடைக்கக்கூடும்.

சிம்மம் : தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்து விடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விற்பனை வழக்கம்போல் இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி : தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

துலாம் : உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம் : தெய்வ அனுகிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு : காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு கரையும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மகரம் : எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவும் ஒத்துழைப்பும் தருவார். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவம் நிகழும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.

கும்பம் : தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் பாதிப்பு இல்லை. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம் : எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தின்போது கைப்பொருள்கள் மீது கவனம் தேவை. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.

வவுனியாவில் அரச வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி : கிராம மக்கள் குற்றச்சாட்டு!!

அரச வயல் காணி

அரச வயல் காணியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தட்டான்குளம் கிராம மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் மக்களுக்கு வழங்குவதாக பிரதேச செயலாளரால் வாக்குறுதி வழங்கப்பட்ட அரச வயல் காணியை தனியார் ஒருவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

அந்தவகையில், 2006 ஆம் ஆண்டு தட்டான்குளத்தில் 52 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வயல் காணி அரசாங்கத்தினால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த அரச வயல்காணியை கிரம மக்களுக்கு சொந்தமாக வழங்க வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தனிநபர் ஒருவருக்கு காணியின் ஒரு பகுதியை கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தட்டான்குளம் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் வழங்கியுள்ளதாகவும் ஆளுநர் தங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்து!!

கோர விபத்து

பண்டாரகம – களுத்துறை வீதியில் கோரோக்கஸ் பகுதியில் பாரவூர்தியொன்று, முச்சக்கரவண்டியொன்று மற்றும் உந்துருளியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்து.

விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரவூர்தி, முச்சக்கரவண்டி பின்னால் மோதிய நிலையில், அது கவிழ்ந்து சென்று எதிரே வந்த உந்துருளியில் மோதியுள்ளது.

இந்த சம்பவம் வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

திருமணமான 17 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த பெற்றோர்!!

அலறி துடித்த பெற்றோர்

தமிழகத்தில் திருமணமான 17 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தின் வாணியம்பாடியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தீபிகா (25). பொறியாளரான இவருக்கும் நவீன்குமாருக்கும் கடந்த 6-ம் திகதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் கணவர் வீட்டில் சில நாட்கள் வசித்த தீபிகா கடந்த 2 தினங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு திரும்பினார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் திடீரென தூக்குப்போட்டுக்கொண்டார்.

அப்போது வெளியில் சென்ற குடும்பத்தினர் வீடு திரும்பியபோது தீபிகா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினர். அக்கம்பக்கத்தினரும் அங்கு வரவே அவர்கள் உதவியுடன் தூக்கிலிருந்து மீட்டு அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீபிகா ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர் இதையடுத்து பொலிசார் தீபிகா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 17 நாட்களிலேயே தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரதேச செயலாளர் ஹில்மிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு!!

நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு

ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 11ஆம் திகதி குற்றப் பத்திரமொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் மனித கொலைகுற்றச்சாட்டினை புரிந்துள்ளார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பத்து வருட கடூழிய சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார். மேலும் உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும், அதனை வழங்காவிட்டால் ஒரு வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சதக்கத்துல்லாஹ் ஹில்மி திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனையின் உதவி பணிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்த வேளையில் உயிரிழந்த பெண்ணும் அதே அலுவலகத்தில் கடமையாற்றி கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டு அந்த காதல் தொடர்பினால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!!

மரக்கடத்தல்

வவுனியா நைனாமடுவில் நேற்று மாலை 5.30 மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானகே தலைமையிலான பொலிஸார் நேற்று மாலை நெடுங்கேணி நைனாமடு வீதியில் புளியங்குளம் நோக்கி சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க முதிரை குற்றிகள் 7 மகேந்திரா கப் ரக வாகனத்தில் எடுத்துச் சென்றபோது வாகனத்தை பொலிசார் தடுத்துநிறுத்திய நிலையில் வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாக செலுத்தியுள்ளார்.

வாகனத்தை விரட்டிச் சென்ற பொலிஸார் சன்னாசிபரந்தன் பகுதியில் வழிமறித்த போது இருவர் தப்பித்து சென்றதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவரையும் முதிரைக் குற்றிகளையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புளியங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதை சொல்லியே என்னை வடிவேலு ஏமாற்றிவிட்டார் : நடிகர் விஷாலின் தந்தை ஆவேசம்!!

விஷாலின் தந்தை

நடிகர் விஷாலின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டியிடம், 86 லட்சம் ரூபாய் ஏமாற்றிய வடிவேலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் விஷால். இவர் தந்தை ஜி.கே. ரெட்டி பிரபல தயாரிப்பாளர் ஆவார்.

இந்நிலையில் கல்குவாரி உரிமையாளர் வடிவேலு என்பவர் ரெட்டியிடம் 86 லட்சம் ரூபாயை ரெட்டி ஏமாற்றியுள்ளார். இதையடுத்து சென்னை அண்ணாநகரில் வசித்துவரும் விஷாலின் தந்தை ரெட்டி பொலிஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதனை சந்தித்து தாம் ஏமாற்றப்பட்டது குறித்து புகாரளித்தார்.

அதில், மதுரையைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம், ஜல்லி கேட்டு பணம் கொடுத்ததாகவும், அவர், ஜல்லியும் கொடுக்காமல், பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார். இதன் பேரில், கைது செய்யப்பட்ட கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.