கேரளாவை சேர்ந்த தாய் – மகன் மும்பையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் மகன் வெங்கடேஸ்வர். இருவரும் கடந்த 2017-ல் மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து சில தினங்களாக துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வெங்கடேஸ்வரும், மீனாட்சியும் சடலமாக கிடந்தனர். அவர்களின் சடலம் அழுகிய நிலையில் இருந்த சூழலில் இருவரும் இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என பொலிசார் கூறினர்.
அங்கு இருந்த லேப்டாப்பை பொலிசார் கைப்பற்றிய நிலையில் அதில், எங்கள் மரணத்துக்கு யாரும் பொறுப்பில்லை எனவும் மீனாட்சிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு வெங்கடேஸ்வரும் விஷம் குடித்து இறந்ததாகவும் டைப் செய்யப்பட்டிருந்தது.
பொலிசார் கூறுகையில், இவர்களது குடியிருப்பு ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதத்தோடு முடிவுக்கு வந்ததால், வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர் கூறியிருக்கிறார். வேறு வீடு பார்க்க இரண்டு மாதம் அவகாசம் கோரியிருந்த வெங்கடேஸ்வரன் இம்முடிவை எடுத்துள்ளார்.
ஐடி துறையில் வேலை பார்த்து வந்த வெங்கடேஸ்வரன் சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார், அதன் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இம்முடிவை எடுத்திருக்கலாம் என கருதுகிறோம். இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு சென்றுள்ள நிலையில் அதன் முடிவுக்காக காத்துள்ளோம் என கூறியுள்ளனர்.
இன்று அம்பாறை காரைதீவு சண்முகா மகாவித்தியாலய பாடசாலை மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்து மீட்கப்பட்ட ஆறு மாணவ மாணவிகள் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சைக்கென காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களில் தரம் 11ஐ சேர்ந்த அ. டனுஸ்காந் (16) யசோதா (16), மலர்விழி(16 அட்டப்பளம்), தரம் 8 மாணவர்களான கே.எஸ் டனுஜா(காரைதீவு 8)ரஞ்சித் யதுசனா (13)உதயகுமார் டிலக்சன்(13) ஆகிய மாணவர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் கடும் வெயில் காரணமாகவும் காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் திடிரென மயக்கமுற்ற நிலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீர்கொழும்பில் சிறைக்கைதிகள் தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களே தப்பியோடியுள்ளனர்.
பாகிஸ்தான் பிரஜைகள் இருவரும் , நைஜீரிய பிரஜை ஒருவரும் தப்பியோடியதாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூன்று கைதிகளும் நீண்ட தூரம் ஓடிச் சென்றமையினால் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் தப்பிச் சென்ற கைதிகளை பிடித்த பொலிஸார் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வெளிநாட்டு பிரஜைகளான இவர்கள் ஏன் தப்பிச் சென்றார்கள், இதன் பின்னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி 55ஆம் கட்டை காளி கோயிலடி பகுதியில் புகையிரதத்துடன், கனரக இராணுவ வாகனம் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. இன்று நண்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் சிக்கி இராணுவ வீரர்கள் அறுவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகையிரத பாதுகாப்பு கடவையில் இருந்த சமிக்ஞை வேலை செய்யாத நிலையில், புகையிரத பாதையை கடந்த கனரக இராணுவ வாகனம் கொழும்பிலிருந்து பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோதியுள்ளது.
இறந்த இராணுவத்தினரின் உடல்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொரியாவில் மீன்வள மற்றும் பெருங்கடல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற இலங்கை அதிகாரி ஒருவர் குடிபோதையில் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை மீன்பிடி அமைச்சின் மேலமதி செயலாளர், அந்த விமானத்தில் குடித்துவிட்டு மிகவும் மோசமாக நடந்து கொண்டமையினால் மலேசியா கோலாலம்பூரில் வைத்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த மேலதிக செயலாளருடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை பொறியியலார் ஒருவரும் அடுத்த விமானத்தில் தனியாக கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநாடு நேற்று முன்தினம் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பல நாடுகளின் பங்களிப்புடன் கொரியாவில் இடம்பெற்று வருகிறது. விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அதிகாரி செயற்பட்டதாகவும், அவர் அதிகளவில் மதுபானம் அருந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிகாரி தொடர்பில் தற்போது மலேசியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மீன்பிடி அமைச்சிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடி அமைச்சு குறித்த அதிகாரி தொடர்பில் தற்போது வரையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பல லட்சம் ரூபாய் செலவிட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறு செயற்படுவது முழு நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல் என அமைச்சின் ஏனைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சில இடங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் உயர் தரத்திலான புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த விடயத்தை இலங்கை போக்குவரத்து சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள உயர் தரத்திலான புதிய பேருந்துகள் ஒன்பது, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இலங்கையின் பொது போக்குவரத்து துறையின் முக்கிய திருப்பு முனையாக இது அமையவுள்ளது. இந்த பேருந்துகள் கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை மற்றும் மாத்தளை பேருந்து நிலையங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா – பொஹஸ்வெவ பகுதியிலிருந்து சந்தைக்கு சென்ற விவசாயியொருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில் 58 வயதுடைய டொன்டடி ஆரியவம்ச என்ற நபரே உயிரிழந்துள்ளார். அவர் வவுனியா நகரிலுள்ள சந்தைக்கு மோட்டார்சைக்கிளில் மரக்கறிகளை ஏற்றி சென்ற போது, மாமடுவ வீதியிலுள்ள பிள்ளையார் ஆலய பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது.
இந்த நிலையில் அவரது சடலம் பொஹஸ்வாவே பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திஸ்ஸமாராம, கிரிந்த கடலில் நீராட சென்றபோது அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பலியான தந்தை மற்றும் இரு மகள்மாரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன.
மூன்று பேரினதும், சடலங்கள் திஸ்ஸமாராம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
சடலங்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக் கிரியைகள் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றுள்ளன.
இதேவேளை ஹட்டன், குடாகம பகுதியில் உள்ள பொது மயானத்தில் தந்தை மற்றும் இரு மகள்மாரினதும் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.
திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட சென்ற குடும்பத்தினர் கடல் அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதன்போது தந்தையும் ஒரு மகளும் பலியானதுடன், தாயும் மற்றுமொரு மகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி மற்றைய மகளும் உயிரிழந்தார். இந்த அனர்த்தத்தில் நுவான் இந்திக்க விஜேயசூரிய (39 வயது), நேசத்மா சாகதி விஜயசூரிய (6 வயது), நதிஷா ஈனோமி (4 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை சேர்ந்த நாடோடி இன மாணவி ஒருவர் நிரந்திர இடம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையிலும் தனது படிப்பை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
நாகர்கோவிலை அடுத்த வெள்ளிச்சந்தை புளியமூட்டில் கொட்டகை அமைத்து நாடோடிக் குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில் வெள்ளிச்சந்தையில் வசித்த இரண்டு நாடோடிக் குடும்பங்களில் உள்ள ஐந்து குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் வெள்ளிச்சந்தை அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மதாஸ்.
அப்படிச் சேர்த்த பிள்ளைகளில் ஒருவர்தான் கங்கா. அவர் தற்போது பி.எஸ்சி படிக்கிறார். கங்கா கூறுகையில், என் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள், ஊர் ஊராகப் போய் குடை தைப்பது, செருப்பு தைப்பதுதான் அவர்களின் தொழில்.
அப்படி வெள்ளிச்சந்தை ஊரில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த போது பத்மதாஸ் என்னையும் என் அண்ணன் மற்றும் மூணு பிள்ளைங்களையும் அங்கிருந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார். மற்ற மூணு பேர் படிப்பைப் பாதியிலே நிறுத்திய நிலையில் என் அண்ணன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்ததால் படிப்பை நிறுத்திவிட்டான்.
நான் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன், தற்போது நான் பிஎஸ்சி படித்து வருகிறேன், கூடாரத்தில் விளக்குகள் இல்லாததால் மெழுகுவத்தி வெளிச்சத்தில் தான் படிப்பேன். மழை வந்தால் கூடாரம் ஒழுகும். அதனால கடைப் பக்கம் போய் படுப்போம். விடிந்ததும் 6 மணிக்குக் கடை திறக்க ஆள்கள் வருவார்கள். முதலில் அப்பாவை எழுப்புவார்கள்.
அதன்பின்பு, நாங்கள் எழுந்துகொள்வோம். அப்படி எழுப்புவது எனக்கு அவமானமாக இருக்கும். கூடாரத்துக்கு வந்து பல முறை அழுதிருக்கிறேன். அது போக, நான் பெரிய பெண்ணாக ஆகிவிட்டதால் கடை முன்னாடி படுக்க சங்கடமாக இருக்கும். அதனால் அங்கு போய் இப்போதெல்லாம் படுப்பதில்லை, படித்து முடித்த பின்னர் வங்கி பணியில் சேர வேண்டும் என்பதே என் கனவு என கூறியுள்ளார்.
தமிழகத்தில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானதை தொடர்ந்து பெண்ணின் கணவர் மனைவி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்திய கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது
கோவை தடாகம் ரோடு கணுவாய் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். மருத்துவர். இவரது மனைவி ஷோபனா (46). இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவர் ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
தினமும் ஷோபனா அவரது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்வதும், பள்ளி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம்.
இந்தநிலையில், நேற்று மாலை வழக்கம் போல் ஷோபனா தனது மகளை பள்ளியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இவர்களது வாகனம் ஜம்புகண்டி அரசு பள்ளி அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி, அசோகன் ஆகிய வாலிபர்கள் ஷோபனா வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் ஷோபனா பரிதாபமாக பலியானார். அவரது மகள் படுகாயமடைந்தார்.
மேலும், இரு வாலிபர்களும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்திருக்கின்றனர். மூவரும் மது போதையில் இருந்திருக்கின்றனர். இதனை அறிந்த ரமேஷ், மனைவியின் உடலுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த விபத்திற்கு காரணமான டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மலைவாழ் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை ஐந்தரை மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 11 மணி வரை தொடர்ந்தது. பெண்கள் உள்பட ஏராளமானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை – கேரளா இடையேயான சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து வந்த காவல் துறையினரின் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், டாஸ்மாக் கடை மூடப்படும் வரை ஷோபனாவின் உடலை எடுக்க அனுமதிக்கமாட்டோம் என ரமேஷுடன் சேர்ந்து பொதுமக்களும் திட்டவட்டமாக கூறினர்.
பொதுமக்கள் தீவிரமாக போராடியதை அடுத்து வட்டாட்சியர் விஜயகுமார் நிகழ்விடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து ஜம்புகண்டி பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடுவதாகவும், நிரந்தரமாக கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டாட்சியர் விஜயகுமார் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்.
தமிழகத்தில் டிக்-டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த இளைஞர் விஷம் குடித்த நிலையில், அவர் காதலியும் விஷம் குடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் மரியபுஷ்ப ராஜ் (22). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் செல்போனில் அடிக்கடி டிக்-டாக் செயலியை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்போது மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சங்கீதா (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 5 மாதமாக மரியபுஷ்பராஜ் அடிக்கடி மதுரை சென்று தனது காதலி சங்கீதாவை தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். மேலும் இருவரும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதனால் சங்கீதா கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மரிய புஷ்பராஜிடம், சங்கீதா வலியுறுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து திருமணம் குறித்து பேசுவதற்காக மரிய புஷ்பராஜும், அவரது உறவினர்களும் மதுரை சென்றனர். அப்போது தான் அவர் தலையில் அந்த இடிவந்து விழுந்தது.
சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருவதும் தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த மரிய புஷ்பராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சங்கீதா, மரிய புஷ்பராஜை பார்ப்பதற்காக நேற்று நெல்லை வந்தார். பின்னர் மதுரை செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்த அவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பொலிசார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜேர்மனி நகரம் ஒன்றில் நள்ளிரவில் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்த மக்கள், வயல் ஒன்றின் நடுவே 10 மீற்றர் அகலம் கொண்ட பள்ளம் ஒன்று உருவாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.
Limburg நகரின் வயல் ஒன்றில் உருவான அந்த திடீர் பள்ளத்திற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்த பொலிசார், அது இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடி குண்டு ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட பள்ளம் என்பதை கண்டறிந்தனர். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் வீசப்பட்ட அந்த குண்டு இவ்வளவு காலமும் வெடிக்காமலே மண்ணில் புதையுண்டு இருந்துள்ளது.
அது எதனால் திடீரென வெடித்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை ஏதாவது ட்ராக்டர் போன்ற வாகனத்தால் உழும்போது உலோக பாகம் ஏதாவது உரசியதால் அந்த வெடிகுண்டு வெடித்ததா என்றால், அதுவும் இல்லை.
அந்த வயலுக்கு அருகில் வசித்த மக்கள் வெடிகுண்டு ஒன்று வெடித்தது போன்ற பலத்த சத்தம் கேட்டதாக தெரிவித்தார்கள். அந்த வெடிகுண்டு வெடித்ததால் 10 மீற்றர் அகலமும் 4 மீற்றர் ஆழமும் கொண்ட பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது.
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துச் சேவைகளும் இ.போ.ச. பேருந்துகளும் இணைந்து சேவையாற்றி வருகின்றன.
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் உத்தரவிற்கு அமைவாக இன்றிலிருந்து (25.06.2019) பழைய பேருந்து நிலையத்தில் உள்ளுர் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை மேற்கொள்ளும் அனைத்து உள்ளூர் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று மூன்று நிமிடங்கள் நிறுத்திவைத்து பயணிகளை ஏற்றிச்செல்லவுள்ளன. இதனால் பழைய பேருந்து நிலையத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பழைய பேருந்து நிலையத்தினூடாக பொதுமக்கள் தமது பயணங்களையும் மேற்கொண்டு வருவதால் பழைய பேருந்து நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு, வவுணதீவு – மணற்பிட்டி பிரதான வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். புதுமண்டபத்தடியை சேர்ந்த 62 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி தவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் புதுமண்டபத்தயிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார்சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்பி விட்டு பிரதான வீதிக்கு செல்கையில், பிரதான வீதியால் வேகமாக வந்த மற்றுமோர் மோட்டார்சைக்கிள் மோதியுள்ளது.
இதில் சீனித்தம்பி தவராசா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றைய மோட்டார்சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்றுள்ள லொஸ்லியா, தர்ஷன் ஆகிய ஈழத் தமிழர்களை அறிந்து கொண்ட தமிழகம், பாஸ்கரன், ரமேஷ், செல்வம் என்கிற 3 ஈழத் தமிழர்களைப் பற்றி தெரிந்து கொண்டதா? என குமுறல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெளிநாடுகளில் அதிக பார்வையாளர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்கள் 2 பேரை இம்முறை களமிறக்கிவிட்டிருக்கிறது விஜய் டிவி. பிக்பாஸ் சீசன் 3ல் ஈழத் தமிழ் செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இது அப்பட்டமான வணிக நோக்கம்தான் என்கிற விமர்சனம் ஒருபக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இன்னமும் சிறப்பு முகாம்களில் போராடும் ஈழத் தமிழர்களையும் தர்ஷன், லொஸ்லியாவையும் முன்வைத்து சமூக ஆர்வலர் எழுதிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்பதிவு விவரம்..
தர்ஷன், லொஸ்லியா, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் அனைவரும் ஈழத் தமிழர்கள். இதில் தர்ஷன், லொஸ்லியா இருவரும் பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொள்வதால் விஜய் ரிவி மூலம் பல கோடி தமிழர்கள் நேற்று முதல் அறிந்துள்ளனர். இந்த இருவரையும் அறிந்துள்ள பல தமிழர்களுக்கு பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகியோர் யார் என்று தெரிந்திருக்கவில்லை.
ஆனால் வைகோ அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. திருச்சி சிறப்புமுகாமில் இந்த மூவரும் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள் என்பதும் தெரிந்திருக்கிறது. தெரிந்தது மட்டுமன்றி இந்த அப்பாவி ஈழ அகதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர் அறிக்கை விட்டிருக்கிறார்.
வைகோ எம்.பி இல்லை. அவர் கட்சி ஆட்சியிலும் இல்லை. ஆனாலும் அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இப்போது தேர்தல் இல்லை. இருந்தாலும் ஈழத் தமிழர் பற்றி பேசுவதால் அது வைகோ அவர்களுக்கு பயன் தரப்போவதில்லை. இருந்தாலும் அவர் அறிக்கை விட்டிருக்கிறார்.
அதுவும் 2008ம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்காக பேசியதற்காக அவர்மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறம் அது பற்றி கவலைப்படாமல் மீண்டும் ஈழத் தமிழர்களுக்காக அறிக்கை விட்டிருக்கிறார். அண்மையில் ஈழத்தில் இருந்து மாவை சேனாதிராசா தமிழகம் வந்து ஸ்டாலினை சந்தித்தார். இதே ஸ்டாலினை ஈழத்திற்கு வரும்படி முன்னாள் மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் அழைத்திருக்கிறார்.
இந்த ஈழத் தமிழ் தலைவர்களும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு இந்திய அரசிடம் கோரவில்லை. அல்லது, இந்திய அரசை வலியுறுத்தும்படி தாங்கள் சந்தித்த ஸ்டாலினிடமும் கோரவில்லை. ஆனால் யார் கேட்காமலும், எந்தவித பயனும் எதிர் பாராமல் வைகோ அறிக்கை விட்டிருக்கிறார்.
பிக்பாஸ் பார்ப்பவர்கள் ” இப்போது ஈழத்தில் யுத்தம் இல்லை. அந்த தமிழர்கள் இந்தியா வந்து டிவி நிகழ்வுகளில் சந்தோஷமாக கலந்து கொள்கிறார்கள். அதற்கு இலங்கை இந்திய அரசுகள்கூட அனுமதிக்கின்றன” என்றே நினைப்பார்கள். அவ்வாறு உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் நினைக்க வேண்டும் என்பதே இலங்கை மற்றும் இந்திய அரசின் விருப்பமாகும். அதற்கு விஜய் டிவி யும் ஒத்துழைக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் சிறப்பு முகாமில் ஈழ அகதிகள் அடைக்கப்பட்டிருப்பதையோ அல்லது ஈழத்தில் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களையோ உலகத் தமிழர் அறிந்து கொள்வதை இந்த அரசுகள் விரும்புவதில்லை.
அதனால்தான் பிக்பாஸ் மற்றும் சுப்பர் சிங்கர் நிகழ்வில் ஈழத் தமிழர்களை காட்டும் விஜய் டிவி போன்றன தமிழ் நாட்டில் ஈழ அகதிகள் படும் துன்பத்தையும் காட்டுவதில்லை. ஈழத்தில் அவர்களின் அவலத்தையும் காட்டுவதில்லை. இந்நிலையில் வைகோவின் அறிக்கை ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை வெளி உலகிற்கு காட்டியுள்ளது. இவ்வாறு அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து கிளிநொச்சி நகரினை நோக்கிய போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி இன்று (25.06.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமானது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தேசியக் கொடியினையேற்றி வைத்து வாகனப்பேரணியினை வைத்தார்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இவ் போதைப்பொருள் ஒழிப்பிற்கான வாகனப்பேரணி இன்று (25.06.2019) மதியம் கிளிநொச்சி நகரினை சென்றடையவுள்ளது.
இப் பேரணியில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களின் வாகனங்கள் மற்றும் பிரதேச செயலக வாகனங்கள் செல்கின்றன.