யாழில் எட்டு வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை : ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஜூலை 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. பருத்தித்துறை வியாபாரி மூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பெண்கள் பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உட்படுத்தினார் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மே மாதம் 27ம் திகதி இடம்பெற்றுள்ளது. எனினும் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்தே பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை மந்திகை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காகச் சேர்த்தனர்.

அத்துடன், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வியாபாரி மூலையைச் சேர்ந்த 46 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அவர் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சந்தேகநபர் மீண்டும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் எனவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அவரால் அச்சுறுத்தல் உண்டு எனவும் பொலிஸாரால் மன்றுரைக்கப்பட்டது.

இதனையடுத்து, சந்தேகநபரின் விளக்கமறியலை வரும் ஜூலை 2 ஆம் திகதிவரை நீடித்து நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை, மாணவி பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்காலின் அழகிய இயற்கை தோற்றம் : கடற்கரை பிரதேசத்தின் கதை!!

முள்ளிவாய்க்காலின் அழகிய இயற்கை தோற்றம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல லட்சக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்ட ஒரு இடமாக முள்ளிவாய்க்கால் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் என்றாலே அங்கு இரத்த கறைகள் மாத்திரமே மக்கள் மத்தியில் நினைவுக்கு வருகின்றது. கறுப்பு சரித்திரமாக பதிவாகியுள்ள முள்ளிவாய்க்காலின் இன்றும் பெரும்பாலானோர் அறியாத அழகிய இடங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் கடற்கரையை அண்மித்த ஓர் அழகிய கிராமமாகும். யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அந்த பகுதி இன்றும், ஆள் நடமாட்டமற்ற பகுதியாகவே காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கடற்கரையை நோக்கி செல்லும் மணல் வீதி… தூரத்தில் இரு மருங்கிலும் பனை மரங்கள்… பனை மரங்களுக்கு இடை நடுவில் கடற்கரை தென்படும் அழகிய காட்சி.

கடற்கரையை நோக்கி சென்றால், அங்கு ஆள் நடமாட்டம் என்பதை எம்மால் காண முடியவில்லை. சிறிய ரக மீன்பிடி படகுகள் மாத்திரம் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், கடற்றொழிலாளர்களையும் எம்மால் காண முடியவில்லை.

எந்தவித அசுத்தமும் இன்றி, மிகவும் சுத்தமாக இந்த கடற்கரை காணப்படுவதை பார்த்த எமக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. பல கிலோமீற்றர் தொலைவிற்கு நேரான கடற்கரையை கொண்ட இந்த அழகிய முள்ளிவாய்க்கால் கடற்கரை, இன்றும் எந்தவொரு அதிகாரியின் கவனத்திற்கும் செல்லவில்லை.

குறிப்பாக சுற்றுலாத்துறையை இலங்கை பெயர் பெற்றுள்ள பின்னணியில், இவ்வாறான கடற்கரைகளை பிரசித்திப்படுத்துவதன் ஊடாக மேலும் சுற்றுலாத்துறையை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியோ என்னவோ, அரசாங்கம் இந்த அழகிய கடற்கரையை வெளிகொணராது இருக்கின்றது.

முல்லைத்தீவு இலங்கையின் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுகின்ற பின்னணியில், குறித்த கடற்கரை சுற்றுலாத்துறைக்கான திறக்கப்படும் பட்சத்தில், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னோற்றுவதற்கான இயலுமை கிடைக்கும் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியை மக்கள் பாவனைக்கு வழங்க முன்பாக, அந்த பகுதியில் பாதுகாப்பு பிரிவினரால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை தீர்க்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

– BBC – Tamil

தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்திருந்த ரோச்சனா : ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமியின் கதை!!

தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்திருந்த ஒன்பது வயதான ரோச்சனா என்ற சிறுமி குறித்த தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமி ரோச்சனா குறித்த தகவல்களையே குறித்த ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் 260க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்.

இதில் நீர்கொழும்பு கட்டுவாபிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஒன்பது வயதான ரோச்சனாவும் கொல்லப்பட்டிருந்தார்.

இது குறித்து சிறுமியின் தந்தை கருத்து தெரிவிக்கையில், “அப்பா இன்னும் கொஞ்ச நேரம் தானே… நான் இப்படியே இருக்கிறேன்…” என கடைசியாக கூறினாள்.

தனது மகள் சொன்னது போல் கொஞ்சம் நேரம் மட்டுமே உயிருடன் இருந்தாள். ஈஸ்டர் தினத்தன்று எனது மகளுக்கு புது ஆடை வாங்கிகொடுத்திருந்தேன். அதனை அணிந்துகொண்டே அவள் ஆலயத்திற்கு வந்திருந்தாள்.

தேவாலயத்தில் அதிகளவான ஆட்கள் இருந்தார்கள். இந்நிலையில், தற்கொலை குண்டுதாரி இருந்த பக்கத்திற்கு நேர் எதிர் திசையில் நாங்கள் நின்றிருந்தோம். ஆலயத்தினுள் அமர்வதற்கு இடமிருக்கவில்லை.

வழமை போன்றே பூஜைகளும் இடம்பெற்றன. எனக்கு முன்னால் மகள் இருந்தாள். நான் அவரை உட்காரச்சொன்னேன். எனினும், அவள் அமரவில்லை.

பதிலாக “அப்பா இன்னும் கொஞ்ச நேரம் தானே… நான் இப்படியே இருக்கிறேன்…” என கூறினாள். அவள் அப்படி சொல்லி ஒரு நிமிடம் கூட இருக்கவில்லை. குண்டு வெடித்ததில் உயிரிழந்து விட்டாள்.

அவள் சொன்னது போல் கொஞ்சம் நேரம் மட்டுமே உயிருடன் இருந்தாள்” என சிறுமியின் தந்தை கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தனது பாடசாலை பயிற்சி புத்தகத்தின் இறுதி பகுதியில் 14 முதல் 21 வரை இலக்கமிட்டிருந்த ரோச்சனா, 21ம் இலக்கத்தினை மாத்திரம் கிறுக்கி வைத்திருந்தாள்” என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதனை நாங்கள் ஒரு மாதத்தின் பின்னரே கண்டிருந்தோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியாவில் மதங்களுக்கிடையே நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக விழிப்புனர்வு பேரணி!!

விழிப்புனர்வு பேரணி

மதங்களுக்கிடையே நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக விழிப்புனர்வு கருத்தரங்கும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வும் வவுனியாவில் நேற்று இடம்பெற்றிருந்தது.

தேசிய சமாதான பேரவை மற்றும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா பிரதேச சர்வமதக்குழுவின் அனுசரனையுடன் மதங்களுக்கிடையே நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கு வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (20.06.2019) காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வு கருத்தரங்கின் பின்னர் குறித்த விடுதியிலிருந்து இரண்டாம் குறுக்குத்தெரு வீதியூடாக பழைய பேரூந்து நிலையம் வரை பதாதைகளை கையில் ஏந்திய வண்ணம் அணைவரும் பேரணியாக சென்றனர்.

அதன் பின்னர் பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே விழிப்புணர்வு சுவரொட்டிகளை சர்வமதத்தலைவர்களுடன் இணைந்து பேரணியில் கலந்து கொண்டிருந்த அனைவரும் ஒட்டினார்கள்.

தேசிய சமாதான பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் யு.எம் உவைஸ் தலமையில் இடம்பெற்ற இச் செயற்றிடத்தில் சமூக பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் சி.எம்.அரவிந்த, பொலிஸார், கிராம சேவையாளர்கள், தனியார் மற்றும் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், இளைஞர்கள், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர்.

கார் வாங்கிதர கோரி தொடர்ந்து துன்புறுத்திய மருமகன் : மகள் எடுத்த விபரீத முடிவு!!

வரதட்சனை கேட்டு பெண்ணிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை, சேர்ந்த செல்வமணிக்கும் கருதிப்பட்டியைச் சேர்ந்த ராசாத்திக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. 32 சவரன் நகையோடு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களும் சீதனமாக கொடுக்கப்பட்ட நிலையில், கார் வாங்கித் தரக்கேட்டு தன்னை தினமும் துன்புறுத்துகின்றனர் என்று ராசாத்தி அடிக்கடி தனது தந்தையிடம் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில் தான் செவ்வாய்கிழமை மாலை ராசாத்தி இறந்துவிட்டதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரசாத்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் உறவினர்கள் உடலை வாங்க சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பொலிசாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

பெண்ணாக பிறந்ததால் பிஞ்சுக் குழந்தையை துடிதுடிக்க கொன்ற தந்தை!!

குழந்தையை துடிதுடிக்க கொன்ற தந்தை

கர்நாடக மாநிலத்தில் ஒன்றரை மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுநாத் (24) – சுப்ரீதா தம்பதியினருக்கு கடந்த மே மாதம் நிகாரிகா என்கிற பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கனவே வீட்டில் தன்னுடைய உடன்பிறப்புகளுக்கும் பெண் குழந்தை பிறந்ததிருந்ததால், கோபத்தில் இருந்த மஞ்சுநாத், நிகாரிகாவை வெறுக்க ஆரம்பித்துள்ளார். ஜூன் மாதம் 18ம் திகதியன்று வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அவருடைய மனைவி சுப்ரீதா, வெளியில் துணி துவைத்துக்கொண்டிருந்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மஞ்சுநாத், தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதற்கிடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்த சுப்ரீதா, குழந்தையின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியில் ரத்தம் வழிந்தபடி, சுயநினைவில்லாமல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த நிலைமை குறித்து கணவரின் கேட்டபோது, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தேன். எனக்கு எதுவும் தெரியாது என மஞ்சுநாத் கூறியுள்ளார்.உடனே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று பரிசோதித்தபோது, குழந்தை இறந்துவிட்டதாகவும், எதற்கும் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுங்கள் என மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்த ஊர்மக்கள் அனைவரும் சுப்ரீதா வீட்டின் முன் குவிந்தனர். அங்கிருந்த யாரும் பொலிஸிற்கு தகவல் கொடுக்க கூடாது என மிரட்டும் தொனியில் மஞ்சுநாத் கூறியுள்ளார். மேலும் அன்றைய தினமே மஞ்சுநாத் தனது குற்றத்தை மறைக்க, நிகரிகாவின் உடலை புச்செனஹள்ளியில் உள்ள தனது உறவினர் முனிசாமியின் நிலத்தில் அடக்கம் செயதார்.

இதனால் சந்தேகமடைந்த அவருடைய மனைவி பொலிஸிற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் வந்த பொலிஸார் மஞ்சுநாத்திடம் விசாரணை மேற்கொண்ட போது, பெண் குழந்தையால் வீட்டிற்கு கெடுதல் நடக்க போகிறது என்று ஜோதிடர் கூறியதால் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். ஜோதிடரின் பேச்சை கேட்டு பிஞ்சுக்குழந்தையை தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் அசாதாரண சூழ்நிலை : கொந்தளிக்கும் மக்கள்!!

கொந்தளிக்கும் மக்கள்

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திடீரென நாடு தழுவிய ரீதியில் ரயில்வே ஊழியர்கள் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து அஞ்சல் ரயில் சேவைகள் உள்ளிட்ட பல ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொழும்பு – புறக்கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் பெருமளவு மக்கள் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில்வே தொழிற்சங்கம் ஒன்றியம் தீர்மானித்திருந்தது. எனினும் திடீரென தற்சமயம் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் இந்த ஏற்பட்டுள்ளது.

பயணிகளுடன் பள்ளத்தாக்கில் விழுந்த நொறுங்கிய பேருந்து 25 உடல்கள் மீட்பு!!

பள்ளத்தாக்கில் விழுந்த நொறுங்கிய பேருந்து

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

குலு மாவட்டத்தின் பஞ்சார் பகுதிக்கு அருகே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாரிலிருந்து கடகுஷானி பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்தே இவ்வாறு பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த 25 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக குலு மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்த 25 மீட்க்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

இன்று நள்ளிரவு முதல் இலங்கை மக்கள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினை!!

மக்கள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினை

தொடருந்து தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்ததன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டமானது சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடருந்து தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது.

எனினும் நிதியமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய குறித்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு தொடருந்து தொழிற்சங்க ஒன்றியம் நேற்று தீர்மானித்திருந்தது. எனினும் குறித்த கலந்துரையாடலில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் மீண்டும் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தொடருந்து தொழிற்சங்கம் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

தமிழ் பேச தெரியாதையிட்டு கவலையடைகிறேன் : இராணுவத் தளபதி!!

இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்பதையிட்டு கவலையடைவதாக இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது ஜனன தினத்தை முன்னிட்டு, நுவரெலியா றம்பொடை டன்சினன் தோட்டத்தில் மகாத்மா காந்திரம் புதிய கிராமத்தில் இன்று நடைபெற்ற மர நடுகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உங்களின் இராணுவத் தளபதி என்ற வகையில் தமிழ் மொழி எனக்கு தெரியாதது குறைபாடு. தமிழ் பேச முடியாமைக்கு வருந்துகிறேன்.

இப்படியான திட்டங்கள் மூலம் மக்களின் தலைவர்கள் அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த எதிர்பார்த்துள்ளனர் எனவும் மஹேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அபிவிருத்தி அதிகாரி மஞ்சுநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

லொறியுடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் : ஒருவர் படுகாயம்!!

ஒருவர் படுகாயம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவார பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் சென்ற சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதுண்டே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் லொறியின் முன்பகுதிக்குள் மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விடுதி ஒன்றிலிருந்து பிரதான வீதிக்கு குறித்த லொறியை சாரதி நகர்த்த முற்பட்டபோதே இச்சம்பவம் இடமபெற்றிருக்கலாம் என சிலரும், பிரதான வீதியில் இருந்து விடுதிக்குள் பின்புறமாக லொறியை செலுத்த முற்பட்டபோதே இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என ஒரு சிலரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் உண்மைத்தன்மையை அறிவதற்காக அருகில் உள்ள விடுதிகளில் சீசீடிவி கமரா உள்ளதா என ஆராய்ந்த அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் வீட்டின் பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்ட அதிகளாவன உணவுப்பொருட்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் : அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை..!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் எம்.பி.யான ஹரிஸ் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட கூடாது என்பது தொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போது இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கத்தையும், ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பெரும் பங்களிப்பு தமிழர்களுக்கு உள்ளது. அந்த நன்றிக்கடன் அரசாங்கத்துக்கு இருக்கின்றதா? என நாம் கேட்கின்றோம்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை, அரசாங்கம் உடனடியாக தரமுயர்த்தாவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள ஆதரவை விலக்கி கொள்ளும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. எனினும் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் நாம் ஆதரவளித்து வருகின்றோம். இனியும் எமது மக்களை நாம் சமாதானப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு : 108 தேங்காய் உடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு…!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் நாளை 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், பொது அமைப்புகளும் இணைந்து கல்முனையில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் காலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ள 108 தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது : சங்கக்கார அதிரடி!!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஆடுகளங்கள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.

ஆடுகளம் தொடர்பில் சங்கக்கார கூறியதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் நடைபெறும் இவ்வாறான மிகப்பெரிய தொடர் ஒன்றில் சீரானதும் நடுநிலையானதுமான ஆடுகளங்களை வழங்குவது மிக முக்கியமாகும்.

சீரற்ற காலநிலையின் போது மைதானங்களை இலங்கையைப் போன்று முழுமையாக மூடுவது இலகுவான விடயமல்ல. அதற்கு அதிகமான மனிதவளம் தேவைப்படுகிறது. இருப்பினும், இவ்வாறான தொடரின் போது, சீரற்ற காலநிலையிலிருந்து கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கு இதுபோன்ற விடயங்களை செய்ய வேண்டும்.

ஆனால், சில ஆடுகளங்கள் வேறுபாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறித்த ஆடுகளங்கள் மாற்றப்பட வேண்டும். இதன் காரணமாக சில அணிகள் தங்களுடைய அதிருப்திகளை வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இங்கிலாந்தின் மைதானங்களில் சிறந்த வடிகாலமைப்பு இருந்தாலும், ஒரு சில மைதானங்களில் நடைபெறவுள்ள போட்டிகள் ஈரத்தன்மையால் கைவிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஜம்பவான் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்!!

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை மாதம் புதிய கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக தொழில்நுட்பக் கல்லூரியை தொடர்புக்கொள்ளுங்கள்.

பின்வரும் 6 மாத கற்கைநெறிகள் அடுத்தமாதம் (ஜூலை) ஆரம்பமாகவுள்ளன.

1. குளிரூட்டல் மற்றும் வளிச்சீராக்கல் – NVQ3 (Refrigeration and Air Conditioning Machanic) : தகைமைகள் : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) ஏதாவது 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

2. மின்கம்பி இணைப்பு (Domestic Wiring) – NVQ3. தகைமைகள் : தரம் 10 பூர்த்தி செய்திருந்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

3. பொறியியல் கைவினை பயிற்சியில் தேசிய சான்றிதழ் : பிளம்பர் (Plumber). தகைமைகள் : தரம் 10 பூர்த்தி செய்திருந்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

4. கள உதவியாளர் விவசாயம் (Filed Assistant Agriculture) NVQ4. தகமை : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் ஏதாவது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

5. மோட்டார் சைக்கிள் திருத்துதல் (Motor Cycle & Scooter Mechanic) NVQ3. தகமை : தரம் 09 பூர்த்தி செய்திருந்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

6. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் (Information Telecommunication Technician) NVQ4. தகமை : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், போதனாமொழி,ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சின்னம்மை நோய்க்கு ஒப்பான வைரஸ் ஒன்று சிறுவர்கள் மத்தியில் பரவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்படுகின்ற வேளைகளில் முதல் நாள் காய்ச்சல் ஏற்படுவதுடன், பின் சிறுவர்களின் உடலில் நீர்த்தன்மையான கொப்பளங்கள் மற்றும் சிவப்பு நிறத்திலான தழும்புகளும் ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேலாக நீடிக்கும் பட்சத்தில் விற்றமின்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாய், கரம் மற்றும் கால்கள் போன்ற உடல் உறுப்புக்களில் இந்த நோய் தாக்கும் எனவும், இந்த வைரஸ் விரைவாக பரவும் என்பதால், இதனால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களை பாடசாலைகள் அல்லது முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.