வவுனியாவில் நீதிகேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்கள் : சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்!!

நீதிகேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்கள்

வவுனியா தவசிகுளம் பிள்ளையார் வீதியில் இன்று (03.06.2019) காலை நீதிகேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்களினால் அவ்விடத்தில் சற்று பதற்றநிலை காணப்பட்டது.

வடமாகாண முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபா (2,200000) நிதி ஒதுக்கிட்டில் தவசிகுளம் பிள்ளையார் வீதி செப்பனிடும் பணி கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பக்கப்பட்டது.

சுமார் 1.5 கிலோ மீற்றர் கல்லிட்டு தாரிடும் பணிகள் நிறைவுக்கு வந்த நிலையில் எஞ்சிய கற்களை வீதி நேற்றையதினம் (02.06.2019) இரவு ஒப்பந்தக்காரர் 11 டிப்பர் மூலம் வவுனியா மதவு வைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கல் ஆலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நேற்றையதினம் இரவு அவ்விடத்தில் ஒன்று கூடிய தவசிகுளம் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்கள் மதவு வைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கல் ஆலைக்கு சென்று அவற்றை மீள எடுத்த இடத்திற்கு எடுத்துச்செல்லுமாறு கோரி கல் ஆலையினை முற்றுகையிட்டமையினால் 11 டிப்பர்கள் மூலம் மீள கற்கள் தவசிகுளத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இச் சம்பவம் நேற்றையதினம் இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் இன்று (03.06.2019) காலை வீதியினை செப்பனிடும் பணிகளை பார்வையிட வந்த ஒப்பந்தகாரர்களை தவசிகுளம் இளைஞர்கள் முற்றுகையிட்டு பொலிஸாருக்கு (119) தகவல் வழங்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் கார்த்திகேசன் நத்தகுமாரன் அங்கிருந்த இளைஞர்களுடனும் ஒப்பந்தகாரர்களிடமும் கலந்துரையாடியதுடன் வவுனியா தெற்கு பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தரை வரவழைத்து வீதியின் தரத்தினை மதிப்பிடு செய்யுமாறு தெரிவித்தார்.

சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர். ஊடகங்களுக்கு இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது வீதியினை செப்பனிடுவதற்கென எமது கிராமத்தில் குவிக்கப்பட்ட கற்கள் எவ்வாறு மிஞ்சும், ஒரு டிப்பர் கற்கள் மிஞ்சினால் பரவாயில்லை 11 டிப்பர் கற்கள் மிகுதியாகவுள்ளது என்றால் எமது வீதி எந்த தரத்தில் போடப்பட்டுள்ளது என தெரியவில்லை.

எனவே மிகுதியாகவுள்ள கற்களை எமது வீதிக்கே பயன்படுத்த வேண்டும். அத்துடன் இவ் வீதியில் போடப்பட்டுள்ள தாரினை கையால் கழற்ற முடிகின்றது. வீதி செப்பனிடும் பணியில் ஊழல் இடம்பெற்றுள்ளது. எனவே இவ் விடயத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா – அட்டமஸ்கட பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக மாமடு பொலிஸார் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

வவுனியா – அட்டமஸ்கட பகுதியிலுள்ள குளத்திற்கு அருகிலுள்ள மரப் பொந்தில் பொதி ஒன்று காணப்படுவதாக நேற்று மாலை கிடைத்த தகவல் அடிப்படையில் சென்ற பொலிஸார் அங்கு காணப்பட்ட பொதியை சோதனை செய்த போது அப் பொதியில் பல வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.

இதன்போது எஸ்.எல்.ஆர் மகசீன் 2, எஸ்.எல்.எல் தோட்டாக்கள் 08, ரி. 56 ரக தோட்டாக்கள் 02, என்பன மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் எவ்வாறு குறித்த வெடிபொருட்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளன, இதை யார் கொண்டு வந்து வைத்துள்ளார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்றையதினம் நீதிமன்ற அனுமதியுடன் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதவிகளை ராஜினாமா செய்தனர் அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா!!

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

ஆளுநர்களான ஹில்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது இருவரும் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.

இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் இனந்தெரியாதோரால் ஹோட்டலுக்கு தீ வைப்பு!!

ஹோட்டலுக்கு தீ வைப்பு

திருகோணமலையில் ஹோட்டலொன்றுக்கு இன்று காலை தீ வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சதாசிவம் குணரத்னம் என்பவருக்கு உரித்தான ஹோட்டலுக்கே இனந்தெரியாதோரினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

எனினும் ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கண்டியில் சற்று பதற்றமான நிலை : டயர்கள் எரிப்பு – ஞானசார தேரர் கடும் எச்சரிக்கை!!

கண்டியில் சற்று பதற்றமான நிலை

கண்டியில் தற்போது பெருமளவு பிக்குமார் ஒன்றுகூடியமையினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டயர்களை எரித்து பொது மக்கள் தமது எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஞானசார தேரர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியூதினை பதவி விலக்கவில்லை என்றால் பாரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காலக்கெடு நிறைவடையவுள்ள நிலையில் இனியும் பொறுமையாக இருக்க முடியாது. நாட்டை பாதுகாக்க சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியாவில் ரத்தினதேரருக்கு ஆதரவாக இருவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

வவுனியா கண்டி வீதி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனிநபர் ஒருவர் இன்று (03.06) காலை முதல் சாகும்வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரையான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் ரத்தினதேரருக்கு ஆதரவான போராட்டத்தினை இன்று காலை 9மணிமுதல் கண்டி வீதி பிரதான வீதியிலுள்ள ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த தேவராசா கோபாலகிருஷ்னண் (42வயது) என்பவர் ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை தனிநபர் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்குள் அவருக்கு ஆதரவாக இன்னுமொருவரான த.சண்முகம் (வயது 49) உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்தவரும் இப்போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

வவுனியாவில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு : அதிகாரிகள் அசமந்தம்!!

வவுனியா வேலங்குலம் கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் அதிகாரிகள் அசண்டையினமாக செயற்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நேற்றைய தினம் (01.06) மாலை குறித்த கிராமத்தில் விவசாய காணி ஒன்றுக்குள் புகுந்து யானை 6 தென்னைகளையும் சுமார் 25க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் முற்றாக சேதமாகியுள்ளது. ஏனைய மாமரங்கள், பூசனி என்பவற்றை மிதித்து நாசமாக்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக் கிராமத்தில் யானையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகவும், கிராமத்திற்குள் யானை உள்நுளையாதவாறு வேலி அமைத்து தருமாறு கிராம மக்கள் உரிய அதிகாரிகளை கேட்டும் இதற்குரிய நடவடிக்கைகள் இன்றுவரையும் மேற்கொள்ளவில்லையெனவும் மக்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் இராணுவ ஜீப் மோதி ஒருவர் பரிதாபமாக பலி!!

ஒருவர் பரிதாபமாக பலி

வவுனியா நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதியதில் ஓருவர் பலியாகியுள்ளார். இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது.

முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியங்குளம் நோக்கி பயணித்த இராணுவ ஜீப் வாகனம் நெடுங்கேணி மகாவித்தியாலயம் அருகாமையில் உள்ள மஞ்சள் கோட்டு கடவைக்கு அருகில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நெடுங்கேணி சேனைப்புலவைச் சேர்ந்த எஸ்.பேரம்பலம் (வயது 65) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த முதியவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

பரிதாபமாக இறந்து போன இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டாரா? கடைசியாக வந்த தொலைபேசி அழைப்பால் சிக்கிய இரண்டு பேர்!!

இசையமைப்பாளர் கொலை

கடந்த அக்டோபர் மாதம் 25 ம் தேதி கேரளாவை அதிர வைத்த சம்பவம் பிரபல இசையமைப்பாளர் பால பாஸ்கர் சாலையில் ஏற்பட்ட விபத்தால் பரிதாபமாக இறந்து போனது தான். சம்பவ நாள் அன்று அவருடன் அவர் மனைவி, குழந்தை தேஜஸ்வினி ஆகியோர் திருச்சூர் வடக்கு நாதர் ஆலயத்திற்கு காரில் சென்று வந்த போது இந்த விபத்து நடந்தது.

இதில் அவரின் மனைவி மற்றும் தீவிர சிகிச்சைக்கு பின் பிழைத்துக்கொண்டார். மாதங்கள் பல கடந்துவிட்ட நிலையில் தற்போது விபத்து வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் கடத்தலில் சிக்கிய பிரகாஷன் தம்பி, விஷ்ணு என இருவர் கைது செய்யப்பட்டார்கள்.

அவர்களை விசாரித்த போது பிரகாஷன் தான் பால பாஸ்கரிடம் மேனேஜராக பணியாற்றினேன் என கூறியுள்ளார். இந்த விசயம் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாஸ்கரின் மனைவி பிரகாஷன் மேனேஜர் எல்லாம் கிடையாது. ஒரு நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதற்கான சம்பளமும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

இறந்து போன என் கணவரை தேவையில்லாமல் கடத்தல் வழக்கில் பேசுவது மிகவும் மன வேதனையாக இருக்கிறது என கூறியுள்ளார். ஆனால் பாஸ்கரின் அப்பா பாஸ்கர் விபத்தில் இறந்ததாக தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தது அந்த இருவரும் தான். பிரகாஷனுக்கும் பாஸ்கர் இறந்த மருத்துமனைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பாஸ்கர் இறந்த பிறகு அவர்கள் யாரும் வீட்டு பக்கம் வரவே இல்லை.

விஷ்ணுவுக்கு பாஸ்கரின் தொழில், பண ரகசியங்கள் எல்லாம் தெரியும். ஆனால் நடப்பதை பார்த்தால் அந்த இருவரும் பணத்திற்காக என் மகன் கொலை செய்துவிட்டார்களா என சந்தேகம் எழுகிறது என கூறியுள்ளார். ஆனால் விபத்திற்கு முன் கடைசியாக பால பாஸ்கர் பிரகாஷனிடம் தான் போனில் பேசியுள்ளார் என சொல்லப்படுவதால் சந்தேகம் வலுத்துள்ளது.

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி!!

துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொத்தொட்டுவ, முல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 40 வயதான நபர் என பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 5.45 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவையே கனரக லொறியில் வலம் வரும் சாதனை தமிழ்ப்பெண்!!

சாதனை தமிழ்ப்பெண்

தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், 10 டயர்கள் கொண்ட கனரக லொறியை ஓட்டி சாதனை படைத்துள்ளார். பெண்கள் இன்று பல துறைகளில் கால் பதித்து வருகின்றனர். குறிப்பாக அரசியலிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. நகரின் பல இடங்களில் பெண்கள் ஆட்டோ ஓட்டி செல்வதைப் பார்த்திருப்போம்.

இந்நிலையில், தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேற்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கனரக லொறியை ஓட்டி சாதனைப் படைத்துள்ளார். கூலித் தொழிலாளியான ரெங்கையா என்பவரின் மனைவியான செல்லம்மாள்(48), கணவர் உடல்நலம் குன்றியதால் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்டார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான செல்லம்மாள், சிறிய ரக வாகனங்களை இயக்கத் தொடங்கினார். 5 ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டுநர் பயிற்சி பெற்ற இவர், கனரக வாகனங்களையும் ஓட்ட ஆரம்பித்தார்.

தற்போது 10 டயர்கள் கொண்ட லொறியை ஓட்டி, இந்தியா முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார். செல்லம்மாள், மும்பையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு லொறியை ஓட்டி வந்த நிலையில், கப்பலூர் மேம்பாலம் அருகே தனியார் பேருந்து ஒன்றின் மீது மோதியதில் பக்கவாட்டில் கண்ணாடி உடைந்தது.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோதே செல்லம்மாளின் சாதனை வெளியுலகுக்கு தெரிய வந்தது. மேலும், இந்த விபத்துக்கு காரணம் தனியார் பேருந்து தான் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் சாதனை குறித்து செல்லம்மாள் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் நான் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று வருகிறேன்.

அனைத்து மாநிலங்களிலும் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் எனக்கு பக்கபலமாக உள்ளனர். என்னைப்போல நிறைய பெண்கள் ஓட்டுநராக உருவாக வேண்டும், அப்போதுதான் இந்த சமுதாயம் நன்றாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார். தற்போது செல்லம்மாளின் உழைப்பில், அவரது மகன்கள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா உள்நாட்டுப் போரை அம்பலப்படுத்திய 9 வயது சிறுமியின் நெஞ்சைப் பிசையும் கோரிக்கை!!

சிறுமியின் நெஞ்சைப் பிசையும் கோரிக்கை

சிரியாவில் உள்நாட்டுப் போர் கொடூரங்களை டுவிட்டர் வாயிலாக உலகிற்கு அம்பலப்படுத்திய சிறுமி, அகதிகள் தொடர்பில் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் குடும்பத்துடன் துருக்கியில் குடியிருக்கும் சிறுமி பானா அலபிட், சிரியா உள்நாட்டு யுத்தம் தொடர்பில் டுவிட்டரில் தமது கருத்துகளை பகிர்ந்தபோது அவரது வயது 7.

ஆங்கில மொழியில் தமது குடியிருப்புக்கு அருகாமையில் நடந்தேறும் கொடுமைகளை டுவிட்டர் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் சிறுமி பானா. அவரது பதிவுகள் அனைத்தும் உலக அரங்கை உலுக்கியது. தற்போது குடும்பத்துடன் துருக்கியில் குடியிருக்கும் பானா,

சிரியாவில் அந்த பழைய வாழ்க்கையை தாங்கள் இழந்துள்ளதாகவும், யுத்தம் எப்போது துவங்கியதோ அப்போதே எல்லாம் தலைகீழானது என கலங்கும் சிறுமி பானா, நானோ அல்லது தமது குடும்பத்தில் ஒருவரோ கொல்லப்படலாம் என்ற அச்ச உணர்வுடனே தினந்தோறும் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் தமது தோழி யாஸ்மின் கொல்லப்பட்டதை கண்கூடாக பார்த்ததாக கூறும் பானா, பல நாட்கள் உணவு தண்ணீர் இன்றி வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள அகதி சிறார்கள், குறிப்பாக சிரியா நாட்டவர்கள் வெடிகுண்டு தாக்குதல்களாலும், போராலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நாடுகளில் அமைதியை கொண்டுவந்தால், அவர்கள் தங்கள் நாடுகளுக்கு சென்று அமைதியான வாழ்க்கை வாழலாம் எனவும் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிடுகையில் துருக்கியில் மட்டுமே அகதிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சிரியாவில் இருந்து மட்டும் 3.6 மில்லியன் அகதிகள் துருக்கியில் குடியிருந்து வருகின்றனர். தற்போது துருக்கி குடிமகளாக இருந்தும் சிறுமி பானா, தமக்கு சிரியா செல்ல வேண்டும் எனவும், அந்த பழைய நாட்களை மீண்டும் வாழ வேண்டும் எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் பட்டானிச்சூர் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு!!

பட்டானிச்சூர் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள முஹிய்யித்தீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று (02.06.2019) மாலை இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மதத் தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி தலமையில் ஆரம்பமான இவ் இப்தார் நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்கள் மற்றும் வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், வர்த்தகர்கள், கடற்படையினர், பொலிசார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உரையாற்றிய மாமடு விகாராதிபதி முவட்டகம ஆனந்த தேரர் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகள் வவுனியா பூந்தோட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

வவுனியாவிற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் வருகை!!

மன்னார் மறைமாவட்ட ஆயர்

வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் பற்றிமாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதிப் பூசை நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.

இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற உறுதிப் பூசுதல் நிகழ்வில் ஆயரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் விசேட ஆரதானைகளும் இடம்பெற்றிருந்தது.

இதன் போது இப்பங்கை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உறுதி புசுதல் அருள்சாதனம் வழங்கி ஆய ரினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

பொலிஸாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓமந்தை பங்கைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நான் ஒரு பெண்ணின் தலையை வெட்டினேன், அதற்காக வருந்துகிறேன் : ஒரு தீவிரவாதியின் வாக்குமூலம்!!

ஒரு தீவிரவாதியின் வாக்குமூலம்

மொராக்கோவுக்கு சுற்றுலா சென்ற ஸ்காண்டினேவிய பெண்கள் மர்மமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தான் ஒரு பெண்ணின் தலையை வெட்டியதாக பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஒரு நபர்.

டென்மார்க் மாணவியான Louisa Vesterager Jespersen(24) மற்றும் நார்வேயைச் சேர்ந்த Maren Ueland (28) இருவரும் அட்லஸ் மலைகளுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது கழுத்தறுபட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.

முதலில் யாரோ அவர்களை கொலை செய்து விட்டார்கள் என்று மட்டுமே மொராக்கோ அதிகாரிகள் எண்ணியிருந்த நேரத்தில், கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் தலையை வெட்டும் வீடியோ ஒன்று வெளியானது.

வீடியோவில் ஒருவர், இவர்கள் அல்லாவின் எதிரிகள் என்றும் சிரியாவில் ஜிகாதிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காகவே அந்த இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியதையடுத்து வழக்கு திசைமாறியது.

சம்பவம் தொடர்பாக 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த குற்றவாளிகளில் ஒருவரான Abdessamad Ejjoud (25) என்பவர், அந்த ஸ்காண்டினேவிய பெண்களில் ஒருவரின் தலையை தான் வெட்டியதாகவும் அதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

இன்னொரு பெண்ணை தனது கூட்டாளியான Younes Ouaziyad கொலை செய்ததாகவும் Ejjoud தெரிவித்துள்ளார். அத்துடன் தாங்கள் ஐ.எஸ் அமைப்புக்காக அந்த கொலைகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் Ejjoud.

சட்டப்படி இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், ஆனால் 1993இலிருந்து மொராக்கோ மரண தண்டனை விதிப்பதை நிறுத்தி வைத்துள்ளதால் குற்றவாளிகளின் தலையெழுத்து என்னவென்று தெரியவில்லை.

தாலி கட்டிய மறுநிமிடமே தற்கொலை : பூஜை அறையில் மயங்கிக் கிடந்த இளம்ஜோடி!!

மயங்கிக் கிடந்த இளம்ஜோடி

கும்பகோணத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி, தாலி கட்டியதும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ரவீந்திரன் என்பவரின் மகன் சுரேஷ் (23). இளங்கலை பட்டதாரியான சுரேசும், பொறியியல் பட்டதாரியான சரண்யாவும் (23) கடந்த 7 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் உறவினர்களாக இருந்தாலும் கூட, வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேசமயம் இளம்ஜோடி தங்கள் காதலிலும் உறுதியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 29ம் திகதியன்று வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து ரமேஷ் வீட்டிற்கு சரண்யா சென்றுள்ளார். அங்கிருந்த பூஜை அறையில் வைத்து, சரண்யா கழுத்தில் ரமேஷ் தாலி காட்டியுள்ளார்.

எப்படியும் இரு வீட்டாரும் சேர விடமாட்டார்கள் என்பதால் எலிமருந்தை சாப்பிட்டு பூஜை அறையிலேயே மயங்கி கிடந்துள்ளனர். வெளியில் சென்றிருந்த ரமேஷ் பெற்றோர் சிறிது நேரத்திலே வீடு திரும்பியுள்ளனர். அப்பொழுது கழுத்தில் புதிய தாலியுடன், ரமேஷ் மற்றும் சரண்யா பூஜை அறையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த இருவரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.