மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக குழப்பம் : கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பொலிஸார்!!

கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக குழப்பம்

மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமையை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபையொன்றில் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடமாக உள்ளே வைத்துள்ளதாக கோரி தாயொருவர் தனது மகளை மீட்டுத்தருமாறு கோரி குறித்த சபைக்கு முன்பாக நேற்று மாலை போராட்டமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது குறித்த தாயை சபையின் பணியாளர்கள் உள்ளே விட அனுமதிக்காத நிலையில் வெளியில் இருந்து தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறி தாயார் போராட்டம் நடாத்தியுள்ளார்.

தனது மகள் தன்னை ஐந்து வருடமாக பார்க்கவில்லையெனவும், தனது மகள் தொடர்பில் முகநூல்களில் பிழையான விடயங்கள் பரப்பப்பட்டுவருவதாகவும், தனது மகளை மீட்கும் வரையில் செல்லமாட்டேன் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த தாய்க்கு ஆதரவாக பேசியதுடன் குறித்த சபைக்குள் சென்று சபை நிர்வாகத்துடன் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டுள்ளனர். எனினும் குறித்த பெண்ணை அனுப்பமுடியாது என நிர்வாகம் தெரிவிக்க இளைஞர்கள் சபைக்குள் புகுந்து பெண்ணை மீட்க முனைந்தபோது அங்குவந்த பொலிஸார் இளைஞர்களை வெளியேற்றி நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது குறித்த தாயின் கோரிக்கை தொடர்பிலும், அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் மகள் சபையின் போதகர் ஆகியோரை பொலிஸார் விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேநேரம் குறித்த கிறிஸ்தவ சபை பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறித்த தேவாலயம் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துகளும்,காணொளிகளும் முகநூல் பதிவுகளின் ஊடாக வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச உத்தியோகத்தர்களுக்கு ஓர் விசேட செய்தி!!

விசேட செய்தி

அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அணியும் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின்படி,

அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சாரி அணிவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்.

இதேவேளை, பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த யானைக்குட்டி 7மணி நேரப் போராட்டத்தின் பின்னர் மீட்பு!!

யானைக்குட்டி மீட்பு

கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த 6 மாதமான யானைக்குட்டி ஒன்று இன்று பிற்பகல் 3 மணிவரையான 7மணிநேரப் போராட்டத்தின் பின்னர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு காட்டிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கனகராயன்குளம், பெரியகுளம் ஆயுள் வேத வைத்தியசாலை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிற்குள் யானைகுட்டி ஒன்று நேற்று இரவு தவறி வீழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 8மணியளவில் யானைக்குட்டியை மீட்கும் போராட்டத்தில் கனகராயன்குளம் பொலிசார், வவுனியா மற்றும் கிளிநொச்சி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள்,

கிராம மக்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கிணறு அகழப்பட்டு கிணற்றிலிருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டு மிருக வைத்திய அதிகாரியின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தேக ஆரோக்கியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு பிற்பகல் 3.30மணியளவில் காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு தண்ணீர் தேடி மக்கள் குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த யானைகுட்டியே இவ்வாறு கிணற்றிற்குள் தவறி வீழ்ந்துள்ளது. எனினும் பாதுகாப்பு நிலையிலிருந்து பொலிசார், பொதுமக்கள், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் 7மணி நேரப் போராட்டத்தின் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டு யானை மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு காட்டிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா? இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!!

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க..

பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும். இவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருவதற்கு வழிவகுத்து விடுகின்றது.

முகத்தில் குழிகள் அதிகம் இருந்தால் அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும். அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, சருமத்துளைகளும் சுருங்க ஆரம்பிக்கும்.

தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.

ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமத்துளைகள் சுருங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் கூட சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு அதனை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவும் மேம்படும்.

வெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

ஒரு பௌலில் களிமண்ணை போட்டு, அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் உறிஞ்சி வெளியேற்றி, சருமத்துளைகளை சுருங்கச் செய்யும்.

முகத்தில் மேடு பள்ளங்களுடன், கரும்புள்ளிகளும் இருந்தால், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.

சேதப்படுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் உடல் : தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

மாணவியின் தற்கொலை

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவின் உடலில் இருக்கும் காயங்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள பிரபல நாயர் மருத்துவமனையில் கடந்த 22 ஆம் திகதி மருத்துவ மாணவி பாயல் தத்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியா முழுக்க அதிர்வலைகளை எழுப்பிய இந்த தற்கொலை வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவி பாயலில், உடற்கூறு ஆய்வறிக்கையின்படி, அவரது உடல் சேதப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அச்சம் தெரிவித்த மாணவி பாயலின் குடும்ப ஆலோசகர் ஒருவர், பாயல் மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், அது தற்கொலை இல்லை கொலை. குற்றவாளிகள் மூவரும் பாயலின் உடலை வேறு எங்கோ எடுத்துச் சென்றுள்ளனர். நீண்ட நேரத்துக்கு பிறகே மீண்டும் கல்லூரிக்குக் கொண்டு வந்துள்ளனர். பாயலின் உடல் சேதப்படுத்தப்பட்டுள்ளதற்கான தடயம் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்த வழக்கைக் கொலை வழக்காகவே விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாணவி பாயல் தத்வி சீனியர் மருத்துவ மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். மட்டுமின்றி பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில், பாயலின் சாதியை குறிப்பிட்டு சீனியர்கள் மன உளைச்சல் கொடுத்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, பாயலைத் துன்புறுத்திய சீனியர் மருத்துவர்கள் ஹேமா அகுஜா, பக்தி மகாரே, அங்கீதா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். பாயலின் தற்கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று முன்தினம், மூவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயரமான மாடியின் நுனியில் நின்று கொண்டு கீழே குதிப்பதாக கூறிய இளம்பெண்.. அடுத்து நடந்த விபரீதம்!!

இந்தியாவில் வேலை பறிபோனதால், பெண் ஊழியர் அலுவலக கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியின் தென்மேற்குபகுதியில் உள்ளது குர்கிராம் பகுதி. இது பைனான்சியல் மற்றும் டெக்னாலஜி ஹப் ஆக விளங்குகிறது. இங்குள்ள சைபர் சிட்டியில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சைபர் சிட்டியின் செக்டார் 18 பகுதியில் இயங்கி வரும் தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் பெண் ஊழியர், அந்த அலுவலக கட்டடத்தின் மாடியிலிருந்து குதிக்க முயன்றார். விபரமறிந்தவர்கள் உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் ஒருவர் தொடர்ந்து பேசியபடி இருந்தார். அவர் குதிப்பதை அவர் தாமதப்படுத்தினார்.
அந்த பெண் மாடி சுவற்றின் நுனியில் நின்றிருந்ததால் அவர் கீழே விழுந்துவிடுவாரோ என பலரும் பயந்தனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அலுவலக நிர்வாகியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பெண் ஊழியருக்கு வேலை திரும்ப வழங்க உத்தரவிட்டதையடுத்து, அந்த பெண் தற்கொலை எண்ணத்தை மாற்றி கீழிறங்கி வந்தார்.
இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த இரண்டே மாதத்தில் தந்தையால் ஏற்பட்ட துயரம் : மரணமடைந்த தாயார் : தனித்தே போராடிய இளம்பெண்!!

தனித்தே போராடிய இளம்பெண்

இந்தியாவின் மும்பை நகரில் தந்தையால் அமில தாக்குதலுக்கு இரையான பெண் ஒருவர் தமக்கு மொடலாக வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் குடியிருக்கும் அன்மோள் என்பவருக்கு பிறந்த இரண்டாவது மாதமே தந்தையால் வாழ்க்கையே தலைகீழானது. தாயாரின் மடியில் இருந்த அன்மோளின் முகத்தில் சொந்த தந்தையே அமிலம் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் அன்மோளின் தாயார் குற்றுயிராக மீட்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்தக் கொடூர தாக்குதலானது தன்மீதல்ல, தமது தாயாரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது அன்மோளுக்கு தெரியவந்தது.

பின்னர் 5 ஆண்டு காலம் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார் அன்மோள். தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமே அவரை அனாதைகள் இல்லத்தில் சேர்ப்பித்துள்ளது. அங்குதான் அன்மோளுக்கு அன்பின் உலகம் என்ன என்பது தெரியவந்தது. ஆனால் வெளியுலகம் அவரை ஏளனம் செய்தது.

இருப்பினும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த அன்மோள், தற்போது அமில தாக்குதலுக்கு இரையானவர்களை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். 23 வயதாகும் அன்மோள் தமக்கு மொடலாகும் ஆசை இருப்பதாகவும், அதை நிறைவேற்றும் எண்ணத்துடன் முன்செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய விடயத்தை மறைக்க தான் நேசமணி டிரண்டிங் செய்யப்படுகிறதா?

நேசமணி டிரண்டிங்

காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை திசைதிருப்பவே நேசமணி டிரண்டிங் செய்யப்படுகிறதா என இணையதளவாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் எந்த ஹேஷ்டேக்குகள் எப்போது ட்ரெண்ட்டாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. யாராவது ஒரு கருத்தைச் சொல்ல போய் அது இந்தியளவில் ஹேஷ்டேக்குகளாக உருவாக்கப்பட்டு ட்ரெண்ட்டாகும்.

அந்த வரிசையில் #Pray_for_Neasamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்கு இந்தியளவில் ட்ரெண்ட்டாக தொடங்க, என்னவென்று பலரும் பார்த்து உலகளவில் ட்ரெண்ட்டாக வைத்தனர். இதனிடையில் நேசமணி டிரண்டுக்கு வேறு காரணம் இருப்பதாக சமூவலைதளத்தில் சிலர் கூறி வருகிறார்கள்.

அதாவது சில தினங்களுக்கு முன்னர் சென்னையை அடுத்த காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து ஒரு மாணவரும், மாணவியும் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தனர்.

இது தற்கொலை என கூறப்படும் நிலையில் இந்த விடயத்தை திசை திருப்பவே #Pray_for_Neasamaniடேக் டுவிட்டரில் டிரண்ட் செய்யப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.

கணவரின் ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை : காதலித்து திருமணம் செய்து கொண்ட திருநங்கையின் வேதனை!!

திருநங்கையின் வேதனை

தமிழகத்தைச் சேர்ந்த அருணம்மா என்ற திருநங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின் கணவரின் சில ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடியாததால், பிரிந்ததாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

எல்லாருக்கும் காதல் என்பது பொதுவான் ஒன்று தான், அதுபோலவே தான் எனக்கும் காதல் வந்தது. புனேவில் என்னைப் போன்ற திருநங்கை சமூகத்தினருடன் சேர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுட்டு இருந்தேன். என்னுடைய 21 வயதில் முழு திருநங்கையாக மாறியிருந்த போது, அவரை ஒரு திருவிழாவில் பார்த்தேன்.

அவர் சென்னையில் பிசினஸ் செய்து கொண்டிருந்தார். இருவரும் தொலைபேசி வழியாக பேசினேன். முதலில் நண்பர்களாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவருக்கு என்னை பிடித்துவிட்டதால், காதலைக் கூறினார்.

நல்ல குடும்பம், கெட்ட பழக்கம் இல்லாத பையன். அதுமட்டுமல்லாமல் என்னை நேசிக்கிறவர் இதுக்கு மேல என்ன வேண்டும் என்று நானும் அவருடைய காதலை ஏற்றுக் கொண்டேன். ஐந்து வருடங்களாக காதலித்து வந்தோம். அதன் பின் ஒருகட்டத்தில் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.

நான் திருநங்கை என்பது அவருக்கு மட்டுமே அவருடைய குடும்பத்தினருக்கு தெரியாது. திருமணத்திற்கு பின்பும் எங்கள் வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒராண்டு வரை சந்தோஷமாக இருந்தோம், நாட்கள் செல்ல செல்ல எங்களின் மகிழ்ச்சி குறைய ஆரம்பித்தது.

அதற்கு காரணம், அவருக்குன்னு சில ஆசைகள் இருக்கும். என்னால் அதைப் பூர்த்தி செய்ய முடியமல் போனது. அதே மாதிரி அவரால் சில விஷயங்களில் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் இரண்டு பேரும் பேசி முடிவெடுத்து பிரிந்துவிட்டோம். நாங்கள் பிரியும் வரை அவரின் விட்டிற்கு நான் திருநங்கை என்பதே தெரியாது. அதன் பின்னரே அவர்களுக்கு தெரிந்தது. இதையடுத்து அவர் சில ஆண்டுகள் திருமணம் செய்யாமல் இருந்தார்.

அவர் வீட்டின் வற்புறுத்தலின் பேரின் திருமணம் செய்து கொண்ட அவருக்கு தற்போது குழந்தைகள் இருக்கின்றன. எப்போதாவது அவரை பார்ப்பேன், சில நிமிடம் பேசிவிட்டு சென்றுவிடுவேன், அது எல்லாம் ஒரு காலம், ஆனால் இப்போது அதற்கு நேரம் இல்லை.

எனக்கு ஆதரவு என்றால் அது என் திருநங்கை சமூகம் மட்டும்தான். அவர்களுக்காவே ஓடி கொண்டு இருக்கிறேன். இந்த ஓட்டத்தில் காதல், கல்யாணம் எதுக்கும் நேரமுமில்லை. அவரை நேசிச்ச இந்த இதயத்தில் வேறு யாருக்கும் இடமுமில்லை. திருநங்கைகளைப் பொறுத்தவரைக்கும் காதலும் சரி, கல்யாணமும் சரி அவங்க வாழ்க்கையில் ஓர் அனுபவம். என் காதல் எனக்கு ஒரு அனுபவம் என கூறியுள்ளார்.

தன் மகனின் சடலத்தை கண்டு கலங்கி நின்ற தந்தையின் துயரம்!!

தந்தையின் துயரம்

திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டார்கள் என்று திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தெரிவித்ததாவது, திருகோணமலை கடற்கரையில் அன்றைய தினம் அந்த மாணவர்கள் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தமிட்டார்கள். அதன் பின்னர் திடீரென படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் இரு மாணவர்கள் உயிருடன் உள்ளனர் எனவும் ஐந்துபேர் கொல்லப்பட்டுவிட்டனர் எனவும் எனக்கு தகவல் கிடைத்தது. நான் மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களின் உடல்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.

நான் பிரதே அறையின் உடலை திறந்தேன். முதலில் இருந்தது எனது மகனின் உடல். இலங்கையில் உரிய நீதி கிடைக்காது. நான் கலப்பு நீதிமன்றமொன்றையே விரும்புகின்றேன் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எதிர்பார்க்கின்றேன், நான் ஒருபோதும் இலங்கையை சேர்ந்த சில நீதிபதிகளை நம்புவதில்லை.

நான் பணமோ, வேறு எதனையுமோ கேட்கவில்லை, நான் நீதியையே கேட்கின்றேன். நான் எனது மகனிற்கு சர்வதேசநீதியை கேட்டுநிற்கின்றேன், அதனை கோராவிட்டால் நான் ரஜிகரின் தந்தையில்லை.

எனது மகன் 2006 ம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி கொலை செய்யப்பட்டார். அவர் மிகவும் அமைதியானவர். அவர் மேசைபந்து பயிற்றுவிப்பாளர், அவர் மருத்துவராகவரவிரும்பினார். ஆனால் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது என்று மிகுந்த கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் புத்தர் சிலைகள் மர்ம நபர்களால் உடைப்பு : இராணுவத்தினர் குவிப்பு!!

புத்தர் சிலைகள் மர்ம நபர்களால் உடை

ஹம்பாந்தோட்டை இரு புத்தர் சிலைகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை, ருவன்புர உபரத்ன பௌத்த மத்திய நிலையத்திற்கு முன்னால் இருந்த புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

3 அடி உயரத்திலான புத்தர் சிலையை நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து குறித்த பௌத்த நிலையத்திலுள்ள தேரரினால் ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேதப்படுத்தியமை தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாரால் என்ன நோக்கத்திற்காக சிலைகள் உடைக்கப்பட்டன என்பது தொடர்பில் இன்னமும் தகவல் வெளியாகியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!!

பாடசாலைகளுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கோரிக்கையை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர நேற்றைய தினம் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு பொலிஸாரால் பாடசாலைகளுக்கு ஆகக் கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தேவைக்கமைய சில பாடசாலைகளுக்குக்கு விஷேட பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில பாடசாலைகளுக்கு நடமாடும் பொலிஸ் பாதுகாப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். இவ்வாறான நிலையில் வதந்திகளை நம்பி அச்சமடைய தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையை பெரும் சோகத்தில் ஆழ்த்திய துயரச் சம்பவம்!!

தென்னிலங்கையில் கணவனின் உயிரிழப்பை தாங்க முடியாத மனைவி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மித்தெனிய பகுதியில் வசிக்கும் 76 வயதான 7 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதார். தனது கணவன் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத அவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 81 வயதான சிறிசேன என்பவரே முதலில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மனைவி உயிரிழந்துள்ளார்.

சிறிசேன தொழிற்சாலை ஒன்றில் தொழில் செய்து வந்தவர். உயிரிழந்த கணவனது சடலத்தை வைத்தியசாலையில் இருந்து எடுக்கச் செல்லும் போது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகின்றது. குறித்த தம்பதி திருமணம் செய்து 60 ஆண்டுகள் மிகவும் அன்பாக ஒன்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். பாசமான தம்பதியரின் இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மிஸ் யுனிவர்ஸ் போட்டி : பட்டத்தை பெற களமிறங்கும் இலங்கை தமிழ்ப் பெண்!!

மிஸ் யுனிவர்ஸ்

டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு இலங்கை தமிழ் பெண்ணான நர்வினி டேரி ரவிசங்கர் தெரிவாகியுள்ளார். உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியுடன் இணைந்த சர்வதேச போட்டியாக டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ் போட்டி காணப்படுகிறது.

இந்த போட்டியில், இலங்கையில் பிறந்து தனது ஒன்பதாவது வயது முதல் டென்மார்க் பிரஜையாகவுள்ள நர்வினி டேரி ரவிசங்கர் இறுதி சுற்றுக்கு தகுதியாகியுள்ள தமிழ் பெண்ணாக விளங்குகிறார்.

இந்த போட்டியின் இறுதி சுற்றில் வெற்றி பெறுபவர் அடுத்த கட்டமாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதுடன், அங்கு ஏனைய நாடுகளின் வெற்றியாளர்களுடன் போட்டியிட வேண்டும்.

இதேவேளை, நர்வினி டேரி ரவிசங்கர் டென்மார்க்கின் முதலாவது மிஸ் யுனிவர்ஸ் தமிழ் போட்டியாளர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

மேலும், டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழகத்தில் சமூக நலத்துறையில் முதுமாணி கற்கையில் ஈடுபட்டுள்ள இவர் பல்துறையிலும் திறமையானவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!!

தேசிய அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டையில் உரிய நபரின் கைரேகையை சேர்த்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தில் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

பழைய தேசிய அடையாள அட்டையிலுள்ள பல பலவீனங்கள் புதிய தேசிய அடையாள அட்டை மூலம் நீக்கப்பட்டுள்ளது. உதாரணமாக புகைப்படத்தை மாற்றுதல் அல்லது வேறு தகவல்களை மாற்றுதல் போன்ற விடயங்களை புதிய அடையாள அட்டையில் மேற்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் மேலும் தேசிய அடையாள அட்டையை பலப்படுத்துவதற்காக நபர்களின் கைரேகை அடையாளங்களை உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கைரேகை பெற்றுக்கொள்வதற்கு சட்டத்தில் அனுமதி உள்ளதாக ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

நாளை முதல் தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு!!

தடை நீக்கம்

புகையிரதங்களில் பொதிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகமான தடையானது நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளைய தினம் முதல் புகையிரதங்களில் பயணம் செய்பவர்கள் பொதிகளை கொண்டு செல்ல முடியும். இந்த விடயத்தை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், பொதிகள் பொறுப்பேற்கப்படும் புகையிரத நிலையங்களில் பலத்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்களையடுத்து பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேற்படி தற்காலிக தடை கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.