வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!!

மரக்கடத்தல்

வவுனியா மரக்காரம்பளையில் இன்று (31.05) அதிகாலை 1மணியளவில் மரக்கடத்ததில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்குக்கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் இன்று அதிகாலை தாண்டிக்குளம் மரக்காரம்பளை வீதியில் ஓமந்தை பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க முதிரைக் குற்றிகள் 11 டாட்டா ரக வாகனத்தில் எடுத்துச் சென்றபோது வாகனத்தை வழிமறித்த பொலிசார் வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாகச் செலுத்தியுள்ளார்.

வாகனத்தை விரட்டிச் சென்ற பொலிசார் வழிமறித்தபோது வாகனத்தை கைவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளார். வாகனத்தின் உதவியாளர்கள் இருவர் உட்பட முதிரைக் குற்றிகளைக் கைப்பற்றிய பொலிசார் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன்,

தப்பிச் சென்ற வாகனச் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானை!!

உயிருக்குப் போராடும் யானை

வவுனியா வடக்கு கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலை அமையும் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு யானைக் குட்டி ஒன்று தவறி வீழ்ந்துள்ளது.

இதையடுத்து அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்த பெருமளவு தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு ஜே.சி.பி, பாரம்தூக்கியின் உதவியுடன் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை இன்று காலை முதல் கனகராஜன்குளம் பொலிசார், வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அமுல்!!

புதிய நடைமுறை

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறைகளை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளது. கடவுச்சீட்டு கட்டணம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய நாளை முதல் புதிய கட்டணம் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சாதாரண சேவை 3500 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 15000 ரூபாவாகவும் அமுல்படுத்தப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சாதாரண சேவை 3000 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 10000 ரூபாவாகவும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரகசியமாக அதிகாலையில் குடியமர்த்தப்பட்ட 77 வெளிநாட்டு அகதிகள்!!

வெளிநாட்டு அகதிகள்

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு இன்று (31.05.2019) அதிகாலை 1.00 மணியளவில் 77 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பாக்கிஸ்தான் அகதிகள் 45 பேர், ஆப்கானிஸ்தான் அகதிகள் 31 பேர் அத்துடன் ஜெர்மன் அகதி ஒருவர் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டமாக குறித்த அகதிகள் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 77 அகதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இளைஞன் நொச்சியாகம விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இன்று மரணம்!!

பெரியசாமி முகுந்தன்

வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்று திரும்பிய நிலையில் நொச்சியாகம பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மற்றுமோர் வவுனியா இளைஞன் இன்று அதிகாலை அனுராதபுரம் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு சென்று மீண்டும் வவுனியா நோக்கி ஹயஸ்ரக வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்த போது குறித்த வாகனம் நொச்சியாகம பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக வாகனத்தில் பயணித்த வவுனியா தவசிகுளத்தினை சேர்ந்த 23 வயதான விஜயகுமார் தனுசன் என்ற இளைஞன் மரணடைந்திருந்ததுடன்,

வாகனத்தில் பயணித்த மேலும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் படுகாயமடைந்திருந்த வவுனியாவைச் சேர்ந்தந்த ஆசிரியரான 32 வயதுடைய பெரியசாமி முகுந்தன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வவுனியா தாலிக்குளத்தில் இளைஞர்கள் குழு கூரிய ஆயுதங்களால் தாக்குதல் : 3 பெண்கள் உட்பட 7 பேர் காயம்!!

இளைஞர்கள் குழு கூரிய ஆயுதங்களால் தாக்குதல்

வவுனியா, தாலிக்குளம் பகுதியில் வீடு புகுந்து இளைஞர் குழு கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 3 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (30.05) மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வவுனியா, தாலிக்குளம் பகுதியில் திருமண வைபவம் ஒன்று இடம்பெற்று அதன்பின் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின் போது இரு பகுதியினருக்கு இடையில் கடும் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்ட ஒரு பகுதி இளைஞர்குழு நேற்று மாலை தம்முடன் முரண்பட்ட மற்றைய குழுவினரின் வீட்டில் புகுந்து வாள், கத்தி, பொல்லு, போத்தல் போன்ற கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் இரு பகுதியிருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் இரவு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்

வவுனியா பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று (30.05) காலை 9 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

நல்லிணக்கம் தொடர்பான பிரதேச சர்வமதக் குழுவிற்கும், கிராம அலுவலகர்கள், சிவில் பாதுகாப்புக்குழு, சமூகப்பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொலிசார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடல் பிற்பகல் வரையும் இடம்பெற்றது.

மக்களுக்கிடையே இன வன்முறைகளை ஏற்படுத்தாத வகையில் தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இக்கலந்தரையாடல் இடம்பெற்றிருந்தது.

வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர் : குழந்தைகளுடன் கதறும் மனைவி!!

குழந்தைகளுடன் கதறும் மனைவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொலிஸாரின் லஞ்ச கொடுமையால் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நெல்லையப்பன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பார் வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதிமுக பிரமுகர் ஆனந்த் என்பவரின் ஆதரவுடன் இவர் நடத்தி வந்த பார் கடையின் வாடகை அடிக்கடி உயர்த்தப்பட்டு வந்துள்ளது. அதோடு அல்லாமல் பொலிஸாருக்கும் அதிகம் லஞ்சம் கொடுத்து வந்துள்ளார். இவற்றை கட்ட முடியாமல் திணறிய நெல்லையப்பனுக்கு கடன் சுமையும் அதிகரித்துள்ளது.

இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் ஆனந்தன் மீது திருப்போரூர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அங்கு புகாரை பொலிஸார் வாங்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் ஆனந்தன் மற்றும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் மீது என்பதால், அங்கும் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

உடனே நெல்லையப்பன் டிஎஸ்பி அலுவலகத்திலே தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்னர் செங்கல்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.

இந்த புகாரின் அடைப்படையில் தற்போது குற்றம் சுமத்தப்பட்ட மாமல்லபுரம் டிஎஸ்பி, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் ஆனந்தன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வவுனியாவை நோக்கி இரவோடிரவாக நகர்த்தப்படும் அகதிகள்!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று இரவு வவுனியா நோக்கி நகர்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்படவுள்ள இவ் அகதிகளில் சுமார் 77 பேர் இரண்டாம் கட்டமாக வவுனியா நோக்கி நகர்த்தப்படுகின்றனர்.

அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு மதியில் வவுனியா நோக்கி நகர்த்தப்படும் இரண்டாம் கட்ட அகதிகள் இரவு 11மணியளவில் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என அறிய முடிகின்றது.

கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு நீர்கொழும்பில் இருந்து நகர்த்தப்பட்ட நிலையிலேயே இரண்டாம் கட்டமாக சுமார் 77 பேர் நகர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பெரிய பள்ளிவாசலில் பலத்த இராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் இஃப்தார் நிகழ்வு!!

இஃப்தார் நிகழ்வு

பலத்த இராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் வன்னி பிராந்திய இராணுவத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று (30.05.2019 மாலை இஃப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமான இஃப்தார் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மக்களோடு மக்களாக கலந்துகொண்டனர்.இதன் போது சர்வமதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் நினைவுப்பரிசில் வழங்கல், நோன்பு திறத்தல் என பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருந்தன.

இந் நிகழ்வில் வன்னிப்பிராந்திய இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார், தமிழ் சிங்கள் முஸ்ஸிம் பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். முஸ்ஸிம் சமூகத்தினரை இராணுவத்தினர் அன்புடன் வரவேற்று பலவகை உணவுப்பொருட்களை வழங்கி உபசரித்தனர்.

பாலியல் புகார் கொடுத்ததற்காக மாணவியை எரித்துக்கொன்ற 16 பேருக்கு மரண தண்டனை?

16 பேருக்கு மரண தண்டனை?

பங்களாதேஷ் நாட்டில் பாலியல் புகார் கொடுத்த மாணவியை பள்ளி வளாகத்தில் வைத்து உயிருடன் எரித்துக்கொலை செய்த 16 பேர் தற்போது மரண தண்டனையை எதிர்கொள்ள உள்ளனர். பங்களாதேஷை சேர்ந்த நஸ்ரத் ஜஹான் (16) என்கிற பள்ளி மாணவி, கடந்த மார்ச் 27ம் திகதியன்று பள்ளி தலைமை ஆசிரியர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் புகார் தெரிவித்தார்.

அதனை வீடியோவாக பதிவு செய்த பொலிஸார், “இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை” என நஸ்ரத்தை அதட்டி முகத்தில் வைத்திருந்த கையை எடுக்குமாறு கூறி வீடியோ எடுத்துள்ளார்.

அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அப்போது சில பள்ளி மாணவர்கள், நஸ்ரத் மீது தான் தவறு உள்ளது எனவும், தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் போராட்டம் நடத்தினர்.இதனால் மாணவி பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பள்ளி இறுதி தேர்வு நடந்த சமயத்தில் தன்னுடைய சகோதரனை துணைக்கு அழைத்துக்கொண்டு நஸ்ரத் சென்றிருக்கிறார். அங்கு நஸ்ரத் மட்டும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, அவருடைய சகோதரன் வெளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.

உள்ளே சென்ற நஸ்ரத்தை திடீரென சூழ்ந்துகொண்ட சிலர், கடுமையாக தாக்கி மாடிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நின்றுகொண்டிருந்த சில மாணவிகள் அவருடைய கைகளை கட்டி, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளனர். 80 சதவிகித காயங்களுடன் அங்கிருந்து தப்பிய மாணவி, இறந்துவிடுவதற்குள் தன்னுடைய சகோதரனின் செல்போனில் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஏப்ரல் 10ம் திகதியன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது அந்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த நிலையில் வழக்கினை விசாரித்த வந்த புலன் விசாரணைத்துறை தலைவர், நாங்கள் இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளோம். கைது செய்யப்பட்டிருக்கும் 16 பேருக்கும் வழக்கறிஞர்கள் உயர்ந்த தண்டனையான மரண தண்டனையை கோரியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு இளைஞர் சொன்னதை நம்பி அவரை மணந்த இளம்பெண் : திருமணமான 8 நாளில் வெளியான உண்மை!!

நாளில் வெளியான உண்மை

ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்த அழகிய இளம் பெண் சீனாவை சேர்ந்த இளைஞர் பெரும் பணக்காரர் என நம்பி அவரை மணந்த நிலையில் அவர் ஏழை என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்தவர் ரபியா கன்வால் (22). அழகிய இளம்பெண்ணான இவர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவராவார். இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஜங் சுச்சன் என்ற இளைஞர் சுற்றுலா விசாவில் பாகிஸ்தானுக்கு வந்தபோது ரபியாவை சந்தித்தார்.

இருவரும் நட்பான நிலையில் பின்னர் அது காதலாக மாறியது. தான் சீனாவில் பெரும் பணக்காரர் என்று, பெரியளவில் விவசாயம் செய்து வருவதாகவும் ரபியாவிடம் ஜங் கூறியுள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சியடைந்தார் ரபியா. இதன்பின்னர் இருவருக்கும் பாகிஸ்தானிலேயே திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த 8வது நாள் ரபியாவை ஜங் சீனாவுக்கு அழைத்து சென்றார். அங்கு தான் ரபியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் ஜங் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த விவசாயி என்பது அவருக்கு தெரியவந்தது.

இதனால் கோபமடைந்த ரபியா சீனாவின் உள்ள பாகிஸ்தான் தூதரகம் உதவியுடன் பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து கணவர் ஜங்கை விவாகரத்து செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையை தொடங்கியுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் மரணம்!!

கோர விபத்து

வவுனியா ஒமந்தை ஏ9 வீதியில் இன்று (30.05.2019) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் ஒமந்தை பொலிஸ் நிலையத்தினை அண்மித்த பகுதியில் (ஏ9 வீதியில்) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன்  வவுனியா கோவிற்குளத்தினை சேர்ந்த  ஓய்வு பெற்ற ஆசிரியையான 82 வயதுடைய வையாபுரிநாதன் திலகவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேனிலவு சென்ற இடத்தில் நடுக்கடலில் மனைவியை கொலை செய்த கணவன்!!

மனைவியை கொலை செய்த கணவன்

தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை கொலை செய்த பிரித்தானியருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லீவிஸ் பெணிட் என்பவர் கப்பல் மாலுமியாக இருந்த நிலையில், இசபெல்லா ஹெல்மேன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்துக்கு முன்னரே இருவருக்கும் குழந்தை இருந்துள்ளது. இதையடுத்து புதுமண தம்பதி அமெரிக்காவுக்கு தேனிலவுக்கு சென்றுள்ளனர். அங்கு கப்பலில் சென்று கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே கப்பலை நீரில் மூழ்க செய்து மனைவியை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் லீவிஸ். இதையடுத்து பொலிசார் லீவிஸை கைது செய்தனர்.

விசாரணையில் லீவிஸ் விலைமதிப்புமிக்க நாணயங்களை கடத்தும் தொழிலை செய்து வந்தது தெரியவந்தது. இதோடு தனது மனைவி இசபெல்லாவின் எஸ்டேட் மற்றும் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்ட லீவிஸ் அதற்காக அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

திருமணத்துக்கு முன்னர் வரை லீவிஸின் கடத்தல் தொழில் இசபெல்லாவுக்கு தெரியாமல் இருந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் தேனிலவின் போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இசபெல்லாவின் சடலத்தை கடலில் தேடியும் கிடைக்காத நிலையிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

நாணயங்களை கடத்தியது தொடர்பாக லீவிஸ் ஏற்கனவே 7 மாத சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மனைவியை கொன்ற வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி லீவிஸுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், $22,910 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சொகுசு வாழ்க்கையை உதறிதள்ளிய 12 வயது சிறுமி : பல ஆயிரம் மைல்கள் நடந்துவந்து துறவறம்!!

12 வயது சிறுமி

இந்தியாவில் குடும்ப வாழ்க்கையை துறந்து 12 வயது சிறுமி ஒருவர் துறவறம் மேற்கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் குஷி ஷா (12). வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பிலும் கெட்டிக்காரர் ஆவார். ஒன்பதாம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண் எடுத்த குஷி கடந்த நவம்பரில் பள்ளிப்படிப்பை நிறுத்தினார்.

இதன் பின்னர் எளிமையான வாழ்க்கையை வாழ தொடங்கிய அவர் இதுவரை பல ஆயிரம் மைல்களை நடந்தே கடந்துள்ளார். இந்நிலையில் துறவறம் செல்ல முடிவெடுத்த குஷி அதற்கான தீக்‌ஷையை எடுத்துள்ளார்.

இது குறித்து குஷியின் பெற்றோர் கூறுகையில், அவள் மருத்துவராக ஆக வேண்டும் என நினைத்தோம். ஆனால் துறவறம் செல்லும் முடிவை அவர் எடுத்தார், இதற்கு நாங்கள் முழு மனதோடு சம்மதித்துள்ளோம், அவளை நினைத்தால் எங்களுக்கு பெருமையாக உள்ளது என கூறினர்.

குஷி கூறுகையில், இந்த உலகம் தற்காலிகமானது. நாம் இங்கு அனுபவிக்கும் இன்பம் நிரந்தரமானது அல்ல. நான் குழந்தையாக இருந்த போதே எங்கள் குடும்பத்தில் இருந்து 4 பேர் துறவறம் சென்றுள்ளனர் என கூறியுள்ளனர். சிறுமி துறவறம் மேற்கொள்வதை விழாவாக எடுத்து கொண்டாடிய அவர் உறவினர்கள் அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

திடீரென தீ பற்றிய அம்புலன்ஸ் : தாயின் கண்முன்னே தீயில் கருகிய கைக்குழந்தை!!

திடீரென தீ பற்றிய அம்புலன்ஸ்

துருக்கியில் வேகமாக சென்ற கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூன்று மாத கைக்குழந்தை உடல்கருகி இறந்துள்ளது.

துருக்கியில் உடல்நிலை சரியில்லாத Necmiye S என்கிற தாய் மற்றும் அவருடைய மூன்று மாத கைக்குழந்தை Rojin ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றியுள்ளது. இதிலிருந்து தப்புவதற்காக, Necmiye உட்பட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூன்று பேர் வேகமாக வாகனத்திலிருந்து இறங்கியுள்ளனர்.

அப்பொழுது தான் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தங்களுடன் இல்லை என்பதை கவனித்துள்ளனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், Necmiye-வின் கண்முன்னே அவருடைய குழந்தை உடல்கருகி இறந்துள்ளது.

இதற்கிடையில் மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனம் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, Necmiye மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் Necmiye-யிடம் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.