வவுனியா ஒமந்தையில் கார் மரத்துடன் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

கார் மரத்துடன் மோதி விபத்து

வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (30.05.2019) மதியம் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் ஒமந்தை ஏ9 வீதியில் (பொலிஸ் நிலையத்திற்கு அருகே) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

மகளுடன் வாழ அனுமதிக்க வேண்டும் : கனடாவுக்கு இலங்கையர் உருக்கமான வேண்டுகோள்!!

இலங்கையர் உருக்கமான வேண்டுகோள்

அமெரிக்காவால் தேடப்படும் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததனால் சிக்கலுக்குள்ளான நபர்களில் ஒருவரின் மகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ள நிலையில், தனது மகளுடன் இணைந்து வாழ தனக்கு வாய்ப்பளிக்குமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.

முக்கிய ஆவணங்களை லீக் செய்த Edward Snowden என்பவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஹாங்காங்கில் அகதிகளாக இருந்த இலங்கையர்களை இலங்கைக்கே திரும்ப அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படி அனுப்பப்பட்டால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அடைக்கலம் கோரி கனடாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த சிலரில் Supun Thilina Kellapatha குடும்பத்தினரும் அடங்குவர்.

அவர்களுடன் இருந்த Kellapathaவின் முன்னாள் காதலியான Vanessa Rodelம், அவருக்கும் Kellapathaவுக்கும் பிறந்த Keanaவுக்கும், கனடா அடைக்கலம் கொடுக்க அவர்கள் இப்போது கனடாவில் இருக்கிறார்கள். மாண்ட்ரியலில் இருக்கும் தனது மகள் Keana, தன்னையும் அவளது மற்ற சகோதரிகளையும் தேடுவதாகவும், எப்போதும் அவர்கள் எப்போது வருவார்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் Kellapatha. தங்கள் மேல் முறையீடுகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு, கடைசி முயற்சியாக நீதிமன்ற மறுசீராய்வுக்காக விண்ணப்பித்துள்ளார் Kellapatha.

ஆனால் சமீபத்தில், மறுசீராய்வுக்காக விண்ணப்பத்திருந்தாலும் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் கடினமான நடைமுறைகளை அறிமுகம் செய்ய ஹாங்காங் புலம்பெயர்தல் துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் அச்சத்துடன் வாழ்ந்து வரும் Kellapatha, தனது பிள்ளைகளும் பள்ளியிலும், வீட்டின் அருகிலும் உள்ள மற்றவர்களால் மோசமாக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருக்கும் தனது மகளுடன் தனது மற்ற மகள்களும் தாங்களும் இணைந்து வாழ துடிப்பதாக Kellapatha தெரிவிக்க, மொண்ட்ரியலில் இருக்கும் Rodel, கனடா அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது குறித்து முடிவெடுக்க ஏன் இவ்வளவு தாமதிக்கிறது என்பதைக் குறித்து குழம்பிப்போயுள்ளார்.

Kellapatha குடும்பத்தினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும், Keana அவளது தந்தையை இழக்க நேரிடலாம் என்றும் அஞ்சுவதாக தெரிவிக்கிறார் Rodel.

வவுனியாவில் மீண்டும் அகதிகளின் வருகையா?

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள மேலும் 80 அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த அகதிகளை இன்று (30.05) வியாழக்கிழமை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

அவர்கள் சில தினங்களில் தங்களது சொந்த நாடுகளுக்கு அல்லது வேறொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே மீண்டும் 80 அகதிகளை அங்கு தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் குறித்து செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வெடிபொருட்கள் அடங்கிய பொதி சிறப்பு அதிரடி படையினரால் மீட்பு!!

மொனராகலையில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை அதிரடி படையினர் மீட்டுள்ளனர்.

தனமல்வில – சுரியஆர – குமாரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பொதியில் பல்வேறு வகையான வெடிபொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதியில் ஒரு மின்சார டெடனேட்டர்கள், 195 கிராம் நிறையுடைய சைக்கிள் போல்ஸ் பார்சல், டீ 56 ரக துப்பாக்கிக்கான 5 ரவைகள், 50 கிராம் வெடி மருந்து, 215 கிராம் எமோனியா நைட்ரைட், 10 தீப்பெட்டிகள், வயர் உட்பட மேலும் பல பொருட்கள் காணப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பயத்தை போக்க ஆசிரியர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

ஆசிரியர் செய்த நெகிழ்ச்சி செயல்

களுத்துறையில் ஸ்ரீ தேவானந்தா மகாவித்தியாலாயத்தில் ஆசிரியர் ஒருவர் கரடி பொம்மை வேடமணிந்து மாணவர்களின் புத்தக பைகளை சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

அதற்கமைவாக பாடசாலை மாணவர்களின் பாடசாலை பைகள் தினமும் பாடசாலை நுழைவாயிலில் வைத்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் ஆசிரியர்களால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இவ்வாறு சோதனை செய்த பின்னரே பாடசாலைக்குள் மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது மாணவர்களின் உணவு பொதிகளை சோதனையிடும் முறை, சோதனையிடுவோரின் சில விரும்பத்தகாத செயல்கள் என மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்திகள் காணப்பட்டு வந்தன.

இந்நிலையில், களுத்துறையில் ஸ்ரீ தேவானந்தா மகாவித்தியாலய ஆசிரியர் ஒருவர் கரடி பொம்மை வேடமணிந்து மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இந்த செயல் மாணவர்கள் மத்தியில் இருந்த பயத்தினை போக்கி அவர்களை மகிழ்வித்துள்ளது.

குறித்த ஆசிரியரின் செயலை பலரும் பாராட்டியுள்ளதுடன் அவரின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிந்துள்ளனர். குறித்த படங்கள் தற்போது வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தனியாக அழைத்துச் சென்று இளம் பெண் செய்த செயல்!!

இளம் பெண் செய்த செயல்

தமிழகத்தில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தனியாக அழைத்துச் சென்று காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை சேர்ந்தவர் சரவணன் (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவஎருக்கும், உறவினரான சென்னப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் ஜான்சி (19)-க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஜான்சியை பார்ப்பதற்காக சரவணன் சென்னப்ப நாயக்கனூருக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஜான்சி அவரது பெற்றோர் இருந்துள்ளனர். வீட்டிற்கு வந்த சரவணனுக்கு ஜான்சி லெமன் ஜூஸ் கொடுத்துள்ளார்.

அதன் பின் சரவணனிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து ஜான்சி விட்டிற்குள் வர, சரவணன் இரத்தக் காயங்களுடன் சாலையோரம் கிடந்துள்ளார்.

இதைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர், அதைத் தொடர்ந்து ஜான்சியிடமும் விசாரித்துள்ளனர்.

அப்போது, நான் வாட்ஸ்அப் பயன்படுத்திய போது திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அறிமுகமானார். அதனால் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது. இதனால் நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். இந்த விசயம் எங்கள் குடும்பத்திற்கு தெரியாது. அதனால் நான் எனக்கு நிச்சயம் செய்த சரவணணை கொலை செய்ய முடிவு செய்தேன். அதனால் சரவணனை எனது வீட்டின் அருகே அழைத்து அவருக்கு ஜூஸ்சில் மயக்க மருந்து கொடுத்தேன்.

அப்போது அவர் சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் எனது காதலன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சரவணனை தாக்கினோம். பின்னர் அவரை முட்புதரில் தூக்கி வீசி விட்டு சென்று விட்டோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஜான்சியை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Pray for நேசமணி : உலக அளவில் வடிவேலு திடீர் ட்ரெண்ட் : காரணம் இதுதான்!!

Pray for நேசமணி

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்து இளைஞர்களை அதிகம் ஈர்த்தவர் நடிகர் வடிவேலு. அவர் காமெடியனாக நடிப்பதை குறைத்துக்கொண்டாலும் அவரது காமெடி இப்போதும் தொலைக்காட்சிகளில் அதிகம் பார்க்கலாம்.

அதிலும் குறிப்பாக பிரென்ட்ஸ் படத்தில் கான்ட்ராக்ட்டர் நேசமணி கதாபாத்திரத்தில் வடிவேலுவின் காமெடியை இப்போது பார்த்தாலும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.

இந்நிலையில் #Pray_for_Neasamani என்ற ஹாஸ் டேக் தேசிய அளவில் முதலிட்த்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் உலக ட்ரெண்டிங்கில் ஆறாவது இடத்தில் அது உள்ளது. நேசமணி தலையில் சுத்தி விழுந்த காமெடி தான் தற்போது திடீரெனெ ட்ரெண்டாகியுள்ளது.

கொழும்பில் பொலிஸார் மீது மர்மநபர் தாக்குதல் : ஒருவர் படுகாயம் : மோதலில் ஈடுபட்டவர் தப்பியோட்டம்!!

கொழும்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ராஜகிரிய பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்யச் சென்ற வேளையில் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் ராஜகிரிய ஒபேசேகரபுர சர்வோதய மாவத்தையில் இன்று இடம்பெற்றுள்ளது.

வீடு ஒன்றுக்குள் நபர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் குழு ஒன்று வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

பொலிஸ் குழுவினர் வீட்டிற்குள் சென்று சந்தேக நபரை பிடிக்க முயற்சித்த போது, சந்தேக நபர் குறித்த பொலிஸாருடன் சண்டையிட்டுள்ளார்.

திடீரென சந்தேக நபர் தனது கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குத்தியுள்ளார்.

குறித்த சந்தரப்ப்த்தில் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். எனினும் அவர் தப்பி செல்ல உதவிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பி சென்றவரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மனைவியை விட்டு சொந்த ஊருக்கு சென்ற கணவன்.. பின்னர் நடந்த சம்பவம்!!

தாயுடன் சேர்ந்து தற்கொலை

சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் என்ஜினீயர் ஒருவர் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்தவர் சிற்றரசு (75), இவருடைய மனைவி ராஜலட்சுமி (70). இந்த தம்பதியின் மகன் அருள்வேல் (36). இவருக்கும் திவ்யா (30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு பிரணவ் (3) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் அருள்வேல் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள், கடனை திருப்பி கேட்டு அருள்வேலுக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.

இதனால் சென்னையில் வேலை செய்து வந்த அருள்வேல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வேலையை விட்டு விட்டு, பண்ருட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். திவ்யா தனது மகனுடன் சென்னையிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பண்ருட்டிக்கும் வந்து கடனை திருப்பி கேட்டு அருள்வேலை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அருள்வேல் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தனது தாய் ராஜலட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு ராஜலட்சுமி, நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். பின்னர் இருவரும் விஷம் குடித்த நிலையில் உயிரிழந்தனர்.

இதற்கிடையே வீட்டுக்கு திரும்பி வந்த சிற்றரசு, மனைவியும் மகனும் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

பிரசவ வலியால் துடித்த இளம்பெண்… மருத்துவருக்காக காத்திருந்த அவலம் : இறுதியில் ஏற்பட்ட துயரம்!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலியால் துடித்த இளம்பெண் ஒருவர் மருத்துவருக்காக 4 மணி நேரம் காத்திருந்த அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த சமீனா என்பவர், பிரசவத்திற்காக கோலாரில் உள்ள அரசு மருத்துவமனைக்குத் தனது கணவர் ரியாஸ் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார்.

பிரசவவலியால் துடித்த சமீனாவை காலியாக இருந்த அந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் அப்படியே தரையில் கிடத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் அப்போது மருத்துவர்கள், ஊழியர்கள் யாரும் இல்லாததால் அவர்களின் வருகைக்காக சுமார் 4 மணி நேரமாக சமீனா வலியுடன் போராடிக்கொண்டிருந்தார்.

நேரம் செல்லச் செல்ல பிரசவ வலியை அவரால் தாங்கிக்கொள்ள முடியாததால், அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

பிரசவவலி ஏற்பட்டு தாமதமாக வந்ததால், சமீனாவை காப்பாற்ற முயற்சி செய்கிறோம், குழந்தையைக் காப்பாற்ற இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தொடர்ந்து நடந்த சிகிச்சையில் சமீனாவை மட்டுமே காப்பாற்றியுள்ளனர், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்.

இச்சம்பவம் சமூகவலைத்தளம் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததும், கோலார் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முனிசாமி,

தனியார் மருத்துவமனைக்குச் சென்று சமீனாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இச்சம்பவம் தொடர்பாக சம்பத்தப்பட்ட மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீனாவின் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

இளம் பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் கணவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!!

இளம் பெண் மருத்துவர் தற்கொலை

மும்பையில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் வருவதற்கு முன்பே தரையில் இறக்கியிருப்பதாக அவருடைய கணவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவியும், மருத்துவருமான பயல் தத்வி (26) கடந்த 22ம் திகதியன்று விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பயல் மீது அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஹேமா அஹுஜா (28), பக்தி மேஹெர் (26), அங்கிதா கந்தல்வால் (27) என்கிற மூன்று பேர் சாதி ரீதியிலான தாக்குதல் நடத்தியதே தற்கொலைக்கான காரணம் என பயல் தத்விவின் தாய் பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவமானது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேருடன் சேர்த்து, நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய மருத்துவ நிர்வாகத்தினரையும் கைது செய்ய வேண்டும் என போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் பயல் தத்விவியின் கணவர் சல்மான், பொலிஸார் வருவதற்கு முன்னதாகவே பயலின் உடலை மூன்று பேரும் சேர்ந்து கயிற்றிலிருந்து தரையில் இறங்கியதாக கூறியுள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்துக்கிறது. என்னுடைய மனைவி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. அந்த மூன்று பெண்களும் சேர்ந்து தான் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று மூன்று பெண்களும் பயலின் அறையிலிருந்து வெளியில் வந்து கதவை தட்டிக்கொண்டிருந்துள்ளனர். பயல் விடுதியில் இருந்து அவர்களின் விடுதி வேறுபட்ட இடத்தில் இருக்கும் பொழுது எதற்காக அந்த இடத்திற்கு அவர்கள் வந்தார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விவகாரமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரில் பக்தி மேஹெர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி செல்வாநகரில் இடம்பெற்ற வாள்வெட்டில் கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் படுகாயம்!!

கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் படுகாயம்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29.05) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் தனியார் மற்றும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இரத்தத்தால் நனைந்து காணப்படுகிறது.

பட்டா ரக வாகனம் மற்றும் உந்துருளியில் சென்ற 15க்கு மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீடு புகுந்து வாள்வெட்டில் ஈடுப்பட்டுள்ளனர். அத்தோடு ஒரு உந்துருளி எரிக்கப்பட்டுள்ளதோடு, மற்றொரு உந்துருளி அடித்து சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு தற்காலிக வீடு எரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகள் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலதி விசாரணைகள் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

வெட்டுக்குள்ளான குடும்பங்களில் ஒரு குடும்பவம் கிளி நொச்சி பொலீஸ் நிலையத்தில் நேற்று(செவ்வாய் ) தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மாங்குளத்தில் ரவுடிக் கும்பல் அட்டகாசம் : பெண்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில்!!

ரவுடிக் கும்பல் அட்டகாசம்

மாங்குளம் பகுதியில் நேற்று இரவு ரவுடிக்கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதில் பெண்கள் உட்பட ஐவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் மாங்குளம் புதியகொலனியை சேர்ந்த சிவராசா என்பவரின் வீட்டுக்குள் வாள், கைக்கத்தி, கம்பி, பொல்லு முதலிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கியதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் சேதமாக்கியுள்ளனர்.

இவர்களது தாக்குதலுக்கு உள்ளாகி பெண்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த சில பெறுமதியான உடமைகளையும் ரவுடிக்கும்பல் திருடிக்கொண்டு சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

பிரித்தானியாவில் இலங்கையருக்கு கிடைத்த கௌரவம்!!

இலங்கை பேராசிரியரான குமார் விக்ரமசிங்கவுக்கு, உலகில் முன்னணி விஞ்ஞானிகளை கொண்ட British Royal Society சங்கத்தில் அங்கத்துவம் கிடைத்துள்ளது. இந்த சங்கத்தில் இணைந்து கொள்ளும் இரண்டாவது இலங்கையர் இவராவார். இதற்கு முன்னர் சார்ஸ் வைரஸ்சை கண்டுபிடித்த பேராசிரியர் மலிக் பீரிஸூக்கு இந்த சங்கத்தில் அங்கத்துவம் வழங்கப்பட்டது.

British Royal Society உலகில் இயங்கும் மிகப் பழமையான விஞ்ஞானிகளின் சங்கமாகும். இதில் சேர் ஐசாக் நியூட்டன், சார்ள்ஸ் டாவின், ஸ்டீவன் ஹாக்கின்ஸ் போன்ற அறிவியலாளர்கள் அங்கம் வகித்துள்ளனர்.

பௌதீகம் மற்றும் மின் பொறியியல் தொழிற்நுட்பத்திற்காக பேராசிரியர் குமார் விக்ரமசிங்க செய்த சேவையை பாராட்டி அவருக்கு British Royal Society இல் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

நானோ தொழிற்நுட்ப ஆய்வுக் கூடங்களில் தற்போது பயன்படுத்தப்படும் மூலக்கூறு நுண்ணோக்கியை தயாரிப்பதற்கான அவர் முன்வைத்த ஆய்வு விதிகள் இதற்கு உதவியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வவுனியா வைத்தியசாலைக்கு வெளியில் காத்திருக்கும் நோயாளிகள்!!

வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அதிகாலையில் பல மணி நேரமாக வைத்தியாசலைக்கு வெளியில் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா பொது வைத்தியசாலைக்கு பல்வேறு பிரதேசத்தில் இருந்தும் பொது மக்கள் சிகிச்சைக்காக வருகின்றமை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இந் நிலையில் அண்மைய அசம்பாவிதங்களுக்கு பின்னர் கடும் சோதனைக்கு பின்னரே வைத்தியசாலைக்குள் செல்ல நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் வைத்தியாலையில் நோயாளிகளை பார்வையிடுவதற்கு 6 மணியளவிலேயே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பார்வையாளர்கள் வீதியோரத்தில் 6 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் தொடர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளையும் வைத்தியசாலைக்குள் அனுமதிக்காத நிலை காணப்படுவதுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் பார்வையாளர்களுடன் வீதியோரத்திலே 6 மணி வரை காத்திருந்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே நோயாளிகள் பல கிலோ மீற்றர் தூரங்களில் இருந்தும் வருவதனாலும் அவர்களின் நலன் கருதியும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை வைத்தியசாலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் கவனமெடுத்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

வவுனியா இளைஞன் நொச்சியாகம விபத்தில் மரணம் : நால்வர் படுகாயம்!!

வவுனியா இளைஞன்  விபத்தில் மரணம்

வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்று திரும்பிய நிலையில் நொச்சியாகம பகுதியில் விபத்தில் சிக்கி வவுனியா இளைஞன் மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து நேற்றைய தினம் விமான நிலையத்திற்கு சென்று மீண்டும் வவுனியா நோக்கி பயணிகள் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது நொச்சியாகம பாலத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக வாகனத்தில் இருந்த வவுனியா தவசிகுளத்தினைச் சேர்ந்த 23 வயதான விஜயகுமார் தனுசன் என்ற இளைஞன் மரணடைந்துள்ளார்.

வாகனத்தில் பயணித்த மேலும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன் மரணமடைந்தவரின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.