வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி காயம்!!

வவுனியா கந்தசுவாமி ஆலய வீதியில் இன்று (26.05.2019) காலை 9.30 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர பகுதியில் இருந்து சூசைப்பிள்ளையார்குளம் நோக்கி கந்தசுவாமி கோவில் வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தரித்து நிற்கும் (1990) நோயாளர் காவு வண்டியிற்கு அழைப்பை ஏற்படுத்தி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய வாகனம் : ஒருவர் பலி!!

வவுனியா நெடுங்கேணியில் நேற்று (25.05) இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றையவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியொன்றும் பட்டா ரக வாகனமும் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் முற்சக்கர வண்டி சாரதியான நெடுங்கேணியை சேர்ந்த குமார் என்ற நபர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாகவும் தவம் எனப்படும் வெளிநாட்டவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணையை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் சிக்கிய பொக்கிஷங்கள்!!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில், வள்ளுவர் கோட்டம் வீடமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்ட வீடமைப்பு பணியின் போது, ஆதி மனிதர்களின் நாகரிகத்துடன் கூடிய சில கல்லறைகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து நிர்மாணிப்பு பணிகளை நிறுத்த தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கல்லறைகளில் 12 கல்லறைகளின் எச்சங்கள் கிடைத்துள்ளன.

வீடுகளை நிர்மாணிக்கும் போது தெரியாமல் கல்லறைகளின் கற்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய தொல் பொருள் திணைக்கள பணிப்பாளர் சுமணதாச தெரிவித்துள்ளார்.

சில கல்லறைகளை புதையல் திருடர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சில கல்லறைகள் தற்போதும் பாதுகாப்பாக உள்ளன.

ஆதி மனிதர்களின் கல்லறைகள் திருகோணமலை மாவட்டத்தின் யாங்ஓயா, மகிந்தபுர போன்ற பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. வள்ளுவர் கோட்டம் பகுதியில் மூன்றாவதாக ஆதி மனிதர்களின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிர்மாண பணிகளை மேற்கொள்ளும் போது தொல் பொருள் திணைக்களத்திடம் அறிக்கை பெற வேண்டும். எனினும் அந்த சட்ட வரம்பை மீறி இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் சுமணதாச குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இனவாதத்தை தூண்டும் நபர்களை கண்டறிய விசேட பிரிவு!!

இனவாதத்தை தூண்டும் பதிவுகளை பதிவேற்றும் நபர்களை அடையாளம் காண, பாதுகாப்பு அமைச்சு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசேட பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு ஆத்திரத்தை தூண்டும் இனவாத பதிவுகளை பதிவேற்றிய பல நபர்களின் பட்டியல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இனவாத கருத்துக்கள சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட சட்டத்தை உருவாக்க உள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இளைஞனை வழிமறித்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வவுனியாவில் பயணம் செய்த இளைஞன் ஒருவரை நேற்று மாலை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பம்பைமடு, புளிதறித்த புளியங்குளம் பகுதியில் வீதியில் சென்ற இளைஞனிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது உடமையிலிருந்து 80 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் 28வயதுடைய இளைஞனைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பூவரசங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பசுமாடு திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!!

வவுனியாவில் பசுமாடு திருட்டுபோயுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வவுனியா, மூன்று முறிப்பு பகுதியிலுள்ள பட்டியிலிருந்து பசுமாடு ஒன்று திருட்டுப்போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பசு மாட்டை கடந்த இரு தினங்களாக எங்கு தேடியும் காணாத நிலையில் அடையாளந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தததோடு, தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் இன்று மர்மநபர்கள் அட்டகாசம் : பெறுமதியான உடமைகள் தீக்கிரை!!

திருகோணமலையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. புல்மோட்டை ஜின்னா புரம் கடற்கரையில் இந்த அனர்த்தம் சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடலுக்கு கொண்டு செல்லும் மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரகள் முற்றாக தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளன.

ஒரு ஏழையின் உபகரணங்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது, கடன் பெற்றே இந்த உபகரணங்களை வாங்யுள்ளதாகவும் படகின் சொந்தக்காரர் மேலும் தெரிவித்துள்ளார். அண்மையில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட படகுகளே இவ்வாறு தீ வைத்து நாசம் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த அனர்த்தம் மக்களை பெரும் அச்சப்பட வைத்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் திடீரென பற்றி எரிந்தமையால் பரபரப்பு!!

அவிசாவளையில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரியில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு பற்றி எரிந்துள்ளது.

இந்த அனர்த்தம் அவிசாவளை , உக்வத்த பகுதியில் வைத்து இன்று காலையில் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த அனர்த்தம் காரணமாக உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் முழுமையாக எரிந்து நாசமாகி உள்ளது. தீயை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

பஸ்ஸின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த பஸ்ஸில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத பெண்… திடீரென வாந்தி எடுத்த பின்னர் நடந்த சோகம்!!

சென்னையில் திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை சேர்ந்தவர் குளஞ்சிநாதன் (33). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் காவலராக உள்ளார். இவருடைய மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும், குழந்தைகள் இல்லை. கீர்த்தனா அல்சர் பிரச்சினைக்காக பல நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வாந்தி எடுத்தார். பின்னர் அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்தனர்.

ஆனால் நேற்று காலை மீண்டும் தொடர்ச்சியாக அவருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார். குளஞ்சிநாதன் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த கீர்த்தனாவின் தாய் மற்றும் சகோதரர் அவரை ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கீர்த்தனா பரிதாபமாக இறந்து விட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் கீர்த்தனா சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட கணவன்.. தேர்தலில் துணிச்சலாக போட்டியிட்ட இளம்விதவை.. எவ்வளவு வாக்குகள் பெற்றார் தெரியுமா?

இந்தியாவில் தேர்தலில் நின்றதன் மூலம் பிரபலமான இளம் விதவை பெண் தான் போட்டியிட்ட தொகுதியில் தோற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி வைஷாலி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

விவசாயியான சுதாகர் கடந்த 2011ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ரூ.70000 கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்த முடியாமல் உயிரை மாய்த்து கொண்டார் சுதாகர்.

பின்னர் அங்கன்வாடியில் மாதம் ரூ.3500-க்கு வேலை செய்து வந்த வைஷாலிக்கு விதவை பென்ஷனாக ரூ 600 வந்தது. இந்த சொற்ப வருமானத்தில் தான் பிள்ளைகளை கவனித்து வந்தார் வைஷாலி.

இந்நிலையில் இலக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு வைஷாலி பிரமாதமாக பேசினார். இதை பார்த்த பிரஹர் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் அவரின் திறமையை பார்த்து வியந்து அவரை மக்களவை தேர்தலில் போட்டியிடுமாறு ஊக்குவித்தார்.

இதையடுத்து யாவட்மால் வாசிம் தொகுதியில் சுயேச்சையாக வைஷாலி போட்டியிட்ட நிலையில் ஓம் பிரகாஷ் அவருக்கு ஆதரவு கொடுத்தார்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் வைஷாலி தோல்வியை தழுவியுள்ளார். ஆனாலும் அவர் 19,918 வாக்குகளை பெற்று அசத்தியுள்ளார்.

இந்த தோல்வியால் அவர் துவண்டுவிடவில்லை. இது குறித்து வைஷாலி கூறுகையில், என் தொகுதிக்கு உட்பட்ட 2000 கிராமத்தை சேர்ந்த மக்களையும் என்னால் சென்று பார்க்கமுடியவில்லை.

இதற்கு காரணம் தேவையான பணபலமும் மக்கள் பலமும் என்னிடம் இல்லாதது தான். அடுத்த முறை மீண்டும் நிச்சயம் முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.

தேனிலவின்போது சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிப்பெண் : கொலையாளியை தேடி களமிறங்கிய தந்தை!!

தென்னாப்பிரிக்காவுக்கு தேனிலவுக்கு கணவருடன் சென்ற இந்திய வம்சாவளியினரான ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், உண்மையைத் தேடி பெண்ணின் தந்தையே களமிறங்கியுள்ளார்.

2010ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியினரான Anni Dewani, தென்னாப்பிரிக்காவில் தனது கணவருடன் தேனிலவுக்கு செல்லும்போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

அவரை மூன்று பேர் காரில் கடத்திச் சென்று விட்டதாகவும் தான் மட்டும் தப்பி வந்து விட்டதாகவும் Anniயின் கணவரான Shrien கூறியிருந்தார்.

Anniயின் கொலை வழக்கிலிருந்தும் அவர் 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். Anniயை கடத்தி கொலை செய்ததாக Zola Tongo என்பவரும் மற்றும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணையில் உதவியதற்காக Tongoவுக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவன் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆனால், Tongo வழக்கு விசாரணையின்போது கூறியதை விட அவனுக்கு அதிகமான விடயங்கள் தெரியும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ள Anniயின் தந்தையான Mr Hindocha, அவனுடன் தொலைபேசியில் பேசினார்.

அத்துடன் தென்னாப்பிரிக்கா செல்லும் அவர், தனது மகள் எப்படி கொல்லப்பட்டார் என்பதை அறியும் முன், தான் வீடு திரும்பப்போவதில்லை என்று கூறியுள்ளார். தற்போது மும்பையில் ஒரு ஆண் நண்பருடன் வசித்து வருகிறார் Shrien.

Shrien ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்தே தனது மகளை அவர் திருமணம் செய்ததாக கூறும் Hindochaவுக்கு, தனது மகளை ஆள் வைத்து கொன்று விட்டதாக தனது மருமகனான Shrien மீது சந்தேகம்.

ஏனென்றால், Anni கொலை செய்யப்படுவதற்கு முன்னும், கொலை செய்யப்பட்ட பின்னரும் Tongoவுடன் அவர் பேசியதும் பணம் கொடுத்ததும் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

எனவே, Tongoவை சந்தித்து, எப்படியாவது அவனிடமிருந்து உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறார் Anniயின் தந்தையான Mr Hindocha. அதற்காக அவர் தனது சகோதரருடன் தென்னாப்பிரிக்கா கிளம்பியுள்ளார்.

கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்காததிற்கு என் தங்கை தான் காரணம் : உண்மையை உடைத்த சாய் பல்லவி!!

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர் கலர் கம்மி என்பதை உணர்ந்தாள்.

நானும் நிறைய வெஜிடேபுள் சாப்பிடு என்றேன், அதையும் அவள் செய்தால், அப்போது தான் தெரிந்தது கலர் என்பது ஒரு சிறு பிள்ளை மனதை எப்படி மாற்றுகிறது என, அதனாலேயே அதை ஊக்கப்படுத்துவது இல்லை’ என கூறியுள்ளார்.

கற்பனை செய்ய முடியாத சொத்தை வரதட்சணையாக கொடுத்த மணப்பெண்!!

மேற்கு வங்க மாநிலத்தில் மாப்பிள்ளைக்கு மணப்பெண் வீட்டார் கொடுத்துள்ள வரதட்சணையை பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

வரதட்சணை கொடுப்பது என்கிற பெரும் பிரச்சனையானது இந்தியாவில் பல ஆண்டுகளாகாவே இருந்து வருகிறது. பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க தவறி விட்டால், தாலி காட்டும் கடைசி நேரத்தில் கூட மணமகன் திருமணத்தை நிறுத்துவிடும் கொடூரமும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இதற்கு அப்படியே மாறாக மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு திருமண சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சூர்யங்கட்டா பாரீக் (30) என்கிற பள்ளி ஆசிரியர், வரதட்சணை எதுவும் வாங்க மாட்டேன் என தன்னுடைய வருங்கால மனைவியின் வீட்டாரிடம் கண்டிப்பாக கூறியுள்ளார்.

இருப்பினும் திருமண நாளில் மணமகள் பிரியங்கா பெஜ்ஜுவின் கழுத்தில் தாலி காட்டும் சமயத்தில் அங்கிருந்த புத்தக குவியலை பார்த்த மணமகன் பெரும் ஆச்சர்யமடைந்துள்ளார்.

மணமகன் வரதட்சணையை ஏற்க மறுத்ததற்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான 1000 புத்தகங்களை மணமகள் பரிசாக வழங்கியுள்ளார்.

மணமகன் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், மணமகளின் வீட்டார் அவரை ஆச்சர்யப்படுத்த திட்டமிட்டுள்ளனர். “அறிவு செல்வத்தை தவிர பெரிய பரிசொன்றும் இவ்வுலகில் இல்லை” என்பதால் புத்தகங்களை வாங்கி கொடுத்ததாக பெண் வீட்டார் கூறியுள்ளனர்.

அன்று செல்ஃபி எடுக்க முடியாமல் தவித்தவர், இன்று அவரையே வென்று சாதனை!!

ஒரு காலத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யாவுடன் செல்ஃபி எடுக்க முயன்று தோற்றுப்போனவர், இன்று தேர்தலில் அவரையே வென்றுள்ளார்.

கிருஷ்ணபால் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்தார். அந்தச் சமயத்தில் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளுள் ஒருவராகவும், மத்திய மின்சக்தி துறை அமைச்சராகவும் இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜோதிராதித்யாவுடன் கிருஷ்ணபால் செல்ஃபி எடுக்க முயன்றார்.

ஆனால் அவர் செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால் காரில் சென்ற ஜோதிராதித்யாவுடன் சற்று தொலைவில் நின்று கிருஷ்ணபால் செல்ஃபி எடுத்தார்.

பின்னர் இடைத்தேர்தல் ஒன்றில் உட்கட்சிப் பூசலால் கிருஷ்ணபால் முற்றிலும் புறக்கணிப்பட்டார். இதனால் காங்கிரசிலிருந்து வெளியேறிய அவர், பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அங்கு படிப்படியாக கட்சி பொறுப்புகளை பெற்றார். இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மத்திய பிரதேசத்தின் குனா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிராதித்யாவை எதிர்த்து பாஜக வேட்பாளர் கிருஷ்ணபால் களமிறக்கப்பட்டார்.

இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், கிருஷ்ணபால் 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் காலம் அனைவருக்கும் பாடத்தை கற்றுக்கொடுக்கம் என பலரும் கிருஷ்ணபால் செல்ஃபி எடுக்க முயன்று தோற்றுப்போன புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

30 லட்சம் போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக்!!

பேஸ்புக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பேஸ்புகில் போலி கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில் 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது இளைஞன் தாக்குதல்!!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று (24.05.2019) மாலை 6.30 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞன் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

வவுனியா புதிய பேரூந்து நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் கடமையில் ஈடுபடும் குறித்த முச்சக்கரவண்டியானது பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டானிச்சூர் பகுதியினை அண்மித்த சமயத்தில் முச்சக்கரவண்டியினை பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கில் பயணித்த இளைஞர் ஒருவர் முச்சக்கரவண்டி முன்பாக மோட்டார் சைக்கிலினை நிறுத்திவிட்டு முச்சக்கரவண்டியின் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்ட நிலையில் வவுனியா பொலிஸார் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.