தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதே மில்லதே இப்ராஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஸெய்லானி ஆகிய மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவம் 2019 இற்கான உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் உற்சவம் நேற்று மாலை சிறப்புற இடம்பெற்றது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கள் கிழமை வழமை போன்று சிறப்பாக நடாத்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டள்ளது. எனவே அம்மன் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டதோடு பொங்கல் கிரியைகள் சிறப்புற இடம்பெற்றுவருகிறது.
அந்தவகையில் 06.05.2019 அன்று பாக்குத்தெண்டல் உற்சவம் சிறப்புற இடம்பெற்றது அதனை தொடர்ந்து 13/05/2019 இன்று மாலை 03:00 க்கு காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுக்கும் புனித நிகழ்விற்காக தீர்த்தக்குடம் புறப்பட்டு மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரை கடலில் அன்னைக்கு உப்பு நீரில் விளக்கெரிக்கும் தீர்தமெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 13/05/2019- இரவு 11:00 காட்டா விநாயகர் ஆலயத்தை தீர்த்தம் வந்தடைது 13/05/2019- நள்ளிரவு 12:00 அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரித்தல் இடம்பெறும் அதனை தொடர்ந்து 15/05/2019- புதன் மடை 17/05/2019- வெள்ளி மடை 19/05/2019 – காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று 20/05/2019- அதிகாலை 03:00 மடை பண்டம் அம்மன் ஆலயம் எடுத்து செல்லப்பட்டு 20/05/2019 வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று 20/05/2019- நள்ளிரவு 12:00 பொங்கல் இடம்பெறும் 25/05/2019- பக்தஞானி பொங்கல் ( பொங்கல் கிரியை நிறைவு) உடன் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நிறைவடைய உள்ளது.
ஆலய பொங்கல் உற்சவத்துக்காக பின்வரும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
1. முப்படையினரின் மூவளைய பாதுகாப்பு, 2. பொலிஸாரின் முழுமையான உடல்,உடைமை சோதனை, 3. பிரதான வீதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட வாகன வசதிகள். ( ஆலய வளவினுள் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை)
4. வியாபார நிலையங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி, 5. பறவை காவடிகளுக்கான அனுமதி பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட வில்லை (எனவே பறவை காவடி நேர்த்திக்கடன்களை அடுத்த வருடம் வழமை போல் நிறைவேற்ற முடியும்)
6. தேவையற்ற பொதிகளுடன் ஆலய வளவிற்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள், 7. கட்டாயமாக தங்களது தேசிய ஆள் அடையாள அட்டையை எடுத்து வாருங்கள், 8. ஆலய வளவிற்குள் பாதுகாப்பு சோதனைகள் எதுவும் கிடையாது, 9. முழுமையான பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
35 வயதாகியும் எனக்கு திருமணமாகவில்லை அதனால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என நபர் ஒருவர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புனேவை சேர்ந்த 35 வயதான நபர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு எழுதியுள்ள கடிதத்தில், நான் செய்யும் வேலையில் எனக்கு விருப்பமில்லை, மேலும் திருமண வாழ்க்கையும் கைகூடவில்லை மற்றும் எனது பெற்றோருக்கு நான் எதையுமே செய்யாத காரணத்தால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, குறித்த நபரின் பெற்றோருக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இவருக்கு திருமணம் வேறு ஆகவில்லை. இதனால் விரக்தியில் இருந்துள்ளார்.
நன்கு படித்தவர், பெற்றோர் மீது அதிக அன்பு வைத்துள்ள இவருக்கு நாங்கள் அறிவுரை வழங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.
திருமணமான ஒரு வாரத்தில் காதல் மனைவியை அவர் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்ற அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் நகரை சேர்ந்தவர் நவீன் ரெட்டி. இவரும் விஜயலட்சுமி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து அறிந்த விஜயலட்சுமியின் பெற்றோர் இரு தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் நவீன் குறித்து புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து விஜயலட்சுமி மற்றும் நவீனை பொலிசார் அழைத்தனர், அங்கு சமாதானம் பேசி மனைவியை தன்னுடன் பொலிசார் அனுப்பிவைப்பார்கள் என நவீன் நினைத்த நிலையில், விஜயலட்சுமியை அவரின் பெற்றோருடன் பொலிசார் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த நவீன் காவல் நிலையத்திலேயே விஷம் குடித்து மயங்கினார். பின்னர் உடனடியாக பொலிசார் நவீனை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மனைவியை தன்னிடம் இருந்து பிரித்த ஏக்கத்தில் காவல் நிலையத்திலேயே நவீன் விஷம் குடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இளம் பெண்ணை குத்தி கொலை செய்தது ஏன் என்று குற்றவாளி அளித்த வீடியோ வாக்குமூலம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தற்போது தனது குடும்பத்துடன் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திலகாவதி என்ற மகள் உள்ளார். திலகாவதி, விருத்தாச்சலம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன், திலகாவதி தன்னை யாரோ கத்தியால் குத்திவிட்டதாக உறவினர் ஒருவருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனால் உறவினர் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும் போது பாதி வழியில் திலகவதி உயிரிழந்தார். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய பொலிசார், பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை கைது செய்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆகாஷ், ஏன் கொன்றேன் என்பதை, வீடியோ வாக்குமூலமாக அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, தானும், திலகவதியும் ஒரே பள்ளியில் படித்தோம். படித்துமுடித்தபிறகு அவள் கல்லூரியில் சேர்ந்தாள். நான் வேலைக்கு சென்று விட்டேன்.
எங்கள் நட்பு இன்றளவும் தொடர்ந்தது. சம்பவம் நடந்த அன்று அவளது வீட்டிற்கு சென்றேன். அவள் என்னை அடித்தாள். என்மீது தண்ணீர் ஊற்றினாள். அந்த ஆத்திரத்தில் அவளை கத்தியால் குத்தி கொன்றதாக ஆகாஷ் கூறினான்.
ஆந்திர மாநிலத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் கைலாசகிரி பகுதியில் உள்ள பூங்காவில் இளம் காதல் ஜோடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சி.ஏ.சத்யநாராயண மற்றும் ஆர் கமலா என்கிற காதல் ஜோடி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதில் சத்யநாராணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கமலா கவலைக்கிடமானா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சோதனையின் போது கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதனை வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும், இரு வீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தாலே தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இரண்டு இளம்பெண்கள் வெவ்வேறு காரணங்களில் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் தவறுதலாக மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நஷ்ரின் பானு. இவர் உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல ஜாதவ் என்ற இளம்பெண்ணை இளைஞர் ஒருதலையாக காதலித்த நிலையில் காதலை அவர் ஏற்கவில்லை.
இதையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர் ஜாதவை கத்தியால் குத்தினார். பின்னர் பானு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே ஜாதவுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் பானு மற்றும் ஜாதவின் சடலங்கள் ஒரே பிணவறையில் வைக்கப்பட்டது. பின்னர் பானுவின் உடல் ஜாதவ் குடும்பத்தாரிடமும், ஜாதவின் உடல் பானு குடும்பத்தாரிடமும் தவறுதலாக மாற்றி கொடுக்கப்பட்டது.
இதையடுத்து தங்கள் வீட்டு பெண்ணான ஜாதவின் உடல் என நினைத்து பானுவின் உடலை ஜாதவ் குடும்பத்தார் சுடுகாட்டில் புதைத்தனர்.
பின்னர் பானுவின் உடலுக்கு பதிலாக வேறு பெண்ணின் உடல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அறிந்த பானு குடும்பத்தார் அதிர்ச்சியடைந்து இது குறித்து வெளியில் கூறிய நிலையிலேயே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து பானு குடும்பத்தார் மற்றும் ஜாதவ் குடும்பத்தார் தனியார் மருத்துவமனைக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். இதன்பின்னர் புதைக்கப்பட்ட பானுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதே போல ஜாதவ் உடலும் அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் சிலரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு இது தொடர்பாக விசாரித்து வருகிறது.
பானுவின் கணவர் சயித் கூறுகையில், சடலம் மாறுவதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழியர்களின் செயலால் பாதிக்கப்பட்டது நாங்கள் தான் என கூறியுள்ளார்.
ஜாதரின் உறவினர் மீனா கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இலங்கைக்கு தேனிலவு சென்ற போது மனைவியை பறிகொடுத்த கணவன் அவரை மறக்க முடியாமல் இரவில் நடசத்திரங்களைப் பார்த்து பேசிக் கொள்வதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா. 33 வயதாகும் இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் என்பவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் தேனிலவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். கடந்த 25ம் திகதி உணவருந்திய தம்பதியினர் இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதில் உஷிலா படேல் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் அன்று நடந்த சம்பவத்தைப் பற்றி சந்தாரியா கூறுகையில், முதல் நாள் இரவில் தான் உணவு சாப்பிட்டோம். மறுநாள் காலையில் அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டாள்.
மூன்று பேர் எங்களை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இப்போது அவள் என்னுடன் இல்லை என்றாலும் இரவில் நட்சத்திரங்களைப் பார்க்கும் போதெல்லாம் உஷிலா உடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன்.
அவள் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள். இங்கு இருக்கும் அதிகாரிகள் என்னை ஒரு குற்றவாளியாக நடத்துவதில்லை. என்றாலும் என்னைப் பாதிக்கப்பட்டவனைப்போலும் நடத்துவதில்லை.
இந்த உலகம் முழுவதும் எனக்கு எதிராக இருப்பது போல் உணர்கிறேன். இருந்தாலும் அவளை விட்டு வரப்போவதில்லை என்று சோகமுடன் கூறியுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் சந்தாரியாவுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உஷிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடல் வறட்சி மற்றும் வாந்தியின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனைவியின் மரணத்துக்கு ஹோட்டலில் கொடுத்த உணவே காரணம் என சந்தாரியா குற்றம் சாட்டிய நிலையில், ஹோட்டல் நிர்வாகமோ சாண்ட்விட்ச், சிப்ஸ் இவர்கள் சாப்பிட்டனர்.
கூடவே வோட்கா மற்றும் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்தனர். அப்படி இருக்கையில் எங்கள் உணவு தரமானதாக இல்லை எனக் கூறுவதே ஏற்க முடியாது என ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிற்கும் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.
வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹார்ட்வெயார் ஒன்று இராணுவத்தினரால் இரண்டு மணித்தியாலம் சோதனையிடப்பட்டது.
இதன்போது குறித்த ஹொட்வெயாரில் இருந்து இரண்டு வாள்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலன்னறுவை – லக்ஷயஉயன பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் பகுதியொன்றில் இருந்து நேற்று மாலை எரிந்த நிலையிலான உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த உடற்பாகங்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் புலஸ்திபுர பகுதியில் காணாமல் போயிருந்த யுவதியுடையது என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
புலஸ்திபுர பீ.ஓ.பீ பகுதியை சேர்ந்த 23 வயதான குறித்த யுவதி கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை புலஸ்திபுர பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரால் பொலன்னறுவை, சேவாகம பகுதியை சேர்ந்த அவரது காதலன் என கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் யுவதி பணிபுரிந்த பொலன்னறுவை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்தவர் எனவும், அவர் முன்னதாகவே திருமணமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் இடையே காதல் உறவு ஆரம்பித்துள்ளதோடு குறித்த பெண் காணாமல் போவதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்னரே தனது காதலன் திருமணமானவர் என அறிந்துக் கொண்டுள்ளதாக மேற்படி விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் இருவருக்கும் இடையில் பல முறை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதோடு இம்முறுகல் நிலை அதிகரித்ததால் தான் இந்த கொலையை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள காதலன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் அறிவிக்கப்படும் வரையில் இச்சட்டம் அமுலில் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குருணாகல் மாவட்டத்தின், ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குருணாகல் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹெட்டிபொல பகுதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருணாகல், ஹெட்டிபொல நகரில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து அப்பகுதியல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வேளையில் அங்கு சில குழுக்களினால் கடைகள், பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
குறித்த பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் நாளை காலை 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப் பகுதிகளில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சம்பவ இடத்தில் படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டுப் பகுதியிலிருந்தே ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையின் அதனை மீட்பதற்குரிய நடவடிக்கையினை பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னர் விடுதலைப் புலிகள் குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நுவரெலியா – பூண்டுலோயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பூண்டுலோயா வீதியில் நேற்று மாலை இரு முச்சக்கர வண்டிகள் மோதி, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி, அக்கா மற்றும் தங்கை ஆகியோரில் தங்கை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, சாரதி மற்றும் அக்கா ஆபத்தான நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கரமலை பிரிவைச் சேர்ந்த சந்திரமோகன் சாலினி எனும் 16 வயதுடைய யுவதியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களை கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த யுவதியின் சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், சாரதியை பொலிஸார் கைது செய்வதாக தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.