வவுனியாவில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பாடசாலைகளில் கனிஷ்ட வகுப்புக்களும் ஆரம்பம்!!

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து 2ம் தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதில் தாமதங்கள் ஏற்பட்டன. கடந்தவாரம் தரம் 6 முதல் உயர்தரம் வரை 2ம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று கனிஸ்ட பிரிவுகள் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பமாகின. வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை சிவில் பாதுகாப்பு பிரிவினர், பெற்றோர், பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் பாடசாலை பைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. எனினும் பாடசாலைகளில் இன்றைய தினமும் வருகை குறைவாகவே காணப்பட்டது.

வவுனியாவில் வெடிகுண்டு மிரட்டல் : வவுனியா முழுவதும் கடும் பாதுகாப்பு : அச்சத்தில் மக்கள்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு இன்றையதினம் வெடிகுண்டு வெடிக்குமென மிரட்டல் விடுக்கப்பட்டதினையடுத்து இன்று (13.05.2019) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊழியர்களினது வாகனங்களும் வைத்தியசாலை வளாகத்தினுள் எடுத்துச்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் வாகன தரிப்பிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகமிகக் குறைவாக காணப்பட்டதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் பழைய பேரூந்து நிலையத்தினுள் வாகனங்கள் உட்செல்வதற்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா மன்னார் வீதி, வைத்தியசாலை வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, புகையிரத நிலைய வீதி போன்ற பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உட்செல்லும் வெளிச்செல்லும் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

குண்டு வெடிக்கும் என்ற எச்சரிக்கைக் கடிதத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வவுனியா நகரமே அச்சத்தின் மத்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே பந்தில் ஹீரோவான மலிங்கா : 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி!!

சென்னை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகிதசர்மா தலைமையிலான மும்பை அணியும் நேருக்கு நேர் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கைரன் பொல்லார்டு 41 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணி சார்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளையும், ஷர்டுல் தாகூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்கார்கள் டூ பிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன் சிறப்பானதொரு துவக்கத்தை கொடுத்தனர். டூ பிளெஸ்ஸிஸ் 26 ரன்களில் வெளியேற, அடுத்த வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில், வந்த வேகத்திற்கு நடையை கட்டினார்.

ஆனால் நிலைத்து நின்று ஆடிய ஷேன் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்களை குவித்து ரன் அவுட்டனார். ஆட்டம் முதலே ரன்களை வாரி வழங்கிய மலிங்கா கடைசி ஒரு பதில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, சாமர்த்தியமாக வீசி ஷர்டுல் தாகூர் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி 4 முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

நாட்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் : சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், IMO,Snapchat, இன்ஸ்ட்ராகிராம் மற்றும் YouTube ஆகிய சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இன்று காலை அறிவித்துள்ளது.

இரண்டரை வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற தனி விமானத்தை அனுப்பிய பிரபலம்!!

இந்தியாவில் இரண்டரை வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலால் பிரியங்கா காந்தி தனி விமானம் அனுப்பி உதவியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டரவை வயது சிறுமி புற்றுநோய் காரணமாக அங்கிருக்கும் பிரயாக்ராஜ் Kamla Nehru மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அந்த சிறுமியின் நிலைமை இன்னும் மோசமானதால், அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ்சுக்லா, உத்திரப்பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம் தெரிவிக்க, அவர் உடனடியாக அந்த சிறுமியின் சிகிச்சைக்காக டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதற்காக அவர் தனிவிமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார், அதிலா சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் சென்றுள்ளனர்.

மனைவி செய்த துரோகத்தை கண்கூடாக பார்த்த கணவன் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் மனைவி செய்த துரோகத்தை கண்கூடாக பார்த்த கணவன், மனைவி உட்பட இருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சாகர் சஹு (35). இவருக்கும் தேவி (30) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தேவிக்கு கணேஷ் (20) என்ற இளைஞருடன் சில காலமாக பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சாகர் மனைவியை கண்டித்த நிலையில் இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தில் புகார் செய்தார்.

பஞ்சாயத்தில் தேவி, கணேஷுடன் இனி பழகக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து தேவி சில காலமாக கணேஷூடன் பழகுவதை நிறுத்தினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாகர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்.

அப்போது தேவி கணேஷூடன் இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த சாகர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார், பின்னர் மரக்கட்டையால் கணேஷை அடித்து கொன்றார்.

இதையடுத்து வீட்டின் கதவை பூட்டிய சாகர் காவல் நிலையத்துக்கு சென்று அனைத்தையும் கூறி சரணடைந்தார்.

பின்னர் சாகரை கைது செய்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து இரு சடலங்களையும் கைப்பற்றினார்கள். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணமான ஒரு நாளில் கடத்தப்பட்ட புதுப்பெண் : திரும்பி வந்து கூறிய ஒரு வார்த்தையால் அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!

இந்தியாவில் திருமணமான ஒருநாளில் இளம்பெண் காதலனுடன் ஓடிபோனதாக கூறப்பட்ட நிலையில் அவர் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரை சேர்ந்தவர் வினிதா. இளம் பெண்ணான இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் 4 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்த அடுத்தநாள் புதுப்பெண் வினிதா தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த இன்னொரு கார் புதுமண தம்பதியின் கார் மீது மோதியது.

பின்னர் காரில் இருந்து இறங்கிய சில நபர்கள், தம்பதி இருந்த காரின் கதவை திறந்து புதுமாப்பிள்ளையை கீழே தள்ளி அடித்து உதைத்தனர். இதையடுத்து வினிதாவை தங்கள் காரில் ஏற்றி கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.

அடிப்பட்ட புதுமாப்பிள்ளை இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரணையில் வினிதாவை அழைத்து கொண்டு போனது பிரயக் ஜின்கர் என்ற இளைஞர் மற்றும் அவர் நண்பர்கள் என தெரிந்தது.

ஜின்கர் காரில் அழைத்து சென்ற வினிதாவுடன் அவருக்கு முன்னார் காதல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வினிதா காதலனுடன் ஓடிபோய்விட்டதாக கூறப்பட்டட நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் இருந்த வினிதா, ஜின்கர் மற்றும் அவரின் 4 நண்பர்களை பொலிசார் பிடித்தனர்.

இதையடுத்து வினிதாவிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, ஜின்கரை நான் காதலித்தது உண்மை தான், ஆனால் எனக்கு அவரை திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தது.

ஆனால் என்னை கொலை செய்துவிடுவதாக தொடர்ந்து அவர் மிரட்டி வந்தார்.

இந்நிலையில் தான் என்னை வலுக்கட்டாயமாக அவர் கடத்தி சென்றுவிட்டார் என கூறினார்.

இதோடு தன்னால் தான் தனது கணவருக்கு அடிப்பட்டது என கூறிய வினிதா அவருக்கு ஆறுதல் கூறியதோடு கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார்.

இதன்பின்னர் சில மணி நேரம் கழித்து வினிதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி முன்னால் வேறு மாதிரி வாக்குமூலம் அளித்தார்.

அதாவது, தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை எனவும், பெற்றோர் வீட்டுகே செல்ல விரும்புவதாகவும் கூறினார், வினிதாவின் இந்த வார்த்தையை கேட்டு அவர் கணவர் அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் வினிதாவை தொண்டு நிறுவனத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை கடத்திய ஜின்கர் மற்றும் 4 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடன் தொல்லையால் குழந்தையை தவிக்கவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நாகராஜூ (28) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா (24) என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை இவர்களுடைய வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது தம்பதியினர் இருவரும் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியதும், அதனை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி!!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா கற்குழி வீதியில் அமைந்துள்ள வன்னி குறோஸ் அமைப்பின் காரியாலயத்தில் இன்று (12.05.2019) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவப்பிரகாசம் சிவமோகன் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த மக்களுக்காக மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் இளைஞர், யுவதிகள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மரண வீட்டில் முகத்தை மூடி வந்த பெண்ணால் குழப்பம்!!

சிலாபத்தில் நடைபெற்ற மரண வீட்டில் முகத்தை மூடி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சிலாபம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்தப் பகுதியை சேர்ந்த 23 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான அவரது கணவர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

திருமணத்திள் பின் அந்த பிரதேசத்திற்கு இருவரும் வந்துள்ளனர். கைது செய்த இருவரையும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் முகத்தை மூடும் வகையில் உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி செயற்பட்ட நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் விசா தொடர்பில் புதிய நடைமுறை!!

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வதிவிட விசாக்களை பெற்றுக்கொள்ள பாதுகாப்பு பரிந்துரையை பெறவேண்டும். இனிவரும் காலங்களில் இலங்கை புலனாய்வுப்பிரிவின் பரிந்துரையைப் பெறவேண்டும்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சே இந்த விசாக்களுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வதிவிட விசாக்களுக்காக தற்போது 1000 பேர் வரை காத்திருக்கின்றனர். இதில் மாலைதீவு நாட்டினரும் அடங்குகின்றனர்.

கணக்கெடுப்பு ஒன்றின்படி சுமார் 8 ஆயிரம் மாலைதீவு மாணவர்கள் தமது பெற்றோருடன் இலங்கையில் தங்கியுள்ளனர்.

ஏற்கனவே மதப்பணிகள் என்ற அடிப்படையில் முஸ்லிம் விவகார அமைச்சின் பரிந்துரையின்கீழ் பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஸ், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள 200 பேர் வதிவிட விசாக்களை பெற்றுள்ளனர்.

பேருந்துடன், ஜீப் ரக வாகனம் மோதி விபத்து!!

கோட்டை – மஹல்வராவ பிரதேசத்தில் ஜீப் ரக வாகனமொன்று, அரச பேருந்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஜீப் ரக வாகனத்தின் சாரதி உட்பட இருவரே உயிரிழந்துள்ளதுடன், இவர்கள் மீகொடை – பனாலுவ பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சஹ்ரானின் மனைவி, மகளின் படம் முதன்முதலாக வெளியீடு!!

உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் வழிநடத்தலில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பில் சஹ்ரானின் மனைவி சாதியாவிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிலாபத்தில் பதற்ற நிலை : பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் : உடன் வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்!!

சிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நகர பகுதியில் மாத்திரம் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக வெளியான செய்தி அடுத்து ஒன்று கூடிய இளைஞர்களால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

பொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர், தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை நிலைய தெரியப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுள்ளனர்.

இதனால் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன் காரணமாக இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

வவுனியா செட்டிகுளத்தில் டயரினை எரித்த நபரினால் பதற்றம் : ஒருவர் கைது!!

வவுனியா செட்டிகுளத்தில் வீதியில் நபரொருவர் நேற்றையதினம் (11.05.2019) இரவு 10 மணியளவில் டயரினை எரித்தமையினால் அவ்விடத்தில் சற்று பதற்றநிலை காணப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மதுபோதையின் உச்சத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா நகரில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் : மூடப்பட்டது சில வீதிகள்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினையடுத்து இன்று (12.05.2019) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதி மற்றும் வைத்தியசாலையினை சூழவுள்ள வீதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பாதுகாப்பு வழமையினை விட அதிகளவிலான இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் புதிதாக ஒர் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வவுனியா நகரினுள் உள்செல்லும் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன்,

வவுனியா மன்னார் வீதி காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பாதையின் இரு பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வவுனியா நகரினுள் உள்செல்லும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.

அதுமட்டுமின்றி வவுனியா மின்சாரசபை வீதியின் ஆரம்ப பகுதியிலும் முடிவு பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்செல்லும் வெளிச்செல்லும் வாகனங்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.

அத்துடன் வவுனியா புதிய பேருந்து நிலையத்தினுள் செல்லும் அனைத்து பயணிகளினதும் பொதிகளை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சோதனைக்குட்படுத்திய பின்னரே பேரூந்து நிலையத்தினுள் உட்செல்ல அனுமதியளிக்கின்றனர்.

மேலும் புகையிரத நிலைய வீதி மற்றும் சுற்றுவட்ட வீதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரினுள் தேவையற்ற விடயத்திற்கு செல்ல வேண்டாமெனவும் தேவை நிமித்தம் வவுனியா நகரினுள் செல்லும் சமயத்தில் அடையாள அட்டையினை எடுத்துச்செல்லுமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றில் நாளை திங்கட்கிழமை வெடிகுண்டு வைக்கப்படவுள்ளதாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்ற கடித்தினையடுத்தே இவ் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.