வவுனியாவில் உயிருக்கு போராடும் 15வயது பாடசாலை மாணவன் : உதவி செய்யுமாறு கோரிக்கை!!

உயிருக்கு போராடும்  பாடசாலை மாணவன்

வவுனியா அண்ணாநகர் பாடசாலை வீதியினை சேர்ந்த 15வயதுடைய பாடசாலை மாணவன் எஸ்.சதீஸ்குமார் தான் உயிர்வாழ்வதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறு வயதினிலேயே தந்தையினை பிரிந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் குறித்த மாணவன் கடந்த சில வருடங்களுக்கு முன் பாடசாலையில் நடந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் போது மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது மாணவனுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் அதிர்ச்சியான விடயமொன்றினை பெற்றோருக்கு தெரிவித்தனர். நுரையிரல் வால்வு காரணமாக நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் பாதிப்பக்கப்பட்டுள்ளார். உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யவேண்டுமென தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தின் வறுமை காரணமாக பலரிடம் சென்று அவர்கள் உதவிகளை கோரியபோதிலும் சிறியளவு பணமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. இம்மாதம் 19ம் திகதிக்கு முன்னராக குறித்த மாணவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும்.

தனது மகன் உயிர்வாழ்வதற்கு உதவி செய்யுமாறு மாணவனின் தயார் கோரி நிற்கின்றார். நல்லுள்ளம் கொண்டவர்கள் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இச் செய்தியை அதிகம் பகிர்ந்து உயிரைக் காக்க உதவுங்கள்.

இலங்கை வங்கி
வவுனியா கிளை
பெயர் :- சீதாலட்சுமி
கணக்கு இலக்கம் :- 74559676

தொலைபேசி இலக்கம் :- 94772843362

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி : நீதிமன்றம் உத்தரவு!!

கொலை செய்யப்பட்ட மாணவி

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பிரகதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சதீஷ்க்கு 15 நாட்கள் காவல் சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவி பிரகதி பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த கொலையை செய்த பிரகதியின் அத்தை மகன் சதீஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுவயதில் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், எனக்கு திருமணமாகிவிட்ட போதிலும் காதல் தொடர்ந்த நிலையில், பிரகதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

மேலும், பிரகதிக்கு தேவையான பணம் மற்றும் நகை உதவிகள் அவ்வப்போது செய்துவந்தேன், இந்நிலையில் தான் எனக்கு அவள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் அவளை கொலை செய்துவிட்டேன் என கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் கைது சதீஷ்குமாரை 15 நாள் காவலில் கோவை சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வவுனியா உக்குளாங்குளத்தில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு விளையாட்டு விழா!!

விளையாட்டு விழா

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வவுனியா பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் மகளிர் அமைப்பு நடாத்திய 14ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா இன்று (09.04.2019) மதியம் 2.45 மணியளவில் உக்குளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டுக்கழக மைதானத்தில் மகளிர் அமைப்பின் தலைவி சிவகுமார் திவியா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் ஆசியுரை, வரவேற்புரை இடம்பெற்றதுடன் விளையாட்டு விழா ஆரம்பமாகியது.

பணிஸ் சாப்பிடும் போட்டி, சாக்கோட்டம், தேங்காய் திருவுதல், கயிறு இழுத்தல், சங்கீதக் கதிரை, வினோத உடைப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்ததுடன் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி லிங்கநாதன், செ.மயூரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வவுனியா உதவி பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி, நெடுங்கேனி உதவி பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா,

கிராம அலுவலகர் ந.ரேனுஷா, சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ஜோ.ஜெயக்கெனடி, வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், விருந்தினர்களாக அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா தனியார் போக்குவரத்து சங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!!

விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. வவுனியாவில் சேவைப் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் வழமை போல் பேரூந்து சேவைகள் ஈடுபடுமென வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் உள்ளிட்ட சில போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வகையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவரைவுக்கு எதிராக நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 24 மணிநேரம் இந்தச் சேவைப் புறக்கணிப்பு இடம்பெறும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் போக்குவரத்து சங்க தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

பணிப்புறக்கணிப்பு தொடர்பாக கொழும்பிலிருந்து எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை. வழமையாக பணிப்புறக்கணிப்பு என்றால் எமக்கு அறிவித்தல் வழங்கப்படும் ஆனால் நாளைய பணிப்புறக்கணிப்பு தொடர்பாக எவ்வித அறிவித்தலும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை . நாளையதினம் வவுனியா மாவட்டத்தில் அனைத்து தனியார் பேரூந்துகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுமெனவும் தெரிவித்தார்.

பெற்றோரை சோகத்தில் ஆழ்த்திய 16 வயது மாணவி!!

தூக்கிட்டு தற்கொலை

மஸ்கெலிய – குலெனுஜி தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம் முறை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாயாரின் சேலையினால் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலே மாணவி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சடலம் குறித்த பிரேத பரிசோதனை இன்று டிக்கோயா மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

யாழில் கைக்குண்டை எடுத்து விளையாடிய சிறுவன் : வெடித்து சிதறிய குண்டு!!

வெடித்து சிதறிய குண்டு

யாழ். நவகிரி பகுதியில் பாடசாலை சிறுவன் கை குண்டொன்றை எடுத்து விளையாடிய போது அது வெடித்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

படுகாயமடைந்த 15 வயதுடைய சிந்துஜன் எனும் சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் விசேட அதிரடிப்படையினர் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவர்கள் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

குறித்த கைக்குண்டு அப்பகுதிக்கு எப்படி வந்தது என்றும், தாக்குதல் நடத்தும் நோக்கில் யாராவது கொண்டு வந்து அப்பகுதியில் கைவிட்டு சென்றார்களா என்பது தொடர்பிலும் பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினர் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண் : பொலிசார் தீவிர விசாரணை!!

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண்

பொரலஸ்கமுவ – எகொடவத்தை வீதியில் வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண்ணொருவரின் சடலம் நிர்வாணமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைய இன்று மாலை குறித்த சடலம் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலம், பிரேத பரிசோதனைக்காக களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் மனிதர்களை விட அசத்தும் விலங்குகள் : பிரித்தானியர் வெளியிட்ட விநோத காட்சிகள்!!

அசத்தும் விலங்குகள்

இலங்கையில் உள்ள குரங்கள் மற்றும் யானைகள் சில செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளது. இலங்கையின் சுற்றுலா துறை தொடர்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு போது இந்த செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தினால் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் இலங்கை முழுவதும் உள்ள யானைகள், ஆமைகள், புலிகள், திமிங்கிலங்கள் உட்பட பல விலங்குகள் தொடர்பில் காணொளி எடுக்கபட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை பிரித்தானிய ஆவணப்பட தயாரிப்பு குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனைவரும் பெண்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த ஆவணப்படத்தை தயாரிக்கும் போது விலங்குள் எடுத்து கொண்ட செல்பி புகைப்படங்களையும் பிரித்தானியா இயக்குனர் வெளியிட்டுள்ளார். இலங்கை மிகவும் அழகான நாடு எனவும் இலங்கையில் நம்பமுடியாத வன விலங்குகள் உள்ளதாகவும் இயக்குனர் Nicola Brown தெரிவித்துள்ளார்.

தந்தை குறடால் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி!!

குழந்தை பரிதாபமாக பலி

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் தந்தை குறடால் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. கடந்த 4ஆம் திகதி மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறடின் மூலம் கணவன், மனைவியை தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது தவறுதலாக குறடு மனைவியின் கையிலிருந்த குழந்தையின் தலையில் பட்டுள்ளது. இந்த நிலையில் படுகாயமடைந்த குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளது.

கடுக்காய்முனை – அருள்நேசபுரம், அம்பலாந்துறை பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவ தினத்தன்று குழந்தையை தாக்கிய சந்தேகநபரான தந்தை தப்பியோடியுள்ள நிலையில், அவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய பெரியதம்பி திலீபன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சுவரில் மோதிய பேருந்து : 11 பார்வையற்றோர் காயம்!!

சுவரில் மோதிய பேருந்து

பேருந்து மோதி இடிந்து விழுந்த மதில் சுவரில் சிக்கி கண் பார்வையற்ற 11 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை நடந்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் சுதுவெல்ல பிரதேசத்தில் கடற்கரையில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற வைபவத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பார்வையற்றோர் கலந்துக்கொண்டுள்ளனர். வைபவம் முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்காக அவர்கள் மண்டபத்திற்கு எதிரில் இருந்துள்ளனர்.

அப்போது அவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் பேருந்து, திரும்பிச் செல்ல திருப்பப்பட்ட போது, பேருந்து பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்த மதில் சுவரில் மோதியுள்ளதுடன் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால், சுவருக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த பார்வையற்றோர் உடைந்து விழுந்த சுவரில் சிக்கி காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு வேலைக்கு சென்ற கணவன் : மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி : நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி

தமிழகத்தில் வீட்டில் இருந்த தாய் மற்றும் மகன் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை சேர்ந்தவர் வனபெருமாள் (50). டயர் தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார்.

இவரது மனைவி வீரலட்சுமி (45). இவர் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு பவித்ரா (25) என்ற மகளும், போதிராஜா (10) என்ற மகனும் இருந்தனர். மகள் பவித்ரா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் போதிராஜா 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் வனபெருமாள் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் வீரலட்சுமியும், மகன் போதிராஜாவும் இருந்தனர். வேலை முடிந்தவுடன் நேற்று காலை வனபெருமாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

அங்கு ரத்தவெள்ளத்தில் வீரலட்சுமி மற்றும் போதிராஜா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வனபெருமாள் கதறி அழுதார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல் இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் கொள்ளையடிக்க முயன்றது.

அப்போது சத்தம் கேட்டு வீரலட்சுமி எழுந்துள்ளார். அவர் தடுக்க முயன்றபோது, வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து வீரலட்சுமியின் கழுத்தில் மர்மநபர்கள் வெட்டியுள்ளனர்.

பின்னர் இரும்பு ஆயுதம் கொண்டு தாக்கி அவரை கொடூரமாக கொலை செய்தனர். சத்தம் கேட்டு எழுந்த சிறுவன் போதிராஜாவை இஸ் திரிபெட்டியின் வயரால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தனர்.

பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 21 பவுன் தங்கநகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு மர்மகும்பல் தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

வவுனியாவில் சட்டவிரோத தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை!!

தேன் உற்பத்தி நிலையம்

வவுனியாவில் இன்று அதிகாலை 5 மணியளவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தேன் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதில் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையிலிருந்த 116 சீனிப்பாணிப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல் ஒன்றினடிப்படையில் ஓமந்தை சுகாதாரப் பரிசோதகர், நொச்சிமோட்டை சுகாதாரப் பரிசோதகர் கூட்டாக இணைந்து வவுனியா பொது சுகாதாரப் பரிசோதகதர் தலைமையில் சமயபுரம் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத தேன் உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது சீனிப்பாணியை தேன் என்று தெரிவித்து 116 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணி மலையகப்பகுதிகளில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படவிருந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு உற்பத்தியாளரின் பெயர் விபரங்கள் திகதியிடப்பட்ட சுற்றுத்துண்டுகள் ஒழுங்கு முறைப்படி காணப்படாத எந்தவொரு தேன் போத்தல்களையும் அல்லது உணவுப் பொருட்களையும் பொதுமக்கள் கொள்வனவு செய்யவேண்டாம்.

இவ்வாறு சீனிப்பாணியை தேன் என்று தெரிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பல சட்டவிரோத போத்தல்கள் எங்களால் கைப்பற்றப்பட்டுள்ளது தேன் கொள்வனவு செய்யும்போது உற்பத்தியாளரின் சுற்றுத்துண்டு இல்லாத பொருட்களை கொள்வனவு செய்யவேண்டாம். என்று பொது மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

உரிய சுகாதார முறைப்படி மேற்கொள்ளப்படாமல் சொப்பின் பையில் இட்டு மோட்டார் சைக்கிளில் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பாண் பனிஸ் கடதாசிப் பையில் வேறு தேவைகளுக்குப்பயன்படுத்திய பாண் பெட்டியிலிருந்த உரப்பை என்பனவும் இன்று காலை மரக்காரம்பளை வீதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த நபரின் பாண் பெட்டியைக் கைப்பற்றி திருத்தவேலைகள் மேற்கொள்வதற்காக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது இதனையும் கருத்திற்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக சுகாதார விதிமுறைகளுக்கு அற்ற முறையில் உணவுப்பண்டங்களைத் தொடர்ந்தும் விற்பனை செய்து வருகின்றார்கள்.

இவ்வாறு இன்றைய தினம் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சட்டவிரோத தேன் உற்பத்தி நிலைய உரிமையாளருக்கு எதிராகவும் பாண் விற்பனைக்கு எடுத்துச் சென்ற விற்பனையாளருக்கு எதிராகவும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஒமந்தையில் லொறி குடைசாந்து விபத்து : ஒருவர் காயம்!!

லொறி குடைசாந்து விபத்து

வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரிக்கு அருகே இன்று (09.04.2019) 5.30 மணியளவில் லொறி குடைசாந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த ஒமந்தை பொலிஸாரின் வாகனம் சேமமடு வீதிக்கு (வீதியின் மறுபக்கம்) திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பொலிஸாரின் வாகனத்திற்கு பின்புறமாக சென்று கொண்டிருந்த லொறியின் சாரதி திடீரேன பொலிஸாரின் வாகனம் திரும்பவதினை அவதானித்துள்ளார்.

இதன் போது பதட்டத்தில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து லொறி குடைசாந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் லொறியில் பயணித்த உதவியாளர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-வவுனியா நெற் செய்திகளுக்காக சம்பவ இடத்திலிருந்து சுஜீவன்-

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட நகை மற்றும் பணம் மீட்பு!!

நகை மற்றும் பணம் மீட்பு

வவுனியாவில் அடகு கடையில் இருந்து திருடப்பட்ட பெருந்தொகை பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில நாட்களிற்குமுன் நகை அடகுக் கடையில் இருந்து பெருந்தொகையான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டடிருந்தது. இது தொடர்பான விசாரணையினை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த அடகுக் கடையில் இருந்து கொள்ளையிடப்பட்ட ஆறு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபா பெறுமதியான நகையும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களை இன்று வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டிருந்தது. இதேவேளை சந்தேக நபரினை இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் 18வது மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி!!

மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி

கொழும்பு, காலி முகத்திடலிலுள்ள ஹோட்டலின் 18வது மாடியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 18 மாடியில் பணி செய்து கொண்டிருந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹோட்டலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீகஹதென்ன, ஊரல லியனகே திஸால் குணசிங்க என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்று இலங்கையிலும் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!

மாணவிக்கு நேர்ந்த கொடுமை

புத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நடத்துனர் ஒருவர் ஆனமடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனமடுவ – மஹாஉஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான திருமணமான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக வகுப்புக்காக ஆனமடுவ பிரதேசத்திற்கு சென்ற மாணவியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். சந்தேக நபர், மாணவியை ஏமாற்றி தான் சேவை செய்யும் பேருந்தில் அவரை தடுத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரியப்படுத்தியுள்ளார். அதற்கமைய மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தாய் செய்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இந்தியாவில் ஓடும் பேருந்துகளில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.