பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கை தமிழ் கணவன் : மனைவி கைது!!

கொடூரமாக கொலை

பிரித்தானியாவில் 67 வயதான இலங்கையரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் பல முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் Burdock Close, Wymondham, Norfolk பகுதியில் வாழ்ந்த கடை உரிமையாளரான ராஜசிங்கம் குமாரதாஸ் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு 11.50 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தலை மற்றும் நெஞ்சு பகுதியில் கடும் காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் குறித்த நபரை மீட்டுள்ளனர். காயமடைந்த வரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 60 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக புலனாய்வு ஆய்வாளர் Kate Thacker தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு குமரதாஸ் மற்றும் அவரது மனைவி 195,000 பவுண்ட் செலவில் கொள்வனவு செய்த 3 படுக்கையறை கொண்ட வீட்டை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். இலங்கையரான குமாரதாஸ் சொந்தமான சுப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பிரித்தானியாவில் 73 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவரே தனது கணவனை அடித்துக் கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனின் கொடுமைப்படுத்தல் மற்றும் தவறான நடத்தை காரணமாக மனைவி இவ்வாறு கொலை செய்துள்ளார் என பிரித்தானியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞன் கைது!!

இளைஞன் கைது

வவுனியாவில் 3 கிராம் 910 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா போலிசார் தெரிவித்தனர்.

நேற்று(19.03) மாலை வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய போதைதடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸ் பொறுப்பதிகாரி உசாந்த தலைமையில், சாயன் யெகத், கான்ஸ்டபிள்களான மிதுசன், சமன், ருவன்குமார, பண்டார, தெனியகொட ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞனை சோதனைசெய்த போதே அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் வவுனியா தேக்கவத்தை, பகுதியை சேர்ந்த 19வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளார். குறித்தநபர் மதில் ஊடாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்துவதற்காகவே நின்றிருந்ததாக போலிசார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்தின் பல பகுதிகளில் ஐஸ் மழை பொழிவு : மகிழ்ச்சியில் மக்கள்!!

ஐஸ் மழை பொழிவு

மலையத்தின் பல பகுதிகளுக்கு நேற்று மாலை அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொகவந்தலாவை, நோர்வுட் மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு அடைமழை பெய்துள்ளது.

இதன்போது பல இடங்களில் அடைமழையின் போதும், ஆழங்கட்டி விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். காஸல்ட்ரீ மற்றும் மவுசாகலை பிரதேசங்களில் பல மாதங்களாக நிலவிய கடும் வரட்சியின் பின்னர் நேற்று மழை பெய்துள்ளது.

இதனால் பாரிய நீர் தட்டுப்பாட்டு ஏற்பட்ட நிலையில் அந்தப்பகுதிகளில் 15 நிமிடங்கள் வரை ஆழங்கட்டி மழை பெய்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிரடியாக செயற்பட்ட பொலிசார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பெண்!!

அதிரடியாக செயற்பட்ட பொலிசார்

கம்பஹாவில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் ஒருவரை பொலிஸார் போராடி காப்பாற்றியுள்ளனர். 12 மற்றும் 6 வயதான இரு பிள்ளைகளின் தாயே இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இந்தப் பெண்ணின் கணவர் புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றார். கணவரின் தாய் உட்பட உறவினர்கள் இந்த பெண் மீது குறை கூறி கொண்டே இருப்பதோடு, பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனை பொறுத்துகொள்ள முடியாமல் மனவேதனையடைந்த இந்த பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

ரயிலில் மோதும் இறுதிக்கட்டத்தின் போது பொலிஸார் கடுமையாக போராடி இந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட பெண் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

வவுனியாவில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கிக்கு தனி அரபி மொழியில் பெயர்ப் பலகை!!

அரபி மொழியில் பெயர்ப் பலகை

இராசேந்திரகுள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சோழர் பவர் நீர்த்தாங்கியுடன் கூடிய குழாய் கிணறு அமைத்து நேற்று (18.03.2019) காலை 9.30 மணியளவில் மக்கள் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கினங்க ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பின் நிதி உதவியில் இக் குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சோழர் பவர் நீர்த்தாங்கி திரைநீக்கம் செய்யப்பட்ட பெயர்ப் பலகை அரபு மொழியில் மாத்திரம் காணப்படுவது தமிழ் மக்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், ஸ்ரீரேலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் , கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டில் தன்னம்பிக்கையால் மீண்ட தமிழ்ப் பெண் : ஒருதடவை படித்துப்பாருங்கள்!!

ஒருதடவை படித்துப்பாருங்கள்

பட்டுப்புடவை, அலங்காரம், நெற்றிச்சூடி, ஆரம் நெக்லஸ் என நகைகள் அணிந்து முகத்தில் நாணச் சிரிப்புடன் புகைப்படத்தில் மணப்பெண் இருப்பார். இந்த மணப்பெண்ணும் இதுபோன்ற எல்லா அலங்காரங்களுடன் காணப்பட்டாலும் தலையலங்காரம் மட்டும்தான் இல்லை.

நாணச் சிரிப்புக்கு பதிலாக தன்னம்பிக்கையுடன் கூடிய புன்னகை, கை கால்களில் மருதாணி சிவப்பு, உதட்டில் லிப்ஸ்டிக் சிவப்பு, செந்நிறப் புடவை என அழகாக தோற்றமளித்தாலும், தலையில் முடி இல்லாதது ஒரு குறையாக தெரிகிறதா? இந்த மணப்பெண்ணின் தலையில் மட்டும் மலர்கள் இல்லை என நினைக்கவேண்டாம், இந்தப் பெண் கடந்து வந்த பாதையும் மலர்ப்பாதை அல்ல.

வைஷ்ணவி பூவேந்திரன் பிள்ளை என்ற இந்த தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் வசிப்பது மலேசியாவில். நவி இந்திரன் பிள்ளை என்ற பெயரில் இன்ஸ்ட்ராகிராம் கணக்கு வைத்திருக்கும் இந்தப் பெண்ணின் புகைப்படங்கள், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பாராட்டுக்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வைஷ்ணவி, சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக முதுகெலும்பு புற்றுநோய் தாக்க, அதற்கான சிகிச்சைப் பெற்று மீண்டு வந்திருக்கிறார். அவரது நோயை மட்டும் களைந்த கீமோதெரபி சிகிச்சை, முடியையும் விட்டு வைக்கவில்லை.

திருமணத்தில் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பது அனைவரின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கும். அதற்காக உலகில் உள்ள அனைவருமே மெனக்கெடுவார்கள். ஆனால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய் தீவிரமாக தாக்கும்போது இயல்பான ஆசைகள் அனைத்தும் வடிந்து உற்சாகம் இழந்துவிடுவார்கள்.

அதிலும் அழகாக இருக்கவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும், அதன் தாக்கத்தில் இருந்தும் மனசோர்வில் இருந்தும் மீண்டு வந்து உற்சாகமாக இருப்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயம். ஆனால், தற்போது நவி பிள்ளையின் தன்னம்பிக்கை, அனைவருக்கும் உற்சாகமளிக்கும் உந்துசக்தியாக மாறிவிட்டது.

நவியின் மார்பகங்கள் அகற்றப்பட்டு விட்டன. கீமோதெரபியால் தலைமுடி கொட்டிப்போக, உடல் பொலிவிழந்துவிட்டது. இதை ஏற்றுக் கொள்வது இளம் பெண்ணான நவிக்கு மிகவும் மன உளைச்சலைத் தந்தது. ஆனால் தனது துக்கத்தில் இருந்து வெளியேறி, இன்று உலகிற்கே தன்னம்பிக்கை நட்சத்திரமாய் மிளிர்கிறார் வைஷ்ணவி பூபேந்திரன்.

மணப்பெண் அலங்காரத்தில் முகம் நிறைய சிரிப்பும், மனம் நிறைய தன்னம்பிக்கைத் ததும்ப திருமணத்திற்கான போட்டோஷூட் எடுத்திருக்கிறார் நவி. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்ட்ராகாம் பக்கத்தில் பதிவிட்டார். இந்தப் புகைப்படங்களில் தனது முடியில்லா தலையை மறைக்க அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. தலையில் மெல்லியத் துணியை மூடியிருப்பதுபோல் சில புகைப்படங்களில் தென்பட்டாலும், அவையும் தலையில் முடி இல்லாததை தெளிவாக காட்டுகின்றன.

நவியின் முகத்தில் வருத்தமோ சோகமோ காணப்படவில்லை என்பதுதான் இந்தப் புகைப்படங்களின் சிறப்பு. அதற்கு பதிலாக மலர்ந்த புன்சிரிப்பும், தன்னுடைய கனவு நனவான மகிழ்ச்சியும்தான் தென்படுகிறது. புகைப்படங்களுடன் அவர் பதிவிட்டிருக்கும் வாசகங்கள் அனைவருக்கும் ஊக்கம் கொடுப்பதாக இருக்கின்றன.

நவியிடம் பிபிசி செய்தியாளர் சிந்துவாசினி தொடர்பு கொண்டு பேசினார். நவியின் பார்வையில் இருந்து அவரது வாழ்க்கையை தெரிந்து கொள்வோம். இந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நான், குடும்பத்துடன் மலேசியாவில் வசிக்கிறேன். அம்மா, அப்பா, அக்கா என்ற சிறு குடும்பம். எனக்கு 28 வயதாகிறது. எஞ்சினியரிங் படித்துவிட்டு, சில ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

பரதநாட்டியமும், கர்நாடக இசையும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நன்றாக சமைப்பேன். ஊர் சுற்ற மிகவும் பிடிக்கும், நண்பர்களும் அதிகம். அது மட்டுமா? அலங்காரம் செய்து கொள்வதும், நன்றாக உடுத்துவதிலும் ஆர்வம் அதிகம்.

எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக 2013ஆம் ஆண்டு தெரியவந்தது. உண்மையில் அப்போது நான் மிகவும் உடைந்து போய்விட்டேன். அதுவரை வாழ்க்கையை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டிருந்தேன். புற்றுநோய் ஏற்பட்டதும் வாழ்க்கையே மாறிவிட்டது. ஆனால் எப்படியும் மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையை மட்டும் நான் கைவிடவில்லை.

சில ஆண்டுகள் சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினேன். ஆனால் 2018ஆம் ஆண்டு முதுகெலும்பிலும் கல்லீரலிலும் புற்றுநோய் தாக்கியது. என் மனவுறுதியை குலைத்த நோய், வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளியது.

புற்றுநோய் உடலை மட்டுமல்ல, மனதையும் அரித்து கவலைகளையும் அச்சத்தையும் கூடுதலாகத் தரும். நோய் பாதிப்பது நோயாளியை மட்டுமா? அதன் தாக்கம் முழுக் குடும்பத்தையுமே பாதிக்கிறது. என் குடும்பம் முழுவதுமே நிலை குலைந்து போனது. எனது வேதனைகளைப் பார்த்து, குடும்பத்தினர் பட்ட துயரம் இருக்கிறதே? அதை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியுமா? மலேசியாவில், அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு வசதிகள் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். எனவே பொருளாதாரச் சிக்கல்களும் எழுந்தன.

புற்றுநோயால் உடலுக்கும், மனதுக்குமான இணக்கத்தன்மை சீர்கெடுகிறது. இதுவரை 16 முறை கீமோதெரபி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, எதிர்மறை சிந்தனைகளால் ஆக்ரமிக்கப்பட்டேன். குடும்பத்தினரும், சில நண்பர்களும் ஆறுதலாக துணை நின்றாலும், உலகத்தில் இருந்து தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன். புற்றுநோய் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களைப் பற்றி பேச மலேசியாவில் தயக்கமும், வெட்கமும் இருப்பதால், எனக்கு ஏற்பட்ட நோயைப் பற்றி வேறு யாருக்கும் சொல்லவில்லை.

என்னுடைய நோயைப் பற்றி வெளியே தெரிந்தால், உலகத்தில் இருந்து நான் தனிமைப்படுத்தப்படுவேன், ஆண்கள் விலகுவார்கள், திருமணத்தில் பிரச்சனை ஏற்படும் என்று பெற்றோர் பயந்தார்கள்.

ஆனால், நான் இன்ஸ்ட்ராகிராமில் என்னுடைய புற்றுநோய் பற்றி பதிவிட்டேன். பலரிடமிருந்து ஆக்கப்பூர்வமான எதிர்வினைகள் வந்ததைப் பார்த்து எனது நம்பிக்கை அதிகரித்தது.

ஒருநாள் நெட்ஃபிலிக்ஸில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, மணப்பெண்ணாக போட்டோஷுட் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் திடீர் என்று தோன்றியது. யாரும் என்னை காதலிப்பார்களா, எனக்கு காதலன் கிடைப்பான, திருமணம் நடக்குமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் மணப்பெண் அலங்காரத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினேன்.

உடனே, புகைப்படக் கலைஞர், ஒப்பனைக் கலைஞர்களை தொடர்பு கொண்டு ஆலோசித்தேன். அவர்கள் எனக்கு உற்சாகமளித்தார்கள். அப்போதுகூட எனது புகைப்படங்கள் இவ்வளவு பிரபலமாகும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் நிறைய பெண்கள் என்னுடைய புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதேபோல் நடந்துவிட்டது.

இன்ஸ்ட்ராகிராமில் புகைப்படம் வெளியிட்ட பிறகு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் எனக்கு செய்தி அனுப்பினார்கள். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் உந்துசக்தியாய் இருப்பதாக சொன்னார்கள். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

“உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது” என புத்தகங்களில் படித்திருக்கிறேன்; அதை நிதர்சனமாக இன்று உணர்கிறேன். அழகாக இருப்பதாக நாம் உணர்ந்தால், உண்மையில் அழகாக இருப்போம் என்பதை புரிந்துக் கொண்டேன். அழகு என்பது, நம்மை நாமே நேசிப்பது என்பதும், தன்னம்பிக்கையாக இருப்பதுதான் என்றும் புரிந்துக் கொண்டேன்.

மணப்பெண்ணாக அலங்கரித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாலும் நான் தனியாகத்தான் இருக்கிறேன். நான் முதலில் ஒருவரை காதலித்தேன், பிறகு சில காரணங்களால் பிரிந்துவிட்டோம். எங்கள் பிரிவுக்கு காரணம் புற்றுநோய் இல்லை என்பதை குறிப்பாக சொல்ல விரும்புகிறேன். இன்றும் என் காதலனை மிகவும் காதலிக்கிறேன். எனக்கான காதல் ஒருநாள் என்னைத் தேடி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்ஸ்ட்ராகிராமில் மணப்பெண் அலங்காரத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கும் நவி, அத்துடன் எழுதியிருக்கும் இந்த வரிகள், புகைப்படத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.

புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது நம் வாழ்வில் பல தாக்கங்களை விட்டுச் செல்கிறது, அழகை அழித்துவிடுகிறது, தன்னம்பிக்கையை வேரோடு சாய்த்து விடுகிறது. சிறுமியாக இருக்கும்போது, திருமணத்தைப் பற்றிய பல கனவுகள் கண்டிருப்போம். ஆனால் புற்றுநோய் அவற்றை அரித்து செல்லாததாக்கி விடுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் திருமணத்தை மறந்துவிட வேண்டியிருக்கிறது. ஒன்று அவர்களே மறுப்பார்கள், அல்லது மற்றவர்கள் நிராகரிப்பார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நான், என் முன்னால் காதலரை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். மணப்பெண்ணாகும் கனவுகள் வருகின்றன. கீமோதெரபி எடுத்துக் கொண்டபோது, எனது முடி கொட்டியது தான் எனக்கு மிகுந்த துக்கத்தைத் தந்தது.

என்னுடைய அழகு உதிர்ந்துவிட்டது என்றும், இனி யாருக்கும் என்னை பிடிக்காது என்றும் நினைத்தேன். அதன்பிறகு நான் மணப்பெண்ணாகவே முடியாது, அப்படி கனவு காண்பதற்கான அழகை என்னால் பெற முடியாது என்று நம்பினேன்.

தலைமுடி நமது அழகை அதிகரிக்கிறது என்று நினைக்கிறோம். அதை இழந்தது என்னுடைய தன்னம்பிக்கையை அழித்தது. வருத்தமாக இருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியே வர விரும்பினேன். எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிவு செய்தேன். இதோ பாருங்கள் உங்கள் முன்னர், துணிச்சலான ஒரு மணப்பெண்.

– BBC – Tamil

திருமணத்தில் கலந்து கொள்ள நினைத்தேன், ஆனால் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறேன் : இளம்பெண் கண்ணீர்!!

நைஜீரியாவில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த இளம் பெண் தூக்கத்திலேயே உயிரிழந்த நிலையில் அது குறித்து அப்பெண்ணின் தோழி வேதனை தெரிவித்துள்ளார்.

Benue மாகாணத்தை சேர்ந்தவர் அடீ நிகுபன். இளம் பெண்ணான இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் நிகுபன் சமீபத்தில் வீட்டில் இரவு தூங்க சென்றார், ஆனால் காலையில் அவர் கண்விழிக்காமலேயே உயிரிழந்தார்.

நிகுபனின் மரணம் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரின் நெருங்கிய தோழியான ஜெனீபரை அதிகம் பாதித்துள்ளது.

நிகுபன் குறித்து ஜெனீபர் சமூகவலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், என் தோழி நிகுபன் திருமணத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டேன், ஆனால் தற்போது அவள் இறுதிச்சடங்குக்கு செல்ல போகிறேன்.

உன் பிறந்தநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டாய், நாம் ஒன்றாக சிரித்தோம், ஒன்றாக இருந்தோம், நீ என் தோழி மற்றும் சகோதரி. உன் ஆத்மா சாந்தியடையட்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

திருமணமான சில மாதத்தில் படுக்கையறையில் இறந்து கிடந்த மனைவி!!

இறந்து கிடந்த மனைவி

சென்னையில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் படுக்கையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்தவர் சிவா (24). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனது தந்தையுடன் கட்டிட காண்டிராக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி செளந்தர்யா. இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சிவா, செளந்தர்யா இருவரும் சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு சென்று தூங்கிவிட்டனர்.

நேற்று காலை படுக்கையில் இருந்து எழுந்த சிவா, தனது மனைவி செளந்தர்யாவை எழுப்பினார். ஆனால் அவர் அசைவற்று கிடந்தார். அவர், படுக்கையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிந்தது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த சிவா இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் செளந்தர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து செளந்தர்யாவின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் வந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட இலங்கை பெண் : அடுத்து நடந்த சம்பவம்!!

இலங்கை பெண்

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த இளம்பெண்ணை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இலங்கையின் கொழும்புவை சேர்ந்தவர் பிரதீபா. இளம்பெண்ணான இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகத்தின் மதுரைக்கு வந்தார்.

பின்னர் அங்கு சதாம் உசேன் என்பவரை திருமணம் செய்த பிரதீபா இலங்கைக்கு மீண்டும் சென்றார். இதன் பின்னர் மூன்று மாத சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு பிரதீபா திரும்பினார்.

பின்னர் அவர் தமிழகத்திலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதீபாவிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்நியர் ஊடுருவல் சட்டத்தின் கீழ் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

3 மணி நேர சித்ரவதை : உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : அதிரவைக்கும் சம்பவம்!!

அதிரவைக்கும் சம்பவம்

கேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனந்து கிரிஷ் என்கிற 21 வயது இளைஞர் மார்ச் 12-ம் திகதி, கடை ஒன்றில் ஜூஸ் குடித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், அனந்துவை அவரது பைக்கில் வைத்தே கடத்தி சென்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நண்பர்கள் வேகமாக அனந்துவின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை கேட்டு பதறிப்போன அனந்துவின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அனந்துவை தேடும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மார்ச் 13-ம் திகதி கரமானா என்னும் இடம் அருகே அனந்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பமானது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொஞ்சிரவிலா பகுதியைச் சேர்ந்த விஷ்ணு ராஜ், வினீஷ் ராஜ் மற்றும் விஜய ராஜ் ஆகிய மூன்று சகோதரர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், சகோதர்கள் 3 பேரும் 14 பேர் கொண்ட ஒரு குழுவில் இருந்துள்ளார். இந்த குழு அப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. 25 வயதிற்குள்ளான ஆட்களை மட்டுமே கொண்ட இந்த குழு மது, கஞ்சா என எப்போதும் போதை மயக்கத்திலே இருந்ததோடு, அப்பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் குடும்பலோடும் தொடர்பில் இருந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது விஜய ராஜுக்கும், அனந்துவின் நண்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சென்ற அனந்துவை விஜயராஜ் தாக்க முற்பட்டுள்ளான். பதிலுக்கு அனந்துவும் விஜயராஜை தாக்கியுள்ளான்.

அன்றிலிருந்து பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக விஜயராஜ் காத்திருந்துள்ளான். இந்த நிலையில் நண்பனின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்பதற்காக விஜாயராஜ் கரமானா பகுதிக்கு சென்றுள்ளான்.

அங்கு போதையில் ஆட்டம் பாட்டம் என இருந்த நண்பர்களிடம் நடந்தவை குறித்து விஜயராஜ் கூறியுள்ளான். உடனே போதையில் கொலை செய்வதற்காக அனைவரும் கிளம்பியுள்ளனர். அப்போது கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த அனந்துவை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றுள்ளனர். கத்தும் சத்தம் வெளியில் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக வாயை கட்டிவிட்டு, 3 மணி நேரமாக கொடுமைப்படுத்தியுள்ளனர்.

முதலில் ஒரு தேங்காயை கொண்டு தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். உயிருடன் இருக்கும்போதே சதை மற்றும் நரம்பை வெளியில் வெட்டியெடுத்துள்ளனர். இதில் அதிக ரத்தம் வெளியேறுவதை படம்பிடித்து ரசித்துள்ளனர். அந்த தாக்குதலின் போது, கே.ஜி.எப் படத்தில் வரும் வசனத்தையும் கூறிக்கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இறுதியில் அதிக ரத்தம் வெளியேறி துடிதுடிக்க அனந்து இறந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 14 பேர் ஈடுபட்ட இந்த சம்பவத்தில் தற்போது அவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமண மேடையிலேயே மயங்கி உயிரைவிட்ட பெண் : பதறவைக்கும் வீடியோ காட்சி!!

பதறவைக்கும் வீடியோ

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது நடனமாடி கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்வில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்ற நடன மங்கையர்கள் ஊரின் பாரம்பரிய இசைக்கு ஏற்றவாறு நடனமாடிக்கொண்டிருந்தனர். அப்போது குழுவின் பங்கேற்றிருந்த ஹக்சிங்ஜலியா என்கிற பெண் திடீரென மயங்கி தரையில் விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த அனைவரும் பதறிப்போய் அவருக்கு முதலுதவி செய்ய முயன்றனர்.

ஆனால் அதற்குள்ளாகவே அந்த பெண்ணின் உயிர்பிரிந்துவிட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

157 பேருடன் நொறுங்கிய விமானம் : வெற்று சவப்பெட்டிகளுடன் நடந்த ஊர்வலம் : கண்கலங்க வைத்த புகைப்படங்கள்!!

கண்கலங்க வைத்த புகைப்படங்கள்

157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தில் இறந்தவர்களின் உடல் அடையாளம் காணப்படாததால், வெற்று சவப்பெட்டியில் இறந்தவர்களின் புகைப்படங்கள் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

எதியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கடந்த 10ம் திகதி விபத்தில் சிக்கியதால், இதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 157 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதில் விமான கிழே விழுந்து நொறுங்கியதால், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணமுடியவில்லை. இதனால் உறவினர்கள் இறந்த தங்கள் சொந்தங்களின் முகங்களைக் கூட கடைசியாக பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானம் விபத்தில் சிக்கியதால், இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எத்தியோப்பியாவின் Holy Trinity Cathedral பகுதியில் இறந்தவர்களின் பெயர்களில் சவப்பெட்டி வைக்கப்படு, அதில் அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

அப்போது அங்கு கூடிய உறவினர்கள் உட்பட பலரும் கருப்பு நிறத்தில் ஆன உடையையே அணிந்து வந்ததாகவும், இதில் 17 பேரின் காலியான சவப் பெட்டிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த சவப் பெட்டிகளை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறும் புகைப்படங்கள் வெளியாகி பார்போரை கண்கலங்க வைக்கிறது.

அதுக்கு வேற ஆள பாருங்கள் : இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை ரம்யா!!

நடிகை ரம்யா

சிம்புவின் குத்து படத்தின் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ரம்யா. அதன்பின் சூர்யா, தனுஷ், அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். தற்சமயம் தீவிர அரசியலில் ஈடுப்பட்டுள்ள இவர் ஹீரோயினுக்கு வைட்டாக உள்ள கதாபத்திரத்தில் தான் நடிப்பது என்ற உறுதியுடன் உள்ளாராம்.

சமீபத்தில் நடித்த படமொன்றில் ஹீரோ, ரம்யாவின் கன்னத்தில் அறைவது போன்று காட்சி இருந்தது. அதை கேட்டவுடன் அறை எல்லாம் வாங்க முடியாது.

காட்சியை உடனே மாற்றுங்கள். இதுபோன்ற காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என இயக்குநரிடம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசியுள்ளார்.

கொழும்பில் ஒன்றின் பின் ஒன்றாக வாகனங்கள் மோதி விபத்து!!

கொழும்பில் விபத்து

கொழும்பு, மட்டக்குளி – அளுத்மாவத்தை பகுதியில் நேற்று இரவு வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினை அடுத்து அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

வான் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. எனினும், இதனை தொடர்ந்து வந்த கார் மற்றும் லொறி என்பன ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு?

விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு?

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஓர் இயந்திரம் திடீரென செயலிழந்துள்ள காரணத்தினால் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஓர் இயந்திரம் இன்று முற்பகல் 11.00 மணி முதல் செயலிழந்த காரணத்தினால் தேசிய மின் விநியோகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 270 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பில் இருந்து செயற்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையமொன்றிலிருந்து விநியோகிக்கப்படும் 60 மெகாவோட் மின்சாரமும் தற்பொழுது கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக இந்த மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் இடைக்கிடை மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மின்சார சபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா விக்ஸ்காடு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு!!

 

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காடு கிராமத்திற்கு வீட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (18.03.2019) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

‘எல்லோருக்கும் வீடு’ எனும் தொனிப்பொருளில் அமைந்த இவ்விழா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் குரூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக விக்ஸ்காடு கிராமத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந் நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட முகாமையாளர், உதவி மாவட்ட முகாமையாளர், உதவி பொறியியலாளர் மற்றும் பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், இராசேந்திரகுள கிராம சேவையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், ஸ்ரீரேலோ கட்சியின் இளைஞர் அணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக் கிராம மக்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் பலதடவைகள் மேற்கொண்ட கோரிக்கைக்கமைவாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினரால் ஒரு வீட்டிற்கு 7,50,000 ரூபா வீதம் 25 வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.