வவுனியா உட்பட வடக்கில் நாளை ஹர்த்தாலா?

நாளை ஹர்த்தாலா?

இந்த இரண்டு வருடத்தில் அரசானது எந்தவித முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் மரணத்தை தழுவியிருக்கின்றார்கள்.

எனவே இனிமேலும் கால அவகாசம் வழங்கப்படகூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். அத்துடன் எந்தவித தீர்வுகளும் கிடைக்காத நிலையில் நாளை 19 ஆம் திகதி மக்கள் எழுச்சிப் போராட்டம் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்கள், பள்ளிவாசல்களின் ஒன்றியங்கள் என்பனவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ள நிலையில் அவர்கள் தமது போராட்டத்திற்கான முழுமையான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இந் நிலையில் 19ஆம் திகதி நாளைய கடையடைப்புக்கு வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்றதா? என்ற கேள்வி அனைத்து மக்களிடத்திலும் காணப்படுன்றது. வடக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு பொது அமைப்பினரும் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள கர்த்தால் தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இதனால் நாளை வடக்கில் ஹர்த்தால் இடம்பெடுமா என்ற அச்சம் பலர் மத்தியில் நிலவுகின்றது. இச் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் எமது செய்திப்பிரிவு வடக்கில் உள்ள சில பொது அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு வினாவியது,

ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு எந்தவொரு அமைப்பினரும் எம்மிடத்தில் கோரிக்கை முன்வைக்கவில்லை, அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக ஹர்த்தால் அனுஸ்டித்திருந்தோம்.

தயவு செய்து கர்த்தால் அனுஸ்டிக்குமாறு தெரிவிக்கும் தரப்பினர் பொது அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடுமாறும் இதுவரையில் வடக்கில் கர்த்தால் தொடர்பாக எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என மேலும் தெரிவித்தனர்.

இரு வர்த்தகர்கள் கொலைச் சம்பவம் : 7 பொலிஸார் உட்பட எட்டுப் பேர் கைது!!

வர்த்தகர்கள் கொலை

காலி ரத்கம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் உட்பட 7 பொலிஸ் அதிகாரிகளும் ஒரு வலஸ்முல்ல வனஜீவராசிகள் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று கைது செய்யப்பட்ட எட்டுப் பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு சென்ற வான் கோர விபத்து – உயிரிழந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்!!

வான் கோர விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் விபரங்கங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி சென்ற வான் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்தனர்.

அதற்கமைய, மானிப்பாய் பகுதியை சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான பெண்ணொருவரும், வவுனியாவை சேர்ந்த 38 வயதான ஆணொருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மற்றுமொரு பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

டிப்பர் வாகன சாரதியின் கவனயீனமே, இந்த விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சிறுவன்!!

சங்கிலியை அறுத்துச் சென்ற சிறுவன்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சிறுவனை இன்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த16 வயதுடைய சிறுவனே இவ்வாறு கைது செய்துள்ளனர்.

பேராறு பகுதியில் பெண்ணொருவர் கடைக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் சென்று இரண்டு பவுணுடைய தங்கச் சங்கியை அறுத்துக்கொண்டு சென்ற போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் அழிந்து வரும் தமிழ் மொழியின் தொல்லியல் ஆதாரங்கள்!!

தமிழ் மொழியின் தொல்லியல் ஆதாரங்கள்

அம்பாறை, சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் காணப்படும், தமிழ் மொழிப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றன.

இந்நிலையில் அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் சில சின்னங்கள் கி.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வேந்தருமான எஸ். பத்தமநாதன் ஊடகம் ஒன்றிற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

மலைகளிலும் மலைகள் அருகே காணப்படுகின்ற இந்தப் புராதன சின்னங்கள், இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அவற்றினை பாதுகாப்பதற்கான போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என, அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

குறித்த பகுதியில் அடிக்கடி சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையினால், அங்கு காணப்படும் பெறுமதிமிக்க புராதன சின்னங்கள் சேதமடைந்தும், அழிவடைந்தும் செல்கின்றன என்று, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கே. தர்மராஜ் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் கல்வெட்டுக்கள், நடுகல், கல்லறைகள், பாறைத்தூண்கள், மலைகளில் குடையப்பட்ட நேர்த்தியான குழிகள் மற்றும் நீர்த் தொட்டிகள் உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்களை இன்னும் காணக் கிடைக்கின்றன.

இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ‘நடுகல்’ இங்கு காணப்படுகின்றமையினை பேராசியர் பத்மநாதன் உறுதிப்படுத்தியுள்ளதோடு, ‘நடுகல்’ என்பது, ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படுகின்ற – பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகும் எனவும் கூறியுள்ளார்.
பெருங்கற்கால மக்கள் தான் நாகர்கள் என அழைக்கப்படுவதாகவும் பேராசிரியர் பத்தமநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ‘நடுகல்’ இங்கு காணப்படுகின்றமையினை வைத்து, கி. மு 2ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் இங்கு பரவியிருந்தார்கள் என்பதை திடமாகக் கூறலாம் எனவும் பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அங்கே கிடைக்கப்பெற்ற பானையோடு ஒன்றில் தமிழ் பிராமி எழுத்து காணப்பட்டதாகவும், இதனை தென்னிந்திய ஆய்வாளர்களும் அக்காலத்தில் உறுதி செய்தனர் என்றும் பேராசிரியர் பத்மநாதன் சில வருடங்களுக்கு முன்னர் கூறியுள்ளார்.

ஈமத்தலங்களில் அமைக்கப்பட்ட நான்குக்கும் மேற்பட்ட கல்லறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. இவை நீள் சதுரமான வடிவுடையவையாகும். அந்த கல்லறையை நீளமான ஒரு கல்லினைக் கொண்டு மூடி விடுவார்கள். அதனை தொப்பிக் கல் (Dollmen) என்று சொல்வார்கள். இந்த ‘தொப்பிக்கல்’கள் இங்கு காணப்படுவதை வைத்தும், கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழ் மொழி பேசிய மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்த முடியும்” எனவும் பேராசிரியர் பத்தமநாதன் தெரிவித்திருந்தார்.

பெருங்கற்கால மக்கள் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்றும், அவர்கள் தான் தமிழ் மொழியை இலங்கைக்குக் கொண்டு வந்தனர் என்றும் பேராசிரியர் பத்மநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். கிடைக்கப்பெற்ற தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், கி.மு 04 நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான், தமிழ் – எழுத்து வடிவம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படுகின்ற பெருங்கற்காலத்தில் தமிழ் பேசிய மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைக்கப் பெற்றுள்ள இடத்தையும், அங்கு காணப்படுகின்ற தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டியமை அரசின் கடமையாகும்.

அனுராதபுரம் மற்றும் பொலநறுவை போன்ற இடங்களிலுள்ள தொல்லியல் சின்னங்களை அரசு பாதுகாத்து வருகின்றமை போல், சங்கமன் கண்டி பிரதேசத்திலுள்ள தொல்லியல் சின்னங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தென்னிலங்கையில் பெண்களை தாக்கிய குள்ள மனிதர்களால் பதற்றம்!!

குள்ள மனிதர்கள்

தென்னிலங்கையில் விசித்திர உருவம் கொண்ட குள்ள மனிதர்கள் ஐந்து பேர் பெண்களை தாக்கியமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாத்தறை, தொட்டமுன என்ற மீன்பிடி கிராமத்தில் நேற்றிரவு மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் தொட்டமுன கிராமத்தில் மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் விசித்திர உருவம் கொண்ட குள்ள மனிதர்கள் 5 பேர், தங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளனர். அந்த குள்ள மனிதர்களிடம் இருந்து தங்கள் உயிரை காப்பற்றிக் கொள்வதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட போராட்டத்தின் மத்தியில் அவர்களிடமிருந்து தப்பித்தாகவும் இதன்போது ஆடைகள் கிழிந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அதிர்ச்சியடைந்த மக்கள் அங்குமிங்குமாக ஓட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இரவு முழுவதும் அந்த மக்கள் உறங்காமல் வீதிகளில் நின்றதாகவும் பதற்றமடைந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தனியார் ஊழியர்களுக்கும் 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமா?

தனியார் ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு?

தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இன்றைய தினம் சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தில கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் குறித்த பிரேரணையை முன்வைத்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொண்டுள்ளதாக மார்தட்டும் அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் தனியார் துறைக்கு எந்த சலுகையையும் வழங்கவில்லை.

அத்துடன் தொழில் அமைச்சு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சாக இருப்பதால் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை!!

மின்சார தடை

நாட்டின் பல பிரதேசங்களில் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தில் இரண்டாவது உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் இன்று பிற்பகல் செயலிழந்துள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மின்சார கட்டமைப்பின் இருப்பு நிலையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையான மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 15 வயது பாடசாலை மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!!

ஆசிரியர் செய்த கொடூரம்

15 வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் ஒருவர் இன்று (18.03) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் பதினைந்து வயது மாணவியை குறித்த ஆசிரியர் பாலியல் வல்லுறவிற்குற்படுத்தியுள்ளார். இச்சம்பவத்தை அம்மாணவி தனது தாயிடம் மாணவி முறையிட்டுள்ளார். தாய் மாணவியுடன் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந் நிலையில் குறித்த முறைப்பாட்டையடுத்து மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் இன்று பாடசாலையில் வைத்து காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிசாரின் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென மொனாராகலை காவல் துறை தெரிவித்துள்ளது.

யாழிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் சென்றவர்களுக்கு நடந்த கோர விபத்து : கர்ப்பிணி உட்பட 3 பெண்கள் பலி!!

கோர விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளனாதில் கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களும் சாரதியும் உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புத்தளம் நாகவில்லு பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த கோர விபத்து ஏற்பட்டிருந்திருந்து. யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற வேன் ஒன்றுடன், எதிர்த் திசையில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த குறித்த வேன் நாகவில்லு பகுதியில் உள்ள இரவு ஹோட்டலில் நிறுத்தி விட்டு, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் குறித்த வேனில் பயணித்த சாரதி உட்பட பத்து பேருடன், வீதியோரத்தில் நின்ற மற்றுமொரு லொறியின் சாரதியொருவரும் பாடுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் வேனில் பயணித்த கர்ப்பிணத் தாய் உட்பட மூன்று பெண்களும், வீதியோரத்தில் நின்ற லொறியின் சாரதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எழுவரில் ஆண்கள் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்கு ஆண்களும், சிறுமி ஒருவரும் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இரு பொலிசாருக்கு திடீர் இடமாற்றம் : நடந்தது என்ன?

இரு பொலிசாருக்கு திடீர் இடமாற்றம்

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்தன உட்பட இரு பொலிஸாருக்கு நேற்றையதினம் (17.03.2019) பொலிஸ் தலைமை காரியாலயத்தினால் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பூப்புகார் மயானத்திற்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மதுஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நேற்று முன்தினம் (16.03.2019), இரவு 11மணியளவில் அலவாங்கு , மண்வெட்டி, கோடாலியுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த 32, 35, 43, 48, 54 வயதுடைய ஐவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் கையடக்க தொலைபேசியினை சோதனையிட்ட சமயத்தில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் இவர்களுக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் இவர்கள் புதையல் தோண்ட முற்பட்ட சமயத்தில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சார்ஜன் ஒருவரும் சம்பவ இடத்திற்கு அருகே காவலில் நின்றமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் விசாரணையின் நிமித்தம் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தினால் நேற்றையதினம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கும் பொலிஸ் சார்ஜனுக்கு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இ.போ.ச – தனியார் பேருந்து ஊழியர்களுக்கு இடையில் முறுகல் : சேவைகள் முடக்கம்!!

பேருந்து சேவைகள் முடக்கம்

தனியார் பேருந்து ஊழியர்களுடனான பிரச்சனை காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பேருந்து ஊழியர்கள் இன்று (18.03.2019) காலை தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வவுனியா இ.போ.ச.வினருக்கும் தனியாருக்கும் இடையே இணைந்த நேர அட்டவனை மற்றும் இணைந்த சேவை தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்றத்தின் கட்டளையை புறக்கணித்து அதனை எதிர்க்கும் முகமாக தனியாரும் ஒரு சில பொலிஸாரும் ஈடுபட்டமையினாலேயே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாக பேருந்து ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அரச ஊழியர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளாகியுள்ளனர்.

வவுனியா இளைஞன் உட்பட நால்வர் கோர விபத்தில் பரிதாபமாகப் பலி!!

கோர விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வவுனியா தேக்கந்தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மோகன்ராஜ் லக்ஸன் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டொயோட்டா ரக வேன் ஒன்று இன்று அதிகாலை 1.45 மணியளவில் புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 8 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலையில் நடந்த கோர விபத்து : யாழிலிருந்து கொழும்பு சென்ற நால்வர் பலி, 4 பேர் படுகாயம்!!

கோர விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Toyota ரக வேன் ஒன்று டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1.45 மணியளவில் புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 8 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் விளையாட்டுக்கள் கட்டட தொகுதி கையளிப்பு!!

விளையாட்டுக்கள் கட்டட தொகுதி

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக்கள் கட்டட தொகுதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு ஆரம்பமானது. குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

முன்னதாக தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து வடமாகாண விளையாட்டு தொகுதிகள் கட்டிடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தர்சினி திறந்து வைத்தார். தொடர்ந்து குறித்த கட்டிடத்தொகுதியில் உள்ள நீச்சல் தடாகத்தை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, விளையாட்டு அமைச்சு உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விளையாட்டு மைதானம் வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு பயன்பெறவுள்ளது. குறித்த கட்டிட தொகுதிக்கான அடிக்கல் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2011ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு நீண்ட வருடங்களின் பின்பு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகிறது.

மன்னாரில் புகைப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆபத்தான போதைப்பொருள்!!

ஆபத்தான போதைப்பொருள்

மன்னாரில் புதைககப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹஷீஸ் என்ற போதைப்பொருள் தொகையே கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சுற்றுலா பயணிகள் தங்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பகுதியிலிருந்து ஒரு கிலோ போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட போதைப்பொருள் சட்ட நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.