திருகோணமலை – ஹொரவபொத்தான பிரதான வீதி திரியாய் சந்தியில் மொரவெவ பிரதேச சபை தவிசாளரின் கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சிவில் பாதுகாப்பு படை வீரரான மஹதிவுல்வெவ – தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஜனஜீவ சம்பத் (29 வயது) எனும் காரின் சாரதியே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹதிவுல்வெவ பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – சின்னக்கடை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் இன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் தனது கணவனை கொடூரமான முறையில் இலங்கையை சேர்ந்த மனைவி கொலை செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவில் 73 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவரே தனது கணவனை அடித்து கொலை செய்துள்ளார்.
கணவனின் கொடுமைப்படுத்தல் மற்றும் தவறான நடத்தை காரணமாக மனைவி இவ்வாறு கொலை செய்துள்ளார் என பிரித்தானியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
76 வயதான ஊனமுற்ற கணவர் படுமையில் இருந்த போது பாக்கியம் ராமநாதன் என்ற 73 வயதான மனைவி கோபத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த கடுமையான தாக்குதலினால் அவரது கணவர் உயிரிழந்துள்ளார் என நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 35 வருடங்களாக கணவனின் தவறான நடத்தையை இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமலும், தனது பொறுமையை இழந்தமையினாலும் தான் தாக்கியதாக பாக்கியம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ராமநாதன் தனது அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். அவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதுடன், உடலின் பல பகுதியில் காயங்கள் காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிழக்கு லண்டனில் உள்ள அவரது வீட்டின் படுக்கை அறையில், அவரது சடலத்திற்கு அருகில் இரத்த கரையுடனான பலகை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனைவியின் கொடூரமாக தாக்குதலிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த பலகையை பார்க்கும் போது தெரிவதாக அரச தரப்பு வழக்கறிஞர் Sally O’Neill QC தெரிவித்துள்ளார்.
படுக்கையில் இருந்த வயதான ஊனமுற்ற நபர் மீது காணப்பட்ட கடும் கோபத்தை அவரால் மேற்கொண்ட தாக்குலின் ஊடாக உணர முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பணம் தொடர்பான விவாதம் ஒன்று தாக்குதல் தினத்திலும் அதற்கு முன்னரும் காணப்பட்டுள்ளது. கொலை செய்த பெண்ணின் சகோதரன் இலங்கையில் உள்ள தனது சொத்துக்களை மோசடி செய்வதாக கொலை செய்யப்பட்ட கனகசபை ராமநாதன் இலங்கை பொலிஸாருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த முற்பட்டுள்ளார்.
இந்த கடிதத்தை பார்த்த மனைவி கடும் கோபமடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அது எதிர்பாராததாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அது வேண்டுமென்றே இருந்தது மற்றும் அது கொடூரமானதாக இருந்தது என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
1983ஆம் ஆண்டு வீட்டவர்களின் ஏற்பாட்டில் இந்த தம்பதி திருமணம் செய்துள்ளனர். இலங்கையில் காணப்பட்ட சிவில் யுத்தம் காரணமாக1985 ஆம் ஆண்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனில் உள்ள அகதி முகாமில் இரண்டு வருடங்கள் வாழ்ந்துள்ளனர்.
2005ஆம் ஆண்டு இந்த தம்பதி மீண்டும் இலங்கை சென்றுள்ளார். பின்னர் மீண்டும் தனது கணவருடன் ஜேர்மன் சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அவர் மனைவி மறுத்துள்ளார்.
2007ஆம் ஆண்டும் மீண்டும் இணைந்த தம்பதி கிழக்கு லண்டனுக்கு சென்று வாழ ஆரம்பித்தனர். 2012ஆம் ஆண்டும் மீண்டும் இலங்கை வந்த போது கணவனுடன் சேர்ந்து வாழ மனைவி விரும்பவில்லை.
இவ்வாறே அவர்கள் வாழ்க்கை தொடர்ந்த நிலையில் மீண்டும் லண்டனில் வாழ்ந்து வந்துள்ளார். இவ்வாறான நிலையில் கடந்த வருடம் அவர் கணவனை கொலை செய்துள்ளார் என சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகள் தொடர்கின்றமையினால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரியில் இரத்தினகற்கள் நிறைந்த புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரக்வான மஹபன்னில் என்ற பிரதேசத்தில் இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இரத்தினகல் உள்ளதாக பலராலும் கூறப்பட்ட நிலையில், அதனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பலரும் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. அதற்கமைய அந்த சோதனையில் அங்கு இரத்தனக்கற்கள் அடங்கிய புதையல் உள்ளமைக்கான உறுதிபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான தகவல் அறிந்த கொள்ளையர்கள் அங்கு கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். புதையலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை காரணமாக இதுவரை 1987 பேர் தமது கல்வியை கைவிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் பகிடிவதையை முழுமையாக ஒழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
எனினும் அது தொடர்வதாக அமைச்சர் குறிப்பிட்டார். பகிடிவதையை தடுக்க உபவேந்தர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக முறைப்பாடுகளை செய்ய அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
வவுனியாவில் நேற்று(16.03) மாலை வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரை பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போதை ஒழிப்புப் பொலிஸார் பெண்ணின் கைப்பையில் கஞ்சா பொதியினை மீட்டுள்ளனர்.
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவின் பொலிஸார் நேற்று மாலை வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரை பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது பெண்மணியின் கைப்பையினுள் பொதி செய்யப்பட்ட 200 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளனர். கிளிநொச்சியைச் சேர்ந்த 45வயதுடைய பெண்ணே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை பலிகொண்ட போயிங் 737 விமான விபத்தில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானமானது ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பிய சில நொடிகளில் கட்டுப்பாடற்ற வேகத்தில் குதித்ததாகவும்,
அப்போதே விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, விமானத்தின் திடீர் வேகத்தை உணர்ந்த விமானி, உடனடியாக உயரத்தை அதிகரிக்க கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமானியின் அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில், கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடிக்கு மேலே செல்லவும், விமான நிலையத்தில் இருந்து 6,400 அடிக்கு மேலே செல்ல உடனடியாக அனுமதி அளிக்குமாறு விமானி கோரியுள்ளார்.
ஆனால் புறப்பட்ட இடத்தில் இருந்து வலதுபக்கம் திரும்பிய விமானம் 10,800 அடிக்கு சென்றதும் ரடார் பார்வையில் இருந்து மாயமாகியுள்ளது. இது குறித்த விமானத்தின் விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் பரிமாறிய சில நொடிகளில் நேர்ந்துள்ளது.
விமான விபத்து தொடர்பில் உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதால், விமானியின் உரையாடல் குறித்த தகவல்களை வெளியிட்ட நபர் தொடர்பில் ரகசியம் காக்கப்படுவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகளுடன் விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானமானது தொடர்புகொள்ள முயன்றும், கோளாறு காரணமாக விமானியின் குரல் தடைபட்டதாகவும், தகவல் தெரிவித்த விமானியின் குரல் மிகவும் பதற்றமாகவும், பயத்துடனும் காணப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மரத்தில் ஏறி அமர்ந்திருந்த 9 வயது சிறுவனை பறவை என நினைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வேட்டைக்காரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் பான் ப்ரேக் தாக்ரோவைச் சேர்ந்த சாலர்மாய் ஜொப்ரதா என்கிற 9 வயது சிறுவன் கடந்த 10ம் திகதி முதல் மாயமாகியுள்ளான். அன்றுமுதல் சிறுவனின் உறவினர்கள் சுற்றியுள்ள பகுதிகளில் அவனை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
புதன்கிழமை காலை ஒரு பெரிய பாறையால் மூடப்பட்ட ஒரு ஆழமான பகுதியில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் உள்ளூர் மனிதர் பிரமுக் கோசின் (38) என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து வேட்டையாடும் துப்பாக்கி மற்றும் எட்டு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நொங் பிலு கண்காணிப்பாளர் பொல் கேணல் சயாகோர்ன் ஸ்ரீலதேகோ கூறியுள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, சம்பவத்தன்று பறவையை வேட்டையாடுவதற்காக பிரமுக் காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென ஒரு மரத்தின் கிளை அசைவதை பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அருகில் சென்ற போது, சிறுவன் இறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தான் தவறுதலாக சிறுவனை சுட்டுகொன்றுவிட்டதை மறைப்பதற்காக அவனுடைய உடலை, ஒரு ஆழமான பள்ளத்தில் புதைத்துவிட்டு பாறாங்கல்லால் மூடி மறைத்து வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார். அதேசமயம் உயிரிழந்த சிறுவன் சாலர்மாய், தன்னுடைய ஏழைக்குடும்பத்தை காப்பாற்றுவதற்காக குத்துசண்டை போட்டிகளில் பங்கேற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மெக்சிகோவில் கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் இருந்து, ஒரு பெண் உட்பட 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் குவாடாலஜாராவின் கிழக்குப் பகுதியிலுள்ள Ixtlahuacán de los Membrillos நகரத்தில் உள்ள கால்வாயில் கடந்த வியாழக்கிழமையன்று பிளாஸ்டிக் பைகள் மிதந்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், நீரில் கிடந்த பைகளை வெளியில் எடுத்து சோதனை மேற்கொண்டனர்.
அதில் ஒரு பெண் மற்றும் 18 ஆண்களின் சடலம் இருப்பது அடையாளம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஜாலிஸ்கோவின் அட்டர்னி ஜெனரல் அலுவலக தடயவியல் வல்லுனர்கள், முழு உடல்களையும் பரிசோதிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்கள் காணாமல் போயிருந்தார்களா என்பதையும் உறுதிப்படுத்தும் விதத்தில் விசாரித்து வருகின்றனர்.
வியாழக்கிழமை இரவு, பாதுகாப்பு நோக்கங்களுக்காக தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது, வெள்ளிக்கிழமை காலை மீண்டும் பணி தொடர்ந்துள்ளதாக அட்டர்னி ஜெனரல் அலுவலக அதிகாரி கூறியுள்ளார்.
இதில் 10 பேர் மட்டும் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மீது மட்டும் வழக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருமே குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்களா என்பதை தீர்மானிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதை மருந்து கும்பல்களுக்கிடையே நடந்த தாக்குதலில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரின் இஸ்லாமிய சமுதாயம், 49 இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டியுள்ளதையடுத்து அவசர அவசரமாக குழி தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இத்தனை கல்லறைகளை சிறு கருவிகள் மூலம் தோண்டுவது கடினம் என்பதால், இன்னும் சில மணி நேரங்களில் பல இறுதிச் சடங்குகள் நடக்கவிருப்பதையடுத்து, பெரிய இயந்திரங்களை பயன்படுத்தி பணியாளர்கள் குழி தோண்டும் நடவடிக்கையில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமிய பாரம்பரியப்படி இறந்தவர்களை 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்து விட வேண்டும் என்பதால் அவர்கள் வேகமாக இயங்கி வருகிறார்கள்.
இப்படி ஒரு இறுதிச்சடங்கை தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என்கிறார்கள் உள்ளூர் இஸ்லாமிய மதத்தலைவர்கள். இந்நிலையில் ஏராளமானோர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு கண்ணீர் மல்க தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
சீனாவில் மனைவியின் காதலை சோதனை செய்வதற்காக, சாலைக்கு நடுவே நின்று கணவன் செய்த விபரீத செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சீனாவின் சென் ஜியாங் மாகாணத்தை சேர்ந்த பான் என்பவருக்கு தன்னுடைய மனைவியின் காதல் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மது போதையில் இருந்த பான், திடீரென அதிவேகமாக கார்கள் சென்றுகொண்டிருந்த சாலையின் நடுவே நின்றுள்ளார்.
இதனை பார்த்த பதறிப்போன மனைவி, அவரை வெளியில் இழுத்து காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய பேச்சை கண்டுகொள்ளாமல் பானும் சாலையின் நடுவே மீண்டும் மீண்டும் ஓடிச்சென்று நின்று கொண்டார். இந்த சம்பவமானது தொடர்ந்து 40 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.
இதன் இறுதியில் வேகமாக வந்த கார் ஒன்று பான் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து பானிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேசிய அவர், நேற்று எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கடைக்கு சென்று மது அருந்திவிட்டு மீண்டும் சண்டையிட்டேன்.
“அப்போது என்னுடைய மனைவியின் காதலை நான் சோதனை செய்ய முடிவெடுத்தேன். சாலையில் நடுவே சென்று நிற்கும்போது அவள் என்னை காப்பாற்ற முயன்றால், காதல் உண்மையானது என்று அர்த்தம். அப்படி வரவில்லையென்றால் காதல் இல்லை என்று அர்த்தம்” என கூறியுள்ளார்.
புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஞானவேலு என்பவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி (33) என்கிற மனைவியும், 3 மகன்களும் இருக்கின்றனர்.
இதில் மூத்த மகன் லோகேஷ் (15) மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் தாய் வீட்டிலும், மற்ற இரண்டு மகன்கள் பாட்டி வீட்டிலும் தங்கி வந்தனர். கடந்த சில நாட்களாகவே ஞானவேலுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை நடந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக சம்பவம் நடந்த அன்று ஞானவேலுக்கும் அவருடைய மனைவி சீதாலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சீதாலட்சுமி கணவன் தொழிலுக்கு சென்ற நேரம் பார்த்து, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
தான் சென்ற பிறகு மகனை யாரும் சரிவர பார்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக உணவில் விஷம் வைத்து கொடுத்துள்ளார். அதன் பிறகு சீதாலட்சுமியும் சாப்பிட்டுவிட்டு மயங்கி தரையில் விழுந்துள்ளார்.
இதற்கிடையில் சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகையில் காதலிப்பதாக 5 கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுபோன்று நாகையில் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் சுந்தர் (23). இவர் அப்பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்து வந்த பெண்ணுக்கும் இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதை அடுத்து, இருவரும் சேர்ந்து காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்த சுந்தர், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
மயக்கம் தெளிந்த எழுந்த அந்த பெண்ணிடம், வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், 294(B), 448, 354A, 354B ,506/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சுந்தரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கல்லூரி மாணவிகள் 5 பேரை காதலிப்பதாக ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த சகோதரிகள் தங்களை துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சேர்ந்த கல்லூரி மாணவி தமிழீழம் என்பவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது சகோதரி ஓவியாவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தாங்கள் இருவரையும் தங்களுக்கான பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் பேசுகையில், பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் உரிய அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதும்,தனி நபர் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி மடுக்கந்தை குடாகச்சகொடி காட்டுப் பகுதியிலிருந்து பல ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயதங்களை விஷேட அதிரடிப்படையினர் நேற்று (16.03.2019) மாலை 4 மணியளவில் மீட்டெடுத்துள்ளனர்.
குடாகச்சகொடி காட்டுப்பகுதியில் மரக்கடத்தல், மண் அகழ்வுகளை தடுக்கும் நோக்கில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது காட்டுப்பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயதங்களை விஷேட அதிரடிப்படையினர் மீட்டேடுத்துள்ளனர்.
எம்.பி.என்.ஜி ரக துப்பாக்கி – 59 , மோட்டர் துப்பாக்கி – 1 , 356ரக துப்பாக்கி – 5 , எல்.எம்.ஜி – 1 , எச்.கே7 துப்பாக்கி – 2 , 60மில்லி மீற்றர் மோட்டார் – 1, 356 ரக மேகசின் – 4 ஆகியவற்றை மீட்டெடுத்த விஷேட அதிரடிப்படையினர் அவற்றை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் விடுதலைப்புலிகளுடையதா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்று வருவதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (17.03.2019) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டுப் பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கயர்ஸ் ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பனைமரத்துடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவிடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.