முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியிலுள்ள தற்காலிக வீடொன்றில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வீட்டில் தாயும், இரண்டு பிள்ளைகளும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் தாய் சுதாகரித்துக் கொண்ட நிலையில் பிள்ளைகளுடன் விபத்தில் இருந்து தப்பியுள்ளார்.
இந்த தீ விபத்திற்கு அப்பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு சாதாரண தரப் பரீட்சையில் கிடைக்கப்பெற்ற பீ சித்தி ஐந்து வருடங்களின் பின்னர் ஏ சித்தியாக மாற்றப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரம் சுயாதீன விசாரணைக்குழுவின் ஊடாக ஆங்கிலப் பாட விடைத்தாள்களை மீளவும் மதிப்பிட்டதன் ஊடாக குறித்த மாணவிக்கு பீ சித்திக்குப் பதிலாக ஏ சித்தி கிடைத்துள்ளதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லேரியாவை வசிப்பிடமாகக் கொண்ட முதலிகே தொன் கவிதா சந்தமினி வீரசிங்க என்ற மாணவிக்கே ஐந்து வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு ஏ சித்தி கிடைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சைக்குத் தோற்றிய அந்த மாணவிக்கு பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் எட்டு ஏ சித்திகள் கிடைத்துள்ள அதேவேளை ஆங்கிலப் பாடத்தில் பீ சித்தியும் கிடைத்துள்ளது.
எனினும் ஆங்கிலப் பாடத்தில் தனக்கு கிடைத்துள்ள பீ சித்தி ஏ சித்தியாக மாற்றப்பட வெண்டுமென உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை அந்த மாணவி தாக்கல் செய்திருந்தார்.
ஐந்து வருடங்களாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் தீர்ப்பு 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று வழங்கப்பட்டதுடன் மனுதாரராக அந்த மாணவியின் ஆங்கிலப் பாட விடைத்தாள்கள் சுயாதீன குழுவொன்றின் மூலமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.
அதனடிப்படையில் பரீட்சைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய சுயாதீன குழு ஆங்கில விடைத்தாள்களை மதிப்பிட்டு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பீ சித்தி ஏ சித்தியாக திருத்தப்பட வேண்டுமென ஆணையாளருக்குப் பரிந்துரைத்துள்ளது. அதனடிப்படையில் திருத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறு அந்த மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளன.
இதன்படி சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த பரீட்சையில் 656,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை அரசியல்வாதி தலைமையிலான குழுவினர் கொடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெக்கிராவ பிரதேச சபையின் தலைவர் உட்பட 4 பேர் கேட்ட சாப்பாடு தாமதமாகியதனால் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரதேச சபை தலைவர் உட்பட 4 பேர் கெப் வண்டி ஒன்றில் ஹபரண நகரதத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்று ப்ரைட் ரைஸ் வழங்குமாறு கோரியுள்ளனர். எனினும் வழங்க தாமதமாகியதனால் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் 8 மாத கர்ப்பிணி மனைவி மீது கடுமையாக தாக்கி உணவகத்தை சேதப்படுத்தியுள்ளார்.
பிரதேச சபை தலைவர் உட்பட 4 பேர் இந்த சம்பவததில் தொடர்புப்பட்டிருப்பதாக ஹபரண பொலிஸாரிடம் அதன் உரிமையாளரான சம்பத் விஜேகுகுமார் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி மாலை 5 மணிக்கு குறித்த 4 பேரும் ப்ரைட் ரைஸ் வழங்குமாறு கோரியுள்ளனர். எனினும் அங்கு இல்லாமையினால் தயாரித்து வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய பணத்தை செலுத்திவிட்டு சென்ற தலைவர் அங்கு வராமையினால் 3 மணித்தியாலங்களாக தயாரித்த ப்ரைட் ரைஸை வேறு ஒருவருக்கு உணவக உரிமையாளர் வழங்கியுள்ளார்.
இரவு 8.40 மணியளவில் அதிக குடிபோதையில் வருகைத்தந்த பிரதேச சபை தலைவர், உணவக உரிமையாளரிடம் தான் வழங்கிய ஓடரை கேட்டுள்ளார். தாமதமாகியதனால் அதனை வேறு நபரிடம் வழங்கியதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கோமடைந்த பிரதேச சபை தலைவர் உணவகத்தை சேதப்படுத்தி உரிமையாளர் மற்றும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவியையும் கொடூரமாக தாக்கியுள்ளார்.
சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான வரியை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான வரியை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர யோசனை முன்வைத்திருந்தார்.
இவ்வாறு வரியை தளர்த்துவதன் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளவர்கள், இலங்கையில் உள்ள தங்கது உறவுகளுடன் குறைந்த செலவில் பேச முடியும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் வரிச் சலுகையை வழங்குவதன் மூலம் பாரியளவிலான அந்நிய செலாவணியை இழக்க நேரிடும் எனவும் இதனால் குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று தெரிவித்துள்ளார். வரிச் சலுகை ஊடாக சுமார் ஆறு பில்லியன் ரூபா வருமானத்தை இழக்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிந்திய புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக் திருகோணமலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டு திருகோணமலை முருகாபுரி கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் வடக்கு கிழக்கின் முக்கிய இடங்களுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று திருகோணமலைக்குச் சென்ற நடிகர் விவேக் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், கோவில் வளாகத்தில் மரக்கன்றினையும் நட்டு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பெயரை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற இலங்கை தாய் மற்றும் மகள் தொடர்பில் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் தாயும் மகளும் பிரித்தானிய மக்களிடம் இலங்கை உணவை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஷாக்யா மானகே என்பவரும் அவரது மகளான துல்ஸி மானகே என்பவருமே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரித்தானியா செல்வதற்கு முன்னர் இந்த தாயும் அவரது கணவரும் மகளும் நுகேகொடை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளனர். எனக்கு இரண்டு வயதாக இருந்த போது சட்டத்தரணியாக இருந்த எனது தந்தையும், ஆசிரியராக இருந்த தாயும் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தனர் என துல்ஸி மானகே தெரிவித்துள்ளனர்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் நான் பட்டதாரியாகும். லண்டன் சென்ற பிறகு எனது தந்தையும் தாயும் விதவிதமாக இலங்கை உணவுகளை தயார் செய்தனர். புத்தாண்டின் போது அனைத்து பலகார வகைகளையும் செய்வதனை எனது பெற்றோர் பழக்கமாக கொண்டிருந்தனர்.
இதன்போது எனது தாயும் பிரித்தானியர்களுக்கு இலங்கை உணவு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார்கள். பிரித்தானியா மக்கள் மத்தியில் இலங்கை உணவு தொடர்பில் பிழையான எண்ணம் இருந்தமையே அதற்கு காரணமாகும்.
இலங்கை உணவு உடலுக்கு ஆரோக்கியமற்றதென பிரித்தானியர்களுக்குள் ஒரு எண்ணம் இருந்தது. இதனால் நான் இலங்கை உணவு தொடர்பில் எழுத ஆரம்பித்தேன். இலங்கை உணவு எவ்வளவு சுவை மற்றும் ஆரோக்கியமானதென தெரியப்படுத்த விரும்பினேன். அதனுடன் நிறுத்தாமல் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு இலங்கை உணவின் சுவையை வெளிப்படுத்தினேன்.
லோன்லி ப்லெனட் சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டின் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த இடமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையின் யுத்தத்திற்கு பின்னர் பிரித்தானியா மக்களுக்கு இலங்கை மீது அவதானம் செலுத்துப்பட்டுள்ளது.
பிரித்தானியா மக்களுக்கு இலங்கை உணவு மீது ஏற்பட்டுள்ள ஈர்ப்பும் இதற்கு ஒரு காரணமாகும். மேலும் இவ்வாறான உணவு தயாரித்து பிரித்தானியா மக்களிடம் பிரபலப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒல்லாந்தர் (தற்போதைய நெதர்லாந்து) இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் இலங்கையில் கொள்ளையிட்ட பொருட்களை மீண்டும் இலங்கையிடம் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல நாடுகளுக்கு சொந்தமானவை எனக் கூறப்படும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களை அந்நாடுகளிடம் மீள கையளிக்க நெதர்லாந்து அரசு எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையுடன் மட்டுமல்லாது இந்தோனேசியா உட்பட சில நாடுகளுடனும் இதேபோன்ற பேச்சுவார்த்தைகளை நெதர்லாந்து ஆரம்பித்துள்ளது.
நெதர்லாந்தில் உள்ள அந்நாட்டுக்கு சொந்தமில்லாத பிறநாடுகளுக்கு உரிமையான பொருட்கள் அந்நாடுகளிடம் கையளிக்கப்பட உள்ளது.
ஹெம்ஸ்டர்மில் உள்ள அருங்காட்சியகம் இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இதன் ஊடாக கண்டி ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த மன்னர் ஒருவரிடம் இருந்து பீரங்கி மாதிரி ஒன்றை இலங்கையிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1765 ஆம் ஆண்டு ஒல்லாந்தருக்கும் கண்டி அரச படைகளுக்கும் இடையில் நடந்த சண்டையின் போது இந்த பீரங்கி மாதிரியை ஒல்லாந்தர் கைப்பற்றியுள்ளனர்.
இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த நெதர்லாந்து அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்.
1980 ஆம் ஆண்டு இலங்கைக்கு சொந்தமான வெங்கலத்தில் செய்யப்பட்ட இந்த பீரங்கி மாதிரியை திரும்ப பெற இலங்கை, நெதர்லாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும் இதன் உண்மையான உரிமையை அறிய நெதர்லாந்து நீண்டகாலம் விசாரணைகளை நடத்தியுள்ளது.
நெதர்லாந்தில் இருக்கும் வேறு நாடுகளுக்கு சொந்தமான பொருட்களை பெற்றுக்கொள்ள அந்நாடுகள் கோரிக்கை விடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் எத்தியோப்பியா தனக்கு சொந்தமான சில பொருட்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஒல்லாந்தர் இலங்கையில் 1640 ஆம் ஆண்டு முதல் 1796 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர்.
ஆறு வயதான தனது மகளுக்கு அயல் வீட்டில் நடந்த வைபவம் ஒன்றின் போது பலவந்தமாக மதுபானம் பருக்கப்பட்டுள்ளதாக அம்பலான்தொட்ட -மோதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது பிள்ளை அயல் வீட்டில் விளையாட சென்று மீண்டும் வீட்டுக்கு வந்த போது பிள்ளையின் வாயில் மதுபான வாசனை வந்ததால், அது பற்றி விசாரித்த போது, அந்த வீட்டில் இருந்த ஒருவர் தனக்கு ஏதோ ஒரு பானத்தை பருக்கியதாக பிள்ளை கூறியதாக தாய் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பிள்ளையை அம்பலான்தொட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி மருத்துவ பரிசோதனை அறிக்கை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று மதியம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய போதைதடுப்புப் பிரிவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவரை சோதனைசெய்த போதே குறித்த போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் மாளிகாவத்தை, நுகேகொடை பகுதிகளை சேர்ந்த 40 வயதான இருவர் கைதுசெய்யபட்டுள்ளனர். அவர்களது கால்சட்டை பையில் இருந்து இரண்டு கிராம் ஹெரோயின் மீட்கபட்டதாக போலிசார் மேலும் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இன்று (12.03) காலை பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி எஸ்.ஜெபநாயகி தலைமையில் மாணவர்களுக்கான சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் விழிப்புணர்வு நிகழ்வினை வன்னிப்பிராராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் மேற்கொண்டது.
தற்போது சிறுவர்கள் எதிர்நோக்கும் போதைப்பாவனை, துஷ்பிரயோகம் தொடர்பாக பொலிசாரால் மாணவர்களுக்கு ஒளிப்படக்காட்சி காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்களையும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம, வடமாகாண கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும், கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான செயலாளருமான அருட்கலாநிதி எஸ்.சந்திரகுமார், போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரி, பொலிசார், ஆசிரியர்கள், மாணவர்கள் எனபப்பலரும் கலந்துகொண்டனர்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 137 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 157 ரூபாவாகும்.
ஒடோ டீசல் லீற்றரொன்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , ஒடோ டீசலின் புதிய விலை 104 ரூபாவாகும்.
சூப்பர் டீசல் லீற்றரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 134 ரூபாய் என நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேல்ஸை சேர்ந்த இளம் பெண் பொலிஸ், மனைவியை இழந்த முதியவரை மயக்கி லட்சக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் சொகுசு காரை பெற்று கொண்ட நிலையில் காவலர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பாட்டூ மெண்டி (28) என்ற இளம்பெண் கடந்த 2014-ல் ஜே.பி (87) என்ற முதியவரின் மனைவிக்கு தேவையான உதவிகளை செய்து வரும் கவனிப்பாளராக இருந்து வந்தார். பின்னர் ஜே.பி-யின் மனைவி 2015-ல் உயிரிழந்துவிட்டார். இதன் பின்னர் முதியவர் ஜே.பி-யை மயக்கிய மெண்டி அவரிடம் இருந்து £34,670 பணம், BMW சொகுசு கார், £320 மதிப்புள்ள கைகடிகாரம், இலங்கையில் இருந்து வாங்கப்பட்ட நெக்லஸ், வாஷிங் மெஷின், குக்கர் போன்ற பொருட்களை பெற்றுள்ளார்.
இதோடு இன்னும் சொகுசாக வாழ தேவையான விடயங்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் பொலிசில் கான்ஸ்டபிள் பணி மெண்டிக்கு கிடைத்தது. இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதியவர் ஜே.பியுடன் மெண்டிக்கு இருந்த தொடர்பு குறித்து வெளியுலகுக்கு தெரியவந்தது.
காவலர் பணியில் இருந்து கொண்டு இப்படி முறை தவறிய உறவால் பணம் மற்றும் நகைகளை முதியவரை மயக்கி பெற்றுகொண்டதாக மெண்டி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதாவது நேர்மையாக இருக்க வேண்டியவர் இப்படி மோசமாக நடந்து கொண்டது தவறு என கூறப்பட்டது.
இதையடுத்து மெண்டி தனது காவலர் பணியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் அதை செய்துள்ளார். இதோடு பொலிஸ் பணியில் எப்போதும் அவர் சேரமுடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிந்து தனது ரத்தம் கொதிப்பதாக நடிகை குஷ்பு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல்.
அந்த கும்பலில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள் நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு, பொள்ளாச்சி கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும். இந்த கொடூரத்தை செய்த யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது.
ரத்தம் கொதிக்கிறது, அந்த மிருகங்களுக்கு கருணையே காட்டக் கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
குஷ்புவை போன்று திரையுலகை சேர்ந்த பல கலைஞர்கள் இந்த சம்பவம் குறித்து கொதித்து போய் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கும்பல் குறித்து சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. 200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு ஃபைனான்சியர். ஆரம்பத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தால் போதும் என்று நினைத்தவர்கள் அதன் பின்னர் தான் தங்கள் வழியை மாற்றியுள்ளார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் தங்களது தங்கைகள் மூலமாக மாணவிகளுடன் அறிமுகம் ஆவார்கள். ஒரு சிலரின் தங்கைகள், சக மாணவிகளின் கைப்பேசி நம்பர் வரை தந்துவிடுவார்கள். மிகவும் ஆடம்பரமாக ஆடை அணிந்து உலா வருவார்கள். இவர்கள் சில பெண்கள் வலைவிரித்தாலும், ஒரு சில பெண்கள் தானாகவே இவர்கள் வலையில் வந்து விழுந்திருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து பெண்மணி ஒருவர், ஒரு நாள் ஜாலியாக இருப்பதற்கு வந்து, பிறகு ஒரு வாரம் இவர்களுடன் தங்கியுள்ளார். ஆனால், இந்தக் கும்பல் ஏமாற்றிய நகை, பணம் குறித்த தகவல்கள் விவரம் வெளிவரவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய மூன்று பேருக்கு, 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைதான ஏ.நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், திருநாவுக்கரசின் பேஸ்புக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, குறிப்பாக அவர் தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வைரலாகிக்கிய நெட்டிசன்கள் மோசமான வார்த்தைகளால் வசைபாடியுள்ளனர். திருநாவுக்கரசு தனது கல்லூரி காலத்தில் இருந்தே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வழக்கின் மிக முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த பொழுது அவரின் பெண் தோழி ஒருவர் உதவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை வெளியிட இயலாது என்று பொலிசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது .இதனால் பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதனால் இது தடுக்கப்பட வேண்டும். இந்த வீடியோக்களை பரப்புபவர் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒரு ஊரில், இந்த நவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணங்கள் நடத்தப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர் எழுவனம்பட்டி. இங்கு ஒரு சமூக மக்கள் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த ஊரை சேர்ந்தவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அல்லது ஏழையாக இருந்தாலும் ஊர் மந்தையில் தான் பாரம்பரிய சடங்குகளின்படி திருமணம் நடக்கிறது. நேற்று இங்கு ராமகிருஷ்ணன் – பவித்ரா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்துக்கு பாலை மரத்தின் குச்சிகள் மற்றும் கிளைகளை வெட்டி எடுத்து வரப்பட்டது. அந்த குச்சிகளை வைத்து மணப்பெண்ணுக்கு குடிசை கட்டப்பட்ட பின்னர் அவர் அங்கு அமரவைக்கப்பட்டார்.
இதையடுத்து அருகில் விரிக்கப்பட்ட சாக்கில் மணமகன் ராமகிருஷ்ணன் அமர்ந்தார். அதை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டதோடு, மணமகன் பஞ்சகல்யாணி குதிரையில் ஊர் மந்தையை சுற்றி வந்தார்.
இறுதியில், குதிரையிலிருந்து கீழே இறங்க விடாமல் தாய்மாமன் மணமகனைத் தூக்கிக்கொண்டுபோய் மணமகளிடம் ஒப்படைத்தார். இதைதொடர்ந்து பாரம்பரிய வாழ்த்துப் பாடல்கள் ஒலிக்க ராமகிருஷ்ணன் பவித்ரா கழுத்தில் தாலி கட்டினார். இதன்பின்னர் இரு குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக நடனம் ஆடி அசத்தினார்கள்.