ஹம்பாந்தோட்டையில் குள்ள மனிதர்கள் : அச்சத்தில் மக்கள்!!

அச்சத்தில் மக்கள்

ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் இருப்பவர்கள் மர்மமான விலங்கொன்று தொடர்பான அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குள்ள மனிதர்களை போன்ற சந்தேகத்திற்கு இடமான இந்த விலங்கினத்தை வலஸ்முல்ல தெஹிகஹனே பிரதேசத்தில் உள்ள விதபொல கிராம மக்கள் 5 பேர் நேரில் கண்டுள்ளனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த யுவதி நேற்றிரவு தனது வீட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தாங்கியில் இந்த விலங்கினை பார்த்துள்ளார். இதனை பார்த்து யுவதி சத்தமிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த யுவதியின் தாயும் அந்த விலங்கினை பார்த்துள்ளார். இதனையடுத்து அந்த விலங்கு ஓடிச் சென்று காட்டில் மறைந்துக்கொண்டதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குள்ள மனிதர்கள் என கிராம மக்கள் கூறும் அந்த விலங்கினம் காட்டில் ஓடிச் சென்ற பாத சுவடுகள் புற்தரையில் பதிந்து காணப்படுகின்றன. இதனிடையே அந்த வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் தேடுதல் நடத்தியுள்ளனர். அவர்களும் அந்த விலங்கினை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் குள்ள மனிதர்கள் என மக்கள் கூறும் விலங்கினம் வாழ்வதற்கான அறிவியல் பூர்வமான உண்மையான சாட்சியங்கள் கிடைக்கவில்லை. குள்ள மனிதர்கள் தொடர்பாக செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதால், சமூகத்தில் அது தொடர்பாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் குள்ள மனிதர்கள் என்ற ஒரு இனம் வாழ்ந்ததாகவும் அந்த மனிதர்கள் வேடுவர்களுக்கு தொல்லையாக அமைந்ததால், கற்குகை ஒன்றுக்குள் போட்டு இனப்படுகொலை செய்யப்பட்டதாக மரபுவழி கதைகளில் கூறப்படுகிறது. குள்ள மனிதர்கள் எனக் கூறப்படும் இந்த உயிரினம் இலங்கையின் அடர்ந்த காடுகளில் இன்னும் இருப்பதாகவும் அவை பெரிய மரங்களின் உச்சியிலும் கற்குகைகளிலும் வசிப்பதாக கூறப்படுகிறது.

வவுனியா ஓமந்தையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடுமாறு மக்கள் போராட்டம் : பதற்றநிலையால் கலகம் அடக்கும் பொலிசார் குவிப்பு!!

மதுபானசாலையை மூடுமாறு மக்கள் போராட்டம்

வவுனியா ஓமந்தைப் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடுமாறு அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டு களகமடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டனர். இன்று(09.03) மாலை 4 மணியில் இருந்து 7 மணிவரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரி, சைவ வழிபாட்டு தளம், அம்மாச்சி உணவகம், வவுனியா தெற்கு பிரதேச சபை உப அலுவலகம் என்பவற்றை அண்மித்து ஓமந்தை ஏ9 வீதியில் புதிதாக மதுபான சாலை ஒன்று இன்று திறக்கப்பட்டது.

குறித்த மதுபான சாலையை திறப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள், கிராம மக்கள் அதனை எதிர்த்து வந்தனர். இருப்பினும் மது பானசாலையை அமைத்த நபர் தனது அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை வைத்து ஒரு சிலரின் அனுமதியைப் பெற்று அப்பகுதியில் மதுபானசாலை ஒன்றினை அமைத்துள்ளார்.

இதனை திறந்து வியாபாரம் செய்ய முற்பட்ட நிலையில் ஒன்று திரண்ட மக்கள் மதுபானசாலையை மூடுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானசாலைக்கு செல்லும் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த ஓமந்தைப் பொலிசார் கலகம் அடக்கும் பொலிசாரை வரவழைத்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செந்தில்நாதன் மயூரன், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தணிகாசலம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான பூ.சந்திரபத்மன், கோ.அஞ்சலா ஆகியோர் வருகை தந்து மக்களுடனும், மதுபானசாலை உரிமையாளருடனும் கலந்துரையாடியிருந்தனர்.

மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையடுத்து எதிர்வரும் திங்கட் கிழமை குறித்த விடயம் தொடர்பில் அக்கிராம மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து அரச அதிபருடன் கலந்துரையாடி தீர்மபானம் எடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஓமந்தைப் பொலிசார் வாக்குறுதியளித்தனர். ஆனாலும் மதுபானசாலை அதுவரை பூட்டப்பட வேண்டும் அல்லது தொடர்ச்சியாக போராடுவோம் என ஆர்ப்பாட்டங்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மக்களின் அழுத்தம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை அரச அதிபருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கும் வரை மதுபானசாலையை தற்காலிகமாக பூட்டுவதற்கு உரிமையாளர்கள் இணங்கியத்திற்கு அமைவாக 7 மணியளவில் மதுபானசாலை பூட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் : கொலையாளிக்கு சிறைத்தண்டனை!!

படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்

பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை குற்றவாளிக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த ரிஸான் உதயகுமார் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

17 வயதான இளைஞனால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளது. எனினும் சட்டரீதியான காரணங்களுக்காக கொலை சம்பவத்தை மேற்கொண்டவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. Watford பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் குறித்த தமிழ் இளைஞன் வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் மறைந்திருந்தார். இதன்போதே குற்றவாளியான 17 வயது இளைஞன் உதயகுமாரின் இதயத்தில் 3 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில் பிரித்தானியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதன்போது 17 வயதான இளைஞன் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, 7 வருட சிறைத்தண்னை விதித்து தீர்ப்பளித்தார்.

எனினும் தங்கள் அப்பாவி மகன் கொலை தொடர்பில் போதுமான நீதி கிடைக்கவில்லை என உதயகுமாரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கத்திக் குத்து குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு நல்ல பாடத்தை கற்பிக்கும் வகையில் தீர்ப்பு காணப்பட வேண்டும் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Watford பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் உதயகுமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு உதயகுமார் சென்றுள்ளார். திடீரென வீட்டிற்கு வந்த குறித்த பெண்ணின் தம்பி, உதயகுமாரை தேடியுள்ளார். உடனடியாக அந்த பெண் உதயகுமாரை வாகனம் நிறுத்துமிடத்தில் மறைத்து வைத்துள்ளார்.

அங்கு சென்ற பெண்ணின் தம்பி, உதயகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கடும் ஒழுக்கங்களை கடைபிடிக்கும் அந்த பெண்ணின் வீட்டில் இப்படி ஒரு இளைஞன் நுழைந்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக கொலையாளியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் கொலை ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் கொலையாளிக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு!!

யுவதியின் சடலம் மீட்பு

சீதுவ அமன்தொழுவ பிரதேசத்தில் யுவதியொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி தங்கியிருந்த அறையில் துணியால் தூக்கில் தொங்கி நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். ஆடை தொழிற்சாலையில் பணி புரியும் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்தவர்.

காதல் தொடர்பு காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரண பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸ் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : தப்பிப்பது எப்படி?

தப்பிப்பது எப்படி?

இலங்கையில் மனிதர்களை உருக்கும் கடுமையான வெப்பநிலை (Heat Stroke) ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது. இந்த நிலைமையில் இருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை சுகாதார பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிக வெயில் ஏற்படும் போது வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் அதிகளவான நீர் அருந்துமாறும் சுகாதார பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்வதனை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். வெப்பம் தாக்காத வகையில் கண்ணாடி மற்றும் தொப்பியை பயன்படுத்துங்கள், சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் கிறீம் வகைகளை உடலில் பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயம், கட்டட நிர்மாணம், வீதி அமைக்கும் பணிகளில் ஈடுபடுவோர் உடலை மறைக்கும் வகையில் லேசான நிறத்திலான ஆடைகளை பயன்படுத்துமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குளிரான நீரில் உடலை கழுவ வேண்டும் எனவும், நோய் பாதிப்பில்லாதவர்கள் தினசரி குளிப்பதும் நல்லதென சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிக வெப்பமான காலநிலை நிலவுவதனால் Heat Stroke என்ற தாக்கத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மைதானங்களில் விளையாடுவதனை தவிர்க்க வேண்டும். வாகனங்களுக்குள் சிறுவர்களை நீண்ட நேரம் அமர வைப்பதனை தவிர்க்க வேண்டும். அதிகமான நீர் அருந்த வேண்டும். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் நீர் அருந்த வேண்டும். சிறுநீர் கழித்தவுடன் நீர் அருந்த வேண்டும். அதிக இனிப்பான குளிர்பானங்களை தவிர்க்கவும். பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நீர் கொண்டு செல்வது கட்டாயமாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக சருமத்தில் சிகப்பு நிற கொப்பளங்கள் ஏற்படும். சிகப்பு நிற சருமம் ஏற்பட்டு எரிச்சல் ஏற்படும். அதிக வியர்வை ஏற்படும். வாந்தி, மயக்கம், தலைவலி உட்பட பல நோய்த்தன்மை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகரின் மனைவியின் அட்டகாசம் : நாயினால் ஏற்பட்ட வன்முறை!!

நாயினால் ஏற்பட்ட வன்முறை

ராகமையில் நாயினால் அடி தடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் மனைவி தொடர்பில் செய்தி வெளியாகி உள்ளது. வீட்டை சுற்றியுள்ள மக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் நாய் வளர்த்த பிரபல பாடகரின் மனைவி 20000 அபராதம் செலுத்தி குற்றத்தில் இருந்து தப்பியுள்ளார்.

குறித்த நாய் பெண் ஒருவரை கடித்துள்ளது. நாய் கடிக்குள்ளான பெண்ணின் மருமகள் நியாயம் கோரி பாடகரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பாடகரின் மனைவிக்கும் நியாயம் கேட்டு சென்ற பெண்ணும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய்த்தகராறு முற்றியமையினால் இருவரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சம்பவம் ராகமை பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இறுதியில் சம்பவத்தை சமாதனப்படுத்திய பொலிஸார் 20000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு பாடகரின் மனைவிக்கு தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!!

ஒருவர் பரிதாபமாக பலி

யாழ். கொடிகாமம், கச்சாய் வீதியில் துவிச்சக்கரவண்டியொன்றுடன் மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மோட்டார்சைக்களிலில் பயணித்த 19 வயதுடைய குலேந்திரநாதன் பிருந்தன் என்பவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த விபத்தில் படுகாயமடைந்த 32 வயதுடைய எஸ்.சதீஸ்தரன் என்ற பிரதேசசபை ஊழியருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் திடீரென வீதிகளில் மயங்கி விழும் மக்கள் : மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

தற்போது நிலவும் அதிதீவிர வெப்பமான காலநிலை குறித்து வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் அதிகளவான வெப்ப நிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமகாலத்தில் 35 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழமையை விடவும் கடும் வெப்பநிலை காரணமாக பலர் வீதிகளில் மயங்கி விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு மக்கள் சரும நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகளில் இருப்போர், வாகனங்களில் பயணிப்போர் ஓரளவு தப்பிக்கின்ற போதிலும், வீதியால் நடந்து செல்வோர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையை அடுத்து, வெயில் நிலவும் போது வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்!!

சந்தேகநபர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்

மட்டக்களப்பு – தேற்றாத்தீவு கிராமத்திலுள்ள வீடொன்றில் தங்க நகைகளை கொள்ளையடித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த நான்காம் திகதி தமது வீட்டிலிருந்த தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக தேற்றாத்தீவை சேர்ந்தவர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் கொள்ளையர்கள் தொடர்பில் எதுவித தடயங்களும் இல்லாத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் பாண்டிருப்பு, மருதமுனை, ஏறாவூர், களுவாஞ்சிகுடி, போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுவன் : தாய் உட்பட மூவருக்கு நேர்ந்த கதி!!

வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுவன்

நெடுங்கேணி பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த திலிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயதுச் சிறுவன் கடந்த புதன்கிழமை 5 மணியளவில் காணாமல் போனதாகவும், தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாக கனகராயன்குளம் பொலிசில் சிறுவனின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டு முகவர் ஒருவர் தானே குழந்தையை கடத்தியதாகவும், 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு இரண்டுதடவைகள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் , கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியதாகவும் தாயார் பொலிஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

குறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, ஓமந்தை, புளியங்குளம் உட்பட பல பொலிஸ் நிலையங்களிற்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வவுனியா, ஓமந்தையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சிறுவனை நேற்று அதிகாலை புளியங்குளம் பொலிசார் மீட்டனர்.

குறித்த சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயார், தாயின் சகோதரர் மற்றும் தாயின் சித்தப்பா ஆகியோரை பொலிசார் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யபட்ட நபர்களை புளியங்குளம் பொலிசார், கனகராயன்குளம் பொலிசாரிடம் நேற்று மதியம் ஒப்படைத்துள்ளனர். கைதுசெய்யபட்ட மூவரும் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு திங்கள்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்!!

தமிழ்மாருதம்

கலை இலக்கியச் செயற்பாடுகளை மையமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் மாமன்றம் வருடாந்தம் நடாத்தும் பண்பாட்டு பெருவிழாவான “தமிழ்மாருதம்” வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது.

இம்முறை தமிழகத்திலிருந்து பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தியிருந்தார்.

காலை 8.30 மணிக்கு வவுனியா விபுலானந்தர் சிலை முன்பிருந்து ஆரம்பமாகிய பண்பாட்டு ஊர்வலம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தை வந்தடைந்தது. ஏனைய நிகழ்வுகளான வில்லுபாட்டு, ஆடலரங்கம், நாடகம், விவாதம் என்பனவற்றுடன் இன்றைய அமர்வு இடம்பெற்று வருகின்றது.

இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களின் ஒன்றிணைவில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இடம்பெற்று வருகின்றது. இரண்டாம் நாள் அமர்வுகள் நாளையதினம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தீ விபத்து!!

விபுலானந்தா கல்லூரியில் தீ விபத்து

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் இன்று (09.03) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்து சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விபுலானந்தா கல்லூரியின் கணிணி அறையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து பாடசாலை சமூகத்தினர் பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.

அதன் பின் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கணிணி அறையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தீவிபத்து நேர்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீ விபத்து காரணமாக கணிணி அறையில் இருந்த கணிணிகள், கதிரைகள் என்பன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இலங்கையை சேர்ந்த இருவர் தமிழகத்தில் கைது : காரணம் என்ன?

இலங்கையை சேர்ந்த இருவர் தமிழகத்தில் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகம் வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமான செயல்பாடுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இதனை கண்காணிக்கும் பணியில் க்யூ பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக வந்த பிளாஸ்டிக் படகை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.

அந்த படகில் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சியோன் பாரூக் மற்றும் சுனந்தபாலயோகராஜ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து படகு மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சியோன் மற்றும் சுனந்தபாலயோகராஜிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பெண்ணாக பிறந்து ஆணாக மாறி குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய நபர்!!

குழந்தை பெற்றெடுத்த நபர்

அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் குழந்தை பெற்றுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிறப்பால் ஆணாக பிறந்து, பின் மன அளவில் தங்களை பெண்ணாக உணர்ந்து அதற்கான அறுவை சிகிச்சையும் செய்துகொண்டு பெண்ணாக மாறுபவர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். அதே போன்று பிறப்பில் பெண்பாலாகவும், மன அளவில் ஆண்பாலாகவும் அறியப்படுவர்கள் திருநம்பிகள் என்று கூறப்படுகின்றனர்.

பொதுவாக திருநங்கைகளுக்கு குழந்தை பாக்கியம் என்பது மருத்துவ உலகில் இதுவரை இல்லை. இந்நிலையில் அமெரிக்காவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த வைலே சிம்ப்சன் என்ற இவர் பிறப்பால் பெண்ணாக பிறந்த மனதளவில் தன்னை ஆணாக உணர்ந்தார். இதனால் தன்னுடைய 21 வயதில் ஆணாக மாறினார். அதன் பின் இவர் ஸ்டீபன் கேத் என்பவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிம்ப்சன், தான் கர்ப்பமாக இருந்ததை உணர்ந்துள்ளார். சிம்ப்சனுக்கு மாதவிடாய் நின்றிருந்ததால், அவர் கர்ப்பம் அடைய வாய்ப்பே இல்லை என்ற மருத்தவர்கள் கூறிய நிலையில் அவர் கர்ப்பம் அடைந்தது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முகத்தில் தாடி, மீசையுடனும் வயிற்றில் குழந்தையுடனும் சென்ற அவரை தெருவில் பலரும் பார்த்து நக்கல் செய்தனர். ஆனால் அவர் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன் அவருக்கு சிசேரியன் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால் இந்த செய்தி தற்போது தான் தெரியவந்துள்ளது. அதில் அவர், தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக நாட்களை கழிப்பதாக கூறியுள்ளார். அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை எனவும் சிம்ப்சன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பலரை கண் கலங்க வைத்துள்ள இலங்கைத் தமிழ் இளைஞன்!!

கனடாவில் தமிழ் இளைஞனின் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டு செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் Calgary பகுதியிலுள்ள தனக்கு தெரிந்த ஒரு நண்பருக்காகவும். தெரியாத நண்பருக்காவும் சிறுநீரகம் தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த மோஹன் பாலசந்திரன் என்பவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

Antonela Marian மற்றும் Sarjoon Abdul-Cader ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒரு போதும் சந்தித்து கொண்டதில்லை. எனினும் இருவரும் பொதுவான நோய் தாக்கம் ஒன்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் மீது அவர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் மூலம் தங்களுக்கு சிறுநீரகம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எந்த நேரத்திலும் உயிர் போகலாம். இருவருக்கும் ஆரோக்கியமான சிறுநீர் பொருத்தப்பட்டால் மாத்திரமே அவர்கள் உயிர்வாழ முடியும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வரை அவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை மருத்துவ கண்கானிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மோஹன் பாலசத்திரனுடன் Abdul-Caderக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அன்று முதலே நண்பனின் உயிரை காப்பாற்றுவற்கான நடவடிக்கையில் மோஹன் ஈடுபட்டுள்ளார். அதற்காக 75 கையொப்பங்கள் சேகரித்து ஸ்டிக்கர் அடித்து பலரிடம் அவர் உதவி கோரி வருகின்றார்.

வவுனியாவில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, உக்கிளாங்குளம், 4 ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் சம்பவ நேரம் தந்தையும் மகளும் இருந்துள்ளார்கள். மகள் உணவருந்திவிட்டு உறங்கியுள்ளார். தந்தையாரும் உணவருந்திவிட்டு வீட்டில் நின்றுள்ளார். நித்திரை விட்டு எழுந்த மகள் தந்தையை தேடிய போது வீட்டின் முன் வாயில் பகுதியில் உள்ள தண்ணீர் பம்ப் அருகில் தந்தையார் விழுந்து கிடந்ததை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தந்தையை எழுப்ப முயன்ற போது அவரது நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்கள் காணப்பட்டமையும், மரணித்து இருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிசார் குறித்த குடும்பஸ்தரின் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தில் காயங்கள் காணப்பட்டமையால் உடனடியாக வவுனியா தடவியல் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த தடவியல் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த செ.சிவராஜா (வயது 64) என்பவராவார். மரணித்தவரின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.