வவுனியா ஓமந்தையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிசார்,
இன்று மாலை ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் கடமையில் இருந்த பொலிசார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவரை வழிமறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அவரிடமிருந்து 45 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர். குறித்த 55 வயதான நபர் கைதுசெய்யபட்டதுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் தமது கட்டுபாட்டில் எடுத்துசென்றுள்ளதாகவும், கைதுசெய்யபட்ட நபரை நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த மகன் தன்னை தனி அறையில் பெற்றோர் அடைத்து வைத்த காரணத்தால் அம்மிக்கலை போட்டு தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வரஜ் – மகாலட்சுமி தம்பதியினரின் மகன் வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வினோத்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் தனது தெருவில் உள்ளவர்களிடம் நேற்று சண்டையிட்டுள்ளார்.
இதனைக் கண்ட அவருடைய பெற்றோர், வினோத்குமாரை வீட்டுக்கு அழைத்து வந்து தனி அறையில் வைத்து பூட்டினர். தன்னை வெளியே விடும்படி அவர் கூச்சலிட்டார். பின்னர் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்த வினோத், அம்மிக்கலை எடுத்து தனது தந்தையின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் தந்தை உயிரிழந்தார். கத்தரிக்கோலால் தாயையும் தாக்கியுள்ளார்.
வீட்டில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகாலட்சுமியை பொலிசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வினோத்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நெடுங்கேணி பெரியமேடு பகுதியில் சிறுவனொருவரை கடத்தி வெளிநாட்டில் பணிபுரியும் அவரின் தந்தையிடம் கப்பம் கோரிய சிறுவனின் தாய் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவனின் தாய் , தாயின் சகோதரர் மற்றும் தந்தையின் சகோதரர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வௌிநாட்டில் வசிக்கும் நபரிடம் 35 இலட்சம் ரூபாய் இவ்வாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 6ம் திகதி இரவு 8 மணியளவில் குழந்தையை இனந்தெரியாத சிலர் கடத்திச் சென்று 35 இலட்சம் ரூபாய் கோருவதாக கடந்த 7ம் திகதி சிறுவனின் தாயாரால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த தொலைப்பேசி அழைப்பு தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் ஓமந்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவனின் தாய் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்றிருந்த கடன்களை செலுத்துவதற்காக இந்த கடத்தல் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஓடையில் இருந்து சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஓடைப்பகுதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் பெரியகல்லாறு 03ஆம் குறிச்சி, சின்னத்துரை வீதியை சேர்ந்த க.பொன்னுத்துரை (75வயது) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மரண விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் கிழே விழுந்து நொறுங்கிய நிலையில் அனைவரும் பலியாகியிருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. Ethiopian Airlines Boeing 737 பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababa-விலிருந்து கென்யாவின் Nairobi நகருக்கு 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது.
அப்போது சரியாக உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்கு புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களில் அதாவது 8.44 மணிக்கு கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து விலகியுள்ளது. இதனால் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் விமானத்தின் உள்ளே இருந்த அனைவரும் பலியாகியிருப்பதாக அங்கிருக்கும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் 33 நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் விமானத்தை தேடும் பணி மும்பரமாக நடைபெற்று வருவதால், விமானத்தை கண்டுபிடித்த பின்னர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். மேலும் எத்தியோப்பியா பிரதமரின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விமானத்தில் பயணம் செய்த உறவினர்களின் குடும்பத்தினருக்குவருத்தம் தெரிவிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளதால், அதில் பயணம் செய்த பயணிகள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதன் காரணமாக அந்த விமானத்தில் பயணம் செய்த உறவினர்களின் உண்மை நிலை தெரியாமல் தவித்து வருகின்றனர். எத்தியோபியா ஏர்லைஸ்ன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடிஸ் அபாபாவுக்கும் – நைரோபிக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதை எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறது.
ஆடிஸ் அபாபா சர்வேத விமான நிலையத்தில் இருந்து காலை 08.38 மணிக்குப் புறப்பட்ட விமானமானது 8.44 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை உயிரோடு இருப்பவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த விமானம் எத்தியோபிய தலைநகரில் இருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள Bishoftu என்ற இடத்தில் விழுந்துள்ளது. அவசர உதவிகளுக்காக விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு எங்களது பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமானத்தில் 149 பயணிகள் 8 விமானப் பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில் பயணம் செய்த பயணிகள் குறித்த விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விமான விபத்து தொடர்பான தகவல்களுக்கு 0733666066 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பில் அதிகளவான வெப்பநிலை ஏற்பட வாகனங்களே காரணம் என வான்வெளி ஆராய்ச்சியாளர் சீ.பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை முழுவதும் வெப்பமான காலநிலை அதிகரித்துள்ள நிலையில் அது கொழும்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொழும்பில் அதிக மரங்களை வெட்டி அழித்தமை மற்றும் பாரியளவில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையே அதிக வெப்பத்திற்கு காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கொழும்பில் வாகனங்களின் பயன்பாடு பாரியளவில் அதிகரித்துள்ளமையினாலும் வெப்பநிலை தீவிரம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிக வெப்பமான காலநிலை காரணமாக மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும் சிக்கமான பயன்படுத்துமாறும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளமையினாலும், மழையற்ற காலநிலை காரணமாகவும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சினால் மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எதிர்வரும் மாதங்களுக்கான புதிய எரிபொருள் விலை நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த மாதம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரையில் 55 டொலருக்கு காணப்பட்ட மசகு எண்ணெய், ஒரு வாரம் என்ற சிறிய காலப்பகுதிக்குள் 60 டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் ஒபெக் அமைப்பினால் எரிபொருள் தயாரிப்பு மட்டுப்படுத்தப்பட்டமையினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உலக சந்தையில் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை தினம் கூடவுள்ள எரிபொருள் சூத்திர குழுவினால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கமைய எரிபொருள் விலை அறிவிக்கப்படவுள்ளது. அதற்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் மே மாதம் வரை வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,
குறித்த வெப்பத்துடன் கூடிய வானிலை வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை போன்ற பகுதிகளிலும் நீடிகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை வடக்கு, கிழக்கில் 15 – 25 வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவில் வீரசேகரகம பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா சேனையை பொலிஸார் அழித்துள்ளனர். பேஷ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட செல்ஃபி புகைப்படத்தை ஆதரமாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கஞ்சா சேனை பற்றி தகவல் கிடைத்துள்ளது.
கால் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 8 அடி உயரம் கொண்ட 115 கஞ்சா செடிகள் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சாவை பயிரிட்டிருந்த சந்தேகநபரையும் பொலிஸார் இதன்போது கைது செய்துள்ளனர். வெல்லவாய – வீரசேகரகம, மாலேவனயாய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். இந்த நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் சமகாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் குள்ள மனிதன் கட்டுக்கதையாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை உட்பட பல பகுதிகளில் இந்த குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அந்த பிரதேசங்களில் நடமாடுவதாக கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் கிடைக்கவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களை தொடர்ந்து இந்த நாட்டிலிருந்து அழிந்து போனதாக கூறப்படும் குள்ள மனித இனம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள் என்பது குரங்குகள் போன்று கைகளில் நடந்து செல்ல கூடிய மிருக முகத்தை கொண்ட ஒரு உயிரினமாகும்.
அதற்கு நீண்ட நகங்களும் காணப்படும். எனினும் இலங்கையில் அவதானிக்கப்பட்டதாக கூறப்படும் குள்ள மனிதர்களுக்கு அவ்வாறான ஒன்றும் இல்லை என விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குள்ள மனிதர்கள் தொடர்பில் பலர் கருத்து வெளியிட்ட போதிலும் அவர்களை சரியாக பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை என ஆதிவாசி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குள்ள மனிதர்கள் என்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி சட்டவிரோத கும்பல் ஒன்று செயற்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இவ்வாறான கட்டுக்கதைகள் அரங்கேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார். கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் 25 பேர் அமெரிக்காவில் தாதியாக பயணியாற்றுவதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர்.
இலங்கை இளைஞர் யுவதிகள், அமெரிக்காவில் தாதி சேவை பணி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அந்நாட்டு நிறுவனத்துடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பெண் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.
American company, Michigan-based Karma Services நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 3000 பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது.
அமெரிக்காவில் தாதியாக பணியாற்றுவதற்கு, இலங்கையில் தாதியாக 4 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்று தற்போதும் பணியில் உள்ளவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
தாதி சேவை தொடர்பில் பட்டம் அல்லது 4 வருட டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். IELTS பரீட்சை அமெரிக்க தரத்தில் சித்தி அடைந்திருக்க வேண்டும். 45 வயதிற்கு குறைந்தவர்களுக்கு இந்த தொழிலுக்காக விண்ணப்பிக்க முடியும்.
அமெரிக்காவில் தாதி பணியில் இணையும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மாதம் 5000 அமெரிக்க டொலர் அடிப்படை சம்பளம் கிடைப்பதோடு, குடும்ப உறுப்பினர்களையும் அந்த நாட்டிற்கு அழைக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
வவுனியாவில் கடந்தமாதம் 16 ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து வவுனியா கண்டி வீதியில், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றிருந்தது.
இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
விபத்தில் வவுனியாவை சேர்ந்த மு.வசந்தகுமார் என்ற 22 வயது இளைஞனே மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் அடியாட்களுடன் சென்று குடும்பஸ்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் வவுனியா திருநாவற்குளத்தில் இன்று (09.03) இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்கிய நபர் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான குடும்பஸ்தர் இச்சம்பவம் பற்றி தெரிவிக்கையில், வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரம் செய்து வந்த நிலையில் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டு வியாபார நிலையத்தையும் மூடிவிட்டேன்.
இருக்கும் கடன்களை சிறிது சிறிதாக செலுத்தி வரும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த நபருக்கு வட்டி கொடுக்க முடியாத நிலையில் இன்று அடியாட்களுடன் எனது வீட்டுக்கு வந்து வட்டிக்கு கடன் கொடுத்த நபர் பணத்தை உடனடியாக தருமாறு மிரட்டிய நிலையில் திடீரென அவர்கள் என் மீது தாக்குதல் நடத்தினர் என தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
வாழ்க்கையில் நமக்கு பல தடைக்கற்கள் வந்தாலும் நம் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, கடின உழைப்பு தொடரும் வரை நமது வாழ்க்கையில் வெற்றிப்படிகளும் நீண்டு கொண்டே செல்லும் என்பதற்கு நிர்மலா என்ற தமிழ்பெண் உதாரணம்.
தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா. தமிழ் மீடியத்தில் படித்துள்ள நிர்மலா, chemical Engineering பட்டப்படிப்பை சென்னையில் படித்து முடித்தார்.
கிராம சூழலில் வளர்ந்தவர் என்பதால் ஆங்கிலம் தெரிந்தாலும் அதனை பிறரிடம் பேசுவற்கு சற்று தயக்கம், பெண் பிள்ளை என்றால் தலைகுனிந்து நடக்கவேண்டும் என்ற பெற்றோரிடன் கட்டுப்பாடு, இசை,பாடல், நடனம் என்று பல்வேறு கலைகளில் விருப்பம் இருந்தாலும் அதில் ஆர்வம் காட்ட இயலாது நிலை என்று பல்வேறு கட்டுப்பாடுகளை தனது வாழ்க்கையில் சந்தித்தவர்.
ஆனால், எவ்வளவு தடைகள் வந்தாலும் நாம் சாதிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிர்மலாவின் மனதிற்கு அணைய சுடராய் இருந்தது.
இளங்கலை முடித்ததும் தனக்கு திருமணம் செய்துவிட்டால் படிக்க முடியாது என்று எண்ண முதுகலை படிப்புக்கு விண்ணப்பித்து, அந்த படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார்.
காதல் திருமணம் செய்துகொண்ட தமிழகத்தில் வசித்து வந்த இருக்கு பிறந்த முதல் குழந்தை இறந்துவிட சோகத்தைல் இருந்த இவர், தமிழகத்தில் இருந்து லண்டன் சென்றார்.
புத்தக வாசிப்பு ஒரு புறம், இணைய தன வாசிப்பு ஒரு புறம் என் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார். முதலில் மெக்கானிக்கல் துறை, அடுத்து சாப்ட்வேர், நிலாச்சாரல் இணையதளம் என்று அவருடைய பயணம் வேகமெடுத்தது.
11 புத்தகங்களை எழுதியிருக்கும் நிர்மலா, 300 க்கும மேற்பட்ட புத்தகங்களை அயல்நாட்டு நூலகங்களுக்கு டிஜிட்டலைஸ் செய்து கொடுத்திருக்கிறார். நிலாச்சாரல் இணையதளம் மூலம் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தற்போது, ஒரு சாப்ட்வேர் அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவருடைய அலுவலகத்தில் பல்வேறு மொழிகளை பேசுபவர்கள் பணியாற்றுகிறார்கள், அவர்களை தனக்கே உரிய பாணியில் மிகவும் தன்னம்பிக்கையுடன் நிர்வகிக்கிறார் நிர்மலா.
இந்தப் பெண்ணை பார்ப்பவர்கள் உலகிலேயே நீங்கள்தான் பலசாலியான பெண் என வியந்து பாராட்டுகிறார்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை சுமப்பதை பார்த்திருக்கிறோம், அப்படியிருக்க மென்மையான ஒரு பெண், அதுவும் சில மாதங்கள் முன்புதான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண், தன் கணவரை தோளிலும் வயிற்றிலும் முதுகிலும் சுமக்கிறார் என்பது ஆச்சரியம்தானே? நியூயார்க்கைச் சேர்ந்த Virginia Tuells(38)தான் அந்த ஆச்சரிய மங்கை, அவர் சுமக்கும் காதல் கணவர் Giovanni Perez (39).
சர்க்கஸ் ஒன்றில் இந்த அரிய நிகழ்வை நிகழ்த்திக் காட்டும் Virginia, வழக்கமான சர்க்கஸ் நிகழ்வுகளுக்கு நடுவே, தாங்கள் வித்தியாசமான ஒன்றை பார்வையாளர்களுக்கு செய்து காட்ட முடிவெடுத்ததாக தெரிவிக்கிறார்.
Virginiaவின் ஒற்றைத் தொடையில் தன் கையை மட்டும் ஊன்றி அவருக்கு இணையாக நேர் கோட்டில் Perez நிற்க, கூட்டம் அமைதியாகிறது. அடுத்து தன் தோளிலும், வயிற்றிலும், முதுகிலும் தன் கணவரை தாங்கி நிற்கும் Virginiaவை மூச்சு விட மறந்து பார்க்கும் கூட்டம், காட்சி முடிந்ததும் பலத்த மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது.
காட்சி முடிந்ததும், Virginiaவுடனும் அவரது கணவருடனும் போட்டோ எடுத்துக் கொள்ள முண்டியடிக்கிறது ஒரு கூட்டம்.
தனது தொழிலில் தன்னைத்தாங்கும் மனைவிக்காக எதையும் செய்கிறார் Perez. குழந்தையை கவனித்துக் கொள்வதானாலும் சரி, அதற்கு உணவூட்டுவதானாலும் சரி, முகம் கோணாமல் மகிழ்ச்சியுடன் எதையும் செய்யும் Perez, அவள் எவ்வளவு கஷ்டப்படுகிறாள், சில நேரங்களில் அவளுக்கு களைப்பாக இருக்கும், உடல் வலிக்கும், அதனால் அவளுக்காக எந்த வேலையையும் செய்வது எனக்கு மகிழ்ச்சிதான் என்கிறார் அவர்.
தமிழகத்தில் உள்ள தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உடல் கருகி இடத்திலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பின்னால் அமர்ந்திருந்தவர் சுதாரித்து கொண்டு இறங்கி விட்டார். ஆனால் வாகனத்தை ஓட்டி சென்றவர் தீயில் சிக்கி இருசக்கர வாகனத்துடன் அவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த அவருடன் வந்திருந்த நண்பர் அதிர்ச்சிக்குள்ளானார். அவர் பிரம்மை பிடித்தது போல் யாரிடமும் பேசாமல் சாலையில் ஓரத்தில் அமர்ந்து கொண்டார். இந்தத் தீவிபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தாம்பரம் மற்றும் மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
ஆனால் இருசக்கரவாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மேலும் உடன் வந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் தகவல்கள் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. பொலிசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.