இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது : நடிகர் விவேக் பெருமிதம்!!

நடிகர் விவேக் பெருமிதம்

உலகில் கடைசி இலங்கை தமிழன் இருக்கும் வரையிலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் ஏற்பாட்டில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது விவேகானந்தரின் நூல் தொகுதியொன்றும் நடிகருக்கு சுவாமிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம்!!

நால்வர் விபத்தில் படுகாயம்

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகுபுக்பொல பகுதியில் நேற்று (11.03) மாலை இடம்பெற்ற விபத்தில் பெண்உட்பட நான்குபேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா தாண்டிகுளம் பகுதியிலிருந்து விமான நிலையம் நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் வவுனியாவின் எல்லைப் பகுதியும் அனுராதபுரம் மாவட்டத்தின் மகாகுபுக்பொல பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் பயணித்துகொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கயஸ் வாகனத்தில் தாண்டிகுளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்திருந்த நிலையில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சிலிருந்து வந்திருந்த இளைஞரை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப சென்ற நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மதவாச்சி போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடு ஒன்றில் சித்திரவதைகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள் : கலக்கத்தில் உறவினர்கள்!!

சித்திரவதைகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள்

குவைத் நாட்டுக்கு பணிப் பெண்களாக சென்று அங்கு பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான 28 28 இலங்கை பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை UL 230 ரக விமானம் மூலம் குறித்த இலங்கை பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பணிப் பெண்களாக சென்ற நிலையில் பல்வேறு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு அவர்கள் முகங்கொடுத்துள்ளனர். நாடு திரும்பிய பெண்களின் கைகள், கால்கள் மற்றும் தலையில் பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காயங்கள் உள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பெரும்பாலானோருக்கு உணவு மற்றும் சம்பளம் கிடைக்காத நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வீடு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

157 பேர் பலியான விமான விபத்தில் 2 இந்தியப் பெண்கள் பரிதாபமாக பலி!!

157 பேரை பலிவாங்கிய விமான விபத்து

எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்துபோன 157 பேரில் 2 இந்தியர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிழந்துள்ள நிலையில், தற்போதைக்கு 2 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வைத்யா பனகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அனகேஷ், நுகவரப்பு மனிஷா மற்றும் ஷிகா கார்க் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஷிகா கார்க், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகர். நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார்.

நுகவராப்பு மனிஷா, ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிழந்துள்ள நிலையில், தற்போதைக்கு 2 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

People walk at the scene of the Ethiopian Airlines Flight ET 302 plane crash, near the town of Bishoftu, southeast of Addis Ababa, Ethiopia March 10, 2019. REUTERS/Tiksa Negeri

157 பேரை பலிவாங்கிய விமான விபத்து : முதன் முறையாக தந்தையாகும் இளைஞரும் பலியான சோகம்!!

157 பேரை பலிவாங்கிய விமான விபத்து

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை பலிவாங்கிய விமான விபத்தில் பலியான இளைஞர் ஒருவர் அடுத்த ஒரு மாதத்தில் தந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஒஸ்திரியாவின் வியன்னா பகுதியை சேர்ந்த நண்பர்கள் மூவர் ஒன்றாக மருத்துவம் படித்து தற்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த மூவரும் சுற்றுலா வந்த இடத்தில் அடிஸ் அபாபாவில் நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்றும், அடுத்த 30 நாட்களில் அவர் பிள்ளை பெறவிருப்பதும் தெரியவந்துள்ளது. முதன் முறையாக தாம் தந்தையாக இருப்பது தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியுடனும் பல கனவுகளுடனும் இருந்த அந்த இளைஞர் விமான விபத்தில் கொல்லப்பட்டது அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

ஒஸ்திரியாவை சேர்ந்த ஆர்மின் எஸ். (31), வொல்ப்காங் இ. (30) மற்றும் கிறிஸ்டோப் எஸ். (31) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள்.மூவருமே வியன்னாவில் மருத்துவம் முடித்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஆர்மின் என்பவர் லின்ஸ் நகரில் உள்ள துறவியர்கள் நடத்தும் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியில் சேர்ந்துள்ளார். இவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அடுத்த 30 நாட்களில் ஆர்மின் முதன் முறையாக தந்தையாக உள்ளார்.

இந்த நிலையிலேயே தமது நெருங்கிய நண்பர்கள் இருவருடனும் இணைந்து மூன்று வர கால சுற்றுலாவுக்கு திட்டமிட்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் நேற்று நடந்த எத்தியோப்பிய விமான விபத்தில் இந்த நண்பர்கள் மூவரும் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்!!

சர்வதேச மகளிர் தினம்

வவுனியா மாவட்ட செயலகம் , மாவட்ட சமூக சேவை அலுவலகம், மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம், அரசார்பற்ற நிறுவனங்கள் என்பன மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து நடாத்துகின்ற,

“சிறப்பான உலகிற்கு சிறந்த ஒரு பெண்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின விழாவும் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று (11.03.2019) காலை 10.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையுடன் நகரசபை கலாச்சார மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தேசியக் கொடியினை வடக்கு மாகாண நிதி திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திருமதி நளாயினி இன்பராசா தேசிய ஏற்றிவைத்ததுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதன் பின்னர் விருத்தினர்களினால் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனை நிலையம் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் , வரவேற்பு நடனம் , அதிதிகள் உரைகள் , நடனம் , கௌரவிப்பு நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் முஹமட் ஹனீபா கலந்து கொண்டிருந்ததுடன்,

கௌரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண நிதி திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி நளாயினி இன்பராசா, வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம், வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் சுரேந்திரன் அன்னமலர் மற்றும்,

சிறப்பு விருந்தினர்களாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின உதவிப்பணிப்பாளர் கனோஜன், வெண்கல சட்டிக்குள பிரதேச செயலாளர் க.சிவகரன் மற்றும், வவுனியா மாவட்ட செயலக உயர்மட்ட உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்,

சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிசார், பொதுமக்கள், மாணவர்கள், வங்கி ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை!!

குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை

வவுனியா நகரசபைக்குட்பட்ட குளங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா வேப்பங்குளம் மற்றும் கறையான் குளம் என்பவற்றை நகரசபை தவிசாளர் இ.கௌதமன், நகரசபை உறுப்பினர் லரீப், தவிசாளரின் பிரத்தியேக செயலாளர் சஜீந்திரா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதன்போது குறித்த குளங்களில் குப்பைகளை வீசுவது கண்டறியப்பட்டுள்ளதுடன், குப்பைகளை வீசுவோரை அடையாளப்படுத்தும் சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த தவிசாளர் இனி வரும் நாட்களில் குளங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வவுனியா ஒமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதற்கு பாடசாலை, ஆலயம் உட்பட ஆறு அமைப்புக்கள் சம்மதம்!!

ஒமந்தையில் மதுபான நிலையம்

ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகாமையில் முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த காணியில் மதுபான நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று (11.03.2019) காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் முஹமட் ஹனீபா அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம், ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஒமந்தை கிராம மக்கள் இணைந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,
ஒமந்தையில் குறித்த இடத்தில் மதுபானசாலை அமைப்பதற்குரிய அனைத்து விதமான அனுமதியினையும் முறைப்படி உரிமையாளர் பெற்றுள்ளார். குறித்த பிரதேசத்தில் இருக்கக்கூடிய ஆறு பொது அமைப்புக்கள் சம்மதக்கடிதம் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக ஆலயங்கள், பாடசாலை , கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற ஆறு பொது அமைப்புகள் பிரதேச செயலாளர் ஊடக அரசாங்க அதிபருக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். குறித்த கடிதத்தில் மதுபான விற்பனை நிலையம் அமைவதில் தங்களுக்கு எவ்வித அட்சேபனையும் இல்லையென தெரிவித்துள்ளனர்.

ஆகவே மதுபான விற்பனை நிலைய உரிமையாளரிடம் முறைப்படியான சகல ஆவணங்களும் உள்ளமையினால் பிரதேச செயலாளரினாலும் அரசாங்க அதிபரினாலும் எதுவும் செய்ய முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆறு மாத காலமாக ஒமந்தை மதுபானசாலைக்கான அனுமதியினை தான் வழங்காமல் இருந்ததாகவும் பொது அமைப்புக்கள் கடிதங்கள் வழங்கியமையினால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என அரசாங்க அதிபர் தெரிவித்ததாக தெரிவித்தார்.

குறித்த மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதியினை இரத்து செய்யுமாறு கோரி கடந்த 09.03.2019 அன்று பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்சார பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்

வவுனியா மற்றும் மன்னார் பிரதேச இலங்கை மின்சார சபையின் பிரதம மின் பொறியியலாளரால் நுகர்வோருக்கான அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோரின் பாவனைக்குரிய மின் பட்டியில் தொகையை தாமதமின்றி செலுத்துமாறும், தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்மானி இலக்கங்கள் கிரமமாக பரிசீலிக்கப்பட்டு உரிய நேரத்தில் பணம் செலுத்தாதவர்களின் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என்பதை தெரிவிப்பதோடு,

நுகர்வோர் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து அசௌகரியங்களை குறைத்து கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது. மற்றும் மின்சார சபையால் நுகர்வோரால் அவதானிக்கப்பட வேண்டிய விடயங்களாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஓரவத்தை மின்சாரம் மூவத்தையாக மாற்றப்பட்டுள்ளது, ஆனால் மின்பட்டியல் மாற்றப்படவில்லை, மின்மானி பழுதடைந்துள்ள போதிலும் தொடர்ந்து இயங்குகின்றது, மின்மானி தவறான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது, மின் மானி மழைக்கு நனைகிறது, மின்மானியின் கண்ணாடி அழுக்கடைந்துள்ளது அல்லது மானி சூடேறுகிறது,

மானி உருகி உடைந்துள்ளது அல்லது எரிந்துள்ளது, கம்பிகள் பழுதடைந்துள்ளது, மின் மானியானது கட்டடத்தினுள் பொருத்தப்பட்டுள்ளது, மின் மானியின் பலகை கழன்றுள்ளது அல்லது உக்கியுள்ளது,

மின்மானியானது தவறாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டு மின்மானி வாசிப்பாளரால் வாய்மொழி மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பின் அதை கருத்தில் கொண்டு நுகர்வோர் மின்சார சபையின் காரியாலயத்திற்கு மின்சாரப் பட்டியலுடன் சென்று குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரப்படுவதுடன்,

அவ்வாறு செய்யாதவிடத்து நுகர்வோரின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்படும் என வவுனியாவின் பிரதம மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் யுவதியொருவரின் சடலம் மீட்பு!!

யுவதியொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்று ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மாவடிவேம்பு – 02, மணிவாசகர் வீதியை அண்டிய பகுதியை சேர்ந்த சிவானந்தம் ஜானு என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இவர் 3 வயது குழந்தையின் தாய் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை நோக்கி வந்த பெண் நடுவானில் மரணம்!!

பெண் நடுவானில் மரணம்

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி வருகைத்தந்த பெண் ஒருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்துள்ள பெண் மலேசிய பிரஜையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விமான நிலைய அதிகாரிகள் அவரின் சடலத்தை நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கை பரிமாற்றல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்பட்டு புதிய பெயர்களில் அழைக்கப்படும் வட்ஸ்அப்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பரிமாற்றல் குழு தெரிவித்துள்ளது.

GB WhatsApp, Yo WhatsApp, FM WhatsApp என்ற பெயர்களில் மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்படும் பதிப்புகளை பயன்படுத்தும் பயனாளர்களின் பழைய கணக்குகளை அனைத்தையும் முடக்குவதற்கு பேஸ்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அவ்வாறு பயன்படுத்துபவர்களின் தொலைபேசி இலக்கங்களை அடையாளம் கண்டு மீண்டும் வட்ஸ்அப் பயன்படுத்த முடியாத வகையில் முடக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பரிமாற்றல் குழுவின் தலைவர் யசிரு குருவிட்டகே மெதிவ் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பில் ஒருவர் ஒரு இலக்கத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் தரப்பினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள புதுப்பித்தலுக்கமைய தங்களால் தரவுகளை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வட்ஸ்அப் நிறுவன அதிகாரி, தன்னிடம் கூறியதாக யசிரு குருவிட்டகே மெதிவ் தெரிவித்துள்ளார். அவ்வாறான கணக்குகளை பயன்படுத்த வேண்டாம் என அவர் இலங்கை வட்ஸ்அப் பயனாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வவுனியா விபுலாநந்தா கல்லூரி பிரதி அதிபருக்கு இடமாற்றம் : முத்து ராதாகிருஷ்ணன்!!

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் நான்கு பிரதி அதிபர்கள் உள்ள நிலையில் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகள் இன்றும் அதிபர், மற்றும் பிரதி அதிபர் இன்றி இயங்கி வருகின்றன.

இந்நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் 4 பிரதி அதிபர்கள் காணப்படுகின்றபோதும் அவர்களை அதிபரோ, பிரதி அதிபரோ இல்லாத பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,

குறித்த விபுலானந்தா பாடசாலையில் 4 பிரதி அதிபர்கள் உள்ளனர். இங்கு மேலதிகமாக உள்ளதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதி அதிபர் மதிவாணன் அவர்களின் சம்மதத்துடன் அவருக்கு வீரபுரம் பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவரும் இடமாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். விரைவில் கடமைகளை பொறுப்பேற்பார் எனத் தெரிவித்தார்.

வவுனியா செட்டிகுளம் வேப்பன்குளம் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு!!

 

1994ம் ஆண்டிற்கு பின் நேரியகுளம் மற்றும் வேப்பன்குளம் மக்கள் நீண்ட காலமாக நிரந்தர வீடு இன்றி பல கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களின் நீண்டகால போராட்டத்திற்கு தீர்வாக நேற்று முன்தினம் (09.03.2019) காலை 9 மணியளவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக விட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இரு கிராமங்களிலும் மிக சிறப்பாக நடைபெற்றது

இந் நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், வீடமைப்பு அதிகாரசபை முகாமையாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், ம.தியாகராஜா, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பயனாளிகள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகரன் கேசவன் தெரிவு!!

 

வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று முன்தினம் (09.03.2019) காலை 10 மணிக்கு மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

புதிய நிர்வாகத் தெரிவில் சம்மேளனத்தின் 2019/2020 ஆம் ஆண்டிற்கான தலைவராக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் மாணவனுமான ஸ்ரீகரன் கேசவன் பிரதேச இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ் சம்மேளனத்தின் ஊடகப் பிரிவிற்கான செயலாளராக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இச் சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்திற்கான பிரதம அதிதிகளாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் வவுனியா நகர சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்ஷினி சஜீவன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுஹானி, வவுனியா இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ், வவுனியா பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன் ஆகியோருடன் சென் யூடி பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வான்வெளியில் வெடித்து சிதறிய விமானம் : 18 கனேடியர்கள் பலி : சோகத்தில் உறவினர்கள்!!

18 கனேடியர்கள் பலி

எத்தியோப்பிய விமான விபத்தில் 18 கனேடிய பிரஜைகள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் 18 கனேடியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

18 கனேடியர்களில் Scarborough பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது. அதில் தனது மகள் உயிரிழந்து விட்டதாக Scarborough பகுதியை சேர்ந்த பெண்ணின் தந்தை உறுதி செய்துள்ளார்.

தனது மகள் உயிரிழந்த செய்தி கேட்டு முழு குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாக கனேடிய ஊடம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தில் 35 நாடுகளை சேர்ந்த பயணிகள் பயணித்திருந்தமை உறுதியாகியுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.