பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளி பகுதியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று (08.03.2019) வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட அவரின் சகோதரி கூச்சலிட்டதையடுத்து பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, தூக்கில் தொங்கிய மாணவியின் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தனது வீட்டின் வெளிப்பகுதியில் கூரையின் தடியால் தனது தாயின் சேலையால் தூக்கில் தொங்கியவாறு இருந்ததாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகாவித்தியாலத்தில் உயர்தரத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்ற 18 வயதுடைய முத்துமணி பிரியவர்ஸினி என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மாணவியின் குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு, சம்பவ இடத்திற்க்கு கைரேகை பிரிவினர் மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த மாணவி சடலமாக மீட்கபட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
வீடொன்று திடீரென பற்றி எரிந்துள்ள சம்பவம் காலி – நியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் அவரது 3 வயது குழந்தையும் வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் தீப்பரவல் ஏற்படும் போது அந்த வீட்டில் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயினால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் அழிவடைந்துள்ள நிலையில், மின்சார கசிவினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக நிதியமைச்சு நடவடிக்கை எடுக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட போது, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், தனியார் துறைக்கு அநீதி ஏற்படாத வகையில் அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்கும் எனவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மானுடராய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தனித்துவமான பல திறமைகள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன. சரியான வாய்ப்புக்கள் இல்லாததன் காரணத்தினால் பலர் இலைமறை காய்களாக இருக்கின்றனர் அதே சமயம் கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டதால் பல்வேறு துறைகளிலும் சிகரம் தொட்ட பலரும் இன்றும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.
அப்படி ஒருவர்தான் ஈழத் திருநாட்டின் தமிழர் தலைநகரம் என்று சொல்லப்படும் திருகோணமலையை சேர்ந்த மதுமதி. இன்று தனக்கு கிடைத்த சிறிய வாய்ப்பினை பயன்படுத்தி தென்னிந்திய திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமாகின்றார்.
திருகோணமலையைச் சேர்ந்த மதுமதி, கொழும்பில் தனது உயர்தரக் கற்கைகளை கற்றுக்கொண்டிருந்த சமயத்தில் கிடைத்த ஊடக வாய்ப்பு ஒன்றின் மூலம் ஊடகத்துறைக்குள் பிரவேசித்தார்.
தனது அதீத ஆற்றலால் கிடைக்கப்பெற்ற வாய்ப்பின் மூலம் யார் இவர் என்ற குருந்திரைப்படம் ஒன்றில் நடித்ததுடன், தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி உச்சம் தொட்டவர்.
இன்று இந்த குருந்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளார். தற்போது இவர் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருவதுடன், விரைவில் அந்த இரண்டு படங்களும் திரைக்கு வரவுள்ளதாக தனியார் ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பெண்ணாய் பிறந்த எவருக்கும் பயம் இருக்கக் கூடாது, விடாமுயற்சியுடன் வாழ வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கலை இலக்கியச் செயற்பாடுகளை மையமாகக்கொண்டு இயங்கி வரும் தமிழ் மாமன்றம் வருடாந்தம் நடாத்தும் பண்பாட்டு பெருவிழாவான தமிழ் மாருதம், இவ் ஆண்டு ‘தொலைத்தவை, தொலைத்துக்கொண்டிருப்பவை, தொலைக்கப்போவன’ எனும் கருப்பொருளில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எனும் வன்னியின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி வன்னியின் பண்பாட்டுப் பெருவிழாவாக மார்ச் மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் காலை மாலை அமர்வுகளாக வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
இம்முறை தமிழகத்திலிருந்து பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியசுடர் த. இராமலிங்கம் அவர்களுடன், தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பல பாகங்களிலிருந்து கலந்து கொள்ளும் கலைஞர்கள் ஒன்றிணைவில், இலக்கியம், சமூகம், அரசியல் என பல்துறை சார்ந்த இயல் இசை நாடக நிகழ்வுகளை உள்ளடக்கி விழா சிறப்பாக அரக்கேறவுள்ளது.
மார்ச் 9ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வவுனியா விபுலானந்தர் சிலை முன்பிருந்து ஆரம்பமாகும் ஊர்வலம் வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தை வந்தடைந்து தமிழ் மாருதம் 2019 இன் முதல் நாள் காலை அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இவ் அமர்வில் சண்முகதாஸ் ஐங்கரன், கஜேந்திரன் குழுவினரின் நாதச்சங்கம் , தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் அவர்களின் ‘குன்றென நிமிர்ந்து நில்’ எனும் பொருளிலான சிறப்புரை, திருமதி ஜஸ்மினி சிவகுமாரன் அவர்களின் நெறியாள்கையில் முல்லைத்தீவு வற்றாப்பளை மகாவித்தியாலயத்தைச்சேர்ந்த அன்ரன் ஜெகன் ஜனார்த்தனனின் தனி நடனம் ,
செல்வி கிருபனா லக்ஷ்மிகாந்தன் அவர்களின் நெறியாள்கையின் கீழ் முல்லைத்தீவு முத்து ஐயன் கட்டு வலதுகரை மகா வித்தியாலய மாணவர்களின் கிராமியப்பாடல், ஆகிய நிகழ்வுகளுடன் முத்து ஐயன் கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் திரு சி.நாகேந்திரராசா அவர்களின் தலைமையில், ‘ஒழுக்க மீறல்கள்-விழுமிய பிறழ்வுகளுக்காக குற்றவாளிக்கூண்டுகளில் ஏற்றப்படும் மாணவர் சமூகம் தலைகுனிய வேண்டியமைக்கு முதன்மைக்காரணம் எது?’ என ஆராயும் விவாத அரங்கும் நடைபெற உள்ளது.
இவ் விவாத அரங்கில் ‘சமூக வலைத்தளங்களில் புகுந்து கொண்ட கற்போன்!’ என தி.திவானிகா , செ.சுஜின்நிலாநிதன், இ.கவிப்பிரியா ஆகியோரும், ‘சட்டக்கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும் கண்டிப்பான கற்பிப்போன்!’ என சா.சர்மிளா , சி.சிலோஜன், ம.வேஜின்கனிலா ஆகியோரும் விவாதிக்கவுள்ளனர்.
அத்துடன் வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் நடாத்தப்பட்ட ‘வன்னியின் வாசத்சமர் 2018’ எனும் விவாதப்போட்டியின் வெற்றியாளர் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் முதல் நாள் மாலை அமர்வில் ‘முறைப்புக்கு மூப்பிளமை இல” எனும் பொருளில் அமைந்த வில்லுப்பாட்டு , திருமதி வி. சசிரேகா அவர்களின் நெறியாள்கையில் வவுனியா திருஞானசம்மந்தர் வித்தியாலய மாணவர்களின் ‘மண்வாசம்’ எனும் கிராமிய நடன நிகழ்வு,
நா.செந்தூர்ச்செல்வன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவர்களின் ‘ஈழக்கோன்’ புதிய ஆடலரங்கு , கலைநிலா கலையகம் வழங்கும் ‘கரும்புறாக்கள்’ நாடகம் ஆகிய நிகழ்வுகளுடன் சிறப்பு அரங்காய் சமூக ஆர்வலர் பொ.ந.சிங்கம் அவர்களை சபாநாயகராகவும், தமிழ் மாமன்றத்தின் உப தலைவர் ஜெ.கோபிநாத் அவர்களை அவைத்தலைவராக் கொண்ட பாரளுமன்ற அமர்வு நடைபெற இருக்கிறது.
இவ் அமர்வில் ‘இவ் அவை கடந்த ஒரு தசாப்த காலத்தில் இனப்பிரச்சனைக்குரிய தீர்வுகளை தவறவிட்ட தமிழ்த்தலைமைகளை கண்டிக்கிறது’ எனும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவிருக்கிறது.
இவ் அமர்வில், அரச தரப்பில் ஜெரா , ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ, சி.மேகலாதரன் ஆகியோரும், எதிர்த் தரப்பில் கு.புரந்தரன் , பா.ரஜீவன் , மெ.சாருஜன் ஆகியோரும் அங்கத்துவம் வகிக்க உள்ளனர்.
இரண்டாம் நாள் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வு 9 மணிக்கு ஆரம்பமாகும். திருமதி ம.கனகரத்தினம் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா வாத்திய கலாலய மாணவர்கள் வழங்கும் பல்லிய வாத்திய நிகழ்வு, திருமதி புவனரூபி குகதாசன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா பரதநர்த்தனாலய மாணவர்களின் ‘கிராமிய சங்கமம்’ எனும் நடன நிகழ்வு,
பொ. சத்தியநாதன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா கல்வியற்கல்லூரி மாணவர்களின் ‘ஏகலைவன்’ எனும் புத்தாக்க நாடகம் , திரு.விஸ்ணுராஜ் விஜயகுமார் அவர்களின் நெறியாள்கையின் கீழ் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் ‘இராவணேசன்’ எனும் கூத்து ஆகிய நிகழ்வுகளுடன் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் அவர்களின் தலைமையில் ‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறிலும் – தமிழினத்தின் பீடு’ எது என ஆராய இருக்கும் சுழலும் சொற்போர் களம் காண இருக்கிறது.
இப் போரில் ‘ஊழி கடந்தும் ஓய்ந்துபோகாத எம்குடி’ என கஜிதா வரதராசா, ‘ஆழி கடந்து துடிக்கும் தமிழக நட்பு’ என சுந்தரலிங்கம் செந்தூரன், ‘கூழ் வளமாய் நிலைகொண்ட கல்வி’ என நிதர்சனா விதுர்சனன், ‘அரணென வாக்கிறைஞ்சும் அபிவிருத்தி நேசர்கள்’ என பாலகிருஸ்ணன் லோஜன், ‘தேய்ந்து போனாலும் மீந்து கிடக்கும் மதிநுட்பம்’ என கிறிஸ்ரீனா இராமசாமி, ‘சாம்பர் மீதினில் மீண்டெழும் இளைஞர் படை’ என குமாரகுலசிங்கம் சங்கீதன் ஆகியோர் தம் சொல் கொண்டு நம் நிலைமை சொல்லி சூடான கணைகள் கொண்டு களமாடவிருக்கிருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் நிறைவரங்கில் பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் அவர்களின் தலைமையில் ‘தனது வீழ்ச்சியால் நமது இரக்கத்தை பெரிதும் வென்றவர்’ என்ற தலைப்பிலான இலக்கியப்பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.
இப் பட்டிமன்றத்தில் ‘தசரதனே!’ என ஜெ.திருவரங்கன் , தெ.துர்க்காயினி ஆகியோரும், ‘வாலியே!’ என சி.துஷாரன் த.திருமாறன் ஆகியோரும், ‘இராவணனே !’ என சி.கிருபானந்தகுமாரன், ஜெசிதா ஆனந்தமூர்த்தி ஆகியோரும் பேசவுள்ளனர்.
தொடர்ந்து நானாட்டான் கார்மேல் அன்னை கலாமன்றம் வழங்கும் ‘உயிரையுமீந்தான் பாரிவள்ளல்’ எனும் கூத்து இடம் பெறவுள்ளது.
தமிழ் மாருதம் 2019 இன் நிறைவு நிகழ்வாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கவிஞர் ச.முகுந்தன் அவர்களின் தலைமையில் ‘ஊரிழந்து போதலின் துயரப்படிமங்கள்’ எனும் நம் துயரம் சொல்லும் இயல்புநிலையை படம்போட்டுக்காட்டும் சிறப்புக் கவியரங்கம் இடம்பெறவுள்ளது.
இக் கவியரங்கில், ‘ஆதிக்குடிகளின் வீதிகளிலமரும் போதிமாதவன்’ என வி.விமலாதித்தன், ‘மணலாறள்ளித்தின்று மாங்குளங்கடக்கும் மகாவலி’ என பா.திலீபன், ‘வெடுக்குநாறி மலையுறையும் ஆதி சிவன்’ என எஸ்.தவபாலன், ‘தொழுதேத்தித் துணைபோகும் பணநாயகம்’ என ந.அகிலன், ‘உழுதலொழித்து உலகமயமாகிய உள்ளுர்ப்பொருண்மியம்’ என ச.கஜன், ‘கட்டறுத்துச்சிதறி வெட்டச்சுலபமான தேசியம்’ என செ.மதுரகன் ஆகியோர் கவி பாடவுள்ளனர். இவ் அனல்பறக்கும் கவியரங்கோடு வன்னியின் மாபெரும் பண்பாட்டுவிழா தமிழ்மாருதம் பெருமையுடன் நிறைவடையும்.
அத்துடன் இரு தினங்களும் இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களின் ஒன்றிணைவில் புத்தகக் கண்காட்சியும் , மலிவு விற்பனையும் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலக்கியம், சமகால சமூக அரசியல் என் பல்துறை சார்ந்து பேசவிருக்கின்ற, இவ் முத்தமிழ்ச் சங்கம நிகழ்வுக்கு ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கிறது தமிழ் மாமன்றம்.
‘தமிழால் வையகத்தலைமை கொள்வோம்’.
வவுனியா இளைஞர்களின் அயராத முயற்சியில் வவுனியாவில் வரலாறு படைக்கவுள்ள ‘தமிழ் மாருதம் 2019’ மாபெரும் வெற்றிபெற வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வவுனியாவில் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும், அரசாங்கம் குடும்ப பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இன்று (08.03.2019) காலை 10.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உலக பெண்கள் தினமான இன்று ‘துன்புறுத்தும் தனியார் நுண்கடன் கம்பனிகளை எதிர்த்து நில்’ என்ற தொனிப்பொருளில் உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து நுண்கடன்களையும் இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் பெண்களின் உடல், உள, சமூக பொருளாதார கட்டமைப்புக்களை சீரழிக்கும் சாராய பார், கள்ளுக் கடைகளை இழுத்து மூடுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், மத்திய வங்கியே இன்னும் உறக்கமா? நுண்நிதிக்கடன் திட்டமா அல்லது இன அழிப்பு திட்டமா? கடன் கொடுத்து குடும்பத்தை குலைக்காதே, கடனே குடும்ப வன்முறைக்கு காரணம், பெண்களின் உடல் வியாபாரப் பொருளா? யுத்தத்தில் துப்பாக்கி நல்லாட்சியில் நுண் கடனா போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் ஒன்றியம், வவுனியா இளைஞர் முன்னணி, பசுமைத்தொழிலாளர் நலன்புரிச் சங்கம், வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் பல கிராமங்களிலிருந்து வருகை தந்திருந்த பெண்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதான பாதையில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்டமை மற்றும் நந்திக்கொடியினை காலால் மிதித்து அவமதித்தமை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிரிப்புத் தெரிவித்து, வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (08.03.2019) கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செட்டிக்குளம் விவேகானந்தர் முற்றத்திலிருந்து ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றை கையளித்தனர்.
பிரதேச சைவக் குருமார்கள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன் புளியங்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயார், தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவன் ஒருவர் புதன்கிழமை 5 மணியளவில் காணாமல் போனதாகவும், தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாகவும், வியாழக்கிழமை கனகராயன்குளம் பொலிசில் சிறுவனின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி கடத்தி வைத்திருப்பதாகவும், 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தொலைபேசி அழைப்பு வந்திருந்ததாகவும், கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியதாகவும் தாயார் பொலிஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
குறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசாரும் கவனம் செலுத்தி வந்தனர்.
தாயின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வவுனியா, ஓமந்தை பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சிறுவனை இன்று அதிகாலை புளியங்குளம் பொலிசார் மீட்டுள்ளதுடன்,
குறித்த சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயார், தாயின் சகோதரர் மற்றும் தாயின் சித்தப்பா ஆகியோரை பொலிசார் கைது செய்து, இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் கனகராயன்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் இக் கடத்தல் நாடகத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை விசாரணைகளின் பின்னர் மூவரையும் வவுனியா நீதமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகமும் சிறுவர் நன்னடத்தை திணைக்களமும் இணைந்து நடாத்திய பிள்ளை யாருடையது என்பதல்ல எவருடையதாயினும் அது பிள்ளை எனவே பாசத்துடன் பாதுகாப்போம் ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி இன்று (08.03.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகி காலை 9.30 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தினை சென்றடைந்தது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசியக் கொடியினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் முஹமட் ஹனீபா ஏற்றி வைத்ததுடன் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் வவுனியா மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி மாவட்ட செயலகத்திற்கு முன் பாதை வழியாக ஏ9 வீதியினை சென்றடைந்து ஏ9 வீதியூடாக புதிய பேருந்து நிலையத்தினை சென்றடைந்தது.
புதிய பேரூந்து நிலையத்தில் வரவேற்புரையினை உதவி மாவட்ட செயலாளர் கமலதாசன் வழங்கியதுடன் தலைமையுரையினை மேலதிக மாவட்ட செயலாளர் திரேஸ்குமார் வழங்கினார் .
அதன் பின்னர் சிறப்புச்சொற்பொழிவு, கருத்துரை, அரசாங்க அதிபர் உரை என பலரின் கருத்துரைகள் இடம்பெற்றதுடன் வவுனியா பிரதேச கலாசார பிரிவினரின் நாமே உளிகள் நெறியாள்கை நாடகம் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் பேரூந்துகளில் ஒட்டப்பட்டதுடன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1997 ஆண்டு மாணவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வறிய பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், பொலிஸார் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா, நெடுங்கேணி, பெரியமடு பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் எட்டு வயது சிறுவன் கனகராயன்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயாருடைய சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெரியமடு பகுதியில் வசித்து வந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார். தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினூடாக சென்றிருந்த நிலையில் சிறுவன் காணாமல் போயுள்ளதாக தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பொலிஸில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த சந்தர்ப்பத்தில் சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், 35 இலட்சம் ரூபா தந்தால் அவரை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.
காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் இந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளதுடன், கடத்தப்பட்ட சிறுவனும் இதன்போது தொலைபேசியில் பேசியுள்ளார். குறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்ட கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதனடிப்படையில் வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயாருடைய சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் இந்த கடத்தல் நாடகத்தின் பின்னணியில் சிறுவனின் தயாரும் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் முதன்முறையாக பெண் விமானிகளினால் செலுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.
முழுமையாக பெண் ஊழியர்களுடனான விமானம் கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது. அதற்கமைய சற்று முன்னர் UL 306 என்ற விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.
அரச ஊழியர்களுக்கு உள்ளக விமான சேவை வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அனைத்து அரச ஊழியர்களுக்கும் உள்ளக விமான பயண வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய அரச ஊழியர்கள் உள்ளக விமானம் மூலம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, சீகிரியா, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொகவந்தலாவையில் மாணவியொருவர் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டின்சின் தோட்டத்தை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி தூக்கில் தொங்குவதை அவரின் சகோதரி அவதானித்து அயலவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் மாணவியின் கால்கள் கட்டப்பட்டிருந்தமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாணவியின் சடலம் மரண விசாரணைகளுக்காக டிக்கோயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தாயின் சேலையில் குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த சம்பவமானது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹேவன் ஷெப்பர்ட்,என்ற பெண் இரு கால்களை இழந்த நிலையில் சாதித்து எப்படி என்பது குறித்து பிபிசி-யிடம்தெரிவித்துள்ளார். அவர் பேசியது, நான் சிறுவயதில் சில அத்திர்ச்சியூட்டும் சம்பவங்களிலிருந்து நான் மீண்டு வந்துள்ளேன்.
என்னுடைய தாயும் தந்தையும் பிரிந்து விட்டனர். அதனால்தற்கொலை செய்து கொள்ள தாய் முடிவு எடுத்தார். உடலில் குண்டுகளை கட்டி கொண்டு என்னையும் கையில் வைத்திருந்தார்.
அதில், என்னுடைய கால்களை சுற்றி அந்த குண்டுகள் வெடித்ததால் கால்களை இழந்தேன்
சிகிச்சையில் பிழைத்து கொண்ட நான், 20 மாதங்கள்ஆனா குழந்தையாக இருக்கும் போது தத்தெடுக்கப்பட்டேன்.
தத்தெடுத்தவர்கள் என்னை வியட்நாமில் கொண்டு சென்றனர்.வியட்நாமில் வாழ்ந்த காலம் குறித்து எனக்கு சரியாக நினைவு இல்லை. ஆனால், எனக்கு இப்போது 2 சகோரர்கள் மற்றும் 4 சகோதரிகள் இருக்கின்றனர். என்னை தத்தெடுத்த குடும்பம் என்னை மிகவும் நன்றாக கவனித்து கொண்டனர்.
பின் விளையாட்டில் ஆர்வம் கொண்டேன், முதலில் என்னை செயற்கை கால்கள் வைத்து கொண்டு நீந்த முடியாது என்று எல்லோரும் கூறினர். நம்பிக்கையுடன் தளராமல் முயற்சி செய்தேன்.
பின் இத்தாலி சென்று அமெரிக்க பாரா ஓலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவிற்காக போடப்பட்ட தொப்பியை அணியவும் வாய்ப்பு கிடைத்தது. என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இவர் அமெரிக்கா பாரா ஒலிம்பிக்குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் கொலை வழக்கில் அவர் பணியாற்றிய மருத்துவமனையை சேர்ந்த குற்றவியல் உளவியலாளர் கொலைக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
32 வயதான ப்ரீத்தி ரெட்டி சிட்னியில் உள்ள சிட்னியில் உள்ள மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன இவர் 3 நாட்கள் கழித்து அவரது காரிலேயே சடலமாக மீட்கப்பட்டார். சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்துகொள்ள செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர், ஞாயிற்றுக்கிழமை தனது முன்னால் காதலன் ஹர்ஸவர்தன் நாரதேவுடன் தங்கியிருந்துள்ளார்.
இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் ஹர்ஸவர்தனேவிடம் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில், மனம் உடைந்த அவர் தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்டார்.
ப்ரீத்தி மற்றும் ஹர்ஸவர்தன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இடையில் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தான், மாநாடு முடிந்து வீட்டுக்கு செல்ல இருந்த ப்ரீத்தியை வாட்ஸ் அப் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பி அழைத்து கொலை செய்துள்ளார் ஹர்ஸவர்தன்.
இது ஒரு திட்டமிட்ட கொலை என குற்றவியல் உளவியலாளர் தெரிவித்துள்ளார். அதாவது, தனது காதலியை விட்டு பிரிந்த பின்னர் ஹர்ஸவர்தனின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தன்னுடன் வாராத காதலி வேறு யாருடனும் செல்லக்கூடாது, தன்னை இத்தனை ஆண்டுகளாக காதலித்துவிட்டு தனக்கு கிடைக்காத அவள், வேறு யாருக்கும் கிடைக்ககூடாது.
இது ஒன்று மட்டுமே இந்த கொலைக்கான முக்கிய காரணம் ஆகும். இதனால் திட்டமிட்டு இந்த கொலையை நிகழ்த்தியுள்ளார் ஹர்ஸவர்தன் என உளவியிலாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ப்ரீத்திக்கு தனது முன்னாள் காதலனுடன் பிரிவு ஏற்பட்டதையடுத்து வேறு ஒரு காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இணைந்ததாக தங்கை நித்யா தெரிவித்துள்ளார். தற்போது, இருவரும் இறந்துவிட்ட நிலையில் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நடந்ததிலிருந்தே காது கேளாதவர் போல நடித்த கணவரின் செயல் 62 வருடங்களுக்கு பிறகு அம்பலமானதால் விவாகரத்து செய்ய அவருடைய மனைவி முடிவெடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பாரி டவ்சன் (84) என்பவர், தனக்கு வரப்போகிற மனைவி டோரத்தி (80) அதிகம் வாய் பேசும் சுபாவம் கொண்டவர் என்பதால், அதனை தவிர்க்க தனக்கு காது கேட்காது எனக்கூறியுள்ளார். அதனை நம்பி ஏற்றுக்கொண்ட டோரத்தி, கணவனுக்காக 2 ஆண்டுகள் சைகை மொழியை கற்றுக்கொண்டுள்ளார். அதனை வைத்தே கணவனிடம் பேசி வந்துள்ளார்.
ஆனால் நாளடைவில் தனக்கு கண் சரியாக தெரியவில்லை எனக்கூறி பாரி டவ்சன் சமாளித்துள்ளார். வயதான காரணத்தால் கண் தெரியாமல் போயிருக்கலாம் என அவருடைய குடும்பத்தாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த தம்பதியினருக்கு 6 வாரிகள், 13 பேரன், பேத்திகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரி, அங்கு இசைக்கேற்றவாறு பாடல் பாடியுள்ளார். அந்த வீடியோவினை அறக்கட்டளை நிர்வாகிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த டோரத்தி பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
62 வருடங்களாக கணவர் தன்னை ஏமாற்றியிருப்பதை நினைத்து விவாகரத்து கோரியுள்ளார். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது பாரி சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பாரி இயல்பிலே மிகவும் அமைதியான குணம் கொண்டவர். ஆனால் அவருடைய மனைவி எரிச்சலூட்டும் வகையில் பேசிக்கொண்டிருப்பார். இந்த விவகாரம் முன்பே தெரிந்திருந்தால் 60 வருடங்களுக்கு முன்பே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்திருப்பார்கள்.
ஆனால் என்னுடைய கட்சிக்காரர் அமைதியாக இருந்ததால் 62 வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கின்றனர். தன்னுடைய குடும்பத்திற்காக அவர் இந்த தியாகத்தை செய்திருக்கிறார் என கூறியுள்ளார்.