வவுனியா புதூர் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக 23 பேர் கைது : தீவிர விசாரணையில் குற்றத்தடுப்பு பிரிவினர்!!

தீவிர விசாரணையில் குற்றத்தடுப்பு பிரிவினர்

வவுனியா புதூர் பகுதியில் ஆயுதப் பையை கைவிட்டுச் சென்ற விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இதுவரை 23 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்துடன் பலர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை மன்னாரில் வைத்து மட்டக்களப்பை சேர்ந்த வேந்தன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட அவரிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மேலும் இருவரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் இருந்து மதகுரு மற்றும் 5 சிங்களவர்களும் உள்ளடங்கியுள்ளதுடன் இவர்கள் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல் மற்றும் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

பாதாள உலக குழுக்களை அடிப்படையாக கொண்டு விடுதலைப் புலிகளினால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்களை மீட்டு அவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதுடன் மன்னாரில் கைது செய்யப்பட்டவரே இதனை இயக்கி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் இலுப்பைக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரின் வீட்டில் இருந்து கிளைமோர் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட 23 பேரும் பல்வேறு இடங்களில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன் அவர்களுடன் தொடர்புபட்ட சிலர் இந்தியாவிற்கு தப்பியோடியுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கோபத்தால் வந்த வினை : மனைவியை மண்வெட்டியால் வெட்டி சிதைத்த கணவர்!!

கோபத்தால் வந்த வினை

தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கிய கணவர் குறித்த செய்தி வெலிகம – வல்லிவல பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் காலி கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்த நிலையில், வீட்டுக்கு பின்னால் இருந்த மண்வெட்டியால் மனைவியை கணவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர், அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வடக்கின் முதலாவது பௌத்த மாநாடு!!

பௌத்த மாநாடு

வட மாகாண பௌத்த மதருமாரின் முதலாவது மாநாடு, வவுனியாவில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதியன்று இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவனுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு தலைமை சங்க நாயக்கர் சியம்பலகஸ்வெவ விமலசார தேரருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இந்த மாநாட்டை நடத்துவமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மாநாட்டில், 50 பௌத்த மதகுருமார் வரை பங்கேற்கவுள்ளனர்.

வடக்கின் பௌத்த ஆலயங்களை புனரமைத்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பு போன்ற விடயங்கள் இதன்போது பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மகளின் கொடூர செயல் : வேதனையால் தவிக்கும் தாய்!!

வேதனையால் தவிக்கும் தாய்

கொழும்பை அண்மித்த பகுதியொன்றில் சொத்தினை பெற்றுக்கொள்வதற்காக தாயை கொலை செய்ய மகள் முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் மோதி தாயை கொலை செய்ய அவர் முயற்சித்துள்ளார்.

பாணந்துறையில் வீடு ஒன்றில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் மற்றும் அவரது மூத்த மகளுக்கு இடையில் வாக்குவாதம் தீவிரம் அடைந்துள்ளது. இதன்போது கோபமடைந்த மகள் மோட்டார் சைக்கிளை இயக்கி 57 வயதான தாயின் மீது ஏற்றியுள்ளார். விபத்தினால் படுகாயமடைந்த தாயார் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் மகள் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார். 36 வயதான மகள் பாணந்துறை பிரதேசத்தின் பிரபல சட்டத்தரணியிடம் பணியாற்றி வருகின்றார்.

“நீ உயிரிழக்கும் வரை மாத்திரமே இந்த வீட்டில் தங்கியிருக்கலாம் என்பதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள்” என கூறி விட்டு மகள் திடீரென தாய் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றியுள்ளார். பின்னர் தாயினை தலை பிடித்து அடித்துள்ளார் என காயமடைந்த தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு!!

கால்நடைகள் உயிரிழப்பு

முல்லைத்தீவில் அண்மை நாட்களாக பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, குமுழமுனை, தண்ணிமுறிப்பு, ஒதியமலை வரையான கிராமங்களை சேர்ந்த பண்ணையாளர்களே இவ்வாறு கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் கொக்குளாய் கடல்நீர் ஏரி மற்றும் கோட்டைக்கேணி, எரிஞ்சகாடு, நாயாற்று வெளி மற்றும் ஆண்டான்குளம், குமுழமுனை, தண்ணிமுறிப்பு, ஒதியமலை போன்ற பிரதேசங்களில் வயல் செய்கை காலங்களில் பட்டிகளில் அடைத்து வளர்க்கப்பட்ட மாடுகள் நெல் அறுவடையின் பின்னர் தற்பொழுது மேய்ச்சலுக்காக மேய்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டு மாடுகள், கிளாறி இனமாடுகள் என பண்ணையாளர்களினால் வளர்த்து வரப்பட்ட நூற்றுக்கணக்கிலான மாடுகள் ஒருவித நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கால்நடை வளர்ப்பினை தொழிலாக கொண்டு நாள்தோறும் பால் உற்பத்தியினை இலக்காக கொண்டு செயற்படும் அதிகளவான கால்நடை பண்ணையாளர்கள், மாடுகளின் உயிரிழப்பால் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பெண்கள் கும்பல்!!

பெண்கள் கும்பல்

இலங்கையில் பாரிய கொள்ளையில் பெண்கள் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளின் ATM அட்டைகளை திருடி பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கும் கும்பல்களில் பெண்களும் இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு பெண்களே தலைமை தாங்குகின்றனர். களுத்துறையில் பிரபல வர்த்தகரான சீனாவில் இருந்து கட்டட பொருட்கள் கொண்டு வரும் மொஹமட் ருகஷி மொஹமட் என்பவரின் ATM அட்டை திருடப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி 12 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த கொள்ளை கும்பல் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை ATM அட்டைகளுக்காக பணப்பைகளை திருடும் நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வங்கிகளின் தகவல் மற்றும் பாதுகாப்பு கமரா கட்டமைப்பின் தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிபதி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் நள்ளிரவில் நடந்த ஆபாச விருந்து : நடிகை உட்பட பல பெண்கள் கைது!!

நள்ளிரவில் நடந்த ஆபாச விருந்து

மாத்தறையில் நடத்தப்பட்ட ஆபாச விருந்தில் கலந்து கொண்ட நடிகை உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் நண்பர்களுக்கு இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் நடிகை ஒருவர் உட்பட 17 இளைஞர், யுவதிகள் மாத்தறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விருந்தில் கொக்கொய்ன் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய குழுவினரே மாத்தறை ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி கொண்ட இந்த குழுவினர் மிரிஸ்ஸ ஹோட்டலில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரவு முழுவதும் இடம்பெற்ற இந்த விருந்தில் வெளிநாட்டவர்கள் உட்பட் 1500 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. இவர்களில் ஓய்வு பெறுவதற்காக வெளியில் வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கொக்கொய்ன் போதைப்பொருளுடன் போதை மாத்திரை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் நடிகை உட்பட இளம் பெண்கள் போதையில் அரைநிர்வாணமாக இருந்தார்கள் என குறிப்பிடப்படுகின்றது. மாத்தறை, கொழும்பு, பாணந்துறை, கெசெல்வத்தை, ஜா-எல, மாபொல மற்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரகள் இன்றைய தினம் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

திருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம் : கத்தோலிக்கர் என்ற வகையில் வெட்கித் தலைகுனிகிறோம்!!

திருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்

சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அதிர்ச்சியையும், கவலை மற்றும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது,

எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம். தமது சிவராத்திரி விழாவை அனுஷ்டிக்கும் தருணத்தில் நடந்த இத்தகாத நிகழ்வினால் மனமுடைந்து காணப்படும் இந்து மத சகோதரர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். எல்லா மதங்களையும் மதத்தவர்களையும் அன்பு செய்ய வேண்டும் மதிக்கவேண்டும் என்றுதான் கத்தோலிக்க திரு அவை எமக்கு போதிக்கின்றது.

இந்நிலையில் இச்செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது, தமிழர்களாகிய நாம் மத வேறுபாடுகளின்றி சகோதரத்துவத்தில் வளர வேண்டியது மிகவும் இன்றியமையாததாக இருக்கும் இந்நிலையில் இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும் நடைபெற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்யவும் சம்பந்தப்படடவர்கள் முன்வரவேண்டும் என வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

இயேசுவின் வாழ்வாலும் போதனையாலும் நாம் பெற்றுக்கொண்ட அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், குழுமவாழ்வு ஆகிய எமது கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை நாம் இழந்துவிடாமல் பாதுகாப்போம். இப்படியான நிகழ்வுகளால் எமது கத்தோலிக்க மதத்தின் பரிசுத்த தனத்துக்கு ஏற்படும் களங்கங்களுக்காக நாம் மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் மதங்களுக்கிடையே அவ்வப்போது ஏதாவது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் மூலமாக அவற்றை தீர்த்து வைக்க முயற்சி செய்ய வேண்டுமேயொழிய வன்முறைகளிலும் அடாவடித்தனங்களிலும் ஈடுபடவே கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் குள்ள மனிதர்கள் நடமாட்டம் : பெண்ணொருவருக்கு நடந்துள்ள விபரீதம்!!

குள்ள மனிதர்கள்

அநுராதபுரம் – மஹவிலச்சிய மற்றும் தந்திரிமலை பகுதியில் இரண்டு அடி உயரமான மர்மமான குள்ள மனிதர்களது நடமாட்டங்கள் காணப்படுவதாக நேரில் கண்ட அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த குள்ள மனிதர்கள் நேற்றிரவு நடமாடியுள்ளதாகவும், இதன்போது பெண்ணொருவருடைய கையை கீறி காயப்படுத்தி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தந்திரிமலை, மஹசியபலாகஸ்வெவ பகுதியில் மர்ம மனிதரது நடமாட்டத்தை நேரில் கண்ட சிலர் தந்திரிமலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட போதும் அவ்வாறு எந்த நடமாட்டத்தையும் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் தந்திரிமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு வினவியபோது, மர்ம உருவத்திலான குள்ள மனிதர்கள் நடமாடுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தேடுதல் நடத்தியும் நாங்கள் எவரையும் காணவில்லை.

மக்கள் கூறும் விடயங்களைப் பார்க்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாமென தந்திரிமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

வேகத்தால் நேர்ந்த விபரீதம் : சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி : மூவர் கவலைக்கிடம்!!

கோரவிபத்து

மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மன்னாரில் இருந்து இன்று (04.03.2019) திங்கட்கிழமை காலை மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட இளைஞர் குழு யாழ்பாணம் நோக்கி பயணித்த வேளையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்த மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அதே நேரத்தில் பயணித்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் மர்மமான முறையில் மருத்துவமனையிலே இறந்து கிடந்த பெண் மருத்துவர்!!

இறந்து கிடந்த பெண் மருத்துவர்

திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் டெல்லியை சேர்ந்த பெண் மருத்துவர், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செயல்பட்டு வரும் மகாராஜா அகரசன் மருத்துவமனையில் 28 வயது பெண் மருத்துவர், இறந்த நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, நரம்பியல் துறையில் பணியாற்றிய அஸ்த் முஞ்சால் என்கிற பெண் மருத்துவர் இறந்து கிடப்பது தெரியவந்தது.

அங்கு சோதனை மேற்கொண்டபோது அவருடைய கைக்கு அருகில் ஒரு ஊசி மற்றும் 20 வினாடிகளுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்து பாட்டில் கிடந்துள்ளது. அதற்கு அருகில் கிடந்த செல்போன் மற்றும் பை ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

பின்னர் இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் முஞ்சால், மருத்துவராக பணிபுரிந்து வரும் உதித் துங்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை 12.15 மணி வரை வேலை செய்துகொண்டிருந்த முஞ்சால் 12.18 மணிக்கு தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். 4.30 மணியளவில் யாரோ ஒருவர் கேபினட் கதவை தட்டுகிறார். 5.15 மணியளவில் பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதை போல பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து இதுவரை வழக்கு பதிவு செய்யாத பொலிஸார், கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யூடியூப்பை பார்த்து தான் இப்படி செய்தேன் : அதிரவைத்த பெண்ணின் வாக்குமூலம்!!

அதிரவைத்த பெண்ணின் வாக்குமூலம்

தமிழகத்தின் கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட முயன்ற முதுகலை பட்டதாரி பெண் பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கடலூரை சேர்ந்த தமிழரசி மற்றும் குமுதா ஆகிய இருவரும் அங்குள்ள பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பகல், பெண்ணொருவர் குமுதா கடைக்கு வந்த நிலையில் அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து சில்லறை கேட்ட போது தன்னிடம் சில்லறை இல்லை என குமுதா கூறினார். பின்னர் அருகிலிருந்த தமிழரசியிடம் அப்பெண் சில்லறை கேட்ட நிலையில் அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த தமிழரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து அருகிலிருந்த பொலிசாருக்கு தமிழரசி தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு பொலிசார் வருவதற்குள் அப்பெண் மாயமானார். பின்னர் அங்கிருந்த பேருந்தில் அவர் உட்கார்ந்திருந்ததை பார்த்த பொலிசார் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது தனது பெயர் பரணிகுமாரி (35) என்றும் தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் யூடியூப் பார்த்து கள்ளநோட்டை அடித்ததாகவும் கூறினார். இதையடுத்து பரணிகுமாரியிடம் இருந்து 66 ஆயிரம் மதிப்புள்ள 2000 கள்ள நோட்டுகளை பொலிசார் கைப்பற்றினார்கள்.

இதோடு கள்ளநோட்டு அடிக்க அவர் பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின் பேப்பர், கத்தரிக்கோல் ஆகியவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணையில் பரணிகுமாரி எம்.பி.ஏ முதுகலை பட்டப்படிப்பு படித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனம் மோதி விபத்து!!

இராணுவ வாகனம் மோதி விபத்து

வவுனியாவில் வங்கிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனம் உருண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுவதியின் மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் மோட்டார் சைக்கிலுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள இலங்கை வங்கி தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இராணுவத்தினர் சிலர் சென்ற தமது வாகனத்தை நிறுத்திவிட்டு பணம் பெற்றுக்கொள்வதற்காகச் சென்றுள்ளனர்.

எனினும் பிரேக் வைக்கப்படவில்லை. இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் பள்ளத்தை நோக்கி திடீரென்று உருண்டு சென்று 25மீற்றருக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுவதியின் மோட்டார் சைக்கிலுடன் மோதி நின்றுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து திருக்கேதீஸ்வரத்துக்கு விசேட போக்குவரத்து சேவை!!

விசேட போக்குவரத்து சேவை

மகா சிவராத்திரியை முன்னிட்டு வவுனியாவிலிருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து பிரிவினரால் விசேட போக்குவரத்து சேவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இ.போ.ச பேரூந்துக்கள் , தனியார் பேரூந்துக்கள் 15 நிமிடத்திற்கு ஒரு சேவையினை வழங்கி வருகின்றன. இச் சேவைகள் நாளை (05.03.2019) காலை வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று வீட்டை விட்டு வெளியேறி பாலியல் தொழில் செய்த திருநங்கையின் இன்றைய நிலை!!

திருநங்கையின் இன்றைய நிலை

பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை ஒருவர் அதை கைவிட்டுவிட்டு சமூக சேவைகளில் ஈடுபட்ட பின்னர் தற்போது தலைமைச் செயலகத்தில் அரசு பணியில் ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மைசூரைச் சேர்ந்தவர் பாரிஷே கௌடா (28). திருநங்கையான இவர் தனது 13 வயதில் தனக்குள் நிகழ்ந்த உடல் ரீதியான மன ரீதியான மாற்றங்களால் தன்னைப் பெண்ணாக உணர்ந்தார். 17 வயது வரை குடும்பத்துடன் இருந்த பாரிஷே அதற்கு பின்னர் கொஞ்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். நீண்ட தனது பயணத்துக்குப் பின் பெங்களூரு வந்த பாரிஷேவுக்கு கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டது.

வாழ்க்கை நடத்துவற்கு, ஏதாவது வேலை செய்யவேண்டுமே என்ற கண்ணோட்டத்தில் பல இடங்களில் வேலை தேடினார். இவர் திருநங்கை என்பதால் வேலை கிடைக்கவில்லை. வேறுவழியின்றி மற்ற திருநங்கைகள் போலவே பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.

அதில் நிறைய பணம் சம்பாதித்தாலும் அதில் ஏற்பட்ட தொடர் மன உளைச்சல் காரணமாக பாலியல் தொழிலை கைவிட்டார். இதையடுத்து, பாலின சிறுபான்மையினருக்காக சேவையாற்றி வரும் ’பயணா’ என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.

8 ஆண்டுகளுக்கு மேலாக இதே பணியைச் செய்து வந்தார் பாரிஷே. இதனால் இவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரும் அங்கீகாரமும் கிடைத்தது.

இந்நிலையில், இவரது சேவையை அறிந்த கர்நாடக அமைச்சர் ஜெயமாலா, பாரிஷேவை நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன், கர்நாடக தலைமைச் செயலகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்ற வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் கர்நாடக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பாரிஷே பெற்றுள்ளார்.

சென்னை விமான நிலையத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை

இந்தியாவிலுள்ள சென்னை விமான நிலையத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பயணிகளை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தின் நுழைவாயிலில் கடுமையான சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், மோப்ப நாய்களும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திலுள்ள வெளிநாட்டு முனையங்களுக்குள் உறவினர்களை வழியனுப்ப வருவர்கள் வழமையாக அனுமதிக்கப்பட்டு வந்த போதிலும் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

அத்துடன், மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு அருகிலுள்ள விமான நிலையமான சென்னை விமான நிலையத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும் கொழும்பிலுள்ள விமான நிலையம் மற்றும் அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு மேற்கொள்ளப்படும் விமான சேவைகள் தொடர்பில் எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

மேலும் இந்தியா – பாக்கிஸ்தான் எல்லையிலும் பதற்ற நிலை தொடர்ந்து வருவதாகவும், இதனால் இந்தியாவில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில் இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.