வவுனியாவினை வந்தடைந்த கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு போராட்ட பேரணி!!

கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு போராட்ட பேரணி

தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கேப்பாப்புலவு பொதுமக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்ளும் நோக்குடன் 2019 மாசி மாதம் 27ம் திகதி முல்லைத்தீவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் வாகனப் பேரணியானது இன்று (01.03.2019) காலை 11.30 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்தது.

காணி போராட்டங்களில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு கோப்பாபுலவு மக்கள் , யாழ்ப்பாணம் வலி வடக்கு , மயிலிட்டி , பலாலி மக்களைப் போலவே தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மன்னார் சிலாவத்துரை மக்களினதும் பல வருடங்களாக சட்டத்தின் மூலம் நீதியை பெற்றுக்கொள்வதற்காக போராடும் பள்ளிமுனை மக்களினதும் காணி உரிமையும் கடற்படையினால் கையகப்படுத்தியுள்ள முள்ளிக்குளம், சம்பூர், பானம, அஸ்ரப் நகர் மக்களின் காணிகளை அம் மக்களுக்கே மீள கையளிக்குமாறு கோரியும் அரசின் மூலம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தெரிவித்து இவ் மக்கள் பேரணி இடம்பெறுகின்றது.

பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், மக்களுடைய காணிகள் இன்று வரை விடுவிக்கபடாமல் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஜனாதிபதி கடந்த வருடம் தெரிவித்திருந்தார் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்பதாக மக்களுடைய காணிகளை விடுவிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்று மூன்று மாதங்கள் கடந்து விட்டன. எனவே அரசாங்கம் எமது காணிகளை விடுவிக்க வேண்டுமென தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த 27ம் திகதி முல்லைத்தீவில் ஆரம்பித்த இவ் வாகனப்பேரணியானது கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஊடாக இன்று வவுனியாவை வந்தடைந்துள்ளமையுடன் நாளையதினம் கொழும்பை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயில் முன் பாய்ந்த மகன் : அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட தாய்!!

அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட தாய்

கடலூரில் மகன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை கேள்விப்பட்ட தாய் அதிர்ச்சியில் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காத்தவராயன் (45) – ராஜலட்சுமி (40) தம்பதியினர். இவர்களுடைய மகன் விக்னேஷ் (20), தனியார் கல்லுரியில் முதலாமாண்டு படித்து வந்திருக்கிறான்.

தேர்விற்காக தன்னுடைய தாயிடம் பணம் கேட்டுள்ளான். ராஜலட்சுமியும் ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் வாங்கி கணக்கில் போதிய பணமில்லாததால் ஆத்திரமடைந்த விக்னேஷ் வேகமாக வீட்டிற்கு வந்து தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பிய மகன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கேள்விப்பட்டு நீண்ட நேரம் கதறி அழுதுகொண்டிருந்த தாய், திடீரென வீட்டிற்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் பாடசாலைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மாணவர்கள் கைது!!

அட்டகாசம் செய்த மாணவர்கள் கைது

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்து பட்டாசு கொளுத்தி, அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 34 பாடசாலை மாணவர்களை தாம் இன்று கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் இந்த செயல் காரணமாக பாடசாலையில் உள்ள இரண்டு நுழைவு கதவுகள், சில வாகனங்கள் உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கல்கிஸ்சை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளில் உள்ள இரண்டு ஆண்கள் பாடசாலைகளின் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனங்களில் வந்த இந்த மாணவர்கள் பாடசாலைக்குள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர். பெண்கள் பாடசாலையின் அதிபர் செய்த முறைப்பாட்டை அடுத்து மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

பணிப்புறக்கணிப்பு போராட்டம்

வவுனியா நகரசபையின் அகில இலங்கை அரச பொது ஊழியர்கள் சங்கத்தின் சுகாதாரத் தொழிலாளர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகரின் அடக்குமுறைக்கு எதிராகவும் பக்கச்சார்பான முறையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்து இன்று காலை நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து நகரசபை தலைவருடன் கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைக்கப்பட்டு சாதகமான பதில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையில் நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகருக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அகில இலங்கை அரச பொது ஊழியர்கள் சங்கத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு தொடர்பாக புதிய அரச பொது ஊழியர் சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையினை பொது மக்களுக்கு இலகுவாகவும் கடமையாற்றுகின்ற தொழிலாளர்களுக்கும் இலகுவாக தான் இந்தவோரு நடவடிக்கையினை சுகாதார பரிசோதகர் முன்னெடுத்தது.

ஒரு வருடத்திற்கு மேலாக வவுனியா நகரசபையில் குப்பையேற்றும் இரு சக்கர தள்ளுவண்டி பாவனையின்றி காணப்படுகின்றது. அது தற்போது வெயிலும் மழையிலும் துருப்பிடித்து காணப்படுகின்றது. தள்ளுவண்டியினை பாவணைக்குட்படுத்துவது கிடையாது .

சுகாதார பரிசோதகர் தெரிவிக்கையில், ஒரு இருசக்கர குப்பையேற்றும் வண்டிக்கு இரு பெண், ஒரு ஆண் சுகாதார ஊழியர் கடமைக்குட்படுத்தப்பட்டு நகரில் இரண்டு ஒழுங்கை வழங்கப்பட்டு குறித்த ஒழுங்கையின் வாய்க்கால், புல்லுகள், குப்பைகளை சேகரிக்கவும் ஒரு நாள் முழுவதும் குறித்த இரு ஒழுங்கையும் தான் சுத்திகரிப்பு மேற்கொள்ள வேண்டும் .

வவுனியா நகரசபையில் 52 சுகாதார ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இரு ஒழுங்கைக்கு மூவர் படி பணியாற்றும் பட்சத்தில் நகரத்தின் குப்பைகளை அகற்றுவது இலகுவாக அமையும் என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தமை தவறா? ஒரு சில சுகாதார ஊழியர்கள் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பினை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

இலங்கையில் வட்ஸ்அப், வைபர் மூலமான உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றனவா?

வட்ஸ்அப், வைபர்

இலங்கையில் சகல விதமான தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் சகல தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாக வெளியான செய்தி போலியானது என, தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வட்ஸ்அப், வைபர், உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் புதிய தொலைத்தொடர்பு சட்டங்களுக்கமைய கண்காணிக்கப்படுவதாக செய்திகள் பரவுகின்றது.

இவ்வாறான போலித் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான எந்தவொரு கண்காணிப்பும், பதிவு செய்தலும் இடம்பெறுவதில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தனியார் பயணிகள் விமானமொன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹொங்கொங் நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு தரைறிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பயணிகள் பயணித்துள்ளனர்.

விமானத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை கருதி விமானத்தின் எரிபொருள் கடலுக்குள் திறந்து விடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள வெளிநாட்டு ஜோடி!!

விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள வெளிநாட்டு ஜோடி

தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இலங்கையில் புகைப்படம் எடுத்த போத்துகீசிய ஜோடி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். போத்துக்கல் நாட்டை சேர்ந்த ரகாயன் மற்றும் மிகூயேல் ஜோடியே இவ்வாறு விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் புகையிரதத்தில் பயணித்த போது பெண் வெளியிலும், ஆண் புகையிரதத்திற்குள்ளும் இருந்தவாறு முத்தமிட்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படமே விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த புகைப்படம் எடுக்கும் போது புகையிரதம் மிகவும் மெதுவான வேகத்தில் சென்றதாக போத்துக்கல் ஜோடி தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள கடைக்கு சாப்பிடச் சென்றவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி!!

கொழும்பிலுள்ள பிரபல உணவகம்

கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருதானையிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த சாப்பிட்டின் அடியில் முழு பல்லி ஒன்று இருந்தமையை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த உணவினை சாப்பிட்டவர்கள் பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவகத்தின் உரிமையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டுள்ளனர். எனினும் அவர் பொறுப்பற்ற வகையில் பதில் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்லியுடன் உணவு வழங்கிய உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர் சந்தை நிகழ்வு!!

மாணவர் சந்தை நிகழ்வு

வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவர் சந்தை நிகழ்வு நேற்று கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது. தரம் 2 இலிருந்து தரம் 5 வரையான மாணவர்கள் பாடசாலையில் மண்டபத்தில் ஆர்வத்துடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்களுக்கிடையில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், ஆளுமை தன்மையை மாணவர்களுக்கிடையில் வளர்க்கும் நோக்குடனான கல்வி நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இச்சந்தை நிகழ்வு நடைபெற்று  வருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

இச்சந்தை நிகழ்வை பார்வையிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் மாணவர்களின் சந்தை பொருட்களை ஆர்வமுடன் கொள்வனவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது.

ஒரு வாரத்தில் விபத்துக்களில் சிக்கி 18 பேர் பரிதாப மரணம்!!

18 பேர் பரிதாப மரணம்

நாட்டில் கடந்த 7 நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாகன விபத்துக்களில் 13 பேரும், ரயில் விபத்துக்களில் 5 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் இரண்டு சிறுமிகள் மற்றும் மூன்று யுவதிகள் உட்பட 7 பெண்களும், மூன்று சிறுவர்கள் மற்றும் நான்கு இளைஞர்கள் உட்பட 11 ஆண்களும் அடங்குகின்றனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்புகளிலிருந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் கைக்குண்டு மீட்பு!!

கைக்குண்டு மீட்பு

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியால வளாகத்தில் வெடிக்காத நிலையில் இருந்த கைகுண்டு ஒன்றை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதை பாடசாலை நிர்வாகம் அவதானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பொலிசார் கைக்குண்டினை அவதானித்ததுள்ளதுடன் அவ் இடத்தை பாதுகாப்பு பகுதியாக அறிவித்துள்ளனர். நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த கைகுண்டினை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாக பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறித்த பாடசாலையில் சுற்றுச் சுவர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து குறித்த கைக்குண்டு வந்திருக்கலாம் என பாடசாலை நிர்வாகத்தினால் சந்தேகம் வெளியிடப்படுகின்றது. இது தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

திருகோணமலை – இறக்கக்கண்டி பகுதியில் யானை தாக்கி ஒரு வயது பிள்ளையின் தந்தை நேற்று (28.02)மாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, இறக்ககண்டி நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த அப்துல் ஹஸன் றிஸ்வான் (29 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நேற்று வியாழக்கிழமை மாலை நான்கு மணியளவில் 51 வயதுடைய சாவுல் ஹமீட் உமர்தீன் என்பவருடன் குளிக்கச் சென்ற போது இருவரையும் யானை துரத்தியுள்ளது. பயத்தில் இருவரும் வெவ்வேறு பகுதிகளுக்கு ஓடியதாக உயிரிழந்த நபருடன் சென்ற சாவுல் ஹமீட் உமர்தீன் கூறியுள்ளார்.

இதன்போது, அப்துல் ஹஸன் றிஸ்வான் யானை தாக்கி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், அயலிலுள்ள வயல் காரர்களை அழைத்து யானையை விரட்டி விட்டு வீழ்ந்து கிடந்தவரை கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் நிலாவெளி பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே வரிசையில் அமர்ந்த அரசியல் எதிரிகள்!!

ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்

அரசியல் எதிரிகளாக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் நிகழ்வு ஒன்றில் ஒன்றாக கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குறித்த அனைவரும் ஒன்றாக கலந்துகொண்டிருந்தனர். கொழும்பு அரசியலில் அண்மை காலமாக ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையில், குறித்த நால்வரும் அரசியல் எதிரியானார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிகாவும் அண்மைக்காலமாக சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அதுபோல் மகிந்த ராஜபக்சவை சந்திரிகா கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் நிகழ்வில் அமர்ந்திருந்தனர். இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்விலும் குறித்த நால்வரும் ஒன்றாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து : நான்கு பேர் படுகாயம்!!

சொகுசு பேருந்து விபத்து

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 11.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எ-9 பிரதான வீதியில் தரித்து விடப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று சடுதியாக வீதியில் நுழைந்துள்ளது. இதனையடுத்து சொகுசு பேருந்தின் சாரதி பேருந்தை திருப்ப முயற்சித்த போது வீதியிலிருந்து விலகிய பேருந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளார். மேலும் ,பேருந்தின் சாரதி உள்ளட்ட 4 பேர் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை, படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்துதொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் போலி முகத்திரையை உடைத்த இம்ரான் கான் : மோடி நடத்திய சதி நடவடிக்கை அம்பலம்!!

மோடி நடத்திய சதி நடவடிக்கை அம்பலம்

இந்தியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் பின்னணியில் இந்திய பிரதமரின் தேர்தல் செயற்பாடுகளே அமைந்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானிய பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போது பிரதமர் இம்ரான் கான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் என்றும் பாகிஸ்தானுக்கு இருந்தது இல்லை. தேர்தல் வரும் சமயங்களில் இரு நாட்டு அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் தேவைகளுக்காக போர் பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். முன்னர் பாகிஸ்தான் பிரதமர் முஷாரப்பும் இதேபோன்ற நடைமுறையை கையாண்டார். இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி முயற்சி செய்கின்றார்.

போர் ஏற்படும் பதற்றமான சூழ்நிலையில் ஒரு நாட்டுத் தலைவர் இராணுவ உயர்மட்டத்தினரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். ஆனால் இந்தியப் பிரதமர் வாக்காளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் பிரதமர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்படவிருந்த பாரிய முறுகல் நிலை தணிந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் செயற்பாடு காரணமாக போர் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் அனைத்து ஆயத்த நடவடிக்கைகளிலும் இந்தியா தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தியாவின் எல்லையோரங்களிலுள்ள முக்கிய தளங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்திய இந்திய விமானங்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அதில் பரசூட் மூலம் தப்பித்துக் கொண்ட விங் கொமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைது செய்திருந்தனர். இந்திய விமானி சிறை பிடிக்கப்பட்டமை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. போர் ஏற்படுவதற்கான ஆரம்ப நிலையாக இது அமைந்திருந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட விமானியை நாளையதினம் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படும் அபாயம் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களின் மனதில் ஹீரோவான பாகிஸ்தான் பிரதமர்!!

பாகிஸ்தான் பிரதமர்

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளதற்கு இந்திய மக்கள் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.

அமைதியின் பேரில் விங் கமாண்டர் அபிநந்தனின் விடுதலை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் இம்ரான் கான் கூறியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆர்ப்பரித்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் இந்த முடிவுக்கு இந்திய மக்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் நன்றி தெரிவித்துள்ளனர், எங்கள் குடிமகனை விடுவிப்பதன் மூலம் நீங்கள் ஒரு ஹீரோ என நிரூபித்துவிட்டீர்கள் என டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அரசியல் தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.