வவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’!!

தமிழ் மாருதம் 2019

கலை இலக்கியச் செயற்பாடுகளை மையமாகக்கொண்டு இயங்கி வரும் தமிழ் மாமன்றம் வருடாந்தம் நடாத்தும் பண்பாட்டு பெருவிழாவான தமிழ் மாருதம், இவ் ஆண்டு ‘தொலைத்தவை, தொலைத்துக்கொண்டிருப்பவை, தொலைக்கப்போவன’ எனும் கருப்பொருளில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எனும் வன்னியின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி வன்னியின் பண்பாட்டுப் பெருவிழாவாக மார்ச் மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் காலை மாலை அமர்வுகளாக வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இம்முறை தமிழகத்திலிருந்து பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியசுடர் த. இராமலிங்கம் அவர்களுடன், தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பல பாகங்களிலிருந்து கலந்து கொள்ளும் கலைஞர்கள் ஒன்றிணைவில், இலக்கியம், சமூகம், அரசியல் என பல்துறை சார்ந்த இயல் இசை நாடக நிகழ்வுகளை உள்ளடக்கி விழா சிறப்பாக அரக்கேறவுள்ளது.

மார்ச் 9ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வவுனியா விபுலானந்தர் சிலை முன்பிருந்து ஆரம்பமாகும் ஊர்வலம் வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தை வந்தடைந்து தமிழ் மாருதம் 2019 இன் முதல் நாள் காலை அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இவ் அமர்வில் சண்முகதாஸ் ஐங்கரன், கஜேந்திரன் குழுவினரின் நாதச்சங்கம் , தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் அவர்களின் ‘குன்றென நிமிர்ந்து நில்’ எனும் பொருளிலான சிறப்புரை, திருமதி ஜஸ்மினி சிவகுமாரன் அவர்களின் நெறியாள்கையில் முல்லைத்தீவு வற்றாப்பளை மகாவித்தியாலயத்தைச்சேர்ந்த அன்ரன் ஜெகன் ஜனார்த்தனனின் தனி நடனம் ,

செல்வி கிருபனா லக்ஷ்மிகாந்தன் அவர்களின் நெறியாள்கையின் கீழ் முல்லைத்தீவு முத்து ஐயன் கட்டு வலதுகரை மகா வித்தியாலய மாணவர்களின் கிராமியப்பாடல், ஆகிய நிகழ்வுகளுடன் முத்து ஐயன் கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் திரு சி.நாகேந்திரராசா அவர்களின் தலைமையில், ‘ஒழுக்க மீறல்கள்-விழுமிய பிறழ்வுகளுக்காக குற்றவாளிக்கூண்டுகளில் ஏற்றப்படும் மாணவர் சமூகம் தலைகுனிய வேண்டியமைக்கு முதன்மைக்காரணம் எது?’ என ஆராயும் விவாத அரங்கும் நடைபெற உள்ளது.

இவ் விவாத அரங்கில் ‘சமூக வலைத்தளங்களில் புகுந்து கொண்ட கற்போன்!’ என தி.திவானிகா , செ.சுஜின்நிலாநிதன், இ.கவிப்பிரியா ஆகியோரும், ‘சட்டக்கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும் கண்டிப்பான கற்பிப்போன்!’ என சா.சர்மிளா , சி.சிலோஜன், ம.வேஜின்கனிலா ஆகியோரும் விவாதிக்கவுள்ளனர்.

அத்துடன் வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் நடாத்தப்பட்ட ‘வன்னியின் வாசத்சமர் 2018’ எனும் விவாதப்போட்டியின் வெற்றியாளர் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் முதல் நாள் மாலை அமர்வில் ‘முறைப்புக்கு மூப்பிளமை இல” எனும் பொருளில் அமைந்த வில்லுப்பாட்டு , திருமதி வி. சசிரேகா அவர்களின் நெறியாள்கையில் வவுனியா திருஞானசம்மந்தர் வித்தியாலய மாணவர்களின் ‘மண்வாசம்’ எனும் கிராமிய நடன நிகழ்வு,

நா.செந்தூர்ச்செல்வன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவர்களின் ‘ஈழக்கோன்’ புதிய ஆடலரங்கு , கலைநிலா கலையகம் வழங்கும் ‘கரும்புறாக்கள்’ நாடகம் ஆகிய நிகழ்வுகளுடன் சிறப்பு அரங்காய் சமூக ஆர்வலர் பொ.ந.சிங்கம் அவர்களை சபாநாயகராகவும், தமிழ் மாமன்றத்தின் உப தலைவர் ஜெ.கோபிநாத் அவர்களை அவைத்தலைவராக் கொண்ட பாரளுமன்ற அமர்வு நடைபெற இருக்கிறது.

இவ் அமர்வில் ‘இவ் அவை கடந்த ஒரு தசாப்த காலத்தில் இனப்பிரச்சனைக்குரிய தீர்வுகளை தவறவிட்ட தமிழ்த்தலைமைகளை கண்டிக்கிறது’ எனும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவிருக்கிறது.

இவ் அமர்வில், அரச தரப்பில் ஜெரா , ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ, சி.மேகலாதரன் ஆகியோரும், எதிர்த் தரப்பில் கு.புரந்தரன் , பா.ரஜீவன் , மெ.சாருஜன் ஆகியோரும் அங்கத்துவம் வகிக்க உள்ளனர்.

இரண்டாம் நாள் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வு 9 மணிக்கு ஆரம்பமாகும். திருமதி ம.கனகரத்தினம் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா வாத்திய கலாலய மாணவர்கள் வழங்கும் பல்லிய வாத்திய நிகழ்வு, திருமதி புவனரூபி குகதாசன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா பரதநர்த்தனாலய மாணவர்களின் ‘கிராமிய சங்கமம்’ எனும் நடன நிகழ்வு,

பொ. சத்தியநாதன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா கல்வியற்கல்லூரி மாணவர்களின் ‘ஏகலைவன்’ எனும் புத்தாக்க நாடகம் , திரு.விஸ்ணுராஜ் விஜயகுமார் அவர்களின் நெறியாள்கையின் கீழ் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் ‘இராவணேசன்’ எனும் கூத்து ஆகிய நிகழ்வுகளுடன் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் அவர்களின் தலைமையில் ‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறிலும் – தமிழினத்தின் பீடு’ எது என ஆராய இருக்கும் சுழலும் சொற்போர் களம் காண இருக்கிறது.

இப் போரில் ‘ஊழி கடந்தும் ஓய்ந்துபோகாத எம்குடி’ என கஜிதா வரதராசா, ‘ஆழி கடந்து துடிக்கும் தமிழக நட்பு’ என சுந்தரலிங்கம் செந்தூரன், ‘கூழ் வளமாய் நிலைகொண்ட கல்வி’ என நிதர்சனா விதுர்சனன், ‘அரணென வாக்கிறைஞ்சும் அபிவிருத்தி நேசர்கள்’ என பாலகிருஸ்ணன் லோஜன், ‘தேய்ந்து போனாலும் மீந்து கிடக்கும் மதிநுட்பம்’ என கிறிஸ்ரீனா இராமசாமி, ‘சாம்பர் மீதினில் மீண்டெழும் இளைஞர் படை’ என குமாரகுலசிங்கம் சங்கீதன் ஆகியோர் தம் சொல் கொண்டு நம் நிலைமை சொல்லி சூடான கணைகள் கொண்டு களமாடவிருக்கிருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் நிறைவரங்கில் பிரபல பேச்சாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமாகிய இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் அவர்களின் தலைமையில் ‘தனது வீழ்ச்சியால் நமது இரக்கத்தை பெரிதும் வென்றவர்’ என்ற தலைப்பிலான இலக்கியப்பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

இப் பட்டிமன்றத்தில் ‘தசரதனே!’ என ஜெ.திருவரங்கன் , தெ.துர்க்காயினி ஆகியோரும், ‘வாலியே!’ என சி.துஷாரன் த.திருமாறன் ஆகியோரும், ‘இராவணனே !’ என சி.கிருபானந்தகுமாரன், ஜெசிதா ஆனந்தமூர்த்தி ஆகியோரும் பேசவுள்ளனர்.

தொடர்ந்து நானாட்டான் கார்மேல் அன்னை கலாமன்றம் வழங்கும் ‘உயிரையுமீந்தான் பாரிவள்ளல்’ எனும் கூத்து இடம் பெறவுள்ளது.

தமிழ் மாருதம் 2019 இன் நிறைவு நிகழ்வாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கவிஞர் ச.முகுந்தன் அவர்களின் தலைமையில் ‘ஊரிழந்து போதலின் துயரப்படிமங்கள்’ எனும் நம் துயரம் சொல்லும் இயல்புநிலையை படம்போட்டுக்காட்டும் சிறப்புக் கவியரங்கம் இடம்பெறவுள்ளது.

இக் கவியரங்கில், ‘ஆதிக்குடிகளின் வீதிகளிலமரும் போதிமாதவன்’ என வி.விமலாதித்தன், ‘மணலாறள்ளித்தின்று மாங்குளங்கடக்கும் மகாவலி’ என பா.திலீபன், ‘வெடுக்குநாறி மலையுறையும் ஆதி சிவன்’ என எஸ்.தவபாலன், ‘தொழுதேத்தித் துணைபோகும் பணநாயகம்’ என ந.அகிலன், ‘உழுதலொழித்து உலகமயமாகிய உள்ளுர்ப்பொருண்மியம்’ என ச.கஜன், ‘கட்டறுத்துச்சிதறி வெட்டச்சுலபமான தேசியம்’ என செ.மதுரகன் ஆகியோர் கவி பாடவுள்ளனர். இவ் அனல்பறக்கும் கவியரங்கோடு வன்னியின் மாபெரும் பண்பாட்டுவிழா தமிழ்மாருதம் பெருமையுடன் நிறைவடையும்.

அத்துடன் இரு தினங்களும் இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களின் ஒன்றிணைவில் புத்தகக் கண்காட்சியும் , மலிவு விற்பனையும் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலக்கியம், சமகால சமூக அரசியல் என் பல்துறை சார்ந்து பேசவிருக்கின்ற, இவ் முத்தமிழ்ச் சங்கம நிகழ்வுக்கு ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கிறது தமிழ் மாமன்றம்.

‘தமிழால் வையகத்தலைமை கொள்வோம்’.

வவுனியா இளைஞர்களின் அயராத முயற்சியில் வவுனியாவில் வரலாறு படைக்கவுள்ள ‘தமிழ் மாருதம் 2019’ மாபெரும் வெற்றிபெற வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தென்னிலங்கையை உலுக்கிய மர்ம மரணம் : இளைஞர்கள் இருவரின் சடலம் மீட்பு!!

தென்னிலங்கையை உலுக்கிய மர்ம மரணம்

தென்னிலங்கையில் இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாத்தறை வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பணியிடத்திலேயே குறித்த இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பணியிடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நீர் நிறைந்த குழி ஒன்றில் விழுந்தே இந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் கட்டடம் நிர்மாணிப்பதற்கு கொன்க்ரீட் தூண்களுக்காக வெட்டப்படும் குழிக்குள் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் : இருவர் கவலைக்கிடம்!!

இருவர் கவலைக்கிடம்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி உந்துருளியில் மோதி விபத்து சம்பவித்துள்ளது. நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேன் ரக சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமை இந்த விபத்திற்கு காரணம் என காவல்துறை மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் காத்தான்குடி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதேவேளை விபத்து இடம்பெறும் விதம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

அவமானம் என கருதி தற்கொலை செய்துகொண்டுள்ள ஒரு பிள்ளையின் தந்தை!!

தற்கொலை

பொலநறுவை – தியபெதும – எளிகிம்புலாவெல பகுதியில் நபர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் பிரிதொரு நபரிடம் 25 ஆயிரம் ரூபாவினை கடனாக பெற்றுக்கொண்டதை மீள செலுத்த முடியாது போனமையால் அவமானம் எனகருதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்டவர் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்து ஒரு நாளே ஆன சிசுவை முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்ற தாய்!!

சிசுவை முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்ற தாய்

மொணராகலை கொவிந்துபுர பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த சிசுவொன்று சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு சிசுவை முச்சக்கரவண்டியில் இட்ட தாய் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டின் மீது இனந்தெரியாத ஒருவர் கல்லொன்றை வீசியுள்ள நிலையில் , அது தொடர்பில் ஆராய வௌியே வந்த வீட்டு உரிமையாளர் முச்சக்கரவண்டியில் இருந்த குழந்தையை கண்டுள்ளார்.

பின்னர் , குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , குழந்தை தற்போது சிறந்த உடல்நலத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தான் வீட்டில் இருந்து வௌியே வரும் போது அங்கிருந்து முச்சக்கரவண்டியொன்று சென்றதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். குழந்தை நேற்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , சம்பவம் தொடர்பில் கொவிந்துபுர காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரு சடலங்கள் மீட்பு!!

இரு சடலங்கள் மீட்பு

வெலிகம – தெனிபிடிய – பணியிடம் ஒன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பணியிடத்தில் பணி புரிந்த இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிகம காவற்துறை தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் வெலிகம காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பணியிடம் ஒன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பணியிடத்தில் பணி புரிந்த இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வடமாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5ம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

சிவராத்திரிக்கு அடுத்த நாள் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக மற்றுமொரு நாளில் பாடசாலை நடத்தப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 4ம் திகதி மஹா சிவாராத்திரி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை!!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை என அச்சிறுவனின் தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த 24ஆம் திகதி தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுவருவதாக தெரிவித்து சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தந்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த தந்தை மகன் தொடர்பில் தகவலறிந்தால் அறியத் தருமாறும் தயவுடன் கோரி நிற்கின்றார்.

வீதியின் குறுக்கே வந்த மாடு : மின் கம்பத்துடன் மோதிய கார்!!

மின் கம்பத்துடன் மோதிய கார்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் பயணித்த காரொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. வீதியின் குறுக்கே திடீரென மாடு வந்தமையால் கார் வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்து நேற்று நள்ளிரவு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் ஏறாவூர் பிரதேசம் எங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மின் இணைப்பை சீரமைத்து மீள விநியோகிப்பதற்கான சாதகங்கள் நேற்று நள்ளிரவு இருக்கவில்லை என்பதால் இன்று திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திகில் படங்களால் வந்த வினை : மாணவனை கொலை செய்து உடலை துண்டுகளாக வெட்டிய கொடுமை!!

திகில் படங்களால் வந்த வினை

ஜேர்மனில் திகில் படங்களை பார்த்து கெட்டுப்போன இளைஞர் தன்னுடன் படித்த சகமானவரை சுத்தியலால் அடித்து கொலை செய்து உடலை துண்டுகளாக நறுக்கியுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஜேர்மனை சேர்ந்த 24 வயதான நாட் டி என்கிற இளைஞர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ம் திகதியன்று பொலிஸாரிடம் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறினார். தன்னுடன் படிக்கும் சீனாவை சேர்ந்த ஒரு மாணவனை கொடூரமாக கொலை செய்து, அவனை சிறுதுண்டுகளாக நறுக்கி எறிந்ததாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், நாட் டி கொடூரமான திகில் படங்களை அதிகம் பார்த்து வந்துள்ளார். அந்த வரிசையில் கொலை கதாபாத்திரமான Hannibal Lecter-ஐ தன்னுடைய தலைவனாக கொண்டு, அதனை போலவே கொலை செய்வது எப்படி என 30,000 முறை இணையத்தில் தேடியுள்ளார்.

இசை ஒன்று பின்னணியில் இசைக்க, ஒரு சுத்தியலை கொண்டு அந்த மாணவனின் தலையில் அடித்து கொலை செய்துள்ளான். பின்னர் அவனுடைய உடல் பாகங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அடைந்துள்ளான்.

அந்த பாகங்கள் அனைத்தும் ஒரு ஏரியில் நீச்சல் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தலைப்பகுதி பாலத்திற்கு கீழே கிடந்தது. ஆனால் அவருடைய கல்லீரல் பகுதியை மட்டும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரேத பரிசோதனையில், அந்த பகுதி மட்டும் ஒரு கூர்மையான ஆயுத்தத்தால் ஆழமாக தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது என தெரியவந்தது. அதனால் கல்லீரலை குற்றவாளி சாப்பிட்டிருக்க வேண்டும் என சந்தேகம் தெரிவித்தார். இந்த விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளியை மனநல மருத்துவரிடம் ஆய்வுக்கு உட்படுத்துமாறும், அதன் மதிப்பீடு அறிக்கையை சமர்பிக்குமாறும் கூறி உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவில் ஏற்றுமதியாளர்களை உருவாக்க தொழில்நுட்ப கண்காட்சியும், கருத்தரங்கும்!!

தொழில்நுட்ப கண்காட்சியும், கருத்தரங்கும்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் 2022ம் ஆண்டளவில் இலங்கையின் ஏற்றுமதி வருவாயை 28 பில்லியன் டொலர்களாக அதிகரித்தல், புதிய ஏற்றுமதியாளர்கள் இரண்டாயிரம் பேரை உருவாக்குதல் என்பனவற்றை நோக்கமாக்கொண்டு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ‘ஏற்றுமதியில் முதலிடத்தை பெறுங்கள்’ எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு கருத்தரங்கும், தொழில்நுட்ப கண்காட்சியும் இன்று (01.03) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட தொழில் முனைவோருக்கான ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் செயலமர்வு நடைபெற்றிருந்தது.

முன்னதாக மாவட்டசெயலக வளாகத்தில் அமைக்கபட்டிருந்த தொழில்நுட்ப கண்காட்சி கூடத்தை நாடா வெட்டி திறந்து வைத்த அதிதிகள் அதனை பார்வையிட்டதுடன் கருத்தரங்கு நிகழ்வு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.

ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் முதலாவது நிகழ்வானது யாழ்ப்பாணத்திலும் மற்றும் கண்டி, மாத்தறை, குருநாகல், கேகாலை, அனுராதபுரத்திலும் நடைபெற்று எழாவது கருத்தமர்வாக வவுனியாவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு வழங்கல், ஏற்றுமதித்துறையின் தொழில் நுட்பத்தை காட்சிபடுத்தல், பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றுமதித்துறை தொடர்பான அறிவை வழங்கல், முன்னிலை வகிக்கும் வர்த்தகர்களை ஏற்றுமதித் துறைக்குள் உள்வாங்குதல் போன்றவற்றுக்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

நிகழ்வில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம, கைத்தொழில் வர்தக அமைச்சர் றிசாட்பதியூதீன், அபிவிருத்தி மூலோபாய பிரதி அமைச்சர் நளின்பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வவுனியா, மன்னார் அரச அதிபர்களான எம். ஹனீபா, மோகன்ராஜ் அரசஅதிகாரிகள், வத்தகதுறையினர், வன்னி மாவட்டங்களை சேர்ந்த உற்பத்தியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இருளில் மூழ்கிய இலங்கையின் பல பகுதிகள் : மக்கள் அவதி!!

இருளில் மூழ்கிய இலங்கையின் பல பகுதிகள்

கொழும்பின் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்சார தடை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் பிரதான கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட பல பிரதேசங்களுக்கு மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாக மின்சார சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மீண்டும் மின்சாரம் வழங்குவதற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது கொழும்பின் பிரதான பகுதிகளுக்கு மாத்திரம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பல பகுதிகள் இன்னும் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிய வருகிறது. திடீரென ஏற்பட்ட மின்சார தடை காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளனர்.

745,000 யூரோ பணத்தை கண்டுபிடித்த மோப்ப நாய்!!

பணத்தை கண்டுபிடித்த மோப்ப நாய்

பணிக்கு வந்து மூன்றே மாதங்களில் ஜேர்மனியின் மோப்ப நாய் ஒன்று 745,000 யூரோக்கள் கரன்சியை கண்டு பிடித்துள்ளது. மேற்கு ஜேர்மனியின் Düsseldorf விமான நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த Luke என்னும் அந்த மோப்ப நாய் 745,000 யூரோக்கள் கரன்சியை கண்டு பிடித்துள்ளதாக சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 வயதாக இருக்கும்போது பணிக்கமர்த்தப்பட்ட Luke, கரன்சியை எப்படி மோப்பம் பிடிப்பது என்பதை கற்றுக் கொள்ளும் மிக நீண்ட பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பயிற்சியை முடித்த Luke, பிப்ரவரிக்குள் 12 முறை பணத்தைக் கண்டு பிடித்துள்ளது.

பணம் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் Luke மிகவும் உதவிகரமாக இருப்பதாக தெரிவித்த சுங்கத்துறை செய்தி தொடர்பாளர் Michael Walk, இப்போதே Luke இவ்வளவு சாதித்துள்ளதைப் பார்த்தால், எதிர்காலத்தில் அது என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.

10,000 யூரோக்கள் அல்லது அதற்கு அதிகம் பணத்தை ஜேர்மனிக்குள் கொண்டு வருவதற்கு ஜேர்மன் சட்டம் அனுமதிப்பதில்லை. அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பணம் குறித்து ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். சில நேரங்களில் Luke 10,000 யூரோக்களுக்கு குறைவான பணத்தைக் கூட கண்டு பிடித்திருக்கிறது.

அது மட்டுமின்றி யூரோக்கள், டொலர்கள் மற்றும் பவுண்டுகளைக் கூட கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது Luke. Luke மற்றும் பிற மோப்ப நாய்கள், சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு பணம் கடத்தப்படுவதை தடுப்பதில் ஜேர்மன் அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளன எனலாம்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வட மாகாணத்தில் முதல் முறையாக புதிய சேவை!!

முதல் முறையாக புதிய சேவை

வட மாகாணத்தில் முதல் முறையாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதற்கான நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் இன்று (01.03.2019) மதியம் 11.30 மணியளவில் இடம்பெற்றது.

சிவில் தர்மவர்த்தன பவுன்டேசன் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நோயாளர் காவுவண்டி சேவையானது முற்றிலும் இலவசமாக இடம்பெறவுள்ளது.

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பல மக்கள் வறுமையில் உள்ளர். வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதன் பின்னர் வீடு திரும்புவதற்கு பணமின்மை மற்றும் நடந்து அல்லது பேரூந்து மூலம் செல்வதற்கு இயலாமை போன்ற நோயாளர்களை அவர்களது இல்லத்திற்கு இவ் நோயாளர் காவுவண்டியின் மூலம் எடுத்துச் செல்லப்படுவார்கள்.

இச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் சிவில் தர்மவர்த்தன பவுன்டேசன் நிறுவனத்தின் செயலாளர் லேஸ்லி தர்மவர்த்தன, தலைவர் பேசி தர்மவர்த்தன, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், வைத்தியர்கள், வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றை பரிசோதனை செய்த மருத்துவர்கள் : காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரின் வயிற்றுக்குள் இருந்த பொருட்களை மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். அயனாவரம் பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் ஜெயக்குமார் (52) என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மனநலத்தை சரி செய்யும் சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான ஒரு பரிசோதனையின் போது, ஜெயக்குமாரின் வயிற்றில் சாவிகள், செயின், நாணயம், சிம்கார்டு உள்ளிட்ட 40 பொருட்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு இரைப்பை மற்றும் குடல் மருத்துவத்துறையில் அனுமதிக்கப்பட்ட ஜெயக்குமாருக்கு எண்டாஸ்கோப்பி என்னும் நவீன உள்நோக்கு கருவி மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வயிற்றில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டது.

இதையடுத்து, ஜெயக்குமாரின் உடல்நிலை தற்போது தேறி வருகிறது. இதுகுறித்து மருத்துவர் வெங்கடேஸ்வரன் கூறுகையில், ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தவறுதலாக இந்தப் பொருள்களை விழுங்கியுள்ளார்.

சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க தவறியிருந்தால் குடலில் ரத்தப்போக்கு அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம். சிகிச்சைக்கு பின்னர் வயிற்றில் உள்ள அனைத்துப் பொருள்களும் அகற்றப்பட்டதா என்பதை பரிசோதனை மூலம் உறுதி செய்து கொண்டோம் என கூறியுள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அம்மாச்சி உணவகம் திறப்பு!!

அம்மாச்சி உணவகம் திறப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் இன்று (01.03.2019) காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நலன்புரி சங்கம், வவுனியா மாவட்ட விவசாய திணைக்களம், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில்

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ப.பசுபதிராஐா, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் மற்றும் செயலாளர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியர்கள், பிராந்திய சுகாதார திணைக்கள ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு பாரம்பரிய உணவு வகைகள் நுகர்வோருக்கு உடனுக்குடன் தயாரித்துப் பரிமாறப்பட இருப்பதாகவும் எந்தவிதமான செயற்கை நிறமூட்டிகளோ செயற்கைச் சுவையூட்டிகளோ உணவில் சேர்க்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.