கல்லூரி முன்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞரின் வெறிச்செயல்!!

இளைஞரின் வெறிச்செயல்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை பொலிசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் வரங்கல்லை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ரவளி. தனியார் கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு படித்து வந்த இவரை, சங்கம் கிராமத்தைச் சேர்ந்த சாயி அன்வேஷ் என்ற அதே கல்லூரியைச் மாணவர் காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

ஆனால், ரவளி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சாயி அன்வேஷ் தான் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ரவளி மீது திடீரென்று ஊற்றினார்.

பின்னர் சிகரெட் லைட்டரை தீயை பற்ற வைத்து ரவளி மீது வீசிவிட்டு ஓடிவிட்டார். இதனால் ரவளியின் உடலில் தீப்பற்றியது. வலியால் அலறித் துடித்த அவரை மீட்ட மாணவர்கள், தீயை அணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தப்பியோடிய சாயி அன்வேஷை விரட்டி பிடித்த சில மாணவர்கள், அவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

23 வயது யுவதி பேருந்தின் சில்லில் சிக்கி பரிதாபமாக பலி!!

யுவதி பரிதாபமாக பலி

கம்பளை – நுவரெலியா வீதியின் பொரலுமங்கட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த முச்சக்கரவண்டி , சிற்றூர்தியொன்றில் மோதியுள்ளதையடுத்து குறித்த யுவதி வீதிக்கு தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதன்போது , பின்னால் வந்த அரச பேருந்தின் சில்லில் சிக்கி குறித்த யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 23 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ள முச்சக்கரவண்டியின் சாரதி கம்பளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் அரச பேருந்தின் சாரதியும் , சிற்றூர்தியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் கம்பளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

24 வயது ஆசிரியைக்கு நடந்த பயங்கரம்!!

ஆசிரியைக்கு நடந்த பயங்கரம்

கடவத்தை – உடுபீல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியொன்று மீது தனியார் பேருந்தொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய உயிரிழந்த யுவதி அவரின் தந்தையுடன் சென்றுள்ள போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார். குறித்த விபத்தில் அவரின் தந்தை படுகாயமடைந்த நிலையில் ராகமை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை மேற்கொண்டு ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீகஹவத்த காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பன்றி இறைச்சியால் வந்த சிக்கல் : தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!!

தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

பன்றி இறைச்சியை களவாக எடுத்து உண்டு விட்டதாகத் தெரிவித்து உயர் பொலிஸ் அதிகாரியொருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். நுவரெலியாவில் அமைந்துள்ள பொலிஸ் சுற்றுலா விடுதியொன்றில் நேற்றைய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் நலன்புரி பிரிவில் கடமையாற்றி வரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், உத்தியோகத்தர் ஒருவரை மோசமாக தாக்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 59 வயதான பொலிஸ் பரிசோதகர் தயானந்த அலஹப்பெரும என்ற உத்தியோகத்தரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் தமந்த விஜயஸ்ரீ, ஒரு கிலோ பன்றி இறைச்சியை கொண்டு வந்து கொடுத்து அதில் 500 கிராமை இரவு சமைக்குமாறு கோரியதாகவும் அதன் அடிப்படையில் தமக்கு கீழ் பணியாற்றி வரும் உத்தியோகத்தர்களைக் கொண்டு சமைத்துக் கொடுத்ததாகவும் தயனாந்த தெரிவித்துள்ளார்.

எனினும், சமையலறைக்கு வந்த பொலிஸ் அத்தியட்சகர் பன்றி இறைச்சி குறைவதாகவும் அதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் எடுத்து உண்டு விட்டதாகவும் குற்றம் சுமத்தி தம்மை மோசமாக தாக்கியதாக, பொலிஸ் உத்தியோகத்தர் தயானந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

உயர் அதிகாரிகள் வழங்கும் எந்தவொரு கட்டளையையும் தாம் ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வருவதாகவும், அவர்களது உணவை தாமே தமது உத்தியோகத்தர்களோ உட்கொள்ளவில்லை எனவும் பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்மப் பொருள்!!

மண்ணுக்குள் காணப்பட்ட மர்மப் பொருள்

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் இன்று வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பட்டாணிசூர் பகுதியில் உள்ள வர்தகநிலையம் ஒன்றிற்கு முன்பாக கொட்டபட்டிருந்த கிரவல் மண்ணில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் அவதானித்ததுடன். இவ்விடயம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பொலிஸார் மோட்டார் குண்டினை அவதானித்துள்ளதுடன் விஷேட அதிரடிப்படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த மோட்டார் குண்டினை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஓமந்தை பகுதியில் இருந்து குறித்த கிரவல்மண் கொண்டுவரபட்டு வர்த்தக நிலையத்திற்கு முன்பாக பறிக்கபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப் படிப்பை நிறைவு செய்யவிருந்த மாணவி பரிதாபமாக மரணம் : மகளை இழந்து தவிக்கும் குடும்பம்!!

மாணவி பரிதாபமாக மரணம்

களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்யவிருந்த மாணவி ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 18ஆம் திகதி இறுதி பரீட்சைக்கு முகம் கொடுத்தவர், பெறுபேறுகளுக்காக வீட்டில் காத்திருந்தார்.

இந்நிலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். கம்பஹா பகுதியை சேர்ந்த லசந்தா வீரக்கொடி என்ற 24 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டின் ஒரே மகளான அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பின்னர் வீட்டின் சுமைகள் அனைத்தையும் குறைத்து விடுவேன் என குறிப்பிட்டார் என்று உயிரிழந்த மாணவியின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி அவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட விடயம் அறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் அவரது இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் வான் எல்லையில் பதற்றம் : ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்பு!!

விமான சேவைகள் பாதிப்பு

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பாகிஸ்தான் தங்கள் விமான எல்லையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் பல விமான சேவைகள் பாகிஸ்தானுக்கான தங்கள் விமான பயணங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, எமிரேட்ஸ், கட்டார் விமான சேவை, எத்திஹாட் பிளே டுபாய், கல்ப் எயார், எயார் கனடா ஆகிய விமான சேவைகள் தங்கள் விமான பயணங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இந்த விமான எல்லை மூடப்பட்டமையினால் இதற்கு மேலதிகமாக பிரிட்டிஷ் எயார்வேஸ், சிங்கப்பூர் விமான சேவை, பின் எயார் மற்றும் எயார் இந்தியா விமான சேவைகள், ஐரோப்பா பயண எல்லைக்காக வேறு வழியை பயன்படுத்தியதாக நேற்று அறிவித்துள்ளது.

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் நோக்கி விமான பயணங்கள் மேற்கொள்ளும் சர்வதேச விமான சேவைகளுக்கு, பாகிஸ்தான் விமான எல்லையை தவிர்த்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலதிகமாக எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் மற்றும் பெங்கொக் விமான நிலையங்களில் தரையிறங்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலதிக செலவுகளை ஏற்க நேரிட்டமையினால் எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள நிலைமைகள் தொடர்பில் தீவிர அவதானத்தில் இருப்பதாக விமான சேவைகள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி எதிர்பார்த்த பாரிய அளவிலான விமான பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகும் இந்தியா : கசிந்தது முக்கிய ஆதாரம்!!

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகும் இந்தியா

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் வைத்தியசாலைகளின் மீது அவசரமாக செஞ்சிலுவை சின்னம் வரையப்பட்டு வருவதாக போர் ஏற்படும் ஆபத்து நெருங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் ரஜோரியில் பாகிஸ்தான் போர் விமானம் அத்துமீறி நுழைந்ததால் இந்தியப் பாதுகாப்பு படை பாகிஸ்தான் விமானத்தை சுட்டுத் தள்ளியது. இதனைத் தொடா்ந்து பாகிஸ்தானில் உள்நாட்டு,வெளிநாட்டு விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் நேற்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹிரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

பரபரப்பான சூழ்நிலையில் பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி அபி நந்தன் என்பவர் சிக்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சருடன் முப்படை தளபதிகளும், பிரதமா் மோடியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலும் சந்தித்து பேசினர். போர் பதற்றம் நிலவி வருவதைத் தொடர்ந்து இரு நாட்டு இராணுவ நிலைகளும் தயாராக உள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அனைத்து வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் வைத்தியசாலைகளில் 24 மணி நேரமும் செயல்படுவதை குறிக்கும் விதமாக வைத்தியசாலைகளின் மேற்தளத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் ரெட் கிராஸ் சின்னம் வரையப்பட்டுள்ளது.

இந்த சின்னம் வரைபின் பின்னணியில் போர் ஒன்றுக்கு இந்தியா தயாராகி வருவதை உறுதிப்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன

சாதனை படைத்த பாடசாலை மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் உயர் தர வகுப்பில் பயிலும் கிஹான் ஹெட்டியராச்சி என்ற மாணவன் தயாரித்த ரொக்கட் விமானப்படையின் 68வது ஆண்டு விழா நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என விமானப்படை அறிவித்துள்ளது.

இந்த கண்காட்சி எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வர ஹிங்குராக்கொட விமானப்படை முகாமில் நடைபெறவுள்ளது. இலங்கையை சேர்ந்த பாடசாலை மாணவன் தயாரித்த முதலாவது ரொக்கட் இதுவென கருதப்படுகிறது. இதனை மேம்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியுதவி வழங்கினார்.

மேம்படுத்தப்பட்ட ரொக்கட்டை விண்ணில் செலுத்த விமானப்படையின் உதவியை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி தலையீடுகளை மேற்கொண்டுள்ளார்.

எட்டு வயதுச் சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்!!

சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்

கிளிநொச்சி – உதயநகரில் இரண்டு காதுகளும் கேட்காத நிலையில் வாய் பேச முடியாது சிரமப்படும் சிறுவனுக்கு உதவுமாறு பொற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதயநகரில் வசிக்கும் த.நேரியன்பன் என்னும் எட்டு வயதுச் சிறுவனுக்கு இந்திய மருத்துவமனையில் சத்திர கிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அவரது குறைபாட்டைத் தீர்க்க முடியுமென மருத்துவர்களால் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.

அவரது சத்திர சிகிச்சைக்காக இருபத்தொரு இலச்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும், மிகவும் ஏழ்மையான நிலையிலுள்ள தனது குடும்பத்தால் தனது மகனது சத்திர சிகிச்சைக்கு அந்தளவு பணத்தையும் திரட்ட முடியாத நிலை காணப்படுவதாகவும் கருணை உள்ளங்கொண்டவர்களிடமிருந்து தமது மகனது சத்திர சிகிச்சைக்குத் தந்தையாரால் உதவி கோரப்பட்டுள்ளது.

இச்சிறுவனது குடும்பம் கடந்த கால யுத்தத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையார் கூலித் தொழில் செய்தே குடும்பச் செலவுகளைக் கவனித்து வருகின்றார். இச்சிறுவனது தாயாரும் வலிப்பு நோயாளியாகக் காணப்படுகின்றார். இந்நிலையில் இச்சிறுவனது மருத்துவ சத்திர சிகிச்சைக்காக வைத்தியர்களால் கோரப்பட்ட பணத்தினைத் திரட்ட முடியாது.

பெரிதும் அவலப்பட்டுக் கலங்கி நிற்கும் இவர்கள் கருணை உள்ளம் கொண்ட பரோபகாரிகளிடமிருந்து சத்திர சிகிச்சைக்கான பண உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

இச்சிறுவனது முகவரி தர்மசீலன் நேரியன்பன், இல.230, உதயநகர் மேற்கு, கிளிநொச்சி. வங்கிக் கணக்கு இலக்கம்: 137020025321 (ஹற்றன் நசனல் வங்கி), தொலைபேசி இலக்கம் +94775079038 என்னும் தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு உதவ முடியும்.

மற்றும் மேலதிக தகவல்களுக்கு கிளிநொச்சி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தொலைபேசி இலக்கமான+ 94776913244 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேதிக தகவல்களை பெற்று கொள்ள முடியும்.

ரத்கம படுகொலை சம்பவம் : பொலிஸார் ஐவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

பொலிஸார் ஐவருக்கு ஏற்பட்டுள்ள நிலை

ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னர் சேவைக்கு திரும்பாமல் இருக்கின்ற ஐந்து அதிகாரிகளுக்கே இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரத்கம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு அண்மையில் இடமாற்றம் வழங்கப்பட்டது.

எனினும், இடமாற்றம் வழங்கப்பட்ட குறித்த ஐந்து பேரும் சேவைக்கு திரும்பாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் குறித்த 05 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்து காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட போதும் பாகிஸ்தான் இராணுவத்திடம் துணிச்சலாக பேசிய தமிழன்!!

அபிநந்தன்

பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தன், தாய் நாட்டின் இரகசியம் குறித்து பேச மறுத்துள்ளமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதன் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் அந்நாட்டு இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அபிநந்தனிடம் பாகிஸ்தான் இராணுவத்தினர் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர். இதன் போது அபிநந்தன் மிகவும் தைரியமாகவும் துணிச்சலாகவும் பதில் வழங்கியுள்ளார்.

இது குறித்த காணொளி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதன் போது பதில் வழங்கிய அபிநந்தன், தனது பெயர் விபரங்களை பாகிஸ்தான் இராணுவத்திடம் கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கண்டிப்பாக நன்றாக என்னை கவனித்தீர்கள். நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன்.

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர். என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி. இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் உங்களை மரியாதையோடு நடத்தி இருக்கும்” என்று கூறினார்.

எனினும், இந்திய இராணுவம் குறித்த சில முக்கிய கேள்விகளுக்கு அவர் பதில் வழங்க மறுத்துள்ளார். இந்நிலையில், அபிநந்தனுக்கு பல தரப்பினர்களும் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாக பெண்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர் : நகரசபை பெண் உறுப்பினர்!!

நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாக குடும்ப பெண்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா ஜெபராணி தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையின் பதினொராவது அமர்வு நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்று நடைபெற்றபோதே சபையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நகரசபை பெண் உறுப்பினர், சிறு கடன்களை குடும்பப் பெண்களுக்கு கண்மூடித்தனமாக வழங்கியுள்ள நிதி நிறுவனங்கள் கடனை மீள் செலுத்த தகுதியுடையவர்களிடம் மாத்திரம் அறவிடுமாறும் சபையில் முன்மொழிவதாக தெரிவித்த நகரசபை உறுப்பினர்,

சிறு கடனை பெற்று செலுத்த முடியாத குடும்பப் பெண்களுக்கு அரசாங்கத்தால் ஒரு இலட்சம் ரூபா பணம் மானியமாக வழங்கப்படுவதாக அறிவித்த திட்டம் இருக்கின்ற போதிலும் வங்கிகள் அப்பணத்தை கொடுக்க மறுப்பதாக பெண் நகரசபை உறுப்பினர் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்க அதிபருடன் நகரசபையினர் கலந்துரையாடி வங்கிகளை ஒன்றிணைத்து பெண்களின் கடன் பிரச்சனைக்கு தீர்வினை காண வேண்டும் என தெரிவித்தார்.

வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுனர் மக்கள் சந்திப்பு!!

வடமாகாண ஆளுனர் மக்கள் சந்திப்பு

வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேஸ் ராகவன் விசேட மக்கள் சந்திப்பு ஒன்றை இன்று (27.02) வவுனியா நகரசபை மண்டபத்தில் மேற்கொண்டார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மக்கள் சந்திப்பானது காலை 10 மணிதொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை நடைபெற்றிருந்தது.

இம் மக்கள் சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர்,

மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், காணி ஆணையாளர், வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து, அதிகாரசபை, உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.

உலகின் மிக குறைந்த வயதுடைய புத்தக ஆசிரியராக மாறிய இலங்கைச் சிறுவன்!!

இலங்கைச் சிறுவன்

இலங்கையை சேர்ந்த சிறுவன் உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக கூகுள் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளார். வேயங்கொட தூய மரியா வித்தியாலயத்தில் 4ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இசுரு அருணோத நாகந்தல என்ற மாணவனே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரால் ஹொரகொல்ல தேசிய வனவிலங்கு காடு குறித்து எழுதப்பட்ட ஆங்கில கட்டுரை ஒன்றை கூகுள் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் கூகுள் நிறுவனத்தினால் அமெரிக்க நாட்டை சேர்ந்த 9 வயது சிறுவனின் கட்டுரையே பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த சாதனையை இலங்கையை சேர்ந்த 8 வயது சிறுவன் முறியடித்து உலகின் இளம் ஆசிரியராக பெயரிடப்பட்டுள்ளார். தனது மகனுக்கு கிடைத்த சர்வதேச அங்கிகாரம் குறித்து சிறுவனின் தந்தை மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய அதிபருக்கு நேர்ந்த கதி!!

அதிபருக்கு நேர்ந்த கதி

பாடசாலை மாணவியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் குளிப்பிட்டிய நீதவான் ஜயனி எஸ்.விஜேதுங்க முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். சந்தேக நபர் பல முறை மாணவியை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் பாடசாலை அதிபருக்கு எதிரான தரப்பினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் தமது தரப்பு வாதி நிரபராதி என அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.