இலங்கையில் ஏற்படவிருந்த பேராபத்து தவிர்ப்பு : தெய்வாதீனமாக உயிர் தப்பிய 50 பயணிகள்!!

உயிர் தப்பிய 50 பயணிகள்

பண்டாரவளையில் அதிகளவான பயணிகளுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த முயற்சித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை – கொழும்பு வீதியில் பயணித்த பேருந்தில் மதுபானம் அருந்திவிட்டு சாரதியாக செயற்பட்டவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மதுபானம் அருந்திவிட்டு அதிக வேகமாக பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி பண்டாரவளை நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி செலுத்திச் சென்ற பேருந்தில் சுமார் 50 பயணிகளுக்கு மேற்பட்டவர்கள் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதி, உதவியாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மதுபோதையில் அதிக வேகத்தில் பேருந்தை செலுத்தியமையால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெய்வாதீனமாக அனைத்து பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் திருவள்ளுவர் நினைவுதினம்!!

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நினைவுத் தூபியில் இன்று குருபூஜை தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உப நகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற திருவள்ளுவர் நினைவு தினத்தில் அன்னாரின் நினைவுச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து திருவள்ளுவரின் நினைவுப் பேருரையை தமிழ் மணி அகளங்கனும், தமிழரருவி சிவகுமாரும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் திருவள்ளுவர் நினைவுத்தூபியின் பராமரிப்பாளர் ஆர்.பிரேமச்சந்திரன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், நகரசபை செயலாளர் ஆர். தயாபரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். ஸ்ரீனிவாசன் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

காணாமல்போன இளைஞன் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு!!

இளைஞன் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு

மஸ்கெலியா நகரில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று (21.02.2019) காலை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் வசிக்கும் 30 வயதுடைய பெத்தும் மதுசங்க லியனகே என்ற திருமணம் ஆகாத இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞனை காணவில்லை என இளைஞனின் பெற்றோர் பொலிஸில் முறைபாடு செய்திருந்தனர். முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், தேடுதல் பணியிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

அந்தநேரத்தில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் இளைஞனின் பாதணி ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்திருக்கலாம் என சந்தேகித்து தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர்.

நேற்று இரவு வரை தேடுதலில் ஈடுப்பட்டிருந்த பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இன்று கடற்படையினரின் உதவியைக்கொண்டு தேடுதலில் ஈடுப்பட்ட போது இளைஞன் சடலமாக நீர்தேகத்திலிருந்து மீட்கப்பட்டார்.

19ம் திகதி இரவு குறித்த இளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் வெளியே சென்றதாகவும், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டையடுத்து, சந்தேகிக்கும் பொலிஸார் மேற்படி இளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்துள்ளாரா அல்லது யாரேனும் தள்ளிவிட்டார்களா என்ற பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

மது விருந்து இறுதியில் கொலையில் முடிந்த சோகம்!!

கொலையில் முடிந்த சோகம்

மத்துகம – பிட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் பிட்டிகல பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிட்டிகல – தலகஸ்பே பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற மது விருந்தின் போது ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கொலை தொடர்பில் ஆறு பேரிடம் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டிகல காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

இன்று அதிகாலை மேலும் ஒரு கோர விபத்து, ஒருவர் பலி – ஐவர் பரிதாப நிலையில்!!

கோர விபத்து

புத்தல – மொனராகலை பிரதான வீதியில் மஹாகொடயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். சிறிய பாரவூர்தியும், பேருந்தும் மோதி இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதுடன், அவர் மாலபே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் புத்தல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகலை பொது மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, புத்தல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய காதல் தம்பதியர் : மனங்களை கரையவைக்கும் நிஜம்!!

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய காதல் தம்பதியர்

இலங்கையில் தனது காதல் மனைவிக்காக கணவன் ஒருவரின் செயற்பாடு பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் ஜகத் – அனோமா காதல் தம்பதியினர் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

எனினும் சில மாதங்களில் அனோமா தசைத்திசு நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நோயின் தாக்கம் காரணமாக அனோமாவின் உடலிலுள்ள சதைகள் கரைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நோயில் பாதிக்கப்பட்டுள்ள தனது காதல் மனைவியை காப்பாற்றுவதற்கு எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளை கணவர் ஜகத் மேற்கொண்டுள்ளார். மனைவிக்காக அவர் படும் கஷ்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகளவாக பேசப்பட்டது.

இந்நிலையில் காதலர் தினமான கடந்த 14ம் திகதி, ஜகத் – அனோமா காதல் தம்பதியரை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேடிச் சென்றுள்ளார். நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனோமாவுக்கு உதவும் நோக்கில் நாமல் அவர்களின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.

இதன்போது காதல் தம்பதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

கடந்த 17 வருடங்களாக பாதிக்கப்பட்ட தன் மனைவியை பொறுப்புடன் பார்த்துக் கொள்ளும் ஜகத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவித்து வருகின்றன

வவுனியாவில் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக வர்த்தகப் பிரிவு மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

நெகிழ்ச்சியான செயல்

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக வவுனியா வடக்கு , தெற்கு பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் கல்வி கற்க க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவு (2018ம் ஆண்டு) மாணவர்கள் அவர்களுக்கு கல்வி கற்பித்த வர்த்தக பிரிவு ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2018ம் ஆண்டு க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள நெல்லி ஸ்டார் மண்டபத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.

வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாக இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய வர்த்தக பிரிவிற்கான ஆசிரிய ஆலோசகர் திருமதி சுபாஜினி நிரூபன் கலந்து சிறப்பித்திருந்ததுடன் சிரேஸ்ட ஆசிரியர்கள் உரை, ஆசிரியர்களின் உரை, சுவாரஸ்யமான பல்வேறு நிகழ்வுகள் என பல இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் தங்களுக்கு கற்பித்த வவுனியா தெற்கு, வடக்கு வலயத்திற்குட்பட்ட வர்த்தக பிரிவு ஆசிரியர்களுக்கான நினைவுப்பரிசும் மாணவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையில் சிகரெட் பாவனைக்கு தடை குறித்து ஆராய்வு!!

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்யவேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் கா.பார்த்தீபனால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்தவிடயம் தொடர்பான பிரேரணை ஒன்று கா.பார்த்தீபனால் முன்வைக்கபட்டிருந்தது.

அதற்கமைய பிரதேசசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கவேண்டும் என்று அவரால் கோரப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபைக்கு அதிகாரங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அடுத்து வருகின்ற அமர்வில் அதனை தீர்மானமாக எடுக்கலாம் என்றும் சபை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே இவ்விடயம் தொடர்பாக சபையினால் ஆராய்ந்து சபைக்குட்பட்ட வர்த்தகசங்கத்தோடும் கலந்துரையாடி அடுத்த அமர்வில் தீர்மானமாக எடுப்பது என முடிவு காணப்பட்டிருந்தது.

பேஸ்புக் நட்பால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!

சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

பேஸ்புக் ஊடாக நட்பாகிய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான சிறுமியை தாய்மை அடையச் செய்த இளைஞனை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் பிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிட்டிகல பிரதேசத்தை இளைஞன் மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த சிறுமியுடன் பேஸ்புக் ஊடாக நண்பராகியுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பிட்டிகல பிரதேசத்தில் இருந்து மதவாச்சி பிரதேசத்திற்கு சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய இளைஞனை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு!!

மிகப்பெரிய நிலவு

இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக தோன்றிய சுப்பர் மூனை பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.

சாதாரண முழு நிலவைவிட நேற்றைய தினம் காட்சியளித்த சுப்பர் நிலவு காணப்பட்டுள்ளது
அதற்கமைய 6 சதவீதம் பெரிதாகவும் 14 சதவீதம் அதிகரித்த பிரகாசத்துடனும் நேற்று நிலவு காட்சியளித்துள்ளது.

பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் போது, அது சுப்பர் நிலவு என்று அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன 2 வயதுச் சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்குப் பின்னர் தேயிலை மலைப் பகுதியிலிருந்து மீட்பு!!

சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்குப் பின்னர் மீட்பு

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று (19.02.2019) மாலை 4 மணியளவில் காணாமல் போன 2 வயதுடைய யசிப் விதார்த் என்ற சிறுவன் இன்று காலை 9 மணியளவில் சுமார் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு அப்பகுதி தேயிலை மலைப் பகுதியிலிருந்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது, வெளியே சென்ற சிறுவன் திடீரென காணாமல் போயிருந்தான். இரவு வரை சிறுவனை மீட்கும் பணியில் பொலிஸாரும், பிரதேசவாசிகளும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் ஈடுப்பட்டிருந்தனர்.

இரவு வரை தேடியும் கிடைக்காத பட்சத்தில் இன்று காலை பிரதேசவாசிகள் அப்பகுதி தேயிலை மலைகளில் தேடும்பொழுது மேற்படி சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் தேயிலை மலை பாதையில் மீட்கப்பட்டுள்ளான்.

தேயிலை மலைப் பாதையில் குறித்த நபர் ஒருவர் சிறுவனை விட்டுச் செல்வதை கண்ட பிரதேசவாசிகள் குறித்த நபரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது, நபர் தப்பிச் சென்றுள்ளார். எனினும் மேற்படி சந்தேகிக்கும் நபரை தேடும் பணியில் பிரதேசவாசிகளும், பொலிஸாரும் ஈடுப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவனை அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை 21 ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட முறைகேடான பதவி உயர்வினை இரத்து செய்யக்கோரி இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக இன்று (20.02.2019) அதிகாலை 5.30 மணி தொடக்கம் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சனிக்கிழமையன்று வவுனியா சாலையின் 21ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அப் பதவி உயர்வானது எந்தவித தகுதி தராதம் பாராது அரசியல் ரீதியில் முறைகேடான ரீதியில் வழங்கப்பட்டுள்ளது.

அதில் எமது சாலையினை சேர்ந்த நீண்டகாலமாக 20 , 25 வருடங்களாக பணிபுரியும் எவரும் உள்வாக்கப்படவில்லை. அதேவேளை நாளாந்தம் 750 ரூபா ஊதியம் பெறும் ஊழியர்கள் நிரந்தரம் ஆக்கப்படவில்லை , ஆயிரம் ரூபா ஊதியம் பெறுபவர்கள் நிரந்தரம் ஆக்கப்படவில்லை.

இந்த பதவி உயர்வினை அமைச்சர் ரிசாட் பதியூதின் அவர்களின் சகோதரருடன் ஐக்கிய தேசிய கட்சி தொழிற்சங்கத்தின் ஒரு சிலரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் ஐக்கிய தேசிய கட்சி தொழிற்சங்கத்தினை சார்ந்தே வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது சட்டவிரோதமாக தமது தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர்களை பதவி உயர்வு தருவதாக இணைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனை எதிர்த்து நாங்கள் 15 ஊழியர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

முறைகேடான முறையில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் இரத்து செய்யப்பட்டு முறையான நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படுமாயின் ஏற்றுக்கொள்வோம். இல்லையேனில் இன்றிலிருந்து 14 நாட்களின் பின் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தனர்.

முறைகேடாக பதவி உயர்வுகளை இரத்து செய் , தகுதி சேவைக்காலம், கல்வித்தகமை பாராது பதவி உயர்வு வழங்க முடியுமா?, தொழில் சங்கமே சாராயம் வாங்கிக் குடித்து சலுகைகளை அள்ளிக் கொடுக்காதே, 750 ரூபா நாளாந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கு ,

இ.போ.ச பதவி உயர்வில் அரசியல் நுழைந்தது எப்படி?, 1000 ரூபா ஒப்பந்த சாரதி காப்பாளர்களை நிரந்தரமாக்கு, கௌரவ ஜனாதிபதி அவர்களே முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை இரத்து செய்யுங்கள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கியது எப்படி? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன.

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்!(படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணேஇறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பதினோராவது மகோற்சவ பெருவிழாவில் 19.02.2019 செவ்வாய்க்கிழமை காலை தீர்த்த திருவிழா இடம்பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர்கல்லூரியின் இந்துமாமன்ற ஆசிரியர்களின் உபயத்தில் தீர்த்த உற்சவம் காலை எழுமணியளவில் ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தில் கல்லூரியின் ஆசிர்யர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர் . சுண்ணம் இடித்து கிரியைகள் இடம்பெற்று காலை பத்து மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று காலை பதினோரு மணியளவில் ஆலயத்தின் தீர்த்த கிணற்றடியில் கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் ஆலயத்தின் இரண்டாம் வெளிவீதி ஊடாக வந்தடைந்தனர். அங்கு தீர்தோற்சவம் இடம்பெற்று பெற்று அர்ச்சனைகள் இடம்பெற்று பின்னர் மதியம் ஒரு மணியளவில் யாகம் கலைக்கப்பட்டது.

 


 

ஆர்யாவை நேரில் பார்த்தால் அடிப்பேன் : எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாஷினி!!

குஹாஷினி

நடிகர் ஆர்யா – சாயிஷாவின் திருமணம் குறித்து எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியளாரான குஹாஷினி பகிர்ந்துள்ளார். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தன்னை மணமுடிக்க விரும்பியவர்களில் 16 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் பழகினார் நடிகர் ஆர்யா. அந்தப் பழகுதலுக்குப் பிறகு, பதினோறு பேர் எலிமினேட் ஆக, மீதி ஐந்து பேரின் வீடுகளுக்கு சென்றார்.

பின்னர், இருவர் எலிமினேட் ஆக, கடைசியில் அகதா, சீதாலக்ஷ்மி, சுசானா ஆகிய மூன்று பேர் இறுதிச் சுற்றுக்கு வந்தனர். ஆனால், இறுதியில் யாரையும் மணப்பெண்ணாக தெரிவுசெய்யவில்லை ஆர்யா. இந்த நிகழ்ச்சியில் மக்களின் கவனம் ஈர்த்தவர் அபர்னதி. அவரின் வெளிப்படையான பேச்சு அனைவரும் பிடித்துப்போனது, மேலும் அவரும் உண்மையாக ஆர்யாவை காதலிக்க தொடங்கினார்.

தற்போது, ஆர்யா – சாயிஷாவின் திருமணம் மார்ச் மாதம் நடக்கவிருப்பதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன், இதிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என பேட்டி அளித்தார் அபர்னதி.

இந்நிலையில் மற்றொரு போட்டியாளரான குஹாஷினி அளித்துள்ள பேட்டியில், ஆர்யா தற்போது தனது மதத்துடன் தொடர்புடைய பெண்ணை தெரிவு செய்துருக்கிறார். அப்படியிருக்கையில், பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மதங்களை கொண்ட பெண்களை உள்ளடக்கிய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் எதற்காக கலந்துகொண்டார்.

இந்த செய்தி எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நேரில் பார்த்தால் ஆர்யாவை கண்டிப்பாக அடிப்பேன். எனக்கு இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுடன் பழகுவதற்கு அதிகமாக விருப்பமில்லை. அவர் திருமணத்திற்கு அழைத்தால் கூட நான் செல்லமாட்டேன் என கூறியுள்ளார்.

திருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன் : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஜேர்மானிய பெண் ஒருவர் திருமணம் முடிந்த அன்று இரவு, ரத்தம் தோய்ந்த இடத்தில் கடும் சித்ரவதைக்கு ஆளானதாக கூறியுள்ளார்.

சிரியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிய ஐந்து ஜேர்மன் ஐ.எஸ்.ஐ.எஸ் அங்கத்தவர்களில் ஒருவரான டெரீயா ஓ, தற்போது பொலிஸாரின் புலனாய்வு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து அவர் கூறுகையில்,, என்னுடைய இளம் வயதுகளில் நான் ஜேர்மனியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அப்போழுது தான் முதன்முறையாக மரியோ ஸ்கியன்னிமானிகாவை ஆன்லைனில் சந்தித்தேன். ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் இருப்பதை பார்த்து மயங்கிவிட்டேன். இளம்வயது என்பதால் வேறு எதைப்பற்றியும் எனக்கு தோணவில்லை.

திருமணம் முடிந்துவிட்டதா என கேட்டதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். உடனே அவரை நான் திருமணம் செய்துகொண்டு துருக்கி நாட்டிற்கு புறப்பட்டேன். அப்பொழுது என்னை கட்டாயப்படுத்தி பர்தா உடையை அணிய வைத்தார்கள்.

முதலிரவுக்காக நான் சென்ற அறை முழுவதும் ரத்தம் தோய்ந்த சங்கிலிகள் கிடந்தன. அதை பார்த்ததும் நான் பயத்தில் உறைந்து போனேன்.

அதற்கு நடுவே பல சித்ரவதைகளை அனுபவிக்க ஆரமித்தேன். அதன்பிறகு நாங்கள் ஈராக்கிற்கு புறப்பட்டோம். அங்கு 2015-ம் ஆண்டு எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.

நான் ஸ்கியன்னிமானிகாவிடம் இருந்து விவாகரத்து கேட்டேன். அந்த சமயத்தில் தான், 2018-ம் ஆண்டு கொல்லப்பட்ட ஜேர்மனின் பிரபல பயங்கரவாதி டெனிஸ் கஸ்பெர்ட், என்னிடம் காதலை கூறினார்.

மிகவும் நல்ல மனிதன். நான் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்துகொடுத்தான். ஆனால் நான் அவனுடைய காதலை நிராகரித்துவிட்டேன்.

அதன்பிறகு பெல்ஜியன் ISIS தளபதி அபு சலாஹூடின் இரண்டாவது மனைவி ஆக முடிவு செய்தேன். அனைத்தும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. 2 மாதம் கழித்து ட்ரோன் மூலம் அவர் கொலை செய்யப்படும் வரை.

எனக்கு கெட்ட அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. என்னை சுற்றியுள்ள அனைத்து ஆண்களுமே இறந்துவிடுகின்றனர். பின்னர் மீண்டும் என்னுடைய முதல் கணவனை தேடி சென்றேன். ஆனால் அவரை பொலிஸார் கைது செய்து கடும் சித்ரவதைகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதற்கிடையில் மனித கடத்தல்காரர்களை பயன்படுத்தி, சிரிய-துருக்கிய எல்லைப்பகுதிகளை தாண்டி ஐ.எஸ்.ஐ.எஸ். பிரதேசத்திலிருந்து தப்பி ஓடிவிட்டேன் என கூறியுள்ளார்.

50 பவுண் நகைக்காக நடிகையை கொலை செய்த காதலன்!!

நடிகை யாஷிகா

சென்னை கொளத்தூரில் கடந்த 12 ஆம் திகதி நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். யாஷிகா இறந்துபோவதற்கு முன்னர் தனது தாய்க்கு வட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.

அதில், தன்னை நம்பி வந்த என்னை ஏமாற்றிவிட்டார், நான் இறந்தபிறகு எனது காதலன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து யாஷிகாவின் காதலன் அரவிந்தனை பொலிசார் கைது செய்தனர். மேலும் யாஷிகாவின் தாய் அளித்துள்ள புகாரில், வீட்டில் சுமார் 50 சவரன் தங்க நகை மாயமாகி உள்ளதாகவும், தமது மகளை அரவிந்த், நண்பர்களுடன் சேர்ந்து நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார்.

யாஷிகாவின் உடலுக்கு அவசர அவசரமாக தாம் வந்து சேருவதற்கு முன்பாகவே இறுதி சடங்குகள் செய்திருந்ததாகவும், தம்மை கட்டாயப்படுத்தி யாசிகாவின் உடலை எரிப்பதற்கு கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.