இந்தியாவில் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட மதிய உணவு பாத்திரத்தில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது Gargavan Zilla Parishad முதன்மை பள்ளி. இங்கு இரு தினங்களுக்கு முன்னர் மதிய உணவாக கிச்சடி வழங்கப்பட்டது.
1ஆம் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு வரை உள்ள 80 மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது கிச்சடி கொண்டு வரப்பட்ட பெரிய பாத்திரத்தில் பாம்பு இருப்பதை ஊழியர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உணவு வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டது.
குறித்த உணவை மாணவர்கள் யாரேனும் சாப்பிட்டார்களா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்
வவுனியாவில் அண்மையில் கண்டி வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகை ஒன்றில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வவுனியா கண்டி வீதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குச் செல்லும் பிரதான வாசலிலும் நீதிமன்றத்திற்கு முன்பாகவும் தற்போது அண்மையில் பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீதிப் பெயர்ப்பலகையிலேயே இவ்வாறு ஹொறவப்பொத்தான வீதி என்பதற்கு பதிலாக ஹொறவப்பொத்தாள வீதி என்று வீதிப்பலகையில் பதிவேற்றப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் வசித்துவரும் தமிழ்மக்களினால் இவ்வாறு அரச கரும மொழிகள் அமைச்சரின் செயற்பாட்டில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதுடன் அமைச்சரின் இணைப்பாளர்கள், மாவட்ட செயலகத்திலுள்ள அரச கரும மொழிகள் பிரிவு என்பவர்களின் கண்களில் தெரியவில்லையா? என்ற கேள்வியையும் ஏழுப்பியுள்ளனர்.
தவறுகள் இடம்பெறுவது தவிர்க்கப்படவேண்டும். தமிழ் மொழியில் அரச உயர் அதிகாரிகள் பணியாற்றும் வவுனியா பகுதியில் இவ்வாறான ஒரு செயற்பாட்டில் தவறு ஏற்பட்டுள்ளது என்பது தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகவுள்ளதாகவும் பொதுமக்களிளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் அரச கரும மொழிகள் அமைச்சரின் கவனத்திற்கக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தனியார் கல்வி நிலையங்களை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் கல்வி நிலையங்களின் சங்கத்தலைவர் தி.கோபிநாத் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாவித்தியன் தினம் நாளைய தினம் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கோடு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை 03.02.19 மகாவித்தியன் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் குறித்த நிகழ்வில் பழைய மாணவர்களுடன் அவர்களது பிள்ளைகளும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இலகுவாகவும் தனியார் கல்வி நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா நகரசபையின் தலைவர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் விடுத்த கோரிக்கையினை தனியார் கல்வி நிலையத்தின் ஒன்றிய நிர்வாகம் இன்று விசேட கூட்டமொன்றின் ஊடாக தீர்மானத்தினை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம் நாளை ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் ஆண்டு உட்பட்ட அனைத்து தனியார் வகுப்புகளையும் நிறுத்துவது எனவும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகள் வழமைபோன்று நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்தர வகுப்பு மாணவர்கள் பலர் வேறு பிரதேசங்களில் இருந்து வவுனியாவிற்கு விடுமுறை நாட்களில் வருகை தந்து கற்பதுடன் சிலர் தங்கியிருந்தும் தமது கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.
அத்துடன் உயர்தர வகுப்புகளுக்கு கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்தும் ஆசிரியர்கள் வவுனியாவிற்கு வருகை தருவதனால் குறித்த வகுப்பை நிறுத்துவது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் குளிரான காலநிலை காரணமாக இதுவரையில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் மேற்கு பகுதி மாநிலங்கள் அனைத்து கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளது.
உறைபனி காரணமாக விறைத்தும், அதனுடன் தொடர்புபட்ட விபத்துக்களில் சிக்கியும் எட்டுப் பேர்வரையில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில் இது கடும் மோசமான குளிர் காலநிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ பகுதியில் இருக்கும் குளிரை விட இப்போது அமெரிக்காவில் அதிக குளிர் நிலவி வருகிறது.
இதனிடையே, நேற்று மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்துள்ளதாகவும், இந்த பனிப்பாறைகள் சிதைவு மேலும் விரிவடைய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழல் என்னும் கடுங்குளிர் பருவநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நோர்வூட் பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்த நபருக்கு மரணதண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான நபர் ஒருவருக்கே நுவரெலியா மேல் நீதிமன்றம் இவ்வாறு மரணதண்டணை விதித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம், நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையிலேயே மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண், வைத்தியசாலையில் வைத்து வழங்கிய இறுதி வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.
கோவையில் ரயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடூரை சேர்ந்த அமல்குமார் என்பவரும், அதேப்பகுதியை சேர்ந்த சூர்யா நாயர் என்ற பெண்ணும் தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் கொல்லத்திலிருந்து கோவை வழியாக செல்லும் ரயிலில் ஏறிய இருவரும், கோவையை அடுத்த போத்தனூரில் இறங்கியுள்ளனர்.
போத்தனூர் ரயில் நிலையத்தில் இறங்கிய இந்த ஜோடி, காலை 6 மணியளவில் தண்டவாளத்தின் மீது அரை கி.மீ தூரத்திற்கு நடந்து சென்றுள்ளனர். பின்னர் அவ்வாழியாக சென்ற விரைவு ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
இறக்கும் போதும் இருவரும் பிரியக்கூடாது என்பதற்காக உடலை சுடிதார் துப்பட்டாவால் கட்டப்பட்டு இவ்வாறு செய்துள்ளனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவை ரயில்வே பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது தண்டவாளத்தின் அருகே இளம்பெண் பயன்படுத்திய கைப்பை சோதனை செய்த பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷ்யாவில் ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி, மூன்று வருடமாக பிறப்புறுப்பின் மூலமாகவே உடல் கழிவுகளை வெளியேற்றி வருகிறார். ரஷ்யாவை சேர்ந்த வரிய கல்சேவ், என்கிற சிறுமி பிறக்கும் போதே ஆசனவாய் இல்லாமல் பிறந்துள்ளார். ஆனால் இதனை மருத்துவர்கள் கவனிக்க தவறிவிட்டனர்.
அவளுடைய பிறப்புறுப்பும் மாறுபட்ட விதத்தில் இருப்பதை பார்த்து பெற்றோர் சந்தேகமடைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறியபொழுது, பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அதற்கான நேரம் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளனர்.
ஆனால் மூன்று வயதை எட்டியதும் சிறுமி மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மகளை எடுத்துச்சென்று ஆண்ட்ரே – ஸ்வெட்லானா தம்பதியினர் சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மகளின் நிலை குறித்து பேசியுள்ள ஆண்ட்ரே, என்னுடைய மகள் பிறக்கும்பொழுதே உறுப்புகளுக்கு இடையே ஒரு அசாதாரண இணைப்பின் காரணமாக ஆசனவாய் இல்லாமல் பிறந்துவிட்டாள். அதன்விளைவாக சிறிது நாட்கள் கழித்து பிறப்புறுப்பின் வழியே மலம் வெளியேற்ற ஆரம்பித்துவிட்டாள்.
உள்ளுரில் எந்த மருத்துவர்களும் இதனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. தற்போது அவளுக்கு முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவிட்டது. இம்மாத இறுதியில் இரண்டாவது அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. நிறைய நாட்களை நாங்கள் இழந்துவிட்டோம். இப்போது மாஸ்கோ மருத்துவர்களின் கைகளில் தான் அனைத்தும் உள்ளது எனத்தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். இவரின் பெற்றோருக்கு 14 குழந்தைகள். அதில் 8 பேர் இறந்துவிட ஆறு பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர்.
இதில் தாசன், அம்மு என்ற சகோதரி இறந்த பிறகு பிறந்ததால் அவருக்கு பெற்றோர் சகோதரியின் பெயரையும் சேர்த்து அம்முதாசன் என்று அழைத்தனர்.
அம்முதாசன் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருக்கூத்து போன்றவற்றை நடத்தி வந்துள்ளார். இதற்காக அவர் வெளியூர் சென்ற போது அம்மினி என்ற பெண்ணை சந்திக்க, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்து அம்முதாசன் குடும்பத்தை பிரிந்து அம்மினியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க சென்னை சென்ற அம்முதாசன் அங்கு கோடம்பாக்கத்தில் தங்கி ஒரு சில படங்களில், சிறு சிறு வேடத்தில் நடித்து வந்துள்ளார்.
ஆனால் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் அவர் மீண்டும் கேரளாவிற்கு திரும்பியுள்ளார். கேரளாவின் நெடும்பாசேரியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்தார்.
அம்முதாசனின் மருமகன் ஒருவர் சமீபத்தில் மலையாள டெலிவிஷன் சேனல் நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.
அங்கு தன்னுடைய மாமா அம்முதாசனையும் அழைத்துச் சென்றார். அங்கு அம்முதாசன் குடும்பத்தை பிரிந்து 53 ஆண்டுகள் ஆகிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், கண்ணூரில் சிலர் அந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். அவர்களுக்கு அந்த நபர் அம்முதாசன் என தெரிய வந்தது. அவர்கள் இது பற்றி கண்ணூரில் வசித்த அம்முதாசனின் இளைய சகோதரர் பாலகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர்.
அதன் பின் அவர் அம்முதாசனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்களின் குடும்ப விவரங்கள் பரிமாறப்பட்டன. இதன் மூலம் அம்முதாசனின் இளைய சகோதரர் பால கிருஷ்ணன் என்பதை இருவரும் உறுதி செய்து கொண்டனர்.
இதையடுத்து பால கிருஷ்ணணும், அம்முதாசனும் குடும்பத்தினருடன் சந்தித்தனர். அப்போது மகிழ்ச்சி மிகுதியில் கட்டி அணைத்து கொண்டனர். இது பார்த்தவர் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
53 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரை பிரிந்து சென்றவர் இப்போது மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது கண்ணூர் பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தீவிபத்தினிடையே கட்டிடம் இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதில் 8 மாத கர்ப்பிணியான ஃபாத்திமா என்ற யுவதி தமது நான்கு பிள்ளைகளையும் போராடி காப்பாற்றிய பின்னர் மரணத்திற்கு சரணடைந்துள்ளார். 27 வயதான ஃபாத்திமா தமது உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் 4 பிள்ளைகளையும் பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளார்.
ஃபாத்திமா குடியிருந்த கட்டிடத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வந்த இனிப்பகத்தில் இருந்து கொழுந்துவிட்டெரிந்த தீ இவர்களின் குடியிருப்புக்கும் வியாபித்துள்ளது. தீ விபத்து குறித்து தெரியவந்ததும் துரிதமாக செயல்பட்ட ஃபாத்திமா தமது நான்கு பிள்ளைகளையும் ஜன்னல் வழியாக பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்டுள்ளார். பிள்ளைகள் நால்வரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த ஃபாத்திமா அதன் பின்னர் தாம் தப்பித்துக் கொள்ள வழி தேடியுள்ளார்.
ஆனால் அருகாமையில் இருந்த கட்டிடம் இடிந்து ஃபாத்திமாவின் மீதே விழுந்துள்ளது. இதில் சிக்கிய ஃபாத்திமா சுய நினைவை இழந்துள்ளார். அதே வேளையில் எரிவாயு சிலிண்டர்கள் ரெண்டு வெடித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி தாயார் கொல்லப்படுவதை பிள்ளைகள் நால்வரும் கண்ணீருடன் பார்த்து நின்றுள்ளனர்.
இதனிடையே தீக்காயங்கள் காரணமாக பிள்ளைகளை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஃபாத்திமாவின் கணவரும் அவரது சகோதரர்களும் இனிப்பகத்தின் வெளியே பரிதவிப்புடன் நின்றுள்ளதாகவும், உதவிக்கு எவரும் முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கணவர், மகளையும் வெட்டிய கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது. நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (55). இவருக்கு கல்யாணி (40) என்ற மனைவியும், ஆர்த்தி (16) என்ற மகளும் உள்ளனர்.
நேற்றிரவு 10 மணிக்கு மேல் முத்து, கல்யாணி, ஆர்த்தி ஆகிய 3 பேரும் இரவு தூங்குவதற்கு தயாரானார்கள். அப்போது வீட்டுக்கதவை சிலர் தட்டினர். உடனே முத்துவின் மனைவி கல்யாணி வீட்டுக்கதவை திறந்தார். கதவு முழுமையாக திறக்கப்படவில்லை. அதற்குள் 4 பேர் கும்பல் திபு, திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தது.
கதவை திறந்த கல்யாணியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டிய நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து இறந்தார். கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு முத்துவும், அவருடைய மகள் ஆர்த்தியும் ஓடி வந்தனர். அந்த கும்பல் அவர்களையும் சுற்றி வளைத்து வெட்டியது.
அவர்கள் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்களது அபயகுரல் அந்த பகுதி முழுவதும் கேட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்னவோ, ஏதோ என்று ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் படுகாயமடைந்த முத்து, ஆர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கல்யாணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கும்பல் வெறியாட்டத்தால் கொலை நடந்த வீடு முழுவதும் ரத்தம் ஆங்காங்கே சிதறி கிடந்தது போர்க்களம் போல் காட்சி அளித்தது. பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையாளிகள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
கல்யாணி மட்டும் கொலை செய்யப்பட்டு இருப்பதால் அவரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முத்து குடும்பத்துக்கும், இன்னும் சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. அதனால் இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவுக்கு திரும்பிய கோடீஸ்வரர் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயராம் சிக்ருபதி. இவர் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு தலைவராக இருந்தார். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் தொழில் விடயமாக இந்தியாவுக்கு வந்த ஜெயராம் சொந்த ஊரான விஜயவாடாவுக்கு வந்தார்.
விஜயவாடா நெடுஞ்சாலையில் ஜெயராமின் கார் அனாதையாக நேற்று நின்றிருந்தது. அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்த போது காரின் பின் சீட்டில் ஜெயராம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். கார் உள்ளே இருந்த மது பாட்டில்களையும் கைப்பற்றினார்கள். ஜெயராம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அந்த கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.
பொலிசார் கூறுகையில், ஜெயராம் தற்போது ஹைதராபத்தில் உள்ள நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். கடந்தாண்டு ஜனவரி மாதம் தன்னுடைய நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தராத வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதோடு அவர் மீது சில மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஜெயராம் இறந்தது குறித்து அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவருக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் முறையில் விரோதிகள் இருக்கிறார்களா என விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.
திருச்சியில் தன்னுடைய மனைவி 15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பிவிட்டதாகவும் ஒருவர் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவர், ஆன்லைன் மூலம் திருச்சி கருமண்டபம் நேரு நகரை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை சந்தித்து, 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த சில நாட்களிலே உதயகுமார் மீண்டும் வெளிநாட்டிற்கு கிளம்பிவிட்டார். சில மாதங்கள் கழித்து போன் செய்த மகாலட்சுமி தான் கர்பமடைந்திருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு பெரும் மகிழ்ச்சியடைந்த உதயகுமார், உற்சாக மிகுதியில் மன்னார்குடி திரும்பியுள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, வீட்டை காலி செய்துவிட்டு மகாலட்சுமி சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.
உடனே மனைவியை தொடர்புகொள்ள முயற்சித்தபோது செல்போன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. பல்வேறு இடங்களில் தேடிய அவர் இறுதியாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
அதன்பிறகு எதேச்சையாக மனைவியின் மின்னஞ்சல் முகவரியை ஆய்வு செய்துள்ளார். அதனை திறந்து பார்க்கும்போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. மகாலட்சுமி பல ஆண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அதில் பதிந்திருந்துள்ளன. மேலும், பலருடன் ஆபாசமாக சாட் செய்திருக்கும் பதிவுகளும் கிடைத்துள்ளன.
இதில் முதல் கணவரால் கர்பமடைந்திருந்த போது அவர் எட்டி உதைத்ததில், மகாலட்சுமியின் கர்ப்பம் கலைந்திருப்பதும் அதில் இடம்பெற்றிருந்தது. இவற்றையெல்லாம் பார்த்து உதயகுமார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அப்போது திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திலிருந்து போன் செய்த பொலிஸார், மனைவியை எட்டி உதைத்ததில் கரு கலைந்துவிட்டதாக மகாலட்சுமி என்பவர் புகார் கொடுத்துள்ளார். விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளனர்.
இதற்கிடையில் உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மகாலட்சுமி கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரங்களை திரட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு உதயகுமார் விரைந்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார், என்னை ஏமாற்றி 25 பவுன் நகை, 5 லட்சம் பணத்தை சுருட்டி கொண்டு மகாலட்சுமி ஓடி விட்டார். தற்போது ஆந்திரா பக்கம் உள்ளதாக அறிந்தேன். தனக்கு தந்தை இல்லை என்று முதலில் கூறி பரிதாபத்தை சம்பாதித்து அதன் வாயிலாக அவர், சுமார் 15க்கும் மேற்பட்ட ஆண்களை அவர் திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார் எனக்கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை, கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூரக்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் மகாலட்சுமி (30).
இவரும் அதே பகுதியை சேர்ந்த மோகன் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இருவரும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்ததால், திருமணத்திற்கு இருவீட்டாரும் ஒப்புக்கொண்டனர். அதன்படி திருமணத்திற்கான வேலைகள் தீவிரமா நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு மகாலட்சுமியின் வீட்டிற்கு வந்த மோகன், அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு பின்புறம் அமைந்திருக்கும் தைலமரக்காட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்துள்ளார்.
மகாலட்சுமி வீடு திரும்பாததால் அவரை அழைக்க காட்டுக்கு வீட்டார் சென்றுள்ளனர். அப்போது மகாலட்சுமி இறந்த நிலையிலும், மோகன் ரத்தக்காயங்களுடனும் கிடந்துள்ளனர்.
இதனை பார்த்து பதறிய வீட்டார்கள் மோகனை மீட்டு வேகமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுபுறம் மகாலட்சுமியின் சடலத்தை கையில் தூக்கியவாறே கதறி அழுதுகொண்டிருந்துள்ளனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோகனிடம் விசாரணை மேற்கொள்கையில், மர்ம நபர்கள் சிலர் தாக்கிவிட்டு தப்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால் முன்னுக்குப்பின் முரணாக மோகன் பேசியதால் சந்தேகமடைந்த பொலிஸார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில், திருமணம் தொடர்பாக மகாலட்சுமிக்கும், மோகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாகி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று தைலமரக்கட்டில் பேசிக்கொண்டிருந்த போதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் உருட்டுக்கட்டையை எடுத்து மகாலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். தலை மற்றும் காதுப்பகுதியில் ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே மகாலட்சுமி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மோகனை கைது செய்துள்ளனர்.
வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று (01.02) மாலை 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தேசியக்கொடியை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார். அணிவகுப்பு மரியாதையை அதிதிகள் ஏற்றுக்கொண்டதுடன் நிகழ்வில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளுக்கு வெற்றிக்கேடயங்களை கலந்து கொண்ட பிரதிநிதிகள் வழங்கி வைத்துள்ளனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு பாடசாலை அதிபரினால் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கலந்து கொண்டிருந்ததுடன், கௌரவ விருந்தினராக வடமாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான செயலாளருமான எஸ்.சந்திரகுமார், சிறப்பு விருந்தினர்களாக தூய அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.ஜெயபாலன் மற்றும் உதவி பங்குத்தந்தை நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, செந்தில் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் பிரதி அதிபர், ஆசிரியர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமானப்படையினர் வசமிருந்த பாடசாலை மைதான புனரமைப்பிற்கு 20 இலட்சம் ரூபா வழங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு வன்னி விமானப்படையினரின் வசமிருந்து இறம்பைக்குளம் பாடசாலை மைதானம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதன் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் மைதானம் மண்ணிடப்பட்டு செப்பனிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் நேற்று பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
ஒரு சமுதாயம் அல்லது ஒரு பிரதேசம் எழுச்சி பெறுகின்றது என்றால் அந்த பிரதேசத்திலே கல்விசார் சமூகம் உயர்ச்சி, வளர்ச்சி அடைகின்றபோது தான் அவ்வாறான வளர்ச்சி காண முடியும் கல்வியோடு சேர்ந்ததாக விளையாட்டுத்துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.
ஒரு மனிதனுடைய பண்புகளை, மனிதனுடைய ஒழுக்கத்தை கல்வியோடு மாத்திரமல்லாமல் ஒருவர் உயர்ந்த ஒரு அந்தஸ்தை அடைந்தால் ஒழுக்கம் இல்லை என்றால் அந்தப் பதவிகளால் எந்தப்பயனும் கிடையாது என்பது தான் யதார்த்தம் கல்வியோடு சேர்ந்த ஒழுக்கத்தை உங்களுடைய இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஒழுக்கத்துடன் சேர்த்து கல்வியை வழங்கி வருவதை இங்கு உங்களுடைய சில மணி நேரத்திற்குள்ளே நான் கண்டுகொண்டேன்.
சிறந்த பெறுபேறுகளை இந்தக் கல்லூரி பெற்றுத்தந்திருக்கின்றது. இந்த வவுனியா மண்ணுக்கு மட்டுமல்லாமல் நாடாளாவிய ரீதியிலேயே நல்ல வைத்தியர்களை, நல்ல பொறியியலாளர்களை, சட்டத்தரணிகளை ஆசான்களை இன்னொரன்ன நல்ல சமூதாயத் தலைவிதிகளை இந்த கல்லூரி பல தசாப்தங்களாக உருவாக்கி வந்துள்ளது.
உங்களுடைய அதிபர் என்னுடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக்கு நீண்ட காலமாக மிகவும் நெருக்கமான தொடர்புள்ளவர் அவர் இந்தக்கல்லூரி மீது மிகவும் இரக்கமும், மாணவர்கள் மீது அன்பும் வைத்துக்கொண்டுள்ளார்.
கல்லூரியினுடைய வளர்ச்சியிலேயே மிக அக்கறையாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் ஒரு சிறந்த ஒரு நிருவாகி என்பது எனக்குத் தெரியும் அவர் இந்தப்பாடசாலையிலேயே இருந்து சென்று மீண்டும் வந்து உங்களுக்காகப் பணியாற்றுவது அது ஒரு மிகவும் சிறப்பு அம்சமாக நான் பார்க்கின்றேன்.
என்னையும் இங்கு அழைத்து உங்களுடைய தேவைகளையும் என்னிடம் கூறி கடந்த காலங்களிலே வந்து சில அரசியல் வாதிகள் சில விடயங்களை நிறைவேற்றுவதாக சொன்ன விடயங்கள் நிறைவேறவில்லை என்ற விடயங்கள் எங்களுக்கு அவருடைய பாணியிலேயே அழகாக எடுத்துச் சொல்லி இன்னும் இந்த மைதானத்திற்கு அழைத்து வந்து மைதானத்தினுடைய நீண்ட எதிர்கால திட்டங்களையும் சொல்லி அதற்கு எந்த வழியிலே உதவ முடியுமோ உதவுங்கள் என்றும் எங்களிடத்தில் கேட்டிருக்கின்றார்.
இந்தக்கல்லூரி அதிகமான நல்ல ஒழுக்கமுடைய மாணவச் செல்வங்கள் இருக்கின்றீர்கள்.
இந்தக்கல்லூரியினுடைய மகிமையை நீங்கள் ஒவ்வொருவரும் நாளை இந்தக்கல்லூரியை விட்டு வெளியேறுகின் போது உயர்ந்த அந்தஸ்தோடும் உயர்ந்த பெறுபேறுகளுடன் எதிர்காலத்திலே நல்ல மனிதர்களாக ஒழுக்க சீடர்களாக சிறந்த வைத்தியர்களாக பொறியியலாளர்களாவோ? அல்லது வேறு துறையைச் சார்ந்தவர்களாகவோ? செல்லுகின்ற பொழுது இந்தக்கல்லூரியிடைய மகிமையையும் இந்தப் பெயரையும் காப்பாற்றுகின்ற மாணவச் செல்வங்களாக நீங்கள் உங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
இங்குள்ள அத்தியாவசியத்தேவைகள் கல்வி அமைச்சுடன் சேர்ந்து எதுவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் நிச்சயமாக நாங்கள் அதிபருடனும் உங்களுடைய குழுவினருடனும் பேசி நாங்கள் செய்ய முயற்சிப்போம் அதுபோல அவசரமாக இந்த மைதானத்திற்கான மண் நிரப்ப வேண்டும் என்று அதிபரும் அபிவிருத்திக்குழு செயலாளரும் சொன்னார்கள் 35 இலட்சம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சொன்னார்கள்.
உடனடியாக ஒரு 20 இலட்சம் ரூபாவை நாங்கள் மண் நிரப்பி செப்பனிடும் வேலைக்காக ஒதுக்கீடு செய்வதற்கும் இன்னும் தேவையான வசதிகளை எதிர்காலத்திலே இந்த விளையாட்டு மைதானத்திற்காகவும் அதேபோல பாடசாலைக்காகவும் எங்களால் முடிந்ததை செய்வோம் இந்தக்கல்லூரி எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியின் வெற்றி விழா கூட்டம் வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியில் இன்று (01.02.2019) வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், வங்கி முகாமையாளர், உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியில் கடந்தகால வேலைகள் அனைத்தையும் நிறைவுசெய்து சமப்படுத்தியதன் காரணமாக வவுனியாவில் உள்ள சமுர்த்தி வங்கியில் முதல்தர வங்கியாக மாற்றிய வங்கி முகாமையாளர், வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வவுனியா பிரதேச செயலாளர் தனது நன்றியினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.