அகில இலங்கை ரீதியில் மற்றுமொரு சாதனையை நிலைநாட்டிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!!

 

மட்டக்களப்பு மைக்கல் கல்லூரியால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதிற்குற்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 3ஆம் இடத்தை தனதாக்கியுள்ளது.

அகில இலங்கை ரீதியில் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, புனித மைக்கேல் கல்லூரியின் உள்ளக அரங்கில் நேற்று மாலை இறுதிச்சுற்று போட்டி இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 12 அணிகள் இச் சுற்றுப்போட்டியில் பங்குகொண்டன.

இதன் போது இடம்பெற்ற இறுதி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும், சிறப்பு அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரனும் கலந்துகொண்டனர்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட அகில இலங்கை ரீதியிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணி முதல் இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மோசமான செயல் : அவுஸ்திரேலியாவில் காதலிகளுக்காக செய்தசெயல்!!

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களின் செயற்பாடு குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் படுமோசமாக விளையாடி தோல்வியை தழுவி இருந்தது.

படுதோல்வி அடைந்த இலங்கை அணி வீரர்கள் தங்கள் தோல்வி குறித்து வெட்கம், வருத்தமின்றி மிகவும் உல்லாசமாக நேரத்தை செலவிட்டு வருவதாக ரசிகர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமான தோல்வியை இலங்கை சந்தித்திருந்தது. 5 நாட்களில் நிறைவடைய வேண்டிய டெஸ்ட் போட்டி 4 நாட்களில் நிறைவடைந்தது.

இந்நிலையில் மேலதிகமாக இருந்த ஒரு நாளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கடைகளுக்கு சென்று மனைவி மற்றும் காதலிக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

போட்டி நிறைவடைந்த பின்னர் நேற்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விருந்துகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் சிலர் வீரர்களுக்காக மேலும் சில விருந்துகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த விருந்தில் மதுவினால் நடத்தப்பட்ட விருந்தாக காணப்பட்டதென கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த விருந்தின் பின்னர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அவுஸ்திரேலிய இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஏழரை இலட்சம் ரூபாவும், ஒப்பந்த பணத்திற்கு மேலதிகமாக சம்பளப்பமும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் பரபரப்பை ஏற்படுத்திய குள்ள மனிதர் : ஏலியன்ஸ் தரையிறங்கியதா?

குள்ள மனிதர்

அம்பாறையில் நள்ளிரவில் வந்த குள்ள மனிதரால் அந்தப் பகுதியில் அச்சநிலை காணப்படுவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் இரவு நேரத்தில் வரும் 2 அடி நபரால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். குறித்த பகுதியில் வயல்களுக்கு பல முறை இந்த அமானுஷ்ய நபர் வந்து சென்றதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி தனது சோள பயிர்ச் செய்கைக்கு இரவு நேர பாதுகாப்பு வழங்கிய கருணாதிலக்க என்பவர் குள்ள நபரை பார்த்ததும் பயத்தில் ஓடிச் சென்றுள்ளார். அருகிலுள்ள விவசாயிகளையுடன் மீண்டும் அவ்விடத்திற்கு வந்த பார்த்த போது குள்ள மனிதர் மாயமாகியுள்ளார். தனது திகிலான அனுபவம் குறித்து கருணாதிலக்க கருத்து வெளியிடுகையில்,

நான் கடந்த இரண்டாடம் திகதி இரவு பயிர்களை பார்வையிடுவதற்காக வந்தேன். வந்த இடத்தில் சற்று ஓய்வு எடுக்கலாம் என நினைத்து ஓரமாக சாய்ந்து கொண்டேன். எனக்கு திடீரென சத்தம் ஒன்று கேட்டது. நான் எழுந்து லைட் அடித்து பார்க்கும் போது 2 அடியில் ஒருவர் நபர் நின்றார். தலை முடி நீளமாக வளர்ந்து காணப்பட்டது.

முகம் சிவப்பு நிறமாகவும், உள்நோக்கி சென்றது போன்று காணப்பட்டது. உதடுகளும் சிவப்பு நிறமாக காணப்பட்டன. நான் லைட் ஒளியை அவரது முகத்தில் அடித்து சத்தமிட்டேன். எனினும் அந்த நபர் ஒரு அடியேனும் நகரவில்லை. பின்னர் நான் அச்சமடைந்து ஓடிச் சென்றேன். ஏனைய விவசாயிகளை அழைத்து வந்தேன். எனினும் அந்த நபரை காணவில்லை.

குள்ள மனிதர் வந்து சென்றமைக்கான பாதச் சுவடுகள் ஆதாரமாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரம், பொலநறுவை பகுதிகளில் வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறக்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் ஆராய்ந்த துறைசார் அதிகாரிகள் அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குள்ள மனிதர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு!!

 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு வைரவபுளியங்குளத்திலுள்ள மாவட்ட காரியாலயத்தில் நேற்று காலை 10 மணிக்கு தமிழீழ விடுதலை இயக்க தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளர் சபா.குகதாஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்ட இளைஞர் அணி செயலாளராக சு.சுகந்தனும் துணைச் செயலாளராக ச.அபிஷேக் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்வுக் கூட்டங்களில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் விஜயகுமாரன், பிரதி அமைப்பாளர் நாகராஜன், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ATM இயந்திரங்கள் மூலம் பணம் மோசடி : மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

வங்கிகளின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவதாக மத்திய வங்கிக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை நாளை வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள தன்னியக்க இயந்திரங்கள் (ATM) ஊடாக நிதி மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்றினால் சேகரிக்கப்பட்டுள்ளன.

அந்த தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளை தயாரித்து பணம் பெறப்படுவதாக குற்றத்தடுப்புத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

கடந்த சனிக்கிழமை முதல் ஏ. டி. எம். (ATM) இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவதாக பல்வேறு தனியார் மற்றும் அரச வங்கிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஈ.எம்.வி சிப் (EMV Chip) தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத வங்கிகளிலிருந்து மட்டுமே இவ்வாறான மோசடி இடம்பெற்றுள்ளதாக, இது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளன.

மேலதிக பாதுகாப்பின் நிமித்தம் ஈ.எம்.வி சிப் (EMV Chip) தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் கூறப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல என்பதால் சில வங்கிகள் இந்த தொழில்நுட்பத்தை இதுவரை பயன்படுத்தாமல் உள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய வேண்டும் : ஆளுநர் அதிரடி உத்தரவு!!

வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று விடுத்துள்ளார். இது தொடர்பில் ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும், கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி/இடம் தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு (2019.03.04) முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை வட மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் இன்று (05.02) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 0212231343 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை வட மாகாணத்தின் நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய நடுத்தர மற்றும் சிறிய பிரச்சார பதாதைகளில் (Banners, Hoardings) அவை பிரச்சாரப்படுத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டபோது வழங்கப்பட்ட அனுமதி இலக்கங்களையும் இணைத்து காட்சிப்படுத்த வேண்டுமென்றும் இதுவரையிலும் அந்த அனுமதி இலங்கங்கள் இல்லாது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளில் அவற்றை இணைத்துக் கொள்வதற்கு பதாதைகளை காட்சிப்படுத்திய நிறுவனத்தினர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

காட்சிப்படுத்துவதற்கான அனுமதிக்காலம் முடிவடைந்தும் இன்னும் அகற்றப்படாத பிரச்சார பதாதைகளை உரிய தரப்பினர் இரண்டு வாரங்களுக்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்வேண்டும் என்பதுடன் அவ்வாறு அகற்றப்படாத, தகவல்களை இணைத்துக் கொள்ளாத பதாதைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஆளுநர் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது : பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பரபரப்பு தகவல்!!

சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எஸ்.எம்.சார்ள்ஸ், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க திணைக்களத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. உரிய அறிவுறுத்தல்கள் எதுவுமின்றி, பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன்.

தன்னுடைய இந்தத் திடீர் இடமாற்றம், பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. சுங்கத் திணைக்களம், கடல் போன்றது. சட்டவிரோதமான கடத்தல்கள், வியாபாரங்கள் என அனைத்தும், சுங்கத் திணைக்களத்தினூடாகவே இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில், எனக்குக் கீழுள்ள அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே, திடீரென நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்.

இந்நிலையில், தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பிலும், தனது திடீர் இடமாற்றம் தொடர்பாகவும் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்

நீர்த்தேக்கத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு!!

மாணவியின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா, கிலண்டில் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சவுந்தர்ராஜ் கீத்தலா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 3 நாட்களாகக் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்துள்ளார் என பொலிஸாரால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஹட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடினப்பட்டு சிரித்துக் கொண்ட ரணில் – மைத்திரி!!

ரணில் – மைத்திரி

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பு காலிமுக திடலில் நேற்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் மாலைத்தீவின் ஜனாதிபதி பிரதமராக கலந்து கொண்டிருந்த நிலையில், பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்றுள்ளார். எனினும் இந்த வரவேற்று புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன், இது குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒக்டோபர் 26 அரசியல் சதியானது முறியடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற போதும் அரசியல் முறுகல் நிலை தீராத நிலையிலேயே உள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த வரவேற்பானது சம்பிரதாயத்திற்காக மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட போதும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கடினப்பட்டு சிரித்துக் கொண்டதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

மோசமான நடவடிக்கையால் சிங்கப்பூரில் வசமாக சிக்கிக் கொண்ட பிரபல இளம் நடிகை!!

பிரபல இளம் நடிகை

இலங்கையின் பிரபல நடிகை ஒருவர், சிங்கப்பூரில் உள்ள ஆடம்பர வர்த்தக நிலையம் ஒன்றில் சில அழகு சாதன பொருட்களை திருடிய நிலையில், அந்த வர்த்தக நிலையத்தின் ஊழியர்களால் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நடிகை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் முன்னர், அவருடன் சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த செல்வந்த வர்த்தகர், நடிகை எடுத்த பொருட்களுக்கான பணத்தை செலுத்தி, அவரை விடுவித்துள்ளார்.

இந்த இளம் நடிகை அண்மை காலமாக இலங்கையின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் எனவும், அவர் நடித்துள்ள தொலைக்காட்சி தொடர்கள் தினமும் ஒளிப்பரப்பாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நடிகை செல்வந்த வர்த்தகருடன் தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவில் சுதந்திரதினத்தினை முன்னிட்டு மூன்று சிறைக்கைதிகள் விடுதலை!!

சிறைக்கைதிகள் விடுதலை

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையிலிருந்து மூன்று சிறைக்கைதிகள் நேற்று (04.02.2019) காலை 10.30 விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இலங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கல்லுடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து யேசுபுரம் பிரதேச மக்கள் தொடர் உண்ணாவிரதம்!!

 

யேசுபுரம் பிரதேச மக்கள் தொடர் உண்ணாவிரதம்

வவுனியா பெரியகோமரசங்குளம், யேசுபுரம் பகுதியில் உள்ள சிறிய மலைகுன்றில் கல்லுடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மலையின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் குறித்த பகுதியில் கொட்டகை ஒன்றை அமைத்து தொடர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இப் பிரதேசத்தில் கல் உடைப்பதினால் பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்படுகின்ற நிலை உருவாகியுள்ளது. அருகில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் வெடிப்புகள் உருவாகின்றது. கல்லுடைப்பதற்கு பயன்படும் வெடிபொருளில் இருந்து பரவுகின்ற நச்சுத் தன்மையானது குழந்தைகள் சுவாசிக்கும் போது அவர்களிற்கு அசௌகரியங்களை கொடுப்பதுடன் நோய்களும் ஏற்படுகிறது. குறித்த விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த டிசம்பர் மாதம் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், அரச அதிபருக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.

அதற்கமைய குறித்த பகுதியில் கல் உடைப்பதால் பாதிப்புகள் ஏற்படுகின்றதா என்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்திருந்தது. அதன் பின்னர் கல் உடைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த ஆய்வு நடவடிக்கையின் போது சிறிய அளவிலான வெடிபொருட்களே பயன்படுத்தபட்டதாகவும், ஆனால் தற்போது மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தபடுவதாகவும் குற்றஞ்சாட்டும் கிராமவாசிகள், குறித்த மலையில் கல்லுடைக்கும் பணிக்கு முற்றுமுழுதாக தடைவிதிக்கபடவேண்டும் என்று தெரிவித்தனர்.

இதேவேளை போராட்டம் நடைபெறும் பகுதிக்குச் சென்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அம் மக்களின் கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்ததுடன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் அழைத்து கலந்துரையாடியிருந்தார். குறித்த கல்லுடைக்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதாக பொலிசார் இதன்போது தெரிவித்தனர். எனினும் மக்களது போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

வவுனியா சின்னப்புதுக்குளம் கிறிஸ்தவ தேவாலயத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்!!

 

வவுனியா சின்னப்புதுக்குளத்தில் அமைந்துள்ள இயேசுவின் அற்புத சபை ஊழியரும், சபையினரும் நேற்று (04.02.2019) காலை 8 மணிக்கு இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.

தேசம் செழிப்படையவும் இன மத பேதமின்றி நாட்டு மக்கள் யாவரும் சமாதானமாக வாழவும் இறையாசி வேண்டி சபை சகோதரி தர்ஷாவினால் பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் தங்கல்ல தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன் சபை தலைமைப் போதகர் ஜேசுதாசனினால் கிறிஸ்தவக் கொடி ஏற்றப்பட்டது.

வவுனியா பட்டானிச்சூரில் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு சிரமதானம்!!

 

வவுனியா பட்டானிச்சூர் ஜம்இய்யதுல் உலமா பிரதேசக் கிளையினால் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக நல்லிணக்க அடைப்படையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் பிரதான வீதி 6ம் ஒழுங்கை பிள்ளையார் கோயிலில் இருந்து பட்டானிச்சூர் முஸ்லிம் மையவாடி வரைக்கும் உள்ள பாதைகளில் உள்ள இரு ஓரங்களையும் சுத்திகரிக்கும் பணி இடம்பெற்றது.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டம்!!

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2019) காலை 9 மணிக்கு இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா உட்பட அதிதிகள் அழைத்து வரப்பட்டு நகரசபை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட இடத்தில் தேசியக் கொடியினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஏற்றி வைத்திருந்தார். அதன் பின் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் இடம்பெற்றது. அதன் பின்னர் பாடசாலை மாணவர்கள், படையினரின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், கடற்ப்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு படை, இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், சர்வ மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாரதி உறங்கியமையினால் ஏற்பட்ட விபரீதம்!!

அனுராதபுரம் – ஹொரவப்பொத்தான பிரதான வீதியில் நேற்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

ஹொரவபொத்தான பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறி வீதியை விட்டு விலகியமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதிக்கு ஏற்பட்ட உறக்கமே லொறி வீதியை விட்டு விலகுவதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் லொறி சேதமடைந்துள்ளதுடன் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான மின் கம்பம் ஒன்றும் உடைந்து விழுந்துள்ளது