தூக்கில் தொங்கிய பெண் சிறைக்காவலர் வழக்கில் அதிரடி திருப்பம் : 3 பேருக்கு பொலிஸார் வலைவீச்சு!!

தூக்கில் தொங்கிய பெண் சிறைக்காவலர்

திருச்சியில் பெண் சிறைக்காவலர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், காதலன் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகள் செந்தமிழ்செல்வி (23).

இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் தனி கிளை சிறையில் 2ம் நிலை வார்டனாக பணிபுரிந்து வந்தார். இவரும் திருச்சி மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்து வரும் வெற்றிவேல் (24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். காவலர் பயிற்சி மேற்கொண்டபொழுது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.

இந்த விவகாரம் அதே சிறையில் வார்டனாக உள்ள வெற்றிவேலின் அண்ணன் கைலாசம் மற்றும் மகளிர் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வரும் அவருடைய மனைவி ராஜ சுந்தரி ஆகியோருக்கு தெரியவந்துள்ளது.

செந்தமிழ்செல்வி வேறு சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால், இருவரும் சேர்ந்து ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது. மேலும், வெற்றிவேல் தன்னுடைய காதலை முறித்துக்கொண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவும் தயாராகியுள்ளார்.

இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி நேற்றைக்கு முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், செந்தமிழ்செல்வியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள வெற்றிவேல், கைலாசம் மற்றும் ராஜசுந்தரியை பிடிக்க தனிப்படை அமைத்து பொலிஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் செந்தமிழ்செல்வியின் அறையில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை’ என அவர் டைரியில் எழுதியிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பெற்ற மகளை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

பெற்ற மகளை கொலை செய்த தந்தை

ஆந்திர மாநிலத்தில் வேறு சமுகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால், பெற்ற மகளை தந்தையே துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் Kothapalem கிராமத்தை சேர்ந்த கோட்டா வெங்கட் ரெட்டி என்பவருடைய மகள் வைஷ்ணவி (20). தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் வைஷ்ணவி, சக கல்லூரி மாணவர் ஒருவரை சில வருடங்களாகவே காதலித்து வந்துள்ளார்.

இதனை அறிந்துகொண்ட வெங்கட், பலமுறை மகளை கண்டித்து பார்த்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத வைஷ்ணவி, தந்தையின் வார்த்தையை காதில் வாங்காமல் எதிர்த்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று கல்லுரியிலிருந்து வேகமாகவே வைஷ்ணவி உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த உடனே, தந்தைக்கும்-மகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே காதலனை திருமணம் செய்துகொள்வேன் என வைஷ்ணவி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கட், திடீரென மகளின் கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கட்டை கைது செய்துள்ள பொலிஸார் ஆணவக்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் விசமிகளால் வெட்டப்பட்ட மரத்தால் போக்குவரத்துக்கு சிரமம்!!

 

விசமிகளால் வெட்டப்பட்ட மரம்

வவுனியா பூவரசன்குளம் இலுப்பைக்குளம் பிரதான வீதியில் விசமிகளால் பாரிய முதிரை மரமொன்று வெட்டி வீழ்த்தப்பட்டதனால் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா பூவரசன்குளம் இலுப்பைக்குளம் வீதியில் வேலங்குளத்தை அடுத்த சிவா நகர்ப்பகுதியிலேயே நேற்று இரவு வீதியோரத்தில் நின்ற பொறுமதிவாய்ந்த முதிரை மரமொன்றினை விசமிகள் சிலர் வெட்டி வீழ்த்தியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பிரதான பாதையினூடான போக்குவரத்து இன்று காலை பாதிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்கள் அரச அலுவலர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்றப்பட்டது.

இந் நிலையில் குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள விமானப்படடையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வீதிக்கு குறுக்காக காணப்பட்ட மரத்தினை வெட்டி அகற்றி துப்பரவு செய்ததன் பயனாக நீண்ட நேரமாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரான நிலைக்கு திரும்பியிருந்தது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைப்பெய்யும்!!

கிழக்கு, ஊவா, மற்றும் வடமத்திய மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகின்றது இலங்கை?

மரண தண்டனை

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்த இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஐந்து பேர் குறித்த சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் கடந்த மாதம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டிருந்த நீதி அமைச்சர் தலதா அத்துகோரல,

“போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியபோதும் அதுதொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை

ஒக்டோபர் 12ம் திகதி முதல் ஜனவரி இறுதி வரையில் 5 பேரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அது குறித்த ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியபோதும் அதுதொடர்பில் பதில் எதுவும் வரவில்லை.” என கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான வெற்றிடத்தை நிரப்ப தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை பேச்சாளர் துஷார உபுல்தெனிய சர்வதேச ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கடந்த ஆண்டு விளம்பரம் செய்யப்பட்ட போதிலும், பொருத்தமான ஒருவர் முன்வரவில்லை எனவும், தொழில்நுட்ப ரீதியில் அலுகோசு ஊழியர்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தேவையேற்பட்டால் விரைவாக ஒருவரை அந்த இடத்திற்கு நியமிக்க முடியும் என” அவர் மேலும் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் பரவி வரும் பரபரப்பான தகவல்களால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் குழப்பத்தில்!!

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் குழப்பத்தில்

இலங்கையிலுள்ள அனைத்து வங்கி வலையமைப்பும் ஊடுருவப்பட்டுள்ளதாக இலங்கை பரிமாற்ற நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளமான வட்ஸ்அப் மூலம் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“இலங்கை வங்கி கட்டமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் ATM அட்டையின் தகவல்கள் இணைய ஊடுருவிகளின் கைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் வங்கியில் கணக்குகளிலுள்ள ATM அட்டைகளை செயலிழக்க செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இந்நிலையில் இலங்கையின் பிரதான இரண்டு வங்கி நிறுவனங்கள் ATM அட்டை கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.” என வட்ஸ்அப் ஊடாக தகவல் பரவி வருகின்றது. எனினும் இதுவொரு அடிப்படையற்ற போலியான செய்தி என இலங்கை பரிமாற்ற நிறுவனம் மறுத்துள்ளது.

இலங்கையில் வங்கி கட்டமைப்புகள் எவையும் ஊடுருவப்படவில்லை. அவ்வாறு வட்ஸ்அப் தகவல்கள் கிடைத்தால் அதனை மற்றவர்களுக்கு பகிர்வதனை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் சிலர் மற்றும் அமைப்புகள் இணைந்து ATM இயந்திரம் ஊடாக பணம் கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.

ATM இயந்திரங்களுக்கு அருகில் உபகரணம் ஒன்றை பொருத்தி அவற்றின் மூலம் தரவுகள் சேகரித்து ATM அட்டை தயாரிக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் ATM இயந்திரங்கள் மூலம் பணம் எடுக்கும் போது மிகவும் அவதானமாக மேற்கொள்ளுமாறு கொடுக்கல் வாங்கல் மேற்கொள்பவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிகளிலும் மக்கள் தமது சேமிப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் வங்கிகள் தொடர்பில் வெளிவரும் முரண்பாடான கருத்துக்களால் ஒட்டுமொத்த மக்களும் அச்சமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

வவுனியாவில் பொலிசாரை திக்குமுக்காட வைத்த கொள்ளையர்கள் : நடந்தது என்ன?

கொள்ளையடிக்க முயற்சி

வவுனியாவில் கடந்த 31ம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தினால் பொலிஸார் குழப்பமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா – மன்னார் வீதியிலுள்ள கடை ஒன்றிற்குள் நுழைந்த இரண்டு இளைஞர்களை பணம் கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடையின் உரிமையாளரிடம் கத்தினை காட்டி பணம் கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில் பிரதேச மக்கள் இணைந்து குறித்த இளைஞர்களை பிடித்து பொலிஸாாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மரக்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடிக்க சென்ற இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் வாக்குமூலம் அளித்தனர்.

அதில், தாம் பழம் கொள்வனவு செய்வதற்கே கடைக்குள் சென்றதாகவும், அப்பிள் பழம் ஒன்றை வெட்டுவதற்காக கத்தியை வெளியே எடுத்த போது உரிமையாளர் அச்சமடைந்து கத்தி கூச்சலிட்டதாகவும், இதன் போது அங்கு வந்தவர்கள் தம்மை பிடித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸார் கைது செய்யப்பட்ட இளைஞர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் நீதிமன்ற வழக்குத் தாக்கலால் கைவிடப்பட்டது!!

உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியா பெரிய கோமரசங்குளம் ஜேசுபுரம் பகுதியில் உள்ள சிறிய மலை குன்றில் கல்லுடைப்பதால் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக தெரிவித்தும், கல்லுடைக்கும் பணியினை முற்றாக நிறுத்துமாறு கோரியும் அந்த மலையின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சிதம்பரபுரம் பொலிசார் மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சென்று குறித்த மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அதனடிப்படையில் மலையில் கல் உடைப்பதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்வதாக தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுச்சென்ற பொலிஸார் இன்றையதினம் வவுனியா நீதி மன்றில் குறித்த வழக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர்.

இதனால் உண்ணாவிரத போராட்டம் நேற்று மதியத்துடன் நிறைவிற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிவமோகன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் ஆகியோர் சென்று கலந்துரையாடியிருந்தார்கள்.

வவுனியாவில் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம்!!

 

துண்டுப்பிரசுரம் விநியோகம்

1000 ரூபாய்க்கான போராட்டம் காட்டிக் கொடுப்புக்களை எதிர்த்து முன்னோக்கிச் செல்கின்றது. காட்டிக்கொடுக்கும் தொழிற் சங்கங்கள் வழமைபோல போராட்டத்திற்குத் துரோகமிழைத்துள்ளன எனக் கோரிய துண்டுப்பிரசுரங்கள் இன்று வவுனியா நகர்ப்புறங்களில் வவுனியாவிற்கான 1000 ரூபா இயக்க அமைப்பினரால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

1000ரூபாவை வெல்லும் வரையிலும் போராடும் 1000 ரூபா இயக்கம் இத்துண்டுப்பரசுரத்திற்கு உரிமை கோரியுள்ளனர். அத்துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கையில்,  தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் வழமைபோன்று மீண்டும் துரோகமிழைத்துள்ளன.

மதிப்பார்ந்த வாழ்க்கைக்கான தொழிலாளர்களது கோரிக்கையை மீண்டுமொருமுறை தூக்கியெறிந்துவிட்டு தொழிற்சங்கத் தலைவர்கள் முதலாளிகளுடன் இரகசியமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றார்கள்.

மூன்று மாதகாலம் நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் வெறும் 20 ரூபாய் சம்பளம் அதிகரிப்பிற்கு உடன்பட்டிருக்கின்றார்கள். இந்த உளுத்துப் போன தொழிற்சங்கங்கள் தோட்டத்துரைமாரை திருப்திப்படுத்துவதற்காக தொழிற்சங்கத் துரைமார்கள் செய்துள்ள மிகத் தெளிவான வெட்கக்கேடான துரோகம் இது.

தேசிய பொருளாதாரத்திற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வழங்கும் பாரிய பங்களிப்பினை இவர்கள் கருத்திற்கூட எடுக்கவில்லை. இந்த அசிங்கமான அரசியலுக்கு நாம் முடிவுகட்டவேண்டும்.

1000ரூபா இயக்கம் எம் ஒவ்வொருவரினதும் இயக்கம். அது இப்போராட்டத்தில் வென்றே தீருவதென முடிவெடுத்துள்ளது. வெற்றியை எட்டும் வரை இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதென 1000ரூபா இயக்கம் உறுதிமொழி ஏற்றிருக்கின்றது.

சம்பள உயர்விற்கும் அப்பால் மதிப்பார்ந்த வாழ்வுக்கான எமது நிலங்களுக்காக, சுகாதாரத்திற்காக வீடுகளுக்காக, கல்வி உரிமைக்காக, ஏனைய உரிமைகளுக்காக விரிவடையப்போகும் எமது போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் என நாம் உங்களை அன்புடன் அழைக்கின்றோம் என்று மேலும் அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று வீட்டை விட்டு ஓடிவந்து பாலியல் தொழிலாளியாக மாறிய திருநங்கை : இன்று அவரது நிலை என்ன தெரியுமா?

திருநங்கை அருணா

தமிழகத்தில் அன்று பாலியல் தொழில் செய்து வந்த திருநங்கை இன்று அதிலிருந்து மீண்டு தன்னுடைய சமூகத்திற்கு போராடி வருகிறார். நாமக்கல் மாவட்டம் அருணகிரி சுள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணா. பள்ளியில் படித்து கொண்டிருந்த இவருக்கு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, தன் உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்துள்ளார்.

ஆனால் அப்போது இதற்கான மாற்றம் குறித்து அவருக்கு சரியாக தெரியவில்லை. இவரின் நடிவடிக்கையை பார்த்து அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளியில் பலரும் இவரை சீண்டியுள்ளனர். பத்தாவது முடித்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் மார்க் பெற்ற போதும் பலரின் கேலி, கிண்டல்களால், அவரால் படிப்பை தொடர முடியவில்லை.

இதனால் 1987-ஆம் ஆண்டு சென்னைக்கு ஓடி வந்த இவர், அங்கு இவர் சமூகத்துடன் சேர்ந்து கொண்டார். முதலில் கடைகளில் ஏறி காசு வாங்கிய இவர், அதன் பின் ஒரு வருடம் கழித்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பின் தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்காக பாலியல் தொழிலில் இறங்கியுள்ளார். அப்போது இதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்பதால், இந்த தொழிலில் இறங்கியுள்ளார்.

அப்போது பாலியல் ரீதியாக பல துன்புறுத்தல்களை அனுபவித்துள்ள இவர், நாள் ஒன்றிற்கு இத்தனை பேர் தான் என்று கணக்கில்லாமல் வாழ்ந்து வந்துள்ளார். வலி ஏற்படும் போது, மாத்திரைகள் கூட போட நேரமில்லாம தவித்து வந்துள்ளார். இப்படி இவரின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது, 1989-ல் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, நான்கைந்து பேர் இவரை அழைத்து பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளனர்.

ஆனால் இவர் வர மறுத்ததால், அவர்கள் அருணாவை சர்மாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின் அவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்தச் சம்பவத்தின் காரணமாகத்தான், தன் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இப்போது எல்லாம் திருநங்கைக்கு பிரச்சனை என்றால் 200 பேர் வருகிறார்கள். அப்போது இது எல்லாம் கிடையாது.

நான் அடைந்த கஷ்டத்திற்கு பின் 1998-ல் மகாராஷ்ட்ராவில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர களப்பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். தேவதாசி பெண்களுடைய உரிமைக்காக அவங்களுடைய மறுவாழ்வுக்காக வேலை பார்த்தேன். அப்படியே படிப்படியா பதவி உயர்வு பெற்று ஆலோசகரா அதே நிறுவனத்தில் வேலை பார்த்தேன். 2002-ல் மீண்டும் தமிழகத்துக்கு வந்தேன்.

இங்கே திருநங்கைகள் உரிமைக்காக ஓர் அமைப்பைத் தொடங்கினேன். தமிழ்நாடு முழுக்க பாலியல் தொழில் செய்கிற பெண்கள், திருநங்கைகள் இவர்களுக்கான நோய் தடுப்பு விழிப்பு உணர்வு பணியையும், அவங்களுடைய உரிமைகள் மற்றும் மறுவாழ்வுக்காகவும் வேலை பார்த்தேன்.

2012-க்குப் பிறகு தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரா இன்று வரை வேலை பார்த்து கொண்டிருக்கிறேன், திருநங்கைகள் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறி முடித்துள்ளார்.

இலங்கையில் தேடப்பட்ட பெரும்புள்ளி வெளிநாட்டு பொலிஸாரிடம் சிக்கியது எப்படி?

தேடப்பட்ட பெரும்புள்ளி

இலங்கையின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகதுரே மதுஷ் உட்பட குழுவினர் இன்று டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மாகதுரே மதுஷின் இரண்டாவது மனைவின் பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பிறந்த நாள் விழாவிற்காக பிரபல பாடகரான அமல் பெரேரா, சினிமா நடிகரான ரயன் உட்பட குழுவினர் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த பிறந்த நாள் விருந்து தொடர்பில் இலங்கை புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களுக்கமைய அபுதாபி பொலிஸாருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு செயற்பாட்டிற்கமைய இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குள் இரண்டு அரசியல்வாதிகளும் உள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாகதுரேயின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தையின் முதலாவது பிறந்த நாள் விருந்திலேயே இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அபுதாபியில் பிறந்த நாள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களுக்கமைய அபுதாபி பொலிஸார் மூலம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யும் போது பாரியளவு போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைக்குழந்தையுடன் போராட்டத்தில் இறங்கிய பெண் : கணவன் வேதனை!!

போராட்டத்தில் இறங்கிய பெண்

தமிழகத்தில் எட்டு மாத கைக் குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தார் என்னை ஆண்மை இல்லாதவன் என்று திட்டியதாக கணவன் கூறியுள்ளார்.

சென்னை நொளம்பூரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 8 மாதக் கைகுழந்தையுடன் இன்ஜினீயர் பிரணிதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பெண் எதற்காக போராட்டத்தில் இறங்கினார்? உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அந்த பெண்ணின் தந்தை பவலணனிடம் பிரபல தமிழ் ஊடகம் பேட்டி எடுத்துள்ளது.

அப்போது அவர் என்னுடைய மகள் பிரணிதாவுக்கும், தினேஷுக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இன்ஜினியரான என் மகள் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 2009-ல் 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.

பாடசாலையில் முதல் மதிப்பெண் எடுத்தவர். ஆனால் அவளின் வாழ்க்கை திருமணத்திற்கு பின் கேள்வி குறியாகிவிட்டது. தினேஷ் இரண்டு முறை என்னுடைய மகளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதன் பின் தனக்கு நேர்ந்த கொடுமைகளைகளை பிரணிதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சென்று கொண்டிருந்த போது 2017-ஆம் ஆண்டு அவள் கர்ப்பமானதால், தினேஷ் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, என் வீட்டில் விட்டுச் சென்றார். குழந்தை பிறந்த போதும் அவர் அழைக்க வராததால் வீட்டிற்கு சென்றோம். ஆனால் அவர்கள் எங்களை வீட்டிற்குள் விடவில்லை, இதன் காரணமாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவர் இன்ஜினியரிங் படித்ததாக கூறுகிறார். ஆனால் அவருக்கு அரியர்ஸ் இருக்கிறது. அவரின் அப்பா திமுக-வில் நல்ல நிலையில் இருப்பதால், பொலிசாரும் அவருக்கு சாதகமாக உள்ளனர். எங்களை இப்படி நயவஞ்சமாக ஏமாற்றிவிட்டனர் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இவர் இப்படி சொல்ல அதன் பின் தினேஷுடன் இது குறித்து கேட்ட போது, எனக்கும் பிரணிதாவுக்கும் திருமணம் நடந்த சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று பிரச்சனை செய்தார்.

அதுமட்டுமின்றி அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். எங்கள் வீட்டிற்கு வருவார். அவள் இப்படியே நடந்து கொண்டதால், மனைவியுடன் சேர்த்து வைக்கும் படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன் பின் சில மாதங்கள் என்னுடன் இருந்த அவள் மீண்டும் தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் என்று பிரச்சனை செய்து மீண்டும் அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

அவள் குடும்பத்தால் நான் நிறைய சங்கடங்களை சந்தித்துவிட்டேன்.திருமண முடிந்த நாளிலிருந்து இந்நாள் வரை என்னுடைய வாழ்க்கையே வழக்குகளில் ஆஜராகுவதிலேயே கடந்து செல்கிறது. எனக்கு குழந்தை பிறந்த போது, நான் வளையல் எல்லாம் போட்டு அழகு பார்த்தேன், நான் தான் அவளை மருத்துவமனையில் கவனித்து வந்தேன்.

நீதிமன்றத்தில் நடந்த விவாகரத்து வழக்கை குழந்தைக்காகவும் பிரணிதாவுக்காகவும் வாபஸ் பெற்றேன். குழந்தை பிறந்தபிறகு பிரணிதாவின் வீட்டுக்கு ஆசையாக நான் சென்றபோது என்னை அவர்கள் அவமானப்படுத்தினார்கள். என்னையும் என் குடும்பத்தினரையும் தரக்குறைவாகப் பேசினார்கள். அது ஏன் என்னை ஆண்மை இல்லாதவன் என்று கூட திட்டினார்கள்.

அப்போது தான் அவர்கள் என் மீது வரதட்சனை வழக்கு தொடர்ந்தனர். முன் ஜாமீன் பெற்ற நான் அவரின் குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நான், மீண்டும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சமயத்தில் என்னையும் என் குடும்பத்தினரையும் அவமானப்படுத்தத்தான் கைக்குழந்தையுடன் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

ஒன்றாக உயிரை மாய்த்து கொண்ட 4 உயிர் தோழிகள் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

4 உயிர் தோழிகள்

இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு தோழிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி தாகூர் (20), ஜம்னா (20), ஷீலா (18) மற்றும் ஹக்கி (16) ஆகிய நான்கு பேரும் அங்குள்ள கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் ஹக்கி என்ற சிறுமியை தவிர மற்ற மூவரும் திருமணமானவர்கள் ஆவார்கள். நால்வரின் சடலங்களும் இன்னும் கிடைக்காத நிலையில் அவர்கள் இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், மீனாட்சிக்கு இதய நோய் உள்ளது, ஜம்னா திருமணத்துக்கு பின்னர் தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கவில்லை.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். மீனாட்சி மற்றும் ஜம்னா இல்லாமல் ஷீலா மற்றும் ஹக்கியால் வாழ முடியாது என்பதால் நால்வரும் தற்கொலை செய்து கொள்கிறோம், எங்கள் இறப்புக்கு வேறு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பெண்களின் செருப்புகளும் கைப்பற்றப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இலங்கையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழன் : 150 கிலோமீட்டர் அங்கப்பிரதட்சை யாத்திரை!!

அங்கப்பிரதட்சை யாத்திரை

இலங்கையில் உள்ள அனைவரும் இன, மத பேதமின்றி சமாதானத்துடனும், சகவாழ்வுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் மன்னாரை சேர்ந்த நபரொருவர் நல்லிணக்க முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார்.

38 வயதான அன்ரன் கிருஸ்னன் டயஸ் என்பவரே மன்னார் – தள்ளாடி பகுதியில் இருந்து அநுராதபுரம் வரை அங்க பிரதட்சணத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார். மன்னார், வங்காலை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஆன்மீக மற்றும் ஆயுல்வேத, சித்த மருத்துவ ரீதியில் தேர்ச்சி பெற்றாவராக காணப்படுகின்றார்.

இவர் ஆரம்பித்துள்ள குறித்த முயற்சி திருக்கேதீஸ்வரம், மடு ஊடாக எதிர்வரும் 40 நாட்களில் அநுராதபுரத்தை சென்றடையவுள்ளது. தொடர்ச்சியாக அநேக பொதுமக்கள் இந்த முயற்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்கி வருகின்றனர்.

வவுனியாவில் பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற கிராம சேவையாளருக்கு இடமாற்றம்!!

கிராம சேவையாளருக்கு இடமாற்றம்

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவையாளர் பிரிவில் பெண்ணை கட்டிப்பிடிக்க முயன்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் அலுவலத்தில் கடமை நேரத்தில் வைத்து அவரை (கிராம சேவையாளரை) சந்திக்கச் சென்ற அரச உத்தியோகத்தர் ஒருவரை கிராம சேவையாளர் கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார்.

இவ்விடயம் தொடர்பான புகைப்பட ஆதாரத்துடன் அப்பகுதி மக்கள் வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து வவுனியா பிரதேச செயலகத்தினால் விசாரணைகள் முன்னேடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் விசாரணைகள் முடிவுறும் வரை தற்காலிகமாக குறித்த கிராம சேவையாளருக்கு வவுனியா பிரதேச செயலகத்தினால் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த விடயம் தொடர்பாக எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதினால் தற்காலிகமாக குறித்த கிராமசேவையாரை வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான விடயங்களை தெரிவிக்க முடியுமேன தெரிவித்தார்.

மகன் வெளிநாட்டில் : வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு இரவில் காத்திருந்த அதிர்ச்சி!!

பெண்ணுக்கு இரவில் காத்திருந்த அதிர்ச்சி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள விபுலானந்தா வீதியை அண்டி வசிக்கும் பெண்ணொருவரின் வீடு புகுந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனித்தம்பி கனகபூசணி எனும் சுமார் 70 வயதுடைய இந்த பெண் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரின் வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் புகுந்து சுமார் 12 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தனது மகன் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.