கண்ணீர் சிந்த வைத்த 9 வயது சிறுமியின் உருக்கமான கோரிக்கை!!

காணாமல்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடுவதற்காக அவர்களை நேற்று கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்திற்கு அழைத்திருந்தனர்.

இதன்போது, 9 வயது சிறுமி ஒருவர், அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தான் இதுவரை அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், அங்கிருந்த அனைவரும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தையான திலக் என்பவர் விடுதலைப் புலிகளின் திரைப்பட பிரிவில் கடமையாற்றியவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இதன் போது, திலக் என்பவரும் சரணடைந்திருந்தார்.

இதேவேளை, அதிகாரிகளை நோக்கி நகர்ந்த உறவுகள் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஒப்பாரியிட்டு அழுது புலம்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாலிருந்து நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான தமிழ் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளார்.

அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்த 30 வயதான திலீபன் 2016 இல் இன்னொரு அகதி தஞ்சகோரிக்கையுடன் வந்தடைந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்ரம்பரில் மகள் ஒருவர் பிறந்துள்ளார்.

எனினும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் விலாவுட் தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட திலீபன் இதுநாள் வரை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த கிழமை இவரது மனைவிக்கும் மகளுக்கு ஐந்து வருட தற்காலிக வதிவிடவுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இவரது பலவந்தமான நாடுகடத்தல் அதிர்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்ச்சியான சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றபோதும், அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பாராமுகமாக இருப்பதாக தமிழ் அகதிகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை பலவந்தமான நாடுகடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு விலாவுட் தடுப்புமுகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்!!

இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கான அலுகோசு பதவியை ஏற்பதற்கு தயாராக இருப்பதாக பெண்ணொருவர் அறிவித்துள்ளார்.

சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான எல்.பீ.கருணாவத்தி என்பவரே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றுவது என்றால் சம்பளம் இல்லாமல் இந்த பதவியை ஏற்பதற்கு தான் தயார் என தெரிவித்துள்ளார்.

கோடி கணக்கான பெறுமதி கொண்ட போதை பொருட்கள் மற்றும் வேறு போதை மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து எதிர்கால சந்ததியை வீணடிக்கும் இவ்வாறான வர்த்தகர்களை தராதரம் பாராமல் அழித்து விட வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தர்ம தீவாக இருந்த இந்த நாட்டை மரண தீவாக மாற்ற ஒரு போதும் இடமளிக்க கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலரும் அச்சம் காரணமாக இந்தப் பதவிக்காக வர தயங்கும் போது. 70 வயதான கருணாவத்தியின் அறிவிப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வானத்தில் பறந்த எலும்புக்கூடுகள் : பிரம்மித்து நின்ற மக்கள்!!

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற பட்டம் விடும் போட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது விதவிதமான வடிவங்களில் அமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் பறந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் எலும்புக்கூடு போன்று வடிவமைக்கப்பட்டிருந்த பட்டங்கள் வானில் பறந்த போது அனைவரும் பிரம்மிப்பில் ஆழ்ந்தனர்.

யாழ். அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறித்த பட்டம் விடும் போட்டி நடத்தப்பட்டிருந்தது.

சரஸ்வதி சன சமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஹோட்டலில் நடந்த விபரீதம் : பிரபல நடிகைக்கு நேர்ந்த அவலம்!!

இலங்கையின் சிங்கள நடிகை ஒருவர் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேர விருந்திற்காக சென்ற பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கும் வேறு சிலருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு குறித்த நடிகை தகாத வகைகளில் பேசியவாறு அங்குள்ளவர்களுடன் மோதலில் ஈடுபட்டதனை நபர் ஒருவர் காணொளியாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தன்னை தாக்கியதாக கூறி தகாத வார்த்தைகளினால் அவர் அங்கிருந்தவர்களை திட்டியுள்ளார். கொழும்பு ஹோட்டல் ஒன்றிலேயே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கிரிபத்கொட ஹோட்டலிலும் இதற்கு முன்னர் அவர் இவ்வாறு இந்த மோதலை ஏற்படுத்தி கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

ஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி!!

உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியின் வெற்றியை கண்டு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆவேசமாக துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரான்ஸ் அணியின் வெற்றியை வீரர்களுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மழையிலும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

வெற்றி உறுதியானதும் மைதானத்தில் துள்ளி குதித்த காட்சி அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இதேவேளை, 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா உக்குளாங்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16.07.2018) அதிகாலை 4 மணியளவில் 19 வயதுடைய உயர்தர மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் குறித்த மாணவி வீட்டாருடன் முன்னர் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக அனுகியுள்ளார் (கவலையடைந்த நிலையில்).

இந் நிலையில் நேற்றிரவு வீட்டில் தனியறையில் உறங்கியுள்ளார். வழமை போன்று தங்கையை எழுப்புவதற்கு இன்று அதிகாலை சகோதரன் அறைக்கு சென்ற சமயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா இந்து அன்பக இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் தலைமையில் திருமணம்!!

 

தாய், தந்தையினை இழந்த நிலையில் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் நேற்று (15.07.2018) திருமணம் இடம்பெற்றது

மதுசா என்ற யுவதி 7 வருடங்களாகவும் கீர்த்தி என்ற யுவதி 5 வருடங்களாகவும் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் வசித்து வந்துள்ளனர். இவர்கள் திருமண வயதினை அடைந்தமையினால் அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மாவின் ஏற்பாட்டில் திருமணம் இடம்பெற்றது.

மதுசா என்ற யுவதிக்கு தமிழ் சேவைக்கால ஆலோசகர் திரு திருமதி உதயகுமார் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாகவும் கீர்த்தி என்ற யுவதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாக பொறுப்பேற்று திருமணத்தினை நடத்தி வைத்தனர்.

இந் திருமண நிகழ்வில் இரு மணமகன் வீட்டாரின் உறவினர்களும், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் , பொதுமக்கள் , அன்பகத்தில் உள்ள சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்துவைப்பு!!

வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும் மற்றும் ஊடக மையமும் நேற்று (15.07) மாலை 4 மணிக்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் சங்கத்தின் தலைவருமான பி.மாணிக்கவாசகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

செய்தியாளர் மாநாடு மற்றும் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்துவதற்கான ஒரு மத்திய நிலையமாக வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமானது இயங்கவுள்ளது.

அந்தவகையில் அலுவலகத்திற்கான மத அனுஸ்டான நிகழ்வுகள் ஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் நடைபெற்று சிரேஸ்ட ஊடகவியலாளர்களான பி.மாணிக்கவாசகம் மற்றும் டி.ரத்துகமகே ஆகியோரால் ஊடக மையமானது வைபரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அக வணக்கத்தை தொடர்ந்து அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் அலுவலக திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இவ் அலுவலக திறப்பு விழாவிற்கு வவுனியா நகரத்தின் பிரபல வர்த்தகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உதவியுள்ளதுடன் நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம்,

சமூக வலைத்தளங்கள் பெருகியதன் காரணமாக ஊடகங்கள் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளன. ஊடகவியலாளர்கள் ஒரு சங்கமாக ஒன்றிணைந்து செயல்ப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஊடகவியலாளர்கள் தொழில் ரீதியாக தங்கள் திறமைகளை வளர்த்து கொள்வதற்கும் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் இந்த சங்கம் அவசியமானதாக இருக்கிறது என தெரிவித்தார்.

திருமணமான 13 நாளில் புதுப்பெண் பலி : கணவர் கண்முன்னே நடந்த சோகம்!!

தமிழகத்தில் கடையநல்லூர் அருகே பேருந்து- மோட்டார் சைக்கிளுடன் மோதிக் கொண்ட விபத்தில் அண்ணன்- தங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் செல்வராஜ், சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் இவருக்கும், ஹேமலதா என்பவருக்கு கடந்த 1ம் திகதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் புதுமண தம்பதியினர் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் இலத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்.

இவர்களுடன் ஹேமலதாவின் தந்தை மற்றும் அண்ணனும் சென்றனர், கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது மங்களாபுரம் விலக்கு அருகே எதிரே வந்த அரசு பேருந்துடன் பைக் மோதியது.

இதில் ஹேமலதா மற்றும் அவரது அண்ணன் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர், தங்கள் கண்முன்னே நடந்த விபத்தை பார்த்து செல்வராஜ் மற்றும் ஹேமலதாவின் தந்தை கதறி அழுதனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், இருவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய பெண் : உருக்கமான கடிதம் சிக்கியது!!

மதுரையில் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

மதுரை டிவிஎஸ் நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, மினி லொறி டிரைவர்.

இவரது மனைவி மைக்கேல்ஜீவா, இவர்களுக்கு ஹரிதா(வயது 4), ஹரிகிஷோர் குமார்(வயது 3) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இருவரும் காதல் திருமணம் செய்தாலும், மைக்கேல்ஜீவாவின் நடத்தையில் ராஜாவுக்கு சந்தேகம் வந்தது.

இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு எழ மன உளைச்சலில் இருந்துள்ளார் ஜீவா. பிரச்சனை தொடர்ந்து கொண்டே செல்ல, இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

இதன்படி நேற்று குழந்தைகளின் முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டிவிட்டு, தூக்கி மாட்டி தற்கொலை செய்தார். இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ராஜாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனையிட்டதில் மைக்கேல்ஜீவா எழுதிய இரண்டு கடிதங்கள் இருந்தன.

ஒன்றில், நான் போடும் உயிர் பிச்சை, யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை, எனக்கு செய்த துரோகத்துக்கு நீ அனுபவிப்பாய்.

அதையும் நான் பார்க்கத்தான் போகிறேன், என்னையும், என் குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன்.

நீயும் சரி, உன் குடும்பமும் சரி அனுபவிப்பீங்க என எழுதப்பட்டிருந்தது. மற்றொரு கடிதத்தில், அம்மாவை பார்த்துக்கோங்க அக்கா, அனாதை போல் எங்களை எரித்துவிடவும், கணவர் கொள்ளி போடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ராஜாவை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

துப்பாக்கி முனையில் மொடல் அழகி சிறைபிடிப்பு : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் துப்பாக்கி காட்டி இளம் மொடலை மிரட்டி காதலிக்க ஒப்புக்கொள்ள வைத்த முரட்டு இளைஞன் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், மிஸ்ராட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் மொடல் ஒருவர் வசித்து வந்தார்.

இவரது குடியிருப்புக்கு நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் மொடலின் பெற்றோரை ஓர் அறையிலும் மற்றொரு அறையில் மொடலையும் சிறை வைத்தார்.

மட்டுமின்றி குறித்த மொடலை அடித்து துன்புறுத்தியதுடன் கத்திரியாலும் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் உள்ளே வந்தால் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்வேன் என்று அந்த இளைஞர் மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொலிசார், மொடலை சிறை வைத்திருப்பதன் காரணம் குறித்து விசாரித்தனர்.

அப்போது அந்த இளைஞர், தனது பெயர் ரோகித் என்கிற ரீகல் சிங் எனவும் தாமும் குறித்த மொடலும் மும்பையில் வசித்தபோது காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் போபால் திரும்பிய பின்னர் தமது காதலை நிராகரித்து வருவதாகவும், அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னை காதலிக்க வேண்டும். அதை பத்திரத்தில் எழுதி தரவேண்டும். இல்லையென்றால் விட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் உணவு மற்றும் தேவையானவற்றை பொலிசார் செய்து தந்துள்ளனர்.

நள்ளிரவு வரை நடந்த இந்தப் போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது. காதலுக்கும் திருமணத்துக்கும் அவர் சம்மதித்துவிட்டதாகவும் அது தொடர்பாக முத்திரைத்தாளில் எழுதிய வாங்கியதாகவும் ரோகித் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரோகித் கதவைத் திறந்தார். உடனடியாக பொலிசாரும் சட்டத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்று அந்தப் பெண்ணை பார்த்தனர்.

மொடலின் உடலில் ரத்தக் காயம் இருந்தது. ரோகித்தின் கைகளிலும் ரத்தம் வடிந்திருந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காதலும் காதலியும் கிடைத்த மகிழ்ச்சியில் ரோகித் இருக்க, திடீரென்று அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறினார், அந்த மாடல்.

“என்னை எப்படியாவது காப்பாத்துங்க. வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து தப்பிக்க, காதலிப்பதாக எழுதி கொடுத்துவிட்டேன். அதைத் தவிர வேறு வழியில்லை. அவனை எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. அவனை காதலிக்கவும் இல்லை” என்று அதிகாரிகள் முன்பு கண்ணிர் மல்கக் கூறியுள்ளார் அந்த மொடல்.

இதனையடுத்து ரோகித்தை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியை உலுக்கிய 11 பேர் மரணம் : கடைசி நேரத்தில் உயிர்தப்ப முயன்ற மூவர் : திடுக்கிடும் தகவல்!!

டெல்லி புராரி வழக்கில் கடைசி நேரத்தில் உயிர் தப்ப 3 பேர் முயன்றதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் புராரி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர்.

தகவலறிந்த பொலிசார் சம்பவயிடத்திற்கு சென்று உடல்களை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குடியிருப்பில் பணம், நகை என பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் 11 பேரும் எந்தவித போராட்டமுமின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது.

எனவே இது தற்கொலைதான் என்று விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்து அமானுஷ்ய கடிதம் மற்றும் டைரிகள் பொலிசாரிடம் சிக்கியது.

உயிரிழந்த நாராயணியின் மகன் லலித் பாட்டியா 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை போல் நடந்து கொள்வதாகவும் கடவுளை தரிசிக்க 11 பேரும் தூக்கில் ஆலமரம் விழுதுகளை போல் தொங்க வேண்டும் என்றும் லலித் மற்றவர்களை மூளைச் சலவை செய்திருந்ததாக தெரிய வந்தது.

தூக்கிட்டு கொள்ளும் எண்ணம் இருந்த இவர்கள் மறுநாள் சிற்றுண்டிக்காக கடலை பருப்பை நீரில் ஊறவைத்திருந்தனர்.

பாலை தயிராக்கும் முறையையும் செய்திருந்தனர். மேலும் அக்குடும்பத்தை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த சூழலில் அவர்கள் தற்கொலை செய்ய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. கடவுளை தரிசிக்க தூக்கிட்டு கொண்டால் கடவுளும் இறந்த தந்தையும் தங்களை காப்பாற்றுவர் என்ற மூடநம்பிக்கையை அந்த குடும்பத்தினர் கொண்டிருந்தனர்.

மேலும் கடவுளை தரிசிப்பது எப்படி என்பது தொடர்பாக 2015-ஆம் ஆண்டு முதல் அக்குடும்பத்தினர் டைரியில் குறிப்புகளை எழுதி வந்தனர்.

ஏராளமான மர்மங்கள் நிறைந்துள்ள இந்த மரணத்தில் 3 பேர் தப்பிக்க முயன்றனர் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி 11 பேரில் குறிப்பிட்ட 3 பேரின் கைகட்டுகள் அவிழ்ந்து இருந்தது தெரியவந்துள்ளது. எனவே இவர்கள் மூவரும் இந்த தூக்கில் இருந்து தப்பிக்க நினைத்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

4 மாதங்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முண்டக்கயம் பகுதியில் இருந்து ஜெஸ்னா மரியா என்ற 19 வயது மாணவி கடந்த மார்ச் 22 ஆம் திகதியில் இருந்து மாயமாகியுள்ளார்.

சிறப்பு குழு அமைத்து பொலிசார் தீவிரமாக தேடியும் குறித்த இளம்பெண் உயிருடன் உள்ளாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற தகவல் இதுவரை இல்லை.

சம்பவத்தன்று பேருந்து ஒன்றில் ஏறிச்செல்லும் மாணவி குறித்த கண்காணிப்பு கமெரா காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

மட்டுமின்றி முண்டக்கயம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் கடந்து செல்லும் கமெரா காட்சிகளையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

இருப்பினும் மாயமான மாணவி தொடர்பில் எந்த தகவலும் இன்றி பொலிசார் விழிபிதுங்கியுள்ள நிலையில், மாயமான மாணவியை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விமான நிலையத்தில் கண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மே மாதம் 5 ஆம் திகதி கிடைத்த இந்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு சென்ற பொலிசாருக்கு அந்த தகவலில் உண்மை இல்லை என தெரியவந்தது.

தற்போது மீண்டும் கர்நாடகாவில் உள்ள மடிவாளா பகுதியில் ஜெஸ்னா என்ற அந்த மாணவியை கண்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜெஸ்னா மாயமாவதற்கு முன்னர் தமது ஆண் நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் பலமுறை அழைத்ததாகவும், அவருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில் தாம் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆண் நண்பரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியும், இந்த வழக்கு தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மட்டுமின்றி விசாரணைக்கு உட்படுத்திய கமெரா காட்சிகளில் அந்த ஆண் நண்பர் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரோடு எரித்து கொல்லப்பட்ட அழகிய இளம்பெண் : கணவர் குடும்பத்தார் வெறிச்செயல்!!

இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் கணவர் குடும்பத்தாரால் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தெபஷிஸ். இவர் மனைவி சந்திரகாந்தி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணமானது முதலேயே சந்திரகாந்தியை அவர் கணவரும், மாமியாரான மனோரமாவும், மாமனாரான ரவீந்திராவும் 50,000 பணம் மற்றும் பைக்கை வரதட்சணையாக கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர்.

இது குறித்து தனது தந்தையிடம் சந்திரகாந்தி கூறிய போதும் ஏழ்மை நிலை காரணமாக அவரால் அதை தர முடியவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் சந்திகாந்திக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த அவரின் கணவர் மற்றும் மாமியார், மாமனார் சந்திரகாந்தி மீது மண்ணெணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சந்திரகாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகிறார்கள்.

தினமும் பப்பாளிப் பழத்தை சாப்பிடுங்கள் : கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சீரண மண்டலம் ஆரோக்கியம் பெறுவதுடன் பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும்.

பப்பாளி பழம் நீண்ட நாட்கள் இளமையாக இருப்பதற்கு உதவுகிறது. மேலும், பப்பாளி பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

அழகு
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பப்பாளி பழம் சருமத்திற்கும், வடிவத்திற்கும் உதவுகிறது. அத்துடன் அழகை மெருகேற்றுவதுடன், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள்
பப்பாளி பழத்தில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக்கோப்புடனும் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

மேலும், பப்பாளியில் உள்ள கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, பொட்டசியம், கால்சியம், வைட்டமின் சி, பி, ஏ, மக்னீசியம், என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள் போன்ற ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளன.

உடல் எடை குறைதல்
பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடை குறையும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி
பப்பாளி நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள வைட்டமின் சி, ப்ளோனாய்டுகள், ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் கரோட்டீனாய்டுகள் ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுபெற செய்யும்.

கண்களின் ஆரோக்கியம்
பப்பாளி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண்ணுக்கு தேவையான ஆரோக்கியத்திற்கு வெகுவாக உதவுகிறது. இது மக்குலார் டிஜெனரேஷன் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படாமல் தடுக்கிறது.

எலும்பு வலிமை
பப்பாளியை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்புகள் வலிமை பெறும். எலும்புகளில் அழற்சி பண்பை போக்க பப்பாளி உதவுகிறது. மேலும், பப்பாளியில் உள்ள வைட்டமின் சி ஆர்த்ரிட்டீஸ் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

சீரண சக்தி
பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்ற என்சைம், சீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே இந்த பழத்தை தினசரி டயட்டில் சேர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.