பூட்டிய வீட்டில் கிடந்த 3 சடலங்கள்: கதவை உடைத்து சென்ற தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

 

காத்திருந்த அதிர்ச்சி

ஆந்திராவில் பூட்டிய வீட்டினுள் 3 பேர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பலாப்பூர் பகுதியில் ஹனுமந்து (30) என்பவரின் வீடு பூட்டிய நிலையில் நீண்ட நேரமாக கிடந்துள்ளது.

இதனை பார்த்த அவருடைய சகோதரி கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்து வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு ஹனுமந்து, தன்னுடைய 9 மாத குழந்தை மற்றும் 26 வயது மனைவி சந்திரகலாவுடன் தற்கொலை செய்துகொண்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மூவரின் உடலையும் கைப்பற்றி உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ஹனுமந்த்திற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுஜாதாவுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஜாதா வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொல்வதாக மிரட்டி சென்றுள்ளார்.

இதனை நினைத்து பயந்து போன ஹனுமந்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் சுஜாதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

14 ஆண்டுகளாக கணவர் வெளிநாட்டில் : திடீரென வந்த தகவலால் அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

 

அதிர்ச்சியில் உறைந்த மனைவி

வெளிநாட்டில் இறந்த தனது கணவர் உடலை மீட்டுத்தருமாறு ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கண்ணீருடன் மனு அளித்துள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் கடந்த 14 ஆண்டுகளாக அரபு நாட்டில் உள்ள மஸ்கட்டில் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

அப்போது ஆண்டிற்கு ஒருமுறை விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஊருக்கு வந்துவிட்டு சென்றார். தினமும் போன் மூலம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பேசிவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் இறந்துவிட்டதாக அவருடைய மனைவி நந்தினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

எப்படி இறந்தார் என்ற விவரம் தெரிவிக்கவில்லை. இதனால் நந்தினி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து 2 நாட்களாகியும் தனது கணவர் பற்றி சரியான தகவல் கிடைக்காததால் நந்தினி நேற்று வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்

அதில், தனது கணவர் கடந்த 14 ஆண்டுகளாக மஸ்கட்டில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே வெளிநாட்டில் உள்ள எனது கணவரின் உடலை இந்திய தூதரகம் மூலம் மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்ட இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

 

இளம் பெண்

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு உயிருக்கு போராடிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் Wokingham பகுதியைச் சேர்ந்தவர் Sonia Bagga(39). இவருக்கு ராஜ்(44) என்ற கணவரும் 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு சொந்தமான விமானம் ஒன்றில் துபாயிலிருந்து பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது விமானத்தில் எள் விதைகள் கொண்டு சமைக்கப்பட்ட சிக்கன் உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட பின்னர் அவரால் சரிவர மூச்சுவிட முடியவில்லை, பேச முடியவில்லை, திணறியுள்ளார். இதனால் அவர் உயிருக்கு போராடியுள்ளார். அப்போது விமானத்தில் பெண் மருத்துவர் ஒருவர் அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இதையடுத்து விமானம் லண்டன் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் Hillingdon மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் அந்த நிமிடம் இறந்துவிடுவேன் என்று தான் நினைத்தேன்.

ஏனெனில் என்னால் மூச்சு விட முடியவில்லை, அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மருத்துவர் என்னை காப்பாற்றினார் என்று தான் சொல்ல வேண்டும், விமான நிறுவனத்தின் மீது நான் புகார் கொடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார். இது குறித்து விமானநிறுவனம் தெரிவிக்கையில், முதலில் எங்களுக்கு பயணிகள் பாதுகாப்பு முக்கியம், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவின் தங்க கழிவறைக்கு வந்த சோதனை!!

 

தங்க கழிவறை

விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய 9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் லண்டன் சென்று அங்கு வசித்து வந்த அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் வாங்கிய கடனுக்காக சொத்துக்கள் அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டன.

லண்டன் சொத்துகளைப் பாதுகாக்க லண்டன் நீதிமன்றத்தில் அவரது சட்டக்குழு எவ்வளவு போராடியும் இறுதியில் தோல்வியடைந்தனர்.

இதனால் சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி மல்லையாவின் அடமானக் கடனின் பேரில் லண்டன் கார்ன்வால் டெரஸில் உள்ள மல்லையாவின் ரீஜென்ட்ஸ் பார்க் மேன்ஷன் பறிமுதல் செய்யப்பட உள்ளது.

அந்த மேன்ஷனில் மல்லையா வைத்துள்ள தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் இருக்கையும் பறிமுதல் செய்யப்படவுள்ளது. யுபிஎஸ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய அடமானக் கடன் தொகை 20.4 மில்லியன் பவுண்ட் செலுத்தப்படாததால் இந்தச் சொத்துகளை வங்கிப் பறிமுதல் செய்கிறது.

மேலும் லண்டன் நீதிமன்றம் யுபிஎஸ் வங்கிக்கு மல்லையா தரப்பு 88,000 பவுண்ட் இடைக்கால சட்ட கட்டணங்களாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது

மெய்சிலிர்க்க வைக்கும் இலங்கை அகதிகளின் மனிதநேயம் : குவியும் பாராட்டுக்கள்!!

தமிழகத்தில் கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை உதவிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை அகதி மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியில் 450 இலங்கை அகதிகளின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . கஜா புயலின் கொடூர தாக்குதலுக்கு இவர்களின் வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், இவர்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாம் மூலம் தார்ப்பாய், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளனர். அதே நேரத்தில், அந்த பகுதி கிராம மக்களுக்கு அரசின் சார்பில் எந்த வித நிவாரணப் பொருட்களும் கிடைக்கவில்லை.

இதை அறிந்த இலங்கை அகதிகள் ஒன்றிணைந்து, தங்களுக்குக் கிடைத்த அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அருகே இருந்த கிராம மக்களுக்குக் கொடுத்தனர். இவர்களின் மனித நேயத்தைக் கண்டு கிராம மக்கள் பூரிப்படைந்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன டிஸ்க் விண்வெளியில் கிடைத்த அதிசயம்!!

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கணினிகள் பயன்படுத்தும் தொடக்க காலத்தில் பிளாப்பி டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த டிஸ்க்குகள் பயன்பாட்டில் இல்லை.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன விடயம், கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Space Station-யில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் தேடி பிடித்து, அதன் புகைப்படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.

இந்த புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அப்போது, 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்குகள் அதில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை Space Station உருவாக்கப்பட்ட சில நாட்களில் மொத்தமாக காணாமல் போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே இந்த டிஸ்க்குகளில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய முக்கியமான விடயங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவற்றை பூமிக்கு கொண்டு வந்த பின்னர் சோதனை செய்ய இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தோழியிடம் விடுத்த சவாலிற்காக பேய் நகங்களை பெற்ற அழகி : பயந்து ஓடும் பொதுமக்கள்!!

 

பயந்து ஓடும் பொதுமக்கள்

ரஸ்யாவை சேர்ந்த இளம்பெண் தன்னுடைய தோழியிடம் விட்ட சவாலில் வெற்றி பெறுவதற்காக பேய் போன்ற நகங்களை வளர்த்துக்கொண்டு துயரங்களை அனுபவித்து வருகிறார். ரஸ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியை சேர்ந்த 35 வயதான எலெனா ஷிலென்கோவா, பேய் போன்ற நீளமான நகங்களை 4 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், நான் சிறுவயது முதலே நீளமான நகங்களை வளர்த்து வந்தேன். ஆனால் ஒருமுறை என்னுடைய ஆசிரியை அதனை நறுக்கிவிட்டார். என்னுடைய தோழி ஒருத்தி நீளமான நகங்களை என்னால் வளர்க்க முடியாது என என்னிடம் சவால் விடுத்தாள். நான் வளர்த்து காட்டுகிறேன் என கூறி கடந்த 4 வருடம் 3 மாதங்களாக நகங்களை வளர்த்து வருகிறேன்.

இதனால் நான் பெரிய கஷ்டம் எதையும் சந்திக்கவில்லை. ஆனால் எனக்கு பிடித்தமான டென்னிஸ் விளையாட்டு விளையாட முடியவில்லை. கடலில் நீந்துவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நகம் உடைந்துவிடுமோ என்ற பயத்தில் கடலுக்கு செல்வதில்லை.

இரவு நேரங்களில் என்னுடைய நகம் உடைந்துவிட்டதை போல கனவுகள் வரும். நான் உடனே பயந்துபோய் நடு இரவில் எழுந்து சரி செய்வேன். ரஷ்யா குளிராக இருக்கும் என்பதால் நான் தெருக்களில் நடந்து செல்லும் போது, அதிகபட்சம், என்னுடைய ஆடைக்குள் தான் கைகளை விட்டுக்கொண்டு செல்வேன்.

ஒரு சில நேரம் என்னுடைய கைகளை பார்த்து பொதுமக்கள் பயந்து ஒதுங்கியிருக்கின்றனர். ஒரு சிலர் திட்டுவார்கள், ஒருசிலர் பாராட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த நகங்களை வளர்ப்பதால் நான் ஆண்களை கவர வேண்டுமென நினைத்ததில்லை. என்னை யாரவது ஒருமுறை பார்த்தல் வாழ்நாளில் மறக்க கூடாது என்பதற்காகவே வளர்த்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 28 நாட்களில் 72 ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு!!

 

பொருளாதார இழப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமித்ததுடன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமையால், ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு 72 ஆயிரம் கோடி ரூபாயையும் தாண்டியுள்ளதாக பொருளாதார மற்றும் நிதித்துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க இணங்கிய 1.85 பில்லியன் டொலர் தவணை கடன், அமெரிக்கா வழங்க இணங்கிய 490 மில்லியன் டொலர் நிதியுதவி மற்றும் ஜப்பான் வழங்க இணங்கிய 1.4 பில்லியன் டொலர் கடனுதவி என்பன தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் ஸ்திரமற்ற நிலைமை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த 3 ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர். அத்துடன் சுற்றுலாத்துறை ஏற்பட்டுள்ள இழப்பு 10 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 180 ரூபாயாக உயர்ந்துள்ளதுடன் தொடர்ந்தும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களுக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாய், கொள்முதல் விலை 176.72 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மாத்திரம் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 4.55 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும்!!

இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மரக்கறிகளின் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் தற்போது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன்காரணமாகவே அதன் விலை தற்போது சந்தையில் அதிகரித்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று சந்தை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூர் சந்தையில் லீக்ஸ் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. கரட் 250 ரூபா வரை விற்பனையாகிறது. நுவரெலியாவை பொறுத்தவரை அங்கு இந்த தடைவை 7000 கிலோகிராம் கரட் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் சீரற்ற வானிலையின் பாதிப்பு காரணமாக 2000 கிலோகிராம் கரட்டை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்ததாக அங்குள்ள மரக்கறி விநியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

22 வயது காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்!!

 

கொலை செய்த காதலன்

கொழும்பில் இருந்து காதலனை பார்க்க கிராமத்திற்கு சென்ற இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மொனராகலை, மகன்தன முல்ல சுமேத ஏரிக்கு அருகில் இந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் இரோஷனி என்ற 22 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காதலனை பார்க்க சென்ற இடத்தில் தொலைபேசி பயன்பாட்டினால் இருவருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் போது 23 வயதான காதலன் காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 5 பேர் கொண்ட விவசாய குடும்பத்தின் மூத்த மகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அழகு கலை நிலையம் ஒன்றை நடத்தி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியாலேயே மீளப் பெற்றுக் கொள்ள முடியாது!!

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அவராலேயே மீளப் பெற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக் கொள்ளவோ அல்லது ரத்து செய்யவோ ஜனாதிபதிக்கே சட்ட ரீதியான அதிகாரம் கிடையாது என சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பிற்கு அமைவாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களுக்கு அமையவும் நாடாளுமன்றை கலைத்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் பின்பற்றப்படும் லத்தின் சட்டக்கோட்பாடுகளின் ஒன்றான பென்டுக்ஸ் ஒபிசீயா என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது மட்டுமே இந்த சட்டப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபரும் ஏனைய தரப்பு சட்டத்தரணிகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு உச்ச நீதிமன்றில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

அவசர நிலையை சமாளிக்க தயாராகுமாறு இலங்கை பொலிஸாருக்கு அறிவித்தல்!!

மைத்திரி- மகிந்த அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள காவல்துறையினரை முழுமையான விழிப்பு நிலையில் இருக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லா காவல்நிலையங்களும், எந்த அவசர சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய வகையில், நோயாளர் காவு வண்டிகள், தீயணைப்பு வாகனங்களுடன், அவசரநிலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கப்பட்ட அரசாங்கத் தரப்புக்கும், புதிய அரசாங்கத் தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்படலாம் என்பதாலேயே இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் ஜனநாயகத்தை நிலை நிறுத்தக் கோரி, ஐக்கிய தேசியக் கட்சி முக்கியமான நகரங்களில் பேரணிகள், கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. நேற்று கண்டியில் ஒரு பாரிய கூட்டத்தை நடத்திய ஐதேக மேலும் பல நகரங்களில் இத்தகைய பேரணிகளை நடத்தவுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்து கதிர்காமத்துக்கும், கண்டிக்கும் பாரிய வாகனப் பேரணிகளை நடத்தவும் ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச தரப்பும், அடுத்தவாரம், பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள இந்தச் சூழலிலேயே, ஏட்டிக்குப் போட்டியான பேரணிகள் கூட்டங்களை நடத்தும் போது, இருதரப்புகளும் மோதிக் கொள்ளலாம் என்பதால், காவல்துறையினர் உச்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதிய பிரதமரை நியமிக்க தயார் : மகிந்தவும் பதவியில் நீடிக்கலாம் : ஜனாதிபதி மைத்திரி அதிரடி!!

மைத்திரி அதிரடி

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அவர் ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை. நானே பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவரை நியமிக்க முடியாது, என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டும் போது, கட்சித் தலைவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. 225 பேரைக் கொண்ட சபையில் யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர் பிரதமராக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது : நடக்கப் போவதை பாருங்கள் : ரணிலின் எச்சரிக்கை!!

 

ரணிலின் எச்சரிக்கை

சட்டரீதியான அரசாங்கத்தின் கீழ் சட்டரீதியாக நடத்தப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதிகாரமின்றி அட்டைபோன்று ஓட்டிக்கொண்டிருப்பவர்களை நீக்க தயார் எனவும் ரணில் எச்சரித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ராஜபக்ச – மைத்திரி தரப்பிற்கு பெரும்பான்மை இல்லை என்பதனை ஏற்றுக் கொள்ள நேரிட்டது.

உலகில் எந்த ஒரு சபாநாயகரும் முகம் கொடுக்காத பிரச்சினைகளுக்கு எங்கள் சபாநாயகர் முகம் கொடுத்தார். இந்த கும்பலினால் தேர்தலுக்கு வர அச்சப்படுவது இன்று உலகிற்கு தெரியும். நான் பிரதமராக இருக்கும் போது மஹிந்த ராஜபக்ச பிரதமராக்கப்பட்டார். சட்டவிரோதமாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். நாடாளுமன்றத்தை கூட்ட இடமளிக்கவில்லை.

மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொண்டார்கள். நாங்கள் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தோம். இறுதியில் பொலிஸாரை அழைத்து வந்து கட்டுப்படுத்த வேண்டிய நிலை சபாநாயகருக்கு ஏற்பட்டதென ரணில் மேலும் தெரிவித்து்ளார்.

பெரும்பான்மையை உறுதி செய்த மைத்திரி : பொதுத் தேர்தல் வாபஸ்!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானியை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது.

மைத்திரி – மஹிந்த தலைமையிலான குழுவினர் பெரும்பான்மை பலத்தினை பெற்றுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எதிர்வரும் 4 நாட்களுக்குள் சமகால அரசாங்கத்தினாால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 113 என்ற பெரும்பான்மை உறுதியாக நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை நிரூபித்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைக்கப்பட்டதற்காக விடுக்கப்பட்ட வர்த்தமான மீளப்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஆயுட்காலம் முடியும் வரை நாடாளுமன்றம் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்றம் கலைப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டதுடன், அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் நடைபெறும் என வர்த்தகமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இளைஞர் சுகாதார நிகழ்ச்சித்திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் கடந்த (22.11.2018) தொடக்கம் (24.11.2018) வரை பூந்தோட்டம் விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதன் இறுதி நிகழ்வான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் சிசிர செனவிரத்ன, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சுஹானி, பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி லவன், தொற்றாநோய் பிரிவின் வைத்திய கலாநிதி சுதர்சினி, தாதிய பயிற்சி கல்லூரியின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.