சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் : ஐ.தே.கவுக்குள் கடும் மோதல் : அடுத்த தலைவர் சஜித்?

கொழும்பு அரசியலில் தளத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் புதிய திட்டங்களை வகுத்துள்ளனர்.

கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை அடுத்து கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவை கட்சியின் தலைவராக நியமிக்க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் சஜித்தை பிரதமராக்க வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த யோசனையினால் ரணில் குழு மற்றும் சஜித் குழுவுக்கு இடையில் மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதாக கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமகாலத்தில் ஜனாதிபதிக்கும் ரணிலுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் பிரதமராக மீண்டும் ரணில் வரும் பட்சத்தில் சுமுகமாக செயற்படுவதில் சிக்கல் உள்ளன.

இவ்வாறான நிலையில் சஜித் பிரேமதாஸ தலைமையில் பெருமைபான்மை நிரூபித்து, மீண்டும் அரசாங்கத்தை அமைக்க முடியும். இதற்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் இதுவரை சஜித்திற்கு ஆதரவு வழங்கவில்லை. கட்சியின் தலைவராக ரணில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

-தமிழ்வின்-

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை : மைத்திரியை எச்சரிக்கும் அமெரிக்கா!!

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயற்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து விலகியிருக்குமாறு அமெரிக்கா, அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைய சபாநாயகருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளுக்கமைய, அரசாங்கத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது யார் என்பது தொடர்பில் தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா தனது அறிக்கையின் ஊடாக எச்சரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இந்நிலையில் இலங்கையில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை!!

வவுனியாவிலுள்ள தனியார் வகுப்பு நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ். சுஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று வவுனியா வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர் நிலையங்களில் பணியாற்றும் இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியாவிலுள்ள தனியார் வகுப்புக்களை ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்குமாறு நிகழ்வில் கலந்துகொண்டுள்ள மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர், நகரசபை தவிசாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஞாயிறு தினங்களில் நாங்கள் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்கவேண்டும் என்று தெரிவித்து வர்த்தக நிலையங்களை மூடினால் கூட வர்த்தகப்பிரமுகர்கள், ஊழியர்கள் தமது பிள்ளைகளுடன் இருந்து நேரத்தைச் செலவிடுவதற்கு பிள்ளைகள் வீடுகளில் நிற்பதில்லை. அத்துடன் பிள்ளைகளை தனியார் வகுப்புக்களுக்கு அழைத்துச் செல்கின்ற ஒரு நிலையும் காணப்படுகின்றது.

இது குறித்து நகரசபைத் தவிசாளரிடம் முன்னரும் கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்குச் சாதகமான பதில்கள் தருவதாக கூறியிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர், மேலதி மாவட்ட அரசாங்க அதிபரிடமும் வர்த்தகர் சங்கம் சார்பாக இந்த வேண்டுகோளினை நாங்கள் எழுத்து மூலமாக அறியத்தருகின்றோம். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தால் பெற்றோர்களுக்கு அன்றைய விடுமுறை நாளாக அது அமையும்.

அரசாங்கப்பணியாளர்கள் என்றாலும் ஞாயிறு தினங்களில் அவர்கள் வீடுகளிலிருக்க முடிவதில்லை. தமது பிள்ளைகளை ஏற்றிஇறக்கவேண்யடி நிலை எற்படுகின்றதுடன் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடமுடியில்லை.

வர்த்தக சங்கம் சார்பாக விடுக்கப்படும் இக்கோரிக்கையினை ஏற்று நல்லதொரு முடிவினைப் பெற்றுத்தருமாறு கோருகின்றோம் என்று மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வர்த்தகர்கள், ஊழியர்களின் பிள்ளைகள் கௌரவிப்பு!!

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பிள்ளைகள் மற்றும் வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வருடம் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் தலைமையில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியியுமான எம்.சிற்றம்பலம், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன், வவுனியா நகரசபைத் தவிசாளர் இ.கௌதமன், நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், வவுனியா தெற்கு கல்வி வயலப்பணிப்பபாளர் முத்து இராதாகிருஷ்ணன், சட்டத்தரணி தயாபரன் மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்திப்பணிப்பாளர், கிராம அலுவலர் மற்றும் வர்த்தகப்பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் 72 மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

ஈழத்து எழுத்தாளர் ஒருவருக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.திருகோணமலையைப் பிறப்பிடமாக கொண்ட தமிழ்நதி என்பவருக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருதினை இந்தியாவின் நியூஸ் 18 தொலைக்காட்சி வழங்கியுள்ளது.

ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.

இவர் எழுதிய ஒரு இனத்தின் மனிதத்தைப் பேசும் கதைகளைக் கொண்ட மாயக்குதிரை சிறுகதை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மேலும், போர் சிதைத்த வாழ்க்கை, புகலிடத்தின் விரக்தி என ஒவ்வொரு கதையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைப் பதிவு செய்திருப்பதாகவும் மகுடன் விருதுக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் மிக முக்கிய சிறுகதைத் தொகுப்பில் மாயக்குதிரைக்கு நிச்சயம் இடமுண்டு என்றும் விருதுக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசரத்தில் விபரீத முடிவெடுத்த மாணவி : அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!

மும்பையில் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து கொண்டு தற்கொலை செய்த மாணவி தற்போது தேர்ச்சி பெற்றிருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.

மும்பை எம்பிவி வால்யா கல்லூரியில், பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி ரிதி பராப். படிப்பில் எப்பொழுது கெட்டிக்காரியான ரிதி, தன்னுடைய செமஸ்டர் தேர்வுகள் முடிந்தததும், எப்படியும் 80 சதவிகித தேர்ச்சியுடன் வெற்றி பெற்றிடுவேன் என தோழிகளிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்வு முடிவு வந்ததும், நிதி மேலாண்மை பாடத்தில் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்ததாக வந்துள்ளது.

30 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையில், 10 மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால் ரிதி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து கடந்த ஆகஸ்டு 10-ம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

ஆனால் இறப்பதற்கு முன்னர் தோல்வியடைந்த பாடத்தை மட்டும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்துள்ளார். அதன் முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தபோது, ரிதி தேர்ச்சியடைந்திருப்பதாக முடிவு வந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிதியின் தந்தை ரமேஷ், வினாத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களின் கவனக்குறைவால் என்னுடைய மகள் இறந்துவிட்டாள். இனி அவள் திரும்ப வரப்போவதில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என கவலை தெரிவித்துள்ளார்.

3 வருடங்களாக உணவு சாப்பிடாமல் இருந்த மனிதர் : ஆச்சர்ய சம்பவம்!!

உணவுக்குழாயில் பல் சிக்கிக்கொண்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் 3 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்த 46 வயதான தீபக் நந்தி என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, 2 பற்கள் உணவுடன் சேர்த்து வயிற்றுக்குள் சென்றுவிட்டது.

இதனை அறிந்துகொண்ட தீபக், வெளியில் சொன்னால் அவமானம் எனக்கருதி வீட்டில் யாரிடமும் சொல்லமால் மறைத்துள்ளார். அந்த பற்கள் இரண்டும் உணவுக்குழாயில் அடைத்துக்கொண்டதால், தீபக் உணவு உண்ணமுடியாமல் தவித்துள்ளார்.

தன்னுடைய சகோதரன் மற்றும் தாய்க்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காக வீட்டில் அவர்கள் முன் உணவு அருந்துவதையே தவிர்த்துள்ளார். தனிமையில் மிகவும் சிரமப்பட்டு உணவு சாப்பிட்டு வந்துள்ளார்.

தீபக் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை புரிந்துகொண்ட அவருடைய சகோதரன் நடந்தவை பற்றி கேட்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில், வயிற்றில் சென்ற இரண்டு பற்கள் உணவுக்குழாய் முழுவதையும் சேதப்படுத்தியிருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு இரண்டு முறை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாகா தீபக் மீண்டும் உணவு சாப்பிட்டுள்ளார்.

7 வயது மகளை இரக்கமின்றி கொலை செய்த இளம்தாய் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில் 7 வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா. இவர் மனைவி ஆர்த்தி. தம்பதிக்கு தஷி (7) என்ற மகள் உள்ளார். சித்தார்த்தா சில மாதங்களுக்கு முன்னர் மாரடைபால் இறந்துவிட்டார். அதிலிருந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார் ஆர்த்தி.

இதையடுத்து தனது வீட்டுக்கு வந்துவிடுமாறு ஆர்த்தியிடம் அவர் தாய் கூறியுள்ளார். ஆனால் தனது கணவர் சித்தார்த்தாவின் ஆவி இந்த வீட்டில் இருப்பதால் தன்னால் வர முடியாது என ஆர்த்தி கூறினார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்த்தி நைட்ரோஜன் கேஸ் சிலிண்டரை வாங்கியுள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் தனது மகள் தஷி முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடிய ஆர்த்தி அதன் உள்ளே நைட்ரோஜன் கேஸை செலுத்தி தஷியை கொன்றுள்ளார்.

பின்னர் அதே முறையில் தானும் தற்கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றினார்கள்.

இதனிடையில் ஆர்த்தி வீட்டு முன்னால் ஒரு நிலம் சித்தார்த்தா பெயரில் உள்ளது. நிலம் சம்மந்தமாக ஆர்த்திக்கும் அவர் உறவினர்களுக்கும் தகராறு இருந்து வந்தது.

இந்த விடயம் ஆர்த்தியின் அதிர்ச்சி முடிவுக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

7 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தின் குமரியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

பருத்திகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30), 7 மாத கர்ப்பிணியாக இருந்த தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்துவந்தார். பிரசவத்துக்காக கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு சென்றார்.

அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகன்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனே நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

அப்போது வயிற்றில் இருந்த குழந்தையை ஆபரேஷன் மூலம் எடுத்தால் சுகன்யாவை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது என்றும், அதற்காக ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்து விடுவது என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி சுகன்யாவுக்கு கடந்த 25-ந் திகதி ஆபரேஷன் செய்யப்பட்டது. 7 மாதமே ஆகி இருந்ததால் குழந்தை முழுமையான வளர்ச்சி இல்லாமல் இருந்தது. அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுகன்யா கடந்த 2011-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்திருந்தார். அப்போது அவருக்கு பிறந்த குழந்தை இறந்தது. இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்ப்பம் தரித்த அவருக்கு, குழந்தை இறந்தது சுகன்யா குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சுகன்யாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். தாயும், சேயும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணனை கொன்ற 17 வயது சிறுவனை பழிக்குப்பழியாக வெட்டிகொலை செய்த தம்பி!!

சென்னையில் அண்ணனை கொலை செய்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான விக்னேஷ். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மே மாதம் கைதாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன் ஜாமினில் விக்னேஷ் வெளியே வந்தார். கொலை செய்யப்பட்ட கணேஷின் சகோதரர் பிரகாஷ், விக்னேஷை பழி தீர்க்கும் நோக்குடன் தனது நண்பர்கள் 4 பேருடன், விக்னேஷின் வீட்டிருகே அவரை தடுத்து நிறுத்திய பிரகாஷ் உள்ளிட்டோர் பேசுவது போன்று, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயமடைந்த விக்னேஷை அவரது பெற்றோர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.

இந்தக் கொலை வழக்கில், பிரகாஷ், மோகன், அஜித், ஆரோக்கியம், சாரதி ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அண்ணனைக் கொன்ற விக்னேஷைக் பழி தீர்ப்பதற்காக கொன்றதாக பிரகாஷ் வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் புகார் : வெளியான வீடியோவால் மாட்டிக்கொண்ட நடிகை அமலாபால்!!

இயக்குனர் சுசி கணேசன் மீது பெண் இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை மீ டூ ஹேஸ்டேக் மூலம் முன்வைத்த புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்திருந்தார். திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் நடித்தபோது தன்னிடம் சுசி கணேசன், தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், திருட்டுப்பயலே 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமலாபால் சுசி கணேசனை வெகுவாக பாராட்டும் காட்சியை ஷேர் செய்து வருகின்றனர்.

சுசி கணேசன் நல்ல ஒரு மனிதர், எனக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்தார் என வெகுவா பாராட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

சின்மயி – வைரமுத்து விவகாரத்தில், எதற்காக வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்து காலில் விழுந்தீர்கள் என்று ரசிகர்கள் துளைத்து எடுத்ததுபோன்று தற்போது அமலாபாலும் வசமாக மாட்டிக்கொண்டார். பாலியல் புகார் அளித்தவரை இப்படியுமா புகழ்ந்து தள்ளுவது என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

மனைவியை கொலை செய்து காதலிக்கு பரிசாக அளித்த கணவர் : 15 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல்!!

தனது மனைவியை கொலை செய்து காதலிக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துவிட்டு கடந்த 15 வருடங்களாக சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த தருண் என்பவருக்கு 2003ம் ஆண்டு வங்கி ஊழியர் ஒருவருடன் திருமணமாகியுள்ளது. திருமணமான 3 மாதத்தில் தருணின் மனைவி இறந்து போக தனது மனைவியை கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், பெங்களூருக்கு சென்றுள்ளார். அங்கு, தனது பெயரை பிரவீன் என மாற்றி தனது காதலி நிஷாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் பிறந்ததையடுத்து, சந்தோஷமாக கடந்த 15 ஆண்டுகளாக வசிந்து வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த கிரண் சவுத்ரி, கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான தருணின் அலுவலகத்திற்கே ஊழியர் வேடத்தில் சென்று தருணை கையும் களவுமாக கைது செய்துள்ளார்.

கைதுக்கு பின்னர் வாக்குமூலம் அளித்த தருண் , மனைவியை தானே கொலை செய்ததாகவும், அடையாளங்களை மாற்றி வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது காதலி நிஷா திருமணம் ஆகாமல் இருந்த காரணத்தால், அவரை திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தேன். அதன்படி, எனது மனைவியை கொலை செய்து அதனை காதலர் தின பரிசாக எனது காதலிக்கு அளித்து, அவளை மகிழ்விக்க கொலை செய்துவிட்டு தப்பித்து வந்து, எனது காதலியை திருமணம் செய்துகொண்டேன் என கூறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது. தருண் தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி வாழ்ந்து வந்த காரணத்தால் பொலிசாருக்கு இதில் சிக்கல் ஏற்பட்டு ஒருவழியாக தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்யும் ஆசிரியை : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!

வெனிசுலா நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக அயல் நாடுகளில் குடியேறும் பெண்கள் பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்து வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலா நாடு கடும் பொருளாதார நெருக்கடியால் திணறி வருகிறது. அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ முன்னெடுத்த பண மதிப்பிழப்பும் அதனை ஒட்டிய கலவரமும் வெனிசுலாவை துண்டாடியுள்ளது.

இதனால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் வெனிசுலாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். ஜனாதிபதி மடுரோவின் புதிய பொருளாதார கொள்கைகள் உரிய பலனை தராதது மட்டுமின்றி கடும் நெருக்கடியையும் உருவாக்கியது.

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் அண்டை நாடான கொலம்பியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதில், ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என, பட்டினிக்கு அஞ்சிய பலரும் சொந்த நாட்டை விட்டு வெளியேறினர்.

தங்களது பிள்ளைகளின் உணவு தேவைகளுக்காக பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் வெனிசுலாவில் ஆசிரியர் பணியில் இருந்த பெண்மணி ஒருவர் தமது குடும்பத்திற்காக பாலியல் தொழில் செய்து வருகிறார்.

ஆசிரியராக பணியாற்றி வந்த காலகட்டத்தில் தமக்கு கிடைக்கும் ஊதியமானது ஒரு பாஸ்தா வாங்கவே போதுமானதாக இல்லை என கூறும் அவர், தற்போது பாலியல் தொழிலால் வெனிசுலா பணத்தில் மாதம் 312,000 பொலிவர் அளவுக்கு சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

வெறும் 3,000 பேர் மட்டுமே கொண்ட அந்த கொலம்பியா நாட்டு கிராமத்தில் செயல்பட்டுவரும் ஒரு மதுபான விடுதியில் 9 பெண்களில் ஒருவராக பாலியல் தொழில் செய்து வருகிறார் அவர்.

ஒரு இரவில் 30 முதல் 100 டொலர் வரை சம்பாதிப்பதாக கூறும் அவர், தமது தாயாரின் கனவு ஒரு ஆசிரியராக பணியாற்றுவது என்பது. அதை தாம் நிறைவேற்றியதாகவும், ஆனால் பொருளாதார நெருக்கடி அந்த உயரிய தொழிலை விட்டு தற்போது உடலை விற்று பசியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறி கண் கலங்கியுள்ளார்.

உரிய ஆவணங்கள் இல்லை என்றாலும், ஆசிரியர் பணி கிடைத்தால் அது கடவுள் நேரிடையாக வந்து தமக்களிக்கும் வரமாக கருதுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அலிகிரியா என்ற அந்த 26 வயது பெண்மணிக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவரை போலவே பல பெண்களும் இதே நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் விபரீதம் : புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்!!

அமெரிக்காவில் மலை உச்சியில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட புதுமண தம்பதிகள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் திரூர் பகுதியில் பிரபல மருத்துவர்களான விஸ்வனாதன் மற்றும் சுஹாசினி தம்பதிகளின் மகனான விஷ்ணு(29) மற்றும் அவரது மனைவி மீனாட்சி(29) என்பவர்களே தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் மரணமடைந்துள்ளனர்.

இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் குறித்த சம்பவத்தை விஷ்ணுவின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். செவ்வாய் அன்று மரணத்தை ஏற்படுத்திய குறித்த சம்பவம் நடந்ததாக தெரியப்படுத்தியுள்ளனர்.

தேனிலவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக டிரக்கிங் சென்ற இருவரும் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர். ஆனால் இருவரில் ஒருவரது கால் தவறி பள்ளத்தில் விழுந்துள்ளதாகவும், அதில் காப்பாற்ற சென்ற இன்னொருவரும் விபத்தில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த விஷ்ணுவும் மீனாட்சியும் காதலித்து பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

சடலத்தில் நின்று கைப்பற்றிய வாகன ஓட்டுனர் உரிமத்தில் இருந்து இருவரது முகவரிகளை கைப்பற்றிய பொலிசார் அதன்மூலமே உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆண் கூறிய அந்த ஒரு வார்த்தை : ஒட்டுமொத்தமாக உருவத்தை மாற்றிய பெண்!!

‘உடல் எடையை குறைத்தால் அழகாக இருப்பீர்கள்’ என ஒரு ஆண் கூறியதை கேட்டு ஒட்டுமொத்தமாக தன்னுடைய கொழுப்பை குறைத்து பிரித்தானிய பெண் ஒருவர் தோற்றத்தை மாற்றியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த கிளெய்ர் முர்ரே என்ற 35 வயது பெண் 126 கிலோ உடல் எடையில் இருந்துள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அதிகமான உடல் எடையின் காரணமாக சீட் பெல்ட்டை அணிய முடியாமல் தவித்துள்ளார்.

இதனை பார்த்த சக ஆண் பயணி ஒருவர், “உடல் எடையை குறைத்தால் நீங்கள் அழகாக இருப்பீர்கள்” என கூறியுள்ளார். அன்றிலிருந்து உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டிய கிளெய்ர், தினமும் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் செல்ல ஆரம்பித்துள்ளார்.

உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பித்துள்ளார். கொழுப்பை அதிகரிக்காத சத்தான உணவு வகைகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளார். அதன் விளைவாக அடுத்த 6 மாதங்களில் 62 கிலோ உடல் எடையை குறைத்து வெற்றி கண்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கிளெய்ர் முர்ரே, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விமானத்தில் நான் சிரமப்பட்டபோது தான், நான் அதிகமான உடல் எடையில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

எடை குறைந்ததால் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இந்த சமயம் உடற்பயிற்சி கூடத்திற்கு தான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இப்படியும் திருடர்கள் இருப்பார்களா : சிரிக்க வைக்கும் ஒரு சுவாரஸ்ய சம்பவம்!!

திருடச் சென்ற இடத்தில் இப்போதைக்கு போதுமான பணம் இல்லை, பின்னர் வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என கடை உரிமையாளர் கூறியதைக் கேட்டு பின்னர் மீண்டும் வந்த திருடர்கள் பொலிசாரிடம் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று பெல்ஜியத்தில் நடைபெற்றுள்ளது.

பெல்ஜியத்தின் Charleroi நகரில் இருக்கும் இ-சிகரெட் கடையில் ஆயுதங்களுடன் நுழைந்த 6 திருடர்கள் பணம் கொடுக்குமாறு கடைக்காரரை மிரட்டினர்.

கடை ஊழியரான Didierக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சட்டென்று அவர், இன்னும் வியாபாரமே ஆகவில்லை, கடை மூடும் நேரம் வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூற, ஆச்சரியப்படும் விதமாக திருடர்கள் மாலை வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றனர்.

உடனே பொலிசாருக்கு தகவல் அளித்தார் கடை உரிமையாளர். ஆனால் பொலிசார் கடை உரிமையாளர் சொன்னதை நம்பவில்லை. மாலை 3 மணிக்கு அவர்கள் ஆறு பேரும் திரும்ப கடைக்கு வர, கடை உரிமையாளர், 3 மணி கொள்ளையடிப்பதற்கு ஏற்ற நேரம் அல்ல, 6.30 மணிக்கு வாருங்கள், அப்போது என்னிடம் இன்னும் நிறைய பணம் இருக்கும் என்றார்.

அப்போதும் அந்த திருடர்கள் திரும்பிப் போய்விட, பொலிசாருக்கு மீண்டும் தகவல் அளித்தார் கடை உரிமையாளர். இம்முறை கடைக்கு வந்த பொலிசார் சாதாரண உடையில் பதுங்கியிருக்க, மீண்டும் திருடர்கள் வந்தபோது துப்பாக்கி முனையில் அவர்களை பிடித்துவிட்டனர்.

இந்த சம்பவத்தை பார்க்கும்போது இப்படியும் மிக முட்டாளான திருடர்கள் இருப்பார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.