குகைக்குள் இருந்து சடலங்கள் மீட்பு!!

இராகலை – சென் லேனார்ட் மேல் பிரிவில் இருவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சடலங்களை இன்று மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சென் லேனார்ட் மேல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் காணப்படும் குகை ஒன்றில் இருந்தே இந்த சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 29 மற்றும் 31 வயதுகளை உடையவர்கள் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பூசகர் கோயிலை விட்டு வெளியேற்றம்!!

கிளிநொச்சி கோரக்கன் கட்டுப்பகுதியில் சிறுவனைக் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய பூசகர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோரக்கன் கட்டு பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயத்தின் திருவிழா பூசைக்காக கிளிநொச்சி நகரிற்கு அண்மையிலுள்ள ஆலயம் ஒன்றில் பூசை செய்து வந்த பூசகர் அழைக்கப்பட்டு பூசைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் ஆலயத்திற்கு பூசை செய்வதற்கு வந்த பூசகர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று அங்கு அறையொன்றில் நாள் முழுவதும் பூட்டி வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் பாதிக்கப்பட்ட சிறுவன் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பூசகரை பாதுகாக்கும் வகையில் ஆலய நிர்வாகம் செயற்பட்டதையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் பூசகர் நேற்று மாலையுடன் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதே வேளை பாதிக்கப்பட்ட சிறுவன் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய பிரமோற்சவம்-2018 ஆரம்பம்!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (15.09.2018) சனிக்கிழமை 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது.

மேற்படி 10  தினங்கள் இடம்பெறவுள்ள  பிரம்மோற்சவத்தில்

22.09.2018 சனிக்கிழமை  சப்பறத்திருவிழா  இரவு  08.00மணி

23.09.2018 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா காலை  10.45 மணி

24.09.2018 திங்கட்கிழமை  தீர்த்த திருவிழா காலை  11.00 மணி

25.09.2018 செவ்வாய்கிழமை  திருக்கல்யாணம்   மாலை 06.00  மணிக்கும்  இடம்பெறவுள்ளது .


 

 

 

பொலிஸாரின் மனிதாபிமானத்தை கண்டு வியக்கும் மக்கள்!!

மாத்தளையில் பாலம் ஒன்றுக்கு அருகில் விழுந்து கிடந்த முதியவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

வீதியில் விழுந்து கிடந்தவரை மீட்ட பொலிஸார் அவரை மாத்தளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர் விழுந்து கிடப்பதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் மாத்தளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நோய்வாய்ப்பட்ட நபரை பொலிஸார் இவ்வாறு அழைத்து செல்வது மிகவும் குறைவு என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மனிதாபிமானத்துடன் செயற்பட்ட இரு பொலிஸாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்!!

இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆய்வுகளை மேற்கொண்டு புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி திருகோணமலையில் கற்பாறைகள் உள்ள மலைப் பாங்கான பகுதிகளிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த நில நடுக்கத்தின் பின் வேறு நில அதிர்வுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தரிவிமல் சிறிவர்தன ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.35 அளவில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் முரண்பாடு : கணவனின் விபரீதமான முடிவு!!

பொகவந்தலாவையில் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் தற்கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் ராஜு என்ற 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வரும் கணவனுடன் மனைவி சண்டையிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் அவ்வாறான சண்டைக்கு பின்னர், கணவர் உறங்கியுள்ளார்.

எனினும் காலை 7 மணியளவில் அவர் வீட்டிற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயைக் காப்பாற்ற சென்ற மகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் தாயும் மகளும் கரடி தாக்குதலுக்குள்ளான நிலையில் கோமரங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தும் குறித்த சம்பவம் இன்று பத்து முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

இவ்வாறு கரடித் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கோமரங்கடவல, மயிலவெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய தாயாரான எஸ்.ரம்யலதா மற்றும் அவரது மகளான 20 வயதுடைய லக்சானி ஆகிய இருவருமே கரடி தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

வீட்டுக்குப் பின்னால் மலசல கூடத்திற்கு சென்றபோது தாய் கரடி தாக்குவதாக கதறிய போது தாயைக் காப்பாற்றுவதற்காக மகள் ஓடிச் சென்றதையடுத்து மகளையும் கரடி தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து :  நால்வர் பரிதாபமாகப் பலி!!

வவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (16.09.2018) காலை 10.30 மணிக்கு புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளனர்.

இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த அதிவேக புகையிரத்தில் மோதுண்டே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

 

வவுனியாவில் ஞாயிறு விடுமுறை வழங்க அனைத்து வர்த்தகர்களும் ஒன்றிணைந்து அழைப்பு!!

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி தொழில்புரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தமது குடும்பத்தினருடன் இன்புற்றிருக்க அனைத்து வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர்.

வவுனியா வர்த்தகர் சங்கத்தினரால் இவ்வாரம் திங்கட்கிழமை முதல் அனைத்து வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த உரிமையாளர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மேற்படி தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலுள்ள ஹாட்வெயார், நகைக்கடை, அழகுசாதனம் விற்பனை நிலையம், தொலைபேசி விற்பனை நிலையம், புடவைக்கடை நிலையம், மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையம், சி.டி விற்பனை நிலையங்கள் என்பனவற்றின் உரிமையாளர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் வவுனியா பொலிஸ் உயர் அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினர், நகரசபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் இறுதியில் அனைத்து வர்த்தகப்பிரமுகர்களும் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்குவது என்று ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து சென்ற வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து : இருவர் படுகாயம்!!

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதி மொரவெவ பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிமோ பட்டா லொறியொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிமோ பட்டா வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதியும் அவரது உதவியாளரும் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான டிமோ பட்டா லொறி 10 அடி பள்ளத்தில் விழுந்து காணப்படுவதுடன் அதனை மீட்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டும் விடுதலை செய்யப்படாத கைதி : சிறைச்சாலை அதிகாரிகள் அசமந்தம்?

வவுனியா கனகராயன்குளம் ‘தாவுத்’ உணவு நிலைய உரிமையாளர் மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் கைக்கும், காலுக்கும் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்ட்டுள்ள கெ.வசந்தகுமார் நேற்றையதினம் (14) நீதிமன்றத்தினால் மூன்று பேரின் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் சிறைச்சாலை அதிகாரிகள் தனது கணவரை விடுதலை செய்யவில்லை என குறித்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தாக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில்,  வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் தமிழ் மொழி மூலம் முறைப்பாட்டு பிரிவுக்கு எனது கணவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்து அதற்கான ரசீத்தையும் வழங்கியுள்ளது என முறையிட்டபோதும் நீதிமன்றத்தின் உத்தரவானது நேரடியாக பொலிசாருக்கு வழங்கப்படவில்லை அதன்காரணமாக குறித்த நபரை விடுதலை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் திங்கட்சிழமையே எனது கணவரை விடுதலை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக்கு சம்பந்தமில்லாத நபர் தலைவரின் அலுவலகத்தில் ஆதிக்கம் : நகரசபையின் உப நகரபிதா குற்றச்சாட்டு!!

வவுனியா நகரசபைக்கு சம்பந்தமில்லாத நபரொருவர் நகரசபை தலைவரின் அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக நகரசபையின் உப நகரபிதா எஸ்.குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.

வவுனியா நகரசபையில் நேற்று முன்தினம் (13.09) நடைபெற்ற சபை அமர்வின்போதே நகரசபையின் உப தலைவர் குறிப்பிட்ட குற்றச்சாட்டை முன்வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து தெரிவித்த வவுனியா நகரசபையின் உப தவிசாளர்.

வவுனியா நகரசபைக்கு செயலாளராக ரி.தயாபரன் நியமிக்கப்பட்டுள்ள போதும் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற ஒருவர் நகரசபை தவிசாளரின் அலவலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இதன் காரணமாக பொதுமக்கள் நகரசபை உறுப்பினர்களிடம் புகார் அளித்து வருகின்றனர். நகரசபையில் ஒரு இயக்கமோ அல்லது கட்சியோ ஆதிக்கம் செலுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. கட்சியை வளர்க்கவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ நாங்கள் நகரசபைக்கு வரவில்லை மக்களுக்கு சேவையாற்றவே நகரசபைக்கு வந்துள்ளோம் சபையின் பணியும் அதுவாகவே இருக்கின்றது.

ஆகவே நகரசபையின் தலைவர் அனைத்து உறுப்பினர்களையும் உள்வாங்கி மக்கள் சேவையாற்ற முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

கணவர் ஏழை என்பதால் பிரிந்து சென்ற மனைவி : இரண்டாண்டுகள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி!!

கென்யாவில் கணவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மனைவி பிரிந்தநிலையில், கணவர் இரண்டாம் திருமணம் செய்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராபர்ட் நயாப்வரி என்ற இளைஞர் தனது மனைவி மர்தாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ல் மர்தா, ராபர்டை பிரிந்து சென்றுள்ளார்.

ராபர்டின் சொத்துக்கள் அனைத்தும் அடமானத்துக்கு வந்ததால் அவருடன் சேர்ந்து இனியும் வாழமுடியாது என மர்தா பிரிந்து சென்றார்.

இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு பின்னர் தற்போது ராபர்ட் தனது குழந்தைகள் நலனுக்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இதை அறிந்த மர்தா இரண்டாண்டுகளுக்கு பின்னர் கணவர் முன்னால் தோன்றி அவரின் இரண்டாம் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த விடயம் பஞ்சாயத்துக்கு போன நிலையில், மர்தா வேண்டுமானால் ராபர்டுடன் சேர்ந்து வாழலாம், ஆனால் அவரின் இரண்டாவது மனைவியும் உடனிருப்பார்.

இதற்கு மர்தா ஒத்து கொள்ளவில்லையெனில் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பஞ்சாயத்தார் கூறியுள்ளனர்.

நிர்வாணமாக தனியறையில் அடைக்கப்பட்ட ஆட்டிஸச் சிறுவன் : கனடாவை அதிர வைத்த செய்தி!!

ஆட்டிசக் குறைபாடுடைய சிறுவனை நிர்வாணமாக தனியறையில் பூட்டி வைத்ததால் அதிர்ச்சியுற்ற அவனது பெற்றோர், அவன் பயின்ற பள்ளி மற்றும் கனடாவின் கல்வி அமைச்சர் உட்பட பலர்மீது வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் கனடா கல்வித் துறையை அதிரச் செய்துள்ளது.

Marcy Oakes மற்றும் Warren Henschel ஆகியோர் தங்கள் 12 வயது மகனான Aidanஐ பள்ளியில் அவனது ஆசிரியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைகளில் அடைத்து வைப்பதற்கு பயன்படுத்தப்படுவது போன்ற அறை ஒன்றில் அடைத்து வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அவன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து அதை இமெயிலில் அவனது பெற்றோருக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம், அவனை வந்து அழைத்துச் செய்தி அனுப்பியிருந்தது.

பதறிப்போன அவனது பெற்றோர் வந்து அந்த அறையைத் திறந்து விடச் சொன்னபோது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

அங்கே அவர்கள் மகன் Aidan நிர்வாணமாக உடலெங்கும் மலத்துடன் பயந்து பதுங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

தற்போது அந்த பள்ளி மற்றும் இத்தகைய மோசமான பழக்கத்தை பின்பற்றும் கனடாவின் கல்வித்துறை ஆகியவற்றின் மீது Aidanஇன் பெற்றோர் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இத்தகைய பழக்கத்தை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கனடாவின் கல்வித்துறையை அதிரச் செய்துள்ளது.

விதவை மருமகளை உயிரோடு எரித்து கொன்ற மாமனார் : திடுக்கிடும் பின்னணி!!

இந்தியாவின் ஒடிசாவில் மருமகளை மாமனார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகராம் என்பவரின் மனைவி ருக்மணி. கடந்த மாதம் சுகராம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து தனது கணவர் வீட்டிலேயே ருக்மணி வசித்து வந்தார். இந்நிலையில் ருக்மணிக்கு தனது மாமனார் ரோகிதாஸுடன் நேற்று தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரோகிதாஸ் ருக்மணி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தினார்.

இதையடுத்து வலியால் துடித்த ருக்மணி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தலைமறைமாக உள்ள ரோகிதாஸை பொலிசார் தேடி வருகிறார்கள்.

என் மனைவி இப்படி செஞ்சிட்டாளே : வாழ்க்கையை முடித்து கொண்ட கணவனின் சோகம்!!

இந்தியாவின் தெலுங்கானாவில் திருமணமான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடூகுனுரு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பா ரெட்டி (32). இவருக்கும் சுவர்ணலதா என்ற பெண்ணுக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது கிராமத்துக்கு வந்த ரெட்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், ரெட்டிக்கும் அவர் மனைவி சுவர்ணலதாவுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சில காலமாக பிரிந்து வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

மனைவி தன்னை தவிக்கவிட்டு பிரிந்து சென்றுவிட்டாளே என மன வேதனையில் இருந்த ரெட்டி தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.