ஆபத்தான கட்டடத்தின் நடுவில் 5 வருடங்களாக வாழ்ந்து வரும் தாய்!!

இறுதி யுத்தத்தில் சேதமாக்கப்பட்ட தனது சொந்த வீட்டை அரசாங்கம் இன்னமும் புனரமைத்து தரவில்லை என முள்ளிவாய்க்கால் பகுதியில் தாய் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் வசித்து வரும் புனிதவதி மகேந்திரன் என்பவரே இந்த அவல நிலைக்கு உள்ளாகியுள்ளார்.

சுனாமி பேரனர்த்தத்தின் போது தனது கணவனை இழந்த குறித்த தாய் அவரது சொந்த முயற்சியில் முள்ளிவாய்க்காலில் வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

எனினும், குறித்த வீடு 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது பாரிய குண்டுத் தாக்குதல்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய குறித்த தாய் இன்றுவரை ஆபத்தான கட்டட உடைவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்

தமிழ் அரசியல் கட்சி தலைவர்களும், அரச அதிகாரிகளும் தனது இந்த நிலமையை அறிந்தும் தனக்கு உதவுவதற்கு எவரும் முன்வரவில்லை என அந்த தாய் குற்றம் சுமத்துகின்றார்.

அத்துடன், தான் தனித்து வாழ்வதை காரணம் காட்டிய அரச அதிகாரிகள் தன்னை தட்டிக்கழிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஏற்படவுள்ள மாற்றம் : புகைப்படங்கள் வெளியானது!!

மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரை இலகு ரயில் சேவை ஒன்று மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகி உள்ளன. ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் இந்த இலகு ரயில் வீதி பத்தரமுல்லை, ராஜகிரிய, பொரளை, கண் வைத்தியசாலை மற்றும் காமினி ஹோல் ஊடாக பயணிக்கவுள்ளது.

கொழும்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக பொது போக்குவரத்து சேவை பயன்படுத்துபவர்கள் நூற்றுக்கு 60 வீதம் வரை அதிகரிப்பதற்கு மாநகரம் மற்றும் மேல்மாகாண சபை அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரை அல்லது மாலபேயில் இருந்து கொள்ளுப்பிட்டி வரை செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

வேலைத்திட்டம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4000 தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் இந்தியா!!

தமிழகத்தில் தங்கியுள்ள 4000 இலங்கை தமிழ் அகதிகளை மீளவும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கத்திற்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அகதிகளை மீளவும் திருப்பி அனுப்புமாறு கோரி அனுப்பிய கடிதத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதன்படி, முதற்கட்டமாக 4000 தமிழ் அகதிகள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு, இந்திய அரசாங்கம் தகவலை அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாடு திரும்பும் அகதிகளை மீள்குடியேற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக“ அவர், தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட ஆறு வயதான இலங்கை அகதி சிறுவன் : அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம்!!

தமிழகம் – திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 6 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள குவாரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சந்திரதாசன் என்பவரின் மகன் 6 வயதான கௌதம், இந்நிலையில், கௌதமை அனுசன் என்பவர் வெளியில் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய அனுசன், கௌதமை காணவில்லை என சந்திரதாசனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சந்தேகத்தின் பேரில் அனுசன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முகாம் அருகில் உள்ள குவாரியில் இருந்து கௌதமின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனுசனை கைது செய்த பொலிஸார் கௌதம் அடித்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிஸ்கட் பக்கெற்றை திருடிய பெண்ணுக்கு நீதவான் கொடுத்த தண்டனை!!

கம்பஹா – யக்கல, சியனே விலேஜ் பிரதேசத்தில் அமைந்துள்ள கடையொன்றில் 120 ரூபா பெறுமதியான பிஸ்கட் பக்கெற் ஒன்றை கடையிலிருந்து திருடிய பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று கம்பஹா நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரான பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த பெண்ணுக்கு ஓராண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பெண் 1500 ரூபா அபராதமும், 2500 ரூபா நட்டஈடும் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வத்தேக சிரியாவதி என்ற பெண்ணுக்கே சம்பவம் தொடர்பில் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வாகன சாரதிகளுக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில் வாகன போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கான அபராத தொகையே அதிகரிக்கப்படவுள்ளன.

மேலும், அபராத தொகையானது 30 – 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை அரசர் பதி ஸ்ரீ கண்ணகி அம்மன் பொற்கோவில் வருடர்ந்த பொங்கல் உற்சவம் 2018

வவுனியா ஓமந்தை அரசர் பதி ஸ்ரீ கண்ணகி அம்மன் பொற்கோவில் வருடர்ந்த பொங்கல் உற்சவம்  நேற்று 2018.07.09  திங்கட்கிழமை    கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது .
 பத்து  நாட்கள் இடம்பெறும் உற்சவத்தில்  இறுதிநாளான   16.07.2018 திங்கட்கிழமை பொங்கல்  உற்சவம் இடம்பெற உள்ளது.
பொங்கல் உற்சவத்தின் போது  விசேட  கலை நிகழ்வுகள்  நிகழ்வுகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .

வவுனியா விபத்தில் முதியவர் படுகாயம்!!

வவுனியாவில் இன்று (10.07.2018) காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் வீதியில் சென்ற மாட்டுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை7.15 மணியளவில் வவுனியா முதலாம் குறுக்குத் தெரு சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் சென்ற முதியவர் மாடு ஒன்று வீதியில் குறுக்கச் சென்றதில் மாட்டுடன் மோதிய விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மகேஸ்வரன் என்ற 71 வயதுடைய முதியவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்றதில் சற்று அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் முதியவரை விபத்துப்பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

வவுனியா குருமன்காடு வீதி திருத்தும் பணிகள் இடைநிறுத்தம் : காரணம் என்ன?

வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியிலிருந்து செல்லும் பிரதான வீதி கடந்த ஒரு மாதகாலமாக தோண்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் இரவு வேளைகளில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் பகல் வேளைகளிலும் பேருந்துகள் செல்வதில் பல நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.

வவுனியா கருமன்காடு காளிகோவில் வீதியிலிருந்து செல்லும் பிரதான வீதியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடந்த ஒருமாத காலத்திற்கு முன்னர் செப்பனிடுவதற்காக அப்பகுதி தோண்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இன்று வரையில் அதை நிரவி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் அவ்வீதியால் செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள், ஆடைத் தொழிற்சாலை வாகனங்கள், அரச திணைக்களங்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள், அதிபர்கள் அதிகாரிகள் பெரும் நெருக்கடி நிலையில் தமது பயணத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வவுனியா நகரசபையினரால் ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ள இவ்வீதி திருத்தும் பணிகள் கடந்த ஒரு மாதகாலமாக திருத்தி முடிக்கப்படவில்லை என்றும் இதனை உடனடியாக திருத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பாக நகரசபைதலைவரிடம் தொடர்புகொண்டு வினவியபோது,

வவுனியா கருமன்காட்டு காளிகோவில் வீதி பணிகள் இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்றே எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பணிகளை உடன் துரிதப்படுத்துமாறும் வவுனியா நகரசபைத்தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞனின் மரண வீட்டிற்கு சென்று செல்பி எடுத்த பிரபல நடிகர்!!

மதவாதத்தை அப்புறப்படுத்துவோம் என்று போராடிய தமிழ் இளைஞன் அபிமன்யூவின் மரணம் கேரளாவை உலுக்கியுள்ளது.

இடுக்கியில், ஏழ்மையான தமிழ் குடும்பத்தை சேர்ந்த அபிமன்யூ எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியியல் படித்து வருகிறார்.

கல்லூரியில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும்விதமாக அக்கல்லூரியின் சுவரில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட தகராறில், அபிமன்யூவின் கரங்களைப் பின்புறமாக பிடித்து கட்டி வைத்து கத்தியால் அவனின் மார்பை பிளந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் மதவாதிகள்.

கொலை தொடர்பாக கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

அபிமன்யூவின் இந்தக் கொடுர மரணம் கேரளத்தை உலுக்கி எடுத்திருக்கிறது.

இந்நிலையில் பா.ஜ.க. எம்.பி.யும், பிரபல நடிகருமான சுரேஷ் கோபி மாணவர் அபிமன்யுவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். ஆறுதல் கூறிவிட்டு வெளியே வருகையில் அவரைக் காண வந்திருந்த தொண்டர்களுடன் சிரித்தபடி சுரேஷ் கோபி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

மரண வீட்டில் செல்ஃபி எடுத்ததற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள் : அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!!

நாமக்கல் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி சகோதரர்கள் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், வாழையில் முட்டை, குங்குமம் மற்றும் இதர பூஜை பொருட்கள் வைக்கப்பட்ட நிலையில், அருகில் இருவரின் சடலங்களும் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார், அங்கிருந்த பொருட்களை கைப்பற்றி ஆராயும்பொழுது, மஞ்சள் பை ஒன்றில் சிவப்பிரகாசம் என்பவரின் புகைப்படம் இருந்துள்ளது.
அதை கைப்பற்றிய காவல்துறையினர் புகைப்படத்தில் இருப்பவர் குறித்து விசாரணையை மேற்கொள்ளும்பொழுது, காலையில் சாமியார் வேடத்தில் வந்து, சகோதரர்களுக்கு யாரோ செய்வினை வைத்திருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி அழைத்து சென்றதாகவும் கூறினார்.

இதனையடுத்து சிவப்பிரகாசத்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கிருஷ்ணன் என்பவருக்கும், கொலைசெய்யப்பட்ட சகோதரர்கள் முத்துசாமி, சீரங்கனுக்கு இடையே நிலத்தகராறு இருந்ததாகவும், அவர் கொடுத்த திட்டத்தின் அடிப்படையிலே கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து கிருஷ்ணனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியிடம் காதல் கடிதம் கொடுக்க மறுத்த மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் மாணவியிடம் காதல் கடிதம் கொடுக்க மறுத்த சக மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த பிளஸ் 2 மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அன்கபூபல்லியைச் சேர்ந்த தம்பதி சேகர்-வெங்கடலட்சுமி. இவர்களுக்கு ரவிதேஜா (12) என்ற மகன் உள்ளார்.

ரவிதேஜா அங்கிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம்வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் உணவு இடைவேளையின்போது பள்ளி சுற்றுச்சுவர் அருகே ரவிதேஜா உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அலறி துடித்துக் கொண்டிருந்தான்.

இதைக் கண்ட சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து மாணவனை ஆசிரியர்கள் ஆம்புலன்சில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிதேஜாவிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது. நான் கழிவறைக்கு செல்வதற்காக காம்பவுண்ட் அருகே நின்றிருந்தேன். அப்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர், தன்னிடம் ஒரு காதல் கடிதம் ஒன்றை கொடுத்து, அங்குள்ள ஜூனியர் கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் கொடுக்கும்படி கூறினார்.

நான் மறுத்து கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டதால், ஆத்திரத்தில் அவன் என் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டான் என்று கூறியுள்ளார்.

அதன் பின் தலைமறைவாக இருந்த பிளஸ் 2 மாணவனை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான ஒரு மாதத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை : கதறும் மனைவி!!

இந்தியாவில் போதை பழக்கத்துக்கு அடிமையான இளைஞர் திருமணமான ஒரு மாதத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரிக்கி லஹோரியா (23). போதை மருந்துகளுக்கு அடிமையான இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து இனி போதை மருந்துகளை தொடமாட்டேன் என ரிக்கி தனது தாயிடம் கூறியுள்ளார். இதோடு போதை பழக்கத்திலிருந்து விடுபட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ரிக்கி. இந்நிலையில் ரிக்கியின் கல்லீரல் அதிகளவு சேதமடைந்த காரணத்தால் அவரின் உயிர் நேற்று பிரிந்தது.

ரிக்கியின் மாமா ராஜேஷ்குமார் கூறுகையில், வீட்டிலிருந்த பொருட்களை விற்று போதை மருந்துகள் வாங்கும் அளவுக்கு ரிக்கி சென்றான்.

ஆனால் திருமணம் ஆனபின்னர் திருந்திவாழ ஆசைப்பட்டான், அது நடக்காமலேயே போய்விட்டது என சோகத்துடன் கூறியுள்ளார்.

8 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!!

தமிழ்நாட்டில் 8 மாத ஆண் குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் உள்ள அம்மச்சியாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அத்தை மகள் பாண்டிசெல்வியை காதலித்து திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு கிஷோர் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அஜித்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து கணவருடன் தகராறில் ஈடுபட்ட பாண்டிசெல்வி கிஷோரை தூக்கி கொண்டு தாய் வீட்டில் சென்று வசித்து வந்தார்.

இந்நிலையில், தனது இரண்டாவது திருமணத்திற்கு குழந்தை தடையாக இருக்கும் என கருதிய அஜித்குமார், தனது மனைவியிடம் தான் திருந்தி விட்டதாக கூறி நயவஞ்சகமாக அழைத்து வந்துள்ளார்.

பின்னர் குழந்தை கிஷோரை தனது நண்பரின் உதவியோடு கழுத்தை நெறித்து கொலை செய்து ஒன்றும் தெரியாது போல் நாடகமாடியுள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய நிலையில் பொலிசார் அஜித்குமாரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் உண்மையை ஒப்பு கொண்ட நிலையில் அவரையும், நண்பர் மணியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடிய அந்த நபர் : 11 பேர் மரணத்தில் பரபரப்பு தகவல்!!

இந்தியாவை உலுக்கிய 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கடைசியாக ஒருவர் மட்டும் தப்பிக்க போராடியதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் சமீபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 11 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அனைவரது கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில், வழக்கு குறித்து பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள்ளேயே கோயிலை கட்டி வழிபாடு செய்து வந்ததும், மோட்சம் அடைவதற்காக இவ்வாறு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர டைரியின் மரண குறிப்புகள், 11 குழாய்கள் என பல தகவல்கள் வெளியாகி பொலிசாரை குழப்பத்தில் ஆழ்த்தின.

இதனை தொடர்ந்து லலித் சுண்டவத் என்பவர் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது, 10 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த தந்தை உயிரோடு இருப்பதாக எண்ணி வாழ்ந்து வந்ததும், சொர்க்கத்தை அடைய தற்கொலை தான் வழி என குடும்பத்தாருக்கு தெரிவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 130 பேரிடம் விசாரணை நடத்தியதில், அந்த 11 பேரில் புவனேஷ் என்பவர் மட்டும் கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடி இருக்கிறார் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது ஒரு கை, கழுத்தில் மாட்டியிருந்த கயிற்றை பிடித்து இழுப்பது போன்று இருந்தது, கைகளிலும் கயிறுகள் இறுக்கமாக கட்டப்படவில்லை, எனவே கடைசி நேரத்தில் தப்பிக்க போராடி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சினிமாவை மிஞ்சிய நிஜ காதல் காட்சி : காதலை நிரூபிக்க உயிரிழந்த காதலனின் இதயத்தை பார்த்து கதறிய காதலி!!

மத்திய பிரதேசத்தில் பாஜக இளைஞரணி தலைவர் ஒருவர் தன்னுடைய காதலை நிரூபிக்க தன்னை தானே சுட்டுக்கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவராக இருப்பவர் அதுல். 30 வயதான இவர், தன்னுடைய தோழி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், இருவரின் திருமணத்துக்கு பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணிடம் வீட்டைவிட்டு வந்துவிடு திருணம் செய்து கொள்ளலாம் என ஹண்டே கூறியபோதிலும், தந்தையைவிட்டு வரமுடியாது என அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால், அடிக்கடி தனது வருங்கால மாமனாரிடம் தனது திருமணத்தை பற்றி அதுல் லோக்ஹண்டே பேசியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி தனது காதல், திருமணம் குறித்துப் பேசியபோது, பெண்ணின் தந்தை, ‘உன் காதல் உண்மைதான் என்பதை நிரூபி’ எனக் கேட்டுள்ளார். அதற்குத் தான் என்ன செய்யவேண்டும் கேட்கவே, ‘என் வீட்டுக்கு முன்வந்து துப்பாக்கியால் உன்னை நீயே சுட்டுக்கொண்டு காதலை நிரூபிக்க முடியுமா?’ எனக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகி அதுல், பெண்ணின் வீட்டிற்கு முன் நின்று தன்னை தானே சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அதுல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தாலும், மூளைச்சாவு நிலைக்குச் சென்றார். மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சை அளித்தும் அவர் மூளைச்சாவு நிலைக்குச் செல்வதை தடுக்க முடியவில்லை.

என் உடல் உறுப்புகளை என் காதலியிடம் காண்பித்து தானம் செய்துவிடுங்கள் என உருக்கமாக தெரிவித்தார். அதுலின் ஆசைப்படி உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அதுலின் இதயத்தையும், கண், உடல் உறுப்புகளையும் பார்த்த அவரின் காதலியும், தந்தையும் கண்ணீர்விட்டு அழுது, கதறினார்கள். மற்ற உடல் உறுப்புகள் போபாலில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது.

சினிமாவில் வரும் துயரமான காதல் காட்சிகள் போன்று அதுல் லோக்ஹண்டேவின் காதல் அமைந்துவிட்டது.