வவுனியாவில் கொட்டும் மழையிலும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று காலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் கடந்த டிசம்பர் மாதத்துடன் இடமாற்றம் பெற்று சென்றிருந்தார். அதன் பின்னர் கடந்த ஐந்து மாதங்களாக இப்பாடசாலை அதிபர் இன்றியே இயங்கி வந்திருந்தது.

இதனால் அதிபர் இன்றியே இயங்கி வந்த நிலையில் பாடசாலையின் மெய்வல்லுனர் போட்டியின் போது வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இப்பாடசாலைக்கான அதிபர் இன்மை பற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரினால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய வெகு விரைவில் அதிபரினை நியமிப்பதாக வவுனியா தெற்கு வலயக்கல்வ பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதும் இதுவரை இப்பாடசாலைக்கான அதிபரினை நியமிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையிலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாடசாலையினை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நீண்ட நேரமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலையினுள் செல்ல முடியாத நிலை காணப்பட்டதன் காரணமாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது.

வயலுக்கு சென்ற முதியவர் தலை வேறு உடல் வேறாக கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வயலுக்கு சென்ற முதியவரின் தலையை வெட்டி கொன்ற கொடூரம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாங்குளத்தில் வசித்து வருபவர் ராமு. இவர் விவசாய வேலை மற்றும் நகை தயாரிக்கும் தொழில் செய்து வருபவர்.

இன்று ஊரில் உள்ள தனது தோட்டத்தில் விவசாய வேலை செய்வதற்காக ராமு சென்றிருக்கிறார். எப்போதும் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து விடும் ராமு வழக்கமான நேரம் தாண்டியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் வயலுக்கு சென்றிருக்கின்றனர்.

தோட்டத்தில் ராமுவின் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு தனி தனியே கிடந்திருக்கின்றன. முதியவர் ராமு இறந்து கிடந்த நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறிய குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தினர்.

காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முதியவருக்கு அய்யம்மாள் என்கிற மனைவியும் , 4 பெண்குழந்தைகள் மற்றும் 1 மகன் இருக்கிறார்கள்.

குடும்பத்தாரிடம் இதுபற்றி விசாரித்த காவல்துறைக்கு முதியவர் ராமுவிற்கு நிறைய பகையாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என் தங்கையின் உடலை எட்டி உதைத்தார்கள் : தங்கையை பறிகொடுத்த அண்ணன் கண்ணீர்!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான இளம் பெண்ணின் அண்ணன் சம்பவம் குறித்து சோகத்துடன் விளக்கியுள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் 13 பேர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதில் ஒருவர் தான் ஸ்னோலின் வெனிஸ்டா (18). இவரின் தாடையில் பாய்ந்த குண்டு பின்னர் கழுத்து பகுதி வரை சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே ஸ்னோலின் உயிரிழந்தார்.

ஸ்னோலினின் சகோதரர் காட்வின் இது குறித்து கூறுகையில், ஸ்னோலின் இறந்தவுடன் அவர் உடலை பொலிசார் எட்டி உதைத்துள்ளனர்.

அம்மா, ஏழு மாசக் குழந்தை, மூணு வயசுப் பொண்ணு, தங்கச்சி, என் மனைவி எனக் குடும்பமே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பேரணியில் கலந்துகிட்டோம்

ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கியதும், கண்ணீர்ப் புகைக்குண்டு வெடித்தது, அப்பறம் திடீரென துப்பாக்கி சூட்டை ஆரம்பிச்சுட்டாங்க. அந்தக் களேபரத்துல என மனைவியையும் தங்கச்சியையும் காணலை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் செய்தியில் வந்த போட்டாவைப் பார்த்து தான் குண்டடிபட்டு இறந்ததில் என் தங்கையும் இருப்பது தெரிந்தது.

என் மனைவி வேரொருவர் வீட்டுல ஒளிஞ்சிருந்து மாலை அஞ்சு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தாங்க என கூறியுள்ளார்.

மேலும் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். ஸ்டெர்லைட்டை மூடும்வரை எங்கள் குரல் ஒலித்துகொண்டே இருக்கும் என காட்வின் குமுறலுடன் முடிக்கிறார்.

வெளியில் வர முடியாமல் தவிக்கும் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி : அதிர்ச்சிக் காரணம்!!

பிரபல காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக 13 பேர் பலியாகியுள்ள நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், தற்போது நான் தூத்துக்குடியில் இருக்கிறேன். எங்கள் தேவாலயத்தின் 75-ஆம் ஆண்டு விழாவிற்காக இங்கு வந்துள்ளேன்.

எனக்கு 23 வயது இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலை இங்கு வந்தது. அப்போதே பலரும் இந்த ஆலையால் மூச்சுத் திணறல் ஏற்படும், நச்சுக் காற்று பரவும் என்று எல்லாம் கூறினர்.

இந்த ஆலையால் நிறைய மக்கள் பாதிப்புகுள்ளாகியிருக்கின்றனர். இதனால் அப்போது ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது வரை ஆலையை மூடக்கோரி நடந்து வருகிறது.

இந்த 100-வது நாள் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன், அங்கு என்ன நடந்தது என்பது எனக்கும் தெரியும். மக்கள் அமைதியான முறையில்தான் போராடினார்கள்.

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போக அது, இப்படியொரு கலவரமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நியாமான பிரச்சனைக்காக போராடுற மக்களை நோக்கி, துப்பாக்கியால் நெஞ்சில் சுடுறது எவ்வளவு மோசமான செயல், துப்பாக்கிச் சூட்டின் காரணமாக பலர் இறந்திருந்த போது, உடனடியாக முதல்வர் நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் தருவதாக கூறுகிறார்.

இதை எப்படி சொல்வது? நம்ம குடும்ப உறுப்பினர்கள் நம்மளைவிட்டுப் பிரிந்துவிட்டால் நம்ம மனநிலை எப்படியிருக்கும். கலவரம் அடங்கிய பிறகு இந்த நிவாரணத் தொகையை கூறியிருக்கலாம்.

துப்பாக்கிச் சூட்டின் போதும் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை, முதலில் வானத்தை நோக்கி சுட்டிருக்க வேண்டும். அல்லது முட்டிக்கு கீழே சுடுவாங்க, தண்டனை குற்றவாளியா இருந்தா கூட காலுக்கு கீழே தான் சுட வேண்டும்.

பொலிசார் ஏன் நெஞ்சுல சுட்டாங்க என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை இந்த ஆலையை மூடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, எத்தனை உயிர்கள் போயிருக்கிறது, அதற்கு மரியாதை கொடுக்கும் விதமாக இந்த நேரம் ஆலையை மூடியிருக்க வேண்டாமா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

பிரபல நடிகர் விபத்தில் மரணம் : அதிர்ச்சியில் சக நடிகர்கள்!!

 

பிரபல நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சந்தன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளதோடு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சந்தன் (34).

இவர் இரண்டு சக நடிகர்களுடன் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லொறி மீது கார் வேகமாக மோதியது.

இதில் சந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சந்தனின் மரணம் சக நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பிரபல நடிகர்களான பிரேம், துனியா விஜய் உள்ளிட்டோர் அவர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இலங்கையில் இப்படியொரு அரசியல்வாதியா?

பதுளை மாவட்டத்தை சேர்ந்த மேயரின் செயற்பாடு, இலங்கை அரசியல்வாதிகளுக்கு முன்னூதாரணமாக அமைந்துள்ளாக தகவல் வெளியாகி உள்ளது. மேயர் பதவிக்காக வழங்கப்பட்ட வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பதுளை மேயர் நிராகரித்துள்ளார்.

அவருக்காக வழங்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் பணத்தை நகர அபிவிருத்திக்காக பயன்படுத்த அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த பணம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நகர சபையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அறிக்கப்பட்டது.

எனினும் பதுளை மாவட்டத்தின் புதிய மேயர் பிரியந்த அமரசிறி அந்த பணத்தை நகர அபிவிருத்திக்காக பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். அதற்கான அனுமதியையும் பெற்றுள்ளார்.

தற்போது உள்ள பழைய வாகனங்களில் ஒன்றை பழுது பார்த்து தனது பயன்பாட்டிற்காக வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரத்தில் பல குறைகள் உள்ள நிலையில் தனது பயன்பாட்டிற்கு அவ்வளவு பெறுமதியான வாகனம் அவசியம் இல்லை எனவும், நகர அபிவிருத்திக்கு முதன்மை இடத்தை வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியல்வாதிகள் ஆடம்பர கார்களுக்கு இலவசம் தேடும் போதும், பதுளை மேயரின் செயற்பாடு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் முக்கிய நகர சபையின் நகர பிதாவாக ஈழத் தமிழர் தெரிவு!!

லண்டனின், கிங்ஸ்ரன் நகர பிதாவாக வைத்தீஸ்வரன் தயாளன் நேற்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்ல ரொல்வத் வட்டாரத்தில் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் பெருமளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இவர் போட்டியிட்ட லிபரல் கட்சி 39 ஆசனங்களையும், எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சவேட்டிவ் கட்சி 9 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில், கிங்ஸ்ரன் நகரத்தின் 183ஆவது மேயராக வைத்தீஸ்வரன் தயாளன் பதவியேற்றார். இதற்கு முன்னர் கிங்ஸ்ரன் நகரசபையின் உறுப்பினராக இருந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். 40 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகின்றார். தெல்லிப்பழை மகாஜானக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பிரிட்டனில் அந்தப் பாடசாலையில் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

இனசமத்துவத்துக்கான அமைப்பு, தமிழர் துடுப்பாட்டக் கழகம் உள்ளிட்ட சங்கங்களில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்பகால நிர்வாகச் செயலர் ரி.எம்.சி.வைத்தீஸ்வரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பை நெருங்கும் ஆபத்து : நீரில் மூழ்குமா நாடாளுமன்றம்?

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொழும்பை சூழவுள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்தால் இலங்கை நாடாளுமன்றம் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையை எட்டியுள்ளன.

ஆபத்தான நிலை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளதாகவும், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பகுதிக்கு மாத்திரமின்றி அருகில் உள்ள வீடுகளுக்கும் இந்த ஆபத்து உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றி அமைந்துள்ள தியவன்னா ஓயவின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து சில மணித்தியாலங்கள் மழை பெய்தால் நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆபத்த நிலை ஏற்படும் பட்சத்தில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க கடற்படையினர் தயாராக உள்ளனர்.

நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பாரிய முதலைகள் வெளியில் வரும் அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (23.05.2018) புதன்கிழமை மாலை முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 அகவையுடைய வரதராஜா சதாநிசன் என்ற இளைஞனை நேற்றையதினம் மாலை வரை காணாத நிலையில் தந்தையார் தேடியுள்ளனர்.

இதேவேளை செல்வபுரம் கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் உந்துருளி ஒன்று மாலை வரை நின்றுள்ளதை அவதானித்த அருகில் உள்ள அயலவர்கள் முல்லைத்தீவு பொலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

குறித்த சம்பவத்தை ஆராய்வதற்காக முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலீஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்து சென்று உந்துருளியினை பார்வையிட்டுள்ளதுடன் அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துள்ளார்கள்.

இதேவேளை குறித்த இளைஞனின் தந்தையாரும் கிராமமக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளார்.

தந்தையார் உந்துருளியின் இலகத்தினை வைத்து தனது மகனின் உந்துருளி என உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து தனது மகன் என தந்தையார் பொலீசாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து செல்வபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு இன்று காலை சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு உடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பான போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து உடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மற்றும் குற்றத்தடுப்பு பொலிசார் இணைந்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

கழுத்து பகுதியில் பாரிய வெட்டுக்காயம் இருப்பதால் இது திட்டமிட்ட கொலையாக இருக்குமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு கடலில் ஏற்பட்ட அதிசயம்!!

தலைநகர் கொழும்பில் புதிய கடற்கரை ஒன்று உருவாகியுள்ளதால் மக்கள் நன்மை அடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரம் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பகுதியில் புதிதாக 2 கிலோ மீற்றர் நீளமான கடற்கரை ஒன்று உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தை செயற்படுத்தும் CHEC நிறுவன அதிகாரி லியென்க் தோவ் மிங்க் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை கொழும்பு நகரத்திற்கு கடற்கரை ஒன்று இல்லை எனவும், துறைமுக நகர திட்டத்தின் ஊடாக மக்கள் பாரிய நன்மையை அடைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சீன தூதுவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வில் அவர் கருத்து வெளியிட்டார்.

துறைமுக நகரத்திற்கான மற்றொரு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக நகர திட்டம் ஊடக இலங்கைக்கு 1.4 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடு கிடைக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடலுக்குள் புதிய நகரம் உருவாகி வருகின்றது. இந்நிலையில் ஆழ்கடலிற்குள் கடற்கரை உருவாகும் அதிசயம் கொழும்பில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் : யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவர் விரக்தியில் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் வயோதிப தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்குப் பகுதியில் நேற்று நடந்துள்ளது.

வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த வயோதிபத் தாய் தனிமையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுப் பிற்பகல் அவரது உறவினரொருவர் வீடு சென்று பார்த்த போது அவரை வீட்டில் காணவில்லை. இறுதியாக வீட்டுக் கிணற்றை எட்டிப் பார்த்த போது அங்கு வயோதிபத் தாய் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!

வவுனியாவில் இன்று (24.05) காலை புதிய பேருந்து நிலையத்தில் 4 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக போதை ஒழிப்புப் பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட பொலிசார்,

யாழ்ப்பாணம் தாளையடியைச் சேர்ந்த கணேசலிங்கம் கோகிலம் என்ற 44 வயதுப் பெண் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 4 கிலோ 62 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும், குறித்த கஞ்சாவினை ஹொறவப்பொத்தான பகுதியில் நபர் ஒருவருக்கு வழங்குவதற்கு எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் 7 பாடசாலை மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்!!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் ஆசிரியரொருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி கற்கும் 12வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது என குறித்த மாணவிகளை அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியொருவர் அவரின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சந்தேகநபரான ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா, தம்பனை பிரதேசத்தில் காட்டு விலங்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் காட்டுப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றவேளை, விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் தம்பனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரவிச்சந்திரன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான க.மிதுசன் என்ற இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வவுனியா நகரிலிருந்து வாரிக்குட்டியூருக்கு சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வாரிக்குட்டியூர் நோக்கி வாகனத்தில் சென்றுள்ளார். வாகனத்தைச் சுத்தம் செய்வதற்காக, சுத்தம் செய்யும் இயந்திரத்தின் பவர் பட்டனை அழுத்தியுள்ளார். இதன்போது மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி அவர் தூக்கி வீசப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நேற்று மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கணவர் கண் எதிரே மனைவிக்கு நடந்த கொடுமை!!

இந்தியாவில் கணவர் கண் எதிரே மனைவியை மந்திரவாதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள ரஹ்மத் அலி ஷேக் என்ற மந்திரவாதியை நாடியுள்ளனர்.

அங்கு கணவனை தூணில் கட்டி வைத்து விட்டு மனைவியை அவர் கண் எதிரிலேயே ரஹ்மத் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தம்பதியிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு அவர்களை விரட்டி விட்டார்.

இது குறித்து அவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் ரஹ்மத்தை கைது செய்தனர்.

ரஹ்மத் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த தம்பதியினருக்கு உதவி செய்வதற்காக தான் அப்படி செய்ததாகவும், அவர்கள் சம்மதத்தின் பேரிலேயே இது நடந்தது எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.