பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது!!

பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கிராமியப் பொருளாதார அலுவல்கள் மற்றும் மீன்பிடி, நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நேற்று மாலை அவரது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், பசும்பால் பருகுவது ஆரோக்கியத்துக்குப் பெரும் உறுதுணையாக இருந்தாலும் பசும்பால் நுகர்வு தற்போதைக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக பசும்பால் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் செயற்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கல்வியமைச்சுடன் இது தொடர்பாக விரைவில் கலந்துரையாடி இணக்கப்பாடு ஒன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆரம்பத்தில் தேசியப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம் படிப்படியாக ஏனைய பாடசாகைளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயமுனி சொய்சா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

மக்களை வாட்டி எடுக்கவுள்ள கடுமையான வெப்பநிலை எதிர்வரும் 25ம் திகதி வரையில் நீடிக்கும்!!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் 25ம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் தற்பொழுது நிலவி வரும் மழையுடனான காலநிலை மற்றும் சில பிரதேசங்களில் நிலவி வரும் உடலுக்கு உசிதமற்ற வெப்ப நிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஜனக குமார தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறட்சி நிலவி வருவதனால் வெப்பத்துடன் கூடிய காலநிலை நீடித்து வருவதாகவும் ஏனைய பகுதிகளில் வளிமண்டலத்தின் நீர் ஆவியாதல் காரணமாகவும் வெப்பநிலை அதிகரிதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

25ம் திகதியின் பின்னர் மழை பெய்யும் எனவும் அதன் பின்னர் இந்த வெப்பத்துடன் கூடிய காலநிலை குறைவடையும் என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழில் உயிருடன் உள்ள மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி ஒட்டிய கணவன்!!

 

வேறு ஒருவரை திருமணம் செய்த மனைவிக்கு, கணவன் ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் யாழ். மாதகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகல் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை மூன்று வருடங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

பின்னர் தொழில் நிமிர்தம் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். குறித்த இளைஞர் பெருமளவான பணம் அனுப்பி வந்த நிலையில், மனைவியை தான் வசிக்கும் நாட்டிற்கு அழைப்பதற்க்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குறித்த யுவதி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த வெளிநாட்டில் இருக்கும் கணவன் நண்பர்கள் மூலம் தனது மனைவி இறந்து விட்டதாக தெரிவித்து ஊர் முழுதும கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அமெரிக்காவில் மிருகமாக மாறிய அதிகாரியினால் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

அமெரிக்காவின் நிவ்யோர்க் முன்னாள் சட்டமா அதிபர் ஒரு மிருகம் போன்று கொடியவர் என, இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். பெண்களை துன்புறுத்திய நிவ்யோர்க் சட்டமா அதிபர் எரிக் ஸ்னெய்டர்மென் குறித்து அவரது காதலியான தான்யா செல்வரத்னம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சேர்ந்த தான்யா செல்வரத்னம், சட்ட மாஅதிபர் அலுவலத்தில் நடந்த விசாரணையின் போது இந்த தகவலை வெளியிட்டார்.

ஸ்னெய்டர்மென் நாளொன்றுக்கு அளவுக்கு அதிகமாக வைன் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டிற்கமைய வழக்கு தாக்கல் செய்ததாகவும், அதற்கு எதிராக ட்ரம்பும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஹிலாரி கிளின்டனும் தொடர்பு வைத்திருந்ததுடன், தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட கேக்கினை கூட வெட்ட இடமளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்னெய்டர்மென் அதீத ஆசை கொண்ட ஒருவர் எனவும், அவர் தன்னை தாக்கியமையினால் தான் வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டதாக தான்யா செல்வரத்னம் மேலும் தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தான்யா செல்வரத்னம் உள்ளிட்ட நான்கு பெண்கள், ஸ்னெய்டர்மென்னுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து நிவ்யோர்க் நகர சட்ட மாஅதிபரும், அமெரிக்காவின் சமகால ஜனாதிபதியின் கொள்கை ஆலோசகருமான எரிக் ஸ்னெய்டர்மென் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். இளைஞர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல் : சந்தேக நபர்கள் விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் – நீர்வேலி கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நட்டத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்வேலி பகுதியில் நேற்று முன்தினம்(07.05) திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது 23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டப்பட்டும், கிரிகேசன் (வயது 23) காலில் படுகாயமடைந்த நிலையிலும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறனர்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை வாள்வெட்டுக் கும்பல் கிணற்றுக்குள் தூக்கி வீசியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போதே மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டப்பகலில் நடுத்தெருவில் வீசப்பட்ட வயோதிபர் : சாப்பாடு… சாப்பாடு என முனங்கிய சோகம்!!

காரைதீவில் இன்று வயோதிபர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 70 வயது மதிக்கத்தக்க குறித்த வயோதிபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. அவர் ”சாப்பாடு… சாப்பாடு” என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் பேசவில்லையென தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்று பகல் 12.40 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குறித்த வயோதிபரை ஆட்டோவில் கொண்டுவந்து காரைதீவு 12ஆம் பிரிவில் நடுத்தெருவில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு கிடைத்த தகலுக்கமைய வயோதிபர் கிடந்த இடத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வீதியில் கிடந்த அந்த வயோதிபரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்த்தார்.

மேலும், அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கும் அறிவித்தல் கொடுத்ததன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

யார் ஆட்டோவில் வந்து வயோதிபரை கொண்டுவந்து இங்கு போட்டார்கள்? என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. இந்தப்படத்திலுள்ள வயோதிபரை இனங்காண உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம் : ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய பொன்சேகா!!

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து மன்னிப்பு கோரியதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், அமைச்சர் பொன்சேகா சில அமைச்சர்களுடன் சென்று ஜனாதிபதியை சந்தித்து மன்னிப்பு கோரியதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா கடந்த 3ஆம் திகதி புதிய அமைச்சு பதவியின் கடமைகளை பொறுபேற்றுக் கொண்ட பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்திலும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இது சம்பந்தமாக ஜனாதிபதியை இன்று மதியம் சந்தித்து மன்னிப்பு கோரியதாக தகவல்கள் கூறுகின்றன.

 

-தமிழ்வின்-

இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை!!

இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தலையை வைத்து இருந்த நிலையில் புகையிரதம் தலைபகுதியில் ஏறிய நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தொடக்கம் புத்தளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு தலையில் மேல் ஏறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிலாபம் – அளுத்வத்த பிரதேசத்திலே இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இவர் தண்டவாளத்தில் தலையை வாய்த்த நிலையில் புகையிரதம் தலையில் ஏறிச் சென்றுள்ளது.

புகையிரத ஊழியர்களினால் சடலம் சிலாபம் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞர் யார் என்பதனை அடையாளம் காண்பதற்கு காவற்துறை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்கொலைக்கு முன்னர் நடந்த மர்மம் வெளியானது!!

ரிதிகம – கிரிபத்கல்ல பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவியின் சடலங்களை காவல்துறை நேற்று (8) மீட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், கணவன் வீட்டினுள் தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

மனைவியை கொலை செய்த பின்னர் குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் இருந்த மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப தகராறு அதிகரித்து இந்த குற்றச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, 29 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் 34 வயதான நபர் ஆகும். இவர்கள் இருவருக்கும் 3 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 வயது மாணவியொருவருக்கு பாடசாலை நிறைவடைந்தவுடன் இடம்பெறும் கொடுமை!!

பாடசாலை மாணவியொருவரை விற்பனை செய்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று பேர் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய பெண்ணொருவரும், 23 வயதுடைய அவரின் மகனும் மற்றும் வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் 46 வயதுடைய நபரொருவருமே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலை மாணவி தற்போதைய நிலையில் , நீர்க்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடான காவற்துறையின் குழந்தைகள் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , சந்தேகநபரான குறித்த பெண் மாணவியை உந்துருளியொன்றில் அழைத்துச் சென்று வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை , குறித்த பெண்ணின் மற்றுமொரு மகன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. அவரை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

கிம்புலாபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணையில் நீண்ட காலமாக சந்தேகநபரான குறித்த பெண் இவ்வாறு பாடசாலை மாணவியை பல நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடசாலை நிறைவடைந்ததும் குறித்த சிறுமியை இவ்வாறு விபச்சாரத்திற்கு குறித்த பெண் உள்ளிட்ட குழுவினர் ஈடுபடுத்தி வந்துள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கடான காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு நுளம்பு : கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரம்!!

வவுனியாவில் அண்மைக்காலங்களில் பெய்த மழை காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (09.05) மாலை வவுனியா நகரில் முன்னாயத்த நடவடிக்கையினை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மலேரியா தடுப்பு இயக்கமும் இணைந்து மேற்கொண்டனர்.

அண்மையில் மாலை வேளையில் வவுனியாவில் பெய்துவரும் மழை காரணமாக நுளம்புக் குடம்பிகளில் டெங்கு பெருகும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது இதையடுத்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்தியர் எஸ்.லவனின் பணிப்புரையில் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாருமில்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த இளைஞர்கள் செய்த மோசமான காரியம்!!

திருகோணமலை – நிலாவெளி பகுதியில் வீடொன்றினை உடைத்து நகைகள் மற்றும் பணத்தினை திருடிய மூவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிலாவெளி, இக்பால் நகர் மற்றும் ஆக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 25, 23 மற்றும் 24 வயதுகளுடைய மூன்று இளைஞர்களையே கைது செய்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் கூறியுள்ளனர்.

யாருமில்லாத நேரத்தினை அவதானித்து குறித்த வீட்டினை உடைத்து புகுந்து 2 பவுன் தங்க நகையினையும், ஒரு இலட்சம் ரூபா பணத்தினையும் திருடியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இளைர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்

தந்தையின் விடுதலைக்காக கதறியழும் அரசியல் கைதியின் மகள் கம்சா!!

எங்கட வீட்டையும் யாரும் இறந்தால் சிறையில் இருக்கின்ற என்ற அப்பாவையும் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டம் எல்லாம் செய்வினம் என வவுனியாவில் உள்ள அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் என்பவரின் மகள் கம்சா தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை வாகனத்தில் வெடி மருந்துகொண்டு சென்றார் என்ற சந்தேகத்தின்பேரில், செல்லையா சதீஸ்குமார், 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது தந்தை விடுதலையாகி வெளியே வரவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் அரசியல் கைதியின் 14 வயதுடைய மகள் கம்சா கொழும்பு ஊடகம் ஒன்றிடம் வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

2008-01-28 ஆம் திகதி வவுனியா தேக்கவத்தை எனும் இடத்தில் அப்பாவை கைது செய்தனர். அப்பா செலுத்திச் சென்ற வாகனத்தில் சி4 வெடிமருந்து கொஞ்சம் இருந்ததாக காட்டி அப்பா கைது செய்யப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் ஓமந்தைச் சோதனைச்சாவடியில் மிக கடுமையாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுமாம்.

எனவே ஓமந்தை சோதனைச் சாவடியில் அப்பா செலுத்தி சென்ற வாகனம் மிக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாம். அப்போது கண்டுபிடிக்கப்படாத வெடி மருந்து எப்படி தேக்கவத்தை பகுதியில் வாகனத்தில் இருந்தது என்பதுதான் தெரியவில்லை. இந்தக் குற்றத்திற்காகவே அப்பாவுக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தில் (விடுதலைப்புலிகள்) இருந்த நிறைய போராளிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் இன்றைக்கு தடுப்புக்குச்சென்று வெளியில் வந்துவிட்டனர். தளபதியாக இருந்தவர்கள் எல்லாம் வெளியில் இருக்கின்ற போது எனது அப்பா போன்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டணை வழங்க வேண்டும்.

அப்பா கைது செய்யப்படும் போது எனக்கு நான்கு வயது தற்போது 14 வயது இத்தனை வருடங்களும் நான் அப்பாவை கம்பிகளுக்கு பின்னாள் பார்த்திருக்கிறேன். எல்லா பிள்ளைகளும் போன்று அப்பாக்களுடன் சந்தோசமாக இருக்க வேண்டிய வயதில் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

எனக்கு விபரம் புரியாத அந்த நான்கு வயது வரை என்னை அப்பா எப்படியெல்லாம் பாசத்தோடு வளர்த்திருக்கின்றார் என்பதனை அம்மாவும் ஊராக்களும் சொல்லிக் கேட்கும் போது கண்ணீர் வரும். அதற்கு பிறகு அப்பாவுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஏங்கிய காலத்தில் அப்பா அருகில் இல்லை.

ஆனந்தசுதாகரன் மாமாவின் பிள்ளைகள் போன்றே நானும், என்னை போன்றே நிறைய பிள்ளைகளும் இருக்கின்றார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்றே தெரியவில்லை. யுத்தம் எல்லாம் முடிந்துவிட்டது இனி நாட்டில் பிரச்சினை இல்லை என்று இருக்கின்ற போது ஏன் என்னுடைய அப்பாவையும் அவர் போன்று சிறைகளில் வாடுகின்ற எல்லோரையும் இந்த அரசாங்கம் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தால் என்ன?

என்னுடைய அப்பாவை என்னுடன் சேர்த்துவிடுங்கள் என்று இந்த 14 வயதிற்குள் நான் பலரின் காலில் விழுந்திருக்கிறேன். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், நாமல்ராஜபக்ஸ, பசில்ராஜபக்ஸ எம்பியாக இருந்த காலத்தில் அவருடைய காலில் இப்படி ஏராளமானவர்களின் காலில் விழுந்து வணங்கியிருக்கிறேன்.

பொது நிகழ்வுகளில் யாரேனும் அமைச்சர்கள், எம்பிமார் வருவார்கள் என அறிந்தால் அம்மா முதல் நாள் அழுதழுது கடிதம் எழுதுவார். பின்னர் என்னையும் கூட்டிக்கொண்டு அம்மா செல்வார். நிறைய பொது மக்கள் மத்தியில் நான் அந்த அரசியல்வாதிகளின் காலில் விழுந்து வணங்க அம்மா கடிதத்தை கொடுத்து அப்பாவை விடச்சொல்லி மன்றாடுவார். அப்பாவின் விடுதலைக்காக நாங்கள் எதனையும் செய்யத்தயாராக இருந்தோம். இதுவரை நானும் அம்மாவும் எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுப்போய்விட்டன. எந்த நன்மையும் ஏற்படவில்லை.

நான் காலில் விழுந்ததனையும், அம்மா கெஞ்சிக்கெண்டிருந்ததனையும், சிலர் அலட்சியமாக தன்னுடைய உதவியாளரிடம் கடிதத்தை கொடுக்க சொல்விட்டு எங்களை கண்டுகொள்ளாது அலட்சியமாக கடந்து சென்ற சம்பவங்களை இப்பொழுது கூட நினைக்கும் போது வேதனையும், விரக்தியும் ஏற்படுகிறது. அப்பா கைது செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட காலம் தொடக்கம் அம்மா எழுதிய கடிதம் எண்ணில் அடங்காதது. கடவுளுக்கு கூட கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்திருந்தால் என்னுடை அம்மா கடவுளுக்கும் கடிதம் எழுதியிருப்பார்.

பாவம் அம்மா எனக்காகவே செயற்கையாக சிரித்து வாழ பழகிக்கொண்டார். இல்லை என்றால் என்னுடைய அம்மாவின் முகத்தில் சிரிப்பை காண முடியாது. என்னை படிப்பித்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே அவர் தன்னை மாற்றிக்கொண்டார். இப்போது எனக்கு எனது அம்மாவும் அருகில் இல்லை.

அப்பாவின் வழக்குக்காக பல இலட்சங்களை செலவு செய்துவிட்டோம். இப்போதும் கூட உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருகின்றோம் அதற்கும் இலட்சங்கள் செலவாகும். இவற்றை எல்லாம் சமாளிப்பதற்காகவும் எனது படிப்புச் செலவுகளை பார்பதற்கும் அம்மா வெளிநாடு சென்று விட்டார்.நான் அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகிறேன்.

அப்பாவின் வழக்கை பொறுத்தவரையில் எனக்கு சட்டத்தரணிகள் மீதே அதிகம் கோபம். எனது அப்பா செலுத்தி சென்ற வைத்தியசாலை வாகனத்தில் சிறிய அளவில் சி4 மருந்து இருந்ததாக சொல்லி கைது செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய தண்டனையே.

வவுனியா நீதிமன்றில் அப்பாவுக்கு 2011 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதிக்கும் எனது வயதில் ஒரு மகள் இருக்கின்றார் என்று சொல்கின்றார்கள். அப்பாவுக்கும் மகளும் இடையே உள்ள உறவு, எப்படி அவருக்கு புரியாது போய்விட்டது? அப்பா மகள் பாசம் எப்படி அவருக்கு விளங்காது போய்விட்டது? எல்லோரும் சொல்கின்றார்கள் இந்த வழக்குக்கு ஆயுள் தண்டனை மிகப்பெரிய தீர்ப்பு என்று.

நான் அப்பாவை சந்திக்கின்ற போதெல்லாம் அவரிடம் கூறுவேன் நான் படித்து ஒரு சட்டத்தரணியாக வந்து உங்களை வெளியில் கொண்டுவருவேன் என்று. இப்போது அப்பாவுக்காகவே படிக்கின்றேன். எனக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆசை நான் அப்பா, அம்மா எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என்பதே. அது நிறைவேற வேண்டும் என்றே தினமும் கடவுளை வணங்கி வருகின்றேன்.

வடக்கு,கிழக்கு, மலையகம் என நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் அரங்சாங்கம் அவர்களை விடுதலை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் சுவாமிநாதன் அரசியல் கைதிகளை சந்தித்த போது சொல்லியிருக்கின்றார்.

இந்தச் சந்திப்பில் அப்பாவும் இருந்திருக்கின்றார். இவர்கள் எல்லோரும் ஒன்று சேருவார்களா ? நான் என்ன செய்தால் இவர்கள் ஒன்றுசேர்ந்து அப்பா உட்பட எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய குரல் கொடுப்பார்கள்.

எப்பொழுது கைதிகள் தினம் வரும் என்று காத்திருப்பேன் ஏனென்றால் அன்றுதான் அப்பாவின் அருகில் அவரது மடியில் இருந்தோ, அப்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தோ பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். ஏனைய நாட்களில் அப்பாவை சந்திக்க சென்றால் கம்பிகள் எங்கள் இருவரையும் இணைய விடாது தடுத்து நிற்கும்.

இதனை தவிர ஆறு மாதத்திற்கு அப்பா இருக்கின்ற புதிய மகசீன் சிறைசாலைக்கு அப்பாவுக்கு எந்த பொருட்களும் கொடுக்காது, நாங்கள் எவருமே சென்று பார்க்காது விட்டால் அப்பா விண்ணப்பித்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வர முடியும் அப்படி வருகின்ற போது அவருக்கு பிடித்த உணவுப்பொருட்களை தினமும் செய்துகொண்டு சென்று பார்த்து வருவோம். ஒரு கிழமைக்கு இவ்வாறு பார்க்க முடியும். இதற்காவே ஆறு மாதத்திற்கு அப்பாவை சென்று பார்க்காமலே இருப்போம்.

ஒரு தடவை அப்பாவை பார்க்க சென்ற போது அவர் சேட் போடாமல் வந்து விட்டார் அப்போது அவரின் முதுகு மற்றும் ஏனைய இடங்களை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வயரால் அடித்தது போன்று நிறைய அடையாளங்கள் இது என்ன என்று கேட்ட போது ஒன்றுமில்லை என்று மறைக்க முற்பட்டார் அப்பா.

ஆனால் நான் விடவில்லை இது என்னவென்று சொல்லுங்கோ என்று வற்புறுதிய போது சொன்னார் விசாரணை காலத்தில் தனக்கு ஏற்பட்ட சித்திரவதைகள் பற்றி. மிக மோசமான, கொடூரமான சித்திரவதைகளுக்கு அப்பா உட்பட்டிருக்கின்றார்.

ஆனால் ஒரு தடவை கொழும்பு பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்பாவை சுகயீனம் காரணமாக கொண்டு சென்ற போது கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டியே கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவ்வாறே சங்கிலியால் கட்டி வைத்திருக்கின்றார்கள்.

என்னுடைய அப்பா இப்படியெல்லாம் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து வருகின்றார். இது ஏன் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளங்கவில்லை, அமைச்சர் சுவாமிநாதன் சொன்னமாதிரி இவர்கள் ஒன்று சேர்ந்தால் இந்தக் கொடுமைகளிலிருந்து என்னுடைய அப்பா உட்பட பலர் விடுதலையாகி வருவார்கள்தானே?

சிறைக்குள் இருந்த படியே அப்பா நான்கு நூல்களை எழுதிவெளியிட்டுள்ளார். அதன் மூலம் கிடைத்த பணத்தில் எனக்கும் பாடசாலைக்குரிய கற்றல் உபகரணங்களை ஆசையோடு வாங்கி தந்தவர். அது அப்பாவுக்கு பெரிய சந்தோசம்.

பெரிய பெரிய குற்றங்கள் செய்தவர்களை எல்லாம் வெளியில் விட்டுவிட்ட அரசாங்கம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட எனது அப்பா மற்றும் ஏனையவர்களை மன்னித்துவிடுதலை செய்ய வேண்டும், என்றும். அதற்காக எல்லா தமிழ் எம்பிமாரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை : அதிகம் பகிருங்கள்!!

மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற 2 தினங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்தங்கள் முடிவடையவுள்ளமையினால் அவசரமாக குருதியினை வழங்குமாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது. எனினும்சில குருதிவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதன்படி O,A,B போன்ற எதிர்மறை இரத்தவகைகளுக்கு கூடுதல் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்கு பொது மக்கள் முன்வரவேண்டும் எனினும் மக்களிடையே இரத்ததானம் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.

மேலும் இரத்ததானம் தொடர்பான விளக்கத்தினை பொதுமக்களுக்கு ஊடகங்களே வழங்க முன்வரவேண்டும் என்றும் மேலதிக தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியூடாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 18 – 60 வயதுக்குட்பட்ட 50 கிலோ நிறையுடைய ஆரோக்கிமான நிலையிலுள்ள சுகதேகி ஒருவரால் இரத்ததானம் செய்து கொள்ள முடியும் என்பதை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்படும் அபாயம்!!

நாடு முழுவதும் மின்சார தடை ஏற்படலாம் என மின்சார சபை பொறியியலார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கான ழுழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.

கலப்பு ஜெனரேட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சாரச சபை பொறியியலாளர்கள் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தை நிறுத்திவிட்டு மீண்டும் வழமையை போன்று பணியில் ஈடுபடுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மின்சார பொறியியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்கப்படுகின்ற கலப்பு ஜெனரேட்டர் திட்டத்திற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு தமதமாகியமையே இதற்கு காரணமாகும்.

அதற்காக விரைவான தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இதற்கு தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என மின்சார பொறியியலார்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மின்சாரம் தடைப்பட கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நுவர்வோர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்கள் தொடர்பில் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் கடும் வெப்பம் : திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் பரிதாபமாக மரணம்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்

கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளர். மாணவன் காங்கேசன்துறைக்கு சென்று வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன் தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு அங்கிருந்து மதியவேளை, உறவினர்களைப் பார்ப்பதற்காக சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள காங்கேசன்துறைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

மிகவும் சோர்வடைந்திருந்த அவர், அங்கு தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மென்பானமும் அருந்தியுள்ளார். இதன்பின் தலைசுற்றுவதாகக் கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ந்தனர். எனினும் சிசிக்சையின் பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.