அதிகரிக்கின்றது எரிபொருள் விலைகள் : எரிபொருள் நிலையங்களில் நிரம்பி வழியும் வாகனங்கள்!!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் விநியோக நிலையங்களில் வாகனங்கள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.

கொழும்பின் ஹெவ்லொக் வீதி எரிபொருள் நிலையமொன்றில் சுமார் அரைக் கிலோமீற்றர் தூரம் வரை வாகனங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக பொலிஸ் மைதானம் தொடக்கம் ஹெவ்லொக் டவுண் வரையான பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் 20 ரூபாவினாலும், டீசல் 09 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 40 ரூபாவினாலும் லீட்டர் ஒன்றுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருளின் விலைகளில் திடீர் மாற்றம்..

இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரத்தை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்காக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளது.

இதன் காரணமாக எரிபொருளின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஒரு லீற்றர் பெற்ரோல் 20 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசல் 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணை 40 ரூபாவினாலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் புதிதாக கட்டப்பட்ட பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழந்தது!!

வவுனியாவில் நேற்று பிற்பகல் வேளையில் பாடசாலைக்கு புதிய வகுப்பறைக் கட்டடம் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் திடீரென்று கட்டப்பட்ட தூண் இரண்டு சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பாடசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா தெற்கு வயலத்திற்குட்பட்ட மூன்றுமுறிப்பு வவுனியா ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பாடசாலைக்கான புதிய வகுப்பறைக்கட்டிடம் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது. அப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் நேற்று முன்தினம் அமைக்கப்பட்ட ஒரு பகுதிக்கான தூண் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் வேளையில் திடீரென்று நிறுத்தப்பட்ட தூண்களில் இரண்டு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அத்துடன் நிறுத்தப்பட்டு தூணுக்கு அத்திவாரம் இடப்படும் அடிப்பகுதியிலிருந்து கம்பிகள் அமைக்கப்பட்டு கட்டடவேலைகள் இடம்பெற்றிருக்கவில்லை இடைநடுவில் கம்பிகள் இணைக்கப்பட்டு பொருத்தி வைக்கப்பட்டு கட்டடப்பணிகள் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதன் பாரத்தினாலேயே தூண் திடீரென்று பாரம் தாங்க முடியாமல் வீழ்ந்துள்ளது. இதையடுத்து வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் கட்டட பொறியியலாளரிடம் தொடர்பு கொண்டபோது,

குறித்த பாடசாலை வகுப்பறைக்கான கட்டடம் நிர்மானிக்கும்போது குறித்த தூணிற்கு கம்பிகள் வைப்பதற்கு திட்டத்தில் தெரிவித்திருக்கவில்லை எனினும் இடையில் கம்பிகள் வைத்து கொங்கிறீட் அமைக்கப்பட்டபோது பாரம் தாங்க முடியாமல் அதற்கு அணைக்கப்பட்டிருந்த பலகைகளின் பாரத்தினால் வீழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

எனினும் இன்று வீழ்ந்த வகுப்பறைக்கான புதிய கட்டடத்தின் தூண் அவசர அவரசமாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன் இன்று அமைக்கப்பட்ட தூணிற்கு அத்திவாரம் இடப்படும் அடியிலிருந்து கம்பிகள் அணைக்கப்பட்டு தூண் நிறுத்தப்பட்டுள்ளது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கட்டட பொறியியலாளரிடம் குறித்த பாடசாலைக்கான வகுப்பறையின் வரைபடத்தினைக்காண்பிக்குமாறு கோரியபோது அதனை காட்டுவதற்கு மறுத்துள்ளதுடன் இவ்வாறான கட்டடம் ஒன்று ஏற்கனவே குறித்த வவுனியா தெற்கு கல்வி வலய கட்டட பொறியியலாளரின் மேற்பார்வையில் செக்கட்டிப்புலவு பாடசாலைக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பாடசாலைக்கான வகுப்பறை அமைக்கும்போது அதன் தன்மைகள் தரமான பொருட்கள் கட்டடத்தின் தன்மை என்பன பரிசீலிக்கப்படுவதுடன் அதன் பின்னர் வரைபடம் அமைக்கப்பட்டு சீமெந்தின் அளவுகள், கம்பிகளின் வலுக்கள் என்பன வரைபடத்தில் காண்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கட்டடம் நிர்மாணிக்கும் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் மேற்கொள்வதுடன் அதற்கான செலவுகளும் தெரிவிக்கப்பட்டு மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு கட்டடப்பணிகள் ஆரம்பிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு மேற்கொள்ளும் அரச திணைக்களம் ஒன்றின் பாடசாலை வகுப்பறைக்கட்டடம் திடீரென்று இடிந்து வீழ்ந்துள்ளது பல கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.

எனவே இன்று திடீரென இடிந்து வீழ்ந்ததுபோல இனிவரும் காலங்களிலும் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் இடம்பெறாமல் இருக்க தற்போது அமைக்கப்படும் கட்டடப்பணிகளை நிறுத்தி மீள் சுழற்சி மேற்கொள்ளப்பட்டு புதிய பொறியியலாளரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் பிரச்சனைகளை இனங்கண்டு அதற்குரிய தீர்வுகளை உயரதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரி வருகின்றனர்.‌

வவுனியாவில் தந்தையின் வாகனத்திலேயே மோதி பலியான சிறுமி : அதிர்ச்சி சம்பவம்!!

 

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் உள்ள சுதர்ஷன் நேற்றைய தினம் (09.05.2018) காலை தனது ஐந்து வயது மகளான ருஷா என்பவரை முன்பள்ளி பாடசாலைக்கு தனது கயஸ் ரக வாகனத்தில் ஏற்றி சென்று இறக்கிய சமயத்தில் தனது மகள் வாகனத்தின் முன் பக்கமாக கடப்பதை அவதானிக்காத தந்தை வாகனத்தை முன் நோக்கி நகர்த்திய போது மகள் மீது வாகனத்தை மோதியுள்ளார்

இதில் படுகாயமடைந்த சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் சிறைக் கைதிகளுக்கு அநீதி நடப்பதாக தெரிவித்து வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!!

 

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக இன்று (10.05.2018) வவுனியா சட்டத்தரணிகள் ஒரு மணித்தியாலயம் (11 மணி தொடக்கம் 12 மணிவரை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இப் பணிப்பறக்கணிப்பு தொடர்பாக வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அராஜகங்களை எதிர்த்து தாமாக குரல் கொடுக்க முடியாத விளக்கமறியல் கைதிகள் சார்பிலே சட்டத்தரணிகளான நாங்கள் அவர்களுடைய நிலைமைகளை வெளி உலக மக்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இன்றைய பணிப்பறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிறைச்சாலை உருவாக்கப்படும் போது வடபகுதியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வெளியேற முடியாத மக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையிலே அது ஏற்படுத்தப்பட்டது.

ஒரு கைதி நீட்டி நிமிர்ந்து படுப்பதானால் ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபா கொடுக்கவேண்டும் அங்குள்ள சிறைக்காவலர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பினை உள்ளிருந்து வெளியே எடுப்பதாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கு நூறு ரூபா கொடுக்கவேண்டும்.

வவுனியா நீதிமன்றம் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் பாவனையில் இறுக்கமாக நிலையை கடைப்பிடிக்கின்றது. ஆனால் சிறைச்சாலையில் நீதிமன்றம் எதைத்தடுக்க நினைக்கின்றதோ அது தாராளமாகவே கிடைக்கின்றது.

ஏழைகள் துன்புறுத்தப்படுவதும் ஏழைகளுடைய பணம் வஞ்சிக்கப்படுவதும் ஏழைகளின் கஸ்டத்தில் ஒரு சிலர் பணம் சம்பாதிக்கின்றதை நிறுத்த வேண்டும் பொதுமக்கள் மத்தியிலே நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். பொதுமக்கள் தொடர்பில் போதிய விழிப்பணர்வு இல்லாத காரணத்தினால் இன்றைய பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளோம்.

உடனடியாக இங்கு கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டு புதிதாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும். சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சுதந்திரமாக பாரபட்சமற்ற ஒரு குழுவை அமைத்து இங்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு சாட்சிகள் மூலம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இந்த விடயங்களை செய்ய முடியாது விட்டால் விளக்கமறியல் சிறைச்சாலையை மூடி விடவும் சிலருக்கு பணம் சம்பாதிப்பதற்காக சிறைச்சாலை இருக்கக்கூடாது மக்களுடைய தேவைக்கே சிறைச்சாலை.

சிறைச்சாலையில் இடம்பெறும் அநீதிகளை நாங்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நீதிமன்றத்தில் தண்டம் விதிக்கப்பட்டு நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைக்கப்பட்ட ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டத்தைச் செலுத்தி விரைவாக வெளியேறுவதனால் அங்கு நின்ற சிறைக்காவலருக்கு நூறு ரூபாய் வழங்கவேண்டும்.

நீதியின் மூக்கின் நுனியில் இந்த அநியாயம் நடைபெறுகின்றது. இவற்றை வெளிக்காட்டுவதற்காகவே இன்றைய வெளிநடப்பினை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

எனக்கும் பிரபுவிற்கும் உறவு இருந்தது உண்மை தான் : அதிரடியாக ரகசியத்தை கூறிய குஷ்பு!!

தமிழ் சினிமாவில் 90களில் நடிகைகளிலேயே புகழின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர், ரஜினி, கமல், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுடன் அப்போதே இணைந்து நடித்து செம மாஸ் காட்டியவர். இன்றளவும் நடிகை குஷ்பு என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் தான். அவருடைய நடிப்பும் சரி, அவருடைய நடனமும் சரி அனைத்திலுமே இன்றளவும் ஒரு கலக்கல் செய்து வருகிறார்.

இவர், பிரபுடன் மை டியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, பாண்டித்துரை, வெற்றி விழா, தர்மத்தின் தலைவன், சின்ன வாத்தியார் உள்பட பல படங்களில் நடித்தவர்

இந்நிலையில், பல ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும், மக்கள் மனதில் அழியாத சின்னமாக நின்ற படம் சின்னதம்பி. இதனால் தான் என்னவோ, பிரபுவிற்கும், குஷ்புவிற்கும் காதல் எனவும், சிவாஜி குடும்பத்தினர் இதற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் அவர்களது காதல் திருமணத்தில் முடிய வில்லை என அப்போது செய்திகள் சூடாக பேசப்பட்டு வந்தது.

இப்படி பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென்று குஷ்பு இயக்குநர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பூ, பிரபுக்கும் எனக்கும் அழகான உறவு இருந்தது என்பது உண்மை தான்.

அது மிக அழகான தருணமும் கூட ஆனால் அது ஒரு சமயத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு தான் சுந்தர் சி என் வாழ்கையில் வந்தார் என குஷ்பு தெரிவித்துள்ளார். குஷ்பு- சுந்தர் சி என்ற உறவு தான் என்றும் நிலையானது மற்றும் இதனை யாராலும் பிரிக்கவும் முடியாது.

இந்த தருணத்தில் பிரபு உடனான உறவைப் பற்றி பேசிய தற்போது பேரன் பேத்தி உடன் சந்தோஷமாக இருக்கும் அவரை பற்றி பேசி வீணாக சங்கடத்தை அவருக்கு கொடுக்க வேண்டாம் என நினைக்கிறன். எனக்கும் 18 வயதில் மகள் உள்ளார் என்றும் தெரிவித்தார்.

உடலில் கொழுப்புகளை கரைக்க வேண்டுமா : இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்!!

நமது உடலில் உள்ள லிப்டின் எனும் ஹார்மோன், உடல் பருமனில் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிப்டின் என்பது கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனாகும். இது உடலில் கொழுப்பு செல்கள் அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பதை மூளைக்கு தெரிவிக்கும்.

அதனைத் தொடர்ந்து, உடலில் சரியான அளவில் கொழுப்புக்கள் இருந்தால், லிப்டின் ரத்தத்தில் நுழைந்து, உடலில் போதுமான அளவு கொழுப்பு இருப்பதை உணர்த்தும்.தற்போது, உடலுக்கு தேவையில்லாமல் சேர்ந்திருக்கும் கொழுப்புகளை கரைப்பது குறித்து இங்கு காண்போம்.

Grape Fruit கொழுப்புச் செல்களை கரைக்க உதவும் உணவாகும். இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், செரிமானத்தை துரிதப்படுத்தும். எனவே, உணவு உட்கொள்ளும் முன்பு இதனை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ குடித்து வந்தால், அதிகப்படியான கலோரிகளை எடுப்பது குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

முழு தானியங்கள் கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களை, நமது உடலில் அதிகரிக்க உதவும். இவற்றில் இன்சுலின் அளவை நிலையாக பராமரிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுக்கள் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். பார்லி, திணை, பக்வீட் போன்ற தனிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்புகளை குறைக்கலாம்.

ப்ராக்கோலிகொழுப்பு செல்களைக் கரைக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் அத்தியாவசிய கனிம சத்துக்கள் நிறைந்துள்ளன. எடை குறைப்பு டயட்டில் சேர்ப்பதற்கு ஏற்ற சிறப்பான உணவாக இது உள்ளது.

சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில் அளவுக்கு அதிகமாக லிப்டின் இருந்தால் அதனை குறைக்கும். மேலும், உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும்.

ஜிங்க் சத்து நிறைந்த உணவுகளான மாட்டிறைச்சி, கடல் சிப்பி, நட்ஸ், கொக்கோ, கடல் உணவுகள் மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் லிப்டின் அளவு அதிகரிக்கும்.

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, லெட்யூஸ், கேல், ப்ராக்கோலி ஆகியவற்றில் அத்தியாவசிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இந்த உணவுகள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிக்காமல் செய்யும். அத்துடன் இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கும்.

புரோட்டீன் உணவுகளான மீன், முட்டை, தயிர், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவை தசைகளின் அடர்த்தியை தக்க வைக்கும். மேலும், பசியைக் கட்டுப்படுத்தும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், அவகேடோ, நட்ஸ், விதைகள், முட்டை, பால் பொருட்கள் போன்றவை கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்.

கேரட்டில் பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. கேரட்டில் தயமின், நியாமின், வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீசு, டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. எனவே, கேரட்டை தினமும் சாப்பிட்டால் கொழுப்பின் அளவை குறைக்கலாம்.

உங்களது கைகளில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா : கவனம் தேவை!!

உடலுக்கு வயதாகி கொண்டே போகிறது என்பதை காட்டும் அறிகுறிகளில் கைகளே முதன்மை வகிக்கிறது. முதுமையின் அறிகுறி மட்டுமல்ல உடலில் ஏற்படும் சில ஆரோக்கிய குறைபாடுகளையும் கைகளில் உள்ள ஒரு சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

சிவந்த கைகள் கொண்டிருந்தால், அது உடல் நலக் குறைவுக்கான அறிகுறி. இது போன்ற சிவந்த உள்ளங்கைகள் கல்லீரல் நோயின் ஆரம்ப காலமாக இருக்கலாம். உடலில் ரத்த சர்க்கரை குறைபாட்டை ஏற்படுத்தும் ஹார்மோன் சமமின்மை காரணமாக இந்த சிவப்பு தன்மை ஏற்படுகிறது. பொதுவாக உள்ளங்கையின் வெளிவட்டங்களில் இந்த சிவப்பு தன்மை காணப்படும். உங்கள் உள்ளங்கைகள் இதுபோல சிவப்பாக இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் சென்று அதன் காரணத்தை கண்டறிதல் நல்லது.

நம்மில் ஒரு சிலருக்கு உள்ளங்கை மட்டும் வியர்த்துக் கொண்டே இருக்கும். அடிக்கடி கைக்குட்டை நனைந்து போகும். யாரிடமும் கைகுலுக்க கூச்சமாக இருக்கும். இந்த உள்ளங்கை வியர்தலுக்கான காரணம் இயற்கையாகவே அதிகமாக சுரக்கும் வியர்வை சுரப்பிகள், அதிக மன அழுத்தம், அதிகமாக சுரக்கும் தைராய்டு சுரப்பிகள் ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

உணவில் உப்பின் அளவை குறைப்பது மற்றும் மது பழக்கத்தை கைவிடுவது மேலும் சுவாசப்பயிற்சி செய்வது இதன் மூலம் இந்த வியர்வையை குறைக்க முடியும். அப்படியும் குறையாத போது மருத்துவரை நாடுவது அவசியம்.

சில சமயம் நாம் காலையில் எழும்போது நம் கைகள் இருப்பதை நம்மால் உணர முடியாது. அது பற்றி யோசிக்கும்போது மேலும் கைகளுக்குள் கூச்சம் போன்ற உணர்வு ஒற்றை நரம்பில் ஏற்பட்டு உடல் முழுதும் பரவும்.

இது ஒரு சாதாரண அறிகுறி அல்ல .ஆஸ்டியோக்நோண்டிரோசிஸ், கார்ல்பல் டன்னல் நோய்க்குறி ஆகும். மூட்டுக் குழாயின் சிரை இரத்தக் குழாய் போன்றவை, வலுவான பின்னூட்டு காயம், அனீமியா அல்லது நீரிழிவு போன்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனைக்கு அடையாளமாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் நீங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம் ஆகும்.

பெரும்பாலும் வறண்ட உள்ளங்கைக்கான காரணமாக கூறப்படுபவை நீரிழிவு மற்றும் ஈஸ்ட்ரோஜென் குறைபாடுகள் ஆகியவைதான்.

பெண்களுக்கான மெனோபாஸ் பிரச்னைகள் இதனோடு உடன் வரும். இதை தவிர்க்க உணவில் மீன் எண்ணெய் சத்துக்கள் மற்றும் பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு போன்றவை மற்றும் அத்திப்பழ விதைகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.

தேவைப்படின் ஹார்மோனல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் அதன் மூலம் ஈஸ்ட்ரோஜென் குறைபாடு நீங்கும்.

பார்கின்சன் எனப்படும் கொடிய வியாதிக்கான அறிகுறியாக இந்த கை நடுக்கம் பார்க்கப்படுகிறது. இது பற்றிய பயம் உங்களுக்கு ஏற்பட்டால் அவசியம் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ளவும். இதற்கு நடுவில் உங்களது காபி மற்றும் மது பழக்கங்களை அறவே நிறுத்த முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் கை நடுக்கத்திற்கு இவையும் ஒரு காரணம். பார்க்கின்சன் நோய்க்கான முக்கிய காரணங்களாக மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை பார்க்கப்படுகின்றன.

பலவீனமான நகங்கள் மற்றும் விரிசல்கள் உடைய நகங்கள் உடலில் துத்தநாக குறைபாட்டின் காரணமாக ஏற்படலாம். துத்த நாகம் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. காயங்களை ஆற்றுவதற்கும், நோயெதிர்ப்பு தன்மையை அதிகரிப்பதற்கும் துத்தநாகம் உதவி செய்கிறது.

இதனை அதிகரிக்க இறைச்சி மற்றும் பாதாம் பிஸ்தா போன்ற வகைகள் , மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை எடுத்து கொள்வது அவசியம்.

உங்கள் விரல்கள் முருங்கைக்காய் போல அதன் நுனிகளில் வீங்கி காணப்படும். நகமும் அதனை ஒட்டியுள்ள சதையும் வீங்கி இருக்கும். இது போன்று இருந்தால் உடலில் ஆக்சிஜென் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். இது இதய நோய் அல்லது நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். ஆகவே இவர்கள் உடனடியாக மருத்துவரை சந்திப்பது அவசியம்.

நான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் : நடிகர் பிரகாஷ்ராஜ்!!

பாஜகவை எதிர்த்து தொடர்ந்து பேசி வருவதால் தான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். பிரபல பத்திரிக்கையாளரும், தனது தோழியுமான கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்னர் தொடர்ச்சியாக மத்திய அரசை எதிர்த்து கருத்துகளை முன்வைத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இதனால் தான் பொலிவுட் படவாய்ப்புகளை இழந்ததாகவும் முன்னர் கூறியிருந்தனர். இந்நிலையில் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ்ராஜ், பாஜக மற்றும் இந்து அமைப்புக்கு எதிராக பேசி வருவதால் என்னை கொல்ல சதி நடக்கிறது.

இதற்காக சில இந்து அமைப்புகள் திட்டம் தீட்டுகின்றன, நான் அஞ்சப் போவதில்லை, என்னுடைய உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம்.

என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் எதுவும் செய்ய முடியாது, நல்லாட்சி என கூறிக்கொண்டு நாட்டில் குழப்பங்களை பிரதமர் மோடி ஏற்படுத்துகிறார்.

கர்நாடக தேர்தலில் மக்களாட்சி நடத்தும் நல்ல கட்சிகளுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பணக்கஷ்டத்தால் பரிதாபமாக உயிரைவிட்ட நடிகர்!!

சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும்போது உச்சத்தை எட்டி பணம் சம்பாதிக்கும் நடிகர்கள், வாய்ப்புகள் இல்லாதபோது பணப்பற்றாக்குறை ஏற்பட்டு பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள்.

அப்படி ஒரு அதிர்ச்சி தரும் செய்தி பாலிவுட் சினிமாவில் நடந்துள்ளது.பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சித்ராம், இவர் பல பாலிவுட் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், மிகவும் மோசமான நிலைக்கு சென்று சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். இதை அறிந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கூட உதவியுள்ளார், ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இறந்துள்ளார்.

பிரபல நடிகை மீனாட்சி கழுத்து அறுத்துக் கொலை : நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!!

பிரபல திரைப்பட நடிகை மீனாட்சி தபா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நேபாள நடிகை மீனாட்சி கடந்த 2012ல் அமித் ஜஸ்வால் மற்றும் ப்ரீத்தி சுரின் என இரண்டு நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மும்பையில் நடந்த சினிமா படப்பிடிப்பில் அமித்தும், சுரினும் மீனாட்சிக்கு நட்பாகியுள்ளனர். அப்போது அவர்களிடம், தான் வசதியான வீட்டு பெண் எனவும், பொழுதுபோக்குக்காக மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதாகவும் மீனாட்சி கூறியுள்ளார்.

இதையடுத்து அமித்தும், சுரினும் மீனாட்சியை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர். அதன்படி புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மீனாட்சியை கோரக்பூருக்கு இருவரும் வரவழைத்துள்ளனர்.

பின்னர் மீனாட்சியின் அம்மாவுக்கு போன் செய்து தங்களுக்கு 15 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் மீனாட்சியை கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

ஆனால் மீனாட்சி அம்மாவால் 60,000 மட்டும் தயார் செய்ய முடிந்த நிலையில், ஆத்திரத்தில் மீனாட்சி தலையை வெட்டி அமித்தும், சுரினும் கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை தண்ணீர் தொட்டியிலும், பல நாட்கள் கழித்து தலையை ஓடும் பேருந்திலிருந்தும் தூக்கி வீசியுள்ளனர். இவ்வழக்கை விசாரித்த பொலிசார் அமித்தையும், சுரினையும் கைது செய்த நிலையில் அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்றது வந்தது. இந்நிலையில் இருவரும் குற்றவாளி என நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

தம்பி மனைவியை துண்டுதுண்டாக வெட்டி கொன்றது ஏன்? மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்!!

 

தமிழ்நாட்டில் தம்பி மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய மைத்துனரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவருக்கும் எஸ்தர் என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

ஜோசப் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வரும் நிலையில் எஸ்தர் தனது குழந்தையுடன், மேலாளவந்தசேரியில் வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 6ம் திகதி முதல் எஸ்தரை காணவில்லை.

இது குறித்து அவர் குடும்பத்தார் ஜோசப்புக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர் கிராமத்துக்கு வந்து பொலிசில் புகாரளித்தார். பொலிசார் ஜோசப்பின் உறவினர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரின் அண்ணன் நெல்சனிடம் எஸ்தர் குறித்து விசாரித்து போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் பொலிசாருக்கு சந்தேகம் வந்தது.

இதையடுத்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக எஸ்தரை கொலை செய்ததாக நெல்சன் ஒப்புக்கொண்டார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் எஸ்தரை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி அருகில் உள்ள ஆற்றங்கரை புதரில் வீசியதாக கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் இரண்டு சாக்கு மூட்டையில் கிடந்த எஸ்தரின் உடலை துண்டு பாகங்களாக கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினார்கள். இதையடுத்து நெல்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி வன்முறை குறித்து ஆராய திடீரென இலங்கை வந்த பேஸ்புக் குழு!!

பேஸ்புக் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக தகவல் பரப்பப்பட்டமை காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக விசேட குழு, இலங்கை வந்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலக பிரதிநிதிகள் மூவரே இவ்வாறு வருகைத்தந்துள்ளனர். இந்த பிரதிநிதிகள் குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் உத்தியோகத்தர்களை சந்தித்துள்ளனர்.

பேஸ்புக் பிரதிநிகள் குழு, நாட்டில் தொழில் முனைவோர்களுக்காக விசேட கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளனர்.

பேஸ்புகில் இலங்கை இளைஞனின் ஆபத்தான செயற்பாடு!!

இலங்கையில் பேஸ்புக் ஊடாக தொடர்ந்தும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு நபர்களின் பேஸ்புக் கணக்குகளில் நுழைந்து அந்த கணக்குகளின் உரிமையாளர் போன்று செயற்பட்டே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பொலன்னறுவை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பல பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து நண்பர்களிடம் ஈசி கேஷ் ஊடாக பணம் பெற்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முனமல்தெனிய – கம்புராபொல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய சிங்கள மாணவர்கள் : காரணம் என்ன?

வவுனியா வளாகத்தின் பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு அதற்கான கூடாரத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் அமைத்தனர்.

பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாது மாணவர்கள் மேற்கொண்ட இந்த முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இதன் போது சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. பூங்கா வீதியிலுள்ள வளாக அலுவலகத்தின் வாயில் கதவைப் பூட்டி சிங்கள மாணவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டு வவுனியா வளாகம் காலவரையரையின்றி மூடப்பட்டது.

அதனையடுத்து இக் குழப்பத்திற்கு காரணமான மாணவர்களுக்கு எதிராக நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தயாரான நிலையில் அதனை நிறுத்துமாறு கோரியே இன்று (10.05.2018) காலை 10 மணிமுதல் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 100க்கு மேற்பட்ட பல்கலைக்கழக சிங்கள மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக தெரியவருகின்றது.

வவுனியாவில் இடம்பெற்ற வன்னியின் சமர் : கோவில்குளம் இந்துகல்லூரி வெற்றி!!

வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (09.05) வவுனியா இந்துக் கல்லூரிக்கும், மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மாணவிகளுக்கும் இடையே கடினபந்து போட்டி இடம்பெற்றது. இலங்கை பெண்கள் கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் வன்னி மாவட்டத்தில் மாணவிகளுக்கு இடையேயான கடினப்பந்து சுற்றுப்போட்டி முதன்முதல் நேற்றைய தினம் இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற வன்னியின் சமரை (Battle of Vanni) மன்னார் சித்தி விநாயகர் பெண்கள் அணியை எதிர்த்து விளையாடிய வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரியின் பெண்கள் அணி வெற்றி கொண்டது.

மு.இராதாகிருஷ்ணன் (வலயகல்விப் பணிப்பாளர்-வவுனியா தெற்கு) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி விஜயலக்சுமி கேதீஸ்வரனும் (வடமாகாண முதலமைச்சரின் அமைச்சு செயலாளர்) சிறப்பு விருந்தினராக திருமதி அப்சரி திலகரத்தினவும் ( இலங்கை பெண்கள் கிரிகெட் கட்டுபாட்டு சபை) கலந்து கொண்டனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நபர் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் நேற்று (09.05.2018) மாலை 4 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் 2கிலோ 72 கிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேரூந்தினை நேற்று மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்ட சமயத்தில் 2 கிலோ கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை

மேலதிக விசாரணைகளின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.