வவுனியாவில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவன் கைது!!

வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவனை நேற்றையதினம் (01.05.2018) ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கா.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு செல்லவில்லை. இதையடுத்து குறித்த மாணவனின் வகுப்பாசிரியர் மாணவனின் நலனை கருத்தில் கொண்டு மாணவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டுக்கு சென்று குறித்த பாடசாலை மாணவனை தாக்கியுள்ளார். தந்தையின் தாக்குதலினால் கோபமுற்ற மாணவன் நேற்றையதினம் (01.05.2018) பாடசாலைக்கு சென்று ஆசிரியரை தாக்க முயன்றுள்ளார்.

உடனடியாக பாடசாலையின் அதிபர் பொலிஸாருக்கு தெரிவித்தமையடுத்து பொலிஸார் மாணவனை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அமெரிக்க பாதுகாப்பிற்காக டிரம்ப் எடுத்திருக்கும் அதிரடி முடிவு!!

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அமெரிக்க பாதுகாப்பிற்காக, Space Force எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ‘அமெரிக்க இராணுவ படையில் தற்போது 5 பிரிவுகள் உள்ளன. தரைப்படை, விமான படை, 2 கடற்படை, ஒரு கடலோரக் காவல்படை ஆகியவை இருக்கின்றன.

இந்த படைகள் மட்டும் இல்லாமல், இதனுடன் 6வதாக Space Force எனப்படும் விண்வெளி படையும் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் எல்லாம் தயாராக உள்ள நிலையில், அனுமதிக்காக மட்டும் காத்திருக்கிறோம்.

இப்போது உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் சிறந்து விளங்குகின்றன. அவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் பிரச்சனை செய்யலாம்.

அதேபோல் எங்காவது ஒரு கிரகத்தில் புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டு, அவை நம் மீது போர் தொடுக்க கூட வரலாம். இதை எல்லாம் தடுக்கத்தான் இந்த விண்வெளி படையை உருவாக்க இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ‘மற்ற படைகளுக்கு மிகவும் பயிற்சி அளித்து ஆட்களை எடுப்பது போலவே இதற்கும் ஆட்களை எடுக்க இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் சாதாரண பயிற்சிகளால் பெறாமல் புதிய பயிற்சிகளை பெறுவார்கள்.

இவர்களுக்காக புதிய ஆயுதங்கள் உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த மொத்த படையும் வடிவமைக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான ‘பென்டகன்’, இப்போதைக்கு Space Force உருவாக்கும் எண்ணம் இல்லை என்று கூறிவதுடன், டிரம்ப்பின் முடிவிற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

மேலும், பூமியில் இருக்கும் ஐந்து படைகளிலும் தன்னிறைவு பெற்று, போர் பயம் சென்ற பின்னர், விண்வெளி படை குறித்து ஆலோசனை செய்யலாம் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. அத்துடன், செனட் சபையும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காது என்று கூறப்படுகிறது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் விவேக்கின் கருத்து!!

நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் கொமெடி நடிகராக உள்ளவர் நடிகர் விவேக். தனது படங்களில் கொமெடி கலந்த பகுத்தறிவு கருத்துக்களை தெரிவித்து வருபவர். இதன் மூலம், ‘ஜனங்களின் கலைஞன்’, ‘சின்ன கலைவாணர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘அன்பார்ந்த மாணவர் செல்வங்களே.. குழந்தைகளே.. உங்களின் கோடை விடுமுறையை அனுபவியுங்கள். அதேநேரம் விளையாடி முடித்த பிற்பாடு அதிகமாக தண்ணீரை குடியுங்கள்.

பெண் பிள்ளைகள் உங்களின் அம்மாவுடன் போய் அடுப்படியில் எப்படி சமையல் செய்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். ஆண் பிள்ளைகள் உங்கள் தந்தையுடன் போய் அவர் பணிபுரியும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள்’ என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. மேலும், பெண்கள் பலர் விவேக்கின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட் செய்து வருகின்றனர்.

பெண் பிள்ளைகள் அடுப்படியில் தான் இருக்க வேண்டுமா? இதுதான் உங்கள் பகுத்தறிவுக் கொள்கையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை இந்தப் பெண் அடிமை மனோநிலையில் இருந்து விடுவிக்க முடியாதா? எனவும் தங்களது கேள்விகளை தொடுத்துள்ளனர்.

இந்நிலையில், விவேக் தனது ட்விட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை, அனைத்து பெற்றோரும் ஆமோதிப்பர். என்னைப் புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

கனடாவில் பல ஆயிரம் டொலர்களை சம்பாதிக்கும் 4 வயது சிறுவன் : ஆச்சரிய திறமை!!

 

கனடாவில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் தீட்டும் ஓவியங்கள் ஓவிய கண்காட்சியில் அதிக விலைக்கு விற்பனையாவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் புனே மாநிலத்தை சேர்ந்தவர் அத்வைத் கொலர்கர் (4). கொலர்கரின் குடும்பம் கடந்த 2016-ஆம் ஆண்டு கனடாவுக்கு இடம்பெயர்ந்தது.

இந்நிலையில் அபாரமாக ஓவியம் வரையும் திறமை கொண்ட கொலர்கர் அதன் மூலம் அதிகளவு பணம் சம்பாதிக்கிறான். கடந்த ஜனவரி மாதம் நியூ ப்ருன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் ஜான் ஓவிய மையத்தில் நடந்த ஓவிய கண்காட்சியில் கொலர்கர் முதல் முறையாக தனியாக தான் வரைந்த ஓவியங்களை வைத்தான்.

இதன்மூலம் செயிண்ட் ஜான் ஓவிய மையத்தில் கண்காட்சி நடத்திய மிக இளவயது ஓவியர் என்ற பெருமையை கொலர்கர் பெற்றான்.

கொலர்கரின் ஓவியங்களுக்கு Colour Blizzard என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் $2,000-க்கு மேல் அவன் ஓவியங்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த மாதம் நியூரோர்க்கில் நடந்த ஓவிய கண்காட்சியிலும் கொலர்கரின் ஓவியங்கள் வைக்கப்பட்டன. இது குறித்து கொலர்கரின் அம்மா சுருதி கூறுகையில், ஒரு வயதிலேயே ஓவிய பிரஷ்ஷை கொலர்கர் கையில் எடுத்துவிட்டான்.

அவனுக்கு கலவை மற்றும் வண்ண உணர்வு அப்போதே இயற்கையாக இருந்தது. என் மகனின் வேலைக்கு சரியான அங்கிகாரம் கிடைப்பது பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.

மனைவி, பிள்ளையுடன் விஷம் குடித்து தற்கொலை செய்த குடும்பஸ்தர்!!

தமிழகத்தில் கடன் தொல்லையால் மனைவி, பிள்ளையுடன் நபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் ஆத்தூர் அருகே தம்மம்பட்டி புலிகரடு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுணன்(வயது 50). இவருக்கு வெண்ணிலா(வயது 35) என்ற மனைவியும், மோகன்(வயது 12), பிரகாஷ்(வயது 8) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

விவசாய செலவுக்காக அதே ஊரை சேர்ந்த நபரிடம் ரூ.3 லட்சம் கடனாக அர்ச்சுணன் வாங்கியுள்ளார். சொன்ன நேரத்தில் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்தவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதன்படி நேற்றிரவு அனைவருக்கும் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்துள்ளனர். அனைவரும் மயங்கி விழ மூத்த மகன் மோகன் காலையில் கண்விழித்து பார்த்துள்ளார்.

குடும்பமே சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் கதறித்துடிக்க, அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

மோகனையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அர்ச்சுணனுக்கு கடன் கொடுத்த நபர் யார்? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் இரு வேறு வீதி விபத்துக்கள்!!

 

வவுனியா இன்று (02.05) A9 வீதியில் இரு வேறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ் விபத்து சம்பவங்கள் பற்றி தெரியவருவதாவது,

இன்று பிற்பகல் 4 மணியளவில் யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று கனகராயன்குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பயணிகள் தெய்வாதீனமாக எதுவித காயங்களும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை மாலை 5 மணியளவில் யாழ் நோக்கி தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஓமந்தை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது குறித்த விபத்திலும் எதுவித காயங்களும் இன்றி பயணித்தவர்கள் தப்பினர்

இவ் விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு புதிய இடம் : நகரசபைத் தலைவர்!!

“வவுனியாவில் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சிறந்த காற்றோட்டத்துடன் கூடிய புதிய இடமொன்றை அமைத்துக்கொடுக்கவுள்ளதாக” வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.

வவுனியா குளப்பகுதியில் நீர்ப்பாசனத்திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு பகுதியில் அண்மையில் நடைப்பயிற்சி செய்யக்கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அதனை பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியாவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதன் ஓர் அங்கமாக வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர்கள் நகரசபை மைதானத்தினை சிறந்த மைதானமாக மாற்றுமாறு கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

நடைப்பயிற்சியில் ஈடுபடும் பகுதியில் புற்கள் இல்லாது காணப்படுவதனாலும் அப்பகுதி மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதாலும் விளையாட்டு வீரர்களுக்கு அசௌகரியம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இதனை நாம் ஆராய வேண்டிய தேவையுள்ளது. இந் நிலையில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் வவுனியா குளப்பகுதியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் சிறந்த காற்றோட்ட வசதி மற்றும் நடைப்பயிற்சிக்கு ஏற்ற ஒழுங்குகளுடன் நீர்ப்பாசன திணைக்கத்தினால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதனை சூழவும் சிறந்த இடவசதிகள் இருப்பதனால் அதனை ஓய்வு எடுக்கும் பகுதியாகவும் மாற்றியமைப்பது தொடர்பாக நீர்ப்பாசன திணைக்களத்தினருடன் கலந்தாலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் அமைப்புகள்!!

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை ஏமாற்றும் அமைப்புகள் தொடர்பாக தகவல்கள் கிடைத்து வருவதால், அப்படியான மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் தொழில் புரியும் நபர்களை பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் போர்ன் கிளப் என்று அழைக்கப்படும் நிறுவனங்கள் ஊடாக இத்தாலி, பிரான்ஸ் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் மற்றும் அங்கு தொழில் புரியும் இலங்கையர்களை இலக்கு வைத்து நிதி மோசடி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு வசதிகளை செய்து கொடுப்பதாகவும் குறிப்பாக வீடுகளை நிர்மாணித்து தருவதற்கான நிதியம் என கூறி, இந்த குழுக்கள் மக்களை ஏமாற்றி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இது சம்பந்தமாக தகவல்களோ, முறைப்பாடுகளோ இருக்குமாயின் அது குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி முகாமையாளரை நேரில் சந்தித்து வழங்க முடியும்.

முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்குவோர் தொடர்பான இரகசியம் பேணப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இனிமேல் குடிக்கவேண்டாம் அப்பா : ஆவியாக வருவேன்: தூக்கில் தொங்கிய மாணவனின் கடிதம்!!

 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த தினேஷ் என்பவர் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவராவார். தினேஷின் தந்தை, கடந்த சில ஆண்டுகளாக மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தினேஷ் குடும்பம் வறுமையில் வாடியதோடு அவரும் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தினேஷ் இன்று திருநெல்வேலியின் தெற்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தந்தையின் மதுபழக்கத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்கிறேன், தயவு செய்து டாஸ்மாக்கை மூடுங்கள் என கோரியுள்ளார்.

சில மாதங்களில் திருமணம் : யாழ் இளைஞன் இந்தியாவில் கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக பலி!!

இந்தியாவில் இடம்பெற்ற கோரி விபத்தில் சிக்கி யாழ். இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய லோகேஸ்வரன் கார்த்தீபன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

புலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள உறவினர்களை பார்ப்பதற்கு குறித்த இளைஞரும் அவரது தாயாரும் இந்தியா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உறவினர்களுடன் வெளியில் சென்ற வேளை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியுள்ளது.  இந்த கோர விபத்தில் சாரதி உட்பட குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் தாயார் ஆபத்தான நிலையிலும், ஏனைய அனைவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு சில மாதங்களில் திருமணம் இடம்பெற இருந்ததாகவும், இதற்கு தயாரான நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வேலைக்கு செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள் : தவிர்ப்பது எப்படி?

காலையில் அலாரம் அடித்து எழுப்பும்போது ஆரம்பிக்கும் வேகம் சமையல், குழந்தைகள், கணவர், தன் வேலை அலுவக வேலையில் ஆரம்பித்து இரவு வீட்டு வேலை வரை பூமியைப் போல் நிற்காமல் சுழன்று கொண்டிருக்க வேண்டிய பணி, வேலைக்குச் செல்லும் பெண்களுடையது.

தொடர்ந்து பயணிக்கும் வாழ்க்கையில் அவர்கள் செய்யும் தவறுகள் சில… அது இயல்புதானே என்பவர்களுக்கு… அதனால் உடல்நலமும், குடும்ப நலனும் அல்லவா பாதித்துவிடும். இதோ வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் சில தவறுகள்..

1. காய்கறிகளை முதல் நாள் இரவே நறுக்கிவைப்பது: வேலைக்குச் செல்லும் சில பெண்கள், காலை நேரத்துப் பரபரப்பை குறைக்க, முதல் நாள் இரவே காய்கறிகளை நறுக்கி வைத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்துக்கள் உள்ளன. சமைப்பதற்கு வேகு நேரத்துக்கு முன்பே காய்களை நறுக்கி, ஃப்ரீட்ஜில் வைப்பதால், இந்த வைட்டமின், நார்ச்சத்துகள் பெரும்பாலும் காற்றில் கலந்துவிடும்.

2. காலை உணவைத் தவிர்ப்பது! : அதிக வேலை, நேரம் இல்லை, டயட் என எந்தப் பெயரில் சொன்னாலும், காலை உணவை ஸ்கிப் செய்வது, பல நோய்களுக்கு இன்விடேஷன் கொடுத்து வரவைப்பதற்குச் சமம். இரவு உணவுக்குப் பிறகு, நீண்ட இடைவெளி காரணமாக இரைப்பையில் அதிக அமிலம் சுரந்திருக்கும். இந்தச் சமயத்தில் உணவைத் தவிர்த்தால், அமிலத்தால் இரைப்பை சிதையத் தொடங்கும். ஆகவே, காலை உணவைக் தவிர்க்க வேண்டாம்.

3. குழந்தைகளை அக்கம்பக்கம் வீட்டாரிடம் விடுவது : கூட்டுக் குடும்பம் அரிதாகிவிட்டதால், அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களில் பலர், குழந்தையைப் பக்கத்தில் உள்ள வீட்டார்களிடம் ஒப்படைக்கிறார்கள். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துவரும் சூழலையும் மனதில்கொள்ள வேண்டும். எனவே, தனது அல்லது கணவனின் தாய் போன்ற நெருங்கிய உறவினரிடம் ஒப்படையுங்கள். முடியாதபட்சத்தில், தரமான குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பது நல்லது.

4. அழகு சாதனப் பொருள்கள் பயன்பாடு : அலுவலகத்தில் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, சில பெண்கள் எப்போதுமே மேக்கப்பில் இருப்பார்கள். இது, சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, தோல் மருத்துவரை அணுகி, உங்களின் ஸ்கினுக்கு ஏற்றதைத் தேர்வுசெய்து, சரியான அளவில் பயன்படுத்துங்கள். அழகுடன் ஆரோக்கியமும் இருக்கும்.

5. அலுவலக வேலையை வீட்டில் பார்ப்பது : பல பெண்கள் அலுவலக வேலையையும் வீட்டு வேலையையும் சமன் செய்வதில்தான் பல இடையூறுகளைச் சந்திக்கின்றனர். சரியான திட்டமிடலுடன் செயல்படுவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். அலுவலகப் பணியை வீட்டில் பார்க்கும்போது, உங்கள் குழந்தை மற்றும் கணவருக்குச் செலவிடும் நேரத்தையும் அன்பையும் இழக்கிறீர்கள் என்பதை மனதில்கொண்டு, திட்டமிட்டுச் செயல்படுங்கள்.

6. மாதவிடாய் காலம் : அலுவலகம் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால், மாதவிடாய் நாள்கள். பணிபுரியும் சூழல் போன்றவற்றால், நாப்கின்களை கழிப்பறைக்கு எடுத்துச்செல்லத் தயங்கி, மணிக்கணக்கில் மாற்றாமல் இருப்பார்கள். இது, தொற்றுநோய், சரும அலர்ஜி போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இது, அலுவலகத்தில் உங்களின் திறமை குறித்த மதிப்பைக் கெடுக்கும். எனவே, இரும்புச்சத்து நிறைந்த உணவை அதிகம் சாப்பிட்டு, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் செயல்படுங்கள்.

7. சேர்த்துவைத்து துணிகளைத் துவைத்தல் : அலுவலகம் செல்லும் பெண்களில் 90% பேர், அலுவலகத்துக்கு போடும் துணிகளைத்தவிர மற்ற நாள்களில் பயன்படுத்திய துணிகளை ஒரு கூடையிலோ, வீட்டின் ஓரத்திலோ போட்டு வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்திய ஆடைகளில் வியர்வையின் காரணமாக பாக்டீரியா, கிருமிகள் இருக்கும். பயன்படுத்திய ஆடைகளை மொத்தமாகப் போட்டு வைக்கும்போது, வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்களுக்குக் கெடுதல் ஏற்படும். எனவே, சிரமம் பார்க்காமல், பயன்படுத்திய துணிகளை அன்றாடம் துவைத்துவிடுவது நல்லது.

8. பாலியல் சீண்டல்கள் : சில பெண்கள் அலுவலகத்தில் பாலியல் சீண்டல்கள், கேலிகளுக்கு ஆளாகலாம். இதுபோன்ற சூழலில் பயம் மற்றும் தயக்கத்தால் பிரச்னையைத் தள்ளிப்போடுவார்கள். இது, தவறு செய்பவர்களுக்கு நம் மீதான பார்வையை, கேரக்டரை வேறு மாதிரியாக மாற்றிவிடும். எனவே, ஆரம்பத்திலே சரியான பதிலடி கொடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு அல்லது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவித்து விஷயத்தை முடிக்க வேண்டும்.

பிறக்கும் குழந்தைகள் பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் அதிசய கிராமம்!!

இன்று நாகரீகமான 21ம் நூற்றாண்டில் நாம் அனைத்து விதமான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம். பொதுவாக நம்மைப் போலவே எல்லாருக்கும் எல்லா விதமான வசதிகளும் கிடைத்திருக்கும் என்றுதான் அனேகம் பேர் நினைக்கின்றோம்.

ஆனால் அப்படி நினைப்பது தவறு என நம்மை பெரிதும் வியப்புக்கு உள்ளாக்ககூடியவைகளும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றது.அப்படி நம்மை எல்லாம் மூக்கின்மேலே விரலை வைத்து வியக்கும் அளவிற்கு உள்ள ஒரு கிராமத்தைப் பற்றிய தகவல்தான் இது.

டெமினிசன் ரிபப்ளிக்கில் இருக்கக்கூடிய பரஹோனா மாகாணத்தில் அமைந்திருக்கிறது லாஸ் சலினாஸ் என்ற சிறிய நகரம். இதனை வளர்ந்து வருகிற கிராமம் என்றே சொல்லலாம்.

இந்த கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது பெண் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆணாக யாரும் பிறப்பது இல்லையாம். ஆனால் பன்னிரெண்டு வயதிற்கு பிறகு இந்த பெண் குழந்தைகள் எல்லாம் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்களாம்.

இதற்காக இவர்கள் சிகிச்சையோ, அல்லது மருந்து மாத்திரைகளோ எடுத்துக் கொள்வதே கிடையாது. இயற்கையாகவே பருவமடைந்ததும் இந்த பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்களாம்.இப்படி பன்னிரெண்டு வயதில் ஆணாக மாறுகிறவர்களை guevedoches என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த கிராமத்தை சேர்ந்த ஜானி பிறக்கும் போது பெண்ணாக இருந்திருக்கிறார். பருவ வயதை அடைந்ததும் அவரது பிறப்பு உள்ளிளுத்துக் கொண்டதாகவும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு ஆண் பிறப்புறுப்பு தோன்றியதாகவும் கூறியிருக்கிறார்.

அவர் பெண்ணாக இருக்கும் போது அவரின் பெயர் ஃபெலிசிடா. சிறு வயதில் கவுன் அணிந்து பாடசாலைக்கு செல்வது அவருக்கு பிடிக்காத ஒன்றாகவே இருந்தது.எனினும் அப்போதிருந்தே அடிக்கடி ஆண்களுடன் சேர்ந்து தான் கால்பந்தாட்டம் விளையாடுவாராம்.

பருவவயதை அடைந்த பிறகு மனதளவில் மட்டுமே இருந்த மாற்றம் உடலளவில் வெளிப்படத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக அவரது செயல்களிலும் மாற்றங்கள் தெரிய பள்ளியில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான அவரை எல்லாரும் பேய் என்று அழைத்தார்களாம்.

ஜானியைப் போலவே அந்த கிராமத்தில் வாழ்கின்ற கார்ல் என்பவரும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். கார்ல் பெண்ணாக பிறந்து பெண்ணாக வளர்ந்திருக்கிறார் பருவ வயதை அடைந்த பிறகு தன் அடையாளம் மாறத் துவங்கியதும் கார்லோஸ் என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.

கார்லோஸ் குறித்து அவரது அம்மா கூறுகையில் குழந்தை பருவத்திலிருந்தே எப்போதும் ஆண் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளின் மீது தான் ஆர்வமிருக்கும் அதே போல சிறுவயதிலேயே அவளது தசைப்பகுதி எல்லாம் ஸ்டிஃபாக இருக்கும் என கூறியுள்ளார்.

ஆரம்பித்தில் இது கடவுளின் சாபம் என்றும் நாம் செய்து வந்த பாவங்களின் தண்டனை என்றும் சொல்லி நம்பியிருக்கிறார்கள் அங்கு வாழும் மக்கள்.

இந்நிலையில் கார்னெல் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஜூலியானா இம்பெர்டோ ஜின்லி என்ற மருத்துவர் இந்த அதிசயத்தை கேள்விப்பட்டு, அதன் காரணத்தை கண்டறிய அங்கே சென்று நீண்ட நாட்கள் தங்கியிருந்து நீண்ட ஆய்வினை மேற்கொள்கிறார்.

ஒவ்வொருவரின் அனுபவங்களையும் அவர்களின் வாழ்க்கைச் சூழல் பற்றியும் அவர் தெரிந்து கொள்கிறார். அதில் அங்கிருப்பவர்களுக்கு என்சைம் 5 அல்ஃபா ரெடுக்டேஸ் என்ற சத்து இல்லை என்பது அவருக்கு தெரியவருகிறது. இவை தான் டெஸ்ட்டோஸ்டிரோனை டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனாக மாற்றுகிறது. இந்த குறைபாடு அங்கிருக்கும் மக்களுக்கு மரபணு ரீதியாகவே தொடர்ந்து வருவதை அவர் கண்டுபிடித்தார்.

அதனால் தான் XY க்ரோமோசோமுடன் பிறக்கும் குழந்தைக்கு போதுமான அளவு ஹார்மோன் கிடைக்காததால் பிறக்கும் போது அதன் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது.

பார்ப்பவர்கள் ஆணுறுப்பு இல்லை என்றதும் பெண் குழந்தை என்று சொல்லிவிடுகிறார்கள். பருவ வயதினை அடையும் போது அவர்களது உடலில் கூடுதலாக டெஸ்டோஸ்டிரோன் சுரக்கும்.

இதன் போது ஆண் குழந்தைகளின் பருவமடைந்ததற்கான அடையாளங்களாக மீசை வளர்வது, குரல் உடைவது ஆகியவை அந்த நேரத்தில் ஆணுறுப்பு வளர்ச்சிக்கான ஹார்மோன் கிடைக்கப்பெற்று ஆணுறுப்பு வளர்ச்சி அடைகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

சொகுசு வாழ்க்கையை உதறிதள்ளி ஆடு மாடு மேய்க்கும் வெளிநாட்டுப் பெண்!!

காதலுக்கு கண்கள் இல்லை,காதலுக்கு எல்லையும் இல்லை என நிரூபித்துள்ளார் வெளிநாட்டு பெண்மணி ஆண்ரியன் பெரல். கலிபோர்னியாவில் கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என இருந்த 41 வயதான ஆண்ரியன், 2013 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் தன்னை விட வயதில் இளையவரான 25 வயது முகேஷ் குமார் என்பவடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. வேலை முடித்ததும் கிளப்புக்கு செல்வது, விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலி வாழ்க்கை என இருந்த ஆண்ரியன், ஹரியானா மாநிலத்தில் மாடுகளை மேய்த்து வருகிறார்.

எல்லாம் காதல் செய்த வேலை. எல்லை தாண்டி இதயத்தை கிழத்த இந்த காதல், தற்போது சந்தோஷமாக பயணித்துக்கொண்டிருக்கிறது.என்னதான் வயதில் சிறியவராக இருந்தாலும், முகேஷின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பிறகு, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

முகேஷ் குடும்பம் விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை மேய்க்கும் குடும்பம். என்னதான் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இங்குள்ள கலாசாரத்திற்குள் நான் மூழ்கிவிட்டேன். இந்திய மருமகளாக வாழ்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.

உயிருக்கு உலை வைக்கும் பிரொய்லர் கோழி : இனியும் வேண்டாமே!!

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிரொய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிரொய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிரொய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.

ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிரொய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிரொய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிரொய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெய்யை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிரொய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் பெரிய அளவில் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

ஆனால் பிரொய்லர் கோழியின் சுவைக்கு ஏனைய கோழிகள் நிகரில்லை என நம்மில் பெரும்பாலானோர் அதற்கு அடிமையாகியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது.

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் டேட்டிங் சேவை!!

முதன்முறையாக பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தபோவதாக அதன் நிர்வாகி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை அது வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனிநபர் விவரங்களை பாதுகாப்பது முக்கியமாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

சிக்ஸ் பெக் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை : படங்கள் உள்ளே!!

 

தமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்கள் சிக்ஸ் பெக் வைத்து தான் பார்த்திருப்போம். அதற்காகவே அவர்கள் அதிகம் மெனக்கெட்டு உடல்பயிற்சி செய்து சிக்ஸ் பெக் இருக்கும் அளவுக்கு பிட்டாக இருப்பார்கள்.

தற்போது இறுதிச் சுற்று, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் நடித்த ரித்திகா சிங் தான் உடற்பயிற்சி செய்யும்போது எடுத்த ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் “சிக்ஸ் பேக் abs திரும்ப கிடைத்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.