வவுனியாவில் ஹொரவப்பொத்தான வீதியில் விபத்து : குடும்பஸ்தர் தீவிர சிகிச்சைப் பிரிவில்!!

 

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது..

இன்று (26.04.2018) இரவு 9 மணியளவில் வவுனியா நகர் பகுதியிலிருந்து ஹொரவப்பொத்தான வீதியூடாக வெளிக்குளம் பகுதி நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின்புறமாக பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த சிங்கள இளைஞனின் மோட்டார் வண்டியின் மோட்டார் சைக்கிளின் ஸ்டான்ட் சரியான முறையில் இல்லாதமையினால் வீதியில் உராய்ந்து முன்னால் பயணித்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்

இதேவேளை குறித்த இளைஞன் மதுபோதையில் இருந்ததாகவும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் இளைஞனை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்டாலின் கடத்திச் சென்றாரா : பல ஆண்டுகளுக்குப் பின் பாத்திமா பாபு விளக்கம்!!

பிரபல செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபுவை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடத்தி சென்றதாக பரவிய தகவலுக்கு பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், என் வாழ்வில் அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை, ஸ்டாலின் என்னை கடத்தியதாக சொல்லப்படும் அந்த காலகட்டத்தில் இதுகுறித்து நான் அப்போதைய குமுதம் இதழின் பத்திரிக்கையாளரான பால்யூவிற்கு விளக்கம் கொடுத்திருந்தேன்.

ஆனால் ஏனோ நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை, துர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த போது ஒருமுறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன்.

துர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை செய்தி வாசிப்பு அளிக்கப்படவில்லை, அந்த இடைவெளியில் என்னை செய்தி வாசிப்பாளராக காண முடியாத காரணத்தால் இப்படியொரு வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்.

சித்திரப்பாவை தொடர் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்தேன். திருமணத்திற்கு முன்பே என் கணவரான பாபு தான் என்னை துர்தர்ஷன் அலுவலகத்துக்கு அழைத்து செல்வதும், வீட்டுக்கு திரும்ப அழைத்து செல்வதுமாக இருந்தார்.

அப்படியிருக்கையில் இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது, பரப்பப்பட்டது என்று எனக்கு புரியவில்லை, நான் அப்போதும், இப்போதும் என்னை இவ்விஷயமாக விசாரிக்கும் எனது நண்பர்களுக்கு மேலே சொன்ன காரணத்தை தான் விளக்கமாக அளித்து வருகிறேன்.

அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பாடு, ஆனால் இதன் காரணமாக ஒரு கட்சியின் செயல்தலைவராக பட்டவரின் கேரக்டரை கொலை செய்வது தவறு.

நான் விளக்கம் அளித்த பிறகும் சிலர் அதே வதந்தியை உண்மை போலக் கூறி அவரது நற்பெயருக்கு களங்க விளைவிப்பார்களானால் அதை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்னை பற்றி நான் சொல்வது தான் உண்மை, அதை தான் நீங்கள் நம்ப வேண்டும், அதை விட்டுவிட்டு வெளியில் பலரும் கதை கட்டுவதை போல மசாலா தடவிய கற்பனை பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை, அது உங்கள் இஷ்டம், இதற்கு மேல் இதைப்பற்றி கேள்வி வந்தால் நாம் பதில் சொல்வதாக இல்லை – இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் பாத்திமா பாபு.

பிரித்தானியாவில் திருடனை ஓடஓட விரட்டிய தமிழ்க் குடும்பம் : வெளியான அதிர்ச்சிக் காணொளி!!

 

பிரித்தானியாவில் தமிழ் கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ் தம்பதி, திருடனிடமிருந்து பொருட்களை பாதுகாத்த விதம் குறித்து பித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த திருடன் மீது மிளகாய் தூள் துவி, துணிச்சலாக செயற்பட்ட தமிழ் தம்பதியர் பற்றி பெருமையாக பேசப்பட்டு வருகிறது. திலீபன் தில்லைநாதன் மற்றும் ரம்யாமுகி இதயநாதன் என்பவர்களே கத்தியோதோடு நுழைந்த திருடனை பிடித்துள்ளனர். இறுதி வரை திருடனுடன் போராடிய இவர்கள் திருடனை வெறும் கையுடனே ஓட வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த வருடம் ஜுலை மாதம் இடம்பெற்ற நிலையில் தற்போதே இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. Paul Christian Callaghan என்ற திருடனுடன் இந்த தம்பதியினர் போராடிய துணிச்சலான சம்பவம் வர்த்தக நிலையத்தில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

45 வயதான திருடனுக்கு தற்போது நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவர் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார்.

முகத்தை முழுவதும் மூடிகொண்ட திருடன் North Ormesby, Middlesbrough பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்றுள்ளார். கடையில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணத்தை தருமாறு திருடன் கூறியுள்ளார். பணம் தனது கணவரிடமே உள்ளதாக திருடனிடம் கூறிய பெண் கணவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் கணவர் வரும் வரை பணப்பெட்டியை திருடன் நெருங்காத வகையில் பொருள் ஒன்றினால் திருடனை தாக்குவதற்கு பெண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மிளகாய் தூளை நீரில் கலந்து கொண்டு வந்த கணவர் திருடன் மீது அதனை ஊற்றினார். எனினும் திருடன் அங்கிருந்த கணனியை எடுத்துக் கொண்டு சைக்கிளில் தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும் பெண் திருடனின் சைக்கிள் சக்கரத்தை பிடித்து கொண்டு போராடினார். எனினும் நீண்ட போராட்டத்தின் பின்னர் கணவனும் மனைவியும் இணைந்து திருடனை பிடித்துள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட திருடன், மன்னித்து விடுங்கள். நான் அப்படி செய்து விட்டேன். நான் யாரையும் காயப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் Teesside Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி Andrew Turton கேட்டு கொண்டார். எனினும் நீண்ட 5 வருடங்களும் ஒரு மாதமும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி Sean Morris குறிப்பிட்டுள்ளார். இறுதி தீர்ப்பிற்கு வழக்கு மீண்டும் கூடும் என கூறி நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

மனைவி சொன்ன ஒரு வார்த்தை : ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தூக்கிபோட்டுக் கொன்ற கணவன்!!

மது குடிப்பதைத் தட்டிக்கேட்ட மனைவியை அம்மிக்கல்லால் கொலை செய்த கணவனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர். இவர் மனைவி முபாரக் பேகம். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அப்துல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியோடு தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு அப்துல் வீட்டுக்கு வந்த நிலையில், அதை முபாரக் தட்டி கேட்டதோடு இனி குடிக்கக்கூடாது என சண்டையிட்டுள்ளார். பிறகு, முபாரக் பேகம் தூங்கச் சென்ற நிலையில் அப்துல் ஜாபர் தூங்காமல் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இதையடுத்து நள்ளிரவில், தூங்கிக்கொண்டிருந்த முபாரக் பேகம் தலையில் அப்துல் அம்மிக்கல்லைத் தூக்கிப் போட அவர் தலைநசுங்கி இறந்தார்.

பின்னர் அப்துல் தப்பியோடியுள்ளார், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முபராக் பேகம் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் முபாரகின் சடலத்தை கைப்பற்றியதோடு தலைமறைவாக இருந்த அப்துலை கைது செய்தனர்.

குடிக்காதே என சொன்னதால் மனைவியை கொன்றதாக பொலிசில் அப்துல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கணவர் கண்முன்னே பலியான தாய், மகள் : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

தமிழகத்தில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், தனது குழந்தையுடன் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி(35). இவரது மனைவி ஜான்சி(28). இவர்களது மகள்கள் பிரின்சிகா(7), கனியா(5), ஹரினி(3).

கணேசமூர்த்தி தனது மனைவி ஜான்சி மற்றும் மகள் ஹரினியுடன், சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காதணி விழாவிற்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது, கடலூர் சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே அவர்களது வாகனம் சென்றபோது, பின்னால் வந்த அரசு பேருந்திற்கு வழிவிடுவதற்காக கணேசமூர்த்தி சாலையோரமாக தனது இருசக்கர வாகனத்தை ஒதுக்க முயன்றுள்ளார்.

அச்சமயம் அவர் நிலைதடுமாறியதால், வாகனத்தில் அமர்ந்திருந்த ஜான்சி மற்றும் அவர்களது மகள் ஹரினி இருவரும் சாலையில் விழுந்தனர். எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த பேருந்து அவர்கள் மீது ஏறியது.

இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கணேசமூர்த்தி சாலையோரமாக விழுந்ததால், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்நிலையில், இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த சிதம்பரம் பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை சரி செய்தனர். மேலும், பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.

பாடகியாக அறிமுகமாகியுள்ள சூர்யாவின் தங்கை!!

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார். கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.

கார்த்திக், அவருடைய மகன் கௌதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன.

இதில் மிஸ்டர்.சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும், சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.

மாணவர்கள் மூவரைக் கொன்று சடலங்கள் அமிலத்தில் மூழ்கடிப்பு!!

மெக்சிகோவில் 3 மாணவர்களைக் கடத்தி, கொலை செய்து, உடல்களை அமிலத் தொட்டியில் மூழ்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் கடத்தப்பட்டனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அவர்களது உடல்கள் டெனாலா நகரில் உள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடத்திச் சென்றவர்கள் அவர்களை கொலை செய்து, உடல்களை அங்குள்ள அமிலத் தொட்டியில் மூழ்கடித்துள்ளனர். எனவே, உடல்களை அடையாளம் காண முடியாததால் DNA பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் கொடூர குற்றங்களைப் புரியும் கும்பல்கள் உள்ளன. அவர்கள் இவர்களைக் கடத்திச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிக்பாஸ்க்கு பின்னால் நடந்த விடயத்தை வெளியிட்ட சுஜா!!

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படியான வரவேற்பை பெற்றது என பலருக்கும் தெரிந்திருக்கும். 100 நாட்கள் நடந்த போட்டியில் ஆரவ், சினேகன், கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதில் அண்மையில் அந்த சனல் பிக்பாஸ் குழுவிற்கு Pride of the channel என விருது வழங்கி சிறப்பித்தது. ஆனால் சுஜா, சினேகன், ஓவியா, ரைஸா, ஜூலி, காயத்திரி, சக்தி, கஞ்சா கருப்பு ஆகியோர் வரவில்லை. ஆனால் அந்த சனல் பிக்பாஸ் கொண்டாட்டம் என நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதற்காக இதில் கலந்துகொண்ட சுஜாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார்களாம்.

ஆனால் அவர் நான் வெளியே செல்கிறேன். எனக்கு பதிலாக என் அம்மாவை அனுப்புகிறேன் என சொல்ல, அவர்கள் வேண்டாம் என சொல்லிவிட்டார்களாம். மேலும் சுஜா கோபத்தில் இருக்கிறார்.

விடயம் என்னவெனில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்னும் நிகழ்ச்சியை நடத்தி எல்லோருக்கும் விருது இருக்கிறது என கூறி அழைப்பு விடுத்தார்களாம். ஆனால் சுஜாவுக்கும், கணேஷ்க்கும் சேர்த்து ஒரு விருது வழங்கினார்களாம்.

அதை கணேஷ் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என சுஜாவிடம் கொடுக்க அவரும் அதை வாங்கிக்கொண்டு மேடையை விட்டு இறங்கியதும், பெண் ஊழியர் ஒருவர் மேடம் அந்த விருதை கொடுங்க.. இன்னொருதருக்கு கொடுக்க வேண்டும் என வாங்கி சென்றுவிட்டாராம்.

இது சுஜாவுக்கு பெரிய அதிர்ச்சியாகியுள்ளது. இதனால் அவர் இவ்வளவு பெரிய சனலுக்கு ஒரு விருது வாங்க முடியாதா. தனித்தனியா விருது கொடுத்தா தான் என்ன?? இது அசிங்கமா தெரியலையா?? எப்படி தான் இப்படி பண்றாங்களோ.. பிக்பாஸ் நிகழ்ச்சி எங்கள் எல்லோருக்கும் புகழை கொடுத்திருக்கிறது.
ஆனால் யாருக்கும் வெற்றியை கொடுக்கவில்லை என கடுப்புடன் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் சுஜா.

ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னணி கதாநாயகி?

நடிகர் ஆர்யா திருமணம் செய்வதற்காக நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு உள்ளாகி கடும் விமர்சனங்களை பெற்றது. ஆர்யா இறுதியில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார். இதனால் ஆர்யா எந்த பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவரை பலரும் மேடையிலே விமர்சிக்கின்றனர்.

நேற்று சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா கலந்துகொண்டார். அப்போது பேசிய நடிகை வரலட்சுமி “ஆர்யாவை நான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று மேடையிலேயே நகைச்சுவையாக கூறினார்.

“ஆனால் அவர் உன்னை ரிஜெக்ட் செய்துவிடுவார்” என அங்கிருந்தவர்கள் வரலட்சுமியை கலாய்த்துவிட்டனர்.

இடி தாக்கி இருவர் வைத்தியசாலையில் : அவதானம்!!

 

டிக்கோயா – மாணிக்கவத்தை தோட்டத்தில் இடி தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் இருவரே இடித்தாக்குதலுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இடியுடன் கூடிய மழையான காலநிலை நீடித்து வருவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

புகையிரத்துடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் பலி!!

 

இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள குஷிநகர் பகுதியில் ரயிலுடன் பாடசாலை பஸ் மோதியதில் 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை பஸ், ரயில் கடவையைக் கடக்க முயன்ற போது வேகமாக வந்த ரயிலுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் 10 வயதிற்குட்பட்ட 25 மாணவர்கள் பயணித்துள்ளனர். குஷிநகரின் கோரக்பூரை அண்மித்த 50 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் 9 ஆம் திகதியன்று பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 27 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

 

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின், கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து இன்று நண்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 45 – 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சடலம் பொலிஸாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தங்கம் வாங்கும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தர முத்திரையுடனான தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், தரம் குறைந்த தங்க ஆபரணங்களை சந்தையில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவே இந்த கோரிக்கையை தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை விடுத்துள்ளது.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பிரதமர் யார்? சர்ச்சைக்குரிய ஜோதிடர் மீண்டும் ஆரூடம்!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இலங்கையில் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என சர்ச்சைக்குரிய ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் ஜாதகத்திற்கு அமைய அவர் எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தலைவராகவோ அல்லது பிரதமராகவோ பதவிக்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தினேஷ் குணவர்தனவின் ஜாதகம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கு இணையான ராஜயோகத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தினேஷ் குணவர்தனவுக்கு கட்டாயம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என உறுதியாக கூறியுள்ளார்.

இதேவேளை கிரக மாற்றத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து இருப்பதாக ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி ஆரூடம் வெளியிட்டிருந்ததுடன், அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியா நகர மத்தியில் இளைஞர்களுக்கிடையே மோதல்!!(வீடியோ)

வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகே இன்று (26.04.2018) இளைஞர்களுக்கிடையே ஏற்ப்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறி நடுவீதியில் சண்டையிட்டுள்ளனர்.

இச் சம்பவத்தினை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களான குறித்த இளைஞனுக்கும் மற்றைய தரப்பு இளைஞர்களுக்கும் இடையே சிறு கருத்து முரண்பாடு காணப்பட்டுள்ளது.

இவ் முரண்பாடு காரணமாகவே இன்றைய தினம் 12 மணியளவில் வவுனியா நகரில் வைத்து குறித்த இளைஞன் மீது மூன்று இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் சற்று வாகன நெரிசல் ஏற்ப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் முதல் நாள் அமர்வும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும்!!

 

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் முதல் நாள் அமர்வும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும் நேற்று (25.04.2018) சபையில் இடம் பெற்றது. நேற்றைய தினம் மதியம் 2 மணியளவில் நெளுக்குளம் முருகன் கோவிலில் மத வழிபாட்டுடன் ஆரம்பித்த இந்நிகழ்வானது ஊர்வலமாக சபையை சென்றடைந்து நிகழ்விற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பகுதியில் சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தலைமையில் ஆரம்பமானது.

சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் அவர்களின் வரவேற்புரையுடனும் மங்கள விளக்கேற்றளுடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி,

கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நெல்சன், அக்கட்சியின் சர்வதேச அமைப்பாளர்களில் ஒருவரான மலரவன், மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான செ.மயூரன், எம்.பி.நடராஜா, ஐக்கிய தேசியகட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான குமார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் உரை மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் முடிவடைந்ததும் சபையின் முதல் நாள் அமர்வு ஆரம்பமாகி நடைபெற்றது.