இலங்கையின் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் நிலப்பரப்பிற்குள் வரும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. தென்னிலங்கையின் சில பகுதிகளில் கடல்நீர் நிலப்பகுதிக்கு வந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டது.
எனினும் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், தென் மற்றும் தென் கிழக்கு கடற்பரப்பில் சுமார் மூன்று மீற்றருக்கும் மேலாக கடல் அலைகள் எழும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கொந்தளிப்பு தொடர்பில் தேவையற்ற ரீதியில் அச்சம் கொள்ள வேண்டாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையை சூழவுள்ள வளிமண்டவியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையே கடல் கொந்தளிப்புக்கு காரணமாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழ் கடல் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இதனால் ஆபத்துக்கள் ஏற்படும் என அச்சமடைய தேவையில்லை என பொது மக்களிடம் திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த அவுஸ்திரேலிய சிறுவன் குறைந்த கட்டண விமானம் ஒன்றில் டிக்கெட் பதிவு செய்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றுள்ளார். அங்கு நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் 4 நாட்கள் உல்லாசமாக செலவிட்டுள்ளார்.
விமான டிக்கெட் பதிவு செய்யும் முன்பாக, குறித்த 12 வயது சிறுவன் குறிந்த கட்டண விமானம் தொடர்பில் இணையத்தில் விரிவாக தகவல் திரட்டியுள்ளார். மட்டுமின்றி பெற்றோரின் அனுமதி கடிதம் இன்றி தனியாக பயணம் மேற்கொள்ளும் விமான சேவை நிறுவனத்தையும் தேடியுள்ளார்.
பின்னர் மிக குறைந்த கட்டணத்தில், பாடசாலை தினங்களில் இந்தோனேசியாவுக்கு விமான டிக்கெட் பதிவு செய்துள்ளார். பின்னர் தனது பயணத்திற்கான பெட்டியை தயார் செய்து ரயில் மூலம் விமான நிலையம் சென்றடைந்துள்ளார். சிட்னி விமான நிலையத்தில் இருந்து பெர்த் நகருக்கு சென்ற சிறுவன், அங்கிருந்து பாலி தீவுக்கு சென்றுள்ளார்.
இதனிடையே சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் செய்துள்ளனர். நான்கு நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய சிறுவன், தமது தாயாரின் வங்கி அட்டையை எடுத்துச் சென்று அதன் வாயிலாக அனைத்து கட்டணங்களும் செலுத்தியது தெரியவந்தது.
தென்னாப்பிரிக்காவில் மாணவர் ஒருவர், பட்டமளிப்பு விழாவில் தனது பாட்டியை அழைத்து வந்து, அவரையும் தன்னுடன் மேடையில் ஏற்றி பட்டம் பெற்ற நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் KZN என்னும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், Nkandla என்னும் பின் தங்கிய கிராமத்தில் இருந்து வந்து படித்த மாணவர் ஜபுலோ, தனது 89 வயது பாட்டியுடன் பட்டம் பெற வந்தார்.
அப்போது அவர் ஜுலு எனும் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார். பின்னர், ஜபுலோவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், தன் பாட்டி மீது தனது பட்டமளிப்பு மேலங்கியை அணிவித்து அவரையும் தன்னுடன் மேடைக்கு அழைத்துச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து, ஜபுலோ மேடையில் தனது பாட்டியுடன் சேர்ந்து சட்டத்துறையில் பயின்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் இதுதொடர்பாக ஜபுலோ கூறுகையில், ‘எனக்குத் தாய், தந்தை இல்லை. என் சிறிய வயதிலேயே அவர்கள் இறந்துவிட்டனர். என்னை வளர்த்தது இவர்தான். என் கிராமம் கல்வியில் மிகவும் பின் தங்கியது என்பதால், அங்கு பள்ளிக்கு செல்வதே பெரிய விடயம்.
இன்று நான் இங்கு நிற்பதற்கு இவர் மட்டுமே காரணம். இங்கு என்ன நடக்கிறது என்று கூட அவருக்குத் தெரியாது. படிப்பு தான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் என்பது மட்டும் அவருக்குத் தெரியும்.
இன்று நான் சட்டம் படித்து பட்டம் வாங்க இவர் மட்டும்தான் காரணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அப்போது ஜபுலோவின் பாட்டி, தனது பேரனுக்கு முத்தமிட்டு வாழ்த்து கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது நெஞ்சையும் உருக வைத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் Calaya என்ற கொரில்லா ஆண் குழந்தையை பெற்றெடுத்தது.
15 வயதுடைய Calaya என்ற தாய்க்கும், 26 வயதுடைய Baraka என்ற தந்தைக்கும் குட்டி கொரில்லா பிறந்துள்ளது. தனது குழந்தையை கையில் எடுத்த தாய் கொரில்லா, தனது நெஞ்சோடு இறுக அணைத்து முத்தமிட்டுள்ளது. தாய் கொரில்லாவின் இந்த அரவணைப்பு பார்ப்பவர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது.
இந்த காட்சியை பூங்காவானது தனது இணைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது நெஞ்சையும் உருக வைத்துள்ளது.
பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை புவனேஸ்வரி இவர் மீது பல்வேறு சர்ச்சை வழக்குகளும் உள்ளது. இந்நிலையில் பேஸ்புக்கில் பழகிய பெண்ணை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்ததாக புவனேஸ்வரின் மகன் மிதுன் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதயா (32) எனும் பெண் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். விவாகரத்து ஆன இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். இவருடன் பேஸ்புக் மூலம் மிதுன் சீனிவாசன் பழகிவந்துள்ளார்.
ஒரு நாள் உதயாவிடம் பேசிய மிதுன் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். உதயாவும் முதலில் இதற்கு சம்மதம் என கூறியுள்ளார்.
ஆனால் மிதுன் போதைப்பழக்கம் உள்ளவர் என்பது தெரிய வந்ததால் திருமணம் செய்யும் முடிவை உதயா மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மிதுன் அவரை மிரட்டியுள்ளார்.
இது குறித்து அவர்களுக்குள் மோதல் இருந்துள்ளது. இந்நிலையில் உதயாவை தன் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் மிதுன். அதன்படி உதயாவும் அவரது மகனும் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உதயா மற்றும் அவருடைய மகனை வீட்டில் ஒரு அறையில் மிதுன் அடைத்து வைத்துள்ளார்.
ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை புவனேஷ்வரி இதுவும் ஒரு சர்ச்சையாக ஆகி விடக்கூடாது என்பதால் மிதுன் வெளியில் சென்ற நேரம் பார்த்து உதயாவும் அவரது மகனும் இருந்த அறைக்கதவை திறந்து விட்டு அவர்கள் தப்பிக்க உதவியுள்ளார்.
இதன் பின்னர் மிதுன் சீனிவாசன் மீது உதயா காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் அவரை கைது செய்து பொலிஸ் சிறையில் அடைத்தது.
காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தடயவியல் சோதனை அறிக்கை வந்துள்ளது. காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமியின் உடைகள், இரத்தம் படிந்த மண் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் உள்ளிட்ட 14 பொருட்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக தடயவியல் ஆய்வக அதிகாரிகள் கூறுகையில், தடயவியல் சோதனையில் குற்றவாளிகளுக்கு எதிராக அறிக்கை வந்துள்ளது. காவல்துறையினர் அளித்த ரத்த மாதிரிகளுடன் அவை ஒத்துப்போகிறது. இந்த அறிக்கை ஏப்ரல் 3ஆம் திகதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு புலனாய்வு துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கோவிலில் இருந்து இரண்டு தலைமுடிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. தலைமுடியின் வேர்களை ஆராய்ந்ததில் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சிறுமியுடையது மற்றொன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடையது என தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மிகவும் முக்கியமான ஆதாரமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
சிறுமியின் உடைகளில் இருந்த தடயங்களை உள்ளூர் காவல்துறையினர் மறைக்க முயற்சித்துள்ளனர். சிறுமியின் ஆடைகளில் இருந்த சேற்றை தண்ணீரைக் கொண்டு கழுவியுள்ளனர். மேலும் ஆடைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்துள்ளனர். இதனால் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அந்த உடைகளில் இருந்த ரத்தக்கறை அழியவில்லை அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தனது தந்தை குறிதது நடிகர் சிம்புவிடம் மன்சூர் அலிகானின் மகன் அழுதுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டது குறித்து அறிவதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்ற நடிகர் சிம்பு, மன்சூருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார், உளவுப் பிரிவு துணை ஆணையரை சந்தித்துப் பேசிய சிம்பு, பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,
சட்டப்படிதான் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டிருப்பதாக விளக்கமளித்தனர். அது ஏற்கும்படி இருந்தது. பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் பேசுபவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டேன். சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
மன்சூர் அலிகான் புதன்கிழமைக்குள் பிணையில் வெளியே வர வாய்ப்பு உள்ளது என்கின்றனர். அதுவரை காத்திருப்பேன் என கூறியுள்ளார்.
இந்தியாவில் 7 வயது சிறுவனை கடத்தி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போது, சிறுவன் கத்தியதால் அவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தம்பதி பூஜா தேவி(25)-ராகேஸ் குமார்(27). இவருக்கு Purshotam Kumar என்ற 7 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 2-ஆம் திகதி வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது Sandeep Singh(21) என்ற நபர் சிறுவனை கடத்திச் சென்றுள்ளான்.
அப்போது பூஜா தேவி வீட்டிற்கு உள்ளே சமையல் செய்து கொண்டிருந்த போது, அம்மா என்று கத்தியுள்ளான். இதனால் அவர் என்ன என்று கேட்ட போது பதில் வராத காரணத்தினால், அவர் உடனடியாக வெளியில் வந்து பார்த்துள்ளார்.
ஆனால் மகன் காணாமல் போனதால், உடனடியாக தனது கணவருக்கு இதைப் பற்றி தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக இது குறித்து இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பின் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் கடந்த 5ஆம் திகதி அவர்கள் இருந்த வீட்டிலிருந்து சுமார் 2 நிமிடம் நடந்து சென்றால் இருக்கும் தொலைவில் உள்ள குப்பைப் பகுதியில் சிறுவனின் உடல் இருந்துள்ளது.
மகன் பற்றிய தகவலை மட்டுமே பொலிசார் தெரிவித்ததால், மகன் உயிரோடு தான் இருக்கிறான் என்று பூஜா, குறித்த பகுதிக்கு விரைந்து வந்துள்ளார்.
அப்போது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் முகத்தில் மோசமான காயங்கள் மற்றும் கண், நாக்கு போன்றவைகள் பிடிங்கிய நிலையில் இருந்துள்ளது.
அதன் பின் பொலிசார் உடனடியாக உடற்கூறு ஆய்வுக்கு சிறுவனின் உடலை அனுப்பி வைத்துள்ளனர். அப்போது கடத்திச் சென்ற நபர் சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளான்.
இதனால் சிறுவன் கூச்சலிட்டதால் அவனை கொடூரமாக கொலை செய்துவிட்டு குப்பையில் வீசிச் சென்றிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து குற்றவாளியை பொலிசார் கைது செய்த போது அவன் ஒரு மது போதைக்கு அடிமையானவன் என்றும் குழந்தைகளை கடத்தி துஷ்பிரயோகம் செய்யக் கூடியவன் என்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுவனின் தாய், என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
என் மகன் மட்டுமல்ல இந்தியாவில் சமீபகாலமாக குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.
இது போன்ற கொடூரர்கள் தண்டிக்க பட வேண்டும், என் மகன் தூக்கி வீசப்பட்ட குப்பைத் தொட்டியை பார்த்தால் என் மனம் துடிக்கிறது, ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்ற கோபம் தான் வருகிறது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் குஜராத் மாநிலம் சூரத்தில் உடலில் 87 காயங்களுடன், சாக்குமூட்டையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த பெண்ணின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். லட்வியாவைச் சேர்ந்தவர் லிகா, தன்னுடைய கணவர் மற்றும் சகோதரியுடன் சிகிச்சைக்காக கேரளா வந்தவர் கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி காணாமல் போனார்.
அன்றைய தினம் கோவளம் கடற்கரைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை, இவரை பல இடங்களில் தேடிய உறவினர்கள் பொலிசில் புகார் அளித்தனர். பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், திருவனந்தபுரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது லிசாவின் உடலாக இருக்கும் என சந்தேகித்த பொலிசார் டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். ஏனெனில் இது லிசாவின் உடல் தான் என அவரது சகோதரி உறுதி செய்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு பிரபலங்கள் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் ஸ்ரீரெட்டி. பிரபலமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை வெளியிட்டதுடன் சில படங்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
தொடர்ந்து பவன் கல்யாண் இளம்பெண்களை வைத்து மசாஜ் செய்வதாகவும், பெங்காலி பெண்களையே பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மிரட்டல்களும் விடுத்தனர்.
இதனால் பயந்து போன ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்டதுடன், 5 கோடி தருவதாக பின்னர் ஒருவர் இருந்து தூண்டியதால் இவ்வாறு செய்ததாகவும் கூறினார். இதனையடுத்து தாமாகவே முன்வந்து, தான் தூண்டிவிட்டே ஸ்ரீரெட்டி இவ்வாறு செய்ததாக ராம்கோபால்வர்மா கூறினார்.
இந்நிலையில் பவன் கல்யாண் டுவிட்டரில், என்னை அரசியல் ரீதியாக காயப்படுத்த ஸ்ரீரெட்டி மூலம் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் பின்னணியில் ராம்கோபால் வர்மாவும், சந்திரபாபுவின் மகனும் அமைச்சருமான லோகேசும் இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியால் சமுர்த்தி பயனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வொன்று மிகவும் சிறப்பாக இன்று (22.04) நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் கா.உதயராசா, சிறப்பு விருந்தினராக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் திருமதி எஸ்.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வங்கியின் முகாமையாளர் இ.இரட்ணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் என பல நடைபெற்றதோடு பரிசில்களும் வழங்கப்பட்டன.
லிந்துலை – மெரேயா கேம்பிரி தோட்டத்தில் நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய கிச்சான் என்பவரின் சடலமே இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் தனது குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நீரோடையில் குளிக்கச் சென்றபோதே தவறி விழுந்து மரணமாகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மரண பரிசோதகர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்க உள்ளதாகவும் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தில் கடந்த திங்கட்கிழமை 16ம் திகதியிலிருந்து வெள்ளிக்கிழமை 20.04.2018 வரை 653 பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளதாக மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,
வவுனியா மாவட்ட செயலகத்தினூடாக வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு கடந்த திங்கட்கிழமை 16ம் திகதியிலிருந்து இடம்பெற்று வருவதாகவும் வெள்ளிக்கிழமை மாலை வரையான காலப்பகுதி வரை 653 பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்விற்கு சமூகமளித்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிவரையும் பட்டதாரிகளுக்கு மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தில் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது. இக்காலப்பகுதிக்குள் நேர்முகத் தேர்விற்கு சமூகளிக்கத்தவறிய பட்டதாரிகள் உடனடியாக நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டிகளின் பின்னர் எந்தவொரு சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாடவில்லை. இது தொடர்பில் லசித் மாலிங்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டிகளின் பின்னர் எந்தவொரு போட்டிகளிலும் நான் விளையாடவில்லை. இதற்கான காரணத்தை நான் கேட்டபோது, “2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ளது.
ஆகவே T20 போன்று சிறு போட்டிகளில் விளையாடுவதற்கு புதிய வீரர்களை இணைத்துக்கொண்டு உங்களுக்கு ஓய்வு வழங்குவதற்காகவே போட்டிகளில் உள்வாங்கப்படவில்லை” என அறிவிக்கப்பட்டது.
திறமைகள் இருந்தும் விளையாட சந்தர்ப்பம் கிடைக்காததால் நான் சற்று மனவேதனை அடைந்திருந்தேன். இந்த நிலையில் தான் எனக்கு ஐ.பி.எல் தொடரில் மும்பாய் இந்தியன்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எதிர்வரும் 25ஆம் திகதிகளில் இந்த போட்டிகள் முடிவடையவுள்ளது.
இதையடுத்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. அதில் விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பு உள்ளது.
தேசிய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் இலங்கைக்காக விளையாட நான் தயாராக உள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த சங்கு விலைமதிக்க முடியாத பொருளாக காணப்படுவதாகவும் அந்தப் பகுதி மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிலிருந்து இன்று நண்பகல் 12.30மணியளவில் 14இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை முதல் பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு14 இராணுவத்தினர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பல இராணுவத்தினருக்கு பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவத்தினரில் பெருமளவானோர் உள்ளாடைகளுடனும் முகத்தில் ஒரு வித சாயம் பூசிய நிலையிலும் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.