கணவரை மூச்சு திணறடித்து கொன்றது ஏன் : மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

தமிழ்நாட்டில் கணவரை திணறடித்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் மனைவி புஷ்பா (46). ராஜேந்திரனும், புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்

இந்நிலையில் புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு காலி இடத்தில் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். முகம் சாக்கு பையால் மூடப்பட்டு இருந்தது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றிய அவர்கள் விசாரணையை தொடங்கினர். புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு பிணம் கிடந்ததால் புஷ்பாவிடம் துருவி துருவி விசாரித்தனர்.
முதலில் நடந்ததை மறுத்தாலும் ஒரு கட்டத்தில் கணவரை கொன்றதை புஷ்பா ஒத்து கொண்டார்.

மது போதையில் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்ததால் கணவரை புஷ்பா கொன்றது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்தது.

குடும்பத்துக்கு எந்த வகையிலும் உதவாதவராக இருந்து வந்த ராஜேந்திரனை புஷ்பா முற்றிலும் வெறுத்தார். ஆனால் சமீப காலமாக ராஜேந்திரன் புஷ்பா வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்துள்ளார்.

குடும்பத்துடன் சேர்ந்து வாழ ராஜேந்திரனுக்கு ஆசை இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாணிப்பவுடர் குடித்து விட்டு புஷ்பா வீட்டுக்கு ராஜேந்திரன் வந்துள்ளார்.

பின்னர் அவருடன் தகராறு செய்த ராஜேந்திரன் வீட்டுக்குள் உள்ள குளியலறைக்கு சென்று மயக்க நிலையில் பாதி உயிருடன் கிடந்தார்.

அவர் மீது ஆத்திரத்தில் இருந்த புஷ்பா சாக்கு பையை எடுத்து ராஜேந்திரனின் முகத்தை மூடி மூச்சை திணறடித்து கொன்றுள்ளார்.

பின்னர் ராஜேந்திரனின் உடலை துணியால் சுற்றி, கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு போய் காலி இடத்தில் போட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து புஷ்பாவை பொலிசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல் முறையீடு!!

சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்த் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னையை சேர்ந்த ஹாசினி (6) என்ற சிறுமி கடந்தாண்டு தஷ்வந்த் (24) என்ற இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்தது.

பின்னர் வெளியில் வந்த தஷ்வந்த் தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடினான். இதையடுத்து மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கு 4 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாறி மாறி பேசும் டோனி ரசிகர் : காவிரி விவகாரத்தில் சர்ச்சை!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகரும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியின் ரசிகர் ஒருவர் என்னை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் அல்ல கருணாஸ் கட்சினர் மாறி மாறி கூறி வருகிறார்.

தமிழகத்தில் தற்போது பூதாகரமாக கிளம்பியிருக்கிறது காவேரி மேலாண்மை விவகாரம் தான், இதற்கிடையில் நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நடைபெறக் கூடாது என சென்னை அண்ணாசாலையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகரான சரவணன், போராட்டக்காரர்கள் என்னை தாக்கியதாகவும், என்னை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் தான் என்றும் கூறியிருந்தார். அது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்த நேரத்தில் அவர்கள் என்னை திடீரென தாக்கினர். அப்போது நான் கட்சி கொடியை சரியாக பார்க்காமல், நாம் தமிழர் கட்சியினர் தான் தாக்கிவிட்டனர் என்று கூறியிருந்தேன்.

ஆனால் வீடியோக்களை பார்த்த போது கருணாஸ் கட்சியினரைச் சேர்ந்தவரே என்னை தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்ததாக பதிவேற்றம் செய்துள்ளார்.

ரயில் மீது ஏறி போராட்டம் : மின்சாரம் பாய்ந்து கருகிய நபர் : பதற வைக்கும் நொடிகள்!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று திண்டிவனத்தில் நடந்த போராட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் இன்று திண்டிவனம் ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், சென்னையில் இருந்து வந்த குருவாயூர் விரைவு ரயிலை மறித்து போராடினர்.

அப்போது, ரஞ்சித் என்பவர் ரயில் மீது ஏறி முழக்கமிட்டபடியே நடந்து சென்றுள்ளார். உணர்ச்சி மிகுதியில் மேலே இருந்த உயர் அழுத்த மின்கம்பியை உரசியதில், மின்சாரம் பாய்ந்து அவர் உடனடியாக தூக்கி வீசப்பட்டார்.

உடல் முழுவதும் கருகிய நிலையில் ரஞ்சித்துக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விமான விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலி!!

 

அல்ஜீரியாவின் தலைநகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தலைநகரில் உள்ள பௌவரிக் விமானநிலையத்தில் இராணுவ விமானமொன்று விழுந்து நொருங்கியதில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த விமானத்தில் விபத்து இடம்பெறும் போது 200 பேர் பயணித்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலையுசின் ஐ.எல்.76 என்ற விமானம் பெருமளவு படையினருடன் பெச்சார் என்ற நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் விழுந்து நொருங்கிய இடத்தில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் யாழ்ப்பாணத்தில் தலைதூக்கும் ஆவா குழு?

யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா குழுவினர் தலையெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை கலைவாணி நூலகம் அருகில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இளைஞரொருவரை சரமாரியாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தெல்லிப்பளை ரவிச்சந்திரன் லக்ஷான் எனும் 19 வயது இளைஞர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிடும் போதே பொலிஸார் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆவா குழுவினரின் செயற்பாடுகள் காரணமாக விசேட பொலிஸ் படை களத்தில் இறங்கி அவர்களை அடக்கியது.

இதன்போது, ஆவா குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இளைஞரின் தாக்குதல் சம்பவம் மீண்டும் ஆவா குழுவினர் தலையெடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் நடந்த பயங்கரம் : அச்சம் காரணமாக உயிரிழந்த நபர்!!

 

உறவினர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் காரணமாக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டையில் வாழ்ந்து வந்த 46 வயதான முத்துராசா முனீஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த முத்துராசா முனீஸ்வரன் தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த மூன்றாம் திகதி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டவரை, இன்னொரு உறவினர் கடுமையாக தாக்கியுள்ளார்.

தனது வீட்டில் உறக்கத்திலிருந்த குடும்பத் தலைவரை அவரது வீட்டுக்குள் அத்துமீறிச் சென்று தடி, வயர் என்பவற்றாலும் கால்களாலும் தாக்கியுள்ளார். எனினும் இதிலிருந்து தப்பித்துக் கொண்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 7 ஆம் திகதி குடும்பத் தலைவர் வீதியில் சென்றுகொண்டிருந்போது எதிர்ப்பட்ட மனைவியின் உறவினர் ஒருவர், அடித்தது போதாது என்று கூறி மீண்டும் தாக்குவேன் என்று அச்சுறுத்தியுள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதனால் தன்னை மீண்டும் தாக்குவார் என்று அஞ்சிய குறித்த குடும்பத் தலைவர் அன்றிரவு தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார் என்று கூறுப்படுகின்றது. எரிந்த நிலையில் அவரை மீட்ட அயலவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

உயிரிழப்புக்குக் காரணமானவர் மனைவியின் உறவினரான 26 வயதுடையவரே என்று இறந்தவரின் மனைவியும், சகோதரனும் விசாரணையில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அமெரிக்காவின் செனட் சபை மார்க் சக்கர்பேர்க்கிடம் தீவிர விசாரணை : அதிர்ச்சித் தகவல்கள்!!

 

பேஸ்புக் நிறுவனத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோதல் நிலை தொடர்வதாக பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா தகவல் திரட்டு முறைகேடு விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் மார்க் சக்கர்பேர்க் இடம் பகிரங்க விசாரணைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து வௌியிட்ட மார்க் சக்கர்பேர்க், பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் சுரண்டலில் ஈடுபடும் ரஷ்ய தரப்பினரின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பதிலளித்த சக்கர்பர்க் பேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் பொறுப்பு கூற ​வேண்டியது தன்னுடைய கடப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2016 இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட Robert Mueller தலைமையிலான விசேட விசாரணை குழுவினர் பேஸ்புக் ஊழியர்ளுடன் நேர்காணலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் தம்மிடம் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லையென Zuckerberg தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பகிரங்க விசாரணை மிக நம்பகத்தன்மை வாய்ந்ததெனவும் பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பேர்க் குறிப்பிட்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம் தமது அரசியல் வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, மார்க் சக்கர்பர்க் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளார்.

பேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக மார்க் சக்கர்பர்க் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டையில் அனுஷா கொடிதுவக்குவிற்கு வெண்கலப்பதக்கம்!!

 

21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளது. மகளிருக்கான குத்துச்சண்டை கோதாவில் 45 – 48 கிலோ எடைக்குட்பட்ட பிரிவில் அனுஷா கொடிதுவக்குடன் அரையிறுதியில் போட்டியிட்ட இந்தியாவின் மேரி கோம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதேவேளை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த அனுஷா கொடிதுவக்கு வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் 1950 ஆம் ஆண்டுக்கு பின்னர் குத்துச்சண்டை கோதாவில் இலங்கை பதக்கம் ஒன்றை பெற்றுள்ளது.

இதேவேளை 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 4 பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

 

இன்று (11.04) மதியம் 12.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் புகையிரதக் கடவைக்கு அருகில் வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது வைரவபுளியங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பயணித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் மது போத்தல்கள் கொண்டு சென்றுள்ளதுடன் அவை வீதியில் சிதறிக்கிடந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன் : நடிகை திஷா பதானி!!

‘டோனி’ படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. இவர், சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நாயகியாக இருக்கிறார். திஷா தனது காதலர் டைகர் ‌ஷராப்புடன் நடித்த ‘பாகி-2’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. தனது சினிமா அனுபவம் பற்றி திஷாபதானி இப்படி கூறி இருக்கிறார்.

“நான் கல்லூரி படிப்பை விட்டுவிட்டு சினிமா நடிகையாகும் ஆசையில் மும்பைக்கு தனியாக வந்தேன். வெறும் 500 ரூபாய் தான் அப்போது என்னிடம் இருந்தது. அதுவும் செலவாகிவிட்டதால் கையில் காசு இல்லாமல் அவதிப்பட்டேன்.

மும்பை வந்த புதிதில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். இதற்காக விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். இதற்காகவே வேலைக்கு சென்றேன். சம்பாதித்தேன். வீட்டில் தூங்கினேன். இதுதான் அப்போது எனது வாழ்க்கையாக இருந்தது.

நான் ஒரு படத்தில் அறிமுகமாக இருந்தேன். அது தொடங்கும் போது என்னை நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்தார்கள். படத்தில் இருந்து என்னை நீக்கியது எனக்கு பலத்தை கொடுத்தது. பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. நான் பாசிட்டிவாக எதையும் எடுத்துக்கொள்வேன்.

நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தேன். என் படம் ஓடுமா? அடுத்த வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியாது. எனவே நான் எச்சரிக்கையாக இருக்கிறேன்”.

செவ்வாய்க்கு செல்லும் தேனீக்கள்!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை இன்னும் 2 வருடங்களில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள ‘ரோவர்’ கருவி மிக மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்து ஆராய்ச்சி முடிவுகளை அனுப்புவதால் பூமிக்கு தகவல்களை அனுப்ப அதிக நேரமாகிறது.

இந்த ரோவர்’ கருவி அதிக எரிபொருட்களை எடுத்து கொள்கிறது. மேலும் இது அனுப்பும் தகவல்கள் சில நேரங்களில் சரியாக இருப்பதில்லை. எனவே இதை கைவிட விஞ்ஞானிகள் முடிவு செய்து அதற்கு பதிலாக ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இதற்கு ‘மார்ஸ் பீஸ்’ என பெயரிட்டுள்ளனர். இவை 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவிலானவை. இந்த தேனீ ரோபோவில் சிறிய கமெரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் இருக்கும். ஒவ்வொரு தேனீயிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி 20க்கும் மேற்பட்ட ‘ரோபோ’ தேனீக்களை செவ்வாயில் பறக்க வைக்க தீர்மானித்துள்ளனர்.

தேனீ ரோபோக்களில் சிறிது நேரம் மட்டுமே சார்ஜ் இருக்கும் என்பதால் ரேபாபோக்களுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது. இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும்

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்தாம்!!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்­வ­ருடம் ஏப்­ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி என்­ப­தனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையை அடுத்து மே தின கொண்­டாட்­டங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

அதற்கமைய மே தின கூட்­டங்கள், ஊர்­வ­லங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்ள நிலையில் அன்றைய தினத்தை வங்கி, அரச மற்றும் வர்த்­தக விடுமுறை தின­மாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் கடத்தப்பட்ட ஈழத்து யுவதி : மூன்று வாரங்களின் பின் மீட்பு!!

பிரான்சில் வைத்து கடத்தப்பட்ட 17 வயதான ஈழத்து யுவதி ஒருவர் மூன்று வாரங்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20ம் திகதி Goussainville நகரில் இருந்து குறித்த யுவதியை மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த யுவதி வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யுவதியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யுவதியின் 28 வயதான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள உள்ளவர்களுக்கான அறிவித்தல்!!

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான எழுத்து மூல பரீட்சையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் புதிய முறையில் நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எழுத்து மூல பரீட்சையில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுத்தல் மற்றும் விரைவாக பெறுபேறுகளை வௌியிடுவது போன்ற காரணங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார்.

அதன்படி முதலில் வெஹரஹர காரியாலயத்தில் புதிய முறையில் எழுத்து மூலப் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் கடந்த காலப்பகுதியில் வாகனங்களை பதிவு செய்வது அதிகரித்திருப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கடலில் நீடிக்கும் மர்மம் : ஆபத்தின் அறிகுறியா? ஆய்வு செய்யும் அமெரிக்கா!!

முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வழமைக்கு மாறாக கடலில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க ஆய்வு குழுவொன்று முல்லைத்தீவுக்கு சென்றுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்து பல சந்தர்ப்பங்களில் முல்லைத்தீவு கடல் தன்மையில் மாற்றம் உள்ளதாகவும், நீர் மட்டம் 5 அடி அதிகரித்ததாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல முறை கடல் கொந்தளித்து கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும், அதனால் சுனாமி ஏற்படும் என அஞ்சியவர்கள் கடலில் பூஜை ஒன்றையும் நடத்தினர்.

அண்மையில் கடலில் நீர் வீதிக்கு வருவதாக கூறி முல்லைத்தீவு பிரதேச மக்கள் நகரத்தின் கடைகளை மூடிவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரி காமினி பிரியந்த கடல் நிலைமை தொடர்பில் அனைவருக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் பிரிவு பிரிவு குழுவினர், கொழும்பில் உள்ள சில குழுக்கள் இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் சுற்றுலா சூழல் மற்றும் புவியியல் மாற்றம் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சிலர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அழைப்பிற்கமைய முல்லைத்தீவிற்கு வருகைத்தந்துள்ளனர்.

அமெரிக்க ஆய்வு குழுவினர், மாவட்டத்தின் மேலதிக செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரி காமினி பிரியந்த ஆகியோருடன் முல்லைத்தீவு கடல் எல்லைக்கு சென்று ஆரம்ப ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.