பிரித்தானியாவில் கடுமையான பனிப்புயல் : சிவப்பு எச்சரிக்கை : 24 பேர் பலி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

 
பிரித்தானியாவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருவதனால் பாரிய அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிப்புயலுடன் காரணமாக கடல் கொந்தளிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 13 மணித்தியாலங்கள் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையினால் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.

1 அடி 8 அங்குலம் வரை பனி பொழியும் நிலை காணப்படுவதனால் பிரித்தானியாவுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லண்டன் ஹீத்ரோவில் 157, Edinburghஇல் 129, லண்டன் Gatwickஇல் 77, லண்டன் நகரில் 67, Bristolஇல் 48 உட்பட லண்டன் மற்றும் ஸ்கொட்லாந்தில் 500க்கும் அதிகமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. Dublinஇல் மேலும் 194 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைப்பு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐந்து வெள்ள எச்சரிக்கைகளை பிரிவுகளை செயல்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் நிலக்கீழ் நீர்வழங்கல் செயற்பாடு முற்றாக தடைப்பட்டுள்ளது. அதிகளவு பனிப்பொழிவு காரணமாக நீர் பனிக்கட்டியாக மாறியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிவரும் ஒரு வார காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பொருட்களின் விலைகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

நேற்று முதல் 750 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பெருமளவான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பனிப்பொழிவுடனான காலநிலை இன்று இன்னும் விரியம் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் மீன் உண்பவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!!

இலங்கை மீனவர்களினால் பிடிக்கப்படும் 40 முதல் 60 வீதம் வரையிலான மீன் வகைகள் உண்பதற்கு பொருத்தமற்றவை என கடல் ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நாரா நிறுவனம் இது தொடர்பிலான ஆய்வுகளை நடத்தியுள்ளது.  இந்த வகை மீன்கள் கருவாட்டுக்கும் பொருத்தமற்றவை எனவும், அவை வெறுமனே அழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இவ்வாறான மீன் வகைகள் பிடிப்பதனை தடுக்கும் வகையில் மீனவர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நவீன படகு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தரமான ஐஸ் மற்றும் நீர் பயன்பாடு, நவீன தொழில்நுட்பத்தில் மீன்களை பிடித்தல், மீன்களை இறக்குமதி செய்வது குறித்த நவீன முறைகளை அறிமுகம் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மொத்த தேசிய உற்பத்தியில் மீன்பிடித்துறையினால் குறைந்தளவு பங்களிப்பே வழங்கப்படுவதாகவும், இந்தப் பங்களிப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

வவுனியாவில் புதையல் தோண்டிய மூவர் கைது : மூவர் தப்பி ஓட்டம்!!

வவுனியவில் நேற்று(01.03.2018) இரவு நெளுக்குளம் பொலிசார் புதையல் தோண்டிய மூவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலும் மூவர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவித்தனர்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் சாம்பல்தோட்டம் பகுதியில் புதையில் தோண்டுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நெளுக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.அத்தநாயக்க தலைமையில் சென்ற குழுவினர் சாம்பல்தோட்டம் மைதானப்பகுதி ஒன்றில் புதையல் தோண்டிய மூவரைக்கைது செய்துள்ளதுடன் மேலும் அங்கிருந்த மூவர் தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஓடிய மூவரையும் பொலிசார் தீவரமாகத் தேடிவருவதாகவும் புதையல் தோண்டுவதற்குப்பயன்படுத்திய மண்வெட்டிகள், அலவாங்கு, பிக்கான் என்பனவற்றையும் கைது செய்யப்பட்டவர்கள் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 23, 32 வயதுடைய இருவரும் நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்தனர்.

வடகொரியாவுக்கு அடுத்து உலகை அச்சுறுத்தும் ரஷ்யா : அமெரிக்காவிற்கு எச்சரிக்கை!!

எதிரி நாடுகளால் வெல்ல முடியாத அணுஆயுதம் தாங்கிய ஆயுதங்களை சோதனை செய்து வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

குறித்த ஏவுகணைகள் எதிரிகளின் ரடார் அமைப்புகளில் சிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தொடர் ஏவுகணை சோதனைகளால் கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரியா அரசு உலக நாடுகளை போர் பயத்தில் அச்சுறுத்தி வந்தது. ஐ.நா உள்ளிட்ட உலக நாடுகள் பல வடகொரியாவுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது ரஷ்யா உலக நாடுகளால் வெல்லவே முடியாத அணுஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மட்டுமின்றி எதிர்கால ரஷ்ய ராணுவ சக்தி தொடர்பில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி புடின், யுத்தங்களை தூண்டும் வகையில் அமெரிக்கா செயல்படுவதை இனி பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவ தொழில்நுட்பத்தால் கண்டறிய முடியாத ஆயுதங்களை ரஷ்யா வடிவமைத்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தங்களது நட்பு நாடுகள் மீது தொடுக்கப்பட்டும் எந்த ஒரு அணுஆயுத தாக்குதலுக்கும் உடனடியாக ரஷ்யா பதில் தாக்குதல் தொடுக்கும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் நேரடியாகவே அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவை நேருக்கு நேர் எதிர்கொள்ள அதிக நிதி தேவை என பிரித்தானிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள அதே நாள், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கை தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் போன மூதாட்டி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு!!

நானுஓயா – ஈஸ்டல் தோட்ட காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை நேற்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்று காணாமல் போயிருந்த நிலையில் மூதாட்டியின் உறவினர்கள் நனுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரதே பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்து முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு தம்பதி!!

தமிழ்நாடு, நாகப்பட்டினத்தில் வெளிநாட்டு காதலர்கள், இந்து முறைப்படி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

பின்லாந்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஜுகா, வயது 42, மலேஷியாவைச் சேர்ந்த பெண், வோங்வெய்கிட், வயது 40. இவரும், யோகா கற்றுக் கொள்வதற்காக, மத்திய பிரதேச மாநிலம், ஜெபல்பூருக்கு வந்திருந்தனர்.

அப்போது, காதல் வயப்பட்டனர். இந்து கலாசாரத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக, இந்து முறைப்படி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள சித்தர்புரத்தில் உள்ள சித்தர் பீடத்துக்கு, நேற்று வந்த வெளிநாட்டு காதலர்கள், சித்தர்களை வழிபட்டனர். பின், கோபூஜை மற்றும் முதியவர்களுக்கு பாத பூஜை செய்தனர்.

தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்திய இசையுடன், அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டனர். வாழ்த்தியவர்களிடம் ஆசி பெற்றதுடன், அனைவருக்கும் விருந்தளித்து உபசரித்தனர்.

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட தனுஷ்!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் ரிலீசில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருக்கின்றார்.

இந்த படத்தின் டீசர் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் ரீலீஸில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ‘காலா’ டீசர் மார்ச் 2 ஆம் திகதி வெளியாகும் என்று நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘காலா’ டீசரை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடம், டீசர் தள்ளிவைப்புக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

`கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பா,இரஞ்சித் மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம், வருகிற ஏப்ரல் 27 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேய்க்குப் பயந்து பெண்கள் போல் உடையணியும் ஆண்கள் : தாய்லாந்தில் விநோதம்!!

 
தாய்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்கள் பேய்க்குப் பயந்து இரவு வேளையில் பெண்களைப் போன்று உடை அணியும் விநோத நடைமுறையைக் கையாண்டு வருகின்றனர்.

அந்த கிராமத்தில் அடுத்தடுத்து 5 இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கணவனை இழந்த பெண் ஒருவரின் ஆத்மா அவர்களைக் கொன்றுவிட்டதாக கிராமத்தார் நம்புகின்றனர்.

அதனால் வீட்டில் உள்ள ஆண்களை இரவில் பெண்கள் போல் உடை அணிந்து தூங்குமாறு உறவினர்கள் வற்புறுத்துகின்றனர்.

வீட்டு வாசலில் ‘இங்கு ஆண்கள் இல்லை’ எனவும் எழுதி வைக்கின்றனர். சிலர் தமது வீட்டு வாசல்களில் விநோத பொம்மை உருவங்களையும் வைத்து, பாதுகாப்புப் பெற முயல்கின்றனர்.

இதனைப் பார்த்துவிட்டு அங்கு ஆண்கள் இல்லை என நினைத்து பேய்கள் திரும்பிச் சென்றுவிடும் என கிராம மக்கள் நம்புகின்றனர். விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்திலும் சிலர் இவ்வாறான மூட நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர்.

சிரியா போரின் பின்னணியில் யார் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

சிரியா அரசிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போர் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. சிரியா அரசிற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் பின்னணியில் ஆதரவாக பல நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சிரியா அரசிற்கு பின்னணியில் வடகொரியா செயல்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி கடந்த இரண்டு வருடமாக சிரியாவின் பின்னணியில் வடகொரியா மறைமுகமாக செயல்பட்டு வந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2012 போர் துவங்கியதில் இருந்து சிரியா அரசுடன் வடகொரியா அதிபர் நட்பு பாராட்டி வருகிறாராம். மேலும், வடகொரியா சிரிய அரசிற்கு இரசாயன குண்டுகளை மறைமுகமாக வழங்கி வந்துள்ளது. இதுவரை 12 கப்பல்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

சிரியாவில் நடந்து வரும் இராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800க்கும் அதிமான மக்கள் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

சிரியாவின் பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையானவையா?

 
தற்போது சிரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை’, ‘ஊடகங்கள் சிரியாவில் பாதிக்கப்படுபவர்களை புறக்கணிக்கின்றன’ , ‘சிரியாவில் மிகப்பெருமளவிலான கொலை நடந்திருக்கிறது’ போன்ற தலைப்புகளுடன் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் பரவிவருகின்றன. இவை உண்மைதானா என்பது குறித்த பிபிசியின் ஆய்வு இது.

சிரியாவில் நிலைமை மோசமாக இருப்பது உண்மையான கூற்று. குறிப்பாக கிழக்கு கூட்டாவில். எனினும் இந்த செய்திகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல புகைப்படங்கள் சமீபமாக சிரியாவில் உள்ள சச்சரவுகளோடு தொடர்பில்லாததாக உள்ளன.

பலர் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இவை சிரியாவில் தற்போது எடுக்கப்பட்டவை என சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்கள். ஆனால் அவற்றுக்கும் கடந்த வாரம் சிரியாவில் நடந்த சிரிய அரசுப் படைகளின் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லாததாக உள்ளன.

இது மே 27, 2003ஆம் ஆண்டில், இராக்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். மார்கோ டி லாரோ என்ற புகைப்படக் கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பள்ளியில், வெகுஜன கல்லறைகளில் காணப்பட்ட உடல்களை அடையாளம் காட்டுவதற்காக வைத்திருந்தனர். அல் முசய்யப் நகரில் ஒரு பாலைவனத்தில் இவை காணப்பட்டன என்று புகைப்படக்காரர் குறிப்பிட்டார்.

தெற்கு பாக்தாத்தில் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஈராக்கியர்கள் காணாமல் போனதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1991 வளைகுடா போரைத் தொடர்ந்து ஷியா முஸ்லீம்களை சதாம் அரசு நசுக்கித்தள்ளியபோது தங்களது குடும்பத்தில் காணாமல் போன அண்ணன், தங்கை, அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை தேடிக் கொண்டிருந்தவர்கள் இந்த எலும்புகூடு உடல்களில் தங்களின் சொந்தங்களை அடையாளம் காணமுடியுமா எனவும் தேடிப் பார்த்தனர்.

இந்த புகைப்படம் சமீபத்தில் சிரியாவின் கூட்டாவில் நடந்த தாக்குதலில் இறந்த குழந்தைகளின் படங்கள் என சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த புகைப்படம் ஆகஸ்ட் 21, 2013ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்டதாகும்.

ஷாம் நியூஸ் நெட்வொர்க்கைச் சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் இதனை எடுத்துள்ளார். எதிராளியின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டா பகுதியில் சிரிய அரசு இரண்டு ரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியதில் பலர் இறந்தனர். எனினும் சிரியா அரசு இந்த ரசாயன தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்திருந்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த இறந்த உடல்களை பார்வையிட்டது. மேலும் இது குறித்து விரிவான அலசலையும் வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி முனையில் இருக்கும் ஒரு குழந்தையின் இந்த புகைப்படம் தற்போது வேகமாக பரவிவருகிறது. இதுதான் சிரியாவில் உள்ள தற்போதைய நிலைமைக்கு சான்று என்ற தலைப்புடன் இந்த புகைப்படம் வலம்வருகிறது.

இந்த புகைப்படத்துக்கும் தற்போதைய சிரிய தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை. ஏப்ரல் 2014 இல் இப்புகைப்படம் வெளியிடப்பட்டது. சிரியாவில் பஷர் அல் அசாத்தின் அரசுக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்குழுவான சுதந்திர சிரியா ராணுவத்துக்கு ஆதரவான ஒரு நபர் இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக டெய்லி மெயில் ஏப்ரல் 21,2014 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் இந்த புகைப்படம் உண்மையானதாகவோ அல்லது பிரசார யுக்திக்காக பயன்படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம் என அந்த தளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் புகைப்படம் தற்போதைய சிரியா தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்பு பணியினர் மீட்டுக்கொண்டிருப்பதற்கான ஆதாரம் என சமூக ஊடகங்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இது 2016 நவம்பரில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். சிரியாவில் அலெப்போ நகரில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அமீர் அல்ஹால்பே என்ற புகைப்படவியலாளர் இதனை எடுத்தாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது 2016-இல் கட்டட இடிபாட்டில் சிக்கியுள்ள ஒரு குழந்தையை மீட்கும் புகைப்படம் இது.

சமீபத்திய சிரியா தாக்குதலில் கடுமையாக காயமடைந்த ஒரு சிறுவனின் புகைப்படம் இது எனும் தலைப்புடன் வட்ஸ் அப் முதலான சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. ஆனால் இது அக்டோபர் 4,2012 -இல் எடுக்கப்பட்டது.

தி டெலிகிராப் இணையதளம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அக்டோபர் மூன்றாம் திகதி அலெப்போ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒரு குழந்தையின் புகைப்படம் இது.

சிரியா தொடர்பாக மட்டுமல்ல வேறு பல விடயங்களில் பல போலியான புகைப்படங்கள் வலம் வருகின்றன. அவற்றை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு முன் அது குறித்து இணையத்தில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி அதன் உண்மை தன்மையை அறிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதை மறக்கவேண்டாம்.

– BBC – Tamil-

பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை : கடுமையான பனிப்பொழிவால் பரிதவிக்கும் மக்கள்!!

பிரித்தானியாவில் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தபடி எம்மா புயலின் காரணமாக பனிப்பொழிவும், கடுங்காற்றும் தொடங்கும் நேரலை வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இளவேனிற்காலம் தொடங்கும் நாளாகிய இன்று சாலைகளெங்கும் பனிபடர்ந்து காணப்படுவதால் வாகனங்கள் நகர முடியாமல் தவிக்கின்றன, உதவிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

கடும் வேகத்துடன் குளிர்காற்றும், கனத்த பனிப்பொழிவும் ஏற்பட இருப்பதால் மத்திய ஸ்கொ ட்லாந்து, வேல்ஸ் மற்றும் தென் மேற்கு பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கையும் பிற பாகங்களில் Amber அல்லது மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கொ ட்லாந்து பகுதியில் M80 நெடுஞ்சாலையில் நேற்றிரவு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் பனியில் சிக்கியுள்ளன, சில பகுதிகளில் சாலை மூடப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக பிரித்தானியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வீதிகளிலும், மரங்களிலும் எட்டு சென்றி மீற்றர் அளவில் பனிபடர்ந்துள்ளது, ஆறுகளில் மெல்லிய அடுக்கும் உருவாகியுள்ளது. பார்ப்பதற்காக அழகாக காட்சியளித்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

நான் உங்களுக்காகத் தான் காத்திருந்தேன் : உருக்கத்துடன் கூறிய சிரிய சிறுமி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சிரியாவில் போரினால் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி ஒருவர், தன்னை மீட்க வந்த நபரிடம் உங்களுக்காக தான் காத்திருக்கிறேன் என உருக்கமாக கூறினாராம்.

சிரியாவில், வான்வழித் தாக்குதலினால் தரைமட்டமான கட்டிடத்தில் சிக்கிய மக்களை, ‘The White Helmets’ என்ற தன்னார்வ அமைப்பினர், கடந்த ஐந்து ஆண்டுகளாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜேம்ஸ் லி மெசுரியர் என்பவர் நிறுவிய இந்த தன்னார்வ அமைப்பில், சுமார் 3000 பேர் உள்ளனர். இவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கும் பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், போர்க்களத்தில் தாங்கள் சந்திக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களை, தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த அமைப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.

அதில், மக்மூத் ஆதாம் எனும் தன்னார்வலர் தனது பதிவில் கூறுகையில், ‘சிரியாவின் கவுட்டா நகரில், வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, என் கைக்கு சிறுமி ஒருவர் தென்பட்டார். அவரைச் சுற்றியிருந்த கற்களையும் அகற்றி, அவரை தூக்கும்போது நான் உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன் என்று அந்த சிறுமி கூறினார்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், White Helmets அமைப்பைச் சேர்ந்த மக்மூத் அல்கிலானி, கவுட்டா நகரில் மீட்புப் பணிகளின் போது பலியாகியுள்ளார். அவருக்கு இந்த அமைப்பினர் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவி எனக்கு தங்கை முறை : கமல்ஹாசன்!!

நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கட்டுரையில், நடிகை ஸ்ரீதேவி தனக்கு தங்கை முறை என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை துவங்கினார். ஆனால் கொள்கை குறித்து அறிவிக்காததால், விமர்சனங்கள் பல எழுந்தன.

இந்நிலையில், வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன், அதில் தனது கட்சி குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘மக்கள் நலம், தமிழகத்தின் வளம் என்ற கொள்கையில் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் கூடலாம்.

விவசாய மேம்பாடு, கல்வி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்ற கொள்கையை நோக்கி ஏகப்பட்ட திட்டங்கள் கைவசம் உள்ளன.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே இருந்த முறையால், மருத்துவத்தில் தமிழகம் உயரிய தரத்தை அடைந்துள்ளதால், நீட் தேர்வுக்கு ஆதரவளிக்க தேவையில்லை.

பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மாஃபியா கும்பல் உருவாகும். குடிப்பவர்கள் குடிப்பதை குறைக்க முடியுமே தவிர, ஒட்டு மொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமே’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு பதிவில், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனக்கு தங்கை முறை என்றும், இனி சினிமாவில் மார்க்கெட் கெட்டுப் போகாது என்பதால், இந்த உண்மையை தாம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக மரணம்!!

 
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை தெற்கு மடக்கும்புர தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 6.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் மரக்கறி விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு மிருகங்களிடம் இருந்து பயிரை பாதுகாக்கவென குறித்த நபரால் சட்டவிரோதமாக
போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டகொடை தெற்கு மடக்கும்புர பகுதியை சேர்ந்த ராமன் கிட்ணசாமி என்ற 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியாவில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்!!

சிரியாவில் போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் உடலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஐநா அனுப்பிய குழுவை சேர்ந்தவர்கள் இந்த செயலை செய்துள்ளார்கள்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் இராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 11 நாட்களில் மட்டும் இதுவரை 900 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

தற்போது அங்கு தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் ஐநா அனுப்பி இருக்கும் உதவிக் குழு அங்கே சென்று உதவிகள் செய்யும்.

மருத்துவ குழு, உணவு குழு என நிறைய உதவி குழுக்கள் ஐநா மூலம் அங்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன்படி சிரியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் போது இந்த கொடுமை நடக்கிறது. அவர்களிடம் உடலுறவு கொண்டால் மட்டுமே, மருத்துவ உதவி உணவு கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஐநா மூலம் சென்ற பல அதிகாரிகள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் உதவிகள் கொடுக்கப்படும் இடத்திற்கு பெண்கள் செல்வது இல்லை.
அங்கு சென்று உதவிகளை பெற்று திரும்பினால், உடலுறவு வைத்துக் கொண்டதாக நினைப்பார்கள் என்று செல்வதை தவிர்க்கிறார்கள். இதன் காரணமாகவே பலர் இன்னும் மருத்துவ உதவியும், உணவும் பெறாமல் இருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் அங்கு வந்து இருக்கும் உதவிப்படை அதிகாரிகள், சில பெண்களை திருமணமும் செய்கிறார்கள். ஆனால் இது தற்காலிக திருமணம் மட்டுமே.

அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவிகள் கிடைக்க வேண்டும் என்றால் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேலும் அங்கு வரும் இந்த உதவி செய்யும் பணியாளர்கள் பெண்களை பைக், காரில் வைத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். பல நாட்களை தங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் வீட்டில் அந்த பெண்களை வேலை செய்ய வைக்கிறார்கள். அதேபோல் பாலியல் விருப்பத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஐநா அனுப்பி இருக்கும் உதவிக்குழுவில் உள்ள ஆண்கள்தான் இந்த செயலை செய்வது. ஆனால் ஐநா அமைப்பு இதை மறுத்துள்ளது.

ஐநாவுடன் ஒப்பந்தம் செய்து இருக்கும் குழுக்களை சேர்ந்த ஆண்கள் அவர்கள் என்று விளக்கம் அளித்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த பிரச்சினை 2015ல் இருந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடலுறவு செய்தால்தான் உணவு என்று அப்போதே உதவிக்குழு பணியாளர்கள் பெண்களை வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் பட்டினியில் கிடந்தும் இருக்கிறார்கள்.

– One India-

வவுனியா நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர் சங்கத் தலைவருக்கு வரவேற்பு!!

 
வவுனியா நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கத்திற்கு இன்று(01.03.2018) காலை வவுனியா வர்த்தக சங்கத்தில் வர்த்தகப் பிரமுகர்களினால் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபைக்கு 6ஆம் வட்டாரத் தொகுதியில் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர் சங்கத் தலைவர் விடுமுறையில் சென்ற ரி.கே..இராஜலிங்கத்திற்கு இன்று காலை 10.30 மணியளவில் வர்த்தகர் சங்கத்தில் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வரவேற்பு அளிக்கப்பட்டு வர்த்தகர் சங்கத்தலைவர் பதவியை விடுமுறையில் சென்றதை இன்று அதிகாரபூர்வமாக வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்
.
இந்நிகழ்வில் வர்த்தக சங்க செயலாளர், பொருளாலர், உட்பட வர்த்தகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.