என் தம்பியின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீதேவி : பார்வையற்ற நபர் கண்ணீர்!!

ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்து பார்வையற்ற ரசிகர் ஒருவர் கடந்த 2 நாட்களாக அவர் வீட்டு வாசலில் காத்திருந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பைக்கு கொண்டுவரப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது .

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜதின் வால்மிகி என்கிற பார்வையற்ற ரசிகர் கடந்த 2 நாட்களாக ஸ்ரீதேவி வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், என் சகோதரருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டபோது அறுவை சிகிச்சை செய்ய ஸ்ரீதேவி ரூ. 1 லட்சம் எனக்கு கொடுத்ததுடன், கட்டணத்தில் ரூ. 1 லட்சம் குறைக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினார் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் : ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் உடல் தகனம்!!

 
நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

உறவினரின் திருமண நிகழ்வுக்காக டுபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார்.

இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் தமது கவலையையும், அனுதாபங்களையும் வெளியிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி ஹோட்டல் குளியலறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார் என அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நேற்றிரவு தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.

இவரது உடலுக்கு ரசிகர்கள், நடிகை நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முழுவதும் வெள்ளைநிற சம்பங்கி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலம் அந்தேரியிலிருந்து 7 கி.மீ. தூரம் கொண்ட வில்லே பார்லே பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

வெளியிலிருந்து யாரும் ஸ்ரீதேவியின் உடலை பார்க்க முடியாத அளவுக்கு வாகனத்தில் உடல் வைக்கப்பட்டது. ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் என அனைவரதும் கண்ணீர் கடலிலுக்கு மத்தியில் இன்றுடன் இப் பூவுலகிலிருந்து ஸ்ரீதேவி விடைபெற்றுச் சென்றார்.

மகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!!

ஹோமாகமை விமான வீதி பகுதியில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

43 வயதான நபரும் அவரது 3 வயதான பெண் பிள்ளையுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். பெண் பிள்ளை மாற்றுத்திறனாளி என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த போது, பிள்ளையின் தாயும் மூத்த மகளும் வீட்டில் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

விஷம் அருந்தியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. மகளின் உடல்நிலைமை குறித்து தந்தை மனக்கவலையில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களிடம் உதவி கோரும் மூன்று பெண் குழந்தைகளின் தமிழ் பெற்றோர்!!

 
ஹட்டன், திம்புல பொலிஸ் பிரிவில் கிறிஸ்டஸ்பார்ம் தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களான தம்பதிக்கு ஒரே நேரத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளை வளர்க்க பெற்றோர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இந்த மூன்று குழந்தைகள் கடந்த மாதம் 29 ஆம் திகதி டிக்கோயா வைத்தியசாலையில் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் பிறந்தன.

குழந்தைகளின் எடை குறைவாக இருந்ததால், அவை பேராதனை, கம்பளை, அவிசாவளை ஆரம்ப வைத்தியசாலைகளின் சிறுவர் பிரிவுகளில் இன்கியூபேட்டர் இயந்திரங்களில் சில தினங்கள் வைக்கப்பட்டு, பின்னர் மருத்துவர்களால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குழந்தைகளின் பெற்றொரான 39 வயதான சரோஜாதேவி மற்றும் 49 வயதான வீரன் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு பாடசாலை செல்லும் 12 மற்றும் 11 வயதான பெண் பிள்ளைகள் உள்ளன.

இந்த பிள்ளைகள் ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர். வீரன் கிருஷ்ணகுமார் கொழும்பில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

தாய், தேயிலை கொழுந்து பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுடன் கிருஷ்ணகுமாரின் தாயும் தந்தையும் வசித்து வருகின்றனர். கிருஷ்ணகுமார் சம்பாதிக்கும் பணத்திலேயே குடும்பத்தினர் அனைவரும் வாழ்ந்து வருகின்றனர்.

பிறந்துள்ள குழந்தைகளுக்கு பாலூட்டும் அளவுக்கு தேவையான அளவு பால் தனது மனைவியிடம் இல்லை எனவும் மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய தாய் பாலுக்கு மேலதிகமாக பால் மாவை வழங்க வேண்டியுள்ளது எனவும் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

பால் மாவை கொள்வனவு செய்ய பெரும் தொகை பணம் செலவாவதாகவும் கடும் பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் வாழும் தமக்கு இது பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும் கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

எவ்வளவு பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும் தமக்கு பிறந்த குழந்தைகளை சிறப்பாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் துர்நாற்றம் வீசும் கொல்களம்!!

வவுனியா யாழ். வீதியில் அமைந்துள்ள கொல்களம் எனப்படும் மாடு வெட்டும் இடம் அண்மைக்காலமாக துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா, யாழ். வீதி, சோயா ஒழுங்கைப் பகுதியில் நகரசபைக்கு சொந்தமான இக் கொல்களமானது 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இக் கொல்களம் அமைக்கப்படும் போது இப்பகுதியில் குறைந்தளவிலான மக்கள் வாழ்ந்து வந்தபோதிலும் தற்போது அதிகளவான சனத்தொகை கொண்ட இடமாக இப்பகுதி உள்ளது.

இந்நிலையில், குறித்த கொல்களமானது வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் உள்ள நிலையில் அண்மைக்காலமாக துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு சீரான பராமரிப்பு இன்மை, அதிகளவான மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதே காரணம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கொல்களத்தில் இருந்தே கொழும்பு போன்ற பகுதிக்கும் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதனால் இவ்வாறான நிலை காணப்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தாம் இது தொடர்பாக நகரசபையினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவித்த போதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமையினால் இப்பகுதி மக்கள் சுவாசநோய்க்கு உள்ளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

உயிருடன் கரையொதுங்கிய சிறிய டொல்பின் மீன்!!

மட்டக்களப்பு – களுதாவளைக் கடற்கரையில் சிறிய டொல்பின் மீன் ஒன்று உயிருடன் கரையொதுங்கியுள்ளது.

குறித்த மீன் இன்று காலை வேளையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த டொல்பின் மீனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அந்த மீனை மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த மாணவன் தற்கொலை : பொலிஸாருக்கு கிடைத்த முக்கிய தடயம்!!

வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய தடயம் ஒன்று கிடைத்துள்ளது.

குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையிலிருந்து அம்மாணவனால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

“கல்விச் செயற்பாட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.தடவியல் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் 26 வயதான மாணவன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர்மடம் பிரதேசத்தில் அமைந்துள்ள அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்தே அவரது சடலத்தை பொலிஸார் மீட்டிருந்தனர்.

இதேவேளை “தனது சகோதரர் கடந்த காலங்களாக பரீட்சை தொடர்பில் கடும் அழுதத்தில் காணப்பட்டார்” என குறித்த மாணவனின் மூத்த சகோதரர் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இளைஞர் ஒருவர் உலக சாதனை முயற்சியில்!!(வீடியோ)

 

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியளாலருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞனே உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மின்சார பொருளான பிளக் ‘பொய்ன்ற்’ (‘நீள் மின் இணைப்பு பொருத்தி’) தயாரிப்பில் உலகில் அதிக நீளமான ‘மின் இணைப்பு பொருத்தி’ (பிளக் பொய்ன்ற்) தயாரித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந் நிகழ்வானது வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று (28.02.2018) நடைபெற்றது.

அந்த வகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை க. கணேஸ்வரன் தயாரித்து உலக சாதனைக்காக முயற்சித்துள்ளார்.

இவ்விளைஞனின் உலக சாதனை முயற்சியை நில அளவை திணைக்களத்தினை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியிலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு பரிசோதித்ததுடன் க.கணேஸ்வரனின் உலக சாதனை முயற்சி சம்பந்தமான அறிக்கையை கின்னஸ் சாதனை சான்றிதழுக்காக அனுப்பி வைக்கவுள்ளனர்.

அத்துடன் இயந்திரவியல் பொறியியலாளரான க.கணேஸ்வரன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமையும், சிறியளவிலான ஏவுகணைகளை தயாரித்து உள்ளார்.

எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த க.கணேஸ்வரன் உலகசாதனை படைப்பதற்கு பணம் தேவையில்லை முயற்சியே தேவையெனத் தெரிவித்ததுடன் தனது இலட்சியம் இலங்கையிலிருந்து 2028 ஆம் ஆண்டு ‘தமிழ்’ என்ற ஏவுகணை இலங்கையின் முதலாவது செய்மதியான ‘காங்கேயனை’ காவிச் செல்லும் இதுவே எனது இலட்சியமாக இருக்கிறது என தெரிவித்தார்.

வவுனியா குருமன்காட்டு சந்தியில் ரயிலில் மோதுண்டு பெண் தற்கொலை முயற்சி!!(காணொளி)

வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகேயுள்ள புகையிரதக் கடவையில் இன்று (28.02.2018) மதியம் 12.30 மணியளவில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிங்கள பிரதேச சபைக்கு அருகேயுள்ள புகையிரதக் கடவைக்கு அருகே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் புகையிரத கடவைக்கு அருகே நீண்ட நேரமாக நின்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் பணிபுரிந்த கடவைக்காப்பாளர் ஏன் இவ்விடத்தில் நிற்கின்றீர்கள் என வினவிய போது ஒருவருக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் புகையிரத்தில் சத்தம் கேட்டவுடன் புகையிரதக் கடவைக்கு அருகே நடந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த கடவைக் காப்பாளர் புகையிரம் வருகின்றது செல்ல வேண்டாமென தெரிவித்துள்ளார். எனினும் அவரின் பேச்சினை சேவிமடுக்காது புகையிரதக் கடவையில் தலையினை வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த ரயில் கட்டுப்பாட்டாளர் ரயிலினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் குறித்த பெண் மீது ரயில் மோதுண்டது என சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

3வது மாடியில் இருந்து பெற்ற பிள்ளையை வீசி எறிந்த தாயார் : அதிர்ச்சிக் காரணம்!!

சீனாவில் முன்னாள் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரம் கொண்ட பெண் ஒருவர் தமது மகனை 3வது மாடியில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார்

30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான். இதனையடுத்து குறித்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருக்கும் ஷாங் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் தமது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்த நிலையில் தங்களது 2 மகன்களையும் யார் கவனித்துக் கொள்வது என்ற விவாதம் இருவருக்கும் இடையே எழுந்துள்ளது.

தொலைபேசி வழியாக நடந்த இந்த விவாதத்தில் இருவரும் காரசாரமாக தங்கள் பக்க கருத்துகளை முன்வைத்துள்ளனர். இதில் 6 வயது மகனை தமது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாக தாயாரும், 4 வயது மகனை தந்தையும் வளர்ப்பதாக முடிவானது.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த ஷாங், 4 வயது மகனை விட்டுத்தர முடியாது என வாதிட்டுள்ளார். இந்த நிலையிலேயே தங்கியிருந்த ஹொட்டல் அறையில் இருந்து குறித்த சிறுவனை அவர் தூக்கி வெளியே வீசியுள்ளார்.

தாயாரின் சடலத்தை 30 ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாத்த மகள் : அதிர்ச்சி காரணம்!!

 
உக்ரைனில் தாயாரின் சடலத்துடன் பெண் ஒருவர் 30 ஆண்டுகள் வாழ்ந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இச்சம்பவம் வெளியாகியுள்ளது.

அந்த சடலத்தை வெள்ளை உடை அணிவித்து தலை அருகே மத வழிபாட்டுக்கான பொருட்களையும் வைத்திருந்துள்ளனர்.
மட்டுமின்றி சடலம் கண்டெடுக்கப்பட்ட அறையானது குப்பைகள் குவிந்தும் அருவருப்பாகவும் காணப்பட்டுள்ளது.

தற்போது 77 வயதாகும் குறித்த பெண்மணி, 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த தமது தாயாரின் உடலை பாதுகாத்து வந்துள்ளார்.

இரண்டு கால்களும் சுவாதீனம் இழந்த அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில் அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொலிசார் வந்து குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்வையிட்டபோது, குறித்த பெண்மணி நடக்க முடியாமல் தவித்து வந்துள்ளது தெரிய வந்தது.

குறித்த பெண் தமது வீட்டின் கதவுகளை எப்போதும் திறந்ததில்லை எனவும், அக்கம்பக்கத்தினர் எவருடனும் பேசியதில்லை எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பை வந்தடைந்த ஸ்ரீதேவியின் உடல் : இன்று தகனம்!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுடன் தனி விமானம் துபாயில் இருந்து புறப்பட்டு மும்பையை வந்தடைந்துள்ளது.

துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார்.

அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது சனிக்கிழமையன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

துபாயில் உள்ள ரிஷி மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த அறிக்கையை நேற்று முன்தினம் கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டது.

அதில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் அவரது இரத்தத்தில் மதுபானம் இருந்ததாகவும் அறிக்கையில் இருந்தது.

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு தவறுதலாக பாத் டப்பில் விழுந்து மரணமடைந்தார் என்றும், அவரது இரத்த மாதிரியில் அல்கஹால் இருந்ததும் தடவியல் சோதனையில் தெரிய வந்துள்ளதாக கலீச் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, அவரது உடல் இந்தியா கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்பட அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் துபாய் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் அவரது உடலை மும்பை கொண்டு செல்வதில் தாமதமானது. துபாய் பொலிசாரிடம் இருந்து இந்த வழக்கு பொது வழக்கறிஞருக்கு மாற்றப்பட்டது. நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.

போனி கபூரின் வாக்குமூலம், தடயவியல் பரிசோதனை அறிக்கையை வழக்கறிஞர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித குற்றவியல் நோக்கமும் இல்லை என்று பொலிசார் தகவல் வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்திய தூதரகத்தின் முறையான ஆவணங்களைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் காவல்துறை அனுமதியளித்துள்ளது.

இதனையடுத்து ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக துபாய் பொலிசாரின் விசாரணை முடிவுக்கு வந்தது. ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைக்கும் அனுமதி சான்றிதழை அவரது குடும்பத்தாரிடம் துபாய் காவல்துறையினர் கொடுத்தனர்.

அனுமதி சான்றிதழ் கிடைத்த நிலையில் ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்த எடுத்துச் சென்றனர். இந்த நடைமுறை முடிந்தவுடன் போனிகபூரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
ஸ்ரீதேவியின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வருவதற்காக கடந்த 4 நாட்களாக துபாய் விமான நிலையத்தில் 13 பேர் பயணிக்க கூடிய அனில் அம்பானியின் விமானம் தயார் நிலையில் இருந்தது.

அனைத்து பிரச்சினைகளும் ஒருவழியாக முடிவுக்கு வந்ததை அடுத்து எம்பாமிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் விமானத்தில் ஏற்பட்டது. தனி விமானம் துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடலுடன் இந்தியா புறப்பட்டது.

மும்பைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்றய தினம், திரை உலக பிரபலங்கள், ஸ்ரீதேவியின் ரசிகர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

இதன் பின்னர் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மும்பையில் உடல் தகனம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறைக்குள் ஒருவர் அடித்துக் கொலை : குற்றவாளிக்கு மரணதண்டனை!!

பொலிஸ் தடுப்புக் கூண்டுக்குள் சந்தேக நபர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காலி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காலி உடுகம பிரதேசத்தில் கள்ளச் சாராயம் திருட்டுப் போன சம்பவம் காரணமாக இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரையும் பொலிசார் தலையிட்டு சமாதானப்படுத்தியுள்ளனர்.

எனினும் பொலிஸ் நிலையத்துக்கு எதிரிலேயே இருதரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதன் காரணமாக ,பொலிசார் இருதரப்பில் இருந்தும் ஒவ்வொருவரை கைது செய்து தடுப்புக் கூண்டுக்குள் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தடுப்புக் கூண்டுக்குள் அடைபட்ட இருவரும் சண்டையிட்டு ஒருவர் மற்றொருவரை தடியொன்றினால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளிக்கு நேற்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை : 22 வயதான இளைஞர் கைது!!

இலங்கைப் பணிப்பெண் ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக 22 வயதான இளைஞர் ஒருவரை எகிப்த் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

54 வயதான இலங்கை நாட்டு பணிப் பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் சாரதி தொழில் செய்து வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடந்தும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “படுகொலை செய்யப்பட்ட பெண்ணும், கைது செய்யப்பட்ட இளைஞரும் ஒரே வீட்டில் பணியாற்றி வந்துள்ளனர். இதன் போது இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் இலங்கைக்கு வந்து திருமணம் செய்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளனர். இதற்காக இலங்கை பெண் வீட்டாரிடம் சம்மதம் கேட்ட போதும், அதற்கு வீட்டார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண்ணை அந்த இளைஞர் வெறுக்க ஆரம்பித்துள்ளதுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதற்கும் தீர்மானித்துள்ளார்.

எனினும் குறித்த இலங்கைப் பெண் அவரை தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே, குறித்த இலங்கை பணிப் பெண்னை கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 22 வயதான இளைஞர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மர்மமாக சுற்றித்திருந்த நபர்கள்!!

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் சுற்றி திரிந்த குற்றச்சாட்டில் 16 பேர் நேற்று கைது செய்யயப்பட்டுள்ளனர்.

காரணமின்றி அந்த பகுதியில் சுற்றத்திரிந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 16 பேருக்கு 24,000 ரூபாய் அபராதம் விதிக்க மினுவங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவரிடம் 1500 ரூபாய் என்ற கணக்கிலேயே அபராத தொகை அறவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நபர்கள் பல்வேறு சட்டவிரோதமான செயற்பாடுகள் மேற்கொள்ளும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் சுற்றித் திரிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் : கொஞ்சம் சிரியுங்கள்!!

சீருடன் வாழ சிரியுங்கள் என்பது முதியோர் வாக்கு. ‘நீங்கள் சிரிக்கும் பொழுது உலகமே உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், எப்பொழுதும் அழுது கொண்டிருந்தால் தனியாகவே நீங்கள் அழ வேண்டும்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு ,உடை, உரையுள் என்பன எவ்வாறு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத காரணிகளாக அமைகின்றனவோ அதேபோன்று சிரிப்பும் மனித வாழ்க்கைக்கு தேவையான ஒரு காரணியாகவே அமைகின்றது.

”கவலைப்படுதலே கடுநரகு, அம்மா கவலையற்றிருத்தலே முக்தி” என்று பாரதி கூறியுள்ளார். நாம் சிரிப்பை மறந்து கவலைப்படும் போது எங்களை அறியாமலே எங்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றது.

கவலையால் தோன்றும் நோய்கள்

நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும்
பலத்தை இழக்கச் செய்யும்
பலவகை ஏக்கங்களை உண்டாக்கும்
மூளைக்கோளாறு
இரத்த அழுத்தம்
இருதய நோய்

சிரிப்பை மறந்து கவலைப்படும் இவை போன்ற பலவகை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.

கவலைக்கு மருந்து

கவலைக்கு மறுந்து சிரிப்பு ஆகும், எனவே கவலை அதிகமாக இருந்தால் மிகுதியாக சிரிக்க முற்படுவது நல்லது. எல்லா இடையூறுகளையும் போக்கச் சிரிப்பு பெரும் அளவில் உதவி செய்யும்.

கவலைப் படுவது தேவையற்றது கவலைப்படுவதால் கவலைகள் மனிதனை விட்டு ஓடிப்போதில்லை, கவலைகளை மறக்க முயல வேண்டும்.கவலைகளை மறக்க பிடித்தமான வேலைகளில் ஈடுபடலாம்,மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் .

நம்மிடம் நிலையாகக் குடியேறிவிட்ட துன்பங்களை எதிர்க்காமல், அவைகளை ஏற்றுக் கொண்டு, அவைகளினால் உண்டாகும் அசௌகரியங்களுக்கு பழக்கப்பட்டு அந்த துன்பங்களைப் பற்றிய நினைவுகளே எழாத மனநிலையை வளர்த்துக் கொள்வது தான் சிறந்தது.

சிரிப்பினால் ஏற்படும் நன்மைகள்

மனிதனுக்கு சிரிப்பும்,நகைச்சுவையும் இயல்பானது, சிரிப்பு அதிக விறைப்பை உண்டு பண்ணுகின்றது. உணர்ச்சிகளை தன் வசப்படுத்தி அகற்றுகிறது. அதனால் உடற் கிரியைகள் அமைதியுடன் நடைபெறுகின்றன.

நன்றாக சிரிப்பதால் வயிறு, மார்பு போன்ற இடங்களில் உள்ள தசைகளுக்கு நல்ல ஓய்வு கிடைக்கின்றன.எனவே மூச்சுவாங்குவது எளிதாகின்றது,மூச்சு முறையாகவும் கட்டுப்பாட்டுடனும் இயங்குகிறது.

நன்றாக சிரிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வர், உண்மையான சிரிப்பு, பயம், வேண்டாத கனவுகள் போன்றவற்றை போக்கும்.

சிரிப்பு தனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நன்மை தரும், சிரிப்பைக் கொடுப்பவனுக்கும் பெருமை, வாங்குபவனுக்கும் பெருமை, பார்க்கின்றவர்களுக்கும் பெருமை, சிரிப்பு மனித குல ஒற்றுமைக்கு உதவுகிறது.

சிரிப்பு ஒரு மகிழ்ச்சியான உணர்ச்சியாகும். மனிதனை மனிதனாக வாழ வைக்கும். சமூக எழுச்சியைத் தரும்,உடல் நலத்தைக் காத்து நல் வாழ்வு வாழச் செய்யும்,

தன்னம்பிக்கையை வளர்க்கும், சமூதாயத்தில் எதிர்நீச்சல் போட உறுதியை கொடுக்கும்,நிலையான சாதனைகளை செய்ய உறுதுணையாக நிற்கும்.

”வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பதற்கிணங்க நோய்களை விலை கொடுத்து வாங்கும் இந்த காலத்தில் செலவின்றி நம் உடலில் இருக்கும் பல நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்ட சிரிப்பை உலோபமின்றி வௌிப்படுத்துங்கள்.

இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து,செயற்கரிய செயல்களைச் செய்து நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழ மனந்திறந்து சிரியுங்கள்.