குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி!!

இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் கடந்த சனிக்கிழமை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் டெக் ஸ்பெல்மேனை எதிர்கொண்டார்.

இதில் 31 வயதான ஸ்காட் வெஸ்ட்கார்த் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சந்தோசத்தில் போட்டிக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தலையில் வலி மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஸ்காட் வெஸ்ட்கார்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென சரிந்து உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஸ்ரீதேவியின் மரணத்தில் விடை தெரியாத 3 கேள்விகள்!!

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
அவருடைய மரணம் தொடர்பாக 3 மிகப் பெரிய கேள்விகள் எழுந்துள்ளன.

* போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் போலீஸுக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம்?

* போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஹொட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை?

* ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்?

விடை காணமுடியாத கேள்விகளாக இவை உள்ளன.

நடிகர் மாதவனுக்கு திடீர் சத்திர சிகிச்சை!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும் நல்ல கதையம்சமுள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்தார்.

இப்படம் மாதவனின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இவருடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருந்தார். தற்போது கவுதம் மேனன் இயக்க இருக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2ம் பாகத்தில் மாதவன் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், தோள்புறத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாதவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றார்கள்.

காயம் காரணமாக அஞ்சலா மத்யூஸ் விலகல்!!

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் காயம் காரணமாக இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் Nidahas கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே காயம் காரணமாக அவதியுற்ற மத்யூஸ்க்கு தற்போது தொடை எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் முத்தரப்பு கிரிக்கட் தொடரில் விளையாட முடியாது என இலங்கை அணியின் தரப்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாகத் தான் மத்யூஸ் மீண்டும் இலங்கை அணியின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த தொடரின் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் பின்னர் காயம் காரணமாக வேறு எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் மத்யூஸ் இல்லாத நிலையில் இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமால் மீண்டும் தலைமை தாங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்கும் Nidahas கிண்ண கிரிக்கெட் தொடர் மார்ச் 6 ம் திகதி இலங்கையில் ஆரம்பமாகின்றது.

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் கடந்த மூன்று தினங்களில் தூக்கிட்டு தற்கொலை!!

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் கடந்த மூன்று தினங்களில் தற்கொலை செய்துள்ளமை வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

காதல் விவகாரத்தினால் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (ARIEL) அமைப்பின் விடுதியில் கடந்த (25.02.2018) அன்று காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் ரகுநாதன் சுகிர்தரன் (வயது 31) என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.

 

இந் நிலையில் அவரது காதலியும் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் புதுக்குடியிருப்பு எட்டாம் வட்டாரத்திலிலுள்ள அவரது வீட்டு கிணற்றினுள் வீழந்து தற்கொலை செய்துள்ளார்.

வவுனியா ஆச்சிபுரம் 8ம் ஒழுங்கையைச் சேர்ந்த (13 வயது மாணவி) கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர் திட்டியதால் மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டு குணமாகிய நிலையில் நேற்றைய தினம் (26.02.2018) மாலை வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.

வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று (27.02.2018) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கலைச்செல்வன் (வயது 28) என்பவரின் சடலம் மீட்கப்பட்டது

இன்றைய தினம் (27.02.20178) வவுனியாவை சேர்ந்த சாமுவேல் என்ற மாணவன் யாழ். பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு வடபகுதியில் தினசரி பலர் தற்கொலை செய்வது தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

5 லட்சம் அப்பாவி மக்களின் உயிரை காவு வாங்கிய அப்பா- மகன்: நடந்தது என்ன?

சிரியாவில் தற்போது நடக்கும் உள்நாட்டு போருக்கு முக்கிய காரணம் அங்கு நடக்கும் குடும்ப ஆட்சியே என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிரியாவில் 1960 தொடக்கத்தில் ஹபீஸ் அல் அசாத் என்பவரின் கீழ் ஒற்றை ஆட்சி முறை வழக்கத்துக்கு வந்தது. கிட்டத்தட்ட ராணுவ ஆட்சி போன்று நடத்தி வந்த அவருக்கு எதிராக கலக குரல்கள் எழுந்தது.

சிரியாவில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவினர். அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். இவ்வாறு இருக்க 1998 தொடக்கத்தில் ஹபீஸ் ஆசாத்துக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது தம்பி ரிபாத்தை ஆட்சியில் அமர வைக்க முயற்சி செய்தார்.

ஆனால் ரிபாத் 1983ல் அரசுக்கு எதிராக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். பின் ஹபீஸின் முதல் மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

பதவி ஏற்க இருக்கும் சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். மீதம் இருந்தது பஷர் அல் ஆசாத் மட்டுமே. பஷர் அல் ஆசாத் அரசியல் தொடர்பில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தார். இதனிடையே 2000 ஆம் ஆண்டு ஹபீஸ் மரணமடையவே, ரிரியாவின் ஆட்சி பொறுப்புக்கு பஷர் அல் ஆசாத் வந்தார்.

இந்த நிலையில் சிரியாவில் சன்னி ஷியா பிரச்னை உச்சத்தில் வந்தது. அரசின் முக்கிய பொறுப்புகளில் ஷியா மக்கள் அமர்த்தப்பட்டனர். ஹபீஸ் அல் அசாத் 30 வருடம் ஆசை தீர ஆண்டு மரணம் அடைந்தார், மகன் 18 வருடமாக ஆட்சி செய்து வருகிறார்.

இந்த 48 வருடங்களில் வேலை இல்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறை என மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருந்தது.

இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களில் மட்டுமே அரசு மொத்த கவனத்தையும் வைத்திருந்தது, இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர். கிளர்ச்சியாளர்களை நசுக்கும் வேலையில் இறங்கிய ஆசாத் அரசுக்கு உதவியாக ரஷ்ய உள்ளிட்ட வல்லரசுகள் களமிறங்கியுள்ளது.

கடந்த 9 நாட்களில் மட்டும் 800க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், போர் உக்கிரம் அடைந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் : கனடா பிரதமர் வலியுறுத்தல்!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிரியாவில் நடக்கும் போர் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்து வரும் போரில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் இதுவரை சுமார் 700 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு, ஆதரவு அளிப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘சிரிய அரசும், ரஷ்ய, ஈராக் படையும் அங்கு இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது பெரிய தவறு. மக்கள் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்களை, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மனிதர்கள் செய்ய கூடிய செயலே இல்லை, இந்த மோசமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அங்கு மருத்துவ உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு வசதியாக அங்கு இருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்

கனடாவில் இருக்கும் சிரிய மக்களும், இஸ்லாமிய மக்களும் சிரிய போருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் பிரிந்து சென்ற மனைவி கொடூரமாக கொலை செய்த கணவன்!!

பிரித்தானியாவில் தன்னைவிட்டு பிரிந்து சென்ற மனைவியை கொடூரமாக குத்திக் கொன்ற வழக்கில் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Bristol நகரில் வசிக்கும் தம்பதி Adan Dahir- Asiyah Harris. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி மனைவியை சந்திக்க வந்த Adan Dahir சண்டை போட்டுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் அளித்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் Asiyah Harris-யை சடலமாக மீட்டனர்.

கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் Asiyah Harris. இதுகுறித்து பொலிஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், Asiyah Harris தன்னை கொல்லும் நோக்குடன் சண்டையிட்டதாகவும், எதிர்பாராதவிதமாக அவரே தற்கொலை செய்து கொண்டதாகவும் Adan Dahir தெரிவித்துள்ளார்.

ஆனால் இறப்புக்கு, என்னை விட்டு விடு ப்ளீஸ், கத்தியை கீளே போடு, என்னை கொன்று விடாதே, நான் உன்னை காதலிக்கிறேன் என Asiyah கத்தியதை அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர்.

இதை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியதில் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பான விசாரணை Bristol Crown Courtல் நடந்து வந்த நிலையில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் : பரிதாபமாக உயிரிழந்த 5 வயதுச் சிறுமி!!

பிரித்தானியாவில் மருத்துவரை சந்திக்க 10 நிமிடம் தாமதமாக சென்றதாக கூறி சிகிச்சை அளிக்க மறுத்ததால் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நியூபோர்ட், சவுத் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனைக்கு சிறுமி Ellie-May Clark-ஐ எடுத்து வரும்போது அவருக்கு ஆஸ்துமா நோய் தீவிரமாக இருந்துள்ளது.

மருத்துவரை சந்திக்க முன்னதாக நேரம் ஒதுக்கியிருந்ததால் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை நோக்கி விரைந்துள்ளனர்.

ஆனால் 10 நிமிடம் கால தாமதம் ஏற்பட்டதாக கூறி மருத்துவர் Joanne Row (54) சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார்.
மட்டுமின்றி சிறுமியின் மருத்துவ ஆவணங்கள் எதையுமே அவர் பார்வையிடவும் மறுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் தங்கள் நிலையை விளக்கியும், அவர் சந்திக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வேறு வழியின்றி குடியிருப்புக்கு திரும்பிய நிலையில், சிறுமி Ellie-May மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.
இதையடுத்து இரவு 10.30 மணியளவில் அவர் சுய நினைவை இழந்துள்ளார், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர்.

இருப்பினும் மருத்துவர்களால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர், நேற்றையதினம் மன்னிப்பு கோரியதுடன், உண்மையில் இதுபோன்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை 5 மணிக்கு சிறுமிக்கு அறுவைசிகிச்சை என மருத்துவர் Rowe முடிவு செய்திருந்தார். ஆனால் தம்மால் 25 நிமிடங்களில் மருத்துவமனை சென்று சேர முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காதலிக்க மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி பரிதாப மரணம்!!

மதுரையில் காதலிக்க மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி, இவரது மகள் சித்ராதேவி (வயது14). 9ம் வகுப்பு மாணவியான இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 26) என்ற இளைஞன் கடந்த 16ம் திகதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

அக்கம்பக்கத்தினர் சித்ராதேவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக பாலமுருகனை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில், சித்ராதேவி காதலிக்க மறுத்ததால் பாலமுருகன் இவ்வாறு செய்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

முதியோர் காப்பகத்தில் பாதாள பிணவறை : நெஞ்சை பதறவைக்கும் தகவல்கள்!!

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் முதியோர் இல்லம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆதவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு அவர்களை வெளியில் விடவும் நிர்வாகம் மறுத்தது.

கடந்த 20ம் திகதி காப்பகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பிணத்துடன் வந்த மூதாட்டி சத்தம் போட்டார், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் காப்பகத்தின் உரிமையாளர் தோமஸிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் காப்பகத்தில் தங்க விரும்பாத 86 முதியோர்கள், வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று சுமார் 200 முதியோர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

காப்பகத்தை ஆய்வு செய்த போது பாதாள பிணவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, லொக்கர் போன்ற வடிவமைப்பில் சிமென்ட் கல்லறைகளை அமைத்துள்ளனர்.

இங்கே இறந்தவர்களின் உடலை போட்டு மூடி விடுகின்றனர், உடலில் சதை அழுகி பொந்து வழியே குழியில் விழுந்த பிறகு மிஞ்சிய எலும்புகளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தெரியவந்துள்ளது.

ஸ்ரீதேவி மரணம் ஒரு கொலை : பரபரப்பைக் கிளப்பும் சு.சுவாமி!!

நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

உறவினர் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, குளியலறை தொட்டியில் விழுந்து மரணமடைந்தார். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பகீர் கிளப்பும் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பிரபல பாலிவுட் நடிகைகளுக்கும், கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிமுக்கும் இடையே உள்ள தொடர்புகளை கணக்கில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீதேவி தீவிரமான மது வகைகளை அருந்துபவர் இல்லை, அப்படியிருக்கையில் அவரது உடலில் மது எப்படி வந்தது?
அந்த ஹொட்டலில் சிசிடிவி வசதி இல்லையா? அதுபற்றி ஒரு தகவலும் வெளியே வரவில்லையே? என்னைப் பொறுத்த வரையில் ஸ்ரீதேவி மரணத்தை கொலை என்றே கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், யாராவது உங்களை தள்ளி விடாமலோ அல்லது மூச்சு விடுவதை வலுக்கட்டாயமாக தடுக்காமலோ குளியலறை தொட்டியில் மூழ்கி இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் தந்தையின் கண்முன்னே கடத்தப்பட்ட 2 வயதுக் குழந்தை!!

 
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் தந்தையின் கண்ணெதிரே அவரது 2 வயது குழந்தையை மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்திய நபர் நடந்து சென்றவாறே குழந்தை ஷரீன் பாத்திமாவை மிக லாவகமாக தூக்கிச் சென்றுள்ளான். மராட்டிய மாநிலம் மும்பையில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடை ஒன்றில் பொருட்கள் வாங்கச் சென்ற குழந்தையின் தந்தை தமது மகள் மாயமானது அறிந்ததும் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

குறித்த கடையின் வெளியே ஷரீன் விளையாடிக்கொண்டு இருந்ததாகவும், தமது கவனம் சிதறிய ஒரு நொடியில் இச்சம்பவம் நடந்துள்ளது எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த பொலிசார், அதில் பதிவாகியிருந்த காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவக்கினர்.

6 மணி நேரத்திற்கு பின்னர் 28 வயதான சந்தீப் பராப் என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமிமருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா அல்லது சிறுமி கடத்தப்பட்டதன் நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வவுனியா மாவட்ட செயலகத்தில் விகாரை அமைப்பது இன நல்லிணக்கத்தை குழப்பும் செயலாகும்!!

நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர். எனினும் குறிப்பிட்டவொரு மதத்தை முதன்மைபடுத்தும் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாதென வடக்கு மாகாணசபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை புதிதாக பதவியேற்ற அரசாங்க அதிபர் முயற்சி செய்வது தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் மாகாணசபை உறுப்பினரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

இந்த நாட்டில் பிரதானமாக மூன்று மதங்கள் காணப்படுகின்றன. அவரவர் தங்களுடைய மதங்களை பின்பற்றுவதற்கு உரித்துடையவர்கள். இதைதான் இலங்கையின் அரசியல் சாசனமும் தெளிவாக சொல்கிறது.

எனினும் 2009 யுத்த்திற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத இடங்களிலேயே விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை தமிழ் மக்கள் மீதான ஒருவகையான அடக்கு முறையாகவே பார்க்கவேண்டியுள்ளது. இதனால்தான் இலங்கையில் புத்த மதத்தை சிங்கள பௌத்தமாக தமிழ் மக்கள் பார்க்கவேண்டியுள்ளது.

மாவட்ட செயலகமென்பது அரச திணைக்களமாகும். இதில் சேவைகளை பெற எல்லா மதப்பிரிவினரும்இ எல்லா இனப்பரிவினரும் நாளாந்தம் வந்து செல்கின்றனர்.

எனினும் குறிப்பிட்டவாரு மதம்சார்ந்த வழிபாட்டு தலத்தை அமைப்பதானது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கபொறிமுறையை பாதிக்கும். ஐநா சபையிலும் சர்வதேசத்திற்கும் இனநல்லிணக்கம் பற்றி அரசாங்கம் வழங்கும் உறுதிமொழிகளுக்கு எதிரான நிலைப்பாடாகவே இந்த விடயத்தை பார்க்கவேண்டியுள்ளது.

மாவட்ட செயலகத்திற்கு வருகின்ற பொதுமக்களுக்கான சேவையை திருப்தியுடன் அங்கு பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் வழங்கினாலேயே போதும். அதுவே இறைவனுக்கு ஆற்றும் பெரும்தொண்டாகும்.

வவுனியா மாவட்டம் மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழும் மாவட்டமாகும். அதிலும் 80 வீதத்திற்கு மேலாக தமிழ்பேசும் இந்துக்கள் வாழும் மாவட்டமாகும்.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களிடையே ஏனையமதங்களின்மீது வெறுப்புணர்வை தூண்டும் செயற்பாடாக அமையும். இதனை அரசாங்க அதிபர் உடனடியாக கைவிடவேண்டுமென அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து விபத்து : 37 பேர் படுகாயம்!!

வலப்பனை, அபன் எல்ல பகுதியில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை, நில்தண்டாஹின்னவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தெறிபாஹா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சாரதியின் கவனயீனத்தால் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் தொடர்ந்தும் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட பேரூந்து தீயில் எரிந்து நாசம்!!

 
திருகோணமலை – தம்பலகாமம், கிண்ணியா பிரதான வீதியின் பட்டிமேடு சந்தியில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் வண்டி முள்ளிப்பொத்தானை 97ஆம் கட்டையை சேர்ந்த சமிந்த என்பவருக்கு சொந்தமானது எனவும் தெரியவருகிறது.

பஸ் வண்டி முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.