இறந்த சடலங்களை தோண்டி உணவு ஊட்டும் மக்கள்: ஆச்சரியமளிக்கும் வினோத விழா!!

 
இந்தோனிசியாவில் இறந்த சடலங்களை தோண்டி அவரது உறவினர்கள் உணவளிப்பது மற்றும் உடை உடுத்தும் திருவிழா நடந்தது.

இந்தோனிசியாவின் Sulawesi பகுதியில் உள்ள Tana Toraja-வில் Toraja மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இறந்த தங்கள் கணவர், மகன் மற்றும் தாத்தா, பாட்டி போன்றோரை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி அவர்களுக்கு கண்ணாடி அணிவது, உடை போட்டுவிடுவது, உணவு அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்களை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கையில், Toraja மக்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை Ma’nene என்ற திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

இந்த திருவிழா அவர்களுக்கு முக்கிய திருவிழாவாக பார்க்கப்படுகிறது. ஏனெனின் குறித்த திருவிழாவின் போது, அவர்கள் இறந்த தங்கள் உறவினர்களை தோண்டி எடுத்து இந்த காலக்கட்டத்தில் எப்படி இருக்கிறதோ அது போன்று உடை, செல்போன் மற்றும் அவர்களுடன் பேசவும் செய்கின்றனர்.

இதன் மூலம் அக்கிராம மக்கள் தங்கள் உறவினர்கள் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கின்றனர் என்று நம்புகின்றனர், அதுமட்டுமின்றி அவர்களுடன் ஒன்றாக இருக்கும் படி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

அப்படி இறந்தவர்கள் தோண்டி எடுக்கப்படும் போது, பக்டீரியாக்கள் தங்கள் மீது பரவாமல் இருக்க முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். இதை அவர்கள் ஒரு பரம்பரை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இங்கு கிறிஸ்துவர்களே அதிகம் இருப்பதாகவும், அவர்கள் இறப்பை இறுதிமுடிவாக எடுத்துக் கொள்வதில்லை, அன்றைய திருவிழாவின் போது பட்டாசுகள், நடனங்கள் போன்றவைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

கண் திறந்த அம்மனால் பரபரப்பு : அலையென திரண்ட மக்கள்!!

தமிழ்நாட்டில் காட்பாடி கழிஞ்சூர் மாரியம்மன் கோயிலில் மாலை அம்மன் கண் திறந்ததாக பரவிய தகவலால் திடீரென பக்தர்கள் கூட்டம் திரண்டது.

காட்பாடி கழிஞ்சூரில் நூறு ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அம்மன் கண்கள் திறந்ததை பார்த்து பரவசமடைந்தனர்.

மனிதர்களை போன்று கருவிழி, விழிவெண்படலத்துடன் இருந்ததால் காட்டுத்தீ போல் மற்ற ஊர்களுக்கும் தகவல் பரவியது.

இதனால் கூட்டம், கூட்டமாக திரண்ட மக்கள் கோயிலில் அம்மனை பார்த்து பக்தி பரசவத்துடன் வழிபட்டனர்.

அதேபோல், நேற்று காலையும் கண்கள் திறந்து பிரகாசமாக பார்ப்பது போல் இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

பரிதாபமாய் பலியான நிறைமாத கர்ப்பிணி: கணவனின் கண்ணீர் பேட்டி!!

 
கேரளாவில் பேருந்தில் பயணம் செய்த 8 மாத கர்ப்பிணியான நஷிதா, யாரும் உட்கார இடம்கொடுக்க முன்வராத நிலையில் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் நஷிதா, இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார். எட்டு மாதம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், கடந்த வெள்ளியன்று வீடு திரும்புவதற்காக தனது மூத்த மகள் மற்றும் சகோதரியுடன் தனியார் பேருந்து ஒன்றில் ஏறினார்.

நெரிசல் மிக்க அந்தப் பேருந்தில் கர்ப்பிணியான அவருக்கு இடமளிக்க யாரும் முன்வரவில்லை. ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் கண்டுகொள்ளாத நிலையில், நின்று கொண்டே பயணம் செய்த அவர் வளைவு ஒன்றில் பேருந்து வேகமாகத் திரும்ப, தவறி கீழே விழுந்தார்.

பேருந்தின் கதவு அடைக்கப்படாமல் இருந்ததால் சாலையில் விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. RIMS மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நஷிதாவுக்கு உடனடி அறுவை சிகிச்சை ஒன்றை செய்த மருத்துவர்களால் குழந்தையை மட்டும் காப்பாற்ற முடிந்தது.

நஷிதாவின் நிலைமை மோசமாகி கடந்த புதனன்று அவர் உயிரிழந்தார், பேருந்தைக் கைப்பற்றியுள்ள பொலிசார் இன்னும் ஓட்டுனரைக் கைது செய்யவில்லை. அவர் மீது கவனக்குறைவினால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நதிஷாவின் கணவர் கூறுகையில், முதன்முறையாக என் மனைவி பேருந்தில் பயணம் செய்தார், இதுவே கடைசி பயணமாக முடிந்தது, கூட்ட நெரிசலில் யாராவது எழுந்து இடமளித்து இருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார்.

பேருந்துகளில் பயணம் செய்யும் நம்மை போன்ற ஏழைகளின் உயிரை அவர்கள் தானே பாதுகாத்துக் கொள்ள வே்ணடும், ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அவர்களது கடமையே என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பயணம் செய்யும் கர்ப்பிணிகளுக்காக குறைந்தது ஒரு இருக்கையாவது ஒதுக்கப்படவேண்டும் என்று கடந்த ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனது மகனை கருணை கொலை செய்திடுங்கள் : பெற்றோரின் கண்ணீர் மனு!!

தமிழகத்தில் மகனுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க தாமதப் படுத்துவதால், தங்களை கருணை கொலை செய்யும் படி பெற்றோர் மனு கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரத்தில் உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுக ரெட்டியார். இவருக்கு சிவமுருகன், ராமகிருஷ்ணன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சிவமுருகன் ராஜஸ்தானில் பணியாற்றி வருகிறார். ராமகிருஷ்ணன் திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராமகிருஷ்ணன் அமெரிக்கா குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வதற்கு பிறப்பு சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. ஆனால் ஆறுமுகரெட்டியார் அவரின் பிறப்பை பதிவு செய்யவில்லை.

இதன் காரணமாக அவர் தன் மகனுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், எட்டயபுரம் தாசில்தார் என அனைவரும் விசாரணை நடத்தி பிறப்புச்சான்றிதழ் கொடுக்க எவ்வித தடையும் இல்லை என்று கூறி சான்றிதளித்துள்ளனர்.

இருப்பினும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா பிறப்பு சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்து வந்துள்ளார். அவரிடம் அனைத்து சான்றிதழ்களின் நகல் கொடுத்த பின்பும் தொடர்ந்து காலம் தாழ்த்து வருகிறார்.

இந்த கால தாமதத்தால் ராமகிருஷ்ணனுக்கு அமெரிக்காவில் குடியுரிமை கிடைக்காத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அமெரிக்கா விசா வழங்கும் விவகாரத்தில் கடும் கெடுபிடி விதித்துள்ளதால், அவருக்கு வேலையும் போகும் அபாயம் உள்ளது.

அப்படி தன் மகனுக்கு வேலை போனால் மகன் மற்றும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், எனவே உடனடியாக பிறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும், அப்படி இல்லையெனில் சான்றதழ் வழங்குவதற்கு தாமத்தப்படுத்திவதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

இப்படி எதுவும் கூறாமல் அலைக்கழிப்பதற்கு எங்களை கருணை கொலை செய்யும் படி வலியுறுத்தி ஆறுமுக ரெட்டியார் மற்றும் அவரது மனைவி சிந்தாமணி ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிருக்கு போராடிய கூலித்தொழிலாளி : வேடிக்கை பார்த்த மக்களை நெகிழ்ச்சியடைய வைத்த நபர்!!

தமிழகத்தில் உயிருக்கு போராடிய விவசாய கூலித் தொழிலாளியை உரிய நேரத்தில் காப்பாற்றிய செந்தில் குமார் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பூபதியம்மாள் என்ற விவசாய கூலித் தொழிலாளி, உடையார்கோவிலில் உள்ள தஞ்சை பிரதான சாலையில் பேருந்தில் அடிபட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

பேருந்தின் டயர்கள் அவர் கால் மீது ஏறியதால் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற அனைவரும் பரிதாபப்பட்டனர், மேலும் சிலர் 108க்கு அழைத்து விட்டு காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அந்த வழியாக காரில் வந்த தஞ்சை அம்மாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உடனடியாக இறங்கி வலியால் துடித்துக் கொண்டிருந்த பூபதியம்மாளை தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.

அந்த வழியே கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணித்த பலரும் பரிதாபமாக பார்த்து தான் சென்றார்களே தவிர, உடனடியாக விபத்தில் சிக்கியவரை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை.

ஆனால் தன்னுடைய புதிய கார் இரத்த வெள்ளம், சென்டிமென்ட் என்று பார்க்காமல் செந்தில் குமார் தனது காரில் ஏற்றிச் சென்றது, பூபதியம்மாளின் கணவர், மகன் மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவருமே நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

இதுகுறித்து செந்தில் குமார் கூறுகையில், வலியால் துடித்துக்கொண்டு இருந்தவர்களுக்கு நான் உதவி செய்தேன் அவ்வளவு தான், இது ஒரு சாதாரண உதவி என்று கூறியுள்ளார். இருந்த போதிலும் அவரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும் புதிய லென்ஸ் கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும் புதிய லென்ஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த லென்ஸ் மூலம் வெள்ளை உள்ளிட்ட அனைத்து வண்ணங்களில் உள்ள ஒளிக்கற்றைகளையும் ஒரே குறிப்பிட்ட புள்ளியில், அவற்றின் செறிவு குறையாமல் குவிக்க முடியும்.

இதற்கு முன்னதாக பல லென்ஸ்களின் உதவியுடன் இதனைச் செய்யும் வகையில் இருந்ததாகவும், ஒரே லென்ஸ் மூலம் நிறங்களைக் குவிப்பது தற்போதுதான் சாத்தியமாகியுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தடை விதித்த சீனா : பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி!!

பிளாஸ்டிக் குப்பை இறக்குமதிக்கு சீனா விதித்துள்ள தடையால் இங்கிலாந்தில் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேக்கமடைந்துள்ளது.

ஆண்டுதோறும் இங்கிலாந்தில் இருந்து சுமார் 5 லட்சம் டன் வரை பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மறுசுழற்சிக்காக சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வெளிநாடு குப்பை கழிவுகள் இறக்குமதிக்கு இந்த மாதம் சீனா திடீரென தடை விதித்தது. சீனாவின் தடை காரணமாக இங்கிலாந்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேக்கமடைந்துள்ளன.

இது தொடர்பாக தலைமை நிர்வாகி சைமன் எலின் கூறுகையில், ‘‘குறுகிய காலத்தில் இந்த பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என தெரியவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்னை.

இது எங்களது தொழிற்சாலைகளின் போக்கையே மாற்றியமைப்பதாக உள்ளது. 55 சதவீதம் பேப்பர், 25சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளை அனுப்புவதற்கு நாங்கள் நீண்ட ஆண்டுகளாக சீனாவையே சார்ந்திருந்தோம். இங்கிலாந்தில் இதற்காக மார்க்கெட் கிடையாது. இது எங்கள் தொழிற்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.

சீனாவின் தடை காரணமாக இங்கிலாந்தில் பிளாஸ்டிக் தேங்கத்தொடங்கியுள்ளது. எனவே குப்பைகளை எரிக்கும் சூழலுக்கு தள்ளப்படலாம் என கருதப்படுகிறது. அரசு சங்கத்தை சேர்ந்த பீட்டர் பிலெம்பிங் கூறுகையில்,

“எரித்தல் என்பது கழிவுகளை அகற்றுவதற்கான ஒரு பகுதி மட்டும் தான். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க முடியாது. இது மிகவும் சவாலானது. நீண்ட காலத்திற்கான கழிவு உத்தி என்பது நமக்கு மிகவும் தேவையாகும்.

பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது தொடர்பான எந்த ஒரு முடிவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக்களை எதிர்கொள்வதாக அமையும். எனவே கழிவுகளை எரித்தல் என்பது ஒரு தவறான தீர்வாகும்” என்றார்.

இதேபோல் கீரின்பீஸ் பகுதியை சேர்ந்த லூயிஸ் எட்ஜ் கூறுகையில், “ அரசு தொடர்ந்து முடிவுகளை தள்ளிப்போட்டதால் தான் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எரித்தல் என்பது சரியான முடிவல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலமாக அதிக கார்பன் மூலக்கூறுள்ள புதுப்பிக்க முடியாத மின்னாற்றல் வெளியாகிறது. இதனுடன் நச்சு தன்மை கொண்ட ரசாயனங்களும் வெளிவருகின்றது. எரியூட்டிகளை அமைத்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஒரு சந்தையை உருவாக்குவதாக உள்ளது.

ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் முறையை தான் நாம் தற்போது குறைக்க வேண்டிய சூழலில் உள்ளோம். அரசு ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்கள் மீது அரசு வரி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும்” என்றார்.

ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் பிளாஸ்டிக்கை குறைப்பை இலக்காக வைக்க வேண்டும். வெவ்வேறு வகையான பிளாஸ்டிக் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். எளிதான விதிகளை கொண்டுவரவேண்டும். இதன் மூலம் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை சிறுவனை சந்தித்த ஜனாதிபதி!!

 
கின்னஸ் சாதனை ஒன்றை பதிவு செய்த சிறுவனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

உலகில் புத்தகம் ஒன்றை வெளியிட்ட மிகவும் வயது குறைந்தவர் என்ற சாதனையை இலங்கையை சேர்ந்த சிறுவன் பெற்றிருந்தார்.

இந்த சாதனை ஏற்படுத்திய சிறுவனை ஜனாதிபதி, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்தார்.

சிறுவனின் திறமையை பாராட்டி ஜனாதிபதி அவருக்கு நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கினார். சிறுவனின் எதிர்கால கல்வி நடவடிக்கையில் வெற்றி பெற ஜனாதிபதி ஆசி வழங்கினார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தனுவன சேரசிங்க என்ற சிறுவன் “Junk Food” என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

“Junk Food” என்ற ஆங்கில புத்தகத்தை எழுதும் போது அவரது வயது 4ம் 356 நாட்களுமாகும். இந்த புத்தகத்தை எழுதுவதற்கு அவருக்கு 3 நாட்கள் மாத்திரமே செலவாகியுள்ளது.

தனுவன சேரசிங்க தனது பெற்றோருடன் சீஷெல்ஸ் நாட்டின் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது!!

ரஜினியை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

பாஜக ரஜினியை பயன்படுத்துகிறதோ என்ற அச்சம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறவர் இயக்குனர் அமீர். ரஜினி பாஜகவை தொடர்ந்து பாராட்டி வருகிறவர் அவர் பாஜகவின் முகமாகத் தான் இருப்பார் என்றும் அமீர் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை வரவேற்று முதலில் டுவீட் போட்டவர் ரஜினி தான். தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் வந்த போது அது குறித்து கருத்து தெரிவிக்காமல் பாஜகவின் திட்டங்களை மட்டும் பாராட்டியது ஏன் என்றும் அமீர் கேள்வி எழுப்பி வருகிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புதிய இந்தியா பிறக்கப்போகிறது வாழ்த்துகள் என்று ரஜினி குறிப்பிட்டதற்கும் அமீர் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிவிட்ட நிலையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ,அவர் கூறியதாவது, மத, இன, பேதமற்ற ஆன்மிக அரசியல் என்று ரஜினி தெளிவாக தனது ஆன்மிக அரசியலைப் பற்றி சொல்லிவிட்டார். இதற்குப் பிறகு தனது கொள்கையைப் பற்றி ரஜினி என்ன வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் அமீர், இதையெல்லாம் சொல்லிவிட்டு அவர் ஏன் அடுத்த நாள் ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றார் என்பதில் தான் கேள்வி எழுகிறது.

ரஜினியை பாஜக பயன்படுத்துகிறது ஏற்கனவே தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக ரஜினியை பயன்படுத்துகிறதோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. அர்ஜுன் சம்பத் போன்றோர்கள் ஏற்கனவே காவிச்சூரியன் இங்கு மலரும் என்று சொன்னதால் அந்த அச்சம் இருக்கிறது.

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகச் சொன்னதும் ஹரிஹரசர்மா, தமிழிசை போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொன்னதும் தமிழிசை, எச்.ராஜா மற்றும் குருமூர்த்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிப்பதால் பாஜகவின் பின்னோட்டம் இருக்கிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

மக்கள் நாளை ஆட்சிக்கு ரஜினியை தேர்ந்தெடுத்துவிட்டால்? அவருடைய வார்த்தையே தான் நான் திருப்பி சொல்கிறேன், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் என்று தொடர்ந்து தமிழ்ச்சமூகம் பற்றி பேசி வரும் அமீர் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 27 இந்தியர்கள் அதிரடியாக கைது!!

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்திய பிரஜைகள் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் கடவுச்சீட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-தமிழ்வின்-

17 வயது சிறுவன் கொலை : 16 வயதுச் சிறுவன் கைது!!

ஹிக்கடுவை – காஸ்லன்ட் தோட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 வயது சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில், ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், ​மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே பலியாகியுள்ளார்.

அத்துடன் இவர் ஹெரிஸ்லன்ட் தோட்டம் – கோனபீனுவல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 43 பேர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு!!

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் 43 பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு தெரிவாகி உள்ளதாக கல்லூரி அதிபர் பா.கமலேஸ்வரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கல்லூரி அதிபர் பா.கமலேஸ்வரி மேலும் தெரிவிக்கையில்..

அண்மையில் வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இருந்து விஞ்ஞானப்பிரிவில் 5 மாணவிகளும், கணிதப் பிரிவில் 2 மாணவிகளும், வணிகப் பிரிவில் 13 மாணவிகளும் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் கலைப்பிரிவில் 16 மாணவிகளும், விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவில் 4 மாணவிகளும், ஏனைய பிரிவுகளில் 3 மாணவிகளுமாக மொத்தம் 43 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர்.

அதேவேளை, கடந்த காலங்களை விட பாடசாலையில் சித்தி வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மண் என்பதால் புளொட்டிற்கு வேட்பாளர் தெரிவில் சிரமம்?

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இறுதிவரை இருந்த மண் என்பதனால் புளொட்டிற்கு புதுக்குடியிருப்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிரமம் இருந்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பாக தன்னிலை விளக்கத்தினை அளிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பனை வவுனியாவில் ஏற்பாடு செய்திருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்..

புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த 100 வீத வெற்றிக்கு சேறு பூசுவதற்காக வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாடாகவே இதனை பார்க்கின்றேன்.

யாழ்ப்பாணம் கட்சி அலுவலகத்தில் பெயர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் என்னிடம் வேட்புமனு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதன்போது எனது பணியாக காணப்பட்டது வேட்பாளர்களிடம் ஒப்பம் பெற்று அதனை உரியவர்களிடம் முகவர் ஊடாக தேர்தல் திணைக்களத்தில் ஒப்படைப்பது மாத்திரமேயாகும்.

அந்த வகையில் சகல வேட்பாளர்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டு குறிப்பிட்ட நாள் அனைத்து வேட்பளார்களிடமும் ஒப்பம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 23 பேர் ஒப்பமிட வரவேண்டியவர்களாக இருந்தும் 21 பேர் சமூகமளித்திருந்தனர். அதில் புளொட் சார்பாக போட்டியிட வேண்டிய வேட்பாளர் அவ்விடயத்திற்காக அங்கு வரவில்லை.

அதன் பின்னர் நாம் நேரடியாக புளொட்டின் பிரதேச பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அந்த பெண்ணை அனுப்புமாறு கோரியிருந்தேன். அதற்கு அவர்களும் அனுப்புவதாக தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் ஊடக அறிவிப்பில் எனது அலுவலகத்தில் மிரட்டல் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன. அது பொய்யான ஊடகத்தகவல்.

அலுவலகத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் வைத்தே அந்த பெண்ணுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு ஏதோ ஒரு சம்பவம் நடந்துகொண்டிருந்தது.

ஆகவே அந்த பிரதேச புளொட் தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்கவே சம்பந்தப்பட்ட இடத்திற்கு நான் சென்றிருந்தேன். அதன்போது ஒப்பமிடுமாறு குறித்த பெண்ணிடம் நான் நேரடியாகவே கூறியிருந்தேன்.

நீங்கள் ஒப்பமிட்டால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் நீங்கள் ஒப்பமிட்டு செல்லலாம் என கூறியிருந்தேன். அப்போது அந்த பெண் தெரிவித்திருந்தார் புளொட்டின் வற்புறுத்தலாலேயே நான் இங்கு வரவேண்டியிருந்தது. எனக்கு இதில் ஒப்பமிட சம்மதமில்லை. என்னை வற்புறுத்தவேண்டாம். அதை செல்லிவிட்டு செல்லவே நான் வந்தேன். ஒப்பமிட வரவில்லை என கூறியிருந்தார். அதன் பின்னர் தான் வேட்பாளராக இல்லாமல் போனதற்கு நானே காரணம் என சொல்லப்படுகின்றது.

உண்மையில் அந்த பெண் அங்கு வராமையும் ஒப்பமிடாமையுமே காரணமாகும். இதற்கு அனைத்து வேட்பாளர்களும் சாட்சியாகவுள்ளனர். இவ்விடயம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற விடயம்.

ஆனால் அப்பெண் தனது கிராமத்திற்கு சென்றதன் பின்னர் நடந்ததாக சில விடயங்கள் கூறப்படுகின்றன. அதைப்பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை.

அதற்கும் எமக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே இது பொய் வாக்குமூலத்தினை ஊடகங்கள் ஊதி பெருப்பித்து புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை தட்டிவிடுவதற்காக செய்யப்பட்ட காரியமாகவே இதனை பார்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் நீங்கள் வெளியிட்ட ஒலி வடிவம் அந்தப் பெண்ணுடையதுதான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. ஏன் நீங்கள் அந்த பெண்ணை அழைத்து வந்து ஊடகவியலாளர்களை சந்தித்திருக்ககூடாது என கேட்டபோது,

அந்த பெண் மீண்டும் மீண்டும் ஊடகங்களின் முன் வந்து கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். அத்துடன் இந்த ஒலி வடிவம் நான், விவசாய அமைச்சர் சிவனேசன், அந்த பெண் ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கின்றோம்.

ஆகவே இதனை உறுதிப்படுத்துவது கடினமாக இருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காவே இதுவரை காலமும் நான் இது தொடர்பான மேலதிக விடயங்களை வெளிப்படுத்தாமல் இருந்தேன்.

ஆனால் இது தடம்மாறி ஊடக அறிவிப்பை மாத்திரம் வைத்துக் கொண்டு பொய்யான பரப்புரை தேர்தல் ஆணையாளர் வரை சென்றமையினால் இதனை ஊடக சந்திப்பின் மூலம் தெளிவுபடுத்த விரும்பியிருந்தேன்.

இது மாத்திரமின்றி புதுக்குடியிருப்பு மண், விடுதலைப்புலிகள் இறுதிவரை தங்கள் கைப்பிடியில் வைத்திருந்த மண்ணாகும். இந்திய இராணுவத்தை தவிர எந்த இராணுவமும் விடுதலைப்புலிகள் இல்லாமல் போகும் வரை அங்கு சென்றதில்லை.

எனவே புளொட் அமைப்புக்கு அங்கு வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிரமங்கள் இருந்திருக்கலாம். அதற்காக அவர்கள் வற்புறுத்தியதாக நான் கூறவில்லை.

எனினும் உண்மைகளை அறிந்துகொண்டு ஊடக அறிவிப்புகளை செய்திருந்தால் இவ்வாறான பிரச்சினை வந்திருக்காது. அல்லது பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலத்தை பெண்ணிடம் எடுத்தவர்கள் அதேநாளில் என்னிடமும் எடுத்திருந்தால் அதனை ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தால் இந்த பிரச்சினை அன்றே நின்றிருக்கும்.

ஆனால் இன்று ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு என்மீது சேறுபூச நினைக்கின்றனர். இது அனைத்தும் அப்பட்டமான பொய்யான அறிக்கை என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று (05.01.2017) மதியம் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்ணாட்டி கணேசபுரத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தொகுதியில் இப்பெண் தூக்கில் தொங்கியதை அவதானித்த பொதுமகனொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் வழங்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் நிதி நிறுவனத்தில் மோசடி : பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் முறைப்பாடு!!

 
வவுனியாவிலுள்ள நுண்நிதி நிறுவனத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சொகுசு வாகனம் ஒன்றினை 37 இலட்சம் ரூபா பெறுமதியான லீசிங்கில் பெற்றுக்கொள்வதற்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து பிணையாளியின் விண்ணப்பம் பெறப்பட்டு வாகனம் பெறப்பட்டுள்ளது.

குறித்த பிணையாளி தனிப்பட்ட கடன் பெற்றுக்கொள்வதற்கு தற்போது வங்கிக்கு சென்றுள்ளார். இதன்போது அடையாள அட்டை சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த நபரின் அடையாள அட்டையை பயன்படுத்தி வாகனம் பெற்றுக்கொள்வதற்கு பிணை அனுமதிப்பத்திரம் தயார் படுத்தப்பட்டுள்ளதுடன் மிகுதி நிலுவையாக ஏழு இலட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா பஜார் வீதியிலுள்ள பிரபல நுண்நிதி நிறுவனத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு தோணிக்கல் பகுதியிலுள்ள ஒருவர் அவரது சகோதரியின் அடையாள அட்டையின் பிரதியில் விண்ணப்பம் ஒன்று வழங்கியுள்ளார்.

அதை ஏற்றுக்கொள்ள நுண்நிதி நிறுவனம் மறுத்துள்ளது. இதையடுத்து குறித்த நபரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தினைப் பெற்றுச் சென்றிருந்தார்.

இதையடுத்து வங்கியில் அடையாள அட்டையினை பரிசோதனை மேற்கொண்ட உத்தியோகத்தர் “உங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி சொகுசு வாகனம் ஒன்று பெறப்பட்டுள்ளது. அத்துடன் மிகுதி நிலுவையாக ஏழு இட்சம் ரூபா செலுத்திவேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து எந்த நிறுவனம் என தெரிந்து கொண்ட குறித்த பெண் அந்நிறுவனத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்று நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தற்போது நுண்நிதி நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றும் உத்தியோகத்தர் முன்னர் இருந்த பெண் முகாமையாளர் தற்போது கடமையில் இல்லை என தெரிவித்து இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளார்.

இதையடுத்து இன்று அந்நிறுவனத்திற்குச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் தனது அடையாள அட்டையிலுள்ள பிணை நிலுவையை இரத்துச் செய்து தருமாறு தெரிவித்துள்ளார்.

நுண்நிதி நிறுவனங்கள் தமது வியாபார நோக்கத்திற்காக இவ்வாறான போலி ஆவணங்களைத் தயார்செய்து தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதை நிறுத்துவதுடன் வடபகுதியிலுள்ள மக்களை மேலும் துன்பத்திற்கு இட்டுச் செல்ல வழி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

நுண்நிதி நிறுவனத்திலிருந்து தமக்குச் சாதகமான பதில் கிடைக்காது எனத் தெரிந்து கொண்ட குறித்த பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இறந்த போன பாட்டிக்கு கடிதம் எழுதிய பேரன் : பாட்டியிடமிருந்து வந்த பதில்!!

 
ஜேர்மனியில் இறந்து போன பாட்டிக்கு பேரன் கடிதம் எழுதிய நிலையில் அதற்கு பேரனுக்கு பதில் கடிதம் வந்துள்ளது.

ஜெர்மனியின் லோயர் சக்சோனி மாகாணத்தை சேர்ந்தவர் கிரிஸ்டின், இவர் மகன் லூயிஸ் (7), லூயிஸின் பாட்டி சில வாரங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு சென்ற லூயிஸ் பாட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதி பலூன் உள்ளே வைத்து மேல் நோக்கி பறக்கவிட்டான்.

அதில் குட்பை பாட்டி என எழுதியிருந்தான், பாட்டி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாலேயே லூயிஸ் கடிதம் எழுதினான்.

இந்நிலையில் பாட்டி எழுதியது போன்ற பதில் கடிதம் லூயிஸுக்கு வந்துள்ளது. அதில், அன்பு லூயிஸ், எனக்கு கடிதம் அனுப்பியதற்கு நன்றி, உன்னை தினமும் நான் பார்ப்பேன், உன்னை பாதுகாக்கும் தேவதையாக இருப்பேன். ஐ லவ் யூ லூயிஸ், அன்புடன் உன் பாட்டி என எழுதப்பட்டிருந்தது.

கடிதமானது சிறுவன் லூயிசை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, கடிதத்தை பார்த்தவுடன் அவன் ஆனந்த கண்ணீர் வடித்தான். இது குறித்து கிரிஸ்டின் கூறுகையில், பதில் கடிதம் வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை, இதை எழுதியது யார் என இன்னும் தெரியாத நிலையில் அது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் பாட்டி அனுப்பியதாக வந்த கடிதத்தை கிரிஸ்டின் பேஸ்புக்கில் பதிவிட அது வைரலாகியுள்ளது.