மனைவியை படுகொலை செய்த கணவன் : பிரித்தானியாவில் வசிக்கும் பெண்ணுக்கு நடந்த துயரம்!!

 
பஞ்சாப் மாநிலத்தில் கணவர் தன் மனைவியின் முகத்தில் ஆறு முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்தவர் Nirankar, இவரது மனைவி Kulwant Kaur, தனது மகன் மற்றும் மகளுடன் பிரித்தானியாவில் வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்த நிலையில் தன்னுடைய கணவருடன் மருத்துவமனை செல்வதற்காக காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கணவரிடம் அனைத்து சொத்துக்களையும் விற்றுவிட்டு, தன்னுடன் பிரித்தானியாவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த விடயத்தில் இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில் ஆத்திரமுற்ற Nirankar, தான் வைத்திருந்த துப்பாக்கியினால் Kulwant Kaur-யின் முகத்திலேயே ஆறு முறை சுட்டுள்ளார்.

இதில் சம்பவஇடத்திலேயே Kulwant Kaur இறந்துவிட, பொலிசார் அவரது கணவரை கைது செய்தனர். இதுகுறித்து பிரித்தானியாவில் இருக்கும் அவர்களது பிள்ளைகள் கூறுகையில், ‘எங்களின் பெற்றோர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். ஒருபோதும் எங்களது தாயிடம் தந்தை பாசமாக நடந்து கொண்டதில்லை, அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மொஹாலியில் உள்ள பொலிசாருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

இதனை சாட்சியாக கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி Nirmal Singh தெரிவித்துள்ளார்.

88 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து தண்டனை : பாடசாலை ஆசிரியர்கள் வெறிச்செயல்!!

 

இந்திய மாநிலம் அருணாசல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைக்கப்பட்டு தண்டனை வழங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசல பிரதேசத்தின் இட்டா நகரில் செயல்பட்டு வரும் குறித்த பள்ளியில் மாணவிகள் செய்த சிறிய தவறு ஒன்றிற்காக இந்த கொடூரமான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை மூன்று ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவிகளுக்கு கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இட்டா நகரில் அமைந்துள்ள கஸ்தூரிபா காந்தி பாலிக்க வித்தியாலயா என்ற அந்த புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் 8 மற்றும் 7ம் வகுப்பு மாணவிகள் 88 பேருக்கு மிகவும் மோசமான இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் அனைவரும் மற்ற பள்ளி மாணவிகள் முன்னிலையில் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். குறித்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை பற்றியும், அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் பற்றியும் தவறாக ஊமை கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதம் 7ம் வகுப்பிற்கும், 8ம் வகுப்பிற்கும் இடையில் தரையில் கிடந்துள்ளது. இதை எழுதியது யார் என்று தெரியாததால் இரண்டு வகுப்பிலும் இருந்த அனைத்து மாணவிகளுக்கும் சேர்த்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாணவிகள் யாரும் வெளியில் வாய் திறக்க கூடாது என்றும் தண்டனை வழங்கிய ஆசிரியர்கள் மூவரும் மாணவிகளை எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் இதுகுறித்து வெளியில் சொல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த 88 மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து அருணாசல பிரதேச பள்ளி கல்வித்துறையிடம் நேரடியாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது தற்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான புகார் இட்டா நகர் காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆசிரியர்கள் மீது தற்போது வழக்கும் பதியப்பட்டு இருக்கிறது.

இன்று மாலைக்குள் அந்த மூன்று பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று இட்டா நகர் பகுதியின் உதவி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அருணாசல மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலை : 525 பேர் கடும் பாதிப்பு!!

 
நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலையினால் நோர்வூட் மற்றும் பொகவந்தலாவ பிரதேசங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுடன் அப்பகுதிகளைச் சேர்ந்த 134 குடும்பங்களைச் சேர்ந்த 525 பேர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுடன், மக்களின் குடியிருப்புக்களிலும் நீர் புகுந்துள்ளது. காசல்றீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளமையினால் நோர்வூட் நகர கரையோர குடியிருப்புக்களில் வெள்ளம் புகுந்தமையினால் 74 குடும்பங்களைச் சேர்ந்த 333 பேர் இடம்பெயர்ந்து நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திலும் நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

பொகவந்தலாவ, கேர்கஸ்வோல்ட், கெம்பியன் பகுதிகளிலும் குடியிருப்புக்கள் சேதமுற்றும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளமையினால் 60 குடும்பங்களை சேர்ந்த 242 பேர் இடம்பெயர்ந்து சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியுள்ளனர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக காசல்றீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 8 அடி உயர்வடைந்துள்ளதாகவும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது உடமைகளை இழந்து நிர்க்கதிக்குள்ளான நிலையிலுள்ளவர்களுக்கு உலருணவு பொருட்களை வழங்க பொலிஸாரும், அம்பகமுவ பிரதேச செயலகமும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் உயிர் பிரியும் நேரத்திலும் பலரது உயிர்களை காப்பாற்றிய சாரதி!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வடக்கு பகுதியில் சாரதி ஒருவர் தனது உயிர் பிரியும் நேரத்திலும் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் சாவகச்சேரி வடக்கில் நேற்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

திருமண மண்டபத்துக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன்போது வீதியோரம் வாகனத்தைப் பாதுகாப்பாக நிறுத்திய பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி வதிரி ஸ்ரீபரமானந்தா சிறுவர் முதியோர் பராமரிப்பு நிலைய பஸ்ஸின் சாரதியான குமாரசாமி நவரத்தினம் (வயது – 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்விற்காக வடமராட்சியில் இருந்து பெண் வீட்டார் பஸ்ஸில் சென்றுள்ளனர். இதன்போது பஸ்ஸை செலுத்தி வந்த நவரத்தினத்திற்குத் திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. தாங்க முடியாத வலியுடனும், வாகனம் விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்ற கவனத்துடனும் பஸ்ஸை வீதியோரமாக பாதுகாப்பாக நிறுத்த அவர் முயன்றுள்ளார்.

இதில், வீதியோரத்தின் நீர்க்குழாய் புதைப்பதற்காகத் தோண்டப்பட்ட குழியில் பஸ்ஸின் சில்லு புதைந்தது. அதற்கு மேல் பஸ் நகர முடியாத நிலையில் சாரதி பஸ்ஸில் சாய்ந்தவாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையைப் பார்வையிட்ட பதில் நீதிவான் ப.குகனேஸ்வரன் வைத்தியசாலையின் சவச்சாலைக்குச் சென்று சடலத்தை நேரில் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

குமரிக் கடலில் உருவானது ஒகி புயல் : மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி தற்போது புயலாக உருவெடுத்துள்ளது.

குமரியில் இருந்து 60 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ள இந்த புயலுக்கு ஒகி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் மணிக்கு 65 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவருக்கு  வவுனியா மேல் நீதிமன்றத்தால் கடூழிய சிறை!!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 9 வயதுடைய சிறுமியினை பாலியல் வன்புணர்வு புரிந்த குற்றத்திற்காக 31 வயது நிரம்பிய நபரிற்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (30.11.2017) விதிக்கப்பட்டிருகின்றது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
2009ம் ஆண்டு 07ம் மாதம் 14ம் திகதி செட்டிகுளம் மெனிக்பாம் பகுத்தியில் தன்னுடைய தந்தை மற்றும் சிறிய தாயுடன் வசித்து வந்த 09 வயதுச் சிறுமியை குறித்த குற்றவாளி ஆண்டியாபுளியங்குளம் காட்டுபிரதேசத்திற்கு கடத்திச்  சென்று பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சம்பவம் இடம்பெறும் போது குற்றவாளிக்கு 22 வயதாகும்.
குறித்த பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் விளைவாக  சிறுமியின் இனப்பெருக்கத் தொகுதியும், சமிபாட்டுத் தொகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டு சிறுமி கொழும்பு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உடடுத்தபட்டு பின்னர் தொடர்ச்சியாக 02 வருடங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.
குறித்த குற்றசம்பவம் தொடர்பிலே சட்டமா அதிபர் திணைகளத்தினால் 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி 2 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஆரம்பத்தில் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுக்கப்படிருந்த போதிலும் குறித்த குற்றவாளி ஏற்கனவே இதையொத்த இன்னுமொரு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கிலே வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் குற்றவாளியாக குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்ட காரணத்தினால் வவுனியா நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் கோரிக்கையின் பேரில் இவ் வழக்கினை விசாரிப்பதற்காக மன்னார் மேல்நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.எ.மனாப் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டார்.
அதனடிப்படையில் வழக்கு விசாரணைகள் 2017ம் ஆண்டு 07ம் மாதம் 27ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தொடருநர் தரப்பிலே அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால்  சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டு 2017ம் ஆண்டு 10ம் மாதம் 26ம் திகதியன்று வழக்கு விசாரணைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் இன்றைய தினம் மேல்நீதிமன்ற நீதிபதி ரி.எல்.எ.மனாப் குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், ரூபா 10000 தண்டபணமும், தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்திலே 2 மாத சாதாரண சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா 250,000 நஷ்ட ஈட்டுப்பணம் வழங்கவும். நஷ்ட ஈட்டுப்பணம் வழங்கத்தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இதே குற்றவாளிக்கு 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி அரசடிகுளம் பிரதேசத்தில் ஒரு சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றசாட்டிற்காக 10 வருடகால கடூழிய சிறைத்தண்டனை 2017ம் ஆண்டு 05ம் மாதம் 23ம் திகதி விதிக்கப்பட்டு குறிப்பிட்ட குற்றவாளி தற்போது வவுனியா சிறைச்சாலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.‌

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச ஊழியர்களை அச்சுறுத்திய பொலிசார்?

 
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி கடந்த (28.11.2017) அன்று காலை தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் உட்பட வடக்கின் ஐந்து சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று (30.11.2017) காலை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பேரூந்து நிலையத்தில் அமந்திருந்த இ.போ.ச ஊழியர்களை அழைத்து மத்திய பேரூந்து நிலையத்திற்கு வருகின்ற பேரூந்துகளை உள்ளே அனுமதிக்கவும் தடுக்க வேண்டாமேன தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த இ.போ.ச ஊழியர்கள் மத்திய பேரூந்து நிலையத்தினுள் வருகின்ற பேரூந்துகளை நாங்கள் தடுக்கவில்லை . எங்களது பணிப்புறக்கணிப்பு தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டுகின்றோம். அதற்கு அவர்கள் ஒத்துளைப்பு வழங்கி செல்கின்றனர் என தெரிவித்தனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பேரூந்து நிலையத்தில் அமந்திருந்த அனைத்து இ.போ.ச ஊழியர்களையும் அழைத்து அருகில் நின்ற பொலிஸாரை அழைத்து இவர்களின் அடையாள அட்டையினை பதியுமாறு கோரியதுடன் , இவ்விடத்தில் நின்றால் உங்களை கைது செய்வேன் என தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் அச்சுறுத்தலுக்குள்ளான இ.போ.ச ஊழியரோருவர் கருத்து தெரிவிக்கையில், எமது தேவை நிமிர்த்தம் மத்திய பேரூந்து நிலையத்தில் நின்ற சமயத்தில் பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டோம். எமது அடையாள அட்டைகள் பதியப்பட்டு , பெயர் விபரங்கள் பதியப்பட்டு , இனியும் இவ்விடத்தில் நின்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமேன அச்சுறுத்திச் சென்றார். நாங்கள் தற்போது எங்களது தேவைக்கு கூட பேரூந்து நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை வினாவிய போது,

மத்திய பேரூந்து நிலையத்தினுள் வருகின்ற பேரூந்துகளை உட்செல்லவிடாது வெளியே செல்லுமாறு அங்கிருக்கும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பதாக எமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்களின் அடையாள அட்டையினை பதிவு செய்தாக தெரிவித்தார். தற்போது மத்திய பேரூந்து நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய சூறாவளி : திணைக்களம் எச்சரிக்கை!!

அடுத்த வாரம் பாரிய சூறாவளி தாக்குத்திற்கு இலங்கை முகங்கொடுக்கவுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வாரம் சூறாவளியில் இருந்து மீண்டு வந்த இலங்கை அடுத்த வாரம் பாரிய சூறாவளி ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாகும் அழுத்தம் மற்றும் இரண்டாவது வெப்பமண்டல அச்சுறுத்தல் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்படவுள்ளது.

இதன் காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவில் பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக நேற்று இலங்கை முழுவதும் அடை மழை பெய்ததோடு பலத்த காற்று வீசியமையால் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் அடுத்த வாரம் இலங்கை, தென்னிந்தியா, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் தெற்கு கேரளா ஆகிய பகுதிகளில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் போது பாரிய வெள்ள ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்!!

ஸ்மார்ட்ஃபோன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களிலும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போவது அல்லது முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் ஆவது போன்ற பிரச்சினைகள் இன்றும் இருந்து வருகின்றன.

சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட்ஃபோன்களில் வேகமாக சார்ஜ் செய்ய பல்வேறு பெயர்கள் கொண்ட தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது. என்றாலும், இவை பேட்டரியை குறைந்த நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் அளவு திறன் கொண்டிருப்பதில்லை.

அந்த வகையில், சாம்சங் அறிமுகம் செய்துள்ள புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்ஃபோன் பேட்டரிகளை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வுகளில் ஸ்மார்ட்ஃபோன்களை குறைந்த நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

தென் கொரிய நிறுவனம் கண்டறிந்துள்ள புதிய வகை பேட்டரி பொருளானது, வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட வேகமாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கண்டறிந்துள்ள புதிய பொருள் கிராஃபைன் பெல் என அழைக்கப்படுகிறது. சாம்சங் இதில் பயன்படுத்தும் பொருள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட ஐந்து மடங்கு வேகமாக சார்ஜ் செய்யும்.

தற்போது பயன்படுத்தப்படும் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் கிராஃபைன் பெல் முழுமையாக சார்ஜ் செய்ய 12 நிமிடங்களே ஆகும் என சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இதன் திறன் 45 சதவிகிதம் வரை நீடிப்பைப் பெறும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற வானிலை மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!!

கொழும்பிற்கு மேற்கு பக்கமாக 300 கிலோமீற்றர் தொலைவில் அரேபிய கடலில் தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சில மணித்தியாலயங்களில் சுழல்காற்றாக வீரியமடைந்து மேற்கு – வடமேற்கு பகுதியூடாக நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெற்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் மணித்தியாலத்திற்கு 90 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதனால் மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள 66 பிரதேச செயலகப்பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த காப்புறுதி திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு நடவடிக்ககை எடுக்கபட்டுள்ளதாக அனர்தத முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 4 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்ட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 1900 தற்காலிக கூடாரங்கள் கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அனர்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

இதற்காக முப்படையினர் மற்றும் பொலீசாரின் உதவியும் பெற்றுக்ெகாள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உற்சாகத்தில் திளைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

 

தர்மதுரை புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உற்சாகத்தில் திளைக்கிறார். காரணம் கேட்ட போது, நான் மதிக்கும் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம் , வெற்றி மாறன், கௌதம் வாசுதேவ் ஆகியோர்களின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறேன். இது போதாதா என்னுடைய உற்சாகத்திற்கு என கேட்கிறார்.

இவர் தற்போது முன்னணி இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள் மற்றும் கதையின் நாயகி போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க ஒப்புக் கொள்கிறாராம். அத்துடன் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியிலும் நடிக்க தயார் என்றும் சொல்கிறார்.

இவரது கையில் தற்போது வட சென்னை, துருவ நட்சத்திரம், மணிரத்னத்தின் பெயரிடப்படாத படம், லட்சுமி, இது வேதாளம் சொல்லும் கதை, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவரது நடிப்பில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் கடைசியாக வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் தற்கொலைகளுக்கு முடிவு கட்டிய மார்க்!!

பேஸ்புக் லைவ் அல்லது பதிவுகளில் தற்கொலை சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்பவர்களை கண்டறியும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய அம்சத்தினை வழங்க உள்ளது.

அதன்படி பேஸ்புக் பதிவு அல்லது லைவ் வீடியோ உள்ளிட்டவற்றில் தற்கொலை சார்ந்த கருத்துக்களை ஒருவர் பயன்படுத்தும் போது பெர்டன் ரெகக்னேஷன் என்னும் வழிமுறையை பயன்படுத்தி பேஸ்புக் கண்டறியும். இது குறித்து பேஸ்புக்கின் தயாரிப்பு மேலாண்மை பிரிவு துணை தலைவர் கை ரோசென் கூறுகையில்,

“பேஸ்புக்கில் உள்ள நபர்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் யாராவது மனச்சோர்வில் இருந்தால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குபவருடன் இணைக்க பேஸ்புக் உதவி செய்து வருகிறது.

மேலும் பேஸ்புக்கின் Proactive Detection எனும் அம்சத்தின் மூலமாக உடனடியாக பதில் அளித்தவர்களுடன் இணைந்து பேஸ்புக் பணியாற்றியுள்ளது.

பேஸ்புக் பதிவுகளில் உதவி கேட்கும் அல்லது பிரச்சனைகளை குறிக்கும் சில வார்த்தைகள் கண்டறியப்படுகிறது. இந்த அம்சத்தின் கீழ் சில இடங்களில் யாரும் அறியாத வீடியோக்களையும் தொழில்நுட்ப உதவியுடன் பேஸ்புக் கண்டறிந்துள்ளது .

தற்கொலை தடுப்பு மற்றும் சுய தீங்கு விளைவிப்பவர்களுக்கு வழிகாட்டுவதில் அனுபவம் மிக்க குழுவினர் பேஸ்புக்கில் பணியாற்றி வருவதால் செப்டம்பர் மாதத்தில் ஒன்லைன் சவால்கள் சுய தீங்கு மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்களை ஆதரிக்கும் வார்த்தைகள் ஹேஷ்டேக் மற்றும் குரூப் பெயர்களை இந்தியாவில் இயங்கி வரும் தற்கொலை தடுப்பு நிறுவனங்களுடன் இணைந்து சேகரிக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

உலக தற்கொலை தடுப்பு தினமான செப்டம்பர் 10ஆம் திகதி துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் தற்கொலை தடுப்பு மற்றும் இதற்கு ஆதரவளிக்கும் குழுவினர் சார்ந்த டூல்ஸை இந்திய பயனர்களின் நிவ்ஸ் பீடில் பேஸ்புக் வழங்க துவங்கியது.

வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் : அமெரிக்கா எச்சரிக்கை!!

பதற்றமான சூழ்நிலையில், போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த ஏவுகணை சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து வடகொரியாவுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.

இதைதொடர்ந்து அமைதியாக இருந்த வடகொரியா 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இது ஜப்பானின் கடல் பொருளாதார மண்டல பகுதியில் அதாவது கடலில் விழுந்தது. இத்தகவலை தென் கொரியா தெரிவித்தது. அதை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை அமெரிக்கா முழுவதையும் தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலே கூறுகையில், அனைத்து நாடுகளும் வட கொரியாவுடனான வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும். பதற்றமான சூழ்நிலையில் போர் மூண்டால் வட கொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபே மற்றும் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பிரபல கிரிக்கெட் வீரர்?

பயிற்சியாளருடன் மோதலால் பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள பேட்ஸ்மேன் உமர் அக்மல் குறித்து சமூக வலைதளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கடவுளின் அருளால் நான் நலனுடன் நன்றாக இருக்கிறேன். சமூக வலைதளத்தில் என்னை பற்றி வந்த தகவல்கள் எல்லாமே தவறானவை. அதை யாரும் நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

70 வயது முதியவராக மாறிய நடிகர்!!

சலீம், தர்மதுரை படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் மருது உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார்.

அதை தொடர்ந்து பில்லா பாண்டி, வேட்டை நாய், தனிமுகம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதேசமயம் விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் உள்ளிட்ட சில படங்களில் வில்லன் வேடத்தையும் தொடர்ந்து வருகிறார்.

தற்போது ஆர்.கே.சுரேஷ் மலையாள படத்தில் 70 வயது முதியவராக நடிக்கிறார். முதன்முறையாக மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள ஆர்.கே.சுரேஷ், சிகாரி சாம்பு என்கிற படத்தில் தான் இப்படி ஒரு கெட்டப்பில் நடிக்கிறார்.

அதுமட்டுமல்ல, இப்படத்தில் 25 வயது இளைஞராகவும் நடிக்கிறார். குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் ஷிவதா நாயர் கதாநாயகியாக நடிக்க, ஆர்டினரி புகழ் சுகீத் இந்தப்படத்தை இயக்குகிறார்.

மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் உயிரிழப்பு : வெவ்வேறு பகுதிகளில் கரையொதுங்கிய சடலங்கள்!!

தொடந்துவ மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் படிக்கச் சென்ற படகு ஒன்றில் இருந்த 05 மீனவர்கள் விபத்துக்கு உள்ளாகியதாக படகு கண்காணிப்பு மத்திய நிலையம் கூறியுள்ளது.

இந்த விபத்தில் நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு மூனவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மீனவரின் சடலம் அம்பலாங்கொட பட்டபெதிமுல்ல கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலுமொரு மீனவரின் சடலம் அதுரல கடலோரத்தில் கரையொதுங்கியுள்ளது.