சீரற்ற வானிலையால் 4 பேர் உயிரிழப்பு, 23 பேரை காணவில்லை!!

சீரற்ற வானிலை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலி, கம்பஹா மற்றும் பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் இருவர் மீனவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை கடற்தொழிலுக்கு சென்ற மேலும் 23 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை சேர்ந்த மூன்று மீனவர்களும் காலி மாவட்டத்தினை சேர்ந்த 10 மீனவர்களும் காணாமல் போயுள்ளதுடன் மொனராகலை மாவட்டத்தினை சேர்ந்த 10 பேரும் காணாமல் போயுள்ளனர்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலத் திணைக்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையின் தென்மேற்கு பக்கமாக 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் மேலும் வலுவடைந்து அரேபிய கடற்பரப்பு ஊடாக நகரும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்துடனான காற்று வீசக்கூடும் எனவும் பல பகுதிகளிலும் கடும் மழைபெய்யக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் கரையோரப்பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு, சப்ரகமூவ, மத்திய, ஊவா ம்றறும் மேல் மாகாணங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் பொறியியலாளர் பரிதாபமாக உயிரிழப்பு!!

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக இலங்கை வந்த கடற்படை பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிக வேகத்தில் பயணித்த சொகுசு மோட்டார் வாகனம் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பன்னிப்பிட்டிய மஹல்வராவ சந்தியில் நேற்று அதிகாலை விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாவ, பன்னிப்பிட்டிய, கட்டுகுருந்த பிரசேத்தை சேர்ந்த லுமால் மதுசங்க என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகனத்தில் பயணித்த 5 பேர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் வெளிநாட்டு கப்பலில் கடற்படை பொறியியலாளராக செயற்பட்டுள்ளார். அவர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகைத்தந்துள்ள நிலையில், நண்பர்களுடன் விருந்து ஒன்றுக்கு சென்று கொட்டாவ நோக்கி செல்லும் போதே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இடையில் வந்த மோட்டார் சைக்கிளை காப்பாற்ற முயற்சித்த போது மரத்தில் வாகனம் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட அண்ணன், தங்கை : உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!!

காணாமல் போயிருந்த நிலையில், மஸ்கெலியா – கவரவில பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அண்ணன், தங்கை ஆகிய இருவரினதும் பிரதே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனை நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது. இதன்படி, குறித்த இருவரும் நீரில் மூழ்கியமையால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைகளை தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த அண்ணன், தங்கை இருவரும் பாக்றோ தோட்டத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தனர்.

இது குறித்து உறவினர்களினால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், குறித்த இருவரையும் நேற்று மதியம் கவரவில பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இலங்கை பெண்ணொருவர் 15 முறை கத்தியால் குத்தி படுகொலை!!

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நியூயோர்க் Staten தீவு பகுதியில் நேற்று பிற்பகல் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

63 வயதான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவரது முகம் மற்றும் உடலில் கிட்டத்தட்ட 15 கத்தி குத்து காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை காப்பாற்ற முயற்சித்த Mark என்ற 56 வயதுடைய நபர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் Staten தீவு பகுதியை சேர்ந்த கீதா எனப்படும் இலங்கை பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் மீது கொடூரமான கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை அவதானித்த அயல் வீட்டு நபர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதனை அவதானித்த சந்தேக நபர் மேலும் தீவிரமாக அவரை குத்திவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது உடனடியாக செயற்பட்ட பொலிஸார் 27 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கீதா வங்கிக்கு சென்று வந்த சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், திருட்டுச் சம்பவம் ஒன்று கொலை சம்பவமாக மாறியுள்ளதென கீதாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சில மணி நேரங்களில் இலங்கை உறவினர்களின் திருமணத்திற்கு செல்ல கீதா உட்பட குடும்பத்தினர் ஆயத்தமாகியிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறந்து போன அப்பா நான்கு வருடங்களாக பிறந்த நாள் வாழ்த்து அனுப்பும் அதிசயம்!!

 
அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து வருகிறார் பெய்லி செல்லர்ஸ். இவரது தந்தை மைக்கேல் செல்லர்ஸ் கடந்த நான்கு வருடமாக பெய்லிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வருகிறார்.

ஆனால் மைக்கேல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே மரணம் அடைந்து விட்டார். மேலும் பெய்லிக்கு சரியாக பிறந்த வாழ்த்து செய்தியோடு ஒவ்வொரு வருடமும் பூங்கொத்தும் வந்து இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது 21வது பிறந்த நாள் கொண்டாடிய அந்த பெண்ணுக்கு அதேபோல் வாழ்த்து செய்தி வந்து இருக்கிறது.

தற்போது வந்த அந்த வாழ்த்து செய்திதான் இறந்த அப்பாவின் கடைசி பிறந்த வாழ்த்து செய்தி என்று அந்த பூங்கொத்தில் எழுதி இருக்கிறது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து வந்தார் மைக்கேல் செல்லர்ஸ். 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு நாள் திடீர் என்று அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல் அடுத்த ஆறு மாதத்திற்குள் எப்படியும் மரணம் அடைந்து விடுவார் என்று அவருக்கு நாள் குறிக்கப்பட்டது. அதையடுத்து அடுத்த ஆறு மாதத்தை அவர் மிகவும் சோகமயமாக கழித்து இருக்கிறார்.

இந்த நிலையில் அதே வருடம் ஆகஸ்ட் மாதம் மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் அவர் இறந்து சரியாக மூன்ற மாதம் கழித்து நவம்பரில் அவரின் கடைசி மகள் பெய்லி செல்லர்ஸுக்கு பிறந்த நாள் வந்து இருக்கிறது.

சரியாக இரவு 12 மணிக்கு அவரது வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டுள்ளது. வெளியில் சென்று பார்த்தால் அங்கு ஒரு பூங்கொத்து மட்டும் இருந்துள்ளது. அதில் ”நான்தான் ‘மைக்கேல், உன் அப்பா. உனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. இதை பார்த்ததும் அந்த பெண் அந்த இடத்திலேயே அழுது இருக்கிறார்.

மேலும் அந்த பூங்கொத்துடன் ஒரு கடிதமும் இணைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் ”உன்னுடைய 21 வயது பிறந்த நாள் வரை நீ இப்படியான கடிதங்களை பெறுவாய். பிறந்த நாளுக்கு மட்டுமில்லை உன் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான பல நாட்களுக்கும் உனக்கு இப்படி பூங்கொத்து கிடைக்கும். 21 வயதுக்கு பின் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று உருக்கமாக எழுதி இருக்கிறார்.

அதே போல் அடுத்தடுத்த பிறந்த நாளுக்கு சரியாக அந்த பெண்ணுக்கு கடிதம் வந்துள்ளது. இதற்கான அனைத்து திட்டங்களையும் அந்த தந்தை மரணம் அடைவதற்கு முன்பே செய்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் தன்னுடைய 21 வது பிறந்த நாளை ஒரு வாரத்திற்கு முன் கொண்டாடினார். அப்போது அதேபோல் அப்பாவிடம் இருந்து பூங்கொத்து வந்துள்ளது.

அதில் ”இதுதான் நான் உனக்கு சொல்லும் கடைசி வாழ்த்து. இனி நீ என்னை நினைத்து அழவே கூடாது. உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். உனக்கு தேவைப்படும் சமயங்களில் உனக்கு அருகில் நான் இருப்பேன். நான் இருக்கும் இடம் நன்றாக இருக்கிறது. விரைவில் சந்திக்கலாம்” என்று எழுதியுள்ளார். தற்போது அதை அந்த பெண் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பசிக்கு தேங்காய் சாப்பிட்டு பாட்டிக்கு பயந்து இரவை வீதியில் கழித்த சிறுமி!!

பாதுகாப்பின்றி வீட்டில் இருந்து வெளியேறி குளியாப்பிட்டிய ஹெம்பவ ஸ்ரீ சுதர்மாராமய விகாரைக்கு அருகில் அழுது கொண்டிருந்த 13 வயதான சிறுமியை அருகில் பயணித்த கிராமவாசிகள் அவதானித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சிறுமி இரவு முழுவதும் வீதியில் இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் சிறுமியை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.
பசி காரணமாக தேங்காய் ஒன்றை உடைத்து சாப்பிட்டதாக கூறி, பாட்டி தன்னை தாக்கி அச்சுறுத்தியதாக சிறுமி கூறியுள்ளார். இதன் காரணமாக நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
சிறுமி குளியாப்பிட்டிய நகரில் 8 ஆம் வகுப்பில் கற்று வருவதாக தெரியவருகிறது. சிறுமியின் தாய் கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன் தந்தை கண்டியில் இருப்பதாக கூறியுள்ள சிறுமி, தனது பாட்டியுடன் ஹெம்பவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியுடன் கிராமத்தவர் கதைத்து கொண்டிருந்த போது அங்கு வந்த வயதான பெண்ணொருவர் சிறுமி தனது பேத்தி எனக் கூறி அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார்.
எனினும் குறித்த சிறுமி அந்த பெண்ணை தனக்கு தெரியாது எனக் கூறியதன் காரணமாக பொலிஸார் வரும் வரையில் பிரதேசவாசிகள் சிறுமியுடன் இருந்துள்ளனர்.
குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சாவித்திரி சிறிமான்னவின் ஆலோசனைக்கு அமைய இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் வந்து சிறுமியையும் வயதான பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளரா என்பதை கண்டறிய பொலிஸார் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். தாக்கியதாக கூறப்படும் பாட்டி மற்றும் சிறுமியை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கன மழைப்பொழிவும் கடுங்காற்றும் வீசக்கூடும் : மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

வங்காள விரிகுடாக் கடலில் அதிகரித்துள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் சீரற்ற வானிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக வானிலை அவதான நிலையம் சிவப்பு சமிக்ஞையை வௌியிட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் கன மழைப் பொழிவும் கடுங்காற்றும் வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் கடுங்காற்று வீசக்கூடும் எனவும் 100 முதல் 150 மில்லிமீட்டர் அளவில் மழைப்பொழிவு இடம்பெறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்க முடியும் எனவும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டைச்சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் குறிப்பாக மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் கனமழை, கடுங்காற்று வீசக்கூடும் எனபதுடன், கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்பிராந்தியங்களில் வாழும் மக்களும் மீனவர்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது நல்லதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் வேலையில்லாப் பட்டதாரிகள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!!

வவுனியாவில் வேலையில்லாப்பட்டதாரிகள் எதிர்வரும் சனிக்கிழமை 02.12.2017 காலை 9 மணிக்கு வவுனியா மையப் பேருந்து நிலையத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர்.

தமது கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சிவில் சமூகத்தினர், பாடசாலைச்சமூகத்தினர், பெற்றோர்கன். விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புக்கள், இளைஞர் கழகம் என்பன ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

கடந்த சனிக்கிழமை ஒன்றுகூடலில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது தொழில் உரிமையை வென்றெடுக்க எமக்கு கிடைத்துள்ள ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு இது.

தயவு செய்து அனைவரும் அணிதிரண்டு வாருங்கள். ஒவ்வொருவரும் குறைந்தது உங்கள் 10 நண்பர்களின் வரவை உறுதிப்படுத்துங்கள். கடந்த முறை வவுனியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது போன்று இம்முறையும் களம் வெற்றிபெற வேண்டும். தயவுசெய்து உங்கள் தனிப்பட்ட வேலைகளையும், கடமைகளயும் ஒதுக்கிவைத்து எம் அனைவருடனும் கைகோருங்கள் என அன்புடனும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் சமூகம்
வவுனியா மாவட்டம்

வவுனியாவில் இ.போ.ச ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி : தொடரும் பணிப்புறக்கணிப்பு!!

 
பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால் வட மாகாண இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என வட பிராந்திய சாலைகளின் இணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எஸ்.வாமதேவன் தெரிவித்துள்ளார்.

வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் இன்று இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் சந்திரசிறிக்கும், வடக்கின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மற்றும் வட பிராந்திய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை உடனடியாக பதவி விலக்குமாறு கோரி வவுனியா சாலை ஊழியர்களால் கடந்த 18ஆம் திகதி சேவைப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அன்றைய தினம் எமது தலைமைக் காரியாலயத்தில் இவர்கள் இருவரையும் மாற்றித் தருவதாக உறுதி மொழி வழங்கியிருந்தார்கள்.

ஆனால் 10 நாட்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமையால் செவ்வாய்க்கிழமை முதல் நாம் வட மாகாணம் தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளோம்.

இதனால் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வீதிகளில் காத்து இருக்கின்றனர்.

ஆனால் இன்றைய தினம் எமது சாலைக்கு வருகை தந்த அதிகாரிகள் கூட உரிய தீர்வைத் தரவில்லை. இதனால் நாம் தொடர்ந்தும் சேவை புறக்கணிப்பில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில்  கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தீர்ப்பு!!

இராணுவத்திற்கு சொந்தமான ரீ56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி இலங்கை இராணுவப் படைக்குச் சொந்தமான ரீ 56 வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றையும், 15 துப்பாக்கி ரவைகளையும், 4 துப்பாக்கி குண்டு கவசங்களையும் களவாடி பின்னர் அவற்றைப் பயன்படுத்தி வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களை செய்தமை தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் 2010 ஆம் ஆண்டு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் வவுனியா, மதவுவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்தனர்.

அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் வவுனியா, பட்டக்காடு குளப்பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக கருதப்பட்ட துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்திருந்தது.

இதனை அடுத்து அவை கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டது.

குறித்த குற்றச் செயல் தொடர்பில் வவுனியா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி சட்டமா அதிபரினால் குறித்த நபருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றபகர்வுப் பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முதலாவது குற்றச்சாட்டாக இராணுவத்திற்கு சொந்தமான ரீ 56 துப்பாக்கியை உடமையில் வைத்திருந்தமை மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டாக 15 துப்பாக்கி ரவைகளை உடமையில் வைத்திருந்தமை என்பன குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.

குறித்த குற்றப்பகர்வு பத்திரம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள், விளக்கங்கள் இடம்பெற்று நேற்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இராணுவத்திற்கு சொந்தமான ரீ56 ரக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டாவது குற்றச்சாட்டான துப்பாக்கி ரவைகளை உடமையில் வைத்திருந்தமைக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த நபர் 2009ஆம் ஆண்டு வவுனியா நாகர் இலுபைக்குளம் பகுதியில் வீடு புகுந்து ஆயுத முனையில் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றத்திற்காக 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், மேலும் 2010ஆம் ஆண்டு கணேசபுரம் பகுதியில் வீடு புகுந்து ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த குற்றத்திற்காக 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் முன்னதாக விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகளுக்குப் போட்டியாக நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் ரோபோ!!

உலகில் முதன்முறையாக நவீன தொழில்நுட்பத்தில் செயற்கையான முறையில் புத்திசாலி அரசியல்வாதியை உருவாக்கும் முயற்சியில் நியூசிலாந்து வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயற்கை அரசியல்வாதியை 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் களமிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாடுகளுக்கு இடையே அரசியலமைப்பு சட்டங்கள், கலாசாரங்கள் மாறினாலும் மாற்றமே இல்லாதவர்கள் அரசியல்வாதிகள் தான். அவர்களின் குணாதிசயங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.

அந்த வகையில், உண்மையே பேசக்கூடிய, மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொள்ளக்கூடிய வகையில், புத்திசாலித்தனத்துடன் செயற்கையான அரசியல்வாதியை வடிவமைக்கும் முயற்சியில் நியூசிலாந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெலிங்டனைச் சேர்ந்த 49 வயதான தொழிலதிபர் நிக் கேரிட்சன் தலைமையில் வடிமைக்கப்பட்டு வரும் இந்த செயற்கை அரசியல்வாதிக்கு ‘சாம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இது உள்ளூர் பிரச்சினை குறித்து மக்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.

வீட்டு வசதி, கல்வி, குடியேற்றம் குறித்த அரசின் கொள்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கும். தற்போது இந்த முயற்சி ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

விரைவில் இந்த செயற்கை அரசியல்வாதியை முழு திறமை படைத்ததாக மாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாக நிக் கேரிட்சன் கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றம், சமத்துவமின்மை போன்ற முக்கிய பிரச்சினைகள், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இவற்றுக்கு செயற்கை அரசியல்வாதி மூலம் தீர்வு காண முடியும். சாதாரண அரசியல்வாதிகளை விட செயற்கை அரசியல்வாதி மிகச்சிறப்பாக செயல்படுபவராக இருப்பர் என நிக் கேரிட்சன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக வலைத்தளம் மூலம் மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் அறிந்து அது குறித்த ஆய்வை விரைந்து அது மேற்கொள்ளும். பல நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் அரசியல் மற்றும் கலாசார பிளவுகளுக்கு ஒரு பாலமாக செயற்கை அரசியல்வாதி செயற்படுவார்.

2020 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. அதில், ‘சாம்’ அரசியல்வாதியை களமிறக்க நிக் கேரிட்சன் திட்டமிட்டுள்ளார். அந்நாட்டு சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில் இந்த முயற்சி வெற்றியடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

தொடங்கொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மகுருகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டுக்காயங்களுடன் வீதியில் வீழ்ந்து கிடந்த நபரை பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸார் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வொஷிங்டனில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்ற 86 வயது மூதாட்டி கைது!!

குண்டு இல்லாத வெற்றுத் துப்பாக்கியை காண்பித்து அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 86 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள வங்கியில் காலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கு 86 வயது மூதாட்டி உள்ளே வந்துள்ளார்.

நடக்க முடியாத நிலையில் இருந்த அவர் ‘வோக்கிங் ஸ்டிக்’ வைத்தே நடந்து வந்துள்ளார்.

அப்போது திடீரென தான் வைத்திருந்த ஒரு துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். அதனால் வங்கியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

உடனே பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியை கைது செய்தனர். அவர் விலங்கு வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்தார். அதை பெலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அப்போது அவர் மயங்கி வீழ்ந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்குப்பின் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது தான் வைத்திருந்தது குண்டுகள் நிரப்பாத வெற்று துப்பாக்கி என அவர் தெரிவித்தார். அது போன்று துப்பாக்கியில் குண்டுகள் இல்லை. அவரது கைப்பையிலும் குண்டுகள் காணப்படவில்லை.

இச்சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் மூதாட்டி இதே வங்கிக்கு வந்துள்ளார. அப்போது அவரிடம் இருந்து 400 டொலர் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது அதை மீண்டும் திரும்ப பெறவே கொள்ளையில் இறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிம்பு, தனுஷ் இணையும் சக்க போடு போடு ராஜா!!

சிம்பு இசையில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளார்.

நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் விவேக், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 22 ஆம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை டிசம்பர் 6 ஆம் திகதி வெளியிட இருக்கிறார்கள். மேலும் இதன் பாடல்களை தனுஷ் வெளியிட இருப்பதாக சந்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். சிம்பு இசையில் உருவான பாடல்களை தனுஷ் வெளியிடுவது இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தனது காதலியை மணக்கும் இளவரசர் ஹரி!!

இளவரசர் ஹரி தனது காதலியும் அமெரிக்க நடிகையுமான மெகன் மார்க்லேவை திருமணம் செய்துகொள்ளப்போவதை அறிவித்தது மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

இளவரசர் ஹரி, இது ஒரு அழகான காதல் திட்டம் என்றும், மார்க்லே ´நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி´´ என்றும் கூறினர்.

வெள்ளை பெல்ட் கொண்ட கோட் அணிந்திருந்த மார்க்லே, இளவரசர் ஹரியின் கரங்களைப் பற்றியபடி, அரண்மனையின் சன்கென் கார்டனில் பத்திரிகையாளர்கள் முன்பு சிறிது நேரம் தோன்றி, தனது நிச்சயதார்த்த வைர மோதிரத்தை காட்டினார்.

ஒரு பத்திரிகையாளர் உங்களுக்கு மார்க்லேவை எப்போது தெரியும் என்று கேட்ட போது, நாங்கள் முதல் முறை சந்தித்தபோதே என்றார் ஹரி.

மார்க்கெல்லின் நிச்சயம் இளவரசர் ஹாரியால் வடிவமைக்கப்பட்டது மேலும் அவருக்கு அணிவிக்கப்பட்ட இரண்டு வைர மோதிரங்கள் மறைந்த அவரது தாயார் டயானாவினுடையது என்று கென்சிங்டன் மாளிகை அறிவித்துள்ளது.

அந்த மோதிரத்தின் நடுவே, இவ்விருவரும் ஒன்றரை ஆண்டுகள் கழித்த போட்ஸ்வானா நாட்டிலிருந்து பெறப்பட்ட வைரம் பதிக்கப்பட்டுள்ளது. மோதிரத்தின் வளையம் தங்கத்தால் செய்யப்பட்டது.

12 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!!

12 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 22 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் சிலாபம் – வெல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேகநபருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.