வவுனியாவில் சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி!!

 
சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (14.11.2017) காலை 9.30 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்றது.

சுகாதார திணைக்களத்தின் தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி சுதர்சினி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தின் ஆரம்பத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்றது.

இப் பேரணியானது மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்திருந்தது. குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு அரசாங்க மருத்துவர் சங்கத்தின் வவுனியா கிளையினரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.

குறித்த நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள், உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு, நீரிழிவு நோயினை தடுப்பதற்கு ஒன்றிணைவோம் என்ற, விழிப்புணர்வுப் பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (13.11.2017) மதியம் 1.30 மணியளவில் 2 கிலோ 155 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து மொனறாகலை நோக்கி இ.போ.ச பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பயணப்பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து சோதனையிட்ட சமயத்தில் 2கிலோ155கிராம் கேரளா கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னினைப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதிப்பேரணி!!

 
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், கணவன்மார்களை மீட்பதற்கு ஜ.நா வில் குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவித்தும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் இன்று (14.11.2017) மதியம் 12.30 மணியளவில் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே 264வது நாளாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய அமைதிப்பேரணி பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக கண்டி வீதியினை வந்தடைந்து ஏ9 வீதியூடாக சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு ஈடுபடும் இடத்தினை வந்தடைந்தனர்.

வவுனியாவில் ‘மகிழ்வோர் மன்றம்’ மாவட்ட முதியோர் தின விழா – 2017!!

 
வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமும் மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து வழங்கும் ‘மகிழ்வோர் மன்றம்’ மாவட்ட முதியோர் தின விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (14.11.2017) காலை 7.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பேரூந்துகளில் முதியோர்களுக்கான ஆசனங்களை ஸ்ரிக்கர் ஒட்டி ஒதுக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் முதியோரின் உரிமைகள், அவர்களுக்கான கௌரவம், சமூக மதிப்பு என்பவற்றை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்து மணிக்கூட்டு சந்தியுடாக வந்து நகரசபை வீதியூடாக நகரசபை கலாச்சார மண்டபத்தை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. ரோஹன புஸ்பகுமார, வவுனியா வடக்கு, செட்டிக்குள பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வெங்கள செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கே.சிவகரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், மாகாண விவசாயப் பணிப்பாளர், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள், வவுனியா தொழிநூட்பக்கல்லூரி மாணவர்கள், வவுனியா விவசாயக்கல்லூரி மாணவர்கள் , வவுனியா இலங்கை உயர் தொழிநூட்பக்கல்லூரி மாணவர்கள், வவுனியா தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை மாணவர்கள், வவுனியா பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் , முதியவர்கள், சமூக ஆர்வளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

2 வயது குழந்தை போல் இருக்கும் 30 வயது நபர்: எப்போது இந்த நிலைமை மாறும் என கண்ணீர் விடும் தாய்!!

 
சீனாவில் 30 வயது நபர் ஒருவர் இரண்டு வயதில் இருந்து வளர்ச்சி இல்லாமல் அரிய வகை நோயின் காரணமாக அவதிப்பட்டு வருவதைக் கண்டு அவரது தாய் இந்த நிலைமை எப்போது மாறும் என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

சீனாவின் Anhuiமாகாணத்தில் உள்ள Yuexi கிராமத்தைச் சேர்ந்தவர் Chu Xiaoping(52). இவருக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு Wang Tianfang என்ற குழந்தை பிறந்துள்ளது.

நன்றாக வளந்து வந்த அக்குழந்தை, இரண்டு வயதிற்கு பின்னர் வளர்ச்சி அடையவில்லை, தற்போது அவருக்கு 30 வயது அடைந்த பின்னரும், தற்போது 2 வயது குழந்தை போன்று தான் உள்ளார். அதாவது 2 அடி 7 அங்குலம் தான் உள்ளார்.

இது குறித்து அவரது தாயார் கூறுகையில், இரண்டு வயதில் இருந்தே அவனுடைய வளர்ச்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை, பேச்சும் அந்த அளவிற்கு இல்லை.

இதனால் மிகுந்த மன வருத்தில் இருந்தேன், அப்போது தன் உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் இவனை கோவிலிலோ அல்லது ஏதேனும் சாலைகளிலோ விட்டு விட்டு வந்துவிடு, வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினர்.

ஆனால் தனக்கு மனம் வரவில்லை, தான் இங்கு மலைகளில் தேயிலை பறிக்கும் வேலை பார்த்து வருகிறேன், அதுமட்டுமின்றி சலவை தொழிலும் செய்து வருகிறேன்.

இவனுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையின் காரணமாக மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றாலும், இது ஏதோ ஒரு அரிய வகை நோய் எனவும், இவ்வளவு காலம் இவன் வாழ்ந்ததே பெரிய விடயம் என்று கூறுகின்றனர்.

ஆனால் நான் அவளுடைய ஆயுட்கால நீடிக்க வேண்டும் என்றும், அவன் நீண்ட காலம் வாழவேண்டும் என ஆசைப்படுவதாகவும், இந்த நிலைமை எப்போது தான் மாறுமோ எனவும் கண்ணீர் விட்டுள்ளார்.

ஆசிய கிண்ணப் போட்டியில் அசத்திய இலங்கை பந்துவீச்சாளர் : இலங்கை அணி அபார வெற்றி!!

மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப் போட்டியில், இலங்கை அணியின் பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மலேசியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின, நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்தது, போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக போயகோடா 84 பந்தில் 53 ஓட்டங்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி பிரவின் விக்ரமனின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 135 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ஆப்கானிஸ்தானை ஆட்டம் காண வைத்த பிரவீன் ஜெயவிக்ரம 6.5 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார், ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல் : அசத்தும் சீனா!!

சீனாவில் 20 கோடி மக்களின் பசியை போக்கும் அளவுக்கு கடல் நீரில் அரிசியை விளைய வைத்து சீன விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.

சீனாவில் கடல் நீரில் விவசாயம் செய்ய கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளின் துணையுடன் ஈடுபட்டுள்ளனர். அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.

சீனாவின் மஞ்சள் கடல் அருகே அமைந்துள்ள குயிங்டாவ் பகுதியில் கடல் நீரின் துணையுடன் சுமார் 200 வித்தியாசமான தானியங்களை ஆராய்ச்சியாளர்கள் பயிரிட்டனர்.

அதில், அரிசி வகைகளும் அடங்கும். இதில் ஒரு ஹெட்டேருக்கு சுமார் 4.5 டன் அரிசி விளையும் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பாத்தனர். ஆனால் 9.3 டன் அரிசி விளைந்துள்ளது.

இதில் 10க்கு மேற்பட்ட பகுதியில் அரிசிகளை பயிரிடும் பட்சத்தில் 20 கோடி மக்களுக்கு தேவையான 50 மில்லியன் டன் அரிசியை விளைவிக்க முடியும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, இதன் மூலம் சீனாவின் அரிசி உற்பத்தியை 20 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விளைந்த அரிசியின் 6 டன் அளவுக்கு ஒரு கிலோ 6 பவுண்ட் என விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்!!

 
மதுரையில் ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் குடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், கேசம்பட்டி கிராமத்தில் டீக்கடை வைத்திருப்பவர் தெய்வம். இவர் வளர்த்த ஆடு ஒன்று சில மாதங்களுக்கு முன்னர், குறைமாத கன்று ஒன்றினை ஈன்றுவிட்டு இறந்தது.

அதன் பின்னர், அந்த கன்றுக்கு தெய்வம் பசும்பாலை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் வளர்த்த நாயும் குட்டிகளை ஈன்று அதற்கு பால் குடுத்து வந்தது.

நாளடைவில், அந்த ஆட்டுக்குட்டிக்கும் நாய் பால் குடுக்க ஆரம்பித்தது, இதனைப் பார்த்த தெய்வம் கண்கலங்கி அழுதுள்ளார்.

அவர் கூறுகையில், மனிதர்கள் இடையே பல வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இந்த ஜீவன்களிடம் இப்படி ஒரு பரிமாற்ற உணர்வு இருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

இவரது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், இந்தக் காட்சியைக் கண்டு மனம் நெகிழ்ச்சியடைவதோடு புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டுப்படுத்த முடியாமல் காரை ஓட்டிய 14 வயது சிறுவன் : கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்!!

 
14 வயது சிறுவன் காரை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டியதால், கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவருடன் சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் கார் பார்க்கிங் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, சூப்பர் மார்க்கெட்டில் இருந்த சிறுவன் கார் பார்க்கிங் செய்து கொண்டிருந்துள்ளான்.

அப்போது கார் ஒன்றை நிறுத்த முற்படும் போது, காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சிறுவன் நடந்து வந்து கொண்டிருந்த கணவன், மனைவி மீது மோதியுள்ளான்.

அதன் பின் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் கர்ப்பிணி பெண் இறந்துவிட்டதாகவும், கணவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் காரை ஓட்டிய 14 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

காரில் ஏறி அமர்ந்த சிறுவன் வாகனத்தை பின்னோக்கி ரிவர்சில் எடுத்தபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் விபத்து நடந்ததாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவன் கர்ப்பிணி பெண் மீது மோதுவதற்கு முன்னர் இரண்டு கார்கள் மீது மோதிவிட்டு தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளான் என்று நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

நண்பர்களால் புதைக்கப்பட்ட கல்லூரி மாணவன்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

தஞ்சாவூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சரவணன்(18) கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் கடந்த 30 ஆம் திகதி காணாமல் போனதால் இவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். சரவணனை தேடும் முயற்சியில் ஈடுபட்ட பொலிசாருக்கு சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

சரவணன் மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே பெண் தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாகவே, குடிபோதையில் நண்பர்களே சேர்ந்து சரவணனை கொலை செய்து விட்டு, வெண்ணாற்றங்கரையில் உடலை புதைத்ததும், விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சரவணனின் நண்பர்களான ஆனந்த், நந்தகுமார், சரவணன், அஜித், கிருஷ்ணன் ஆகிய 5 பேரை பொலிசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து சரவணனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும், பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தினமும் 300 தம்பதியினர் விவாகரத்து!!

இலங்கையில் தினமும் சுமார் 300 தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்வது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கலாச்சார விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கலாச்சார திணைக்களத்தின் வழிக்காட்டலின் கீழ் காலி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற வாழும் கலை என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் திருமணமான கணவன், மனைவி குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது தினமும் சுமார் 300 தம்பதிகள் விவாகரத்துச் செய்துக்கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை போன்ற சிறிய நாட்டில் இது மிகவும் அதிகம்.

பல விடயங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன. சம வயதுடையவர்கள் மற்றும் குறைந்த வயதில் திருமணங்களை செய்துக்கொள்வது இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

குறைந்த வயதில் திருமணம் செய்துக்கொள்வதால் அனுபவங்கள் குறைவு. இந்த வயதுகளில் திருமணம் செய்துக்கொள்வோர் அவசரமான முடிவுகளை எடுக்கின்றனர். முன்கோபம் கொள்கின்றனர். இதனால் அவசரமான முடிவுகளை எடுத்து பிரிந்து விடுகின்றனர் எனவும் அனுஷா கோகுல பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணித்த விமானம் சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறக்கம்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 138 பயணிகளுடன் நேற்றிரவு (13.11) பயணத்தை ஆரம்பித்த விமானமொன்று சிறிது நேரத்தில் மீண்டும் தரைக்கப்பட்டுள்ளது.இயந்திர கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரை நோக்கி பயணித்த விமானமொன்றே மீள தரையிறக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 11. 30 இற்கு பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்திலிருந்த பயணிகள் மற்றுமொரு விமானத்தினூடாக இன்று அதிகாலை மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

சவுதிக்கு பாலியல் அடிமைகளாக விற்கப்படும் இலங்கை சிறுமிகள் : இளவரசி வெளியிட்ட தகவல்!!

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சிறுமிகள் சவுதியில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாக சவுதி இளவரசியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அல்வலீத் பின் தலால் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரின் முன்னாள் மனைவி அமீரா பின்த் அய்தான் பின் நயீப் சவுதியில் பாலியல் அடிமைகளாக சிறுமிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

இளவரசி அமீராவின் மேற்படி விடயம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பும் தகவல்களைக் கொண்ட பேட்டி கடந்த ஞாயிறுக்கிழமை, பிரான்ஸ் சஞ்சிகையான லீ மொண்டெவில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், ரோமானியா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளின் அழகான அநாதைச் சிறுமிகள் சவுதி அரேபியாவில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுகின்றனர்.

அதிலும் வௌ்ளைத் தோல் கொண்ட சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அங்கு பெரும் கிராக்கி காணப்படுகின்றது. அதேபோன்று பெரும் பணக்கார குடும்பங்கள் மது மற்றும் போதை மருந்துகளையும் பாவிக்கின்றனர்.

அந்தக் குடும்பங்களுக்குள்ள செல்வாக்கு காரணமாக பொலிஸாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. அத்துடன் தற்போதைக்கு சவுதியில் பல்வேறு குடும்பங்கள் ஒன்றிணைந்து ஆடிப்பாடி மகிழும் களியாட்ட வைபவங்கள் தாராள மது பரிமாறலுடன் நடைபெறத் தொடங்கியுள்ளன.

அவற்றில் பாலியல் அடிமையாக விற்கப்படும் சிறுமிகளின் நடனம் அரங்கேற்றப்படுகின்றது. குறித்த சிறுமிகளை பணம் கொடுத்து வாங்கும் நபர்களின் கட்டுப்பாட்டை விட்டு அவர்கள் வெளியில் இறங்கவே முடியாது என இளவரசி அமீரா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு வயது சிறுமி சடலமாக மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு வயது சிறுமி ஒருவரின் சடலம் பலாங்கொடை – ரன்தொலவத்த பகுதியில் இருந்து நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

பாதிமா சௌம்யா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் யாரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வீடு திரும்பிய சிறுமியின் தாய், மகளை காணவில்லை என தேடிய போது, வீட்டின் பின்பகுதியில் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் பொலிஸ் சேவையில் பிரபலமடைந்த இலங்கை தமிழ் பெண்!!

 
கனடாவில் பொலிஸ் துணை கான்ஸ்டபிளாக பிரபலமடைந்துள்ள இலங்கையில் தமிழ் பெண் ஒருவர் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தனது 9 வயதில் கனடா சென்ற கிஷோனா நீதிராஜா என்ற பெண் அங்கு பொலிஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் பொலிஸ் சேவையில் ஈடுபடும் கிஷோனா நீதிராஜா, தனது அனுபவங்களை கனேடிய ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துள்ளார். “ஒரு துணை கான்ஸ்டபிளாக எனது பயணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது. 2015 ஆம் ஆண்டு நான் பட்டம் பெற்றேன். ஆனால் எனது உணர்வு இங்கு ஆரம்பிக்கப்பட்டதல்ல. எனது 9 வயதில் எனது குடும்பத்துடன் இலங்கையின் ஒரு சிறிய நகரத்திலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தேன். எனது சிறுவயதிலிருந்து பொலிஸ் சேவையில் இணைய விருப்பம் கொண்டேன்.

ஆனால் மரபுசார்ந்த குடும்பத்தில் இருந்து வந்த எனது பெற்றோர், பொலிஸ் துறையில் பெண்கள் வேலை செய்வது குறித்து விருப்பம் இல்லாமல் இருந்தனர். இது என் கனவில் ஒரு தடையை ஏற்படுத்தியது.

பின்னர் Ryerson பல்கலைகழகத்தில் தாதியாக கல்வியை தொடர பதிவு செய்தேன். எனது நான்கு வருட பட்டப்படிப்பை முடித்துவிட்டு, என் கனவை கடைப்பிடிக்க முடிவு செய்தேன். தாதித் தொழில் மிகவும் பெரியது என்றாலும், என் மனம் குழந்தை பருவ கனவிலேயே இருந்தது.

அதிர்ஷ்டவசமாக, டொரண்டோ பொலிஸ் சேவையில் துணை கான்ஸ்டபின் பணியில் ஒரு தன்னார்வத் தொண்டராக விண்ணப்பிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கனடாவில் எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் எப்போதுமே அன்புடனும் இருந்த மகிழ்ச்சியான அதிகாரிகளை சந்தித்தேன். பொலிஸ் அதிகாரிகள் செய்யும் வேலை உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கின்றது, எனினும் சில நேரங்களில் அவை கவனிக்கப்படாமல் இருக்கின்றது.

தமிழ் சமூகத்தின் பலர் தமது சொந்த நாட்டில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் காரணமாக சட்ட அமுலாக்க துறை குறித்து அச்சத்திலேயே உள்ளனர். இந்த கருத்துகளை மாற்றுவதில் ஒரு பகுதியாகவும், அதேபோன்ற கனவுகளை பின்பற்ற விரும்பும் ஏனைய பெண்களை ஊக்கப்படுத்தவும் இது என்னை ஊக்கப்படுத்தியது.

எனது பல்கலைக்கழக 3 வது ஆண்டின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் MCIT உட்பட பல்வேறு சமூக ஈடுபாடு பற்றி விவாதிக்க கருத்தரங்கு ஒன்றிற்கு வருகைத்தந்திருந்தார். அவரது உரையாடலை நான் உண்மையில் விரும்பினேன். அது எனக்குள் ஒரு தீப்பொறியை ஏற்படுத்தியதை உணர்ந்தேன் மற்றும் எனது வாழ்க்கையை தொடர தைரியம் கிடைத்தது என எண்ணினேன்.

துணை கான்ஸ்டபிள் பதவியை வெற்றிகரமாக முடிந்த பிறகு, நான் என் பெற்றோருக்கு தகவல் வழங்கினேன். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், எனது புதிய நிலை குறித்து உற்சாகமாகவும் இருந்தனர். எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் எனக்கு மிக பெரிய ஆதரவாக இருந்தனர். பொலிஸ் பணி தொடர்பான எனது குடும்பத்தின் கருத்து ஒரு நேர்மறையான உணர்வாக உருவாகி, அதிக ஆதரவோடு என் விருப்பம் மேலும் இந்த பணியை தொடர என்னை அனுமதித்தது.

ஒரு துணை கான்ஸ்டபிளாக என் புதிய பயணம் எனக்கு வாய்ப்புகளை பல்வேறு வகையாக அமுல்படுத்தியது. ஒரு துணை கான்ஸ்டபிளாக இருப்பது சமூகத்துடன் சாதகமான ஈடுபாட்டை அனுமதிக்கும் ஒரு வெகுமதி மற்றும் தன்னார்வ நிலையாகும். துணை அதிகாரிகள் என்பது சமூக தொண்டர்கள், மிகவும் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான குழுவாகும். துணைப் பொறுப்பாளர்களாகவும், அதே அளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பையும் நாங்கள் கொண்டுள்ளோம். இதில் நேர்மறையான தொடர்பும் அடங்கும் மற்றும் டொரொன்டோ பொலிஸ் பிரதான மதிப்பீடுகளை நிரூபிக்கவும் உதவும்.

துணை உறுப்பினர்கள் பல்வேறு பின்னணியிலிருந்தும், சமுதாயத்திற்கு சேவை செய்ய, தங்கள் நேரத்தை வழங்கவும் தன்னார்வ திறமையுள்ளவர்களாகவும் உள்ளனர். பொது உறவுகளை அதிகரிக்க தனிநபர்களுடன் ஈடுபடும் பல சமூக நிகழ்வுகளில் துணை கான்ஸ்டபிள்கள் பங்களிக்கின்றனர். இந்த வேலை எனக்கு பிடித்த பகுதியாக உள்ளது, ஏனெனில் நான் பல்வேறு நபர்களுடன் தொடர்பு கொள்ளவும், அதேபோன்ற நலன்களைக் கொண்ட மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒரு நாள் ஒரு பொலிஸ் அதிகாரியாகவும், தமிழ் சமூகத்தில் நேர்மறையான ஈடுபாட்டை வளர்ப்பதற்கு உதவுவதுமே எனது கனவாகும். தாதி சேவை எனக்கு நுண்ணறிவை கொடுத்தது, மக்களை வேறு விதத்தில் பார்க்கும்படி என் கண்களை திறந்தது. ஒரு பதிவு செய்யப்பட்ட தாதி என்ற முறையில், ஒரு மருத்துவ அலுவலராக பணியாற்றுவதற்காக என் மருத்துவ மற்றும் துணை அனுபவங்களை என்னால் இணைக்க முடிந்தது.

நான் செல்ல நீண்ட வழி மற்றும் செய்ய பல முன்னேற்றங்கள் உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் எனது துணை கான்ஸ்டபிள் சீருடையை அணியும்போது, என் கனவுகளுக்கு நெருக்கமாக உணர்கிறேன்.

ஒரு பெண்ணாக, உடல் உடற்பயிற்சி என்பது பெரிய தடைகளில் ஒன்றாகும். ஆனால் அது என் விருப்பத்தை தொடர என்னை தடுக்காது. ஒவ்வொரு நாளும், நான் வலுவாக இருக்கவும், என்னை சிறப்பாக வைத்து கொள்ளவும் நான் கடினமாக உழைக்கிறேன். ஒரு நாள் என் கடின உழைப்பு எனக்கு பலன் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

யார் எல்லாம் கனவுகளுடன் இருக்கின்றீர்களோ நீங்கள், உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள். நாம் விருப்பத்துடனும், அன்புடனும் செய்யும் ஒரு காரியத்தினால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை எனது சொந்த அனுபவத்தின் ஊடாக நம்புகின்றேன். மகிழ்ச்சி உங்களை தேடி வரும். உங்களின் ஒவ்வொரு முயற்சியும் உங்களை ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும்….” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக வேகமான ஜெட் பெக் மூலம் வானில் பறந்து பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் கின்னஸ் சாதனை!!

 

அயர்ன் மேன் படத்தில் வருவது போன்று உலகின் மிக வேகமான ஜெட் பெக் மூலம் வானில் பறந்து பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அயர்ன் மேன் படத்தில் வரும் கதாநாயகன் உடலில் மாட்டப்பட்ட ஜெட் பெக் மூலம் வானில் பறந்து சென்று மக்களை காப்பாற்றுவார், அது போன்று நிஜ வாழ்க்கையில் ஜெட் பேக்கை உருவாக்கி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டிஷ் கிராவிட்டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வாகனங்களை சோதனை செய்து பார்க்கும் மூத்த பைலட்டுமான ரிச்சர்ட் பவுரிணிங் இந்த சாதனை படைத்துள்ளார்.

அவர் வடிவமைத்துள்ள ஆடையில் ஆறு எரிவாயு கலன்கள் உள்ளன, இவை ஒவ்வொன்றும் 22 கிலோ வரையிலான சக்தியை வெளிப்படுத்தி முன்னேறி செல்வதற்கு உதவுகிறது.

இது முழுவதும் மனிதனின் கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்படும். ரிமோர்ட் மூலம் கட்டுபடுத்த முடியாது.

ரிச்சர்ட் தனது உடலின் மூலம் இதை கட்டுபடுத்தி வானில் பறக்கிறார்.

இந்த ஆடை உலகின் மிக வேகமான ஜெட் பெக் என்ற சாதனை பெற்றுள்ளது, இதன் மூலம் மணிக்கு 51.53 கி.மீ. வேகத்தில் பறக்கலாம். அவர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்றார்.

அவரது ஜெட் பெக்கை சோதனை செய்து பார்த்த கின்னஸ் சாதனை பதிவாளர் பிரவின் படேல் அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.