வவுனியா பேருந்து நிலைய வர்த்தக தொகுதியில் நடைபாதை வியாபாரம் தடை : நகரசபைச் செயலாளர்!!

 
வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (25.10.2017) காலை அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் மக்கள் பயணம் மேற்கொள்ளும் நடைபாதையில் வியாபாரங்கள் மேற்கொள்வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இனிவரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வியபாபர நிலையங்களை உரிமையாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும், உங்களுடைய வியாபார நிலையங்களை நீங்கள் எவ்வாறு வைத்துள்ளீர்களோ அவ்வாறே நடைபாதைகளில் குப்பைகளை வீசாமல் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைப் போடுமாறும் வியாபார நிலையங்களுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடவேண்டாம் எனவும் இனிவரும் காலங்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியாவில் மாதா சொரூபம் விஷமிகளால் தாக்கப்படவில்லை!!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் மாதா சொரூபம் அமைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டி விஷமிகளால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டபோது, அவ்வாறான சம்பவங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மாதா சொரூபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒளி விளக்கிலிருந்து வெளியாகிய அதிக வெப்பம் காரணமாக கண்ணாடி வெடித்துச் சிதறியுள்ளதாகவும் இது திட்டமிட்ட நடவடிக்கை இல்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் கடுகதி ரயிலில் மோதி மாணவன் உயிரிழப்பு!!

 
வவுனியாவில் இன்று(25.10) காலை 10.30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் காதில் கெட்செட் போட்டுக்கொண்டு பாடல் கேட்டபடி சென்றபோது கடுகதி ரயிலில் மோதியதில் உயிரிழந்துள்ளார். வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த அமில சந்தகெலி என்ற 17 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் புகுந்த வெள்ளம்!!

 
வவுனியாவில் நேற்று (25.10) மாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்ட செயலகத்திலுள்ள பல திணைக்களங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பணியாளர்கள் பணிகள் மேற்கொள்ள முடியாமல் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதனைச்சீர் செய்து தருமாறும் பல தடவைகள் கோரியபோதும் உரியவர்கள் அக்கறை எடுக்கவில்லை என்றும் இனிவரும் காலம் மழைகாலமாவதால் இதனைச்சீர் செய்து தருமாறும் பணியாளர்கள் கோரியுள்ளனர்.

மக்கள் சேவை நிலையங்களான மாவட்ட செயலகத்திற்கு சேவைகளைப் பெறச் செல்லும் மக்கள் இதனால் பல அசெகரியங்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் மைத்திரியின் மறுமுகம்!!

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நாடாளாவிய ரீதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களில் கலந்து கொள்கின்றார்.

அந்த வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், இதன் பின்னர் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இவ்வாறு விஜயம் செய்யும் அவர் அங்கு பல்வேறு மக்களையும் சந்தித்து கலந்துரையாடுகின்ற நிலையில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடம் அளவளாவி மகிழ்வடையும் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன.

நாட்டின் ஜனாதிபதியாக பல பொறுப்புக்களை கொண்டுள்ள ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது மைத்திரியின் இன்னொரு முகத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவங்கள் : இலங்கையர்களிடம் இருந்து 10 கிலோ தங்கம் பறிமுதல்!!

இலங்கை மற்றும் கோவைக்கு இடையிலான விமான சேவை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும் 12 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கையிலிருந்து சென்ற பயணிகளிடம் இருந்து மட்டும் 10 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மண்டல சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் ஜி.சீனிவாசராவ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் கடந்த 20ஆம் திகதி கொழும்பிலிருந்து வந்த இலங்கையைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவரை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில், அவரது உடலில் உலோகப் பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதித்து சோதனை செய்ததில் வயிற்றில் பொருட்கள் இருப்பது உறுதியானது.

மருத்துவ சிகிச்சையின் அடிப்படையில் வயிற்றில் இருந்த 20 தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “குறைந்த அளவிலான தங்கக் கட்டிகள் 13 சதவீத வரி செலுத்தி கொண்டு வரப்படுகிறது அல்லது ஆபரணத் தங்கமாக கொண்டு வரப்படுகிறது.
விலை உயர்ந்த ஆபரணக் கற்கள், கொகைன் போன்ற போதைப் பொருட்கள் மட்டுமே, வயிற்றுக்குள் வைத்து கடத்தி வருகிறார்கள்.

குறைந்த மதிப்புள்ள தங்கத்தை வயிற்றில் வைத்து கடத்தி வந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றாலும், இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் கோவை விமானநிலையத்துக்கு பல்வேறு வகைகளில் கடத்தி வரப்பட்ட தங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் படி, கோவை விமானநிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை நகைகளாக, கட்டிகளாக 12.145 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.3.69 கோடி (இந்திய ரூபா). அதில் சுமார் 10 கிலோ தங்கம் இலங்கையிலிருந்து வரும் பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டவை.

கடந்த ஜூலை மாதம் முதல் கோவையிலிருந்து இலங்கைக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணம் என்பதால் பயணிகள் அதிகம் பேர் இந்த சேவையைப் பயன்படுத்துகிறார்கள்.
அதில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்களும் அதிகமாக இருப்பதால் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடத்தி வரப்படும் பொருட்களின் மதிப்பு 20 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்போது மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க முடியும்.

அதற்கும் குறைவாக இருக்கும்போது வரி, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும். பொருட்களை உடலில் மறைத்து கடத்தி வரும் பயணிகள் அரசு மருத்துவமனைக்கே கொண்டு சென்று சிகிச்சை வழங்க முடியும். ஆனால், அவசரத் தேவைக்காக அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சினிமா படத்தில் வரும் காட்சிகளை மிஞ்சும் வகையில் தற்போது உடலில் மறைத்து வைத்து தங்க பிஸ்கட் மற்றும் தங்க ஆபரணங்கள் கடத்தி வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சடலத்தை வைத்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம்!!

 
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் மலைத்தோட்ட மக்கள் நேற்று பிற்பகல் சடலம் ஒன்றை வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த மலைத்தோட்டத்தில் வசிக்கும் ஆர்.லெட்சுமன் என்ற 40 வயதான நபரொருவர் கடந்த 22ஆம் திகதி கிரெட்வெஸ்டன் பகுதியில் புகையிரத பாதையில் சென்ற பொழுது கால் இடறி விழுந்துள்ளார்.

இதன்போது அவர் படுகாயமடைந்துள்ள நிலையில் பொது மக்கள் உடனடியாக இவரை தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தோட்ட வைத்திய அதிகாரி உரிய நேரத்தில் வருகை தந்து சிகிச்சையை மேற்கொள்ளாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 பேர் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் 40 பேரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் நேற்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டனர். இதன்போது 40 பேருக்கும் தலா 1500 வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியை கொலை செய்த இலங்கையர் : நாடு கடத்த பெரும் டொலரை செலவிட்ட கனடா!!

கனடாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்தார். மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரை, இலங்கைக்கு நாடு நடத்துவதற்காக செலவிடப்பட்ட செலவு தொடர்பில் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையருக்கே இவ்வாறு செலவிடப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய 17000 டொலர் வரி செலுத்துவரால் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

பொதுவாக கனேடிய நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் 30 மாதங்களுக்கே எடுத்து கொள்ளப்படும். எனினும் சிவலோகநாதன் தனபாலசிங்கத்தின் வழக்கு விசாரணைகளுக்கு 56 மாதங்கள் எடுத்து கொள்ளப்பட்டது.

அவர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் கனேடிய எல்லை பாதுகாப்பு பிரிவினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டிற்காக அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

தனது மனைவியை கொலை செய்த 9 மாதங்களில் அவர் 3 முறை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னேஸ்வர ஆலயத்திற்கு அருகில் திடீரென வந்த சிலை!!

 
வரலாற்று சிறப்புமிக்க முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் புராதன காலத்து சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்திற்கு அருகிலுள்ள ஏரியிலிருந்து இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஏரியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு நடவடிக்கையின் போதே சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்பட்ட அந்த சிலையை தோண்டி எடுக்கும் போது அது உடைந்துள்ளது.

பழமை வாய்ந்த சிலையை பார்வையிடுவதற்காக பாரியளவிலான மக்கள் கூட்டம் ஒன்று வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் மெர்சல் புதிய சாதனை!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படம் அமெரிக்க வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது.

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு எதிராக நிலவிய வந்த பிரச்சனைகளுக்கு முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

விஜய் ரசிகர்களும் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வருகின்றனர், எதிர்வரும் 26 ஆம் திகதி மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், மெர்சல் படத்திற்கு உலக அளவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வெளிநாடுகளில் பொலிவுட் படங்களான அமீர் கானின் `சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ மற்றும் அஜய் தேவ்கனின் `கோல்மால் அகேன்’ படங்களை விட விஜய்யின் மெர்சல் வசூலில் முன்னணியில் உள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்காவில் மட்டும் ‘மெர்சல்’ 1 மில்லியன் டொலர்களை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க வசூலில் முதல் 5 இடங்களில் 4 ஆவது இடத்தில் உள்ளது. ரஜினியின் கபாலி, எந்திரன், லிங்கா படங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ள நிலையில், விஜய்யின் ‘மெர்சல்’ 4 ஆவது இடத்திலும், கமலின் விஸ்வரூபம் 5 ஆவது இடத்திலும் உள்ளது.

விரைவில் 1.5 மில்லியன் டொலர்களை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

முரளிதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறிய டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கினார்!!

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் டெரல் ஹெயார் (65) 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, முத்தையா முரளிதரன் பந்தை வீசி எறிவதாகக் கூறி ‘த்ரோ’ என்று அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், ‘நோ-பால்’ என்று அறிவித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதன் பின் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை அடுத்து தொடர்ந்தும் நடுவராகப் பணியாற்றினார்.

அதேபோல், 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாகக் கூறி பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்தார். இதனால் சர்ச்சைக்குரிய நடுவர் என பெயர்பெற்றார்.

தனது நடுவர் பணிக்காலம் முடிவடைந்த பின்னர் ஒரு மதுபானக் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்தக் கடையில் பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றத்தை டெரல் ஹெயார் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் அவருக்கு 18 மாத கால நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் வழங்கும்படி அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் அவர் 18 மாதங்கள் எந்த குற்றங்களிலும் ஈடுபடாமல் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வெளியில் சுதந்திரமாக வாழலாம்.

தாடி மீசையுடன் மோனா லிசா ஓவியம் : 750,000 டொலர்களுக்கு விற்பனையானது!!

 
பாரிஸில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் மோனா லிசாவிற்கு தாடி, மீசை இருப்பது போன்று வரையப்பட்ட ஓவியம் 750, 000 டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

பாரிஸில் சோதபே என்ற ஓவிய விற்பனை நிறுவனம் நடத்திய ஓவியக்கண்காட்சியில் பல புதிய ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன.அவற்றில் பல ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன.

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மறு உருவாக்க ஓவியமும் இந்த ஏலப் பட்டியலில் இடம்பெற்றது.

ஓவியர் மார்செல் டச்சம்ப் இதனை வரைந்து ஏலத்திற்கு வைத்திருந்தார். இதன்போது, தாடி மீசை கொண்ட இந்த விசித்திர மோனா லிசா ஓவியம் 7,50, 000 டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

மோனா லிசா ஓவியம், வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்டது.

இந்த ஓவியத்தை மார்செல் டச்சம்ப் சிறிது மாற்றம் செய்து 1964 ஆம் ஆண்டு வரைந்துள்ளார். தற்போது இந்த ஓவியம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நேபாளத்தில் விபத்துக்குள்ளான துருக்கி விமானம் அருங்காட்சியகமானது!!

விபத்துக்குள்ளான விமானத்தை விமானி ஒருவர் அருங்காட்சியகமாக மாற்றி பொது மக்களின் பார்வைக்கு வைக்கவுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘ஏர்பஸ் ஏ 330’ ரக விமானம் நேபாள தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் தரை இறங்கியபோது ஓடுதளத்தை விட்டு விலகி தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

அதில் 224 பேர் பயணம் செய்தனர். அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விபத்துக்குள்ளான அந்த விமானத்தை அங்கிருந்து அகற்ற 4 நாட்கள் ஆனது.

தற்போது அந்த விமானம் காத்மண்டுவில் அருங்காட்சியகம் (மியூசியம்) ஆக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியை விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி பெட் அப்ரெடி மேற்கொண்டார்.

63 மீட்டர் நீள விமானத்தை 10 துண்டுகளாக உடைத்து லொரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டது.

அதற்கான பணியில் துருக்கி இன்ஜினீயர் குழு ஈடுபட்டது. பின்னர் உடைக்கப்பட்ட துண்டுகளை மீண்டும் ஒட்ட வைத்து ஒன்றிணைக்கப்பட்டது.

அதற்காக 2 மாதம் இரவு பகலாக பணி நடைபெற்றது. அதன்பின்னர் அழகிய அருங்காட்சியகம் ஆனது. தற்போது இதுவே நேபாளத்தின் முதல் விமான அருங்காட்சியகம் ஆகும்.

இதன் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்ததும், விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்க உள்ளார் பைலட் அப்ரெடி. பொதுமக்கள் டிக்கெட் வாங்கி இந்த விமான அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.

மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு நீதிபதி இளஞ்செழியனின் தண்டனை!!

மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனுக்கு 8 வருட கடுழிய சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதி யோகராசா சிவகலா (வயது 42) என்ற குடும்பப் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது மகள் படுகாயடைந்திருந்தார்.

உயிரிழந்த பெண்ணின் மகளுடைய கணவரான கணேசையா காந்தரூபன் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மாமியாரான சிவகலாவை கொலை செய்தமை மற்றும் கர்ப்பணியாக இருந்த மனைவியை அடித்துக் காயப்படுத்தியமை என 2 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி வழக்கு விசாரணை இன்று (24) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர் இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

கொலைக் குற்றத்திற்காக 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும், கர்ப்பிணியான மனைவியை அடித்துக் காயப்படுத்திய குற்றத்திற்காக 1 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், 6 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

தண்டப்பணம் செலுத்த தவறின் மேலும் 2 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்குமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

14 வயது சிறுமியை தாயாக்கி விட்டு தப்பிக்க முனைந்த இளைஞர் கைது!!

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி அவரை தாயாக்கி விட்டு தப்பிக்க முனைந்த 25 வயதான இளைஞர் ஒருவரை கல்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் ஒரு குழந்தையை பெறுவதற்கு தயாரான நிலைக்கு வரும் போது அந்த இளைஞன் அவரை கைவிட்டு செல்ல முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கல்பிட்டிய பகுதியில் வசிப்பவர் எனவும் கொச்சிக்கடை – வெளிஹேன பிரதேசத்தில் மறைந்திருக்கும் போதே கைதாகியுள்ளார்

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தற்செயலாக கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைய சந்தேகநபர் குறித்த 14 வயது சிறுமியுடன் அறிமுகமாகியுள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் பெற்றோருக்கும் தெரியாமல் ரகசிய உறவை பேணி வந்துள்ளனர்.

பின்னர் குறித்த சிறுமி கர்ப்பமடைந்திருப்பதை அறிந்த இளைஞன் சிறுமியை கைவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் இளம் வயது பெண்ணொருவர் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் அறிந்த பொலிஸார் அது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்