வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர்!!

இத்தாலியில் மிலான் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் சைக்கிளோட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாகனமொன்று மோதியதில் அவர் உயிரிழந்ததாக இத்தாலி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தில், இலங்கையைச் சேர்ந்த 39 வயதுடைய இராசரத்னம் சர்வநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சைக்கிளில் பயணித்த குறித்த நபரை வாகனமொன்று மோதியுள்ளது. அத்துடன், வீதியில் விழுந்த அவர் சில மீற்றர் தூரத்துக்கு வீதியில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இத்தாலி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இதயமாற்று சிகிச்சை செய்த யுவதி திடீரென மரணம்!!

கண்டி பொது வைத்தியசாலையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட யுவதி உயிரிழந்துள்ளார். அழுத்கம, களுவாமோதர பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான சச்சினி செவ்வந்தி என்ற யுவதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இரண்டாவது இதயமாற்று சத்திர சிகிச்சை கடந்த 27ம் திகதி கண்டி போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய, கண்டி ஹாரகம பிரதேசத்தைச் சோந்த 28 வயது இளைஞனின் இதயமே குறித்த யுவதிக்கு பொருத்தப்பட்டிருந்தது.

கண்டி போதனா வைத்தியசாலையில் முதலாவது இருதய மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு 2 மாதங்களில் இரண்டாவது சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

முதலாவது மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று சிகிச்சை வெற்றியளித்துள்ளதுடன், இதயம் மாற்றப்பட்ட பெண் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வீதியில் வாகன விபத்து : ஒருவர் பலி,  22 பேர் படுகாயம்!!

 
கொழும்பு, பதுளை பிரதான வீதியில் அப்புத்தளை உடு விகாரகல எனும் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த 22 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளையிலிருந்து மரங்காவெல, கொஸ்கம பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அப்புத்தளை, தியத்தலாவ, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கொக்குவிலில் வாள் வெட்டுக் குழு அட்டகாசம் : கடை நாசம்!!

கொக்குவிலில் நேற்று இரவு கடை ஒன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருள்களை அடித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கொக்குவில் சந்தியில் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.

கொக்குவில் சந்தி பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழுவினர் சந்தியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி நடந்து அருகில் உள்ள கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்தனர்.

பின்னர் வெளியில் வந்து கடைக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெறுமதி மிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று உள்ளனர் என தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கடைஉரிமையாளர் யாழ்.காவல் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் அரிசி, தேங்காய் 100 ரூபாய் மண்ணையா நாங்கள் சாப்பிடுவது?

 
அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய் மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? மற்றும் பொருள் விலையும் – வரிச் சுமையும்,  கடன்களும் – பில்லுகளும் தாங்க முடியவில்லை சம்பளத்தினை கூட்டு என்ற வாசகத்தினை தாங்கிய வண்ணம் வவுனியா நகர் முழுவதும் முன்னிலை சோஷலிஸக் கட்சியினரால் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ், சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இச்  சுவரொட்டிகள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே ஒட்டப்பட்டுள்ளது. இச் சுவரொ ட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வளர் சந்திரகுமார் கண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த விலைவாசி ஏற்றமானது தற்போது எல்லையற்று அதிகரித்து காணப்படுகின்றது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட மத்திய வர்க்கத்தினையும் அரசாங்கத்தினையும் மிக மிக பாதித்துள்ளது. உண்மையிலேயே நல்லாட்சி வந்த பின்னர் இந்த பொருட்களின் விலையேற்றம் மிக கடுமையாக காணப்படுகின்றது.

உண்மையிலேயே தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்களும் சரி ஏழை மக்களும் சரி இந்த தேங்காய் உணவு பொருட்களில் அத்தியவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. கஞ்சி குடிப்பதாகவிருந்தாலும் அரிசியும் தேங்காயும் தான் தேவைப்படுகின்றது. அதற்க்கு கூட வழியில்லாமல் செய்துள்ளது இந்த நல்லாட்சி அரசாங்கம்

அந்த வகையிலேயே இதனை மிகவும் வண்மையாக கண்டிக்கின்றேன். உண்மையிலேயே அரசாங்க ஊழியர்களின் சம்பளம் போதாமல் உள்ளது. சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். கூலித்தொழிலாளிகளுக்கு கூலி அதிகரிக்கப்பட வேண்டும் . அத்தியவாசிய பொருட்கள் கட்டுப்பாட்டான விலை விலை நிர்ணயத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும்.

மக்களுக்கு சிரமமில்லாமல் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இச் சுவரொட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வளர் மாணிக்கம் ஜெகன் கருத்து தெரிவிக்கையில்,தற்போது நாட்டில் நிலவுகின்ற வரட்சியான காலப்பகுதியில் பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதால் சாதாரணமான வாழ்க்கை வாழும் மக்களுக்கு பெரும் சுமையினை இது வழங்கியுள்ளது.

உண்மையிலேயே மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நாங்கள் நம்பி வாக்களித்த இந்த அரசாங்கம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்தவோரு அக்கறையுமின்றி செயற்படுவது போன்றே தெரிகின்றது.

ஆரம்பத்தில் ஒரு ஆட்சி மாற்றத்திற்காக சகல விலைகளையும் குறைத்த இந்த அரசாங்கம் இப்போழுது அந்த மக்கள் அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கு எந்த விதமான ஒரு அக்கறையும் செலுத்தாத ஒரு நிலையே காணப்படுகின்றது. விவசாய உற்பத்திகள் வெகுவாக குறைவடைந்துள்ளது.

ஆகவே இந்த அரசாங்கம் உடனடியாக வறுமை நிலையிருக்கின்ற அன்றாட வாழும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள், மீள் குடியேறிய மக்கள் , அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்ல கஸ்டப்படுகின்ற இந்த சூழ் நிலையில் இந்த அரசாங்கம் இவ்வாறான சமூகத்திற்கு புறன்பான விலையேற்றத்தினை ஏன் அங்கிகரித்து என தெரியவில்லை.

இந்த மாற்றத்தினை உடனடியாக இந்த அரசாங்கம் தலையிட்டு சாதாரண மக்களின் வாழ்வை சிறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக விரைவில் பட்டினியால் சாவு வரும் என்ற நிலை தான் இருக்கின்றது. இதனை இந்த அரசாங்கம் கட்டாயம் நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள்!!

 
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நேற்று (01.10.2017) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் ப.கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.

வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் சலலிகினி சிறுவர் கழக மாணவிகளின் பூஜா நடனம், குழு நடனம், கரகாட்டம், குழுப்பாடல், சிறுவர் விளையாட்டு நிகழ்வுகள் , பரிசில் வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார , கௌரவ விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார் ,வட மாகாண சபை உறுப்பினர், அதிதிகளாக வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் நடைபவணி!!

 
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நேற்று (01.10.2017) மதியம் 2.30 மணியளவில் வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி வவுனியா கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்தது.

வவுனியா கலாச்சார மண்டபத்தில் விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த இந் நிகழ்வில் மத தலைவர்கள் ஆசியுரை , வரவேற்பு நடனம், வரவேற்பு நிகழ்ச்சி, சிறுவர்களின் உரை, பலே நடனம், கயிறிழுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல், நாட்டிய நாடகம், நடனம், பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

விமலன் (கே.என்.எச்) தலமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான், பதுளை பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், மொறகொட தமனந்த தேரோ, அருட்பணி சத்தியராஜ், பிரபாகர குருக்கள், மௌலவி.ஜோசுவா, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் இமல்டா சுகுமார், வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராஜா, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா, மெரட்டுவ, நீர்கொழும்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் , தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நகர சிறுவர், முதியோர் தின நிகழ்வு!!

 
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு வவுனியா நகர முதியோர் சங்கத் தலைவர் தா.சலசலோசன் தலைமையில் கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று (01.10.2017) காலை நடைபெற்றது.

வவுனியா நகர சிறுவர், முதியோர் தின நிகழ்வில் நகர கிராம அலுவலர் செல்வராசா, வவுனியா நகரசபை முன்னாள் நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன், பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஜெகசோதிநாதன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளர்.

இதன்போது சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் முதியோர்களின் எதிர்காலம் தொடர்பில் கருத்துரைகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வவுனியாவில் ஜனாபதியுடன் இருக்கும் எங்கள் 4 பிள்ளைகளையும் எங்களிடம் தா என போராட்டம்!!

 
வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றுடன் (01.10.2017) 220வது நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச சிறுவர்கள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் பல பகுதிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் அரசியல் பிரமுகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் நேற்று (01.10.2017) காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே? , இந்த அரசை பாதுகாக்க என்.ஜி.ஓ க்களின் உலகை ஏமாற்றும் சிறுவர்கள் தினமா? என பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை போராட்ட இடத்திற்கு முன்பாக தொங்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மதவுவைத்தகுளத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு!!

 
வவுனியா மதவுவைத்தகுளம் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம் , சணசமுக இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நேற்று (01.10.2017) காலை 9.30 மணிக்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் கிராம சேவையாளர் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இன் நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுகள், முதியோர்களுக்கான போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் கிராம அபிவிருத்தி உத்தியோத்தர், வவுனியா மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அரச- அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வாணி விழா மற்றும் சிறுவர் தின விழா!!

 
வவுனியா சின்னப்பூவரசங்குளம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வாணி விழா மற்றும் சிறுவர் தின விழா கடந்த 28.09.2017 மாலை 6 மணிக்கு பாடசாலையின் அதிபர் தக.செல்வதேவன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள்
சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்!!

வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத இறுதியாண்டு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தினை அலுவலக நாட்களில் பெற்று 08.10.2017 ஆம் திகத்திக்கு முன்பாக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் மொழி மூலம் குடிசார், மின் மற்றும் இலத்திரனியல் கனிய அளவையியல் பயின்ற மாணவர்களுக்கு இவ் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் பரீட்சையே இறுதி சந்தர்ப்பம் என்பதனால் இதுவரை பரீட்சைக்கு தோற்றி சித்தியடையாத மாணவர்கள் உடன் மீள் பரீட்சைக்கு தோற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

வ.கீதாஞ்சலி
தொழில் வழிகாட்டல் ஆலோசகர்

வவுனியா தரணிக்குளம் பாதை செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைப்பு!!

 
வவுனியா தரணிக்குளத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் ஒரு கிலோ மீற்றர் பாதையினை செப்பனிடும் பணிகளை கடந்த 29.09.2017 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சின் இணைப்பு செயலாளர் நாகராஐன், முன்னாள் தெற்கு பிரதேச சபை உப தலைவர் ரவி, வீதி செப்பனிடும் ஒப்பந்தகாரர் பரமேஸ் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (01.10.2017) மதியம் 12.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஆர்.ஜெ ராஜபக்ச தலைமையில் பொலிஸ் கொஸ்தபர்களான பாலித 25138, வீரசிங்க 48265, சமன் 48350, குணதிலக 81935, மஞ்சுல 76145 ஆகியோரினால் யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து கல்மடு நோக்கி இ.போ.ச பேரூந்தில் 6 கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற 35 வயதுடைய நபரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நண்பரொருவர் வழங்கியதாகவும் கஞ்சாவினை கல்மடுக்கு கொண்டு சென்றால் பத்தாயிரம் ரூபா பணம் கிடைக்கும் எனவும் குறித்த நபர் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

37,000 அடி உயரத்தில் இரண்டாக பிளந்து விழுந்த விமான என்ஜின் : அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!!

பிரான்சில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ள பயணிகள் விமானம் ஒன்று 37,000 அடி உயரத்தில் அதன் என்ஜின் இரண்டாக உடைந்து விழுந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த நிலையில் 37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று காதை பிளக்கும் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அது மட்டுமின்றி விமானம் கடுமையான அதிர்வுக்கும் உள்ளாகியுள்ளது. இதனிடையே அச்சத்தில் உறைந்த பயணிகளை அமைதிப்படுத்திய விமானி, உடனடியாக விமானத்தை கனடா நோக்கி திருப்பியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் கனடாவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்ட பிரான்ஸ் விமான சேவை நிறுவனம்,

பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, உடனடியாக அவர்கள் தங்கள் பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

வடகொரிய ஜனாதிபதி உயிருக்கு குறி வைக்கும் 3 நாடுகள் : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

அணு ஆயுதப் போரினை தவிர்க்கும் பொருட்டு அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வடகொரிய அதிபரை கொல்லும் திட்டத்தில் மிக ரகசியமாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெல்டா படை, குறித்த திட்டத்திற்கு வியூகங்கள் வகுக்கும் எனவும் பிரித்தானியாவின் SAS (The Special Air Service) சிறப்பு அதிரடிப்படை முன்னின்று திட்டத்தை செயல்படுத்தும் என்றும், தென் கொரியாவின் எலைட் கமாண்டோ படை தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிய வந்துள்ளது.

அடுத்த சில மாதங்களுக்குள் வடகொரிய ஆட்சியாளரை மாற்றவும், குறித்த மூன்று நாடுகளும் அதிரடி வியூகம் அமைத்து வருவதாக குறப்படுகிறது.

இந்த மூன்று சிறப்பு அதிரடிப் படையுடன் அணு ஆயுத சிறப்பு படை, ரசாயனம் மற்றும் உயிரியல் சிறப்பு யூனிட் ஒன்றும் இணைந்து செயல்பட உள்ளது. இவர்களின் முக்கிய குறிக்கோளாக கருதப்படுவது அதிக சேதாரமின்றி வடகொரிய ஆட்சியாளர் கிம் ஜோங் வுன் ஐ படுகொலை செய்யப்படுவதே என தெரிய வந்துள்ளது.

மேலும், வடகொரிய ஆட்சியாளருக்கு எதிர்ப்பாளர்களின் உதவியுடன் அந்த நாட்டில் அதிரடியாக கடல், தரை மற்றும் வான் வழியாக ஒரே நேரத்தில் உள்புகுந்து தாக்குதல் நடத்தவும் திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீப நாட்களாக அமெரிக்கா மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் இடையே வாக்கு மோதல் அதிகரித்துள்ளதை அடுத்தே அதிரடி திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வடகொரியாவுடன் அமெரிக்கா போர் தொடுக்கும் எனில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உறுதி. இதனால் உலக அளவில் பொருளாதார மாற்றம் ஏற்படும். மட்டுமின்றி கிழக்கு ஆசியாவில் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக ஆழமான தாக்கங்களை இந்த யுத்தம் ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே பிரித்தானிய உளவு அமைப்பினர் குழு ஒன்று கிம் ஜோங் வுன்-ஐ உயிருடன் சிறை பிடிக்க வியூகங்கள் அமைத்து வருகிறது. ஆனால் அது சாத்தியமே இல்லை எனவும் வடகொரிய அதிபரின் மாளிகையானது உலகின் மிக சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டது எனவும் உளவு பிரிவினரால் கூறப்படுகிறது.